Wednesday, August 26, 2020

 அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்

 

அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்''
                           என்பது வள்ளுவர் இன்குறள்.

 

இந்நிலவுலகில் மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அன்பெனும் பாசத்தால் பிணிப்புண்டு ஒருவரை யொருவர் தழுவி வாழ்வது கண்கூடு. "அன்பின் வழியது உயிர்நிலை'' என்பது ஓர் சிறந்த உண்மை. ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்ற தாய்க்கு தன் சேயிடத் தன்பு; காதலனுக்குத் தன் காதலியிடத் தன்பு. அடியவர்கட்கு இறைவனிடத் தன்பு. அன்பர்கட்கு தங்கள் நண்பரிடத் தன்பு. ஆகவே எங்கு பார்த்தாலும் அன்புமயம். அன்பெனும் அச்சாணியில் உலகெனும் உருள் பெருந்தேர் ஓடிக் கொண்டிருப்பது யாவரும் கண் கூடாய்க் காணும் ஓர் காட்சியாகும். நிற்க உலகம் போற்றும் உயரிய நூலாம் இராம காதையை, கம்பரது கவிதா விலாசத்தில் கண்டு களித்த யான், அக்காதையில் அன்புடைத் தோன்றலாய் விளங்கும் வேடர் வேந்தனாம் குகனைப் பற்றிப் பலகாலும் நினைந்து நினைந்து உருகிய துண்டு. இவ்வேடர் வேந்தனது அளவில் அன்பின் பெருக்கத்தைப் பற்றி ஒரு சில குறிப்புகள் தரவே இக்கட்டுரை எழுந்ததாகும்.

 

"தூய கங்கைத் துறை விடும் தொன்மைய " னான இவ்வேடர் வேந்தனை நாம் முதன் முதலில் கங்கைக் கரையினிடத்தே காண்கின்றோம். தாய்வரங் கொள்ளத் தந்தை வேலால் " நாடிறந்து காடு நோக்கி வருகின்ற வன்ளலைக் காணவந் தெய்துகின்றான் குகன். எய்தி ஏந்தல் முன்'' தேவா நின்கழல் சேவிக்க வந்தனன் நாவாய் வேட்டுவன் நாயடியேன்' என்றிறைஞ்சி நிற்கும் குகனது குணப் பொலிவைக் கண்டு மகிழாக் கவிஞரு முளரோ? அண்ணலே நின் அரசுரிமையின் கீழிருக்க. ''பெரு நிலக்கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும்' என்று இரங்குகின்ற இவனது உள்ளம் கற்றோர் உளத்திற்குக் கழிபேருவகை தருவதாகும் இப்பெரு. நிலக்கிழத்தி இழந்த பெருமையினை இச் சிறுநிலக் கிழவனாம் வேடர் வேந்தன் தன்ன தாக்க விரைகின்றான். அன்புடை அண்ணலைத் தன்னுடனேயே இருந்து தன்குற்றேவலை ஏற்று தன்னை மகிழ்வித்தருளல் வேண்டும் என்றிறைஞ்சகின்றான். இவ்விடத்து, அன்பின் பெருக்கால் தான் வேடுவன் என்பதையும் இராமன் அரசர் பெருமகன் என்பதையும் மறந்து, அவனையும் தன்னினத்தவனாகவே கருதி


 "தேனுளது தினையுண்டாற் றேவரு நுகர்தற்காம்
 ஊனுளது, துணை நாயேம் உயிருள, விளையாடக்
 கானுள, புனலாடக் கங்கையுமுள தன்றோ
 நானுளதனையும் நீ யினிதிரு நடவெம்பால் "


என்று கூறுஞ் செவ்வி கம்பர் உளத்தில் உருக்கொண்ட அன்பின் மாட்சியை விளக்குகின்றது.
 

