Thursday, August 27, 2020

 

உண்மை நாகரிகம்

 

நாகரிகம்! நாகரிகம்!! எல்லாம் நவீன நாகரிகம்!!! மனிதனுடைய வாழ்க்கை நலத்துக்குரிய வரம்பு எது - என்ன? என்றதைப் பற்றிய ஆராய்ச்சியே இக்காலத்தில் வெகு அருமையாகப் போய்விட்டது உண்பதில் நாகரிகம்! உடுப்பதில் நாகரிகம்! ஆபரணாதிகளில் நாகரிகம்! வாகனாதிகளில் நாகரிகம்! கட்டிடங்களில் நாகரிகம் எல்லாம் நாகரிக மயமாய்ப் போய்விட்டது உலகம். ஆன்மதத்துவ ஆராய்ச்சி குன்றி ஜட நாகரிகமே தற்கால பிரபஞ்ச தரும்மாக இருக்கிறது.

 

நமது நாடு ஒரு காலத்தில் ஆன்ம விளக்க நாகரிகத்தில் பிரசித்தி வாய்ந்திருந்தது. இப்போது வெளிமயக்கான மேனாட்டு நாகரிகப் பகட்டில் மயங்கி அதை அன்புடன் வரவேற்பதில் முனைந்து நிற்கிறது என்றே கூறலாம்.

 

நமது நாட்டு உண்மை நாகரிகம் இருந்தவிடம் தெரியாமல் மறைந்து அந்த இடத்தில் குருட்டு ஒழுக்க வழக்கங்களாகிய குப்பை கூளங்கள் நிறைந்து கிடக்கின்றன. இந்த நிலைமை வெகு நாட்களுக்கு முன்னரே ஏற்பட்டு விட்டபடியால் நமது நாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைக் குழியில் ஆழ்ந்து கிடக்கிறது.

 

நாகரிகம் என்றால் என்ன? என்பதைப் பற்றி ஒரு சிறிது ஆராய்வோம். மனிதன் விலங்குகளின் நிலைமையிலிருந்த காலமும் ஒன்றுண்டு. இந்த உண்மையை அநேக அறிஞர் ஆராய்ந்து முடிவுகட்டி யிருப்பதால் இவ்விடத்தில் இதைப் பற்றிய ஆராய்ச்சி அனாவசியம். மனிதனுக்கு இயற்கையாக ஏற்பட்டுள்ள பகுத்தறிவு காரணமாக விலங்கு நீர்மை மாறி நாளாவட்டத்தில் அவனுடைய வாழ்க்கை நலத்துக்குரிய ஒழுங்கு முறைகள் ஏற்பட்டன. கூடி வாழ்தல் ஆகிய சமூக அமைப்பு மனிதனுக்குள்ள பகுத்தறிவின் பயனாக ஏற்பட்டதே. இந்த விசேட அறிவு விலங்குகட்கு இல்லாமையால் அவை எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே இருந்து வருகின்றன. மனிதனிடம் விளங்கும் பகுத்தறிவு ஆறாவது அறிவு என்றுஞ் சொல்லப்படும். ஊண், உறக்கம், காம நுகர்ச்சி ஆகிய இம்மூன்றும் எல்லா உயிர்கட்கும் பொது. இந்த மூன்றையும் பற்றிய வேட்கை விஷயத்தில் மனிதனுக்கும் விலங்கு முதலிய மற்றைய உயிர்கட்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை. ஆனால் இவற்றை அடையும் பொருட்டுச் செய்யப்படும் முயற்சிகளிலும் வழிகளிலுமே வேற்றுமை இருந்து வருகிறது. மனிதன் தன்னுடைய ஆறாவதறிவாகிய பகுத்தறிவைக் கொண்டு தனக்குரிய தேவைகளை ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்கிறான். அவையாவன நகரநிர்மாணம், விவசாயம், கைத்தொழில், வியாபாரம், போக்கு வாவு சாதனம், அரசியல், சமூகவியல், விதி விலக்குகள் அடங்கிய சாஸ்திரங்கள் முதலியன ஆகும். இவ்வளவும் மனிதனுடைய வாழ்க்கை நலத்தைச் சிறப்பிக்க எழுந்தனவே. மனிதன் சமூகமாகவும் சமாதானமாகவும், சந்தோஷமாகவும் வாழ்க்கை நடத்துவதற்குச் சில இன்றியமையாத குணங்களைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அவையாவன அறிவு, ஒழுக்கம், அன்பு, அருள், தயை, தாட்சணியம் முதலியன ஆகும். இந்த நல்ல - சமூக ஒற்றுமைக்கு அத்தியாவசியமான குணங்கள் ஒவ்வொரு மனிதனிடமும் இல்லையென்றால் சமூக ஒழுங்குகெட்டு எதேச்சையாகத் திரியும் மிருக வாழ்க்கைக்கு ஒப்பான நிலைமையே ஏற்பட்டு விடும். மேற்கூறிய நற்குணங்களுக்கு ஆதாரமானதன்மையே நாகரிகம் எனப்படும். நாகரிகம் என்னும் மொழி கண்ணோட்டம் என்று பொருள்படும். கண்ணோட்டமாவது,


