Wednesday, August 26, 2020

 

ஆடம்பர வாழ்க்கை

 

நவீன நாகரிகத்தின் வேகம் நமது நாட்டில் கெம்பீரமாய்ப் பாவிவருகிறது. இதன் முன்னிலையில் நமது ஆன்மார்த்த நாகரிகம் தலைவணங்கி ஏங்கி நிற்கிறது. இந்தியாவின் பண்டைப் பெருமையெல்லாம் கனவு ஆகிவிட்டது. முற்காலத்தில் ஆன்ம விளக்கமே மக்கட்குரிய லட்சியமாயிருந்தது. தற்காலம் ஆடம்பர நாகரிகமே குறியாயிருக்கிறது. மறுமையைப் பற்றிய சிந்தனை மக்கள் உள்ளத்தில் இல்லை. உண்மை ஒழுக்கங் குடிகொண்டிருந்த நாட்டை வஞ்சனையும் பொய்யும் சூழ்ச்சியுங் கவர்ந்து கொண்டன. இக்காலத்தில் யோக்கியமாயும் உண்மையாயும் காலக்ஷேபம் செய்தல் வெகு துர்லபம். மக்கள் உள்ளத்தைப் பண்படுத்தத்தக்க ஒழுக்கக் கல்வி அடியோடு குன்றிவிட்டது. ஆங்கிலக் கல்வி ஆதிக்கம் பெற்று நாட்டுமொழிகளையும் கலைகளையும் புறக்கணிக்கச் செய்து விட்டது. ஆங்கிலக் கல்வி பல நன்மைகளோடு அநேக தீமைகளையும் தந்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் கல்வியறிவின்றி அறியாமையோ டிருக்கின்றமைக்கு ஆங்கிலக் கல்வியும் ஒரு காரணமெனலாம். எல்லா மக்கட்கும் கல்வி புகட்டத்தக்க சௌகரியத்திற்குத் தடையாக ஆங்கிலக் கல்விக்காகச் செலவிடும் பெருந்தொகை குறுக்கே நிற்கிறது. நாட்டு மொழிகட்கு ஆக்கந்தந்து சரியான முறையில் போதிக்கத் தொடங்கினால் இப்போது கல்விக்காக ஒதுக்கப்படும் பொருளைக் கொண்டே எல்லா மக்களையும் சிறந்த கல்வியாளராக்கி விடலாம். மேனாட்டு விஞ்ஞான ஆராய்ச்சியும் நமது நாட்டு ஆன்மார்த்த ஆராய்ச்சியும் கலந்த கல்வி முறையே தற்போது வேண்டிற்பாலது. பலவித காரணங்களால் இந்திய நாடு வறுமையில் மூழ்கியிருக்கிறது. நாட்டில் வருவாய் சுருங்கி செலவு மிகுந்திருக்கிறது. முக்கியமாய் அரசியல் நிர்வாகத்திற்குக் கோடிக்கணக்கான திரவியம் ஆண்டுதோறும் வெளியிற் போய் விடுகிறது. இந்த நிர்வாகச் செலவு இங்கேயே தங்குவதாயிருந்தால் அநேக பலன் தரத்தக்க காரியங்களைச் செய்து கொள்ளலாம்.

 

