Thursday, August 27, 2020

 

உத்தம நட்பும் போலி நட்பும்

 

உத்தம நட்பாவது –


''உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
 இடுக்கண் களைவதா நட்பு"

 

எனச் செந்நாப் போதார் திருவாய் மலர்ந்தருளிய வண்ணம் மனிதர் நண்பன் துயருழந்த விடத்துத் தாமே முற்பட்டின்னல் தவிர்த்தலும், புத்தி சிதைந்து மயக்கமுற்றுழி, நல்லறிவுறுத்தி நலம் நாட்டுதலும், அவனடையுமின்ப துன்பங்களிற் பங்குபெறலும், அவன் சுற்றத்தினரைத் தம் கேளிரெனக் கொள்ளுதலுமாம்.

 

ஒருவன் உலகில் மனமொத்த நண்பனைத் தன் சகோதரனினும் அதிக உறுதியாய்ப் பற்றுதலும், அந்தரங்க விடயங்களை யவனிட மொளியா துரைத்தலும் சகஜம். உடன் பிறப்பை நம்பாத மனம் நண்பனை விசேடமாய் நம்புகின்றது.


''உடன் பிறந்தார் சுற்றத்தா ரென்றிருக்க வேண்டாம்
 உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
 மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
 அம்மருந்து போல்வாரு முண்டு"


என்னும் பாடலும் சகோதரர்களினும் சிநேகிதர்களே முக்கியமானவர்களென்பதை வலியுறுத்துகின்றது.

 

நல்லோர்தம் நன்னடக்கையும், சீரிய குணமும் புல்லர்கட்குப் புலப்படா; அறிவாளிகளோடு நட்புறவும், அவருடனின் சொற்புகன் றன்பு பெருக்கவும், ஆநந்த வாரிதியின் மூழ்கி அரிய நீதிகள் கேட்டளவளாவி அற்புதத்தேனினும், அதிமதுரக் கற்கண்டினும், அதிக ருசிவாய்ந்த மெய்யுபசாரமொழி கேட்டானந்திக்கவும் அவர் எவ்வளவு தூரத்திலிருப்பினும் அவரைத் தேடி மெய்யன்பர் வந்துவிடுவர். அவர் அத்யந்த விசுவாசத்துடனின்று நம் நண்பர் வருவாரென வெண்ணும் போதே அந்நண்பர் திடீரெனச் சந்திப்பதுண்டு. உத்தம நட்புக் கத்தகைய சக்தியுளது. இத்தன்மையான நட்பு வேரூன்றி முளைத்துக் கிளைத்து, நலம் பழுத்துப் பயன்றரும். பணச் செருக்கால் வரும் நட்பும், சனப்பெருக்காற்றரும் நட்பும் நட்பாகா. அந்நட்பு மின்னற்குநேர். பணமும் ஜனமும் நழுவிய காலத்து அதுவும் பறந்து போம். சமையத்துக் குதவாது. குணத்தாலும் கல்வி மணத்தாலும் பெறும் நட்பே சிறந்ததாகும். ஸ்ரீராமபிரான் விபீடணனுடன் நேசம் பாராட்டிய காலத்து, அவனது குணநலத்தையும் அறிவையும் நேரில் கண்டும், அநுமானால் கேட்டும் அகமகிழ்வுற்று மெய்யன்பு பெருகி,

''குகனொடு மைவ ரானே முன்புபின் குன்று சூழ்வான்
 மகனொடு மறுவ ரானே மெம்முழை யன்பின் வந்த
 அகனமர் காதலைய நின்னொடு மெழுவ ரானேம் - - -

என்று ராம, பரத, லக்ஷ்மண, சத்துருக்கர் எனும் நால்வருடனும் குகன், சுக்ரீவன், விபீடணன் இம்மூவரும் சேர்ந்து ஆக ஏழு சகோதரர்கள் நாம்; ஆதலின் நீ எனது சகோதரனாயிருக்கக் கடவாயென்று தமது மெய்யன்பை விவரித்துள்ளார். விபீடணனும் ஸ்ரீ இராமர் பாதமே தஞ்சம் என நம்பி அவரது சுகதுக்கங்களைத் தன்னுடையனவாகப் பாவித்துத் தன் அண்ணனாகிய இராவணனிறந்த பின்னரும், ராகவருத்தரவின் மீதே ஈமக்கிரியையாதிகளை முடித்து, அவரருளுக்குப் பாத்திரனானான்.

