Thursday, August 27, 2020

 

உண்மை வீரம்

(எஸ். ராமஸ்வாமி அய்யங்கார்)

 

வீரத்தில் தலை சிறந்தது நம் நாடு, நம் நாட்டின் வீரத்தைப் புகழ்ந்து பல புலவர்கள் பாடியுள்ளனர். கம்பர் கவிகளிற் சிறந்தவர். அவரியற்றிய இராமாயணம் நவரசங்களுக் கிருப்பிடம்; உண்ண உண்ணத் தெவிட்டாத செந்தேனூற்று. இக்காவியத்தில் கம்பன் உண்மை வீரம் என்பதை நன்கு விளக்கிக் காட்டுகின்றார்.

 

இந்திரசித்து போர்க்களத்தில் உயிர் துறந்தான் செய்தியைக் கேட்ட மண்டோதரி, ஓடோடியுஞ் சென்று, தனயன் மேலுள்ள ஆசையினால் அவன் மேல் சோர்ந்து வீழ்ந்து, அறிவு குலைந்து உயிரற்றவள் போலானாள். பின்பு மெல்ல மெல்லச் சோர்வு நீங்கி, அறிவடைந்து, பலவாறு அலறிப் புலம்பலுற்றாள்.


“பஞ்செரியுற்ற தென்ன வரக்கர்தம் பரவை யெல்லாம்
வெஞ்சின மனிசன் சொல்ல விளிந்ததே மீண்டதில்லை,
அஞ்சினே னஞ்சினேனச் சீதை யென் றமுதாற் செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை யித்தகையனன்றோ!"

 

என்று புலம்பிய விஷயங் கேட்ட இராவணன் மிக்க கோபங்கொண்டு, "என் சுற்றத்தார்க்கு மரணத்தைத் தேடித் தந்தவள் சீதையல்லவா? அதை இப்பொழுதே அறிந்தேன். அவ்வஞ்ச
கியை என் கை வாள் கொண்டு வீழ்த்துக்கின்றேன்" என்றோடினான். அவ்வாறு ஓடும் இராவணனை மகோதரன் தடுத்து, கொடியை யொத்த இடையையும், சிவந்த வாயையும், இளமையழகு மாறாததையுங் கொண்ட ஓர் பெண்ணின் மேல் வாளை உபயோகித்தால் அவ்வா
ளானது வெட்கத்தால் முனை மடிந்து போகுமேயல்லால் அவளது ஆவியை வாங்காது என்ற நீதியைக் கூறினான். ஸ்திரீ ஜாதியாகவும், தவப்பெண்ணாகவும் உள்ள சானகியைக் கொன்றால் அது இராவணன் பலவீனத்தைத்தான் காட்டும். ஸ்திரீகளை வெல்ல முய்லுவது இயற்கை வீரத்திற் கொவ்வாத செயலாம். சீதை மாண்டால் இராம இலக்குமணர் சண்டையை விடுத்துச் செல்வர். அது போழ்து இராவணனால் இராம இலக்குமணர்களை ஜயிக்க முடியவில்லை என்பது ஏற்படும். அது உண்மை வீரத்திற் கழகல்ல. இவையனைத்தையும் மகோதரன் ஏற்ற முறையில் இராவணனுக்கு எடுத்தோதினன்.

 

இது கேட்ட இராவணன் மயக்கம் தெளிந்தான். தான் செய்யப்புகுந்த செயலை விடுத்தான். இதனால் பெண்ணை எதிர்த்தல், பெண்ணை கொல்லப் புகல் வீரமல்ல என்பதனைக் கம்பர் மிக அழகிய முறையில் எடுத்துக் காட்டுகின்றார்.

 

தாடகை ஓர் அரக்கி. மன்னுயிரனைத்தையும் வயிற்றிலிடும் கொடுஞ் செயல் வழி நிற்பவள். இராமனது உயிருக்கே நடுக்கம் உண்டாகக் கொடுந்தொழிலில் அமர்ந்தவள். எனினும், இராமன் 'உண்ணென வடிக்கணை' விட்டிலன். ஏன் பெண்ணென மனத்திடை பெருந்தகை நினைந்தான்.' இங்கு கம்பர் இராமனது உயரிய வீர லக்ஷணத்தை தெள்ளத் தெளியக் காட்டுகின்றார்.

 

முதல் நாட் போரில் இராவணன் தோல்வியுற்று படைக்களத்தில் முகங்கருகிப் போய் கால் விரல்களால் நிலத்தைக் கீறிக்கொண்டும், தலைகளைக் கவிழ்த்துக் கொண்டும், தரையைப் பார்த்துக் கொண்டும் தன்னந்தனியே நின்றான். இவ்வாறு வெறுங்கையுடனிருப்பவனைக் கொல்லலாகாதென எண்ணிய இராமன் இராவணனைப் பார்த்து, 'இன்று போய் நாளை வா" என்றும் "உன்னால் சேகரிக்கக் கூடிய படை திரட்டி வா'' என்றும் கூறினார் என்றால், உண்மை வீரத்தின் மாண்பு என்னே! இதைக் கம்பர் நமக்கு எடுத்துக் காட்டும் அழகு தானென்ன!

