Wednesday, August 26, 2020

ஆசிரியர் சீடனுக்கு உபதேசிக்கும் முறைமை

 

அறிவு சிவமாக ஆடும் திருக்கூத்து
அறிவு சிவமாகும் அறிந்தவர்க் கெல்லாம்
அறிவு சிவமென் றறிய வல்லார்க்கு
அறிவு தன்னுள்ளே ஆனந்தமாமே.

 

எங்கும் பரிபூரணமாய் நிச்சலமாய் அலைவில்லாத சமுத்திரம் போலஞான சொரூபமாகிற அறிவுதானே சிவன். நித்தியமாய்த் தானே தானாய் விளங்கி நித்தியானந்தமா யிருக்கிற அறிவுதானே பிரபஞ்சமாக வேணுமென்று நினைத்தது. அந்த அறிவு தனக்கே சுத்தமாயை யென்று பெயர். அந்த அறிவு சொரூபமாகிற மாயையானது நிசானந்தத்தை மாத்திரம் மறந்ததே அவ்வியக்தமாகிற ஈஸ்வரனுடைய காரணதேகம். அந்த ஈஸ்வரன்தானே அனந்தங்கோடி பிரம்மாண்டமான நாம ரூபாகாரமாகத் தூல சூக்கும் பிரபஞ்சத்தைக் கற்பித்தது. பிரபஞ்சங்களைச் செய்து கொண்டிருக்கிறபடியினாலே சஞ்சலத்துவம். அந்த சஞ்சலமான பிரபஞ்ச கற்பித வாசனா பலத்தினாலே தன்னுடைய சிற்சொரூபமான சிவ சொரூபத்தை மறந்து உயிரும் உடலும் தானாய் ஆங்காரத்தினாலே சடவடிவாயிற்று. சிவமாயும் நிச்சலமாயுமிருக்கிற அறிவுதானே பிரபஞ்ச விச்சையினாலே தன்னுடைய சொரூபானந்தத்தை மறந்ததே சஞ்சலத்துவம். பிரபஞ்ச பாவனையினாலே உயிரும் உடலும் தானே யென்று விஷயானந்தத்தைச் சிந்தித்துப் புசிக்கிறதே சடத்துவம். தூல சூக்கும நாம ரூபமான பிரபஞ்ச சொரூபம் எப்படியென்றால், நானற்சலம் போலவும் சொப்பனம் போலவும் தோன்றிக் கொண்டிருந்தாலும் அநித்தியம் உற்பன்னமானவுடனே நசித்துப் போகிறது. சுயம் தானாக விளங்குகிற தில்லாதபடியினாலே சடம் அநித்தியமாயும் சடமாயும் இருக்கிறது. சுகமாகாத படியினாலே துக்கரூபம். சுத்தமாய்ச்சித்தாய்க் கேவலானந்தமா யிருக்கிறதே சிவசொரூபம்


வினா: - சத்தாவ தேதென்றால்

 

விடை: - பரிபூரணமாய் எங்கும் நிறைந்து ஒன்றோடேயும் கூடாமல் மனம் வாக்குக் கதீதமாய்ச் சகல பிரபஞ்சத்துக்கும் ஆதாரமாய் நிர்விகாரமாய் நித்தியமாய்த் தானே தானாய் விளங்குகிறதே சாத்து ரூபம்.


வினா: - சித்தாவ தேதென்றால்

 

விடை: - எப்போதும் ஏக ரூபமாய்த் தனக்குத் தானே பிரகாசமாகிற அறிவாய் நாம ரூபமான தூல சூக்குமமாய்ச் சொப்பனம் போலவும் கானற்சலம் போலவும் காணப்படுகிற சகல பிரபஞ்சத்துக்கும் சாட்சியாய் அறிந்து கொண்டிருக்கிறதே சித்து ரூபம்.


வினா: - ஆனந்தமாவ தேதென்றால்


விடை: - சித்து என்கிற அறிவுமற்றுக் கேவலம் தன்மயமாய் நிற்கிறதே சிவானந்தம்.

 

அது எப்படியென்றால்? பாலினுடைய வெண்ணெய் சத்து நிறமானது. சித்து மதுரமானது, ஆனந்தம் இது திருஷ்டாந்திர மென்றறிக.

 

வினா: - சூரியனுடைய சந்நிதானத்திலே ஜகத்து எப்படி தொழில்படுகிறதோ அப்படியே அறிவினுடைய சந்நிதானத்திலே ஜகத்து எப்படி தொழில் படுகிறதென்றால்

 

விடை: - அநித்தியமான சடம் நித்தியமா யிருக்கிறது போலத் தோன்றுகிறது. அறிவில்லாத சடம் அறிவைப் போல விளங்குகிறது. துக்கரூபமாகிற சடம் சுகமயம் போல் விளங்குகிறது. ஆகையினாலே அறிவினுடைய சந்நிதானத்தினாலே சடம் தொழில் பட்டாலும் சடம் பொய். சடத்திலே எல்லாம் சந்சிதானந்த சொரூபமாய் விளங்குகிறது.


வினா: - வைராக்கியம் பாதி, ஞானம் என்பது எப்படி யென்றால்?

 

விடை: - வாசனா ரூபமான நினைவுக்கு வாசனாக்ஷயம் பிறந்த விடம் வைராக்கியம். அந்த நினைவே சர்வ காலந்தானே சிவரூப அறிவாய் விளங்குகிற விடமே பரபக்தி. அந்த அறிவுதானே சிரதிசயானந்தமாயிருக்கிற விடமேஞானமெனவறிக.

 

பஞ்ச விந்திரிய விடய நினைவெல்லாம் தானல்லவென்று விட்டு நீங்கின நினைவே வைராக்கியம்.

 

அந்த நினைவே தானாகிற அறிவினாலே ஆசை வைத்ததே பரமபக்தி. அந்த அறிவுதானே சச்சிதானந்த சொரூபமென்று நினைத்துச் சிந்தனை பண்ணுகிறதே ஞானமென வறிக.

 

இந்த ஞானம் நிச்சயஞானம், சமாதிஞானம், சகசஞானம் என மூன்றுவகைப்படும். அவற்றுள் நிச்சயஞானமானது சுருதியின் துணிபினாலே உலகம் கானற்சலமென்று நிச்சயித்தல்.

 

சமாதி ஞானமானது. சமாதியின் கண்ணே சுருதியின் நினைவினாலேஉலகம் கானற் சலமென்று நிச்சயித்தபடியே இருக்கப்பார்த்தல்.

 

இந்த நிச்சயஞானமும் சமாதி ஞானமும் ஆசையற்றவர்கள் மனதில் எஞ்ஞான்றும் குடிகொண்டிருக்கும். ஆசையுடையவர்கள் மனதில் எஞ்ஞான்றும் கலங்கிக் கொண்டிருக்கும்.

சகச ஞானமானது, விருப்பு வெறுப்பு அற்றவர்களுடைய உள்ளத்தில் நீங்காமல் நிலைபெற்றிருக்கும். இச்சகசஞான நிட்டையுடையவர்கள் தமது முயற்சி ஒரு சிறிதுமில்லாமல் திருவருட்பிரகாசத்தினால், புவனமும் போகமும் தமது சரீரமும் தகுந்த காரணமுமாகிய எப்பொருள்களும் அவ்வருண்மயமாகி இருதயத்திலுதயமான அருட்சொரூப மறையாமலும் மறைந்து போன திரிசியங்கள் திரும்பவும் உதிக்காமலும் மனோவாக்குக் காயப் பிரயாசமின்றி லபித்து இருந்தபடியே யிருக்கும் நிலையையுடையது. அன்றியும் காண்பவெல்லாம் சொப்பனம் போலுமென்றே துணிந்தவன் ஞானியாவான் என்பவற்றாலுங் காண்க. இதனையே முருகப்பெருமான் "பரனது முகத்திற் குலகு பொய் படிற் றுளக்கினுக்கு அது மெய்ம்மை, திரமுறு சாட்சிதானெனச் சீவன் தெரிந்திடில் பரன்மன மிவற்காம், விரவிய சகமப்போது பொய்யாகி விளங்குறு' மென்று சிதம்பர சுவாமிகளுக்குத் திருவாய் மலர்ந்தருளினார்.

 

சூரியனுடைய கிரணமே கானற் சலம் போலச் சல திருஷ்டியாய்ப் பார்த்தால் தோன்றுகிறது. சூரியனுடைய கிரண திருஷ்டியாய்ப் பார்த்தால் சூரியகிரணமே தோன்றுகிறது. ஆகையினாலே கானற்சலம் பொய்ப்படுவது. தானாகிற சச்சிதானந்த சொரூபத்தை மறந்த வாசனா நினைவே நாம ரூப ஆகாரம் போலத் தோன்றுகிறது. அதுவே அஞ்ஞான திருஷ்டி. கானாகிற சச்சிதானந்த சொரூப அறிவை நினைத்துச் சிந்தனை பண்ணின அறிவே அறிவு மாத்திரையா யிருக்கிறது. இதுவே ஞான திருஷ்டி. ஆகையாலே நாமரூப ஆகாரம் பொய். நிஷ்கள ரூபமாகிறது தானாகிற அறிவே. அன்றியும் சச்சிதானந்த சொரூபமான பழனியாண்டவனும் அவனே.

 

நிஷ்கள சொரூபமாவது தானே சச்சிதானந்த சொரூபமாயிருக்கிறது. சத்து சித்து ஆனந்தமானது அறிவு.


வினா: - அநித்தியம், சடம், துக்கரூபமாவது எப்படியென்றால்?

 

விடை: - அநித்தியத்திற்குத் தான் நித்தியமா யிருக்கிறபடியினாலே சத்து. சடத்துக்குத் தான் அறிவாய் விளங்குகிறபடியினாலே சித்து. துக்கரூபத்திற்குத் தான் அறிவானந்தமயமான படியினாலே ஆனந்தமென்றறிக. தானாகிற சச்சிதானந்த சொரூபநினைவை மறந்து தானே தேகாகாரமாய்ப் பஞ்சவிர்திரிய விடயங்களைப் புசிக்கிற வாசனா நினைவே உயிர். தானே சச்சிதானந்த சொரூபமென்று நினைத்துச் சிந்தனை பண்ணுகிறதே சொரூப நினைவு.


வினா: - ஆனந்த பிரக்ஞை, சொரூபபிரக்ஞை நிட்டாபிரக்ஞை எப்படியென்றால்?

 

விடை: - தான் தானே கேவல சிற்சிவானந்த சொரூபநினைவு தானே ஆனந்த பிரக்ஞை. தான் தானே கேவல சிற்சிவசொரூபமான நினைவு தானே சொரூபபிரக்ஞை. நாமரூபமாகத் தோன்றுகிற சகல பிரபஞ்சமும் தானே பரிபூரணமான சச்சிதானந்த சொப்பிரகாச நினைவு தானே நிட்டா சொரூபம்.