இவ்விருப்பத்திற்கு, இராமன் இணங்காமை கண்ட குகன் இராமனையும், இலக்குவனையும், சீதையையும் தனது தோணியிலேற்றி, நெடுநீர்க் கங்கையை கடிதினிற் கடந்து தென்கரை சேர்க்கின்றான். தென்கரை சேர்த்த அண்ணலைப் பிரிவதற்கு வருந்தி, "பொருவரு மணிமார்பாபோதுவனுடன்'' என்று கண்ணிணீர் அருவி சோரக் கலங்கி அழுது கரைகின்றான். அப்போழ்து, அறத்தின் வழிநின்ற ஆரியர் கோனாம் இராமனது உளத்தில் ஆழ்ந்து கிடந்த அன்பெனும் அளப்பருஞ் சலதி பொங்கி வழிவதாயிற்று. கன்றினைப் பிரியும் ஆவெனக் கலங்கி "அன்ப! நீ வேறு, நான் வேறு என்று கருதாதே. நான் உன் உடன் பிறந்தவன். என்னுடனிருக்கும் இவ்விளவல் உன் இளையான். இந்நங்கை நின் சுற்றம் என்றே கருதுக'' என்று கூறிய தோடமையாது, குகனைத் தனது நாட்டிற்குக் கோமானாக்கி தன்னை அவனது தொழில் செய்பவனாகவும் செப்புகின்றான். இதையே கவியரசர்
 கம்பர் பெருமான்,


 "அன்னவன் உரை கேளா வமலனு முரை நேர்வான்
 என்னுயிரனையாய் நீ, இளவல் உன் இளையான்
 நன்னுதலவள் நின்கேள், நளிர் கடல் நிலமெல்லாம்
 உன்னுடையது நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன்"


 என்று கூறுவாராயினர். என்னே இவனது அன்பு!


''முன்புள ஒரு நால்வேம் முடிவுளதென வுன்னா
 அன்புள் இனி நாமோர் ஐவர்கள் உளரானோம்"


என்று இராமன் குகனிடத்துப் போற்றும் சகோதரப் பான்மையைக் கம்பர் எவ்வளவு அழகாகக் கூறி யிருக்கின்றார்.

 

கவியரசராம் கம்பர் பெருமான், தனது இராம காதையில் குகப் பெருமானைக், கவி உலகில் முதல் முதல் காட்டுகின்ற காலத்து, இராமனுடன் சோதர உரிமையில் உள்ளவர்களில், இவன் தலை சிறந்தவன் என்னும் கருத்தை மக்களிடையே புகவிடுகின்றார். இக்கருத்தையே பின்னர் பலவிடத்தும் பலவாயிலும் அமைத்து, தான் குகனைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்தை வலியுறுத்துவராயினர். பிறப்பினால் உயர்வு கற்பித்துக் கொள்ளும் போலி மக்களிடையே எழுந்த இந்த இராம காதை, கம்பரது கவிதா விலாசத்தில் அன்பெனும் பெரு வெள்ளத்தில் திளைத்து, ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற உயரிய கொள்கை யுடனே மிளிர்வதாயிற்று.

 

கங்கை யிரு கரையுடைய நாவாய் வேந்தனை தனது உரிமைத் தம்பியருள் ஒருவனாகக் கருதி, இராமன் பாராட்டியது காலத்திற் கேற்ப நடக்கும் அரசரது அரசியல் வழக்கு என்று சிலர் கூறலாம். அது அன்பின் பெருக்கால் எழுந்த கூற்றல்ல என்றும் எள்ளி நகையாடலாம். ஆனால் கம்பரது கருத்து அதுவல்ல என்பதே தமியேனுடைய தாழ்ந்த கருத்தாகும். இராமன் தனக்கு தற்போது இவன் செய்த சிறிய உதவியைப் பாராட்ட மட்டும் ''இனி நாமோர் ஐவர்கள் உளரானோம் " என்று கூறியிருப்பானே யானால், பின்னர்
தண்கடலின் வடகரையில், இலங்கை வேந்தனது தம்பியாம் விபீடணன், தன்னிடம் அடைக்கலம் புகுந்த காலத்து


 "குகனோடும் ஐவரானோம், வனத்திடை குன்று சூழ்வான்
 மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த
 அகனமர் காதலைய நின்னொடும் எழுவரானோம்
 புகலரும் கானந்தந்து புதல்வராற் பொலிந்தானுந்தை"


