Thursday, August 27, 2020

 

உண்மை உணர்தல்

 

 உண்மை உணர்தலாவது மெய்யுணர் வெனப்படும். அதாவது எப்பொருளினிடத்தும், எப்பிராணியினிடத்தும், எம்மனிதரிடத் தும் உள்ள இயற்கைத் தன்மையை உள்ளவாறே அறிதலாம்.


 "எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
 மெய்ப்பொருள் காண்ப தறிவு "


என்றபடி அங்ஙனம் எதனிடத்தும், எவரிடத்தும் உள்ள உண்மைத் தன்மையை உணர்தலே மனிதர்க்கு அறிவுடைமையாம். இவ்வுணர்ச்சியுள்ளார் இம்மையிற் செல்வமும் புகழும் பெற்று மறுமையில் மாறாவின்பத்தை யடைகுவர். இஃதில்லாரின் வாழ்க்கை உலகத்திற் பயனற்றதாம். இவ்வுலகத்தில் எப்பொழுதும் எவ்விடத்தும் நன்மையும் தீமையும் கலந்தேயிருக்கின்றன. மனிதர் பல வகைக்காரணங்களாலும் அவற்றைப் பாகுபாடு செய்து ஒவ்வொன்றின் இயற்கைத் தன்மைகளையும் ஐயமற ஆராய்ந்து நன்மை இன்னது, தீமையின்னது என்றுணர்ந்து, நன்மையைக் கைக்கொண்டு தீமையை விலக்க வேண்டும். இங்ஙனம் தீமையை நீக்கிச் செய்யத்தக்க நற்கருமங்களைச் செய்து வருவதால் அவர்க்குத் தருமம் கைகூடும். அத்தர்மத்தினால் நற்கதி நிச்சயமாகக்கிடைக்கும்; அழியாப் புகழும் நிலைத்து விளங்கும். இவ்வாறு பகுத்துணர்தலின்றிக் கண்மூடித்தனமாய் எதையும் செய்யத் தொடங்கு வோர்க்குப் பாவகாரியங்கள் அதிகரிக்கும்; அவற்றால் அவகீர்த்தியும் துர்க்கதியும் சித்திக்கும். ஆதலின், மனிதர்க்கு மெய்யுணர்வு இன்றியமையாததாம். அங்ஙனம் மெய்யுணர்ச்சியை எவரும் அடைதற்கனுகூலமாக, உலகத்தில் விரவியிருக்கும் நன்மை தீமைகளில் சிலவற்றையும் அவற்றைப் பகுத்துணர்ந்து செய்வன செய்யவோய மார்க்கங்களில் சிலவற்றையும் நாம் விளக்குவாம்.

 

1. சில கோவில்களிலுள்ள அர்ச்சகர்கள், தெய்வங்களுக்கு அர்ச்சனை அபிஷேகாதி நடத்தவேண்டு மென்றும், அவற்றிற்கு ரூபா ஐம்பது செலவு பிடிக்குமென்றும், அந்தத் தொகையைக் கொடுத்தால் அபிஷேகம் முதலியவற்றைத் தாங்களே நடத்தி விடுவதாகவும் பணக்காரரிடம் வந்து கூறுவார்கள். இவர்களில், வாங்கிய பண முழுவதையும் அவ்விஷயத்திற்கே செலவிட்டுப் பணம் கொடுத்தவர்க்குத் தெய்வ அருள் சித்திக்கும்படி செய்வாருமுண்டு; அந்தப்பணத்தில் சிறிது பாகத்தைச் செலவிட்டு மீதியையோ, ஒன்றும் செய்யாமல் முழுப்பணத்தையுமோ தங்கள் சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொண்டு, பணம் கொடுத்தவர்கட்கு அரையணாக் செலவில் கொஞ்சம் விபூதி பிரசாதம் கொடுத்துப் பூஜாமோசம் செய்வாருமுண்டு. ஆதலின், இவர்களில் உண்மையாகப் பணமுழுவதையும் தெய்வ வழிபாட்டிற் செலவிடுவோரை ஆராய்ந்துணர்ந்து அவர்களிடமே அர்ச்சனைக்குப் பணம் கொடுக்க வேண்டும். எமாற்றுவோரிடம் பணங்கொடுப்பதால் பயனின்றிப் பாவமே சாரும்.