"தன்னொடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன

மறுக்க மாட்டாமை. இஃது அவர் மேற்கண் சென்றவழி நிகழ்வதாகலின்,

அப்பெயர்த் தாயிற்று"


என்று பரிமேலழகர் கூறி யிருக்கிறார். இதுவே தாட்சணியம் என்றும் வழங்கப்படும்.

 

நாகரிகம் என்னும் மொழிக்கு கண்ணோட்டம், தாட்சணியம் என்னும் பொருள் எவ்வாறு வந்தது? என்பதைப் பற்றி இங்கே சிறிது கூறுவது பொருந்து மென்று நினைக்கிறோம். நாகரிகம் என்பதற்கு நகர சம்பந்தமானது என்பது பதப்பொருளாகும். இதிலிருந்து நகரத்தில் வசிப்பவர்கள் கல்வி அறிவு ஒழுக்கங்களோடு தயவு, தாட்சணியம், அன்பு, அருள் முதலிய நறுங் குணங்களைப் பெற்றிருந்தனர் என்பது போதரும். இது பகுத்தறிவு விளங்கப் பெற்ற மக்கள் விலங்குத்தன்மை மாறி காடு கெடுத்து நாடாக்கி நகர நிர்மாணம் செய்து வாழ்க்கை நடத்தத் தொடங்கிய காலத்தில் இருந்த நிலைமையைப் பற்றிய அபிப்பிராயம் என்று கொள்ளலாம். இப்பொழுதும் நகரங்களில் வசிப்பவர்கள் கிராமாந்தர வாசிகளை நாட்டுப்புறத்தான், பட்டிக்காட்டான் என்ற பெயரால் வழங்கி வருகிறார்கள். நாட்டுப் புறம் என்பது அறிவிற் சிறந்த நாகரிக மக்கள் நிரம்பிய நாட்டுக்குப் புறம்பானது என்று பொருள்படும். எனவே காடு என்பதாயிற்று. பட்டிக்காடு என்பதும் நாட்டுக்குப் புறம்பான காட்டையே குறிக்கின்றது.

 

மேற்கூறியவற்றால் மக்கள் காடுகளில் விலங்கினங்களோ டொப்ப வாழ்ந்து வந்தமையும் அவர்கள் ஆறாவதறிவாகிய பகுத்தறிவின் வளர்ச்சியால் மாக்கள் நிலைமையினின்றும் மாறி காடுகெடுத்து நாடாக்கி மாண்புடை மக்களாக வாழ்க்கை நடாத்தி வந்தமையும் இனிது விளங்கும். ஆகவே நாகரிகம் என்பது மக்களை மக்கள் அடிமைப்படுத்தும் பான்மை வாய்ந்த வெறும் வெளிப்பகட்டு அல்ல என்பதும் மக்கள் கட்டுத் திட்டமாய் ஒரு ஒழுங்குக்கு - சட்டத்திற்கு உட்பட்டு சமாதானமான முறையில் இன்ப வாழ்க்கை நடத்துவதற்கு ஆதார பூதமாய் விளங்குவ தென்பதும் நன்கு தெளியப்படும்.

