Wednesday, August 26, 2020

 அன்பு

 

அன்புஞ் சிவமுமிரண் டென்ப ரறிவிலார்
அன்பே சிவமாவதி யாரு மறிகிலார்
அன்பே சிவமாவதி யாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந் திருந்தாரே.


என்னும் திருமூலர் திருவாக்கை ஆதரவாகக் கொண்டு அன்பு என்னும் விஷயத்தை எஞ்சிற்றறிவிற் கெட்டியவாறு எழுதத் துணிகின்றேன். மேற்கண்ட திருவாக்கில் வரும் அன்பு, சிவம் என்னும் இரு பதங்களில், முதலில் அன்பு என்பதைப் பற்றிச் சிறிது ஆராய்ந்து பின் சிவத்தின் இலக்கணத்தையும் ஒருவாறு தேர்ந்து, இரண்டிற்குமுள்ள இயைபினைப் புலப்படுத்திக் காட்டல் வேண்டுமென்பதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்.

 

"அன்பெனப்பட்டது தான் வேண்டப்பட்ட பொருளின் கட்டோன்றும் உள்ள நிகழ்ச்சி'' என்று ஆசிரியர் நக்கீரனார் இறையனாரகப் பொருள் முதல் சூத்திரத்தில் கூறியிருக்கின்றார். ஆசிரியர் அன்பிற்கு இவ்வாறு இலக்கணங் கூறவே, அன்பென்பது தான் கருதப்பட்ட பொருளின் பட் டோன்றும் வேட்கை யென்பதும், அதுவே ஈண்டு அன்பென்று விகற்பிக்கப்படா நின்ற தென்பதும் நோக்கற் பாலன. உலகத்துள்ள பொருளெல்லாம் இரண்டு வகையான் உணர்த்தப்படும். பொருளின் உண்மையை மட்டும் உணர்த்தி, அப்பொருளின் உருவ இலக்கணம் உணர்த்தப்படாதிருத்தல் ஒரு விதம், பொருளின் உண்மையும், உருவ இலக்கணமும் ஒருங் குணர்த்துவது மற்றொரு விதம். இவ்விரு வகையினுள் அன்பு எதன்பாற் படுமோ வெனின், ஆசிரியர் நக்கீரனார் கூறுவதுபோல் 'உண்மை மாத்திர முணர்த்திப் பிழம்பு உணர்த்தப் படாதன' வாகிய பொருள்களின் கட் படும். அதாவது நெஞ்சத்துணர் வினிற்கு மட்டும் புலப்பட்டு அனுபவிக்கப்படுவதாயும், அவ்வனுபவம் இத்தகையதாயிருந்ததென எவ்வாற்றானும் பிறருக்குப் புலப்படத் தோன்றக் கூறப்படுவதன்றாயு முள்ளது.

 

அன்பென்பது இவ்விலக்கண முடையது என்று சுட்டிக் காட்ட ஏலாமையானன்றோ. ''அன்பென்பது குடத்துள் விளக்குந் தடற்றுள் வாளும் போல இது காண் அன்பென்று தந்து காட்டலாகாது." என்று இறையனாரகப் பொருள் உரையாசிரியரும் கூறிப் போந்தார். ஆகவே பயன் சிறிதுங்கருதாது ஓர் ஆன்மாவிற்குப் பிறிதொரு பொருண் மேலுண்டாம் வேட்கையாலேற்படும் உள் நெகிழ்ச்சியே அன்பு என்று சொல்லப்படும் என்பதும், அவ்வன்பும் உண்மை மாத்திரம் உணரப்படுவதாய்ப் பிழம்புணரப்படுவ தன்றாயதோர் பொருளா மென்பதும் ஈண்டுக் காட்டப்பட்டன.

 

