Wednesday, August 26, 2020

 

அன்பு!

 

சகோதர சகோதரிகளே! 'அன்பு'என்ற இவ்விஷயம் மிகப் பெரியது. இதைப்பற்றிப் பல பெரியார்கள் பலவாறு கூறுகிறார்கள். அவற்றை யெல்லாங் கூறி யுமக்கு விளங்கவைக்கும் ஆற்றல் எமக்கில்லை. ஆனால், ''இதை யடைந்தவர்களை இப்படர்ந்த உலகம் போற்றுகிறது. அடைதற்கரிய பெரும்பேறுகளையடைய இதுவன்றி வேறு வழியில்லை. நீங்களும் இத்தகைய அரும்பெரும் வல்லமையையுடைய பூரண அன்பையடைய வேண்டிய தவசியம்'' என்பதை மட்டுமே நாம் கூறுகிறோம்.

 
      இதையடைவதற்கு நீண்டநாள் தவஞ்செய்யவேண்டியதில்லை! காய் கனிகளைப் புசித்து வனங்களில் திரிய வேண்டியதில்லை! விலைகொடுத்து வாங்க வேண்டியதுமில்லை! தேகப்பிரயாசையுமில்லை! இலவசமாகவே எளிதிற் பெறலாகும். அது நாம் கூப்பிடுவதைக் கேட்டு, வந்து சேரவேண்டிய அவ்வளவு தூரத்திலுமில்லை. நீ நினைத்தபொழுதே உன் குறிப்பறிந்து தோன்றும் இயல்பையுடைய ஒரு ஏவலாளனைப் போல உன் அருகிலேயே காத்துக்கொண்டிருக்கிறது. நீ செல்லுமிடமெல்லாம் உன் நிழல் போலப் பின் தொடர்ந்தே வருகிறது. சிற்சில சமயங்களில் நீ அதை நினையாமற் செய்து விடுகிற இரண்டொரு செய்கைகளைப்பற்றி அது தன்னைத் தானே நொந்து கொள்கிறது.
 

இத்தகைய இலகுவில், அதுவும் இலவசத்தில், நினைத்த பொழுதிலேயே கிடைக்கவிருக்கும் ஓர் மகத்தான சக்தியை நீ வேண்டாமென்று கூற விரும்புகிறாயா? அந்தோ! இதையடையாதவர்களைப் பெரியோர்கள் மனிதவகுப்பிற் சேர்ப்பதில்லையே! கேவலம் மனித வுருவைப்பெற்ற ஓர்வித விலங்காகவே கருதுகிறார்கள். ஏனெனில், 'இவ்வளவு இலகுவாய்ப் பெறவிருக்கும் பாக்கியத்தை யடைய முயற்சியா திருக்கும் ஒருவன், இவ்வுலகில் எந்தக் காரியத்தைச் சாதித்துவிடப்போகிறான்' என்பதே அவர்களின் எண்ணமாகும்.

 

ஆதலால் நேயர்களே! வாழ்நாளை விருதாவிற் கழிக்காதீர். உலகத்திலேயே மிகச் சிறந்ததொன்றாகிய அன்பைப் பெற விரும்புங்கள். உம்மால் முதன்மையாகச் செய்யப்படும் முயற்சி அதற்காகவே யிருக்கட்டும். அதனாலடைகிற பெரும்பயனை இரண்டொரு தினத்திலேயே நன்கறியலாகுமாதலினால், இன்றே பிரயாசைப்படுங்கள்! இனிக் கூறுபவைகளைக் கதையைப் போல வாசித்து மறந்துவிடாதீர்கள். ஆழ்ந்த கவனிப்பு மிக்க அவசியம்.

'அன்பு' என்பது அடி, நுனி, இடை, வெளி யென்பதின்றி ஏகவுருவாய்ப் பொங்கித் ததும்பிப் பூரணமாய்க் கிடப்பதேயாகும். எனினும், ஓர் வகையில் அது அடர்ந்து, படர்ந்து, செழித்து வளர்ந்த பல்வேறு கிளைகளையுடைய ஓர் சிறந்த விருக்ஷம் போன்றது. பல்வேறு கிளைகள் 'என்றால், அது எது? வென்று அறிய விரும்புவீர்கள். ஆதலால், நாமும் விரிவஞ்சி மிகச் சுருக்கமாகவே ஒவ்வொரு கிளைகளைப்பற்றியும் கூற விரும்புகிறோம்.