 

வினா: - சிவம், ஞானாசக்தி, கிரியாசத்தி யாது?

 

விடை: - சிவத்தினுடைய இச்சை மாயையிடத்திலே கலந்த இடம் ஞானாசக்தி. இந்த ஞானாசத்தித் தனு கரண புவன போகத்துடனே கலந்துமனம் புத்தி அகங்காரம் சித்தமாய்க்கலந்து பிரபஞ்ச விவகாரங்களை யறிய விவகாரங்களைப் பிரித்துச் சொல்ல சுகதுக்க போகங்களைப் புசிக்க இப்படி காரணமே தானாகநின்ற சாத்திக் கிரியாசத்தியென்று பெயர். தேகம் - சடம். தானல்லவென்று நீங்கின அறிவுக்குக் கிரியாசத்தி நீக்கமென்றறிகிற சாட்சிரூபமான ஞானாசத்தியாயிற்று. அந்த ஞானாசக்தியாகிற அறிவுதான் சிவமென்றறிந்து தன்னைத்தான் சிந்தித்துச் சிவோகம் பாவித்து நின்றவிடம் ஞானாசக்தி. இந்த ஞானாசத்தி சிந்தித்த விடத்தில் ஆனந்தந்தோன்ற அந்த ஆனந்தவடிவுதானென்றறிந்தது தான் சிவமென்றறிதல் சிவம்.


வினா: - மலம், மாயை, சிவம் என்பது யாது?

 

விடை: - மலமேலீட்டினால் சிவானந்தத்தை மறந்து தேகம் தானாய்விடயானந்தமே சுகமாய்நின்ற அறிவுக்கு உயிர், அவித்தை, அஞ்ஞானம், கிரியாசத்தி, திரோதானமென்று பெயர். கிரியாசத்தி விவேக அறிவினாலே தேகத்தைத் தானல்லவென்று நீக்கி ஞானாசக்தியாகிய பரிபூரண அறிவாய்த் தோன்றித் தான் சிவமென்றறியாமல் சிவனைத்தேடி மயங்கி நிற்கிற இடம்சுத்தமாயை. இந்த ஞானாசக்தி விவேக அறிவினாலே மயக்கம் நீங்கிச் சிவ அறிவாய் சிவானந்த வடிவாய் நின்ற அறிவுக்குச் சிவமென்று பெயர். சடம் சஞ்சல நிர்ச்சலமென்னும் மூன்றும் சடத்தோடே கூடிச் சஞ்சலப் பட்டது மறிவே. சிவத்தோடே கூடி ஆனந்தமாய் நிர்ச்சலமாய் நின்றதும் அறிவென்றறிக.

 

தன்னுடைய விஷயத்தைச் சடத்தோடே கூடிப் புசித்த அறிவுக்கு உயிரென்று பெயர். தன்னுடைய சிவானந்தத்தைச் சிவத்தோடே கூடிப் புசித்த அறிவுக்குச் சிவமென்று பெயர்.

 

நிர்மலமாயிருக்கிற சிவானந்த அறிவுதானே தூல சூக்குமமான நாமரூபமாகிய பிரபஞ்சத்தைக் கற்பித்தது.

 

வினா: - உள்ளும் புறம்பும் தான் தானே பிரகாசித்து விளங்குவது -உள்ளே எப்படியென்றால்?

 

விடை: - தன்னுடைய சந்நிதானமான சேதனசத்தியினாலே மனம் முதலாகிய சகல கரணங்களையும் தொழில் படுத்தி அறிவினாலே அறிந்து சாட்சியாய் நிற்கிறது.

 

சாட்சியாய் நிற்கிற அறிவு தானே தன்னுடைய இச்சையினாலே உண்டான பிரபஞ்சத்தினாலே ஆசைவைத்துத் தன்னுடைய சிவசொரூபத்தை மறந்ததே மாயை. மாயையாய் நின்ற அறிவு தானே தன்னுடைய நினைவைத் தானே சர்வகாலம் விஷயநினைவாய் நினைக்கிறபடியினாலே அநித்தியாமலமான உயிரென்று பெயர். இந்த உயிரென்று பெயராயிருந்த உயிரான அறிவு உடல் தானாய் யானெனதென்று தொழில் படுகிறது. ஆங்காரம். சங்கற்பம் விகற்பம் பண்ணுகிறது. மனது, அதை நிச்சயிக்கிறது. புத்தி சிந்திக்கிறது. சித்தம் அந்த வடிவாய் உயிரும் உடலும் தானாய் நின்ற அறிவுக்குச் சாத்திரம் ஆசாரியர் உபதேசத்தினாலே ஜடசித்து புரியில் விவேகம் வந்தது. அறிந்து புரிந்து தானே சித்து வடிவேவென்று சிந்தித்துச் சாட்சியாய் நிற்கிற அறிவு தானே சிவோகம் பாவித்துச் சிவானந்த நினைவாய் நிற்கிறதே சிவானந்தம்.


      வினா: - வெளியிலே எப்படியென்றால்?

 

ஞானவாசிட்டம்.

 

விடை: -

கிஞ்சிலாகி விரிந்து சகத்திரளாய்க் கிளைத்த விவையெல்லாம்

விஞ்சுபிரமமே யறிவுபிரம மேதினிப்பிரமம்
பஞ்சபூதம் பிரமமாம் நமது பகை பிரமம்
தஞ்சநட்புக் கினைபிரமம் சங்கராதி நிச்சயமே.

என்பதனா லுணர்க.

 

இந்தப்படி நாமரூபமாய்க் காணப்படுகிற சகல பிரபஞ்சத்தினாலே சத்து சித்து ஆனந்தமாய் விளங்குகிறதே அனுபவம். உள்ளே விவேகபோதம். வெளியே அனுபவ விவேக பிரக்ஞை. என்கிற பூமிக்குச் சற்குருவே இராஜா அவரைப்பார்த்துச் சீவன் கேட்கிறது.

 

வினா: - உயிர் சொரூபமானது, சிற்சிவானந்த சொரூபத்திற்குப் பின்னமோ? அபின்னமோ?

 

விடை: - எப்போதும் அனாதி சித்தம் பின்னமெனச் சொன்னால் யாதொரு காலத்திலேயும் சிவசொரூபமே யாகிறதில்லை. எப்போதும் ஏகமாயிருக்கிற சிற்சிவானந்த சொரூபமே உயிரென்று சொன்னால் சடசித்து விவேகத்தினாலே உயிர் சிவமாயிற்றென்று சொல்லுகிறது பொய்.

 

வினா: - ஆசையினாலே உயிர் எப்படிப்பட்டது? பின்னமாயிருக்கிற உயிர் எப்படிப்பட்டது? அதை அடையும் மார்க்கம் எவ்வாறு? என்று சீடன் கேட்டான்.


அதற்கு ஆசிரியர்.

 

“விற்கிற் றீயினன் பாலில் படுநெய்போன்
மறைய நின்று நான் மாமணிச் சோதியான்
உறவு கோனட்டுணர்வு கயிற்றினால்
முறுகவாங்கிக் கடைய முன்னிற்குமே''


என்றபடி கேவலானந்த சின்மாத்திர பரமசிவமான சற்குருவானவர் தன்னுடைய சிவானுபவமே பிரகடனமாகச் சொல்லுகிறார். நிர்விகாரமாய் நித்திய நிரதிசயானந்த கேவல சின் மாத்திர சொரூபமான சிவன் அறிவிக்கிறது. அறிகிறது மன்றியிலே தானே தானாயிருக்கிற ஆனந்தப் பிரக்ஞையானது. தன்னுடைய நிஜானந்த அதிசய சுகத்தினாலே தானே சத்து சித்தானந்த சொரூபமாய்ப் பரிபூரணமான சொரூப அறிவாய் விளங்குகிறதே சொரூபப்பிரக்ஞை. இந்தப் பரிபூரணமாகிற சிவசொரூப அறிவு தானே நிர்விகாரமாய் ஏகமாய்த் தன்னிடத்தலே அனந்தானந்த விசித்திர ரூபத்தைக் கற்பித்துத் தனது சொரூபானந்தத்தை விசேடமாய் அனுபவித்து விளையாட வேணுமென்று சுயாவீகமாய் ஞான இச்சா கிரியா சத்தியாகி நினைவு நினைத்ததே சுத்தமாயா வறிவு.

 

இதுவே பொய்யாயிருக்கிற நாமரூபப் பிரபஞ்சத்தை அபக்குவிகளுக்கு அனந்தகோடி பேதமாயுள்ள வெவ்வேறு உருவினதாகத் தோற்றுவிக்கும். இச்சச்சிதானந்த அறிவுதானே என்றும் உள்ள பொருள்.

 

ஒப்பற்ற நமது சச்சிதானந்த சொரூபமே இருந்து விளங்கி ஆனந்திப்பது. நாமரூபமோவெனில் தோற்ற மாத்திரமே யல்லாமல் நினைத்துப் பார்க்குமிடத்திலே வேறேயின்றாம்.

 

அனாதி காலமே இந்தச் சுவானுபூதியாகும். (இங்ஙனமிருக்க) நானாவிதமாகத் தோற்றுவது அஞ்ஞான விபரீதத்தினாலாம். அவ்விபரீதத்தை மறந்து விட்டால் நமது சொரூபமே அத்துவிதமாய்ப் பிரகாசிக்கும்.

 

கடலொன்றே ஓரலையினாலே நுரை திரை திவலை குமிழியாதிய நானாவிதமாகத் தோற்றும். ஓரலையினால் அங்ஙனம் பரவுதலின்றிக் கடலொன்றேயாகி முன்போலவே தோற்றும், அத்திருஷ்டாந்தம் போல யாவருந் துதிக்கின்ற பிரம சொரூபமானது சங்கற்பப் பகுப்பினால் நானாவடிவங்களாகிச் சங்கற்ப நாசத்தினால் முன் போல அத்தொய்தமாகவே விளங்குகிறது.

 

பொன் ஒன்றே பல்லாபரணங்களாகிப் பற்பல பெயர்களைப் பொருந்துமாறு போலவும், சொர்ணம் இல்லாமல் அலங்காரம் எப்படியில்லையோ அதுபோலவும், அலங்காரத்தினாலே சொர்ணம் எப்படி விளங்குகிறதோ அதுபோலவும், ஆத்ம சொரூபமே சரீர முதலாகிய பிரபஞ்சங்களாய்ப் பிரகாசிக்கும் வேறில்லை. அகண்டாகார ஞானம் ஒன்றேயாகும். அப் பரிபூரண ஞானமானது வியாபிக்கு மட்டும் பலவகைப்பட்ட திருசியங்கள் தோற்றும்.


