Thursday, August 27, 2020

 

உண்மைத் தியாகி

(கே. ஸி. எஸ். சங்கரன்.)

சிவாஜியின் வீரர்களும், விஜயபுரி சுல்தானது வீரர்களும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தன. வாட்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து கொண்டிருந்தனர்; வேல் கம்புகள் பறந்து கொண்டிருந்தன; பனங்காய் சீவப்படுவதுபோல் சிரங்கள் வெட்டப்பட்டு, பூமியில் விழுந்து கொண்டிருந்தன; சிரங்களாகிய மலைகளிடையே, ரத்தஆறு பெருக்கெடுத்து, ஒடிக்கொண்டிருந்தது.

1

பனக் கலக் கோட்டைக்குள் ஒரு மஹாராஷ்டிர வீரன், தன் அறையில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருக்கின்றனன். அக் கோட்டையைத் தான் விஜயபுரி வீரர்கள் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவ் வீரன் ஏதோ ஒரு சிந்தனையில் இருக்கிறான் என்பதை அவன் முகம் நன்கு விளக்கிக் காட்டியது. அவன் தான் மஹாராஷ்டிரச் சிங்கமாகிய சிவாஜி மன்னன். அவன் பின் வருமாறு கூறிக் கொண்டிருந்தனன்: - “என்னிடம் தற்பொழுது சொற்ப வீரர்களே இருக்கின்றனர். இவர்களின் உதவியைக்கொண்டு நான் எவ்விதம் முகலாய வீரர்களைத் தாக்குவது? குளிர்காலம் நெருங்கியதும் போர் நின்றுவிடும் என்று எண்ணி யிருந்தேனே. குளிர்காலமும் வந்து விட்டதே. போர் நிற்பதாகத் தெரியவில்லையே. இதனால் வெளியிலிருந்து உணவு வருவதும் கடினமா யிருக்கின்றதே. விஜயபுரி சுல்தானோ, மேன்மேலும் உதவிப்படையை முகலாய வீரர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றான். வெளியிலிருந்து - உதவிக்காக வீரர்களைக் கொண்டு வருவது சுலபமான காரியமல்ல. ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து என்னை அணுகிக்கொண்டே இருக்கின்றது. நான்
இச் சமயம் சுவற்றில் இருக்கும் பூனையின் நிலைமையை ஒத்திருக்கன்றேன். அம்மை பவானியின் அருள் இருந்தால் எல்லாம் மங்களமாக முடியும்." இத்துடன் அவ் வீரனின் சம்பாஷணை நின்றது. சில விராடிகள் வரையில் அங்கு அமைதி பரவி இருந்தது. அவ்வமைதியைக் கலைத்திக்கொண்டு சிவாஜியின் வாயிலிருந்து, ''ஆம்! அதுவே சரியான யோசனை!" என்ற வார்த்தைகள் வெளிவந்தன. அவன் தன் அறையை விட்டு, வெளியே சென்றனன்.

2

நடு இரவு அருகிலுள்ள காடுகளிலிருந்து வரும், ஆந்தையின் அலறல் அடிக்கடி கேட்டுக்கொண்டே யிருந்தது. எங்கும் ஒரே இருளாய் இருந்ததினால், முகலாய வீரர்களின் கூடாரங்கள் கருங்குன்றுகள்போல் தென்பட்டன. முகலாய வீரர் சிலர் குடி வெறியினால்
வாயில் வந்தவாறு உளறிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருந்தனர்.

ஓர் கூடாரத்தில் முகலாய வீரர்களின் தலைவன், சில வீரர்களுடன் ஏதோ குசு குசுவென்று பேசிக் கொண்டிருந்தனன். அதிலிருந்து, அத்தலைவன் எதோ இரகசிய ஏற்பாடு செய்து கொண்டிருக்கின் றனன் என்பது நன்கு விளங்கியது.

அச்சமயம் ஓர் வீரன் அவர்கள் இருக்கும் கூடாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனன். அவ்லீரன் கூடாரத்தை அணுகியதும், அங்கு காவல் கொடுத்துக் கொண்டிருந்த ஓர் இளையவீரன், “யாரது? 'என்றனன், அதற்கு வந்த வீரன், 'நான் ஒரு போர் வீரன். உங்கள் தலைவனைக் காணவேண்டும்" என்று கூறினான், உடனே அக் காவலன் உள்ளே சென்று தலைவனுடன் வெளியே வந்தனன் “ஆ! சிவாஜி மன்னனா? வாருங்கள்” என்று கூறி, தலைவன் வந்த வீரனை உள்ளே அழைத்துச் சென்றனன்.

தலைவன், சிவாஜிக்கு ஓர் ஆசன மளித்து, “மன்னரே! தாங்கள் இந் நடுசியில் என்னை நாடி வந்ததின் காரணத்தை அறியலாமோ” என்று கேட்டான்,

அதற்கு மஹாராஷ்டிரச் சிங்கம், ''வீரர் தலைவ! உன்னுடைய வெற்றிப் பிரதாபத்தை சென்ற சில நாட்களாக நடந்த போரில் கண்டது முதல், என் மனம் உன்னைக் காணவேண்டுமென்ற ஆவலினால் இங்கு என்னை அழைத்து வந்தது. தவிர என்னிடம் அதிக வீரர்கள் இல்லை. இருந்தவர்களில் பலர் போரில் மாண்டு போயினர். இனி என்னால் உங்களை எதிர்த்துப் போர் புரிவதற்குச் சக்தியில்லை. ஆகையால் நான், இன்று
முதல் ஒரு சிற்றரசனைப்போலக் கப்பங் கட்டிக்கொண்டு, வாழுவதாக உறுதி செய்து கொண்டிருக்கின்றேன்" என்று கூறினான்.

சிவாஜியின் வார்த்தைகளைக் கேட்டதும் தலைவன் திகைத்துப் போனான். அவன் அதை நம்பவில்லை. ''வீரராகிய நீங்களா இவ்விதம் செய்யத் துணிந்து விட்டர்?'' என்று கேட்டான். ''ஆம்!" என்று சிவாஜி பதிலளித்து விட்டு, "நான் சென்று வருகிறேன். வந்து வெகு நேரமாகிவிட்டது. மற்ற விஷயங்களை நாளை உன்னிடம் வந்து தெரிவிக்கிறேன்"
என்று கூறி, முகலாய வீரர் தலைவனிடம் விடை பெற்றுக்கொண்டு, கூடாரத்தை விட்டு, வெளியே வந்து இருளில் மறைந்தனன்.

இச் செய்தி முகலாய வீரர்களுக்கு எட்டியவுடன், அவர்கள் வெற்றி யடைந்து விட்டதாக நினைத்துக்கொண்டு, கவலையின்றி நித்திராதேவியின் வசமாயினர்.

3

நிசப்தமான அவ்விரவில் வானைப் பிளந்து கொண்டு செல்லும்படி, திடீரென வெற்றி முழக்கம் கேட்டது. மஹாராஷ்டிர வீரர்களுடன், சிவாஜி மன்னன் விசாலக்கட்டம் என்னும் கோட்டையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தனன். குதிரைகள் செல்லும் காலடிச் சப்தங்கள் பட படவென்று, இடி இடிப்பது போல் கேட்டுக்கொண்டிருந்தன.

அச் சப்தத்தைக் கேட்டு, முகலாய வீரர்கள் திடுக்கிட்டெழுந்தனர்.
அதற்குள் சிவாஜி பாதிவழி சென்று விட்டனன். சிவாஜி தங்களை ஏமாற்றிச் சென்றதைக் கண்ட முகலாயர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

அச் சமயம் பாஜல்கான் என்னும் வீரன் சினங்கொண்டு, “தலைவா நான் இது வரையில் தங்களுடைய உத்திரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன், என் தந்தை அப்சல்கானைக் கொன்ற, சிவாஜிபைப் பழிகுப் பழி வாங்காவிடில் நான் ஒரு மைந்தனா? என்னுடன் பரிவீரர் சிலரை அனுப்புங்கள். அவன் தலையைப் பூமியில் உருளும்படி செய்து வருகிறேன்'' என்று கூறினான்,

அதைக் கேட்ட முகலாய வீரர்களின் தலைவன் அவனது ஆண்மை
யைக் கண்டு, ''பாஜல்கான்! உனது தைரியமே உனக்கு வெற்றியைத் தரும்'' என்று கூறி அவனை அனுப்பினன்.

உடனே பாஜல்கான் தன் குதிரையில் ஏறிக்கொண்டு, பரிவீரர்கள் பின் தொடர, சிவாஜி சென்ற வழியைப் பின்பற்றிச் சென்றான்.

பாஜல்கான், சிவாஜியை நெருங்கிக் கொண்டிருந்தனன். இன்னும் ஒரு விநாடிதான் இருக்கிறது. சிவாஜி எதிரிகளின் கையில் அகப்படும் நிலையில் இருந்தனன். தன் நிலைமையை உணர்ந்த சிவாஜி, பாஜி தேச பந்து என்னும் வீரனை நோக்கி, “நண்ப! இச்சமயம் தான் என் உயிரைக் காப்பாற்றவேண்டும்” என்று கூறி, சில வீரர்களை அவனுக்குத் துணை செய்ய நிறுத்தி விட்டு, சிவாஜி எஞ்சியுள்ள வீரர்களுடன், விசாலக் கட்டத்தை நோக்கிச் சென்றனன்.

4

பாஜி தேச பந்துவைப்பற்றி சில மொழிகள் கூறுவோம்.

ஒரு சமயம், சிவாஜியும் பாஜி தேச பந்துவும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் போர் செய்தனர். சிவாஜி பாஜியைச் சாதாரண மனிதன் என்று நினைத்திருந்தான எனவே, இருவரும் வாள் ஏந்திச் சமர் செய்கையில், சிவாஜி அலக்ஷியமாகச் சண்டை செய்தனன். அதைக் கண்ட பாஜி சிவாஜியைத் திடீரெனத் தாக்கினான், சிவாஜி தன்னைக் காத்துக்கொள்ள, தன் கத்தியினால் அவன் எதிர்ப்பதைத் தடுத்தான். இருவர் வாளும் உராய்ந்த பொழுதி, சிவாஜியின் வாள் 'பட்' என்று ஓடிக் விழுந்தது. அதைக் கண்ட சிவாஜி பாஜியின் அருகில் சென்று, அவனைத் தட்டிக்கொடுத்து,
''பாஜி! நான் உன்னைச் சாமானிய மனிதன் என்றே நினைத்திருந்தேன். இன்று நடந்த வாட்போரிருந்து என் தப்பிதத்தை உணர்ந்தேன். இன்று முதல் நாம் இருவரும் உயிர்த்தோழர்களாய் இருப்போம்'' என்று கூறினான்.

அன்று முதல் அவர்கள் கொண்ட நட்பு வளர்பிறைச் சந்திரனைப் போல வளர்ந்து வந்தது.

பாஜல்கான் தன்னைப் பின்பற்றிச் சிறை செய்ய வந்ததைக் கண்ட சிவாஜி தன்னைக் காப்பாற்றும்படி பாஜியை வேண்டவே, பாஜியினால் அவ்வுதவியைத் தட்டமுடியாமல் போயிற்று. பாஜியின் மனதில் ஓர் எண்ணம் மின்னல் போல் தோன்றி மறைந்தது. தன் உயிரைக் கொடுத்தாவது சிவாஜியைக் காப்பாற்றுவது என்று, பாஜி தீர்மானித்தனன்.

பாஜி நின்றிருந்த இடம் ஒரு குறுகலான பாதை. அப் பாதையின் இரு பக்கங்களிலும் உயர்ந்த மலைச்சிகரங்கள் வானளாவி நின்றன. பாஜி தன் வீரர்களை அங்கு ஒழுங்காக நிறுத்தித் தானும் ஒரு வாளைக் கையிலேந்திக் கொண்டு நின்றனன்.

‘இன்னும் சில நிமிடங்களில் சிவாஜியைச் சிறை செய்து கொண்டு போய் விடலாம்' என்ற எண்ணத்துடன் முகலாய வீரர் பாஜி நிற்கும் குறுகலான பாதையினருகில் வேகமாக வந்தனர்.  அங்கு பாஜி நின்றிருப்பான் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
ஆகையால் அவர்கள் பாஜி தேச பந்துவைக் கண்டதும் திகைத்துப் போனார்கள். அவர்களைக் கண்ட பாஜி, "வீரர்களாயின் இங்கு வாருங்கள்" என்று கூவினான.

முகலாய வீரர் கொதித்தெழுந்து மஹாராஷ்டிர வீரர்களைத் தாக்கினார்கள். பாஜி தன் வீரர்களைத் துரிதப் படுத்திக்கொண்டே தானும் வீரம் விளைத்துச் சண்டை செய்தனன். தன் தேக முழுவதும் ரத்தப் பெருக்கு எடுத்து ஓடுவதையும் கவனியாமல், பாஜி முகலாய வீரர்களைக் கொய்து தள்ளிக் கொண்டிருந்தனன்.

மஹாராஷ்டிர வீரர்களில் சிலர் இறந்து விடவே, பாஜி எஞ்சியுள்ள வீரர்களை நோக்கி, 'நண்பர்களே! கலங்கவேண்டாம். உயிர் உளள வரையில் பின்னடையாதீர்கள்.
நமது வேந்தன் சிவாஜி வீரன் விசாலக் கட்டத்தை அடைந்ததற்கு அடையாளமாக மூன்று முறை பீரங்சிச் சப்தம் கேட்கும்'' என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே
சண்டை செய்தனன்.

போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு முகலாய வீரனின் வாள் பாஜி தேசபந்துவின் மார்பில் பாய்ந்து ஊடுருவிச் சென்றது. பாஜி கீழே விழுந்தனன். அவன் உயிர் துடித்துக் கொண்டிருந்தது. அச் சமயம் மூன்று முறைப் பீராகச் சப்தம் கேட்டது. அச் சத்தத்தைக் கேட்டவுடன் பாஜியின் முகம் மலர்ந்தது. "என் நண்பன் பிழைத்தான். நான்
என் கடமையை நிறைவேற்றி விட்டேன்," என்று கூறினான். அந் நிமிடமே அவன் ஆவி அகன்றது,

மஹாராஷ்டிர வீரர்கள் உடனே அவன் உடலை எடுத்துப்போய் சிவாஜியின் முன்னிலையில் வைத்தனர். அதைக் கண்ட சிவாஜி அவ்வுடலின் மீது விழுந்து, இறந்த நண்பனைத் தழுவிக்கொண்டு, ''பாஜி! எனக்காக உன் உயிரையும் பொருட்படுத்தாமல் போர் செய்தனையே! நீயே என் உத்தம நண்பன்! நீயே உண்மைத் தியாகி!'' என்று கதறினான்.

ஆனந்த போதினி – 1942 ௵ - ஜுலை ௴

 



 

No comments:

Post a Comment