இனி ஆன்மாவிற்கு அநுபவ மாத்திரையாயுள்ள, உள்ள நெகிழ்ச்சியாகிய அன்பு ஆன்மாவினிடத்து இயற்கையாக உள்ளதா, அல்லது செயற்கையால் இடையே வந்து சேர்ந்ததாவென்று ஆராய வேண்டும். அன்பு என்பது ஒரு குணப் பொருளே யன்றி குணிப் பொருளல்ல. குணம் யாண்டும் தனித்து நில்லாமல் ஓர் குணிப் பொருளைப் பற்றிக் கொண்டே நிகழுமாகலான், ஆன்மாக்களிடம் இயற்கையே அமைந்து கிடப்பது; ஆகவே ஆன்மாக்களின் அறிவு விரிந்து திகழும்போதெல்லாம் அன்பும் உடன் நிகழுமென்றறிக. ஆனால் அன்பு ஆன்மாவிற்கு இயற்கையாகவே யுள்ள குணமாயின் அவ்வன்பு எப்போதும் புலப்படாதிருக்கின்றதே, அதற்குக் காரணம் யாது என்று சிலர் வினவலாம். காந்தத்திற்கு இரும்பூசியை இழுக்கும் சக்தி இயற்கையாக இருப்பினும், இரும்பூசியைக் காணாவிடத்து அச்சக்தி புலப்பட்டுத் தோன்றுவதில்லை. இதனால் காந்தக் கல்லிற்கு ஆக்ருஷண சக்தியில்லை யென்றே முடிவு கோடல் நியாயமா? ஆகாது. மற்றென்ன வெனின், காந்தக் கல்லில் இயற்கையாகவே இருப்பதும், ஆனால் மறைந்து கிடப்பதும் (Latent) ஆகிய ஆக்ருஷண சக்தியானது இரும்பைக் கண்டவிடத்து வெளிப்பட்டுத் தோன்றுகிற (manifest) தென்பதே உண்மையாம். அது போலவே ஆன்மாவினிடத்துக் கரந்து நிற்கும் அன்பானது தான் வெளிப்பட்டுத் தோன்றுதற்குரிய சாதனங்கிடைத்த அளவானே வெளிப்பட்டுத் தோன்றும் இயல்புடையது. ஆதலால் ஓரான் மாவின் கண் எப்போதும் புலப்படாதது கொண்டே அன்பென்பது ஆன்மாவிற்கு இயற்கையேயுள்ள குணமன்றெனக் கூறுதல் பொருந்தா தென்பதும், மற்று அது ஆன்மாவிற்கு இயற்கையாகவே உள்ளதோர் குண மாம் என்பதும் காதலா மலகம் போற் காட்டப்பட்டன.

 

இனி, இவ்வன்பைப் புலப்படத் தோற்றுவிப்பது யாதெனின்: - அன்பே அன்பைத் தோற்றுவிக்கும். பச்சை விறகைத் தீயிலிட்டால் அவ்விறகு தீப்பிடித்து எரியக் காண்கிலேம். இதற்குக் காரணமென்னை? பச்சை விறகிலிருக்கும் ஈரமும், தீயிலிருக்கும் வெம்மையும் தம்முள் பெரிதும் மாறுபட்டசுபாவ முடையனவாயிருத்தலால் அவை யிரண்டும் ஒன்றோடு ஒன்று சேருவதில்லை; சேரா தொழியவே விறகும் எரிவதில்லை. மற்றுக் காய்ந்த விறகையும், தீயையும் ஒன்று சேர்த்தால் உடனே அவ்விற்கு கொழுந்துவிட் டெரியக் காண்கின்றேம். இதற்குக் காரணம் என்னை? காய்ந்த விறகில் இயற்கையே அமைந்து கிடக்கும் சூடும், நெருப்பின் உஷ்ணமும், தம்முள் ஒத்த குணமுடையவாதலால் இரண்டும் ஒன்று சேர்ந்து எரிகிறது. இது பற்றியே 'ஒத்த குணமுடையன தம்முள் ஒன்று சேருமென்றும், மாறுபட்ட குணமுடையன தம்முள் பிரிந்து நிற்குமென்றும்' (Like things attract each other, unlike things repel each other) ஆங்கில பூத பௌதீக சாத்திரிகள் வரையறுத் துரைப்பாராயினர். மானையும் மானையும் ஒன்று சேர்த்து வைத்தால் அவை யிரண்டும் தம்முள் ஒன்றுபடும். புலியையும் மானையும் ஒன்று சேர்த்து வைத்தால் அவை இரண்டும் தம்முள் ஒற்றுமை யுறுமோ? ஏன்? இரண்டும் ஒன்றனுக் கொன்று மாறுபட்ட சுபாவமுடையன வாககானென்க. அதுபோலவே அன்பும் அன்பும் தம்முள் ஒன்றுபடுமாககான், அன்பே அன்பை தோற்றுவிக்கு மென்க. எம்முடனே உண்மையன்பு பாராட்டும் எமதரிய நேசரைக் கண்டவிடத்து எமக்கு அன்புண்டாதலும், எம்மை வெறுக்கும் எமது பகைவரைக் கண்டவிடத்து எமக்கு வெறுப்யுண்டாதலும் பிரத்தியட்சமாக அறியப்படும் உண்மையாகலான், அன்பே அன்பைத் தோற்றுவிக்கு மென்பதற்கு வேறு பிரமாணங்கள் வேண்டா வென்க.