என்று கூற வேண்டுவது அவசியமின்று. "அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ்' என்ற வள்ளுவர் பெருமானது திருவாக்கிற் கிணங்க அன்பெனும் பாசத்தால் எழுந்த சொற்கள் தானிவை என்பதில் ஐயமில்லை. ஆரிய கவியாம் வான்மீகியினது சித்திரத்தி லெழுந்த இராமனது உளமன்று இது என்று சொல்வார் சொன்னால் சொல்லட்டும். நமக்கு அதைப் பற்றி ஒருசிறிதும் கவலையில்லை. இக்கட்டுரையில் காட்டப் பெறுபவன் கவி உலகில் நாம் காணும் கம்பரது இராமனே யாகும். நிற்க இந்தச் சோதர பாவனையை இராமன் மட்டுந் தானா பாராட்டுகின்றான்? இல்லை! அவனது காதற் கிழத்தியாம் சீதையும், பெருந் தகைமைக் கோசலையும், "நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலைய " மாகிய பரதனும், மற்றும் மந்திரித் தொழில் பூண்ட சுமந்திரனும் இன்னும் பலரும் போற்றிப் புகழ்கின்றார்கள். "அமரர்தம் புகழ் விழுங்கிய அரக்கர் கோனது அசோக வனத்தில் அரக்கியர் புடை சூழ விருந்த தன்நாயகனைப் பிரிந்து வருந்தும் நங்கை,


 ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய
 ஏழை வேடனுக்கு எம்பியுன் றம்பி நீ
 தோழன் நங்கை கொழுந்தி யெனச் சொன்ன
 ஆழி நண்பினை உன்னி அழுங்குவாள் "


என்று கூறும் கம்பர் கவி நலம் போற்றுதற் குரியதாகும்.

 

 இக் "குகனெனப் பெயரிய கூற்றினாற்றலான் "கங்கைக் கரையில் நிற்கின்றான். தாயுரை கொண்டு, தாதை உதவிய தரணி தன்னைத் தீவினையென்ன நீத்து சிந்தனை முகத்திற்றேக்கி, திசை நோக்கித் தொழுத கையினனாய் வருகின்ற நிறை குணத்தவனாம் பரதன், இவன் யாவன் என்று குகனைச் சுட்டிக் காண்பித்து தன் பக்கலில் வரும் சுமந்திரனிடத்துக் கேட்கின்றான். அதற்குச் சுமந்திரன்.

 

கங்கையிரு கரை யுடையான்

கணக்கிறந்த நாவாயான்
 உங்கள் குலத் தனி நாதற்கு
      உயிர்த் துணைவன் உயர் தோளான்
 வெங்கரியின் ஏறனையான்
      வில் பிடித்த வேலையினான்
 கொங்கலர்த்தார் நறுந்தண்டார்க்
      குகன் என்னும் குறியுடையான்.


என்று அறிமுகப் படுத்துகின்றான். தசரதனது நன்மந்திரியாம் சுமந்திரனாலும், இரவி குலத்தின் தனி நாயகனான இராமனது உயிர்த் துணைவன் என்று போற்றப் பெறும் பேறு பெற்றான் நம் வேடர் வேந்தன். இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட அரசர் பெருமகனும் வேடர் வேந்தனும் ஒருவரது அடியில் ஒருவர் வீழ்ந்து வணங்கி, ஒருவரை யொருவர் தந்தையினுங் களிகூரத்தழுவி, ஆராவுவகை எய்துகின்றனர். இனி இப் பண்பு மிக்க பரதன் இராமனது நலத்தைப்பற்றி வேடர் வேந்தனிடம் அறிய வேண்டியதை அறிந்தபின் இருவரும் சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற கோசலையை அணுகுகின்றார்கள். அப்பெருமகன் தனது அன்பனை ஈன்றெடுத்த அன்னையென்பதறிந்து அவளது அடியின் மிசை நெடிது வீழ்ந்து, அழுகின்றான் குகன். அக் " கன்று பிரி காராவின் துயருடைய கொடி " யாம் கோசலையும், இவன் யாவன் என்று வினவ அதற்குப் பரதன்.


 "இன் துணைவன் இராகவனுக்கு, இலக்குவற்கும்
      இளையவர்க்கும் எனக்கும் மூத்தான்
 குன்றனைய திரு நெடுந் தோட் குகனென்பான் "

 

என்று அன்பின் திறத்தை விளக்கிக் கூறும் தனிப்பெருஞ் செவ்வி கம்பருடையதே யாகும்.

