Wednesday, August 26, 2020

 

அனுபவமே உண்மை

 

அனுபவமாவது, ஒரு விஷயத்தைக்குறித்து ஒருவன் சுயமே அறிந்து கொள்ளும் ஞானமாகும். அதுவே உண்மை அறிவாகும். புத்தகங்களைப் படிப்பதன் மூலம் விஷயங்களைத் தெரிந்து கொள்ளுவதோடு மட்டும் நில்லாமல் நாமே நேரில் அவற்றை அனுபவித்து அறிந்து கொள்ளுவது பன்மடங்கு சிறந்தது என்பதை எவரும் மறுத்தல் முடியாது. அனுபவஞான மின்றி ஏட்டு ஞானம் மட்டுமே யுள்ளவன் அரைப்படிப்பு உள்ளவனே. அனுபவம் விலைமதிக்க வொண்ணாததொன்று. ஆயிரக்கணக்கான தவறுதல்களும் துன்பங்களும் ஏற்பட்ட பின்னே ஒரு முழு அனுபவம் ஒருவனுக்குக் கிட்டலாகும்.

 

இத்தகைய அனுபவஞானமே சிரேஷ்டமானது. அதுவே உண்மையாவதும் புத்தகங்களைப் படிப்பதன்பயனாய் அறிய நேரிடும் விஷயங்களைத் தனது அனுபவ ஞானத்திற்குத் துணைக்கருவியாக மதிப்பவனே பூரணமான கல்வி யறிவு உடையவனாகக் கருதப்படுவான். ''பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது'', "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? மூவிரு அறிவு படைத்த மாந்தர்கட்கு இருவகைப்பட்ட பசி - அதாவது, வயிற்றுப்பசி, அறிவுப்பசி - இருப்பது எவருக்கும் தெரிந்ததே. ஒரு விஷயத்தைப் பற்றிய உண்மையான அறிவு அனுபவமூலமே உண்டாவது. அன்னியாது அபிப்பிராயங்களைக் கற்றுத் தெரிந்து கொள்வதோடு நிற்காமல், நாமும் அவற்றைச் சுயமாய் அனுபவித்துத் தெரிந்து கொண்டு பின்பு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கடைசியாய் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வருவதே உசிதம். பிறரது அபிப்பிராயங்கள் எல்லாவற்றையும் அப்படியே வேதவாக்காக (உண்மையாக) க் கொள்ளுவதைக்காட்டிலும், நாமும் அவைகளைக் குறித்த உண்மைகளை ஆராய்ந்து அறிந்துகொள்ள முயலுவதே விரும்பத்தக்கதாகும். ஒருவேளை அவர்களது அபிப்பிராயங்களில் ஒரு சில தவறுதல்கள் இருந்தாலும் இருக்கலாகும். அதுபோலவே நாமும் தவறு இழைக்க நேரிடலாகும். இத்தகைய குற்றங்கள் ஒப்பிட்டுப் பார்க்கையில் நிவர்த்தியாய் விடும். அபிப்பிராய பேதம் உலகம் உள்ளவரை இருந்து கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு விஷயத்தைக் குறித்தும் நாம் ஒரு தமான நிலம் தெரியவரு ஒவ்வொருவரும் தாமே அனுபவமாய் அறிந்து தீர்மானமான முடிவுக்கு வரப் பழக வேண்டும். அப்பொழுதுதான் கல்வி கற்பதன் நோக்கம் பூர்த்தி பெறும். எனவே, அனுபவ ஞானத்திற்குத் துணைக்கருவியாகவே புத்தகஞானம் இருக்க வேண்டுமென்று தெளிவாய் ஏற்படுகிறதல்லவா?

 

இனி, அனுபவஞானத்திற்கும், புத்தகஞானமட்டுக்கும் உள்ள பெரும் பேதத்தைச் சில உதாரணங்களின் உதவியால் விளக்குவோம்: முதலாவ தாக, நதியைப்பற்றி ஆராய்வோம்: நமது குழந்தைகளுக்குப் பன்ளிக் கூடத்தில் ஆரம்பகாலங்களில் தேசப்படங்களின் உதவி கொண்டு பூகோள சாஸ்திரம் போதிக்கப்படுகையில் உலகத்திலுள்ள பல முக்கியமான நதிகளின் பெயரும், இருப்பிடமும் கற்பிக்கப்படுகின்றனவன்றோ? அவற்றால் அந்நதிகளின் பெயர்களை மட்டும் அவர்கள் தெரிந்து கொள்ளக் கூடுமே யொழிய அவற்றின் உண்மையான தோற்றத்தை எங்ஙனம் தெரிந்து கொள்ள இயலும்? உலகிலுள்ள எல்லாவிதமான நதிகளும் ஒரே தோற்ற முடையனவா? இல்லை. இது அனுபவசாலிகளுக்கல்லவோ தெரியும். இவ்விஷயம் இளம்பிராயமுள்ள குழந்தைகளுக்கு எங்ஙனம் தெரியவரும்? தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள ஒரு நதியைப் போலவேதான் அவையாவும் இருக்கலாகும் என்ற எண்ணமல்லவோ அவர்கள் மனதில் வேரூன்றுகின்றது. இத்தகைய தப்பிதத்தைப் பிற்காலம் அவர்கள் உலகம் பூராவும் சுற்றிப்பார்க்க நேரிடும் போது (நேரிட்டால்) தானே அறிந்து கொள்ள வியலும்.