 

எல்லா உலகங்கனையும், எல்லா அண்டங்களையும் தன் வியாபகத்தின்கண் அடக்கிக் கொண்டு அவைகளிலெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்ற ஒருசக்தியுண்டு. இந்தச் சக்தியைத் தான் ஆங்கில பௌதிக சாத்திரிகள் மின்சார சக்தி (Electricity) என்று கூறுகிறார்கள். இந்தச் சக்தியை நம்முசைவ சித்தாந்திகள் அருட் சக்தி என்றுரைப்பர். இந்த மின்சார சக்தியானது உடன்பாட்டு மின்சாரம் (Positive Electricity) எதிர் மறை மின்சாரம் (Negative Electricity) என இருவகைப்படும். இவ்விருவகையும் கலந்து நிற்கும் போது இந்தச் சக்தி ஒரு தொழிலையும் செய்யாது; சக்தியும் புலப்பட்டுத் தோன்றாது. உடன் பாட்டு மின்சாரத்தையும், எதிர்மறை மின்சாரத்தையும் தனித் தனியாகப் பிரித்தால் அப்போது இச்சக்தியின் ஆற்றல் புலப்பட்டுத் தோன்றும். நாம் இவ்விரண்டையும் தனித்தனியாகப் பிரித்து விட்டோமாயினும் அவைகள் மறுபடியும் ஐக்கிய முறுவதற்கே முயற்சி செய்யும். இம்மாதிரியாக ஏற்படும் முயற்சியும், அதற்குரிய ஊக்கமும் சடப் பொருள்களிடத்துக் காணப்படும்போது அச்சக்திபை ஆகருஷ்ணசக்தி பென்றும், சித்துப் பொருள்களிடத்துக் காணப்படும்போது பிராண சக்தி யென்றும் நாம் வழங்குகின்றோம்.

 

இந்தச் சக்தி இறைவனுடைய அருட் குணமாகும். இதுபற்றியே 'அருளுண்டா மீசற்கது சத்தியன்றே' என்னும் ஆன்றோர் திருவாக்குமெழுந்தது. திருவிளையாடற் புராண முடையார் ''சக்தியாய்ச் சிவமாகி" என்றதும் இக்கருத்தே பற்றி என்க. இறைவன் வேறு சக்தி வேறு என்று இதனால் கருதக்கூடாது. இறைவனை விட்டுச் சக்தியும், சக்தியை விட்டுச் சிவமும், பிரியா வென்க. அதாவது இறைவனாகிய சிவத்திற்கும், அவனதருளாகிய சக்திக்குமுள்ள சம்பந்தம் தாதான்மிய சம்பந்தமாகும். தாதான்மிய சம்பந்தமாவது எக்காலத்தும் எவ்வாற்றானும் பிரிக்கமுடியாத சம்பந்தம். அஃதெவ்
வாறெனின்: - நீரின் தண்மையையும், நெருப்பின் வெம்மையையும் பிரித்து நீரை வேறாகவும், அதன்கண் அமைந்திருக்கும் தண்மையை வேறாகவும், நெருப்பை வேறாகவும், அதன் வெம்மைக் குணத்தை வேறாகவும் ஆக்குதல் முடியாதன்றோ? அது போன்ற சம்பந்தமுடையது தாதான்மிய சம்பந்தம். மற்று ஒரு பொருளுக்கும், மற்றொரு பொருளுக்குமுள்ள சம்பந்தம் சையோக சம்பந்தம் எனப்படும். இறைவன் உலகோடும், உயிரோடும் தாதான் மிய சம்பந்தப் பட்டிருக்கிறார் என்பதற்குப் பிரமாணம்:


''காலினில் ஊறும், கரும் பினிற் கட்டியும்,

பாலினுள் நெய்யும், பழத்துள் இரதமும்,
பூவினுள் நாற்றமும், போலுளன் எம்மிறை

காவலன் எங்கும் கலந்து நின்றானே."                          - என்று,


சிவஞான சிரேட்டராகிய திருமூலவடிகள் அருளிச் செய்ததே போதியதா மென்க. இதுபோலவே ஆன்மாவிற்கும், அன்பிற்குமுள்ள சம்பந்தமும், தாதான் மிய சம்பந்தமாகும். ஆகவே, அன்பு ஆன்மாவிற்குரிய இயற்கைக் குணமென்பதும், அதை ஆன்மாவினின்றும் பிரிக்க முடியாதென்பதும் பெறப்பட்டன.