 வான முதல் வாய்வனல் நீர் மண் பூதங்கள்
      மற்றுமுளசகம் புவனம் வரைகள் மேரு
 தான திசையருக்கன் மதியுடுக்கள் வேலை
      சகலவுயிர் தாபரங்கள் சராசரங்கள்
 ஊனுயிர்கணர ரருக்கர் உம்பர்தேவருள
      திலதிங் குட்புறம்புமேல் கீழெல்லாம்
 நானீயென்பது வெல்லாம் பிரமமல்லால்
      நவிலுதற்கு வேறுண்டோ நவில் நீ வேந்தே.


என்ற சுருதி வாக்கியப்படிச் சகலமும் பிரமமாம். அற்பமும் வேறேயில்லைச் சரீர முதலாகிய பிரபஞ்சங்களாய்ப் பிரகாசிக்கும். புடவையினிடத்திலே சித்திரம் ஆரோபிக்கப்பட்டது போலப் பரமாத்துமாவா யிருக்கிற தன்னுடைய சொரூபத்தில் ஜீவன் ஜகத்து ஈசுவரன் என்கிற சித்திரம் ஆரோபிக்கப்பட்டது. ஆகையால் இவ்விடம் அவ்விடம் என்று ஒரு பிரிவும் இல்லை.

 

அகண்டாகார ஞானம் ஒன்றேயாகும். அப்பரிபூரண ஞானமானது வியாபிக்குமட்டும் பலவகைப்பட்ட திருசியங்கள் தோன்றும்.


 தானுண்டாகி லுலகுண்டாம்
      தானுண்டாகி லுயி ருண்டாம்
 தானுண்டாகில் பா முண்டாம்
      தானுண்டாகில் வீடுண்டாம்
 தானுண்டாகில் பஞ்ச தொழில்

தானுண்டாகுந் தன்னை யன்றித்
 தானுண்டோ மற்றவை யதனாற்

றானேயனைத்தும் வேறில்லை.


மரவடிவத்தாற் யானை யொன்றைக் காண்போர் மிகவும் கவனித்து மரவடிவத்தினையே செவ்விதின் உற்றுக்காண்பார்களாயின் மரயானை மறைந்து நிற்கும். அம்மரத்தாற் செய்த உருவினையே யானையாகப் பாவித்துப் பார்ப்பார்களாயின் மரத்தை மூடி யானையே தோன்றும். அத்திருஷ்டாந்தம் போல, நாமரூபவிடயங்களை நோக்கிப் பார்ப்பது மனமும் பகிர்முகமுமாம். நாமரூபவிடயங்களை விட்டுப் பார்ப்பது ஞானமும் அந்தர் முகமுமாம்.

 

நாமரூபங்களில் எவ்வளவு காலம் திருஷ்டியோ (அவ்வளவு காலமும்) அறிவு தோன்றாது. நாமரூபங்களில் திருஷ்டி நீங்கினால் நமது ஆத்தும சொரூபம் தோன்றி விளங்கும். அன்றியும்,

 

வினா: - நிர் விகாரம் எப்படி யென்றால்?

 
 "பொன்னிலே பூணும் புவியினிற் கடமும்
 புணரியிற் றரங்கமும் போல"
                          என்றபடி


காரணமான சொர்ணந் தானே நசியாமல் காரியமாய் அனேக ஆபரணமாய்த் தோன்றுகிறதே நிர்விகாரம்.

 

காரியமான வில்வ விருட்சந் தானே காரணமான வில்வ விரையைத் தோற்றுவித்தாற் போலக் காரியமான நாமரூப பிரபஞ்சமாவது தன்னுடைய காரணமான சிவனைத் தோற்றுவிக்கிறது.

 

வினா: - பஞ்சகோசம் யாவை?

 

அன்னமயகோசம், பிராணமய கோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஞானமயகோசம், ஆனந்தமய கோசம் ஆக ஐந்து.

அன்னமயத்தா லமையப்பட்டது தேகம்
தேகத்திற் குட்பட்டது பிராணன்
பிராணனுக் குட்பட்டது மனம்
மனத்திற் குட்பட்டது விஞ்ஞானம்
விஞ்ஞானத்திற்குட்பட்டது ஆனந்தம்.


இவ்வைந்துங் குகை.


இவற்றிற்கு அன்னியமாயிருப்பது ஆன்மா.

 

இவ்வைந்துமே ஆன்மாவென்று பன்மதத்தர்களும் இலௌகீகர்களும் சொல்வதால் இவற்றைத் தள்ளுவ தெப்படி?

 

தூல தேகமே அன்னமய கோசமும், கர்மேந்திரியமும் பிராண வாயுவுங்கூடிப் பிராணமய கோசமும், மனமும் கருமேந்திரியமும் கூடி மனோமயகோசமும், புத்தியும் ஞானேந்திரியமும் கூடி விஞ்ஞானமய கோசமுமாம்.

 

இந்தக் கோசத் திரயமே சூட்சும சரீர மென்றும் சொல்லப்படும். காரண சரீரமே ஆனந்தமய கோசமாம்.


வினா: - அன்னமய கோசமாவது எது?

 

விடை: - தேகம் பருத்தல்.


வினா: - பிராணமய கோசமாவ் தென்னை?

விடை: - பிராணவாயு.


வினா: - மனமாவது என்ன?

 

விடை: - வாயுவுடன் கூடி தேகேந்திரியத்தை அதிட்டித்துப் பசி விஷயத்தை அறியும்.

வினா: - அந்தக்கரணங்கள் யாவை?


விடை: - மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
 

வினா: - இவற்றின் தொழில்கள் யாவை?

 

விடை: - மனம் பற்றும், புத்தி நிச்சயிக்கும், சித்தம் சிந்திக்கும், அகங்காரம் கொண்டெழுப்பும், ஆகையால் இவ் வந்தக் கரணங்களைப் பற்றிச் சுவானுபூதிச் செல்வராகிய தாயுமான சுவாமிகள்

''அந்தக்கரணமெனு மாகாத பேய்களெனை
வந்து பிடித்தாட்ட வழக்கோ பராபரமே"

 

என்று கூறுவதனால் இவ் வந்தக்கரணங்களை வெல்ல வேண்டும்; வென்றால் உடனே முத்தியாம்.

 

அன்றியும் மனத்தினுடைய விரிவே அந்தக்கரணங்களாக விரியும்; ஆகையால் மனமடங்கினால் மோட்ச முண்டாம்.


 "மனமெனும் பகைவனாங்குத் துயின்ற போதொ
 ளித்து நின்ற தோன்றலுந் தோன்றுங்
 கண்டாய் "
                                          என்றும்


திருவாரூர் தேவாரம்


''நீப்பரிய பல் பிறவி நீக்கும் வண்ண நினைந்திருந்
      தேன் காணெஞ்சே நித்தமாகச்
 சேப்பிரியா வெல்கொடியினானே யென்றும்

சிவலோக நெறிதந்த சிவனே யென்றும்
 பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்

புண்டரீக் கண்ணானும் போற்றி யென்னத்
 தீப்பிழம்பா நின்றவனே செல்வமல்கு

திருவாரூரா வென்றே சிந்தி நெஞ்சே"


என்னும் வேதவாக்கின்படி மனமடங்கினால் முத்தியாம். அன்றியும், உதானவாயுவுடன் கூடி சட்சேந்திரியத்தை அதிட்டித்து ரூப விஷயத்தை அறியும் புத்தியும், அபான வாயுடன் கூடிச் சிங்க வேந்திரியத்தை அதிட்டித்து இரசவிஷயத்தை அறியும் சித்தமும், அறிதல் உபஸ்தம் ஆனந்தித்தல் பிராணவாயுவுடன் கூடி ஆக்கிராணேந்திரியத்தை யதிட்டித்து கந்த விஷயத்தை அறியும் அகங்காரமும் ஆகிய இவற்றை யெல்லாம் அத்தியாரோப வுத்தி யென்று சொல்லப்படும்.


ஆதி ஆத்மீகமாவ தென்னை?

 

தத்தம் சரீரத்திலுண்டான வியாதிகளினாலும், இராஜாங்கத்தாலும், பசாசுகளினாலும், கள்வராலும் மனிதராலும் உண்டாகுந் துக்கம். பிறருடைய கல்வியும் சௌந்தரியமும் செல்லமுங் கண்டு பொறாமை கொள்ளல், அபிமானங் கெடுதல், வருத்தம் விளைதல் முதலியனவாம்,


ஆதி பௌதீகமாவதென்னை?


காற்று, மின்னல், இடி, சுவர் விழுதல், கல் விழுதல் இவை முதலியனவாம்.

ஆதி தெய்வீக மாவ தென்னை?

 

மாதாவின் கருப்பத்தி லிருக்குமிடத் துண்டான விசனம், பின் சநநம், நரை, திரை, யமதண்டம், நரக வேதனை முதலியனவாம். இது தேகமென்று அறிந்த அறிவே நான். என்னாலே அறிந்த தேகம் என்னை யறியாது. சடமான படியினாலே அந்தத்தேகமே நானானால் தேகம் போனால் நான் போக வேணும்; நான் போகவில்லையே.

 

விஷம் பொருந்திய பற்களையுடைய பாம்பு தான் உரித்த உரியைத் தன்னதென்று சொல்லுந் தன்மையதாகுமோ? பட்சியானது வாசம் பண்ணிக் கொண்டிருந்த குடம்பையைத் தன்னதென்று சொல்லுந் தன்மையதாகுமோ? அதுபோல நரை திரை மூப்புச் சாக்காடுகளுக்குத் தானமாயிருக்கும் தேகம் நானல்ல. தேகத்தில் உள்ள தத்துவங்களை யெல்லாம் நியதிகழித்த பின்பு எஞ்சி நின்ற அறிவு சொரூபமா யிருக்கும் பிரமமே நான் என்பதாம். சாக்கிரத்தில் அறிந்ததும், சாக்கிரத்திலுள்ள நினை வொழிந்து சொப்பனத்தின் கண்ணே யறிந்ததும் சுழுத்தியில் அறிந்ததும் தினந்தோறும் நான் அனுபவிப்பதே யாம். என்று கூறிய சீடனுக்கு விளங்கும்படி இன்னம் ஐயமற வுணர்த்துகின்றனர். சுத்தமனம் பொருந்திய அன்புடைய சீடனே கேட்பாயாக.

     

பிரபஞ்சமாக வேணுமென்று நினைத்த நினைவே அரூப நினைவானமனமும் அந்தக்கரணமுமாம்.

 

இங்ஙனம் சந்தேக சங்கற்பம் பண்ணுகிற நினைவே மனது. ஆகையால் இம்மனத்தையும், மேற்கூறிய அந்தக்கரணத்தையும் வென்றவர்களே பிறப்பிறப்பில்லாச் சீவன் முத்தர்களாம். உதாரணம்.