 

2. சிலர், கோவில் கட்ட வேண்டுமென்றும், அன்னசத்திரம் அமைக்க வேண்டுமென்றும், தண்ணீர்ப்பந்தல் ஸ்தாபிக்க வேண்டு மென்றும், பாடசாலைகள் வைக்க வேண்டு மென்றும், திருமந்திரம் முதலிய பெருமந்திர நூல்கள் அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டு மென்றும், இவற்றிற்குப் பொருளுதவி செய்தால் மிகப் புண்ணிய முண்டாகு மென்றும் சொல்லிப் பிரபுக்களிடம் பணம் கேட்பார்கள். இவர்களிற் சிலர் உண்மையாகவே வாங்கும் பணத்தைச் செலவிட்டு அத்தருமங்களை நிறைவேற்றுவார்கள். சிலர், பணம் வசூலித்ததற்காகப் பேருக்கு மாத்திரம் மேற்குறித்தவைகளிற் சிறிது சிறிது சொற்பப் பணச்செலவில் செய்து காட்டிவிட்டு மீதிப்பணத்தை யெல்லாம் தங்களுக்கு ஆஸ்தியாகச் சேர்த்து வைத்து விடுவார்கள்; இன்னும் சிலர் அத்தருமங்களில் ஒன்றையுமே செய்யாமல் அவற்றிற் கெனப் பலரிடத்தும் வாங்கிய பணத்தையெல்லாம் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் அமிழ்த்தி மறைத்தது போல் தங்களுக்குச் சொந்த வைப்புநிதியாகப் பாதாள அறையில் பதுக்கி விடுவார்கள். இப்படித் தாமப்போர்வையை மேற்போட்டுப் பிறரை வஞ்சித்துப் பிரயாசையின்றிப் பொருள் சேகரித்துப் பெருவாழ்வு வாழ்ந்தொழி வோரை நாம் பிரத்தியக்ஷத்தில் காணலாம். இவர்களுள் உண்மையாகத் தாமத்திற்குழைப்பாரை நன்காராய்ந்து தெரிந்துகொண்டு அவரிடமே தருமகைங்கரியங்கட்குப் பணங் கொடுக்க வேண்டும். மற்றதரும் மோசககாரருக்கு ஒரு பைசாவும் கொடுத்தல் கூடாது. அங்ஙனங் கொடுப்பது டயனற்றதாகும்.

 

3. சிலர், தங்கள் மக்களுக்குக் கலியாணஞ் செய்ய வேண்டு மென்றும், தங்களுக்கே கலியாணஞ் செய்ய வேண்டுமென்றும், அந்தக் கலியாணச் செலவிற்குத் தங்களிடம் பணமில்லையென்றும், பணங் கொடுத்து அக்கலியாணத்தை நிறைவேற்றி வைத்தால் மிகப்புண்ணிய முண்டாகுமென்றும் சொல்லித் தனவந்தரிடம் பணம் கேட்பார்கள். இவர்களுள் உண்மையாகவே தரித்திரப் பட்டுக் கலியாணச் செலவிற்குப் பொருளில்லாமற் கேட்பாரு முண்டு; தங்களுக்குத் திரவிய மிருக்கும் போதும் கலியாணம் நடத்த வேண்டிய அவசியமே இல்லாதிருக்கும் போதும் மேலும் பொருள் சேர்க்கவேண்டிப் பொய் கூறுவாருமுண்டு. இவர்களில் மெய்யாகவே தரித்திரத்தால் கலியாணஞ் செய்ய முடியாமல் கஷ்டமடைவோரை ஆராய்ந்துணாந்து அவாகளுக்கே பொருளுள்ளார் திரவிய சகாயம் செய்ய வேண்டும். கலியாணமோசஞ் செய்து பொருள் கவருவோர்க்குக் கடுகளவும் துணை புரியலாகாது.