 

ஆன்மாவிற்கு அன்பு, இயற்கையாகவே உள்ளதெனின் அநேகர் அன்பின்றி பொறாமை, கோபம், தன்னலங்கருதல் முதலிய இழி குணத்தர்களாயிருக்கக் காண்கின்றோமே அதற்குக் காரணம் என்னையெனில், கூறுதும். ஆன்மாவின் அறிவை அறியாமை யென்னும் ஓர் குணம் மறைத்துக் கொண்டிருக்கிறது. அறியாமைக் குணம் ஆணவமலத்திற்கிருப்பது. இந்த மலத்தின் குணம் ஆன்ம அறிவை மறைத்து நிற்பதாகும். இவ்வறியாமை தேய்ந்தால் ஆன்ம அறிவு தானே விளங்கும். ஆன்மாவிற்கும் ஆணவமலம் என்பதற்கும் உள்ள இயைபு எதுபோல்வதெனின்: நெல்லிருப்பது முதல் அதனோடு உமியும், செம்பிருப்பது முதல் அதனுடன் களிம்பும் இருத்தல் போல ஆன்மாவொடு இயற்கையாகவே பொருந்தியிருக்கின்ற ஓர் பொருளாம் ஆணவமலம் என முடிவு கூறலே பொருத்தமாமென்க. ஸ்படிகமானது இயற்கையில் பிரகாசமுடையதே யாயினும், 'பாசியினால் மூடப்பட்டிருக்கும் போது அப்பிரகாசம் புலப்படாதது போல் ஆன்மா இயற்கையில் அன்பைக்குணமாக உடைய தாயினும் ஆணவ மலத்தினால் மூடப்பட்டிருக்கும் போது அவ்வன்பு புலப்படாமல் ஆணவம் மறைத்து நிற்கும். ஆனால் ஸ்படிகத்தை மூடியிருக்கும் பாசி நீக்கப்பட்டவுடன் ஸ்படிகத்தின் இயற்கையொளி புலப்பட்டுத் தோன்றுதல் போல, ஆன்மாவை மூடியிருக்கும் ஆணவமலம் விலகினால் ஆன்ம அறிவு தானே விரிந்து திகழும்; திகழவே அன்பும் புலப்பட்டுத் தோன்றும்,

 

இனி அறியாமை நீங்குவதும், அன்புண்டாவதும் யாங்ஙனமெனில், பிறசீவர்களை யெல்லாம் தம் முயிரைப்போல் கருதி அவைகளுக்கு இடையூறு நேர்ந்த காலத்தே அதனை நீக்க முயலுவதனாலும், எல்லாம் வல்ல இதைனிடத்தே உண்மையான பக்தி செலுத்துவதனாலும், அறியாமை நீங்கி அன்புண்டாகும். இறைவனுக்கு வேண்டுவது உண்மை யன்பே யன்றி மற்றில்லை. கண்ணப்ப நாயனார் வேட்டுவராயிருந்தும் ஆசார அனுட்டானத்தைப் பின்பற்றுபவராயிருந்தும், மாமிசத்தை எச்சிற்படுத்தி இறைவனுக்குப் படைக்கும் இயல்புடையவராயிருந்தும், அவருடைய நிவேதனத்தை இறைவன் எவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்டார் என்பதனைப் பார்க்கும் போது, உண்மை யன்பே இறைவனை வசப்படுத்தற்குரிய மார்க்கமாகு மென்பது இனிது புலப்படும். இறைவன் கண்ணப்பருடைய அன்பை வியந்து சொன்னது போல் நக்கீரனார் கண்ணப்பர் திருமறம் என்பதில் மிக நன்றாகப் பின் வருமாறு சொல்லுகின்றார்.