தாமவியாள கடர் கதை


 மனமெனும் வினையை வென்றோர் மலரடி முடிமேற் கொள்வாம்
 இனநகர ரகங்க ளென்னு மிராச்சியத் திருந்து வாழ்ந்த
 முன்முறுபாவ மென்னு மும்மதக் களிற்றினாலும்
 கனமயற் படைகளாலும் கரணமாம் பகையை வெல்வாய்.


 வாசனையினாலே இருக்கிற நினைவே சித்தம்.


 "சித்த நினைவுஞ் செயுஞ் செயலும் நீயென வாழ்
 உத்தமர்கட்கான வுறவே பராபரமே"

 

என்றபடியே சதாகாலமும் இச்சித்தம் சுத்த நினைவிலேயே யிருந்தால் முத்திப் பேறாம்.


      வாசனையை நிச்சயிக்கிற சங்கற்பம் நீங்கினால் முத்திப்பேரும்.


இங்குப்பன்னும் பலவாலென் இயம்புஞ் சுருதி யொன்று கேள்
சங்கற்பந்தான் பவபந்தம் சங்கற்பந் தீர்ந்தது முத்தி
 பங்கற்றெல்லை யழிவலைவு பவமற்றாறு மறிவுருவே
 துங்கச் செகங்களென நோக்கிச் சுகமெப்படியப்படி நிற்பாய்.

 

யான் எனதென்று தொழில் படுகிற நினைவே அகங்காரம். இந்த யான் என தென்னும் அகங்காரம் உள்ளவரையில் ஒருவன் ஞானத்தை யடையமாட்டான்.

 

ஆகாயத்தினிடமாக நின்று வசனிப்பதாகிய வாக்கும், வாயுவினிடமாக நின்று கமனிப்பதாகிய பாதமும், தேயுவினிடமாக நின்று இடல் ஏற்றல் செய்யும் பாணியும், அப்புவினிடமாக நின்று சலமலாதிகளைக் களைதல் செய்யும் பாயுருவும், பிருதிவியினிட ஆனந்திப்பதாகிய உபஸ்தமும் ஆகிய இவைகளைக் கருமேந்திரிய மென்று சொல்லப்படும். இவைகளை யெல்லாந் தெரிந்து கொள்கிற நினைவும், ஆகாயத்தினிடமாக நின்று சத்தத்தை அறியும் செவியும், வாயுவினிடமாக நின்று பரிசத்தை யறியும் தொக்கு இந்திரியமும், தேயுவினிடமாக ரூபத்தை அறியும் சட்சு இந்திரியமும், அப்புவினிடமாக நின்று இரசத்தை அறியும் சிங்கவை இந்திரியமும், பிருதிவியினிடமாக நின்று கந்தத்தை அறியும் ஆக்கிராணமும் ஆகிய இவைகளை யெல்லாம் தனித்தனியா யறிகிற நினைவிற்கே ஞானேந்திரியமென்று சொல்லப்படும்.

 

தெய்வத்தன்மை நிரம்பிய திருவள்ளுவ நாயனார் சுவையும் ஒளியும்
 ஊறும் ஓசையும் நாற்றமுமென்று சொல்லப்பட்ட தன்மாத்திகைகள் ஐந்தனது கூறு பாட்டையும் ஆராய்வான் அறிவின் கண்ணதே உலகம். என்றுகூறி யிருக்கின்றார்.

 

அவற்றின் கூறுபாடாவன. பூதங்கட்கு முதலாகிய அவைதா மைந்தும், அவற்றின் கட்டோன்றிய அப்பூதங்களைந்தும், அவற்றின் கூறாகிய ஞானேந்திரியங்களைந்தும் கன்மேந்திரியங்க ளைந்துமாக இருபதுமாம். வகை தெரிவான் கட்டென உடம்பொடு புணர்த்ததனால் தெரிகின்ற புருடனும் அதன் தெரிதற் கருவியாகிய மான் அகங்காரம் மனங்களும் அவற்றிற்கு முதலாகிய மூலப் பகுதியும் பெற்றாம்.

 

தத்துவ மிருபத் தைந்தனையும் தெரிதலாவது மூலப்பகுதி ஒன்றில் தோன்றிய தன்மையில் பகுதியே யாவதல்லது விகுதியாகாதெனவும், அதன்கட் டோன்றிய மானும் அதன் கட் டோன்றிய அகங்காரமும், அதன் கட்டோன்றிய தன் மாத்திரைகளுமாகிய ஏழும் தத்தமக்கு முதலியதனை நோக்க விகுதியாதலும், தங்கட் டோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலுமுடையவெனவும் அவற்றின்கட் டோன்றிய மனமும் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் பூதங்களுமாகிய பதினாறும், தங்கட் டோன்று வன்வின்மையின் விகுதியே யாவதல்லது பகுதியாகாவெனவும், புருடன் தானொன்றில் தோன்றாமையானும் தன்கட் டோன்றுன வின்மையானும் இரண்டு மல்லனெனவும் சாங்கிய நூலு ளோதியவாற்றான் ஆராய்தல். இவ்விருபத்தைந்து மல்லது உலகெனப் பிறிதொன் றில்லையென உலகின துண்மை யறிதலின் அவனறிவிண் கண்ணதாயிற்று.

 

 சத்தாதி விடயங்கள் ஆகாரமாய்ச் சத்தத்தைக் கிரகிக்கிற நினைவே தன்மாத்திரை.
 பஞ்சபூத ஆகாரமாய்ப் பிரகாசிக்கிற நினைவே பஞ்சபூதமென வறிக.

 

தானாகிற சச்சிதானந்த சொரூபத்தை மறந்து தேகம் தானாய் நின்ற விஷயானந்த நினைவாகிய உயிருக்குச் சுகதுக்க வேதனையும் சடாகாரமுமே தோன்றும்.

 

தானாகிற சச்சிதானந்த சொரூபத்தை நினைத்துச் சிந்தனை பண்ணின சாட்சியாய் நின்ற அறிவு என்று தோன்றுமெனில்:

 

ஞான இச்சாகிரியைகளோடே தேகமுதல் செகத்தாகாரமாய் மெய்தானாகிற அறிவானந்தமே மெய்யென்று தோன்றும்.

 

சிவானுபூதிச் செல்வர்களாகிய பெரியோர்கள் ஞானத்தை வெவ்வேறு விதங்களாகக் கூறுவர். அவ்வாறு கூறும் ஞானங்களிலெல்லாம் மகா வாக்கியம் எடுத்துக் கூறும் ஞானமே தலைமையுற்றதாகும். இத்தகைய ஞானத்தை ஆசிரியர் சிஷியனுக்குக் கூறுகின்றார்.

 

இருக்கு, யசுர், சாமம், அதர்வண மென்கிற நான்கு வேதங்களும் அற்ப சுருதி வாக்கிய மென்றும், பிரபல சுருதிவாக்கிய மென்றும் இருவகைத்தாம். அற்பச் சுருதி வாக்கியம் கருமானுஷ்டானத்தைப் புகலும். பிரபலச் சுருதி வாக்கியம் அத்யாத்மத்தைக் கூறும். இவை முப்பத்திரண்டு உபநிடதங்களாயிருக்கும். இது நான்கு வாக்கியங்களைப் பிரதி பாதிக்கும்.

 

அவை, பிரக்ஞானம் பிரமம், அகம்பிரமாஸ்மி, தத்துவமசி, அயமாத்மாப்பிரமம் என்பனவாம்.

 

இந்நான்கு வாக்கியங்களினும் தத்துவமசி மகாவாக்கியத்திற்கே மகாவாக்கிய மென்று பெயர்.
 

அஃதெங்ஙனென்னில் நான்கு வாக்கியத்தி னருத்தமும் இவ்வாக்கியத்தி னிருக்கையாலும் அந்வயபதம் இதனிடத்தே யிருக்கையினாலும் அவாங் மனோகோசரமாயிருக்கிற வஸ்துவை கரதலா மலகம் போலக் காட்டுகையினாலும், நான்கு வருணத்தாலும், மூன்று மதத்தாலும், மூன்று இலட்சணத்தாலும் சொல்லிற்று. ஆறு குறியும் எட்டு இயல்புமா யிருக்குமென்றும் அறைந்தது.


அவை யெவையென்னில் - தத் - துவம் - அ - சி - இவைகளாம்.
மூன்று பதமாவன் - தத்பதம் - தொம்பதம் - அசிபதம் இவைகளாம்.
மூன்று இலக்கணமாவன. சீவ - பர - ஐக்கியம் இவைகளாம்.

 

ஆறு குறியாவன். வடிவு, நுண்மை, மாப்பொருளுடைமை, நிறைவு, இரண்டற விளங்கிய முடிபு என்றும், பழமை யென்றும், புதுமையுமாம்.

 

எட்டியல் பாவன - கேள்வி பிறந்ததாதல், தரிசன மிறந்ததாதல், வீரமிறந்த தாதல், எல்லையில்லாத ஆனந்த முடையதாதல், எல்லையில்லாத ஞானமுடைய தாதல் காலமிறந்த தாதல், தேசமிறந்த தாதல், திசையிறந்ததாதலாம்.

இப்படி மகாவாக்கியத்தில் சொல்லப்பட்ட வஸ்து எப்படி விளங்கு மென்னில் ஆசாரியர் திருவருளினாலே சொல்லுகிற சிரவணம், மனனம், நிருத்தியாசனம், என்று மூன்று வகையினாலே விளங்கும். இந்த மூன்றுவகையும் விசாரிக்குமிடத்து ஸ்தூல சிரவணாதி மூன்றென்றும், சூட்சும சிரவணாதி மூன்றென்றும் இரண்டு விதமாயிருக்கும்.

 

ஆகையால் இத்தகைய பிரம்மத்தை அறிந்து கொள்ளும்படி ஆசிரியர் உபதேசித்த மொழியின்படி மாணாக்கன் அறிவுமயமாய் நின்று பார்க்க எங்கும் வியாபித்துள்ள பிரமத்தைத் தன்னுள்ளே அறிந்து தெரிந்து ஆனந்தமயமாயினான்.


 தஞ்சமாங் குருவுஞ்சொன்ன தத்துவ வழிதப்பாமல்
 பஞ்சகோ சமுங்க டந்து பாழையுந் தள்ளியள்ளில்
 கொஞ்சமா மிருப்பும் விட்டுக் கூடஸ்தன் பிரமமென்னும்
 நெஞ்சமு நழுவி யொன்றாய் நின்றபூ ரணத்தைக் கண்டான்.