 

விபீடணன் நல்லறிவுடையனாயிருந்தும், அவனமைச்சரே யன்றிச் சுற்றத்தினர் யாவரேனு மவனருங் குணத்தினை மெச்சி அவன் நட்பையடைந்திலர். ஸ்ரீ ராகவரோ தசரத குமாரரே யெனினும், அவனிடத்தன்புபெருகி நேசம் பாராட்டி அரக்கனென்றெண்ணா தார்வமுற்றனர். ஆதலின், நல்லார் கேண்மை நல்லாரடைவரே யன்றிப் புல்லர் உணரார்.


 "தண்டா மரையி னுடன் பிறந்துந் தண்டே னுகரா மண்டூகம்
 வண்டோ கானத் திடையிருந்து வந்தே கமல மதுவுண்ணும்
 பண்டே பழகியிருந்தாலு மறியார் புல்லர் நல்லோரைக்
 கண்டே களித்தங் குறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே"


என்னும் பாடலும் அதனை விளக்கும்.


இனிப் போலி நட்பினை யாராய்வோம்: -


இரண்டு நண்பர்கள் பிரயாணம் செய்யுங் கால் வனத்திலெதிருற்ற கரடியைக் கண்டு ஒருவன் மற்றொருவனை அதனிடம் காட்டிக் கொடுத்து விட்டு மரத்தின் மீதேறிக் கொள்ள, மற்றவன் சமயோசிதமாய்க் கீழே படுத்துச் சவம்போற் கிடந்தான். அம்மிருகம் வந்து அவனை முகந்து பார்த்துப் பிணமென்றிகழ்ந்து போய்விட்டது. பின் மரமேறியவன் கீழுற்று அவ்விலங்கு நின் செவியிடை குசு குசுவென யாது புகன்றது என்றான். அதற்கவன் அந்தப் போலி நண்பன் வெட்குமாறு, "ஹே! நேசா!! என் சொல்வேன் அதனன்பை!

 

'செய்ந்நன்றி மறந்து, ஆபத்துக் காலத்தில் நின்னைவிட்ட கன்று, தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள நினைத்தோடும் அற்பநேயனைக் கனவிலும் நம்பாதொழி' என்று கூறிற்று'' என்று விடை கூறினான் என்னும் ஒரு கதையுண்டு. இது போலி நட்பை விளக்கும். இத்தகைய போலிப் பொய்யன் புடைய புல்லர்களின் கண்ணிற் றென்படுத்தலும் கூடாது.

 

''கொம்புள துக் கைந்து முழங் குதிரைக்குப் பத்து முழம்
 வெம்புக்கரிக் காயிரந்தான் வேண்டுமே - - வம்பு செறி
 தீங்கினர் தங் கண்ணிற் நெரியாத தூரத்து
 நீங்குவதே நல்ல நெறி''


 என்னும் நீதியை உய்த்துணர்தல் நன்று.

 

"நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே"


''ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே''


 என்னும் அதிவீர ராமபாண்டியரின் அரிய வாக்கியமும்,


''நற்றா மரைக்கயத்தி னல்லன்னஞ் சேர்ந்தாற் போற்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பில்லா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை யுகக்கும் பிணம்"


என்னும் முதுமொழியும் ஆராய்ந்து, ஏறிய பின்னேணியை வாங்கும் ஆபத்துக் காலத்தி லன்பற் றகலு மறிவில்லாவற்பர் சிநேகத்தை யறவேயொழித்து, உற்ற பந்துக்களல்லா விடினும் உத்தம நட்புள்ள உண்மையாளரையே நாடி மெய்யன்புறுதலே சாலச் சிறந்ததாகும்.

 

எல்லாம் வல்ல ஆதிமூல கேசவன் இன்னருள் சுரந்து நம்மெல்லோரையும் உத்தம நட்புடையாராய் விளங்க உதவிபுரிவாராக.


 ச. சி. இராமய்யா, கடலாடி.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - ஆகஸ்டு ௴

 

 

 

No comments:

Post a Comment