"பூசனை செய்யுங் குனிசிலை வேடன்
குணமவையாவன உரிமையிற் சிறந்த
நன்மாதவ னென்றுணர்க வனுவந்
தியங்கியவிட முனிவன மதுவேயவன்
செருப்படியாவன விருப்புறு துவலே
எழிலவன் வாயது தூயபொற் குடமே
அதனிற்றங்கு நீர்கங்கையின் புனலே
புனர்கிடுமாமணி யவனிரைப் பல்லே
அதற்கிடு தூமல ரவனது நாவே
உப்புனல் விடும் பொழுது ரிஞ்சிய மீசைப்
புன்மயிர் குசையினு தம்மடிக் கினிதே
அவன் றலைத் தங்கிய சருகிலை தருப்பையிற்
பொதிந் தவங்குவி கற்பகத்தலரே
அவனுவந்திட்ட விறைச்சி யெமக்கு
நன்மா தவரிட்ட நெய் பாலலியே."


கண்ணப்ப நாயனாருடைய முதிர்ந்த அன்பின் திறத்தை இத்தகையதென வரையறைப்படுத்திக் கூறலாகாமையா னன்றோ


"கண்ணப்ப னொப்பதோ ரன் பின்மை யென் றமையாற்
கண்ணப்ப னொப்பதோ என்பதனைக்- கண்ணப்பர்
தாமறிதல் காளத்தி யாரறிதலல்லது,
மற்றாரறியு மன்பன்றது''


என்று உய்யவந்த தேவநாயனாரும் அருளிச் செய்வாராயினர். உள்ளங் குழைந்து இறைவன் மீது பதிகங்கள் பாடிய ஸ்ரீமந் மாணிக்கவாசகப் பெருமானே,


''கண்ணப்ப னொப்பதோ ரன் பின்மை கண்டபின்
என்னப்ப னென்னொப்பில் என்னையு மாட்கொண்டருளி
வண்ணப்பணித் தென்னைவா வென்றவான் கருணை
சுண்ணப் பொன்னீற்றிற்கே சென்றூதாய் கோத்தும்பீ.''


என்று கண்ணப்ப நாயனாரைப் பற்றி விசேஷித்துக் கூறியிருக்கிறாரென்றால் வேறென்ன சொல்ல வேண்டும்?


இவ்வன்பானது மந்ததாம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.

 

அரக்கானது வெயிலின் முன் உருகுதல் போல்வது மந்ததரமென்றும், மெழுசானது வெயிலுக்கு முன் உருகுதல் போல்வது மந்தமென்றும், நெய்யானது சூட்டினுக் குருத்தல் போன்றது தீவிரமென்றும், எண்ணெய் இடையறா தொழுகுதல் தீவிரதரமென்றும் சொல்லப்படும். இந்நான்குவகையினுள் கண்ணப்பர் செலுத்தியது தீவிரதரம் என்பதன் பாற்படும்.

 

இனி, உண்மை யன்பு ஒருவனுக் குண்டாவதற்குச் சான்றோர்களுடைய கூட்டுறவும், ஞான நூலாராய்ச்சியும், இறைவனிடத்துப் பக்தியும் இன்றியமையாது வேண்டப்படுவனவாம். இதுபற்றியே,


"நிலத்தியல் பானீர் திரிந்தற்கும் மாந்தர்க்
கினத்தியல் பதாகு மறிவு''


என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவரும் அருளிச் செய்வராயினர்.

 

சிவஞானச் செல்வரான பட்டினத்துப் பிள்ளையார்,

 

“நல்லா ரிணக்கமும் நின் பூசை நேசமு ஞானமுமே
யல்லாது வேறு நிலையுள தோவகமும் பொருளும்
இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வு மெழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா கச்சியே கம்பனே"


என்று அருளிச் செய்ததும் இக் கருத்துப்பற்றியே என்க.

 

இனி, இவ்வன்பானது அறிவு முதிர்ச்சி ஆக ஆக, தானும் முதிர்ச்சியுறும் தன்மையுடையது. உதாரணமாக ஒரு குழந்தை பிறந்தவுடனே தாயை அறிந்து அவளிடத்து மட்டும் அன்பு செலுத்திப், பின் காலம் செல்லச் செல்ல தனது தந்தை, உற்றார், உறவினர், ஆசான், நண்பர் முதலானவர்களிடத்து அன்பு செலுத்தக் காண்கின்றோம். இதனால் அறிவு விருத்தி அதிகமாக அதிகமாக, அன்பும் முதிர்ச்சி யுறுகின்றதென்பது நன்கு புலப்படுகிற தன்றோ?