என்பதை யனுசரித்து ஆசிரியர் பக்குவமுடையோனுக்கு உபதேசித்த மாத்திரத்தில் உடனே நிட்டைகூடி ஞானாசாரியர் உரைத்த உபதேச மொழிபினை ஆதரவாகக் கொண்டு போகவாசனையை மறந்து தற்போத முனைவறம் விடமே மேலான தென்றும், அந்நிலையே திருவருளெய்துதற் கிடனாமென்றும் அவ்விடத்தே நிட்டையும் கைகூடி வருமென்றும் அவ்வாறிருந்து தன்னிலையினையு மறந்த அவசரத்து அருண்மயமா மென்றும், அத்தகைய ஆனந்தத் தழுந்துகின்றவரே பிறவாச் செல்வத்தை யடைந்தவ ரென்றும் கூறப்படுகிறது.


வினா: - சுவாமிகளே! தாங்கள்,


 "சீரொளியாகிச் சிற்சுகக் கடலாய்ச் சித்தசித் திரண்டற நின்ற
 பாரொளியாகிப் பார்முதற்பூதப் பகுதியா முச்சுடர் களும் போய்
 ஏரொளியாகி யெதிரிறந் தொன்றா யேகமா யெல்லையொன் றில்லாப்
 பேரொளியாகி யகண்ட பூரணமாய்ப் பேச்சிறந் திருப்பதே பிரமம்.''


என்ற கொள்கையின்படி பிரமமாயிருக்கிற தங்களுக்குக் காலத் திரயத்திலேயும் சரீர மில்லை. தாங்கள் தற்பா விசும் பாயும், அளவில்லாச் சிற்சுடராயும், அலையிலாக் கடலாயும், நிரதிசய வடிவாயம், பகலிர வில்லாதவராயும்


''சிவந்தவிர் விறந்து செய்கைசெய் விக்கை சினம்பல கோடிகளிறந்து
 பவந்தலிர் விறந்து செகம்பிரித் தறிந்து பகலிரவென்பது மிறந்து
 தவந்தவிர் விறந்து கவடுற லிறந்து தனிமையாய்த் தமம்சம் மிறந்தே
 அவந்தவிர் விறந்து நிரதிசை வடிவா யசஞ்சல மறிவதா னந்தம்"


என்னும் பெற்றிமைக் கேற்ப, ஆனந்தமயமாய் இருந்து விளங்குகின்றீர்கள். இங்ஙன மிருக்கும் தாங்களே திருவிளையாட்டினாலே ஆனந்தமயம் நீங்கிச் சாக்கிரத்தில் புருவ மத்தியில் நின்று இராஜ வோலக்கம் போலச் சதுரங்கபலத்துடனே யிருந்து, சத்த, பரிச, ரூப, ரச கந்தத்துடனும், வசன, கமன,தான, விசர்க்கம், ஆனந்தமென்னும் இவைகளுடனும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இந்நாலுஞ் சேர்ந்த கருவிகளுடன் சந்நிதியில் சேவிக்கத்தான் பராசக்தி அருளாலே வியக்தனாய்ச் சுகதுக்கங்களை யறிந்து நின்றும், சொப்பனத்தில் கருவிகாணாதிகளோடு கண்டத்தின் கண்ணே நின்றும், சுழுத்தியில் சீவாத்மாவைக் கூடிச் சுவாசய இருதயத்திலே நின்ற போது கண்டவை கேட்டவை யொன்றும் பிறர்க்குச் சொல்லப்படாத நிலைமையின் கண்ணே நின்றும், துரியத்தில் சுழுத்தியை விட்டுக் கரண மொன்றுடனே சீவாத்மா நாபித் தானத்தில் நின்றபோது உச்சுவாசம் நிச்சுவாசங்களைப் பிறப்பித்து நின்றும், சாக்கிர ஆகாரமும் சொப்பன வறிவும் சுழுத்தி மயக்கத்துவமும் மூன்றும் கெட்டுத் தானாய் விளங்குகிறீர்கள். தங்களுக்குச் சங்கற்ப விகற்பத்துவம் விட்டுப் போன படியினாலே ஸ்தூலமான நினைவும், சூட்சுமமான கனவும், காரணமான அறியாமையும் விட்டுப்போய்ச் சமாதியிலிருந்து,


''சுட்டு தலறவே துரியமுங் கடந்து சூனியா சூனியந் தனிலே
 எட்டுதலறவே ஏகாமா யொன்றா யெங்கணு மகண்.... பேரறிவாய்க்
 கட்டுதலறவே கரிவடி வமும் போய்க் ககன மொத் தசஞ்சல நாமாய்த்
 தட்டுதலறவே தனையுணர் வதும் போய்த்தா னிறந் திருப்பதே சமாதி''

 

என்று திருவாய் மலர்ந்தருளியபடியே விளங்குகின்றீர்கள்.

 

அறிவே அறியாமை அறிவிற்கே அறியாமை உண்டு, தங்களுக்கில்லையே மத்தியில் சித்து விளங்கினால் இறந்தகால் அறியாமையும் எதிர்கால விஷயமும் இல்லாமல் நிகழ்காலத்தில் பூரணமாய் மூன்று காலமுந்தானாய் விளங்குகிற தங்களுக்கு என்ன குறை இருக்கப் போகிறது?

 

கண்ணாடியில் கண்ட பிம்பம் சுபாவ முகத்தைக் காட்டுவது போல சூட்சும சரீரத்தில் பிம்பித்த பிம்ப வியஞ்சகம் ஓங்கிய சைதன்னியத்தை விளக்குகையால் சூட்சும சரீரமில்லாத தரிசன துரியமாய் விளங்கா நின்ற தங்களுக்கு என்ன குறை யிருக்கப் போகிறது? மத்திய கதத்தில் குருவடிவே பிரத்தி யட்சமாய்ப் பூரணம் தானாக விளங்குகிறீர்கள். இகத்தில் பிரத்தியட்சம் வரும் போதும் தாங்கள் பூரணம். அகத்தில் பிரத்தியட்சம் வரும் போதும் தாங்கள் பூரணம். எந்தெந்தப் பிரத்தியட்சம் வரும் போதும் தாங்கள் பூரணமாய் உதயாஸ் தமமில்லாமல் அறிவு அறியாமைகள் இல்லாமல் சொச்சமாய் விளங்குகிறீர்கள். தாங்களே ஜெகத்தாய் ஜெகத்தே தாங்களாய் விளங்குகிற தங்களுக்கு ஒரு குறைவுமில்லை. சொச்சமாய் விளங்குகிறீர்கள். எங்கே பார்த்தாலும் தான் தான் என்பது எப்படி யென்னில், விஷயகேவலத்திலும் தான் தான். சொரூப கேவலத்திலும் தான் தான். நடுவேவிளங்கினாலுந் தான் தான். இதற்கு விஷய கேவலம் வெளியில், ஸ்புரிப்பு உள்ளே, சொரூப கேவலம் மத்தியிலென வறிக.


வினா: - பூரண விருத்தியாவது எப்படி?

 

விடை: - தானா யிருக்கிற பூபணத்தை விளக்கமாகும்படி அங்கங்கேதன்னைக் காண்கிறதே பூரண விருத்தியென வறிக.

வினா: - நான் இருப்பது எப்படி?

விடை: - சழுத்தியில் சித்துத் தானாயிருப்பது. சுகத்திலும் சித்திலும்சத்துத் தானா யிருப்பது என்வறிக.
 

வினா: - அறிவு திசை, அனுபூதி திசை எப்படி?

 

விடை: - அனுபூதி திசை போதம் இல்லை. பகுக்கும், அறியும். ஆனால் பகுத்த தில்லை, அறிந்ததில்லை.
 

வினா: - ஈஸ்வா திசை யெது?


விடை: - போதத்தோடு கூடி யிருக்கிறதே ஈஸ்வர திசையென வறிக.
 

வினா: - விளக்கமும் மாயையும் எது?

 

விடை: - இருக்கிறது அறிய வந்ததென்றால் விளக்கம். அறிந்ததென்றால் அறிகிறதும் இல்லை. அறியவில்லை யென்று ஒருபடமுமில்லை. நான் அறிந்தேனென்றால் மாயையாயிற்றென வறிக.

 

வினா: - சது அதுவாய்க் கெட்டுப் போகத் தான் தானாய் விளங்குவதுஎப்படி?

 

விடை: - பாப்பிரகாச மனோவிருத்திப் பகுப்புடனே கெட்டது. தன் பிரகாசமும் தானும் ஒன்றாய் விளங்கிப் போயிற்றென வறிக.

 

வினா: - சிருஷ்டி லயம் எப்படி?

 

விடை: - தான் விளங்கினால் செகம் இல்லை. லயம் விருத்தியானால் சிருஷ்டியான சகம் உண்டென வறிக.
 

வினா: - தன்னை விசாரிக்க வந்தது எது?

 

விடை: - பாவம் வந்தது. தன்னை விசாரிக்க வந்ததேயல்லாமல் பிரபஞ்சமாய்ப் போக வந்ததல்லவென வறிக. தானாகயிருந்தது அறிய வந்தது.

 

வினா: - தானா யிருந்தாலும் தானாகவே யிருந்து அறியவந்தாலும் தான்தான் என்பது எப்படி?

 

விடை: - இது வரைக்கும் தேகம் தெரியாது தானாயிருந்தது. இப்போது தெரிகிறதென்றால் தெருவில் தானில்லாவிட்டாலும் தெரியுமா தெரியாது. தானாபிருந்தாலும் தான் தான் அறிந்தாலும் தன்னைத் தான் அறிகிற தென வறிக.


வினா: - உண்மை நிட்டையாவதெது?

 

விடை: - தோன்றிக்கொண்டிருக்கும்போது தானே தோன்றாமலிருக்க வேணும்.


வினா: - அது எப்படி?

 

விடை: - ஞானம் விளக்கமாகாமுன் அனுபூதி தோன்றாமலே தானாக விருப்பது. அனுபூதி விளக்கமாகவும் அனுபூதியே தானா யிருத்தலு முண்டென வறிக.


வினா: - அனந்தானந்தங்களும் ஒன் றென்ப தெப்படி?

 

விடை: - பிரம்மா முதல் பிபீலிகாதி பரியந்தம் விருத்தாமிசம் அனந்தம். அமிர்தாம்சம் ஒரே பிரகாசமான வேகமென வறிக.


வினா: - தான் விளங்குவ தெப்படி?

 

விடை: - ஒரு பதார்த்தத்தினிடத்தில் விருப்பும் வெறுப்பும் அற்றவர்களா யிருக்கிற சகசஞானிகள் எக்காலத்திலும் தன்னையே கண்டுகொண் டிருப்பார்கள்.

 

தருமக் கடலே குருபரனே சாற்றும் சதுர்மா மறைப்பொருளே

உருவா யருவா யருவுருவா யோங்கு முமையாள் சிறுவோனே
விருப்பு வெறுப்பு மற்றவர்கள் வேண்டும் பரமானந்த சுகம்
விரும்பிக் கமல நாதனெனும் வீண னலைந்தாற் றாராயோ.