 

நிற்க, நாம் ஒரு பூகோள படத்தைப் பார்ப்போமானால் ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் சொந்தமான (நிலப்பரப்புக்கள்) தேசங்கள் தனிப்பட்ட வர்ணங்கள் தீட்டப்பெற்றிருப்பதால் தெரியவரும். இதனின்றும், அத்தேசங்களின் அரசியல் முறைகளை மட்டும் மேலாகத் தெரிந்து கொள்ளக் கூடுமேயல்லாமல் அத்தேச ஜனங்களின் நாகரிக நடையுடை பாவனை, சமூக வாழ்க்கையின் இயல்பு, அங்குள்ள பல இயற்கை வினோதங்கள் (சீதோஷ்ணம், மலைகள், காடுகள் முதலியன), அழகுபொருந்திய பிரம் மாண்டமான கட்டிடங்கள், அரண்கள், ஆலயங்கள், ரஸ்தாக்கள் இவை களைப்பற்றி (அனுபவ பூர்வமாய் அறிந்து கொள்ளலாகும் விதம்) அறிய முடியுமா?

 

மற்றும், உலகத்தின் பல பாகங்களிலும் பல சமையங்களில் நடந்தேறிய யுத்தங்களைப்பற்றிய விவரங்களைப் புத்தகங்களின் மூலம் தெரிந்து கொண்டு விடுவதால் மட்டும் ஒருவன் உண்மையில் யுத்தகளத்தில் போர் முனையில் நின்று எதிரியுடன் சண்டையிட்ட வீரனது அனுபவங்களைப் பெற்றவனாய் விடுவானோ? இது போலவே, இயற்கையின் அற்புதமான கடலைப் பார்த்தே யறியாத ஒருவன் எவ்விதம் அதன் ரமணீயமான தோற்றத்தையும், சூறாவளிக்காலத்து அதன் அல்லோலகல்லோலமான பயங்கரநிலையையும் தெரிந்து கொள்ள முடியும்? தெய்வீகமான ஆணைக்குக் கட்டுப்பட்ட பஞ்சபூதங்களில் ஒன்றன் சார்பான கடல் மீது செல்லும் கப்பல்களின் போக்கு வரவு விஷயங்களைக் குறித்தும், லாபநஷ்டங்களைப்பற்றியும் முன்னதாகவே தீர்மானித்து முடிவுகட்டி விடும் தீர்க்கதரிசிகளின் மதிதான் என்னே! ஏனோ இவர்கள் எதிலும் கட்டுப்படாது நிற்கும் தெய்வ ஆணை யைப்பற்றிச் சிந்திப்பதில்லை. " நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்" என்னும் வாக்குப் பொய்க்குமோ? எப்பொழுதும் நாம் கோரும் - கருதும் விதமே எல்லாக் காரியங்களும் நடைபெறுமென்பது யாது நிச்சயம். இன்னும், இயற்கை யணியாய் விளங்கலாகும் பர்வதங்களின் உண்மையான விஷயங்களை நாம் எவ்விதம் புத்தகங்களினின்று மட்டுமே தெரிந்து தெளிதல் கூடும். நேரில் சென்று பார்த்தால் மட்டுமே அவற்றின் அருமை பெருமை தெரியவருமேயன்றி இவ்வாறு அறிந்து கொள்ளுவது என்பது வேடிக்கையான விஷயமே. இமயமலையின் உன்னத சிகரமான எவரஸ்ட் சற்றேறக்குறைய 8-மைல் உயரமானது என நாம் புத்தகங்களில் படிக்கிறோம். ஆனால், நாமே மலையடிவாரம் சேர்ந்து, வானத்தை யளாவிக் கண்ணுக்கெட்டாதவாறு வெகுதூரம் உயர்ந்து தோன்றும் அக்காட்சியைப் பார்ப்போமேயானால் அதன் உயரம் அவசியம் பதின்மடங்காகவே இருக்க வேண்டுமென்ற தீர்மானத்துக்கு எளிதில் வருவோம் என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. அன்றியும் கட்டுக்கடங்காததும், ஆச்சரியம், திகில், பக்தி இத்தகைய உணர்ச்சிகளை ஒருங்கே எழுப்ப வல்லதாய்த் தானே தனக்கு நிகராய் விளங்குவதுமான அப்படைப்பின் கோலத்தைக்கண்டு மெய்ம்மறந்து போகாதவர் எவரேனும் உளரோ?