 

ஏனையோரிடத்து ஒருவனுக்குத் தோன்றும் அன்பைக்காட்டினும், புதல்வரிடத்துத் தோன்றும் உள்ளன்பே மிகப் பரிசுத்தமுடைய தாகும். ஏனெனில், மற்றோரிடத்து ஒவ்வோர் பயன் கருதி அன்பு செலுத்துவோம். பிள்ளைகளிடத்து மட்டும் பயன் சிறிதும் கருதாது அன்பு செலுத்துவதாலென்க. மேலும், காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக் குற்றங்களும் தோன்றாப்பருவம் குழவிப் பருவமாதலால், அவர்களிடத்துச் செய்யும் அன்பு சிவனிடத்துச் செலுத்தும் அன்பிற்குச் சமமாகும். இதுபற்றியே,


''படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும்
உடைப்பெருஞ் செல்வராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கௌவியுந் துழந்தும்
நெய்யுடையடிசில் மெய்படத் திமிர்ந்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பலக்குறை யில்லைத் தாம் வாழும் நாளே''


என்னும் ஆன்றோர் திருவாக்குமெழுந்தது. இம்மாதிரியாக அன்பு நிகழப் பெறுமாயினும் அதனுடைய நிகழ்ச்சியின் ஏற்றத்தாழ்விற்கேற்பப் பலவாறு அந்த 'அன்பு'' பெயர் பெறும், பெற்றோர்களுக்குப் புத்திரர் மாட்டுத் தோன்றும் அன்பு "வாஞ்சை" என்றும் ஒருவனுக்குப் பிறனொருவன் மாட்டு நிகழும் அன்பு 'நட்பு' என்றும், தம்பதிகளுக்குள் ஏற்படும் அன்பு 'காதல்'' என்றும், ஒருவனுக்குத் தன்னினும் தாழ்ந்த சீவர்களிடத்துண்டாகும் அன்பு ''இரக்கம்' என்றும், ஆன்மாக்களுக்குக் கடவுளிடத் துண்டாகும் அன்பு ''பக்தி' என்றும், இறைவனுக்குச் சீவர்கண் மாட்டு நிகழும் அன்பு ''அருள்'' என்றும் பெயர்பெறும். இம்மாதிரியே மற்றவைகளையும் வைத்துக் கண்டு கொள்க. ஆகவே அன்பினுடைய இலக்கணம் இத்தகையதென ஒருவாறு கூறப்பட்டது.

 

இனி, சிவத்தின் இலக்கணத்தைப்பற்றிச் சிறிது கூறுவாம். சிவமென்னும் பதத்திற்கு மங்களம் என்று பொருள். எல்லாம் வல்ல கடவுள் ஒன்றே சிவமெனப் பெயர் பெறும். இந்த இறை முதற் பொருளானது தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை யறிவினனாதல், முற்று முணர்தல் இயல்பாகவே பாசங்களினீங்குதல், 'பேரருளுடைமை' வரம்பிலின்பமுடைமை, முடிவிலாற்றலுடைமை என்னும் எண் குணங்களை யுடையது. இவ்வெட்டுக் குணங்களுள், இக்கட்டுரைக்கு வேண்டுவதாகிய பேரருளுடைமை என்பதனை மட்டும் சிறிது ஆராய்வாம். ஒவ்வொன்றினையும் பற்றிக் கூறின் மிக விரியும்.

 

அறிவுப் பொருள்களான ஆன்மாக்கள் தம் இயற்கை யறிவு சுருங்கிப் பேரின்ப நுகர்ச்சிப்பேறு எய்த முடியாமல் வருந்துதலைக் கண்டு, அவர்கட்குப் பாசக் கவிப்பினை நீக்கிப் பேரின்பந் துய்ப்பித்தல் வேண்டும் என்று இறைவனுக்கு இயற்கையிலேயே எழும் இரக்கம் தான் போருளுடைமை என்று சொல்லப்படும். இந்த அருளையே இறைவன் குணமாக உடையவ்னானதால் அது அவனின்றும் பிரியாததென்பது தேற்றம். இதுவே சக்தி யென்றும் சொல்லப்படும். இறைவன் வேறு சக்தி வேறு என்று இதனால் கருதக்கூடாது. சூரியன் தன்னை நோக்கினவழி அது கதிரோனெனல் பெயர் பெறுதல் போலவும், அதன் ஒளியை நோக்கிய வழி கதிரெனப் பெயர் பெறுதல் போலவும், இறைவன் தன்னை நோக்கிய வழி சிவமெனவும், இறைவனுடைய அருளை நோக்கிய வழி சக்தி எனவும் வழங்கப்படும். ஆனாலும், ஞாயிறும் அதன் ஒளியும் குண குணிகளாதலான், ஒன்றேயாதல் போல, சிவமுஞ் சக்தியும் குண குணிகளாகலான் ஒன்றேயாமென்றுணர்க.