வினா: - தன்னை யறிந்தாரின் தன்மை யெவ்வா றிருக்கும்?

 

விடை: - பாலை நிலம் நெய்தலாகப் பாடுவதும், மரித்தவன் பிராணன் பெற்றெழுந்திருக்கும்படி பாடுவதும், காலனை யேவி முதலை பிடித்து மரித்த புதல்வனை அழைப்பிப்பதுமாகிய பதியின் செய்கையைப் பெற்றிருப்பார்கள்.


வினா: - தானாயிருப்பது ஜெகமாய்ப் போவது எப்படி?

 

விடை: - தான் விளங்கினால் சிருஷ்டி யில்லை. தான் விளங்காமல் விருத்தியாய்ப்போமானால் சிருஷ்டியுண்டென வறிக.


வினா: - உள்ளேயும் வெளியிலேயும் மத்தியிலேயும் அனுபவம் எப்படி?

 

விடை: - உள்ளே விளக்கமுந் தானாயிருப்பது; எல்லாவற் றுள்ளும் வியாபகவிளக்கந் தானா யிருப்பது; மத்தியிலேயும் தானா யிருக்கிறதென வறிக.


வினா: - எல்லாவற் றுள்ளும் தான் விளங்குவ தெப்படி?

 

விடை: - அஞ்ஞானமானால் எதிர்ப்பட்டது ஆகாரம். நடுவே ஆகாரம் தானாயிருக்கும் கருத்து. அறிவானால் எதிர்ப்பட்டதும் அறிவு. நடுவே அறிவு தானாயிருக்கும் கருத்து. ஆகலாதமானால் எதிர்ப்பட்டதும் ஆகலாதம். நடுவே ஆகலாதம் தானாயிருக்கும். விளக்கமானால் எதிர்ப்பட்டதும் விளக்கம். நடுவேவிளக்கம் தானா யிருக்கும். தானானால் எதிர்ப்பட்டதும் தானா யிருக்கும். நடுவேயும் தானா யிருக்குமென வறிக.


வினா: - விசேடமும் அன்னியமு மாவதெது?

 

விடை: - அதிட்டானத்தில் அப்போது ஆதாரத்துத் தடைவிட்டது. அப்போதுஅதிட்டான மில்லையென வறிக.


வினா: - சாமானியமும் விசேஷமும் விளங்குவ தெப்படி?

 

விடை: - விசேஷத்தில் சாமானியம் விளங்கினால் விசேஷமில்லை. விசேஷத்தில்சாமானியந் தானாக விருக்கிறதென்று போதம் வரலாகாது. போதம் வந்தால் தான் தான் விளங்கும். போதத்தில் தான் தான் விளங்குகிறபடியினாலே போதம் இல்லையென வறிக.


வினா: - விருத்தத்துக்கு மத்திய கெத மெது?

 

விடை: - உள்ளே அறிவிக்கும். வெளியில் ஆகாரத்துக்கும் மத்தியகெதம் ஆகலாதமென வறிக.

 

வினா: - அவிருத்தத்துக்கு மத்திய கெத மெது?

 

விடை: - உள்ளே விளக்கத்துக்கும் வெளியே ஆகலாதத்துக்கும் மத்திய கெதம்
நடுவனைத் தானென வறிக.

 

      தானே தானா யிருக்கத் தன் வியாபகம் தானாயிருக்கச் சேதனவியாபாரம் தானாய் இருக்கும். பலவாய் வியாபகத்தைப் பார்க்கும் போதுஆகலாதம் விசேஷத்தில் விளங்கும். பாராவிடில் தானா யிருக்கும் ஆத்மா வென வறிக.


வினா: - அசைவாவ தெது?

 

விடை: - பூரணமென வறிக.


வினா: - தீர்வையான தெது?


விடை: - அறியவில்லை யென்றும் அறிந்தோமென்றும் வரப்போகாதென வெறிக.
 

வினா: - வேத்திய மாவதெது?

 

விடை: - அனுபூதி விளைந்தால் அறிவு தானாய்ப்போம். அறிவும் ஆனந்தமுமே சாஸ்திரங்கள் தோறும் விளங்குவது. ஏகதேசமாய் விளங்கா நின்ற சாம்பிரதாயத்தில் தான் விளங்குமென வறிக.

 

வினா: - பாவனை முதிர்ந்தவர்களின் நிலை எப்படி யிருக்கும்?

 

விடை: - கண்ணாடியிலே தோன்றின பட்டணம் போலச் சச்சிதானந்தத்திலேசகங்காணும்.

 

வினா: - பிறப்பிறப்பு எவர்க்கு நீங்கும்?

 

விடை: - அவிச்சையி னீங்கி மெய்யுணர் வுடையராயினார்க்கு அம்மெய்யுணர்வு பிறப்பினை நீக்கி வீட்டின்பங் கொடுக்கும்.


      வினா: - எவர்க்குப் பிறவித் துன்பங்கள் நீங்கா?

 

விடை: - இருவகைப் பற்றினையும் இறுகப் பற்றிவிடாதாரைப் பிறவித் துன்பங்கள் இறுகப் பற்றி விடா.

 

வினா: - சுத்தமாவது எப்படி?


விடை: - அறிவறியாமை இல்லாதது சுத்தம்.
 

வினா: - அதெப்படி?

 

விடை: - அறியாமையா யிருந்தால் அச துச்சடமா ருக்க வேணும். அசத்தாகிய விவகார மிருக்கிறது. அறிவா யிருக்கிறதே சுத்தம். அறிவா யிருந்தும், அறிவா யிருக்கிறோமென்று பேதமில்லை. அதிவறியாமையா யிருந்தும் சுத்தமா யிருக்குமென அறிக.

 

வினா: - அனேகமாவதும் ஏகமாவதும் எப்படி?

 

விடை: - மத்தியந்தான் விளங்கினால் அனேக மில்லை. ஒன்றை யொன்று அடக்கிக் கொடுக்கிற மாயை விளக்கினால் அனேகமாமென வறிக.


      வினா: - ஈசுவா துரியமும் சீவ துரியமும் எப்படி?

 

விடை: - அனேகத்தில் அனுபூதி யொன்றா யிருக்கிறது. ஈசன் ஒன்றான அனுபூதியைப் பலமாய்க் காண்கிறவன். சீவன் அறிவனுபூதி. சீவ துரியன் அனுபூதி. அறிவு ஈச துரியமெனறிக.



பத்தர் முத்தர் முன்னானோர் பரவு முமையாள் திருமகனே
சித்த முருகத் திரிகரணந் தானுமுருகச் சேர்ந்தமனம்
நித்தமுருக நிமலனருள் நேயமுரு காவென் றுனையே
கத்தும் பரிசு தந்திடுவாய் கருணா நிதியே காங்கெயனே.

 

வினா: - சீடன் சுவாமிகளே! நான் சமாதியில் நிற்கும் போது என்மனம் அலையில்லாச் சமுத்திரம் போலவும், காற்றுச் சேராத தீபம் போலவும், தராசு முனையைப் போலவும், நிலையாகிய சமாதியில் அழுந்திக் கிடந்துபேரின்பப் பேர்றைப் பெறும் மார்க்கத்தைத் திருவாய் மலர்ந்தருளும்படியாகப் பிரார்த்திக்கிறேன்.


விடை: - அன்புள்ள மாணவனே! கேட்பாயாக.


 "காற்றினை மாற்றிக் கருத்தைக் கருத்தினுள்
 ஆற்றுவ தாற்ற லென்றுந் தீபற
 வல்லாத தல்ல வென்றுந் தீபற"

 

என்று பெரியோர் கூறியபடி இடை பிங்கலைகளால் பிராணவாயு நின்று சலிக்குமளவும் மனமும் ஆன்மாவும் ஒக்கநின்று சீவிக்கு மாகையால் இப்படிச் சலித்துப் புறப்படுகிறவாயு பன்னிரண்டு அங்குலமும் புறம்பே சலியாமல் உள்ளே தானே சுவறும்படி குருவசனத்தினாலே நின்று சாதிக்கமனச் சலிப்பு நீங்கும். இப்படிச் சலிக்கும் விசார மற்ற போதே அவிசாரத்திலே செல்லும். ஆகையால் இந்த விசாரத்தில் விழாமல் தன்னுடைய கருத்துக்குக் கருத்தாய் நிற்கிற தம்பிரானார் திருவடியில் கூடியிருந்து இளைப்பாறுகிறதே பொருள். இப்படிக் கூடுகிற தொழிந்து வேறொரு பிரகாரங்களால் கூடுகிறது என்றும் நிலை நில்லாது.

 

வினா: - ஆசாரிய சுவாமிகளே! தேவரீர் உபதேசித் தருளிய உபதேசவாக்கியத்தைக் கடைப்பிடித்து அடியேன் நித்தமும் நிட்டையிலிருந்து வருகிறேன். ஆயினும் அந் நிட்ட எனக்குப் பிறவா நெறியைப் பயக்கு மென்பதை நான் எங்ஙனம் உணர்ந்து கொள்வது?
 

விடை: - அடிக்கடி நினைக்கின்ற எண்ணங்க ளொழிந்து நின்றவிடமே அருள் நிலையாகும். அவ்வருள் நிலையில் நின்றால் உடனே திருவருள் சித்தியாம். தன்மயமா யிருப்பதுவே ஆனந்தம். அவ்வானந்த மயத்தையடைந்தவர்களே பிறவாமையாகிய பெருஞ் செல்வத்தைப் பெற்றவர்கள். ஆகையால் இதனை விடுத்து வீடென்றும் புதல்வர்களென்றும், உறவினரென்றும் சொல்லப்பட்ட அசுத்த வாசனையை ஆசாரியர் உபதேசித்தருளிய ஒரு மொழியைக் கொண்டு நோக்குவாயாக. இம்மொழியே மலத்தைப் போக்கும். இம்மொழியால் நாம் உன்னைக் காண்பிக்க நீ கண்டனை. கண்ட *தனையே பொற்சபை யென்றுன்னித் திருவருளே இடமாகக் கொண்டு நிலைபெற்று நில்.