 

மேலும், அனுபவபூர்வமாய்த் தங்களது தேசங்களின் கண் ணுள்ள நலங்களையும், தீமையையும் பாரபட்சமின்றி அறிந்து தம் நாட்டிலுள்ள தீமைகளை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணமுடைய உண்மைத் தேசாபிமானிகளை, தங்கள் தங்கள் நாட்டின் நலங்களையே காட்டித் தீமைகளை மறைக்கும் புத்தக அறிவில் மட்டுமே தேர்ந்தவர்களிடை எதிர்பார்க்க முடியாது. இது காரணமாகவே உண்மைத் தியாகிகளைக்காணுவது ஒவ்வொரு நாட்டிலும் அத்தி பூப்பது போலிருக்கிறது.

 

இறுதியாக, கால அளவும், தூர அளவும் புத்தகங்கள் மூலம் தெரிந்து கொள்ளக்கூடியனவல்ல. ஆயிரக்கணக்கான வருட காலங்களில் முன் நடந்தேறிய வரலாறுகளைச் சரித்திரவாயிலாக அறிந்து கொள்ள முயலும் போது அவை எவ்வளவு மனித ஆயுட்காலத்தில் - நூற்றுக்கணக்கான வருடங்களில் நிகழ்ந்துள்ளன என்று கணக்கிட்டுப் படிக்க முற்படுவது நன்மையானது. அப்பொழுது தான் உண்மையும் செவ்வனே விளங்கும். விஷயங்களும் செவ்வனே மனதில் பதியும். இதுபோலவே, தூர அளவும் நேரில் அனுபவித்து அறிந்து கொள்ளுவதன் மூலமே கிரகிக்க வல்லது. பம்பாய் துறைமுகத்தினின்றும் புறப்படும் கப்பல் சுமார் 17 - நாட்களில் டோவர் (Dover) துறைமுகம் போய்ச் சேருகிறது என்று தெரிந்து கொண்டதால் மட்டுமே உண்மையாக இங்கிலாந்துக்குச் செல்லும் பிரயாணியின் அபரி மிதமான அனுபவங்கள் கிட்டி விடுவதாகாது.

 

ஆகவே, நம்மிடை அனுபவஞானம் ஏற்படுவதற்கு நாம் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விஷயத்தையும் சுயமே அறிந்து உண்மையான தீர்மானத்திற்கு வர முயல வேண்டும். உண்மையை எடுத்துக்காட்டும் வகையில் நமக்கு இரு சாதனங்கள் துணை புரிகின்றன. முதலாவதாக, விஷயங்களின் உண்மையை, காலத்தின் போக்கு செவ்வனே உணர்த்த வல்லது. காலஞ் செல்லச் செல்ல உண்மையான விஷயங்களே எஞ்சி நிலைத்து நின்று பிரகாசிக்கும். பொய்த்தோற்றங்களெல்லாம் மறைந்து விடும். இது உலக இயல்பு - பிரபஞ்ச நியதி. இரண்டாவதாக, கவிகள் தங்களது தெய்வீகமானதொரு சக்தி காரணமாய் உலகத்தில் காணப்படும் பாமரர்களுக்குத் தெரியாது இலைமறை காய்போல் தோன்றும் உண்மை விஷயங்களை எவரும் மறுக்கவொண்ணாவிதமாகவும், வியந்து போற்றுமாறும் வெளிப் படுத்துகிறார்கள். தாங்கள் எவ்வாறு இவ்விஷயங்களை வெளியிட்டார்களென்பது அவர்களே யறிந்து கொள்ள முடியாத ஒரு பெரும் மர்மம். இவ்வழியே நாம் அடையலாகும் அறிவு உண்மை (அனுபவ) ஞானமாயிருக்கும் என்று நிச்சயமாய் நம்பலாம். நாம் அனைவரும் அனுபவ அறிவு பெற்று வாழ்க்கை நலம் துய்க்குமாறு எல்லாம் வல்ல இறைவன் கருணை மழை பொழிவானாக! பொங்கும் மங்களம் எங்குந் தங்குக.


T. R. ஸ்ரீநிவாசன்,

வடக்கு சித்திரவீதி; ஸ்ரீரங்கம்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஏப்ரல் ௴

 

 

 

No comments:

Post a Comment