 

4. சிலர், ஒரு கைக்குழந்தையை ஏந்திக் கொண்டு, இக் குழந்தையின் தாய் இறந்துவிட்டாள்; இதற்குப் பால் கொடுத்து இதனை வளர்க்க என்னிடம் பொருளின்றி நான் கஷ்டமடைகின்றேன்; ஆதலின் எனக்கேதாவது கொடுத்துதவுங்கள்' என்று யாசகத்திற்கு வருவார்கள். இவர்களில் உண்மையாகவே இந்நிலையை அடைந்து வருபவர்களுமுண்டு; யாரிடமேனும் ஒரு குழைந்தையை இரவலாக வாங்கிக்கொண்டு பொய்யான பரிதாபங் காட்டிப் பிறரை ஏமாற்றிச் சுலபமாகப் பொருள் கவர வருவாருமுண்டு. இவ்விரு வகுப்பாரையும் நன்கு ஆராய்ந்து மெய்யாகவே பரிதாப நிலைமையை அடைந்து வருவோரைக் கண்டுபிடித்து அவர்க்கே திரவியசகாயம் செய்யவேண்டும்.
 

5. சிலர், குசேலரைப்போல் மிகக்கிழிந்த ஆடையைக் கட்டிக் கொண்டு வந்து வஸ்திரம் எடுத்துக் கொள்ளப் பணம் தரவேண்டு மென்று கேட்பார்கள். இப்படி வருவோரில் உண்மையாகவே வஸ்திரமில்லாமல் வருவோருமுளர், கட்டியிருக்கும் நல்லாடையை அவிழ்த்து வைத்துவிட்டுக் கிழிந்த துணியைக் கட்டிக்கொண்டு வந்து பாசாங்கு செய்து பணம் வாங்கிக கெட்ட செலவுக்கு உபயோகப்படுத்தும் நோக்கத்துடன் வரும் யாசகத் திருடரு முண்டு. இவர்களின் நிலைமைகளை ஐயமறப் பரிசோதித்துணர்ந்து மெய்யாக ஆடையின்றிக் கஷ்டப்படுவோருக்கே உதவி செய்தல் வேண்டும்.

 

6. சிலர், இடம்பமாக ஆடையாபரணங்களை அணிந்து கொண்டும், சில அழகிய கவிகளை எழுதிக்கொண்டும், மற்ற படிப்பாளிகளை அவனுக் கென்ன தெரியும் இவனுக் கென்ன தெரியும்'என்று பழித்துக் கொண்டும், படபடப்பாகப் பேசிக்கொண்டும், பற்பல பிரசங்கங்களைப் புரிந்து கொண்டும் வந்து, "நாம் சகல கலைகளும் கற்றுளேம்; எண்ணிறந்த நூல்களை இயற்றி யுள்ளேம்; எம்மைப்போன்ற புலவர் எவருமிரார்” என்று பேசித் தாங்கள் எழுதிக்கொண்டு வந்த கவிகளைக் கெம்பீரமாகப் பாடி எமக்குத் தக்க சன்மானஞ் செய்ய வேண்டுமென்று கேட்பார்கள். இப்படித் தடபுடலாக வரும் பாவலர் நாவலர்களுள் உண்மையாகவே நல்லாசிரியரிடம் முறைப்படி கல்வி கற்றுக் கவிபாடுந்திறம் பெற்றுப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வருவாருமுண்டு. எழுத்துக்களின் பேதங்களைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், முன்னோர்கள் இயற்றிய அழகிய பாடல்களை மனப்பாடஞ் செய்து அவற்றைத் தாங்கள் பாடியதாகவே நடித்துச் சொல்லி வித்வான்களைப் போலப் போலித்தனமாகப் பேசிக்கொண்டு பிறரிடம் பொருள்பறித்துத் துர்வினியோகப்படுத்த வருவாருமுண்டு. இவர்களை நன்றாகப் பரிசோதித்து உண்மையான வித்வான்களுக்கே சன்மானஞ் செய்ய வேண்டும். போலிப் புலவர்க்குப் பணம் கொடுப்பதால் கேலிக்கிடமாகும். அவர்கள் செய்யும் பாவம் பணம் கொடுப்பார்க்கும் வந்து சேரும்.
 