 

இராவணன் இவ்வாறு தோற்று தன் நகர் மீண்டனன். இவனை இக்கோலத்துடன் வருணிக்கப் புகுந்த கம்பர் அவனது மனோ நிலைமையையும் கூறி உண்மை வீரம் எது என்பதையும் காட்டுகின்றார்.


"வானமும் மண்ணுமெல்லாம் நகும் நெடுவயிரத்தோளான்
கானகும் பகைஞரெல்லாம் நகுவரென்றதற்கு நாணான்
வேனகு நெடுங்கட் செவ்வாய் மெல்லியல் மிதலைவந்த
சானகி நகுவளென்ற நாணத்தாற் சாம்புகின்றான்.''

 

வானுலகத்துள்ளோரும், மண்ணுலகத்துள்ளோரும், பகைஞரும் தான் தோல்வியுற்றதைக் கண்டு சிரிப்பார்களே யென்று இராவ வருத்தப்படவில்லையாம். வேலாயுதத்தைப் பார்த்து சிரிக்கும் கூர்மை வாய்ந்த கண்களையுடைய சானகி சிரிப்பளே என்று துக்கித்தானாம் இராவணன். இதுவோ உண்மை வீரத்தன்மை என்று கம்பர் எள்ளி நகையாடுகின்றார்.  எனவே, ஒரு பெண்ணின் பொருட்டு ஆற்றும் வீரச்செய்ல் வீரமாகாது
என்பது கம்பர் தம் கருத்து. இந்த ஆழ்ந்த கருத்தைக் கம்பர் எத்துணை சிறந்த முறையில் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்.

 

முன் காலத்தில் சுயம்வர மண்டபத்தில் ஓர் பெண்ணை மணக்க புரியும் வீரதீரச் செயல்கள் சில உள. அவையும் உண்மை வீரத்தின்பாற் செய்யும் வீரச்செயல்களாகா. ஏன்?
அவை தன்னலங் கருதியவை. இராமன் சீதா சுயம்வர மண்டபத்தில் வில்லிறுத்த செய்கையைக் கூறுமிடத்துக் கம்பர்,

 

'நச்சுடை வடிக்கண்மலர் நங்கையிவளென்றால் இச்சிலை கிடக்க மலையேழையு மிறானோ' என்று இயம்புகிறார். இதிலுள்ள சொல்லழகு எத்துணை இன்பம் தருகின்றது.

 

இராம பாணங்களுக் காற்றாது பயந்தோடும் அரக்கரை நிறுத்தி வீரச்சுவை யூட்டுவது உண்மை லக்ஷணங்களைக் காட்டி நிற்கின்றது.

 

அரக்கர் பயந்தோடுவதைக் கம்பர் நம் கண்களுக்கெதி நடப்பது போன்று சித்திரித்துக் காட்டுகிறார்.

“மண்டியோடினர் சிலர், நெடும் கடகரி வயிற்றில்
புண்டிறந்த மாமுழையிடை வாளொடும் புகுவார்
தொண்டை நீங்கிய கவந்தத்தை துணைவ! நீ எம்மைக்
கண்டிலேன் எனப்புகள் எனக்கை தலைக் கொள்வார்''


இவ்வாறு உயிரினும் இனியதொன்றில்லை' என்றெண்ணும் பயங்
கொள்ளிகளின் வீரம் வீரமாகா தென்பதைக் காட்டுகின்றார் கம்பர்.


வச்சையாமெனும் பயமனத் துண்டென வாழும்
கொச்சை மாந்தரைக் கோல்வளை மகளிரும் கூசார்.
நிச்சயம் எனும் கவசந்தான் நிலைநிற்ப தன்றி
அச்சமும் எனும் ஈதாருயிர்க் கருந்துணையாமோ.''


"ஆரவாழ்க்கையின் வணிகரா யமைதிரோ அயில்வேல்
வீரவாட் கொழுவென மடுத்துழுதிரோ வெறிபோர்த்
தீரவாழ்க்கையில் தெவ்வரைச் செருவிடைப் பறித்த
வீரவாட் கைபிர் எங்கனம் வாழ்திரோ விளம்பீர்"

 

வீரமே உயிர்த்துணை என்றும், போரில் முதுகு காட்டி ஓடுவதால் அபகீர்த்தி யேற்படுவதுடன் பெண்களின் வெறுப்பையும் பெற ஏதுவாம் என்றும் இதனாற் காதலின்பங் கெடுமென்றும் தூடணன் கூறுகின்றான். இது உயரிய வீரலக்ஷணத்தைக் காட்டுகின்றது.

 

கம்ப இராமாயணம் நவரசங்களுக் கிருப்பிடம். தொட்ட தொட்ட இடங்களில் அவரவர்க்குத் தேவையான இரசங்கள் தோன்றும். தூய மனப்பான்மையுடன் இதைப் படித்தின்புறுதல் வேண்டும்.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - ஜுன் ௴

 

 

 

No comments:

Post a Comment