பெரும்பாலும் இந்திய விவசாயி எவ்வளவு தரித்திரத்தை அனுபவிக்கக் கூடுமோ அவ்வளவையும் அனுபவிக்கிறான். அதிலும் புன்செய் விவசாயியைப் பற்றிச் சொல்ல வேண் கடுவதில்லை. சில்லறை வியாபாரங்களைத் தவிர மேனாடுகளிலுள்ளபடி கூட்டுறவு முறை கொண்ட பெரிய உலக வர்த்தக முறைகளும் கைத்தொழில் முறைகளும் நமது மக்கட்குத் தெரியாது என்று நாம் அடிக்கடி சொல்லி வந்திருக்கிறோம். இவை யெல்லாம் அவ்வக் கல்விப் பெருக்கத்தினாலேயே பெறத் தக்கவையாகும். இவற்றை எல்லாப் பாமர மக்கட்கும் ஆங்கிலக் கல்வி மூலம் போதிக்கக்கூட வில்லை என்பதை விளக்கவே முன்னே குறிப்பிட்டோம். மேலே சொன்னகாரணங்களால் தினசரி வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்கள் நமதுநாட்டு மக்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் நவீனகாகரிக மோகமும் ஜனங்களைப் பலமாய்ப் பற்றிக்கொண்டது. அந்நிய நாட்டுப் பொருள்கள் தினந்தோறும் கப்பல் கப்பலாக வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. அதாவது வருடமொன்றுக்கு நூற்றைம்பது கோடியே முப்பத்தொருலட்ச ரூபா பெறுமான பொருள்கள் இறக்குமதி யாகின்றன. இக்கால நாகரிகம் வேண்டாத தேவைகளை வேண்டும்படிச் செய்து கொண்டிருக்கிற படியால் மக்கட்கு அவற்றை வாங்காமலிருக்க முடிகிறதில்லை. வறுமைநிலை ஒருபக்கம் ஆடம்பாம் ஒரு பக்கம் ஜனங்களைத் துன்பம் செய்து கொண்டிருக்கின்றன.

நாட்டின் தற்கால நிலையைப்பற்றி ஒருவாறு பொதுவாக மேலே கூறினோம். இனி நாம் அனுஷ்டிக்க வேண்டிய முறைகளையும் கடமையையும் பற்றி ஒரு சிறிது ஆராய்வாம். ஆடம்பர வாழ்வு எப்போதும் அநர்த்தத்தையே விளைக்கும். வெறும் டம்பச் செலவு செய்து ஆடம்பரமாக வாழ்ந்து கெட்ட எத்தனையோ குடும்பங்களை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். எளிய ஆடம்பரமற்ற வாழ்வு ஒன்றே ஒருவனுக்குச் சாந்தியளிக்கும். எல்லாவித மத உண்மைகளும் ஆடம்பரத்தை வெறுக்கின்றன. உலகில் புகழ் பெற்ற மதஸ்தாபகர்களும் பெரியோர்களும் ஆடம்பரமற்ற வாழ்க்கையை கடத்தி வந்ததாகவே நாம் கேள்விப்படுகின்றோம். நமது நாட்டு ஒழுக்க நூல்களும் எளிய வாழ்வையே வற்புறுத்துகின்றன.

 

மனிதனுக்கு ஆசை பெருகப் பெருக துன்பமும் அதிகமாகிறது. இவன் எந்தப் பொருளை விரும்புகின்றானோ அந்தப் பொருளை அடையமுயற்சி செய்ய வேண்டும். மனித முயற்சி எல்லாம் பலன் தந்து விடுமென்று சொல்வதற்கில்லை. " ஒன்றை நினைக்கின் அது ஒழிந்கட்டொன்றாகும்'' ஆதலின் கவலைக் கடன் மூழ்க நேரும். பேராசை கொண்ட ஒருவன் இந்த உலகில் சாந்தியாக வாழ முடிபாது. அசைப்பேய் அடாத செறிகளிலும் போகத் துணிவு கொடுத்து விடுகிறது. ஆதலால் ஆடம்பரத்துக்கு ஆசை காரணமாயிருத்கலின் அதை ஒழிக்காவிட்டால் சுகம் என்பது சித்திக்காது. மேனாடுகள் இந்த உண்மையை அலட்சியம் செய்து விட்டு ஆடம்பரத்தில் பற்றுள்ளங்கொண்டு மேலோங்கி நிற்கின்றன. அது எப்படி முடியுமோ தெரியவில்லை.

 

சிலர் சௌகரியமிருந்தால் ஆடம்பர வாழ்வு நடத்தக் கூடாதா? என்று கேட்கலாம். சிறிது ஊன்றிச் சிந்திப்போர் இந்தக் கேள்வி கேட்கமாட்டார்கள். அதிகச் செலவில் வாழவேண்டிய ஆடம்பரவாழ்வுக்கு ஒரு நியதி இல்லை. எவ்வளவு உன்னத சுக போகத்தில் இருந்தாலும் அப்போதும் அதிருப்தியும் கூடவே இருந்து கொண்டிருக்கும். உதாரணமாக உலகில் சக்கரவர்த்திகளைக் காட்டிலும் இடம், பொருள், ஏவல் பெற்றுச் சுகபோகத்தில் மூழ்குபவர் ஒருவருமிலர். பண்டைக்காலந் தொடங்கி இக்காலம் வரை எந்த அரசனுடைய வாழ்வை ஆராய்ந்தாலும் ஒவ்வொருவனும் பற்பல துன்பங்களை அநுபவித்தமை நன்கு விளங்கும். எளியவன் வயிற்றுக்கில்லை யென்று வருந்துகிறான். நடுத்தரமாகவுள்ளவன் இலட்சப்பிரபு ஆகிவிடப் பார்க்கிறான். இலட்சப்பிரபு கோடீசுவரனாகப் பார்க்கிறான். கோடீசுவரன் அரசனாகி விடப் பார்க்கிறான். அரசனாகவுள்ளவன் தன்னுடைய தேசத்தோடமையாது வேற்றரசர் நாடுகளையுங் கவரப் பார்க்கிறான். ஆதலால் எத்தகைய ஆடம்பர வாழ்வும் மனச்சாந்தியை அளிக்காது என்பதை யாவரும் உணர்தலே அறிவுடைமையாகும்.

 

நமது சாஸ்திரங்கள் பற்றறுத் தலை விசேஷ அம்சமாக ஒழுக்கத்தில் வைத்து வற்புறுத்துகின்றன. பேரின்பத்துக்கு வீடு என்ற பெயர் இருக்கின்றமை யாவரு முணர்ந்த விஷயம். இது விடு என்ற வினைப்பகுதியின் முதனிலை நீண்ட தொழிற் பெயர். விடுதல் என்பது இதன் பொருளாகும். வடமொழியில் மோட்சம் என்பது இப்பொருளிலேயே வழங்கி வருகிறது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் உலகப் பொருள்களில் பற்றுள்ளம் வைத்திருப்பது ஒரு பெரும் சுமை; அப்பொருள்கள் நமதெண்ணப்படி எளிதில் நமக்குக் கிடையா; அதனால் கவலை அதிகரிக்கிறது; ஆதலால் அந்தப் பற்றுச் சுமையை இறக்கி விடுதலே (விட்டுவிடுதலே) இன்பம் என்பதேயாகும். "ஈதலறம்....... இம் மூன்றும் விட்டதே பேரின்ப வீடு'' என்ற ஔவையார் அமுத மொழியையும் நோக்குக.

 

 

ஐம்புல வொடுக்கமும் அவாவறுத்தலைச் சார்ந்ததே. உலகத்தில் இன்பம் நுகர்தல் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்ற ஐந்து பொறிகளையும் திருப்தி செய்தலே யாகும். அதாவது உடம்புக்கினியவற்றை ஸ்பரிசித்தல், வாய்க்கினியவற்றை உண்டல் கண்ணுக்கினியவற்றைக் காண்டல், மூக்குக்கினியவற்றை முகர்தல், செவிக்கினி யவற்றைக் கேட்டல் ஆகும். பல்வேறு ரூபமான நுகர்ச்சிகள் இவ்வைந்தனுள் அடங்கும். இவற்றின் நுகர்ச்சிக்கு ஒரு எல்லையே யில்லை. ஒவ்வொருவருக்கும் இன்பவேட்கை சகஜமாயுண்டு. மனிதன் இயற்கையோ டியைந்திருந்த காலத்து இவற்றைப் பிரயாசையின்றி அநுபவித்தான். இது செயற்கை உலகம். எல்லாம் பணமயமாயிருக்கிறது. அதிலும் நமது நாட்டில் வறுமை, அறியாமை, நோய் முதலியன ஆதிக்கம் பெற்றிருக்கின்றபடியால் எவ்வாறு இன்பவாழ்க்கை நடத்தமுடியும்?

 

எந்த நாட்டிலும் தற்காலம் இந்தியாவிலுள்ள ஸ்திதியைப் போல் காணல் அரிது. ஒரு மனிதனுக்குக் குறைந்த பட்சம் தேவையான உணவு 11/2 இராத்தல். ஆனால் இப்போது இங்கே கிடைப்பது ஒரு இராத்தலுக்கும் குறைவே. இங்கிலாந்தில் 2 முதல் 21/2, இராத்தல் வரை கிடைக்கின்றதாம். வறுமையின் கொடுமையாலும் இதன் பயனால் ஏற்படும் சுகாதாரக் குறைவினால் உண்டாகும் தொத்து நோய் முதலியவற்றாலும் ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் மாள்கின்றனர். இந்த உண்மை, இந்தியாவின் மரண விகிதத்தையும் இங்கிலாந்து முதலிய மேனாடுகளின் மரண விகிதத்தையும் எடுத்துப் பார்த்தால் நன்கு புலப்படும். நமது மக்களை வறுமையும் நோயும் வாட்டுவதோடு சரியான முறையோடு கூடிய எத்தகைய கல்வியறிவும் இன்மையால் அறியாமையும் சேர்ந்து கொண்டு அலைத்து வருகிறது. இவர்கட்கு மேனாட்டினரைப் போன்ற உலகியல் விஞ்ஞான அறிவும் இல்லை; நமது நாட்டு ஒழுக்கக் கல்வி யறிவும் இல்லை. இதனால் தரித்திரம் பிடுங்கித் தின்று கொண்டிருக்கும் போதே ஆடம்பர வேட்கையும் புகுந்து அலக்கழித்துக் கொண்டிருக்கிறது.
 

பாமர மக்களை முன்னேற்றித் தேசத்தை விடுதலை செய்யும் பொறுப்பு நமது நாட்டுப் பிரபுக்களைச் சார்ந்திருக்கிறது. இந்தப்புண்ணிய கைங்கரியத்துக்கு இவர்களே தகுதி வாய்ந்தவர்களாகவும் சௌகரிய முள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களிடமுள்ள திரவியத்தை இவர்கள் தக்க வழிகளில் பயன்படுத்த வேண்டும். எல்லா ஊர்களிலும் நடையுடை பாவனை விஷயத்தில் எல்லாரும் பணக்காரர்களையே ஆதர்சமாகப் பின் பற்றுகிறார்கள். கலியாணம் காது குத்தல் முதலிய விசேஷ நாட்களில் நமது பிரபுக்கள் செய்யும்டம்பச் செலவுக்கு அளவே கிடையாது. இவ்விஷயங்களில் இவர்களைச் சூழ்ந்துள்ள நடுத்தரக் குடும்பத்தினர் பாடும் ஏழைகள் பாடும் திண்டாட்டத்தில் முடிகிறது. பணம் படைத்தவர்களைப் போல் செலவு செய்ய இவர்களால் எப்படி முடியும்? சாதாரண நிலையிலுள்ளவர்கட்குக் கடன் வாங்கியாவது ஆடம்பரமாகச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. விசேஷ நாட்களில் ஏழைகளின் துயரத்தைக் கூறவும் வேண்டுமோ?

 

இவர்களுடைய கஷ்ட நஷ்டங்களைப் பணக்காரர் லட்சியம் செய்வதில்லை. அவர்கட்குப் பலருடைய புகழுரைகளே குறி. டம்பத்துக்காக இலட்சக்கணக்காகச் செலவு செய்து கோவில்களைக் கட்டுகிறவர்களும், தங்களுடைய சௌகரியத்துக்கும் பெரிய உத்தி, பாமர பல எமயோகஸ்தர்களுடைய சௌகரியத்துக்கும் மடம் சத்திரங்களைக் கட்டுகிறவர்களும், பலர் மெச்ச அன்னதானம் செய்கின்றவர்களும் நமதுநாட்டில் பலரிருக்கின்றனர். இப்படி வீண் ஆடம்பரத்துக்காகச் செய்யுங் காரியங்களால் புண்ணியங் கிடைத்துவிடு மென்றோ பொதுமக்கட் குரிய சிறந்த ஊழிய மென்றோ எப்படி மதிக்க முடியும்?

 

சாதாரணமாக சட்ட சபை, ஜில்லா, தாலுகா போர்டுகட்கும், நகர பரிபாலன சங்கங்கட்கும் அங்கத்தினராக விரும்பு வோருட் பெரும்பான்மையோர் ஆடம்பரத்தையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் உண்மையான பொது ஜன ஊழியத்துக்காக ஸ்தானம் பெற விரும்புகின்றார்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஊழியமே நோக்கமாக உள்ளவர்கள் தேர்தல் காலங்களில் பல்லாயிரக் கணக்கான ரூபாக்களைச் செலவழிக்க வேண்டுவதில்லை. அத்தகையவர்களை ஒரு பைசாச் செலவின்றியே பொது ஜனங்கள் தேர்ந்தெடுத்து விடுவார்கள். இதனால் ஆடம்பரம் ஒன்றே இவர்களுடைய பிரதான நோக்கம் என்பது இனிது விளங்கும். உண்மையில் இவர்கட்குப் பாமர மக்களிடம் அநுதாப மிருப்பின் தேர்தல்களில் வீண் செலவு செய்யும் பொருள்களைக் கொண்டு விவசாயம், கைத்தொழில், வர்த்தக அபிவிருத்திகட்கான கல்வி ஸ்தாபனங்கட்குச் செலவிடுதல் பெரும் பயன் விளைப்பதாகும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தல்களில் பெருந் தொகையைச் செலவு செய்து அங்கத்தினராகியும் நாட்டின் உண்மை முன்னேற்றத்திற்கான காரியங்களை இவர்கள் சாதிப்பதாகவும் தெரியவில்லை. ஆடம்பரத்துக்காகத் தேர்தல்களில் வீண் விரயம் செய்து செய்து கடனாளிகள் ஆவதுதான் கண்ட பலன்.

 

இதனால் ஒவ்வொருவரும் ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டு மென்றே வற்புறுத்துகிறோம். மனவமைதி - சாந்தி வேண்டு மென்றால் எளிய வாழ்க்கையை மேற்கொள்வதனால்தான் அடைய முடியும். ஆடம்பரத்தால் எக்காலத்திலும் திருப்தி ஏற்படாது. ஆடம்பரம் அல்லல்களின் ஊற்று. ஆடம்பரத்தை விரும்புவோர்கள் தங்கட்கும் தங்களைச் சூழ்ந்தவர்கட்கும் கேடு சூழ்பவர்களாகிறார்கள். உண்டி, உடை, நகை, வாகனாதிகளில் ஆடம்பாத் தன்மை இருக்கக்கூடாது. அவற்றில் அறிவுடைமை விளங்கவேண்டும். எல்லாம் உண்மையான தேவையைப் பொறுத்ததாயும் போதிய சௌகரியத்தைப் பொறுத்ததாயுமிருக்க வேண்டும். புண்ணியந் தேடவென்று பொருளற்ற விஷயங்களில் பொருளைத் தொலைக்கக் கூடாது. இங்ஙனம் ஆடம்பரமற்ற அறிவுடைய வாழ்க்கை நடத்தினால் நாடு முன்னேற்ற மடைந்து வெகு விரைவில் விடுதலைக்குப் பக்கத்தில் வந்துவிடும்.

 

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - டிச்மபர் ௴

 

No comments:

Post a Comment