7. சிலர், பற்பல தெய்வச்சின்னங்களை யணிந்து சிவசிவா, சம்போ, கந்தா, கணநாதா, மகாதேவா, நமோ நாராயணா, ஜகன்மாதா, பராசத்தி, மனோன்மணி, ஆதிமூர்த்தி, அடியார்க்கெளியனே என்று தெய்வநாமங்களை உச்சரித்து மிகுந்த கடவுட்பக்தி யுடையவர் களாய் வந்து மகேசுர பூஜை செய்வதற்குப் பணம் வேண்டுமென்றும், மடம் கட்டப் பணம் வேண்டுமென்றும், அடியாரை - தாசர்களைப் பாதுகாக்கப் பணம் வேண்டுமென்றும் கேட்டார்கள். இப்படி வருவோரில் உண்மையான தெய்வபக்தியுடையோராய் அவ்விஷயங்களை மெய்யாகவே செய்ய வேண்டு மென்னும் கருத்துடன் வருவாருமுண்டு. உள்ளத்தில் சிறிதும் கடவுட் பத்தியின்றிக் கபடமாகப் பக்தர் வேடந்தரித்து அதைக் காட்டிப் பணம் பறித்துக் கஞ்சாவுக்கும் அபினுக்கும் வேறு துர்ச்செய்கைகளுக்கும் செலவிட்டுப் பக்தி
மோசஞ் செய்ய வருவாரு முண்டு. இவர்களுள் உண்மைப் பக்தரை ஆராய்ந்துணர்ந்து அவர்களுக்கே பொருளுதவி செய்தல் புண்ணிய மாம்.

 

8. சிலர், துறவிகளாய் வேதாந்தம் பேசி ஓரிடத்தில் ஆகார மின்றிப் பத்மாசனத்திருந்து, கண்மூடி மௌனிகளாய் யோகத் தமர்ந்து, ஜனங்கள் தம்மடியில் வீழ்ந்து சேவித்துக் காணிக்கை செலுத்தும்படி விளங்குவார்கள். இவர்களில் மெய்யாகவே இந்நிலை யடைந்திருப்பவர்களுமுண்டு. இரவில் இரகசியமாக ஆகார முண்டு பகலில், அதனை அகற்றியிருப்பவர்களைப் போலவும், யோகங் கூடியவர்களைப்போலவும் நடித்து ஜனங்கள் செலுத்தும் காணிக்கைப் பணங்கள் அதிகமாகச் சேர்ந்த பின் அவற்றை அபகரித்துக் கொண்டு ஓடிவிடுகிறவர்களுமுண்டு. இவர்களுள் மெய்யான யோகிகளைத் தெரிந்து அவர்க்கு மட்டும் சமாதி முதலியன கட்டுதற்குப் பயனாகும்படி பணவுதவி செய்யவேண்டும். கபட சந்நியாசிகட்குப் பொருளீதல் பயனற்றதாம்.

9. பெரிய தொழில்களை நடத்துவோரிடம் சிலர் சென்று, ''உங்களிடமிருக்கும் வேலைக்காரர்கள் சாமர்த்தியமுடையவர்களல்லர்; நாம் எத்தொழிலையும் மிகச் சாமர்த்தியமாகச் செய்வோம்; அவர்களைத் தள்ளிவிட்டு எம்மை வேலைக்கு வைத்து எமக்குத் தகுதியான சம்பளம் கொடுத்துப் பாருங்கள்'' என்று அவர்களிடம் நெடுநாட்களாக அனுபோகமாய் வேலைபார்த்து வருவோரை அவ்விடத்தை விட்டுக் கிளப்பிவிட முயற்சி செய்வார்கள். இவர்களுள் உண்மையாகவே, வேலைத்திறமையுடையவர்களுமுண்டு; ஒரு வேலையும் தெரியாமல், வாய்ப்பகட்டால் முன்னிருந்த சாமர்த்தியசாலிகளான உத்தியோகஸ்தரைத் துரத்திவிட்டு எஜமானனை எய்த்துப் பணம் சம்பாதிப்போருமுண்டு. இவர்களுள் மெய்யான சாமர்த்திய முடையவர்களைத் தெரிந்து அவர்கள் சொல்லையே நம்பவேண்டும். அப்படி நம்பினாலும் அவர்களுக்கு வேறு வேலை கொடுக்க வேண்டுமே தவிர முந்தின அனுபோகசாலிகளான வேலைக்காரரை நீக்கிவிடலாகாது.