 

நேயர்களே! இக்காலத்தில் நாகரிகம் என்றால் என்ன? என்பதைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். மக்கள் வாழ்க்கையில் அமைதிக் குறைவை - சமாதான மின்மையை உண்டாக்கக் கூடிய அமிசங்களே நாகரிகம் என்பதாயிருக்கிறது. இக்கால நாகரிகம் மிருகங்களைக் காட்டிலும் கேவலமான நிலைமையில் மக்கள் சமூகத்தை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. மனிதத் தன்மைக்கு இன்றியமையாத அன்பு, அருள், தயை, தாட்சணியங்களை அடியோடு வேரறுத்து வீழ்த்தும் மனப்பான்மையே நாகரிகமாக விளங்குகிறது. இக்கால நாகரிகத்தை க்ஷய ரோகம் என்று கூறிய பெரியார் வாக்கு பொய்யல்ல, முற்றிலும் உண்மையே யாகும். இந்த நாகரிகம் மேனாடுகளைப் பலமாகப் பற்றிக் கொண்டிருப்பது போலவே நமது நாட்டையும் பீடித்து வருகிறது. மக்களுக்குச் சித்த விகாரம் உண்டாக்கி அவர்களைப் பல விதத்திலும் வாட்டி வருகிறது. நீர் நிலவளங்களிற் பேர் பெற்ற நமது நாட்டில் வறுமையும், அறியாமையும், பிணியும் தாண்டவ மாடுகின்றன. அன்பு அருள், தயவு, தாட்சணியத்தை அடிப்படையாகக் கொண்டு நிருமாணிக்கப் பெற்ற நமது மக்கள் சமூகத்தில் மனிதத் தன்மைக்கு நேர் முரணான சாதி சமய வேற்றுமைகள், பொருளற்ற மூடப் பழக்க வழக்கங்கள் குடிகொண்டு விட்டன. உண்மை நாகரிகம் போன விடந் தெரியவில்லை. ஆதலால் நமது நாடு மேனாட்டுத் தளுக்கிலும் ஆடம்பரத்திலும் வெகு சுலபமாக மயங்கி அடிமைப்பட்டு வருகிறது.

 

நமது நாட்டு ஆன்ம விளக்க நாகரிகம் மறைந்து மேனாட்டுப் போலி நாகரிக வெள்ளத்தில் நாம் தத்தளித்துக் கொண்டிருப்பதால் பிறர் எள்ளி நகையாடத் தக்க நிலைமையிலிருந்து வருகிறோம். இவ்வித வருந்தத் தக்க நிலைமை எப்பொழுது நீங்குமோ தெரியவில்லை. யாம் மேலே விவரித்ததி லிருந்து நாகரிகத்தின் உண்மை என்ன என்பது ஒருவாறு வாசகர்களுக்கு விளங்கும் என்று நம்புகிறோம். மிருகங்கள் தான் ஒழுங்கு முறையின்றி வாழ்கின்றன என்றால் நாகரிகம் வாய்ந்த ஆறறிவு படைத்த மக்களும் ஒருவரை ஒருவர் - ஒருநாட்டை ஒரு நாடு அடிமையாக்கிக் கொடுமைப் படுத்தி வாழ்தல் முறையா? என்று கேட்கின்றோம். எல்லாரும் சம உரிமையும் சுதந்தரமும் சகோதரத்துவமும் பெற்றுச் சமாதான வாழ்க்கை நடத்துதலே உண்மை நாகரிக மாகும். இதற்கு மக்களுக்குள் அறிவு, ஒழுக்கம், அன்பு, அருள், தயை, தாட்சணியம் முதலிய உயர் குணங்கள் ஓங்கி வளரத்தக்க கல்வி பரவ வேண்டும். பொது ஜனத் தலைவர்களும் அரசாங்கத்தாரும் நாட்டில் உண்மை நாகரிகம் பெருக்கிச் சன்மார்க்க வாழ்வுக்கு வழி காட்டுவார்களாக. எல்லாம் வல்ல திருவருள் துணை நின்று நமது வேட்கையைப் பூர்த்தி செய்வதாக.


ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஆகஸ்டு ௴

 

 

 

No comments:

Post a Comment