 

குரங்கைப்போல பிடித்ததைப் பற்றாகக் கொண்டு நித்தமும் இராப்பகலில்லாத இடமே உனக்குத் தகுந்த விடமென்று யாவரும் உணர்ந்து கொள்ளும்படி பறை சாற்று. ஒரு சொல்லே பல சொர்களுக்கும் இடந்தரா நிற்கும். அந்த ஒரு சொல்லே மலங்களைப் போக்கும் எனச் சொன்ன ஆசிரிய வசனமே மலைக் குறி போல்வது. மற்ற வாசகங்களெல்லாம் வகுத்த இடமில்லாமல் வட்டாடலை யொத்திருக்கும் இவ்வாறாக உனக்குக் கருப்பவாச மென்கிற சொல்லேயில்லை கணுவுக்குக் கணு மதுரக்கிற கரும்பை யொத்த சொற்களைக் கொண்டே உன்னைக் காண்பிக்கவும் நீ தெரிசித்தனை. இப்படியாயின் பின் உனக்குப் போதித்தற்குரிய சொற்களிலை. ஆதலால் இனி, உன்னை விட்டு நீங்காத தற்பரமாகவும் இன்பப் பொற்சபையாகவும் நிற்கக் கடவாய்.

 

வினா: - ஆசிரியரே! ஆன்மாக்கள் தீட்சையும் சிவஞானமும் பெற்றுநிட்டை சாதித்து வருகையில் தேகம் நழுவிற்றானால் பின்னர் எங்ஙனமாம்?

 

விடை: - இப்பொழுது இந்தத் தேகத்திலே நிற்கும் போதே கூடின அசேதனமான புண்ணிய பாவங்கள் இரண்டும் இவன் பின்னொரு தேகத்தை எடுத்த பொழுதே ஒக்கச் சென்று கூடாநிற்கும். ஒருவன் சிவ தீட்சையும் சிவஞானமும் பெற்றுத் தெளிந்திருக்கும் போதேயும் முன்பு போல உயிர்ச்சார்புகளின் பற்று விடாமல் ஜனனங் கூடிற்றேனும், கர்த்தாவாகிய சிவனும் இவனைக் கைவிடாமல் முன்புண்டான மனம் பற்றுகைக்குத் தக்கவற்றைக் கூட்டித் தொலைப்பித்து, முன் ஜனனத்திலே சாதித்த குறையிலே வந்து எடுத்துக் கொண்டு நிட்டையிலே கூட்டிச் சாயச்சியத்தைக் கொடாநிற்பன். இவன் காருண்ணிய சக்தியினை எப்பொழுதும் தன்னிடத்திலே உடையனாதலால் என்க. இதைப்பற்றி - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்,


 இன்றிங் கசேதனமா மிவ்வினைக ளோரிரண்டும்
 சென்று தொடருமவன் சென்றிடத்தே - என்றுந்தான்
 தீதுறுவ னானாற் சிவபதிதான் கைவிடுமோ
 மாதொரு கூறல்லனோ மற்று


என்று கூறியதைக் கொண்டு தெளிக.

 

வினா: - ஆசிரியரே! இறைவன் செய்தருளும் பஞ்ச கிருத்தியத்தினால்உயிர்களுக்கு என்ன பயன்?

 

விடை: - உயிர்களுக்கு விஷய அறிவென்றும் சொரூப அறிவென்றும் இரண்டு கண்டு. இவ்விரண்டறிவையும் ஆணவமலமானது விடய ஆவாரகமென்றும், சொரூ ஆவாரக மென்றும் இரண்டு கூளகின்று மரைக்கும். இவ்விருளினால் அவ்வுயிர்கள் தம்மையும், பாம சிவத்தையம், சிறிதேனும் அறியா. இதற்குத் திருஷ்டாந்தம் கூறுவாம்.
பித்த மயக்குள்ளவன் விஷத்தினாலே மூர்ச்சித்துள்ள போது ஒருவன் வந்து கருணையினால் முன்னிருந்த பித்தமயக்கிற்குத் தகுதியான மருந்து கொடுத்து, அம் மயக்கத்தைத் தவிர்த்துச் சுகம் பொருந்தியிருக்கும்படிச் செய்யுந் தன்மை போல இருளிற் பொருந்தியிருக்கும் உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களை மாயையினிடமாகக் கொடுத்து இருளாகிய விடய ஆவாரகத்தை முன்னம் நீக்கிச் சுருதியினாலும் குருவினாலும் அனுபவத்தினாலும் சொரூப ஆவாரகத்தையும் மாற்றிச் சுகத்தைத் தந்தருளுவன்.

 

வினா: - ஆசிரியரே! உயிர்களும் உயிர்களை மறைக்கும் ஆணவ மலமும் ஒரு தன்மைத்தா யிருக்கக் கடவுள் விஞ்ஞான கலர்களுக்கு உடல் முதலியவைகளைத் தந்தது போலப் பிரளயாகலர் சகலர் என்னு மிருவர்களுக்கும் தாராதது ஏன்?

 

விடை: - உயிர்களும் ஒரு தன்மையே, அவ்வுயிர்களை மறைக்கும் ஆணவ மலமும் ஒரு தன்மையே, இறைவனும் பட்சபாத மில்லாதவனே. ஆனால் விஞ்ஞானகலர்களுக்கு உடல் முதலானவற்றைத் தந்தது போலப் பிரயாகலர் சகலர் என்னு மிருவர்களுக்கும் தந்தால் என்ன குற்றமெனவினாவுதற்கு உத்தரம் கூறுகின்றாம். இயல்பான கண்களில் படலம் மூடியிருக்குமானால் அந்தப் படலமாகிய பிணியின் குணங்களை நன்கறிகின் றவன் தயையினால், மணியினாலும் நல்ல மருந்தினாலும் ஊசியினாலும் கண்களை ஒன்றும் செய்யாமல் படலத்தை நீக்குவான். அதுபோல உயிர்களை மூவகையாகச் செய்து பரமசிவன் ஆணவ மலத்தை நீக்குவார்.

 

வினா: - ஆசிரியரே! உடலோடு கூடியிருக்கும் உயிர்களிடம் இறைவன் பஞ்சகிருத்தியங்களை எங்ஙனம் நிகழ்த்துகின்றனன்?

 

விடை: - இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கச் செய்தல் திதியாம். உயிர்களின் கண்களுக்குத் தோன்றுபவைகளை யெல்லாம் ஒடுக்கதல் சங்காரமாம். மிகுந்த சிருஷ்டி திதி சங்கார மென்பவைகளுக்குள் பலநாள் உழன்றும், வெறுக்காமல் ருசிக்கும்படிச் செய்தல் திரோபவமாம். இவ்வாறு அநித்தியமும் நித்தியமுமாகிய பொருளைப் பகுத்துத் தெரிவிப்பது அனுக்கிரகமாம். தொடர்ச்சியுள்ள சடம் சித்து என்பவைகளுக்கும் விசாலமாகிய தொழிலும் அறிவும் தோன்றும். இதனாலன்றோ ஆன்றோர் எல்லாம் பரமசிவம் அசைத்தால் அணுவும் அசையுமென்று கூறுகின்றனர்.

 

வினா: - ஆசிரியரே! உயிர்களுக்கு இறைவன் ஐந்தவத்தையிலும் முத்தொழில் இயற்றும் முறைமை யெங்ஙனம?

 

விடை: - சகலாவஸ்தை சிருஷ்டி, கேவலாவஸ்தை சங்காரம், சுத்தாவஸ்தை திதியாம். சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீத மென்னும் இவற்றுள் முதலிற் சொல்லிய சாக்கிராவஸ்தையிலும் சொப்பனாவஸ்தையிலும் சுகமும் துக்கமு முண்டாம். சுழுத்தி முதலாகிய மூன்றவத்தையிலும் துக்கமே யுண்டாம்.

 

வினா: - ஆசிரியரே! இறைவன் உட்கரணங்களிடத்து ஐந்தொழிலியற்றும் முறைமையினைத் தெரிவிக்கப் பிரார்த்திக்கின்றேன்.

 

விடை: - சாக்கிராவஸ்தையில் ஐம்புலன்களை யுண்ணும் பொழுது பஞ்சேந்திரியங்களிலும் பஞ்ச கிருத்தியங்களும் வந்து பொருந்தும். அவைகளை இங்குச் சொல்லு மிடத்தில் முன்னாகச் சொல்லுகின்ற இந்திரியத்தைப் பொருந்தினதே சிருஷ்டி, மிகுந்த விஷயத்தை அருந்தினதே திதி. அவ்விஷயத்தை அறியுந் தன்னை வேறு பிரித்துச் சொல்ல வொண்ணாமல் அதில் அருந்துதல் சங்காரம். இவ்விடயங்களை ருசிப்பித்தலே திரோபவம். இனிதன்று என வுணர்தலே அனுக்கிரகம்.

 

ஏதாவது ஒரு பொருளை நினைந்து எழுதல் சிருஷ்டி. அதனை நினைந்து மகிழ்ச்சி யடைதல் திதி. அந்தப் பொருளை மறந்திருத்தல் சங்காரம். அந்தப் பொருளின்னதென்று ஞாபகத்திற்கு வராமல் மயங்குதல் திரோபவம். பின்பு அந்தப் பொருளைத் தெளிந்தறிதல் அனுக்கிரகமாம். இவ்வாறு ஒவ்வொரு கருவிகளில் உயிரானது கலந்திருக்கும் போதெல்லாம் பரமசிவனுடைய பஞ்ச கிருத்தியமு முள. முன் சொல்லிய முறைமை அறியுமிடத்தில் கரணங்களினிடத்தில் மூன்றும் உயிர்களினிடத்தில் இரண்டுமாகப் பொருந்தும். எவ்வாறெனில் முன்னம் பஞ்ச கிருத்தியங்களும் உடலுக்கும் உயிருக்கும் சொல்லியதுபோல வென வறிக.

 

ஆசிரியரே! கடவுளின் அடியைச் சேரும் சுத்த நிலையைக் கூறும்படிப் பிரார்த்திக்கின்றேன்.

 

பரமசிவத்தின் திருவடியைச் சேரும் நிலை காரண பஞ்சகிருத்தியத்தால் அறியும் முறைமையினை யுடையதாம். இம்முறைமையினை இப்போதே சொல்லுகிறோம். ஆனால் நாம் முன்பு சொன்னவைகளைக் கேட்டறிந்து கொண்டது போல அறிவதல்ல. மற்றெவ்வா றென்னில், இது முறைமையினையுடைய சமாதியிலிருந்து அறியத்தக்கதாம். அவ்வாறறிந்தால் நல்ல சுத்த நிலை பொருந்தும். இச்சுத்த நிலை கிரமமாக நடந்து விளங்கு பகுமானால் ஒல்பரம சிவத்தின் திருவடியும் ஆனந்தப் பேறும் தெரிதலாம். அதனால் முன்பு பொருந்திய துயரங்களெல்லாம் நீங்கிவிடும் என்க.