 

இராமன் பாராட்டும் சோதரத் தன்மையையே இப் பண்புடைப் பரதனும் பாராட்டுகின்றான். என்னை! இவனது தோற்ற மென்ன? தனது மைந்தரது தோற்றம் என்ன? இவனுக்கும் அவர்கட்கும் எத்துணை வேற்றுமையுளது. அப்படி யிருந்தும், இவனை, இப்பரதன் தன் காதற்றிருமகன் இராமனது தம்பி யென்றும், தனக்கும், இலக்குவனுக்கும் அவனுக்கு இளையவனுக்கும் இவன் மூத்த சோதரன் என்று எவ்வாறு கூறுகின்றான்? என்று கருதினளா கோசலை? இல்லை. அவளிடத் திருந்த அன்பென்னுங் கதவம் திறக்கப்பட்டு, அவளும்


''நைவீரலீர் மைந்தீர் இனிதுயரால்
      நாடிறந்து பாடு கோக்க
மெய்வரா பெயாந்ததுவும் நலமாயிற்றாம்
      அன்றே விலங்கற்றிண் டோள்
கைவீரக்களிறனைய காளை யிவன்
      தன்னோடுங் கலந்து நீங்கள்
ஐவீரும் ஒருவீராய் அகலிடத்தை
      நெடுங்காலம் அளித்திர் என்றான்"


என்று வாழ்த்துவதாகக் கவியரசர் கவியாற்றுகின்றார். இவ்விதம் கோசலை வாய்ப் பெய்து கூறுவது.

 

''முன்புள ஒரு நால்வேம் முடிவுள தென வுன்னா
 அன்புள இனி நாமோர் ஐவர்களுள ரானோம்''


என்று இதற்கு முன் இராமன் கூறியதின் எதிரொலியே யாகும். இவ்வாறெல்லாம் குகன் பலராலும் போற்றப்படுதற்குக் காரணம், அவனிடத்திருந்த அன்பெனும் அளப்பரும் அமுதமே யாகும். அவ்வன்பெனும் அமுதம், தன்னகத் தடங்காது, கற்றார் இதயங்களில் காதலரைக் கண்ட காலத்து பொங்கி வழிவதாயிற்று.

 

இன்றும் இராமன், சடை முடியும் மரவுரியும் தரித்த கோலத்தை, கண்ணில் நீரருவி சோர நின்று கண்ட குகன்


 “கார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்துவானிப்
 பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
 ஈர்கிலாக் கள்வனேன் யான் இன்னலின் இருக்கை நோக்கி
 தீர்கிலேன் ஆனதைய செய்குவன் அடிமை என்றான்”


என்னே இவனது அன்பு. இதனாலன்றோ, அரக்கர் கோன் அவனது அரசமாளிகையின் உப்பரிக்கை மீது நின்றிருந்த காலத்து கவிக்குல வேந்தனாம் சுக்ரீவன் அவன் மேல் பாய்ந்து அவனது மகுடங்களை யுதைத்துத் தள்ளி அவனைப் பங்கப்படுத்தி, திரும்பி இராமனையடைய இவன் செய்த செயலுக்காக இராமன் வருந்த, அதற்கு கவியரசன்,


 “காட்டிலே கழுகின் வேந்தன் செய்தன காட்ட மாட்டேன்
 நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்க மாட்டேன்
 கேட்டிலேன் இன்று கண்டும் கிளிமொழி மாதராளை
 மீட்டிலேன், தலைகள் பத்துங் கொணர்ந்திலேன் வெறுங்கை வந்தேன்.”

 

என்று கூறி குகனது அன்பைப் பாராட்டுகின்றான். இவ்விடத்து முற்றுந் துறந்த முனிவராம் பட்டினத்தடிகள்.