 

10. பெரும்பான்மையோர் நூதனமாக நல்லவிதத்தில் எழுதப்பட்ட சில புத்தகங்களை வியாபாரிகளிடம் அச்சிடக்கொடுத்து அவற்றிற்காக அதிகப்பணம் கேட்பார்கள். இத்தகைய தூலாசிரியர்களில் மெய்யாகவே தங்கள் கல்விச் சாமர்த்தியத்தைக் கொண்டு பிரயாசைப்பட்டுப் புத்தகம் எழுதுவோருமுண்டு. பிறருக்குக் கூலி கொடுத்து அவர்களிடம் விலைக்கோ இலவசமாகவோ எதையாவது எழுதி வாங்கிக்கொண்டுவந்து தந்திரமாகப் பணத்தைக் கவர நினைப்பவர்களுமுண்டு. இத்தகைய நூலாசிரியர்களில் உண்மையான ஆசிரியர்கள் எவரென்றுணர்ந்து அவர்கள் கொண்டுவரும் நூலுக்கே பணம் கொடுக்க வேண்டும்.

 

11. வியாபாரிகளிடம் மனிதர் பணம் கொடுத்து எதையாவது வாங்கும்போது, விலை அதிகமென்று எதாவது வார்த்தை பேசத் தொடங்கினால், அவ்வியாபாரிகள், '' ஐயா ! உங்களிடம் நான் பொய் கூறுவேனா? உங்களிடம் தானா அதிகவிலை வாங்குவேன்; ஈம்மா என் சொல்லை நம்பி இதை வாங்கிச் செல்லுங்கள்; வித்தியாசமொன்று மிராது " என்று கூறித் தாங்கள் கொடுக்கும் சாக்கை வாங்கிக் கொண்டு போகும்படி செய்வார்கள். இத்தகைய வியாபாரிகளில் உண்மை கூறுவோரு முண்டு. ஒன்றுக்குப்பத்து விலையேற்றிப் பசப்புவார்த்தை பேசிப் பிறரை வஞ்சித்து அவரிடம் பொருள் கவருவாருமுண்டு. ஆதலின், இவர்களில் உண்மையான வியாபாரிகளைத் தெளிந்து அவர்களுடைய சொல்லில் மாத்திரமே நம்பிக்கை வைக்கவேண்டும்.

 

12. சிலர், "எமக்குப் பத்து ரூபா அனுப்புகிறவர்களுக்குப் பிழைக்கும் வழி காட்டுகிறோம்'' என்று பத்திரிகையில் விளம்பரம் செய்வார்கள். இவர்களுள் உண்மையாகவே ரூபாயைப் பெற்றுக் கொண்டு ஏதேனும் நன்மார்க்கம் காட்டுகிறவர்களு முண்டு; பணத்தைப் பலரிடம் ஏமாற்றிக் கைப்பற்றிக்கொண்டு பணங்கொடுத்தோர் மனம் புண்ணாகும்படி ஏதேனும் உபயோகமற்ற விஷயத்தை அவர்களுக்கு உரைத்து மோசஞ் செய்வாருமுண்டு. இத்தகைய காரியங்களில் உண்மையான விளம்பரம் செய்வோரைக் கண்டுபிடித்து அவர்களுக்கே பணம் கொடுக்க வேண்டும். (இவ்விஷயத்தைப் பற்றி இச்சஞ்சிகையின் மற்றொருபக்கத்தில் ஒரு வியாசம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதனையும் நண்பர்கள் கவனிப்பாராக).

 

13. சிலர் வந்து, "நான் வைத்தியத்தில் மகா நிபுணன்; எனக்கு நூறு ரூபா கொடுத்தால் உங்களுக்கு வியாதியே வராமல் செய்துவிடுகிறேன்'' என்று கூறுவார்கள். இவர்களுள் மெய்யாகவே அவ்வாறு செய்யக்கூடியவர்களுமுண்டு; எதையாவது செய்து கொடுத்துவிட்டுப் பணத்தைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கம்பி நீட்டுவாருமுண்டு. இவர்களில் உண்மையான பண்டிதர்களைக் கண்டு அவர்களிடமே பணம் கொடுக்க வேண்டும்.