 

மேற்கூறிய சமாதியிலிருந்து அறிவது எவ்வாறென்னில் ஆறுவகையாகிய பயனில்லாத தொழில்களை விட்டு இத்தேகத்தின் மேலும் போகங்களின் மேலும் உள்ள பற்றுக்க ளெல்லாம் சேராமல் கைவிட்டுத் தனியாகிய ஏகாந்தங் கைக்கொண்டு பொருந்திய இடத்தில் ஒன்றினைச் சாராமலும் உடலானது வளையாமலும் சரீரத்துக்குப் பொருந்திய சுகாசனத்தைச் செவ்வையாய்ப் பொருந்தி இறந்த காலத்திலும், நிகழ் காலத்திலும், எதிர்காலத்திலும் வருகிற பயனைக் கருதாமலும் ஏகாக்கிர சித்தமாய்த் தத்துவங்களைச் சடமென்றறிந்து தேகியைக் காட்டியது திருவருளென்று முறைமை கூறுகின்றது.

 

பிருதிவி தத்துவ முதல் நாததத்துவ மீறாகச் சொல்லப்பட்ட முப்பத்தாறு தத்துவங்களுக்குள் ஒவ்வொரு தத்துவத்துக்கும் உருவமும் தரிசனமும் சுத்தியும் இவைகளென்றறிந்து அவைகளை யெல்லாம் ஒவ்வொன்றாக நியதி செய்து உயர்ந்து நாத தத்துவத்திலேறி சித்தக்கருவிக ளென்னாற் காணப்பட்டதனால் அவைகள் சடமாம். இவைகளைக்கண்டு கழன்றவன் நான். இவ்வாறு நான் காணும்படி காட்டியது பரமசிவத்தின் திருவருளென்றறிந்து அவ்வருளைப் பொருந்தக் கடவை. அதனில் பரமசிவனது பஞ்சகிருத்தியங்கள் நடக்கு முறைமையைக் கேட்பாயாக.


தத்துவ நியதியில் பஞ்சகிருத்தியம் நடக்கு முறையைச் சொல்லுகின்றது.

 

மேற்கூறிய தத்துவங்கள் ஒவ்வொன்றாகக் காணப்படுவதே சிருஷ்டி. அதனைக் கண்டு அதில் நின்றும் தரிசித்ததே திதி. அதனை நீங்குவதே சங்காரமாம். திருவருளிடத்தில் பேரன்பு பொருந்தி யுண்டாகுதல் சங்காரமாம். அந்நினைப்பு மறைப்பாகி யுறுவது கேவலம் இங்குக் கூறப்பட்ட இவ்விரு வகையும் நீங்கும்படி யென்க.

ஆசாரிய சுவாமிகளே! மேற் கூறிய சகல கேவலங்கள் நீங்கும் உபாயத்தை அடியேனுக்குத் தெரிவிக்கும் படியாய்ப் பிரார்த்திக்கின்றேன்.

 

மாணவ! ஓர் உறுதி சொல்லுகிறோம் அதனை நீ கேட்கக் கடவை. திருவருளில் நிற்கும் போது நினைவு உண்டாகுமானால் நீ அந்த நினைவின் மாகுவை. அவ்வாறு அதன் வசமான பின்பு தெளிந்து சீர் பொருந்திய திருவருளில் நிற்பை. இதில் நின்றால் அந்த நினைவு உன் கைவசமாகும். இவ்வாறு உண்டாகிற நினைவானது அந்த அருளின் வசமாகும். இதனை திரோபவமென்று அறியக் கடவை. அந்த நினைவானது திருவருளைச் சென்று சேர்தலே சேர்தலே அனுக்கிரக மென்று தெரிந்து கொள். கொள். அந்தத் திருவருளை விரும்பினால் சிலநாளில் சகலாவஸ்தை நீங்கிவிடும்.

 

சகலம் நீங்கின விடத்தில் கேவலம் மேலிடும் என்றும் சமாதி நிலையில் நின்றால் அதுவும் நீங்கும் என்றும் கூறுகின்றது.

 

சகலம் நீங்கின விடத்தில் கேவலமானது தாக்கும் முறைமை யுடையதாம். அது எவ்வாறு எனில் குளிர்ச்சி பொருந்திய சந்திரனை மேகமானது வன்மையுடன் வந்து அடிக்கடி மூடுவது போல் எனந்தக் கேவலமானது முன் சொல்லிய லத்தோடு சேர்ந்து பொருந்தி வரும் தகைமை யுடையதாம். அது அத்தகைமையுடையதா யிருந்தாலும் சமாதியில் உடலானது வளையாமலும் சுவரில் சாராமலும் பொலிவுடனே கற்றூணைப் போல இருந்து குற்றமற்ற பெரிய திருவருளினாலே பார்த்துக் கேவலம் மேலிடாமல் தடுத்தால் அக் கேவலமும் அறும்.

 

இது ஆணவ கன்ம மாயைகளாகிய அசுத்தம் நீங்கின விடத்தில் சுத்தம் தோன்றும் என்னும் முறைமை கூறுகின்றது.

 

மாயையும் கன்மமும் அந்தச் சகலத்துடன் நீங்கிவிடும். அது நீங்கவேமேல் உண்டாகுமென்ற கேவலத்துடன் ஆணவம் நீங்கி விடும். மாயை, கன்மம் ஆணவம் என்ற இம் மூன்றும் அசுத்தம். இவைகள் நீங்கினவிடமே சுத்தம். அதைச் சொல்லு மிடத்து அஸ்தமன கிரியினிடத்துச் சூரியன் விழும் படியான மாலைக்காலம் போலவும் பரிசுத்தமான அருணோதயம் போலவும் தோன்றும். இவ்வாறு தோன்றுவதை இராப்பகல் அற்ற இடமென்றும் நினைப்பும் மறப்பும் இல்லாத இடமென்றும் பிறப்பும் இறப்பும் இல்லாத இடமென்றும் பெரியோர்கள் சொல்வார்கள்.


      இது திருவருள் நிற்கும் நிலைமை கூறுகின்றது.

 

மேற்கூறிய சுத்தத்தைப் பெற்று உன் போதம் சிறிதும் தோன்றாமல் அதில் நின்றால் திருவருளானது தோன்றும். அவ்வாறு தோன்றிய திருவருவானது எல்லாத் திக்குகளிலும் பலகோடி சூரியர்கள் ஒரே இடமாகத் தோன்றும் முறைமை போல சந்தேகம் இல்லாத ஒரு பேரொளியாம். அமிர்த அறிக, சகலகடலானது உலகமெங்கும் பரந்த தன்மை போல ஜடசித்துக்களுக்கு உட்புறனாகிப் பூரணமாயும், நிரவயமாகியும் நிஷ்களமாகியும், நிருமல சொரூபமாகியும் அழிவில்லாத சிறந்த பொருளாகியும் எங்கெங்கும் விருத்தியாகும்.

 

மாணவனே! இனி தற்போதம் நீங்க வேண்டு மென்னும் முறைமை கூறுகின்றேன். இவ்வாறு தோன்றிய திருவருளில் உன் போதம் தோன்றும். எவ்வாறு எனில் முன்னம் மாயா போகத்தைக் கொண்டு சொல்லுதற்கரிய பிரபஞ்சத்தை அறிவது போல இந்தத் திருவருட் போதத்தால் அந்தத் திருவருளையம் சிவத்தையும் நீங்குதற்கரிய உள் போதம் எதிரிட்டுக் காணும்; அப்போதம் நீங்கிப் பரமசிவத்தைச் சேரவேண்டும். அந்தப் பொருளைப் பகுத்தறிந்து அதில் நீ நிற்கும் முறைமைக்கு கண்ணொளியானது கிரணத்தையும் சூரியனையும் பிரிவுபட நோக்குதல் போலாம்.

 

மாணவனே! இனி தற்போதம் நீங்குதற்கு உபாயம் கூறுகின்றேன்.

 

உள் போதம் நீங்குதற்கு ஓர் உபாயம் உண்டு சொல்லுகிறேன் கேள்: கண்ணானது கிரணத்தையும், சூரியனையும் பிரித்துப் பாராமல் அன்புடன் அந்தச் சூரியன் என்றும் ஒளியென்றும் சொல்லுகிற இவ்விரண்டு பேதங்களுமில்லாமல் தோன்றும். அதுபோல நின் போதமானது அருளென்றும் சிவமென்றும் நானென்றும் பிரிக்காமல் பரிபூரணமாகிய பரமசிவத்துக்கு நேராக நீ நிற்கில் ஒன்றென்றும் இண்டென்றும் ஆகாத ஐக்கிய பேரின்பத்துடன் பொருந்தும் பேரின்பமானது ஏழு கடலினும் பெரிதாம்.

 

இனிப் பேரின்பம் தோன்றுதற்கு மேற்கோளும் கூறுகின்றார்.

 

முன்னம் பொருந்திய தத்துவங்களும் ஆணவ மலமும் சீவ அறிவு என்று சொல்லியவற்றுள் நான் ஒன்றாகிலும் கண்டிலன். இது என்ன குருவே! என, மாணவனே ! சொல்லக்கேள். இருள் நட்சத்திரங்கள் சந்திரப் பிரகாசம் என்னும் இவைகள் சூரியப் பிரகாசத்திற்கு முன் தோன்றாத முறைமைபோல அவைகள் சிவத்தின் முன் தோன்றாவென்று அறிவாயாக. நினைத்தற்கரிய சுகமானது அச்சிவத்துடன் கலந்த போது உண்டானது எவ்வாறு எனில் பொருந்திய பெண்ணும் ஆணும் கூடுமிடத்து உண்டாகும் சிற்றின்பம் போல அழிவில்லாத உயிராகிய பெண்ணும் சிவமென்னும் ஆணும் கூடினபோது பேரானந்தக் கடல் உண்டாகும்.

 

குருவே திருவடிகளைச் சேரும் உபாயம் இதுவென்று முன்னம் உரைத்தருளினீர். அந்தத் திருவடி என்பது இங்கு எது என்னில் மாணவ கேள். திரோபவம் அனுக்கிரகம் என்கிற அவ்விரண்டுமே பரமசிவத்தின் திருவடிகளாம். இவைகளில் ஒரு திருவடி கீமூன்றி நிற்கும். மற்றொரு திருவடிமேல் தூக்கின வண்ணமாக நிற்கும். கீமூன்றிய திருவடியானது நிலைபெற்ற அரிய உயிர்களுக்கு வருகிற நல்வினை தீவினை யென்னும் இரண்டு வினைகளையும் சமமாக்கி மலபரிபாக முண்டாக்கும். தூக்கிய திருவடியோவெனில் பேரானந்த வெள்ளத்தைக் கொடுத்தருளும். இத்தன்மையுள்ள இரண்டு திருவடிகளும் உயிர்களுடைய சிரசின் மேல் பிரிவறப் பொருந்திய கனகசபையில் நின்ற நிலையாம். இது உண்மையே யென்க.


ஆனந்த போதினி – 1929, 1930 ௵ -

ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், பிப்ரவரி, ௴

 

No comments:

Post a Comment