 "வாளால் மகவரிந் தூட்ட வல்லேனல்லேன் மாது சொன்ன
 சூளால் இளமை துறக்க வல்லேனல்லேன், தொண்டு செய்து
 நாளாறிற் கண்ணிடந்து அப்ப வல்லேனல்லேன் நானினிச் சென்று
 ஆளாவ தெப்படியோ திருக்காளத்தி யப்பருக்கே"


என்று கூறுஞ் செய்யுள் ஞாபகத்துக்கு வருகின்றது. அன்பின் உயரிய நிலைக்கு சிறுத் தொண்டர், திரு நீலகண்டர், கண்ணப்பர் ஆகிய இவர்களைப் பட்டினத்தடிகள் எடுத்துக் காட்டுவதொப்ப கம்பரும் சுக்ரீவன் வாயிலாக அன்பின் முதிர்ந்த நிலைக்கு, சடாயுவையும், குகனையும் எடுத்துக் காட்டுகின்றார். இதுவரை கூறிய ஒரு சில சான்றுகளால், அன்பிற்கு முண்டோ அடைக்குந் தாழ் என்ற தலையங்கத்தின் உள்ளுறைப் பொருள் இராமனிடத்தும் அவனுழை அன்பின் வந்த வேடர் வேந்தனிடத்தும் விளங்குவ தாயிற்று.

 

இஃது இவ்வாறிருக்க, இன்றும் இவ்விராம காதையை கதாப் பிரசங்கம் செய்பவர் பலருளர். இவர்களில் பரதனும் குகனும் சந்தித்த காலத்து, ஒருவரது அடியில் ஒருவர் வீழ்ந்து வணங்கி, பின்னர் எழுந்து தழுவினர் என்று கூறும் பொழுது முதலில் வீழ்ந்து வணங்கியவன் குகனேயென்பர் ஒரு சாரார், முதலில் வீழ்ந்து வணங்கியது பரதனே யென்பர் மற்றொரு சாரார். இவர்கள் இச்சந்தேகத்தையும்


 "வந்தெதிரே தொழுதானை
 வணங்கினான் மலர் இருந்த
 அந்தணனுந் தனை வணங்கும்
 அவனும் அவன் அடி வீழ்ந்தான்
 தந்தையினுங் களிகூரத்
 தழுவினான் தகவுடை யோர்
 சிந்தையினுஞ் சென்னியினும்
 வீற்றிருக்கும் சீர்த்தியான் "

 

என்ற செய்யுளில் புகுத்திக் காட்டுகின்றார். என்னே! இவர் தம் பேதமை! எவர் முதலில் அடிவீழ்ந்து வணங்கினா லென்ன? கம்பர் பெருமானது உள்ளமோ அருள் நிறைந்த உள்ளம்; அன்பு கனிந்த உள்ளம். அவரோ குகனது அடியில் பரதன் வீழ்ந்தான் என்று கூறுவது இழுக்கு என்று கருதுபவர். அவர் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்று வள்ளுவர் அருளிய தெள்ளிய குண மாண்பின் உண்மையை உண்மையாய்க் கண்டமூதறிஞான்றோ. பரதனது அடியில் குகன் வீழ்ந்தான் என்று கூறுவதை விட நீதியில் நிலையமாய பரதன் அன்பின் உறைவிடமாய குகனது அடியில் வீழ்வது மிகவும் பொருத்தமான ஒரு செயலே யாகும்.

 

அக்காலத்து, அகத்தே ஒளிரும் அன்பெனும் மணியைப் புறத்தே குலமென்னும் மாசு படிந்துள்ள தென்பதை கவியரசர் கம்பர் பெருமான் நன்கு அறிவர். அம்மாசு நீக்கவே, குகனது அன்பின் பெருக்கையும் இராமனது உயரிய தன்மையையும் ஒருங்கே தனது காவியத்தில் அமைத்துக் காட்டுகின்றார். இவ்வுண்மை அறியாத சிலர் எழுப்பும் இவ்வையம் அவர் தம் சாதிச் செருக்கினால் எழுந்த ஓர் ஐயமே யன்றி கம்பரது கவியில் எழுந்த ஓர்ஐயமாகக் கருத என் மனம் இடந் தருகின்றிலது.

 

கொள்வார் கொள்ளுக தள்ளுவார் தள்ளுக எடுத்த என்பணி முடித்து
நிறகின்றேன் - திருவருள் முன்னிற்க – சுபம்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment