Wednesday, August 26, 2020

 

ஆச்சார்ய மண்டன மிஸ்ர சம்வாதம்

 

இது வித்யாரண்ய சுவாமிகள் செய்த சங்கர விஜயம் எட்டாவது சர்க்கத்தின் மொழி பெயர்ப்பு.

 

1. ஆதிசங்கர பகவத் பாதாசார்யர் மண்டனமிஸ்ரரோடு வாதம் செய்ய மாகிஷ்மதி நகருக்குச் சென்றார். அங்கு தண்ணீர் கொண்டு வரச் செல்லும் பெண்களைப் பார்த்து மண்டனருடைய கிரஹம் எது என வினவ, அப்பெண்களும் சங்கரரைக் கண்டு சந்தோஷித்து, எவ்வீட்டின் வாயிலில் கிளிகள் " வேதம் ஸ்வத: பிராமணம் பரதப் பிரமாணம் " என்றும் "கர்மம் பலஉனக் கொடுக்கும், கடவுள் தான் பலனைக் கொடுப்பவர்" என்றும், "உலகம் நித்தமென்றும், அநித்த” மென்றும் வாதம் செய்து கொண்டிருக் கின்றனவோ, அதுவே மண்டனருடைய வீடு என்று கூறினர்.

 

2. அவர்களது இனிய மொழிகளைக் கேட்டு ஆச்சர்யம் கொண்ட ஆசார்யார் மண்டனருடைய வீட்டிற்குச் சென்று பார்த்த பொழுது கதவுகளெல்லாம் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு சற்று யோசித்து, யோகசக்தியால் ஆகாய வழியாக வீட்டின் முற்றத்தில் இறங்கினார். அங்கு பிரம்மாவின் அவதாரமான மண்டனர், தபோசக்தியால் பூர்வ மீமாம்ச சாஸ்திரக்தின் ஆசாரியரான ஜெயிமினி மகரிஷியையும், உத்தர மீமாம்ஸ சாஸ்திரத்தின் (வேதாந்தத்தின்) ஆசிரியரான வியாஸரிஷியையும், ச்ரார்த்தத்திற்கு நிமந்திரித்து, அவர்களது செந்தாமரைப்பூப் போன்ற பாதங்களைக் கழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்து, ஆகாயத்திலிருந்திறங்கி ரிஷிகளுக் கருகில் உட்கார்ந்தார். சிகையும், யக்ஞோபவீதமு மில்லாமல் காஷாய வஸ்திரம் தரித்திருக்கும் அவரை சந்நியாசி என்று அறிந்து, மண்டனர் சற்றுச் சினங்கொண்டார். பிறகு அவரிருவரும் இவ்வாறு பேசிக்கொண்டனர்.

 

3. மண்டனர்: - "கூதோ முண்டீ?” சந்நியாசியாகிய தாங்கள் எப்படி வந்தீர்கள்? (கதவுகளெல்லாம் அடைக்கப் பட்டிருக்கிற படியால் எப்படி வந்தீர் என்பது மண்டனருடைய கருத்து.)

 

ஆசார்யர்: - "ஆகலாத் முண்டீ” கழுத்து வரையில் க்ஷெளரம் செய்துகொண்டேன். முண்டீ என்ற பதத்திற்குச் சந்நியாசி என்றும், க்ஷெளரம் செய்து கொண்டவன் என்றும் அர்த்தம். ஆசார்யர் இரண்டாவது அர்த்தத்தைக் கொண்டு பதில் கூறினார்.)

 
மண்டனர்: - "பந்தாஸ்தே ப்ருச்யதேமயா.'' என்னால் உனது வழி கேட்கப் படுகிறது.


ஆசார்யர்: - "கிமாக பந்தா?'' வழி என்ன சொல்லிற்று?

 

மண்டனர்: - "த்வன்மாதா முண்டேத்யாஹ.'' உனது தாயார் விதவை என்று சொல்லிற்று.

ஆசார்யர்: - "பந்தர்னம் த்வம் அபிருச்ச த்துவாம் பந்தா பிரத்யாஹமண்டன. த்வன்மாதேத்யத்ர சப்தோயம் நமாம்பூரூயாத் அபிருச்சகம்.'' ஓ மண்டன! நீ வழியைக் கேட்டாய். உன்னைப்பார்த்து வழி பதில் சொல்லிற்று. த்வன் மாதா என்ற விடத்தில் த்வத் என்ற பதம் உன்னையே குறிக்கும். வழியைப் பார்த்து யாதொன்றும் கேட்காத என்னை எவ்வாறு குறிக்கும்?


மண்டனர்: - 'அகோ! பீதா கிமுசரா?" ஆச்சர்யம்! நீ கள் குடித்தாயா?

 

ஆசார்யர்: - "நைவஸ்வதோ யதஃ ஸ்மர” அல்ல. கள் வெண்மை நிறமுடையது. (பீதா என்ற பதத்திற்கு குடிக்கப் பட்டதா? மஞ்சள் நிறமுடையதா? என்று மர்த்தம். மஞ்சள் நிறமுடையதா வென்று கேட்டதாக வைத்துக் கொண்டு பதில் கூறினார்.)


மண்டனர்: - "கிம் த்வம்ஜானா தத்வர்ணம்?" நீ அதன் நிறம் அறிவாயா?


ஆசார்யர்: - ''அஹம் வர்ணம். பவான் ரஸம்” நான் நிறமறிவேன். நீருசி அறிவாய்.

 

மண்டனர்: - "கந்தாம் வகஸி துர்புத்தே கரதபேனா பிதுர்வகாம் சிகாயக்ஞோபவீதாப்யாம் கஸ்தே பாரோபவிஷ்யதி?'' ஓ! துர்ப்புத்தியே! கழுதைகூடச் சுமக்க முடியாத கந்தையைச் சுமக்கிறாய். சிகை, யக்ஞோபவீதம், இவை இரண்டும் உனக்குப் பாரமா?

 

ஆசார்யர்: - "கந்தாம் வகாமி துர்ப்புத்தே தவபித்ரா பிதுர்பராம் சிகாயக்ஞோபவீதாப்யாம் சுருதே: பாரோபவிஷ்யதி'' உனது தகப்பனாரும் சுமக்க முடியாத கந்தையைச் சுமக்கிரேன். சிகை, யக்ஞோபவீதம் இவ்விரண்டும் வேதத்திற்கு ஒரு பெரும் பாரமாகும்.

 

மண்டனர்: - "த்யக்த்வா பாணி கிருகதீம் ஸ்வாம் அசக்தியா பரிரக்ஷணெசிஷ்ய புஸ்தக பாரேச்சோ: வியாக்யாதா பிரம்மரிஷ்டதா.'' தான் அக்னிசாக்ஷியாக பாணிக்கிரகணம் செய்து மணந்த மனைவியைக் காப்பாற்ற முடியாமல் விட்டு விட்டு, சீஷர்களையும், புஸ்தகங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் உனது பிரம்மநிஷ்டை வெளியாய் விட்டது.

 

ஆசார்யர்: - ''குரு சுச்ரூஷணாலஸ்யாத் சமாவர்த்யகுரோ: குலாத்ஸ்த்ரியம் சுச்ரூஷமாணஸ்ய வியாக்யாதா கர்மநிஷ்டதா.'' குருவுக்குப் பணிவிடை செய்ய முடியாமல் குரு குலத்தை விட்டு வந்து பெண்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கும் உனது கர்மநிஷ்டையும் வெளியாகி விட்டது.

 

மண்டனர்: - ''ஸ்திதோஷ யோக்ஷிதாம் கர்பேதாபிரேவ விவர்த்திக்அகோ கிருதக்னதா மூர்க்ககதம் தாயேவ நிந்தவி?'' பெண்களின் கர்ப்பக்தில் பத்து மாதமிருந்து, அவர்களால் வளர்க்கப்பட்ட நீ நன்றியறிவில்லாமல் ஏன் அவர்களை தூஷிக்கிறாய்?

 

ஆசார்யர்: - "யாஸாம் ஸ்தன்யம் த்வயாபீதம் யாஸாம் ஜாதோணியோனித: தாள மூர்க்கதம ஸ்த்ரீஷ பசுவதத்திரமஸெகதம்?'' பெண்களின் யோனியிலிருந்து பிறந்து அவர்களின் ஸ்தன்யத்தைப் பானம் செய்து வளர்ந்த நீ மிருகங்களைப் போல் எவ்வாறு ரமிக்கிறாய்?

 

மண்டனர்: - "வீரஹத்யாம் அவாப்தோஸி வன்ஹீன் வுத்வாஸ்ய யத்னத" அக்னி கார்யத்தை விட்டு விட்டு நீ வீரஹத்யா பாபத்தை யடைந்தவனாயிருக்கிறாய்.
 

ஆசார்யர்: - "ஆத்மாஹத்யா அவாப்த்தஸ்த்வம் அவிதித்வாபரம்” பதம்பரமபதத்தை அறியாமல் நீயும் ஆத்மஹத்யா பாபத்தை யடைந்தவனாயிருக்கிறாய்.

 

மண்டனர்: - "தௌவாரிகான் வஞ்சயித்வா கதம் ஸ்தோவத் ஆகத:?" வாயில் காப்பவர்களை ஏமாற்றித் திருடன் போல் எப்படி வந்தாய்?

 

ஆசார்யர்: - "பிக்ஷயோ அன்னமதத்வாத்வம் ஸ்தேனவத் போஷ்யளேகதம்?'' சந்நியாசிகளுக்கு அன்னமளிக்காமல் திருடன் போல் எப்படித் தின்கிறாய்?

 

மண்டனர்: - "க்வபிரம்ம? க்வசதுர்மேதா? க்வசந்யாசி? க்வவாகலி:? ஸ்வாத்வன்ன பக்ஷகாமேன வேஷொயம் யோகினாம் திருத'' உனது துஷ்டபுத்தி யெங்கே? கலியுக மெங்கே? சந்நியாச மெங்கே? ருசியான அன்னத்தைப் புசிக்கலாமென்று சந்நியாசத்தை எடுத்துக் கொண்டாய் என்று நினைக்கிறேன்.

 

ஆசார்யர்: - "க்வஸ்வர்க:? க்வதுராசார:? க்வாக்னிகோத்ரம்? கவவாகலி:? மன்யேமைதுன காமேன வேஷோயம் கர்மிணாத்ருத:'' உனது அனாசாரமெங்கே? சுவர்க்கம் எங்கே? கலியுக மெங்கே? உனது அக்னிகோத்திர மெங்கே? பெண்களுடன் சுகப்படலாமென்று இந்த வேஷத்தை எடுத்துக் கொண்டாய் என்று நினைக்கிறேன்.

 

4. இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு ஜெயிமினி மண்டனரைப் புன்சிரிப்புடன் பார்த்தார். வியாஸரும் மண்டனரைப் பார்த்து, "ஓ மண்டனரே! புத்ரேஷணை, வித்தேஷனை, கலத்ரேஷணைகளை உபேவித்து ஆத்மதத்வத்தை யறிந்த சந்நியாசிகளைப் பார்த்து இவ்வாறு பேசுவது உசிதமல்ல. ஆகையால் பிரத்யக்ஷமாக விஷ்ணுவே வந்திருக்கிறாரென் றெண்ணிச்ரார்த்தத்திற்கு நிமந்தரணம் செய்யும்'' என்று சொன்னார்.

 

5. மண்டனரும் சாஸ்திரங்களை யெல்லா மறிந்த வியாஸரின் வார்த்தையைக் கேட்டு அவரையும் பிக்ஷைக்கு அழைத்தார். பிறகு ஆசார்யரும், " ஓ மண்டனரே! நான் தங்களிடத்தில் அன்ன பிக்ஷைக்காக வரவில்லை. எனக்கு வாதபிக்ஷை அளிக்க வேண்டும். வேதங்களின் சிரஸாகிய உபநிஷத்தின் கருத்தான ஜீவப்பிரம்ம ஐக்யத்தை பிரசாரம் செய்வதைத் தவிர எனக்கு வேறு ஒரு காரியமுமில்லை. எப்பொழுதும் யாகாதிக்ரியைகளைச் செய்து கொண்டிருக்கும் நீ அந்த மதத்தை அவமதித்து விட்டாய். ஆகையால் என்னுடன் வாதம் செய்யவேண்டும். அல்லது தோல்வியடைந்தேன் என்றாவது சொல்லி, எனக்கு மாணாக்கனாக வேண்டும் " என்று சொன்னார்.

6. இதைக்கேட்டு மண்டனரும் ஆச்சர்யம் கொண்டு " ஆயிரம் நாப்படைத்த ஆதிசேஷனுடன் வாதம் செய்தபோதிலும், நான் தோற்பவனல்லன். வியாஸருடைய மதமாகிய அத்வைதத்தைப் பின்பற்றுபவனுமல்லன். பலநாளாக வாதம் செய்ய யாராகிலும் வரமாட்டார்களா வென்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் எனக்கு, இன்றைய தினம் தான் சுதினம். நம்மிருவருக்கும் வாதம் நடைபெற வேண்டும். இது காலம் சாஸ்திரங்களில் நாம் செய்து வந்த சிரவணம் பலன் பெற வேண்டும். நான் வாதத்தில் ஸர்வக்யனான ஈஸ்வரனைக் கூட வெல்வேன். எனது வாதம் செய்யும் திறமையை நீ கேட்டதில்லை போலும். இப்பொழுது மத்யான்ன காலமாய்விட்டது. அனுஷ்டானங்களைச் செய்து முடிப்போம்' என்று சொன்னார். பிறகு ரிஷிகளைப் பார்த்து 'ஓரிஷிகளே! நாளையதினம் வாதம் நடைபெறும். தாங்களிரு வரும் சாக்ஷிகளாக இருக்கவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

 

7. ரிஷிகளும் மண்டனரைப் பார்த்து " சரஸ்வதியின் அவதாரமான உனது மனைவியை சாக்ஷியாக வைத்துக் கொண்டு வாதம் செய்யுங்கள் "என்று சொல்லினர். பிறகு மண்டனர் மூன்று ரிஷிகளையும் சாஸ்திர முறைப்படி பூஜித்து, அன்னமளித்து, சாமரம் வீசி உபசரித்தார். போஜனம் செய்த பிறகு, அம்மூன்று பேர்களும் சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்து, மண்டனரது கிருகத்தை விட்டுப் புறப்பட்டு நர்மதையாற்றின் கரைக்கு வர்தனர். அங்கு ஜெயிமினியும், வியாஸரும், அந்தர்தானம் செய்தார்கள். ஆசார்யர் அங்கு ஓர் தேவாலயத்தில் இரவில் தமது மாணாக்கர்களுடன், தாம்ரிஷிகளைச் சந்தித்த சமாசாரங்களையும், மண்டனருக்கும் தமக்கும் நேர்ந்த சம்வாதத்தையும் பற்றி பேசிக்கொண்டிருந்து, அதிகாலையில், ஸநானத்திற்குப் பிறகு அனுஷ்டானங்களைச் செய்து முடித்து, மண்டனருடைய கிரஹத்திற்குச் சென்று வித்வான்கள் நிறைந்திருக்கும் சபையிலுட்கார்ந்தார்.

 

8. பிறகு மண்டனர் தமது மனைவியைச் சாக்ஷியாக வைத்துக் கொண்டு வாதம் செய்யலாம் என்று சொல்ல, ஆசார்யரும் தமது மதத்தை இவ்வாறு சபையில் உபந்யஸித்தார்.'' பிரம்மம் ஏகம் அது சத்சித் ஆனந்தரூபம், நிர்க்குணம், நிஷக்ரியம், நிரவயவம், அசப்தம், அஸ்பரிசம், அரூபம், அவ்யயம், அரசம், அகந்தம், நித்யம். அது மாயையுடன் சேர்ந்து, இப்பெரிய உலக வடிவமாக விளங்குகிறது. எப்படி ஒரு கிளிஞ்சல் வெள்ளியாகவும் கயிறு பாம்பாகவும் தோன்றுகின்றதோ, அப்படி பிரம்மம் உலக வடிவமாகத் தோன்றுகின்றது. இது வெள்ளியல்ல, கிளிஞ்சல் தான் என்ற ஞானத்தால் வெள்ளி போய் கிளிஞ்சல் தோன்றுகிறது. அப்படி அதிஷ்டானமான பிரம்மத்தின் ஞானத்தால் பிரபஞ்சம் போய் விடுகிறது. இதற்கு “ஏகமேவா த்விதீயம்" சத்யம், ஞானம், அனந்தம், விக்யானமானந்தம் பிரம்மா. சர்வம் கல்விதம் பிரம்மா. வாசாரம் பணம் விகாரோ நாமதேயம், மருத்ய கேத்யேவ சத்யம்" இது முதலிய அநேகம் உபநிஷத்து வாக்கியங்கள் பிரமாணம் என்று சொல்லி "இந்த வாதத்தில் நான் தோல்வியடைந்தால் இக்காவி வஸ்திரத்தை விட்டு, சுக்ல வஸ்திரத்தைத் தரித்துக் கொள்வேன்" என்று பிரதிக்ஞையும் செய்தார்.

 

9. மண்டன மிச்ரரும், "ஜீவப்பிரம்ம ஐக்கியத்தைச் சொல்லும் வேதவாக்கியங்கள் பிரமாணமல்ல. ஏனென்றால் வேதவாக்கியங்க ளெல்லாம், ஏதாகிலும் ஒரு கிரியைச் சொல்லுகின்றன. யாகாதிக்ரியைகள் சொல்லும் வேதவாக்கியங்கள் தான் பிரமாணம். உலகத்திலும், " குடத்தைக் கொண்டு வா, கொண்டு போ'' என்று கிரியையைச் சொல்லும் வாக்கியங்கள் தான் பிரமாணமாகும். முற்கூறிய உபநிஷத் வாக்கியங்களோ, ஒரு கிரியையும் சொல்வதில்லை. யாகாதிக்ரியைகளைச் செய்வதால் மாத்திரம் மோக்ஷம் கிடைக்கும். ஒவ்வொரு மனிதனும் உயிரோடிருக்கும் வரையில், யாகாதிக்ரியைகளைச் செய்தே தீர வேண்டும்.'' ஆம் நாயஸ்யுக்ரியார்த்தத்வாத் ஆநர்தக்யம் உததத்தானாம் யாவத்ஜீவம் அக்னிஹோத்ரம் குர்யாத் குர்வன் எவெஹகர்மாணிஜிஜீவிஷேத் சதம் ஸமா:'' இது முதலிய அநேகம் உபங்ஷத்து வாக்கியம்கள் பிரமாணம்.'' என்று தமது மதத்தைச் சொல்லி "இவ்விவாதத்தில் நான்தோல்வியடைந்தால், இந்த சுக்ல வஸ்திரத்தை விட்டு விட்டு, சிகை, யக்ஞோபவீதம் இவ்விரண்டையும் த்யாகம் செய்து, காவி வஸ்திரம் தரித்துக் கொள்வேன்'' என்று பிரதிக்ஞையும் செய்தார். இப்படி ஐந்தாறு நாட்கள் இருவரும் வாதம் செய்து கொண்டனர். பிறகு வாதத்திற்குச் சாக்ஷியான மண்டன்ருடைய மனைவி இருவருடைய கழுத்திலும் ஒவ்வொரு மாலையைப் போட்டு விட்டு, " எவருடைய மாலை வாடுகின்றதோ, அவர் வாதத்தில் தோற்றவராம் "என்று சொல்லி வீட்டிற்குள் சென்றாள்.

 

மண்டனர்: "ஓ சந்நியாசியே! ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் தாங்கள் ஐக்கியம் ஒப்புக்கொள்கிறீர்களே அதற்குப் பிரமாணம் யாது?'' எனவினவினார்.
ஆசார்யரும் அதைக்கேட்டு "ஓ மண்டனரே! 'தத்வமசி, அகம் பிரம்மாஸ்மி, அயமாத்மா பிரம்மம்' இது முதலிய நூற்றுக் கணக்கான உபநிஷத்வாக்கியங்கள் தாம் பிரமாணம்" என்று சொன்னார்.

 

மண்டனர்: - "யதீச்வரரே! வேதத்தில் ஹும், பட், முதலிய சில பதங்களிருக்கின்றனவல்லவா? அவைகள் எல்லாம் ஜபத்திற்கு மாத்திரம் உபகாரமானவை என்று தாங்களும் ஒப்புக் கொள்கிறீர்களல்லவா? அப்படியே 'தத்வமஸி' என்ற வாக்கியங்களும், அவைகளை ஜபித்தால் பாபம் போய்விடும்; அல்லாது 'தத்வமஸி' என்ற வாக்கியத்திற்கு அர்த்தமில்லை.''

 

ஆசார்யர்: - “ஹும், பட், முதலிய பதங்களுக்கு அர்த்தமொன்று மில்லாததால் அவைகள் ஜபத்திற்கு மாத்திரம் உபயோகமானவை என்று பெரியோர்கள் நிச்சயித்தனர். தத்வமஸி முதலிய பதங்களுக்கு அர்த்தம் இருப்பதால் எப்படி ஜபத்திற்கு உபயோகமானவை என்று சொல்லமுடியும்?''

 

மண்டனர்: - "ஓயதீச்வரரே! தத்வமஸி என்ற வாக்கியங்களுக்கு மேல் போக்காய், ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும், ஐக்யம் அர்த்தமாகத் தோன்றிய போதிலும், யாகத்தைச் செய்யும் யஜமானருடைய புகழ்ச்சிதான் உண்மையான அர்த்தம். ஆகையால் இந்த வாக்கியங்கள் யாகாதிகளைச் சொல்லும் விதி வாக்கியங்களுக்கு உதவியாகத்தானிருக்கும்.''

 

ஆசார்யர்: - ''யாகாதிகளைச் சொல்லும் காண்டத்தில் இருக்கும் வாக்கியங்கள் உதவியாக ஆகலாம். ஞான காண்டத்திலிருக்கும் வாக்கியங்கள் எப்படி உதவியாகும்?''

 

மண்டனர்: - "ஓ யதீச்வரரே! ஆனால் 'மனோப்பிரம்மேத் யுபாஹீத' என்ற வாக்கியத்தில் மனதை பிரம்மமாக உபாஸனை செய்ய வேண்டுமென்று அர்த்தமாவது போல், தத்வமஸி என்ற வாக்கியத்திலும், ஜீவாத்மாவை பரமாத்மாவாக உபாஸனை செய்ய வேண்டு மென்று அர்த்தம் வைத்துக் கொள்ளுங்கள். என் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் ஐக்கியத்தைச் சொல்லவேண்டும்?''

 

ஆசார்யர்: - "ஓ மண்டனரே! 'மனோப்பிரம்மேத் யுபாஹீத' என்ற விடத்தில் உபாஸீத என்றபதம் விதி விகுதியை உடையதா யிருக்கிறபடியால், அவ்வாக்கியம் உபாஸனையை விதிக்கிறது என்று சொல்லுகிறோம். தத்வமஸி என்ற வாக்கியத்தில் விதிவிகுதியை உடைய பதம் ஒன்று மில்லாததால், எங்ஙனம் அவ்வாக்கியம் உபாஸனையை விதிக்கும்?''

 

மண்டனர்: - "ஓ யதீச்வரரே! 'பிரதிதிஷ்டந்தி ஹவாயயேதா ராத்ரி: உபயந்தி.' என்ற வாக்கியத்தில் விதி விகுதியையுடைய பதம் ஒன்றுமில்லாத போதிலும், விதி வித்தியைக் கற்பித்து, விதிவாக்கியம் என்று சொல்வதுபோல, தத்வமஸி என்ற வாக்கியத்திலும் விதியைக் கற்பித்து என் விதிவாக்கியம் என்று சொல்லக்கூடாது?''

 

ஆசார்யர்: - "ஓ மண்டனரே! அந்த வாக்கியத்தில் பிரதிஷ்டந்தி என்றபதம் பலனைச் சொல்லுகின்றது. ஆதலால் விதியைக் கற்பித்தோம். இங்குபலன் ஒன்றுமில்லாததால் எப்படி விதியைக் கற்பிப்பது? "

 

மண்டனர்: - "தத்வமஸி வாக்கியத்திலும், மோக்ஷமாகிய பலனிருப்பதால் விதியைக் கற்பிக்கலாம்.''

 

ஆசார்யர்: - “அனால் உபாஸனை என்ற க்ரியைக்குப் பலன் மோக்ஷம் என்றேற்படுகிறது. கிரியைக்குப் பலனானவைகள் எல்லாம், நாசமுடையவைகவாகும். மோக்ஷம் நாசமுடையதல்ல.''

 

மண்டனர்: - “தத்வமஸி என்ற வாக்கியம் உபாஸனையை விதிக்காவிடில், ஜீவாத்மாவக்கும், பரமாத்மாவுக்கும், சாம்யத்தை விதிப்பதென்று வைத்துக் கொள்வோம்.''

 

ஆசார்யர்: - "ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் சாம்யம் சேதனம் என்று வைத்துக் கொண்டு சொல்லுகிறீர்களா? தத்வமஸி என்ற உபதேசத்திற்கு முன்னமே இரண்டும் சேதனம் என்று தெரிகிறபடியால், உபதேசமே பயனற்றதாகும். சாவக்யம் என்று வைத்துக்கொண்டு சாம்யம் சொல்லுவதால் தனது வித்தாந்தத்திற்கு விரோதமாகும்.''

 

10. இவ்வாறு பற்பல யுக்திகளைக் கொண்டு ஆசார்யர் மண்டன மிஸ்ரரை ஜெயித்தார். மண்டனரது கழுத்திலிருக்கும் மாலையும் வாடிற்று. சரஸ்வதியின் அவதாரமான மண்டனரது மனைவியும், தனது பர்த்தாவின் கழுத்தில் வாடிய மாலையைப் பார்த்து, இருவரும் பிக்ஷைக்கு வாருங்களென்றழைத்து, 'முன் காலத்தில் எனது கன்னிப் பருவத்தில் தூர்வாஸ ரிஷியால் இடப்பட்ட சாபம் இத்துடன் நீங்கிவிட்டது. ஆகையால் நான் எனது ஸ்தானமாகிய சுவர்க்கத்திற்குப் போகின்றேன்'' என்று சொல்லிப் புறப்பட சரஸ்வதியை ஆசார்யர் வனதுர்க்கா மந்திரத்தால் கட்டி சிறிது காலம் பூலோகத்தில் வாஸம் செய்து பிறகு சுவர்க்கம் செல்லவேண்டுமென்று வேண்டிக் கொள்ள சரஸ்வதி பூலோகத்தில் வாஸம் செய்தாள்.

(பண்டித. K. V. தேவராஜ சாஸ்திரிகள்)

 

ஆனந்த போதினி – 1929 ௵ - பிப்ரவரி ௴

 

 

 

 

No comments:

Post a Comment