 

14. இன்னும் பலர்வந்து, " சோதிடசாஸ்திரத்தில் நாம் மிகத் தேர்ச்சியடைந்திருக்கிறோம்; பல மடாதிபதிகளிடத்தும், ஜமீன் தார்களிடத்தும், பிரபுக்களிடத்தும் மெடல் தோடா பரிசு பெற்றிருக்கின்றோம்; சில மடங்களிலிருந்து நமக்கு அபிமானச் சம்பளம் வருகின்றது; எமக்கு ஐம்பது ரூபா கொடுத்தால் உங்களுடைய ஜாதகத்தை நன்றாகக் கணித்துப் பலாபலன்களைத் தெளிவாக ஆராய்ந்து சொல்வோம்'' என்று கூறுவார்கள். இவர்களுள் உண்மையாகவே சோதிடத்தில் உழைத்து நிபுணத்துவம் பெற்றவர்களுமுண்டு; ஒரு விஷயமும் தெரியாமல் இடம்பமாகப் பேசி ஏமாற்றிப் பணத்தைக் கைப்பற்றிக்கொண்டு எதையாவது எழுதிக் கொடுத்து விட்டு ஓட்டம் பிடிப்பாரு முண்டு. இவர்களுள் உண்மையான சோதிடர்களைக் கண்டு அவர்களுக்கே பணம் கொடுக்க வேண்டும்.

 

15. சிலர், கௌரவமான உடையணிந்து, மதிப்பான வார்த்தைகளைப் பேசி, " எங்களிடம் உங்கள் பணங்களைக் கொடுத்துவை யுங்கள்; நாங்கள் காப்பாற்றி வைத்திருந்து உங்களுக்கு வேண்டிய போது தருகிறோம்'' என்று கூறுவார்கள். இவர்களுள் உண்மை யாகவே நாணயமிக்க பெரிய மனிதர்களு முண்டு; பெரிய மனிதர்களைப்போல வேடமிட்டு ஏழைகள் பணத்தை ஏமாற்றிக் கவர்ந்து வாயிற் போட்டுக்கொள்ளும் மாபாவிகளு முண்டு, இப்படிச் சொல்பவர்களில் சத்தியவந்தர்களாகிய பெரிய மனிதர்களைத் தெரிந்து அவர்களிடமே பொருளைக் கொடுத்து வைக்க வேண்டும்.

 

16. சிலர், "எங்களோடு புறநாடுகளுக்கு வந்தால் அங்கே உங்களுக்கு அநேகம் சௌகரியங்களைத் தேடிவைப்போம் " என்று ஜனங்களை அழைப்பார்கள். இவர்களில் மெய்யாகவே பொது நன்மைக்குப் பாடுபடுகிறவர்களு முண்டு; ஜனங்களுக்கு ஆசைவார்த் தைசொல்லி அவர்களைக் கப்பலேற்றி அன்னிய தேசங்களுக்குக் கொண்டு போய்த் தாங்கள் பணம் சம்பாதிக்கும் பொருட்டுப் பல சங்கடங்களில் மாட்டிவைத்து விடுவோருமுண்டு. இத்தகையவர்களில் உண்மையான பொதுஜனோபகாரிகளையே நம்ப வேண்டும்.

 