 

இரக்கம்! இது தரித்திரர்களாகிய ஏழைகளிடத்துச் செலுத்தும் அன்பிற்குப் பெயர். நம்மாலியன்றவரையில் அவர்களின் பசிப்பிணியைத் தீர்க்கவேண்டும். இதைப்பற்றி ஒரு மகான் ஒருவர் பசி யென்று வருகையில் புசிக்கப் பொறுக்கமாட்டேன். மற்றதெல்லாம் பொறுப்பேன் இவ்வையகத்தில்' என்று கூறியுள்ளார்.

 

கருணை! இது சரீரபலம், அறிவு பலமாகிய வலிமையற்றவர்களிடத்து செலுத்தும் அன்பிற்குப் பெயராகும். அத்தகையோர்க்கு நாம் கூடுமான வரையில் உதவிகளைச் செய்ய மறவாதிருக்க வேண்டும். இவற்றை நமது புண்ணிய பூமியில் தோன்றி மறைந்த நம் முன்னோர்கள் பல வழிகளிலும் நடந்து காட்டினார்கள்.

 

காருண்யம்! இது எறும்பினுஞ் சிறிய ஜந்துக்கள், யானையினும் பெரிய பிராணிகள் வரை ஊர்வன, நடப்பன, பறப்பன, நீர்வாழ்வன வாகிய சகல உயிர்களிடத்தும் காட்டுகின்ற அன்பின் பெயராகும். அவைகளின் உயிர்களை நமது உயிராகப் பாவித்து நடத்துவதே காருண்யம். இதை நமது சிபிச்சக்ரவர்த்தி இவ்வுலகிற்குத் தமது செய்கையாலேயே காண்பித்தார்கள். இதற்குச் சீவகாருண்யம் என்றும் பெயர்.

 

பந்துத்துவம்! இது உறவினர்களிடத்து செல்வர், வறியர் என்ற வேற்றுமையில்லாமற் செலுத்தும் அன்பின் பெயராகும். அவர்கள் உறவினர்களேயாயினும், உடன் பிறந்தோராகக் கருதி அவர்களின் முகங்கோணாதபடி நடந்துகொள்ள வேண்டும். இவ்விருந்தோம்பல், 'சுற்றந்தழுவல்' முதலியவைகளை மற்றெந்த நாடுகளையும் விட நமது நாட்டிலேயே மிகச் சிறப்பாகக் காணலாகும்.

 

பட்சம்! இது 'எஜமான்' என்ற நிலைமையிலிருப்பவன், தன் வேலையாட்களிடத்திற் காட்டுகின்ற அன்பிற்குப் பெயராகும். வேலையாளேயாயினும், அவன் தன்னைப் போன்ற ஒரு மனிதனே யெனக் கருதி நடந்தொழுக வேண்டும். இதை நமது ஆதனூர் வேதியர், நந்தனாரிடத்திற் காட்டாமற்போனது பற்றி இறுதியில் பெரிதும் வருந்தினார்.

 

பாசம்! இது தாய் தன் குழந்தையினிடத்தும் குழந்தை தன் தாயினிடத்தும் செலுத்துகின்ற அன்பின் பெயர். உடல் இரண்டாயினும், உயிர் ஒன்றாகவே பாவித்து நடத்துவதாகும். இது மிக்க பிணிப்புடைய அன்பு மனதைக் கவர்ந்து நீங்காதது. இவற்றை ஸ்ரீராமரும் கௌசலையும் நடந்து கொண்ட சரித்திரத்தால் நன்கறியலாம்.

 

நேசம்! இது தம்மை யொத்த நண்பர்களிடத்திற் செலுத்துகின்ற அன்பின் பெயராகும். இது வயது, வலிமை, செல்வம், அந்தஸ்து முதலியவைகளில் ஏற்றத்தாழ் விருப்பினும், சிறிதும் கருதாது அவர்களுடைய சுகம், துக்கம் முதலியவைகளைச் சமமாகவே அனுபவித்தலாகும். இதை ஸ்ரீ கிருஷ்ணபகவான், குசேலரிடத்தில் நடந்துகொண்ட நிலைமை தெளி வாய்ப் புலப்படுத்தும்.