''பொன்னிறங் கட்டியினும் பூணினு நின்றாற்போ
லந்நிற மண்ணலுமம் பிகையுஞ்- செந்நிறத்த
ளெந் நிறத்த ளாயிருப்ப ளெங்கள் சிவ பதியு
மந் நிறத்தனா யிருப்பனாங்கு"


என்னும் ஆன்றோர் திருவாக்கு மிவ்வுண்மையை வலியறுத்தும்.

 

இனி, சிவமும், சீவ அன்பும் ஒன்றேயாதல் போல், ஆன்ம சக்தியும், சிவ சக்தியும் ஒன்றேயா மென்பதுங் காட்டுவாம், சூரியனுடைய ஒளியின்றிக் கண்ணொளி விளங்கமாட்டாது. அது போல சிவ சக்தியின்றி ஆன்சக்தி விளங்க மாட்டாத சூரிய கிரணமும் பொருளளவான் வேறாயினும், கண் ஒன்றைக் காணும் போது கதிரொளியும் உடன் நின்று காட்டுதலின், அவையிரண்டும் ஒருமையுறுகின்றன. அதுபோலவே ஆன்மாவினிடத்து அன்பு தோன்றும் போதெல்லாம் சிவ சக்தி அவ்வான்மாவினுடன் நின்று அவ்வன்பை மிகுவித்தலால் சிவ சக்தியும் ஆன்ம சக்தியும் ஒருமையுறு
கின்றன. சிவமும் சிவசக்தியும் ஒன்றேயென ஏற்கனவே நிரூபித்திருப்பதாலும், சிவ சக்தியும் ஆன்மாவினிடம் நிகழும் அன்பும் ஒன்றேயாமென இங்குக் காட்டியிருப்பதாலும், அன்பு, சிவம் என்னும் இரண்டும் ஒன்றேயாம் என்பது அறியக்கிடக்கிறதன்றோ? ஆகவே அன்பு என்பது ஈஸ்வராம்சம் என்ப உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறது. இவ்வளவு மாட்சியுடைய அன்பு ஒவ்வொருவராலும் பிறரிடம் செலுத்தப்பட வேண்டுமென்பது பொருத்தமேயாம். அங்ஙனம் அன்பு நிகழ்வதற்குக் கொல்லாமை, ஜீவகாருணியம், பிறர் வருத்தங் கண்டால் அவர்களுக்குக் கைம்மாறு கருதாது உதவி செய்தல், முதலானவைகளை அனுஷ்டிக்க வேண்டுவது அவசியம் ஆகும். அனுஷ்டிக்கவே, ஆன்மாவினிடத்தே அன்பு விரிர்து தோன்றும். இவ்விதமாக அன்பு முதிரவே, ஆன்மா ஏகதேச சீவ இலக்கணத்தை விட்டுச் சுத்த சிவ சொரூப்மாகத் தோன்றும். அதுவே அத்துவித முத்திகிலை யெனப்படும். அந்த நிலையே பேரின்ப நிலை. அதுவே மக்கட் பிறவி பெற்ற நம்மனோரால் வேண்டப்படுவது ஆதலால், நாம் ஒவ்வொருவரும் பிறரிடம் அன்பு செலுத்த முயல வேண்டும். நாம் இறைவனிடத்து அன்பு செலுத்தி அன்பிற்கும் சிவத்திற்குமுள்ள இயைபினை உணர்ர்து உய்யவேண்டும் என்னும் உண்மையினைப் புலப்படுத்தலே


"அன்பும் சிவமு மிரண்டென் பரறிவிலார்"

 

என்று முதன் முதற் கூறிய திருவாக்கு எழுந்தது.


''அன்பின் வழியது உயிர் நிலை அஃதிலார்க்
கென்பு தோல் போர்த்த உடம்பு."


ஆனந்த போதினி – 1932 ௵ - ஜனவரி ௴

 

 

 

No comments:

Post a Comment