இங்குக் காட்டியவாறு உலகத்தில் பற்பலவகைகளிலும் எண்ணத் தொலையாத விஷயங்க ளிருக்கின்றன; அவற்றிலெல்லாம் நல்லாரோடு பொல்லாரும் கலந்தே யிருக்கின்றார்கள். அத்தனை வகுப்பாரையும் இங்கெடுத்தெழுதுவது சாத்தியப்படாது. மனிதர் அனு பவத்தில் அன்னோரை எந்நாளிலும் கண்டுகொள்ளலாம். இவர்களுள் பொல்லாரை நீக்கி நல்லார்க்கு நலம் புரிவதே தகுதியாயிருந்தும், சாஸ்திரங்களும் அவ்வாறே கூறியும், பெரும்பான்மை யோர் பகுத்துணருந் தன்மை யின்மையாலும், வேறு சில அபிப்பிராய பேதங்களாலும் எல்லா விடங்களிலும் பொருளீதல், கௌரவம் கொடுத்தல் முதலிய காரியங்களைச் செய்து வருகிறார்கள். சிலர், ''தெய்வ சின்னங்களைத் தாங்கியவர்கள் எவ்வளவு துர்க்குண முடையவர்களாயிருந்தாலும் அவர்களை உயர்ந்தவராகவே நினைக்க வேண்டு மென்று பெரியோர்கள் கூறியிருக்கின்றார்கள்; யாராயிருந்தாலும் இல்லை யென்றிரப்பார்க்கில்லை யென்னாமல் ஈவதே தருமம் என்று சான்றோர் சாற்றுகிறார்கள்; ஆதலின், எல்லோருக்குமே அவரவர்களுடைய விருப்பந்தீரும் உதவிகளைச் செய்தலே சிறந்ததாகும்" என்று ஒரு குருட்டு நம்பிக்கை வைத்துப் பாகுபாடின்றி எல்லா விடங்களிலும் பொருட்செலவு செய்கின்றார்கள். எல்லாவற்றையும் துறந்து தெய்வசிந்தனையை மட்டும் குறித்த ஞானிகள், பார்க்குமிடங்களிலெல்லாம் தெய்வபாவனையே செய்வார்கள். அத்தகையவர்கள், தெய்வ சின்னங்களை யுடையவர்கள் எத்தகையராயிருந்தாலும், 'அவரேயாம் வணங்குங் கடவுளாவார்' என்று தங்கள் நிலைக்குத் தக்கவாறு உரைத்தார்கள். அதனால், உலகத்தை ஏமாற்றும் நடிப்புக்காரர்களை யெல்லாம் லெளகீகத்திலுள்ளவர்கள் கௌரவிக்க வேண்டுமென்பது கருத்தன்று. இல்லையென்றிரப்பார்க்கில்லை யென்று சொல்லக்கூடாதென்றது, உண்மையாகவே பொருளில்லாமல் யாசிப்பவர்களைக் குறித்துச் சொன்னதேயன்றி, உள்ள பொருளை மறைத்துவிட்டு மேலும் பொருள் சேகரிக்க யாசகர் வேடமிட்டுவரும் மோசக்காரரைக் குறித்தன்று. இந்த உண்மைகளை உணராமல் சிலர் தப்பபிப்பிராயங் கொண்டு செய்யத்தகாதன செய்கிறார்கள். இந்தக் குறுக்கு நீதியானது, தற்காலத்தில் நூதன ஞானங்கற்ற சிலர், ''மனிதர் இழிவான காரியங்களைச் செய்தாலும் அவர்களை நிந்தித்துக் கண்டித்தல் கூடாது'' என்று பத்திரிகைகளிலும், நூல்களிலும் எழுதிப் பிரசங்கங்களிலும் சொல்லுவது போன்றிருக்கின்றது.

 

இங்ஙனம் நம் நாட்டில் அன்னிய நாட்டு விபரீத ஞானம் பர வியதால் பெரும்பான்மையோர், நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி எல்லாரிடத்தும் தான தர்மம், கௌரவம் முதலியவற் றைச் செய்துவருவதால் நடிப்புக்காரர்கள் நலம் பெறுகின்றார்கள்; உண்மையாளர்கள் கௌரவமிழந்து துன்புறுகின்றார்கள்; தர்மங் குறைந்து அதர்மந் தலையெடுக்கின்றது. நற்காரியங்களைப் புரிவோர்க்கும் அதற்குரிய பயன்கிடைக்காமல் தீமைக்கிடமாகின்றது. ஆதலின், இம்மை மறுமைப் பயன்களையடைய விரும்புவோர், ஒவ்வொரு விஷயத்திலுமுள்ள நன்மை தீமைகளைப் பகுத்துணர்ந்து நன்மையையே செய்துவர விரும்புகிறோம். சிலர், அவ்வாறு செய்தற்கு மனிதரின் இயற்கைக் குணங்களை எவ்வாறு உணர்தல் முடியும் என்று சொல்லக்கூடும். அஃதவ்வளவு முடியாத காரியமன்று. ஒரு மனிதனுடைய தோற்றத்தாலும், வார்த்தையாலும், நடக்கையாலும் அவனுடைய உண்மைத் தன்மையை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். இவ்வாறு எல்லோரும் அறிந்து உண்மையாளர்க் குதவிபுரியுமாறு எல்லாம்வல்ல இறைவன் திருவருள் புரிவானாக.


 ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment