Thursday, August 27, 2020

 

உண்மைத் தொண்டு

 

ஏனைய உயிர்களின் துன்பங்களைப் புறக்கணித்து விட்டுச் சொந்த இன்பங்களை மாத்திரம் தேடிக்கொண்டு திரியும் சுயநல இயற்கை விலங்கினங்கட்கே உண்டு. காரணம் அவைகளிடம் நன்மை தீமைகளைப் பகுத்தறியும் தன்மை இன்மையேயாகும். மக்களிடம் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு சிறந்து விளங்குகிறது. இந்தப் பகுத்தறிவு ஒன்றினாலே தான் மனிதன் உலகத்திலுள்ள மற்றை உயிர்களை விட உயர்ந்தவனாக மதிக்கப்படுகிறான். பகுத்தறிவு விளங்கப் பெறாத மக்கள் மாக்கள் என்றே கருதப் பெறுவர்.

 

தன்னைப்போலவே பிறரையும் நேசித்தல் மானிட தருமம். சுயநலங் கருதாமல் பிறர் நலம் மாத்திரம் பேணுதல் அறவோர் செயலாகும். கைம்மாறு கருதாமல் பிறர் நலம் பேணுவது என்பதுசாமானிய விஷயம் அல்ல. இத்தகைய் அறத்தொண்டு மேற்கொள்ளுகிறவர்களுக்குப் பெரும் தியாகபுத்தி வேண்டும். உலகத்திலேயே தியாகிகள் தலை சிறந்து விளங்கிய பெருமை உடையது நமதுபாரத நாடே. ஆனால் தற்காலத்திலோ - நாகரிகம் பெற்ற தேசங்களுக்கு இடையில் ஒரு பைத்தியகார நாடாக விளங்குகிறது.

 

நமது நாட்டு நாகரிகப் பெருமை, கலைப்பெருமை, மொழிப்பெருமை, சமயப்பெருமை, தத்துவப் பெருமைகள் எல்லாம் இப்இருந்த விடம் தெரியவில்லை. இவைகளை யெல்லாம் அரும்பாடுபட்டு வளர்த்த தியாகிகள் பெயர்களுங்கூட நாம்தெரிந்து கொள்ள முடியாத நிலைமையில் வாழ்ந்து வருகின்றோம். பொழுது வறுமை நோய் வாரித் தின்று கொண் டிருக்கும் நாட்டில் நாகரிகம் -முன்னேற்றம் எவ்வாறு இருக்க முடியும்? பல நூற்றாண்டுகளா கநமது நாடு அடிமை வாழ்விலேயே மூழ்கிப் பழகி வந்து விட்டபடியால் அந்நியர் முற் போக்கைக் கண்டும் அது முன்னேற்றம் அடைய அறிவு செலுத்த முடியாத நிலையில் மயங்கிக் கொண்டிருக்கிறது. வாயளவில் பழம் பெருமை பேசிக் கொண்டிருப்பதற்கு மாத்திரம்நாம் பின் வாங்குகின்றோம் இல்லை. இங்ஙனமே இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் வெறும் வாய் வீச்சு வீசிக் கொண்டிருப்பது என்று கேட்கின்றோம்?

 

முற்காலத்தில் அச்சுக்கூடங்கள் இல்லை, பத்திரிகைகள் இல்லை, ரயில்களும் மோட்டார்களும் இல்லை, ஆகாய விமானங்கள் இல்லை. போக்கு வாவு சாதன விஷயத்திலும், பொது ஜனங்களுக்கு அறிவைப் பரப்பும் விஷயத்திலும் தற்கால சௌகரியங்கள் முற்காலத்தில் இல்லாமல் இருந்தும் நமது முன்னோர்கள் தங்கள் தன்னலமற்ற தொண்டின் பெருமையால் அபாரமான காரியங்களைச் சாதித்திருக்கின்றனர். தூரதேசங்களுக்குக் கடல் கடந்து சென்று வியாபாரம் செய்து நமது நாட்டில் பொருள் வளம் செழிக்கச் செய்தனர். அறிவு நூல்களையும் கலைகளையும் வளர்த்தனர். சமய தத்துலங்களை எல்லாம் பிறநாட்டினருக்கு வழங்கினர். சீனதேசத்திலும் ஜப்பான் தேசத்திலும் பௌத்த மதத்தைப் பரவச் செய்யஎத்தனை தியாக மூர்த்திகள் - எத்தகைய தொண்டாற்றி யிருக்கவேண்டும் என்பதைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

 

நமது தேசத்தில், தற்காலத்திலுங்கூட, ஒவ்வொரு சமயத்துக்கும் உண்மைத் தொண்டு ஆற்றுவதற்கு என்று எத்தனையோ மடங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் ஆண்டுதோறும் ஏராளமான வருவாயுள்ள நிலங்கள் மானியமாக விடப்பட் டிருக்கின்றன.

 

முற்காலத்தில் இவற்றிற் கெல்லாம் சமய உணர்ச்சி உள்ள எத்தனை அன்பர்கள் பொருள் தந்து - நிலங்கள் விட்டு அருந்தொண்டு ஆற்றியிருக்க வேண்டும்! எத்தனை சமயப் போறஞர் உலக போகங்களை எல்லாம் துறந்து தலைமை தாங்கி மடங்களில் வீற்றிருந்து சமய உண்மைகளைப் பரவச் செய்திருக்க வேண்டும்! இவற்றை யெல்லாம் நினைக்க நினைக்க எமது உள்ளத்தில் உணர்ச்சி ததும்புகின்றது.

 

அமிழ்தினும் இனிய தமிழ்மொழி வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய அறிஞரின் தியாகத்தை எம்மொழி கொண்டு எவ்வாறு சமய புகழ்வது? புலவரின் வறுமையை உலக மெல்லாம் அறியும். எவ்வளவு வறுமையில் வருந்தினாலும் - எத்தகைய இடையூறு நேர்ந் தாலும் பண்டைத் தமிழ்ப்புலவர் தமிழ்மொழி வளர்ச்சியிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்து தொண்டாற்றி வந்த உண்மையை நாம் இன்றுங் கேட்டு வருகின்றோம். முச்சங்க வரலாற்றையும், அவை களில் வீற்றிருந்த புலவர்களின் பெருமையையும், முடியுடை மூவேந் தரின் தமிழ்மொழிப் பற்றையும், மூவேந்தரோடு குறுநில மன்னர் களும், செல்வரும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்து வந்த அருமை வரலாறுகளையும் பண்டை இலக்கியங்களின் வாயிலாகக் காணுந் தோறும் எத்தகையாருக்கும் மிகுந்த உருக்கம் உண்டாகும் என்பதில் ஐயம் இல்லை.

 

பொதுவாக இந்தியாவிலும் சிறப்பாகத் தமிழ்நாட்டிலும் சமய வளர்ச்சிக்காகவும் மொழி - கலைகள் வளர்ச்சிக்காகவும், அரசியல் விஷயத்தில் நீதிநெறியை நிலைநாட்டுவதற்காகவும் தங்கள் தங்கள் ஆயுட் காலங்களையே அர்ப்பணம் செய்த பெரியார்கள் அநேகர். இக்காலத்திலோ மிகவும் கேலிக்கூத்தா யிருக்கின்றது.

 

சமய உணர்ச்சியை வளர்த்து மக்களுக்கிடையே ஆன்ம விளக்கப் பிரசாரம் செய்யும் பொருட்டுப் புகழ் பொருள் பூசனை பெற்று வந்த பிரிவினர் எல்லாரும் உலகியல் விவகாரங்களையே தங்கள் பிறவிப்பயனாகக் கருதி அவற்றில் நுழைந்து விட்டனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய்கள் வருமானமாகவுள்ள மடாதிபதிகள் எல்லாரும் தங்கள் கடமைகளை அடியோடு மறந்து கோர்ட்டு வழக்குகளிலும், கொலைகளிலும் இறங்கி விட்டனர். மடாதிபதிகள் துறவுக் கோலம் பூண்டவர்கள். ஆனால் தற்காலத்தில் சகல ஆடம்பரங்களும் இவர்களிடத்தே தான் காண்கின்றோம். பெரிய ஜமீன்தார்கள் - குறுநில மன்னர்களுங்கூட இவர்களைப் போல் போக போக்கியங்களோடு வாழ்க்கை நடத்த முடியாது. சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கும் வக்கீல்களுக்கும் விருந்துகள் - மோட்டார்கள் -தாசி வேசிகள் --சதுர் கச்சேரிகள் - சங்கீதங்கள் எல்லாம் தடபுடல். இந்தச் சுகம் கண்ட இவர்கள் எவ்வாறு சமய வளர்ச்சியையும் மொழி வளர்ச்சியையும் லட்சியம் செய்யப் போகிறார்கள்? வாயில்லாப் பூச்சிகளாகிய பொது ஜனங்களும் மடாதிபதிகள் என்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், மடாதிபதிகளின் இலக்கணம் இதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. இல்லாது போனால் தங்களுக்கு உரிமையுள்ள தங்கள் முன்னோர்கள் மானியமாகக் கொடுத்த பொதுப் பொருள்'' ஆற்றிற் கரைத்த புளியாகி'' வருவதைக்கண்டு வாளா இருப்பரோ? இந்நாளில் சமயத்தின் உண்மைத் தத்துவங்கள் மறைந்து வெறும் சம்பிரதாயங்களே மிஞ்சி யிருக்கின்றன. இந்தச் சம்பிரதாயங்கள் -வழக்கங்கள் ஒரு சிலர் வயிறு வளர்க்க உபயோக மாகின்றன வேயொழிய மக்களின் இம்மை மறுமை இன்பங்களுக்கு ஒரு சிறிதும் பயன் படுவனவாக இல்லை.

 

இனி மொழி விஷயத்தை எடுத்துக் கொள்ளுவோம். சமயத்தைப் போலவே தமிழ் மொழியையும் இக்காலத்தில் அலட்சியம் செய்வோர் தொகை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. "குப்பை உயரக்கோபுரம் தாழ்ந்தது" என்பது போல் ஆங்கிலப் பயிற்சி பெருகப் பெருகத் தமிழ்மொழிப் பயிற்சியும் வளர்ச்சியும் நாளுக்கு நாள் குன்றிக் கொண்டே போகிறது. உயர்தனிச் செம்மொழி என்று அறிஞர் போற்றிப் புகழும் சிறப்புப் பெற்ற நமது பைந்தமிழ் மொழியை எத்தனை பேர் ஆர்வத்தோடு கற்க முன் வருகின்றனர்? அதற்கு அரசினர் எத்தகைய ஆதரவு அளிக்கின்றனர்? என்று நினைத்துப் பார்க்கும் போது யாருக்கும் மனம் உடையாமல் இருக்காது. அறிவுவளர்ச்சிக்கு ஆங்கிலப் பயிற்சி அவசியமே; அதற்காகத் தமிழைப் புறக்கணித்தல் என்ன முறை என்று கேட்கின்றோம்? தாய் மொழிப் பயிற்சியை யன்றோ முதன்மையாகப் பாராட்டிப் பயில வேண்டும்? அத்தகைய உணர்ச்சியும் ஆதரவும் சௌகரியமும் தமிழ்நாட்டில் சூனியமாயிருக்கின்றமைக்கு மிகவும் வருந்துகின்றோம். தமிழ்மொழியைப் பேணிப் பயிலாதிருக்கின்றமைக்குத் தமிழ் மொழியில் ஒன்றும் இல்லை என்று ஒரு சிலர் வாதிக்க முன் வருகின்றனர்! அதுதவறான எண்ணம் என்பது எமது தீர்மானம். உண்மையில் விருப்பம் இருந்தால் எல்லாம் உண்டாகி விடும். நமது தமிழ் மொழிஇலக்கிய இலக்கண அமைப்புக்களில் தலை சிறந்து விளங்குலது; இதில் சுவை ததும்பும் காவியங்களும் கதைகளும் ஏராளம்; சமயநூற்களஞ்சிய மாகவும் இலங்குகின்றது. இப்பொழுது நாம்செய்யவேண்டுவ தெல்லாம் காலப் போக்கை அநுசரித்து இலக்கியவளர்ச்சி செய்ய வேண்டியதே.

 

முன்னேற்றம் அடைந்திருக்கும் ஒவ்வொரு நாட்டினரும்காலத்துக்கு ஏற்றபடி தங்கள் தங்கள் மொழிகளை வளர்த்து வந்திருக்கின்றனர். ஆங்கில மொழி இக்காலத்தில் உலக மொழியாக விளங்குவதற்குக் காரணம் என்ன? ஒவ்வொரு பாஷையிலும் உள்ள அரிய பொருள்களைத் தங்கள் பாஷையில் மொழி பெயர்த்துக் கொண்டமையே யன்றோ? ஏன் நாமும் நமது தமிழ் மொழியை அத்துறையில் வளர்ச்சி செய்யக் கூடாது? இந்தியாவிலுங்கூட நமது தமிழ்மொழியைத் தவிர மற்ற தெலுங்கு, வங்காளம், ஹிந்தி முதலிய மொழிகள் எல்லாம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந் திருக்கின்றன.

 

சிலர் பொருள் ஒன்றையே பிரதானமாகக் கருதி ஆபாசமான பிழைகள் மலிந்த புத்தகங்களை வெளியிட்டு மாணவர்களின் அறிவையும் சாதாரண மக்கள் அறிவையும் கெடுத்து வருகின்றனர். தமிழ் நாட்டில் ஆங்கிலமும் தமிழும் கற்ற அறிஞர் இல்லையா? இருக்கின் றனர். இருந்தும் பயன் என்ன? ஒருவரேனும் தமிழன்னைக்குப் புத்துயிர் அளிக்க முன் வருகின்றார் இல்லை. தமிழணங்குக்கு உண்மைத் தொண்டர் தோன்றித் தொண்டாற்றுங் காலம் என்று ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.

 

நமது சமூக விஷயத்தை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள ஊழல்கள் இவ்வளவு அவ்வளவு என்று வருணிக்க முடியாது எத்தனையோ வேற்றுமைகள் - பொருளற்ற ஒழுக்க வழக்கங்கள் ஆகியபேய்களால் அறையப்பட்டு நமது சமூகம் பாதாளத்தில் அழுந்திக்கிடக்கின்றது. ஆங்கிலக் கல்வி காரணமாக எழுந்த உணர்ச்சி விசேஷத்தால் ஆரம்பத்தில் சில அறிஞர் சமூக சீர்திருத்த விஷயமாக அரிய தொண்டாற்றி யிருக்கின்றனர். அதெல்லாம் நமது நாட்டில்கடலிற் கரைத்த பெருங்காயமாகவே இருக்கின்றது. அதற்குப் பிறகு வந்தவர்கள் சமூக சீர்திருத்தம் - ஆசார சீர்திருத்தம் என்ற பேரால் தங்கள் தங்கள் சுய நலத்தையே சாதித்துக் கொண்டனர் -சாதித்தும் வருகின்றனர். இவர்கள் எல்லாரும் சொல்லொன்று செய்லொன்றாக மாறுபட்டு நடந்து மக்களை அலக்கழித்து வருகின்றனர். ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் ஆகியவைகளின் கொள்கைகள் எங்ஙனம் இருந்த போதிலும் சமூக சீர்திருத்த விஷயத்தில் நல்ல ஊழியம் புரிந்திருக்கின்றன. ஆனால் இன்னும் சண்டை சச்சரவுகள் ஓய்ந்தபாடில்லை.

 

நமது நாட்டு அரசியல் நிலைமை மிகவும் இழிந்த நிலையிலிருக்கின்றது. அநேக நூற்றாண்டுகளாக இந்தியா அந்நியரின் கொள்ளைக்கும் கொடுங் கோன்மைக்கும் உட்பட்டு வந்திருக்கிறது. இந்தியா சுதந்தா இன்பம் நுகர்ந்த காலம் கனவாகி விட்டது. ஆங்கிலஆட்சி முறையில் சில ஏற்பட்டிருந்த போதிலும்ஆண்டு தோறும் கோடிக் கணக்கான திரவியம் கொள்ளை போய்க்கொண்டிருக்கின்றது என்பதை மறுப்பவர் இல்லை; ஆங்கிலேயர் அநுகூலங்கள் தங்கள் சுயநலங் கருதியே இந்தியாவை ஆட்சிபுரிந்து வருகின்றனர் என்பது வெள்ளிடை மலை. நம்முடைய மக்கள் அறியாமை, பிணி, வறுமைகளில் மூழ்கித் தத்தளிக்கின்றனர். இந்தக் கொடுமைகளை ஒழிக்கவே காந்தியடிகள் அல்லும் பகலும் திரிகரண சுத்தியாய் உழைத்து வருகிறார். நமது நாட்டுச் சமூக இழி நிலை அரசியல் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாய் இருந்து வருகிறது. அநேகர் சமூக சீர்திருத்தத்தின் பேரால் தங்கள் சுயநலத்தைச் சாதித்துக் கொள்ளுவது போலவே தேசீயம். -- சுயராஜ்யம், காங்கிரஸ் என்பவைகளின் பேரால் அரசியல் வாதிகள் --- தலைவர்கள்- தேசபக்தர்கள் என்போர் தங்கள் தங்கள் சொந்த நலத்தைச் சாதித்துக் கொள்ள அநேக பித்தலாட்டங்களைச் செய்து வருகின்றனர். இதனால் நமது நாட்டு அரசியல் ஸ்தாபனங்கள் எல்லாம் சக்தி அற்றுக்கிடக்கின்றன. அரசியல் விஷயத்தில் உண்மை உணர்ச்சியுடன் தொண்டாற்றுவோர் தொகை மிகவும் அற்பம். பரஸ்பர நம்பிக்கையுடன் - கட்சிப் பிளவுகள் இன்றி எல்லாரும் ஒன்று பட்டு முனைந்து தொண்டாற்றினால் விடுதலை இன்பம் விரைந்து முன்னிற்கும் என்பதில் ஐயம் இல்லை.

 

சுயநல நோக்கங்கொண்டு எந்த வேஷம் போட்டாலும் வெற்றி ஏற்படாது என்பது உறுதி. கொஞ்ச காலத்துக்கு வேண்டுமானால் சிலரை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் எல்லாக் காலத்திலும் எல்லாரையும் ஏமாற்றி விட முடியாது என்ற உண்மையைப் பொதுநலத் தொண்டு ஆற்ற முன் வருவோர் ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும், அத்தகையோர் நிலைமை எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதை நாம் அநுபவத்தில் கண்டு வருகிறோம்.

 

ஆதலால் நமது நாடு பண்டைச் சீரும் சிறப்பும் பெற்று, மக்கள் எல்லாரும் இன்பவாழ்க்கை நடாத்த வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் எல்லாரும் திரிகாண சுத்தியாய் உழைக்க முன் வருமாறு கேட்டுக் கொள்ளுகிறோம். சமயம், மொழி, சமூகம், அரசியல் விஷயங்களில் -- அவ்வத் துறையில் சிறந்து விளங்கும் அறிஞர்கள் தியாகபுத்தியுடன் உண்மைத் தொண்டாற்ற முற்பட்டால் திருவருள் முன்னின்று துணை செய்யும் என்பதில் அணுவளவும் ஐயம் உண்மைத் தொண்டைத் தவிர மக்கட்குரிய தலை சிறந்த அறம் பிறிதொன்றில்லை என்பதை ஞாபகம் செய்கின்றோம்.   

 

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - ஏப்ரல் ௴

 

 

 

 

No comments:

Post a Comment