 

விசுவாசம்! இது ஊழியஞ் செய்பவன் தன் எஜமானனிடத்திற் காட்டுகின்ற அன்பின் பெயர். எஜமானன் தான் செய்த வேலைக்குத்தானே கூலி கொடுத்தான் என்று அலட்சியமாய்க் கருதிவிடாமல், தனக்கு அன்னமளித்துதவும் தந்தையாகப் பாவித்து உண்மையோடு நடந்து கொள்ள வேண்டும். எவ்வளவுதான் அடித்தாலும் உடனே மறந்து, தனக்கு சோறு போடுகிறான்' என்ற ஒரே எண்ணத்தைக் கொண்டு சந்தோடத்தோடு பணிந்து நடக்கும் நாயானது, இவ்விஷயத்தில் மனிதனுக்குப் பின்னடைவ தில்லை.

 

அபிமானம்! இது சொந்த தேசத்தினிடத்தும், தாய்மொழியினிடத்தும், பிறப்புரிமை பெற்ற மதத்தினிடத்தும் செலுத்துகின்ற அன்பின் பெயராகும். இவை முறையே 'தேசாபிமானம்'', பாஷாபிமானம்'', மதாபிமானம்' என்று கூறப்படும். மனிதத்தன்மையை உள்ளபடியே யடைந்த எவர்களிடத்திலும் இவைகளைக் காணலாம். இவைகளை யுடையவர்களா யிராதவர்கள் ஒருபோதும் மனிதவர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதப் படமாட்டார்கள்.
 

காதல்! இது புருடன் தன் மனைவியினிடத்தும் மனைவி தன் புருடனிடத்தும் செலுத்துகின்ற அன்பிற்குப் பெயர். இது உள்ளபடியே மிகப் பரிசுத்தமானதும், தங்களையும் மறந்து பிணைக்கப்படுவதுமாகிய ஓர் தெய்வீக சக்தியேயாகும். இதை நளன், தமையந்தி முதலியவர்கள் நமக்கு அனுபவமாய்க் காட்டியுள்ளார்கள். இக்காதல் மிகப் பரிசுத்தமானதே. இது பிரஜாவிர்த்தியின் பொருட்டு பகவானால் அமைக்கப்பட்ட ஒருவித அதிசயசக்தியே யெனத் தகும். ஆனால் இதை வரம்பு கடந்து செல்லும்படி விட்டால் இதைவிடக் கெடுதி வேறில்லை. இது பிறவியை வளர்க்கும் பெரு மருந்தாகும். அதனானே ஞானிகள் இதை அறவே வெறுக்கிறார்கள். தீயினும் கொடிதென அஞ்சுகிறார்கள்.

 

பக்தி! எல்லாம் வல்ல இறைவனிடத்திற் செலுத்துகின்ற அன்பிற்கே பக்தி யென்று பெயர்! பூரண விசுவாசமும் வணக்கமும் சேர்ந்ததே பக்தி. இதைத் தூய்மையான நீரில், அமுதம் போன்ற பாலானது இடைவிடாது சொட்டு சொட்டென வந்து விழப்பண்ணும் ஓர்வித செய்கைக்கே ஒப்பிடலாம். போதுமான பால் விழப்பெற்றதும், பாலும் நீரும் பிரிவின்றி ஒன்றாய்த் தோன்றுவது போல பக்தனும், இறைவனும் அன்பின் வசத்தால் பிணைக்கப் பெற்று வேறு பிரித்தறிய முடியாதபடி ஒன்றாய்க்கலந்து தோன்றுவார்கள். இந்த நிலைமைக்கே பெரியோர்கள் " அன்பே சிவமாவதியாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருப்பாரே'' என வேதத்தின் முடிவான பொருளை மிகச் சுலபமாய்த் தெளிவாய்க் கூறியுள்ளார்கள்.

 

இவைதான் 'அன்பின் கிளைகள்' என்று கூறியது. ஒருவன் தன் மனைவியையும், குழந்தையையும் முத்தமிடுவது ஒரேவித செய்கையே யெனினும் முந்திய செய்கைக்குக் 'காதல்' என்றும், பிந்திய செய்கைக்குப் 'பாசம்' என்றும் பொருள்படுவது போல, இவையாவும் அன்பின் நிகழ்ச்சியே யெனினும், மனம் வேறுபாடடைதலினாலேயே இப்பெயர்கள் இடப் பெற்றன வெனக் கருதலாம்.

 

இவ்வுலகம் ஒரு விதத்தில் கண்ணாடி போலப் பிரதி பிம்பிக்கிறது. நீ கண்ணாடியினிடத்து நெருங்கினால் உன்னைப்போன்ற மற்றொரு உருவத்தைக் காண்பாய். நீ கையை உயர்த்தினாலும், சிரித்தாலும் அவ்வுருவமும் அப்படியே செய்வதுபோல இவ்வுலகமும் நம்மில் உள்ளதையே திரும்பக் காட்டும். எல்லோரும் உன்னிடத்தில் மரியாதையாய்ப் பேசவேண்டுமானால் நீ எல்லாரிடமும் மரியாதையாய்ப் பேசு. மற்றவர்கள் உன்னைக் கனப்படுத்த வேண்டுமானால், நீ மற்றவர்களைக் கனப்படுத்து. உன் சுகத்தைப் பிறர் கவனிக்கவேண்டுமானால் நீ பிறர் சுகத்தைக் கவனி. உன்னை மூடன்' என்று எல்லோரும் கூறவேண்டுமானால், நீ எல்லோரையும் 'மூடர்கள்' என்று கூறு. நீ எதைக் கொடுக்கிறாயோ அதையே பெறுகிறாய். அடி வேண்டுமானால், வழியிற் போகும் ஒருவனை அடி. அன்பு வேண்டுமானால், அன்பாயிரு! இது வெளிப்படையான உலக அனுபவம்.

 

'அன்பு' இல்லாதவர்கள் எல்லாப் பொருள்களும் தமக்கேயுரியவை என்று கூறுவார்கள்; அன்பையுடையவர்களோ தமது எலும்புகூட பிறர்க்கு உரியது என்று செய்கையிற் காட்டுவார்கள்.


 "அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா
 ரென்பு முரியர் பிறர்க்கு -                       
என்றருளினார் நாயனார்.

 

ததீசி மகாமுனிவர், விருத்திராசுரன் முதலிய அசுரர்களைக் கொல்ல வச்சிராயுதம் செய்து கொள்வதற்காகத் தம்மைக் கேட்ட இந்திரனுக்குத் தமது முதுகெலும்பைக் கொடுத்துவிட்டார்.

 

அன்பில்லாதவன் எலும்பையுஞ் சதையையுந் தோலாற் போர்த்திக் கொண்ட ஒரு மனித வுருவமாசமட்டுமே (இறவா திருந்தும் இறந்தவனாகவே) காணப்படுகிறான். ஆதலால், நீ மக்கட்பிறவி யெடுத்ததின் பயனை யடைய வேண்டுமானால், மக்களின் வகுப்பில் நீயும் ஒருவனாக விளங்க வேண்டுமானால் நிறைந்த அன்பை யுடையவனாயிரு! அன்பெனும் பிடியில் அகப்படும் அன்புருவாயமைந்த பரசிவத்தை, நமக்கு அருமையான அன்பை சுலபமான வழியில் நாம் பெறும் பாக்கியத்தைக் கொடுத்தருள் புரியுமாறு பிரார்த்திப்போமாக!


 கி. ஆ. பெ. விஸ்வநாத பிள்ளை,

 54, தஞ்சாவூர் ரோட், திருச்சிராப்பள்ளி

.

குறிப்பு: - இந்த விஷயம் யாவரும் கவனத்தோடு வாசித்தற்குரியது. அன்பு என்பது சீவர்களிடத்து கனிவினால் எழும் ஒருவித மன நிகழ்ச்சியாகும். பிற சீவனுடைய துயரைக்கண்டு சகியாததே யிதன் பெருந்தன்மையான சுபாவமாகும். இந்த அன்பு ஆன்மாவினிடத்தே அதன் சொரூபமாகவே அமைந்துள்ளது. அவித்தை யல்லது அகங்காரத்தால் சீவன் இராகத்துவேஷாதிகளோடு சம்பந்தப்பட்டு பரிசுத்தமான அன்பை மறந்து கர்மங்களில் இடர்ப்படுகிறான். தன் இயற்கையாகிய அன்புருவை யடைந்தவனே சிவத்தையடைந்து நித்தியானந்த நிலை யெய்துவன். எப்படி யெனில் அன்பே சிவமாதலின் என்க. ஆதலின் இந்த அன்பைப் பூரண மாய்ப் பெற்றோர் அழியாத முத்திப்பேறடைவர் என்பதையுணர்ந்து ஒவ் வொருவரும் அன்புமயமாக முயலவேண்டும்.

 

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1924 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment