Wednesday, August 26, 2020

 

ஆடம்பர வாழ்க்கை

 

மக்கள் வாழ்க்கையின் நோக்கம் வாளா உண்டு, உடுத்து, உறங்கிக் கழிதல் அன்று என்பது சர்வ சமய சம்மதமான முடிவு, மக்கள் ஆறாவதறிவாகிய பகுத்தறிவு-காரண காரிய விளங்கப்பெற்றவர். இதனால் இம்மை இன்பத்துடன் மட்டும் நில்லாது, மறுமை இன்பத்தையும் நாடி அடையும் தகுதி வாய்ந்தவராவர். உலகத்திலுள்ள எல்லா உயிரினும் உயரிய நிலையில் உள்ளவர் மக்கள் என்பதைக் கூறவேண்டுவதில்லை. இத்தகைய மக்கள் இப்பொழுது எத்தகைய வாழ்க்கையை மேற்கொண்டிருக்கின்றனர் என்பதையும் மக்கட்குரிய நல்வாழ்க்கை முறை எது என்பதையும் ஒருவாறு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

உலகில் எந்நாட்டை நோக்கினும் அங்காட்டில் மக்கள் வாழ்க்கையில் அமைதி நிலவுவதாகத் தோன்றவில்லை. உலகமே இப்பொழுது வறுமையில் - பொருண்முட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்று சுருங்கக்கூறலாம். இவ்வறுமைக்கு- பொருண்முட்டுக்குரிய மூலகாரணம் என்ன என்பதை நேயர்கள் கூர்ந்து சிந்தித்தல் வேண்டும். சூரியன் உதிக்கவில்லையா? மழை பொழியவில்லையா? காற்றடிக்கவில்லையா? நிலம் விளையவில்லையா? மக்கள் உழைக்கவில்
லையா? எல்லாம் நிகழ்ந்தவண்ணமாகவே இருக்கின்றன. ஐம்பெரும் பூதங்களும் தத்தம் கடமைகளினின்றும் ஒரு சிறிதும் தவறுவதில்லை. விதிப்படி அவை நடைபெற்றே வருகின்றன. எனினும் மக்கள் வாழ்க்கை அமைதிக்குறைவு - இன்ப வறுமையில் ஆழ்ந்து கிடக்கின்றது. மாக்கள் வாழ்வைக்காட்டினும் மக்கள் வாழ்வு பன்மடங்கு இழிந்ததுவிட்டது என்று கூறுவது மிகையாகாது. பகுத்தறிவுள்ள மக்கள் வாழ்க்கை இவ்வாறு இழிநிலை எய்தக் காரணம் என்ன? மக்களின் ஆடம்பரம் "நாகரிகம்'' என்பதே எமது கருத்து.

 

இக்காலத்தில் ''உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்'' என்ற அவ்வையின் அமுத வாக்கு ஆகாயத்தில் பறந்து விட்டது. உண்பதில் ஆடம்பரம்! உடுப்பதில் ஆடம்பரம்! உறங்குவதில் ஆடம்பரம்! நடையில் ஆடம்பரம்! "சர்வம் ஆடம்பர மயம் ஜகத்' என்ற நிலைக்கு மக்கள் வாழ்க்கை உயர்ந்துவிட்டது. இந்த ஆடம்பரந்தான் நாகரிகம் என்ற நன்மொழியால் இப்பொழுது வழங்கப்படுகிறது. ஆனால் நாகரிகம் என்பதின் உண்மைப் பொருள் வேறு. நாகரிகம் என்பது கண்ணோட்டம். தாக்ஷண்யம். அதாவது அன்பும் அருளும் உடையராயிருத்தல் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இப்பொழுதைய ஆடம்பா நாகரிகம் மக்களிடையே கண்ணோட்டத்தை - தாக்ஷண்யத்தை வளர்க்கின்றதா என்று கேட்கின்றோம். ஆடம்பரமோகம் மக்களிடையே பேராசை பொறாமை முதலிய இழிந்த தீக்குணங்களையே மேன்மேலும் வளர்த்து வருகின்றது. ஐம்பொறி வேட்கையை அளவுக்குமீறி உண்டாக்கி வருகின்றது. இன்று மக்கள் வாழ்க்கையை அல்லலுக்குட்படுத்தியிருப்பது ஆடம்பரம் ஆடம்பாம் என்று அஞ்சாது கூறிவிடலாம். மன்பதைக்கு ஆடம்பரத்தில் மோகம் குறையும் நாள் எந்நாளோ- அந்நாளே உலக அமைதிக்கான ஆரம்ப நன்னாளாகும்.

 

மேனாட்டு ஆடம்பர நாகரிக வெள்ளம் நமது நாட்டில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. மேனாட்டாரிடமிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய குணங்கள் பலவுண்டு. ஆனால் நம்நாட்டு மக்கள் அவற்றில் கருத்தைச் செலுத்தாது அவர்களிடம் காணும் வெறும் வெளி வேடங்களிலும் ஆடம்பரங்களிலுமே கருத்தைச் செலுத்திக் கண்ணழிந்து தவிக்கின்றனர். இப்பொழுது மேனாட்டாருக்கே தங்கள் ஆடம்பரவாழ்வில் அருவருப்புத் தோன்றி வருகிறது என்னும் உண்மையைப் பத்திரிகைகளின் வாயிலாகப் படித்து வருகின்றோம். ஆடம்பா நாகரிக உச்சியில் தாண்டவமாடிக் கொண்டிருந்த மேனாடுகளில் இப்பொழுது நிருவாண சங்கங்கள்
தோன்றத் தொடங்கியிருக்கின்றன. செயற்கை வாழ்வை வெறுத்து இயற்கை வாழ்வுக்குத் திரும்பவேண்டும் என்று பல அறிஞர்கள் சங்கவாயிலாகவும், பத்திரிகைவாயிலாகவும், புத்தகவாயிலாகவும் பிரசாரம் செய்துவருகின்றனர். ஆங்காங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆடம்பாச் செயற்கை வாழ்வை நீத்து எளிய இயற்கை வாழ்வை மேற்கொள்ளத் துணிந்துவிட்டனர் என்றும் அறிகின்றோம். இவையெல்லாம் எதை விளக்குகி விளக்குகின்றன? மேனாட்டாரிடையே வாழ்வின் மோகம் புளித்துக்கொண்டு வருகிறது என்பதை விளக்கவில்லையா?

 

இத்தாலிய சர்வாதிகாரியான முஸோலினி அவர்கள் தமது நாட்டு மக்கட்கு இயற்கையோடியைந்த வாழ்க்கையை மேற்கொள்ளுமாறு உபதேசம் செய்து வருகிறார். சமீபத்தில் ஒரு வைத்திய சபையில் பேசிய போது வெளிச்சம், காற்று முதலியன இன்பவாழ்க்கைக்கு இன்றியமையாதன என்றும், உண்டி, உடை, உழைப்பு, உறக்கங்களெல்லாம் இப்பொழுது இயற்கை நெறியினின்றும் பிறழ்ந்து செயற்கை வழியிற் சென்று கொண்டிருக்கின்றன என்றும், இவற்றை மீண்டும் இயற்கை நெறிக்கே திருப்ப வேண்டும் என்றும் எடுத்துக் காட்டியிருக்கிறார். தமது நாட்டு மக்கட்குப் பழ உணவு
நற்பலன் அளித்து வருதல் அநுபவத்தில் விளங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.  பெரும்பான்மையான மக்கள் வறுமையால் வாடுதற்கும், பிணிக் கூட்டங்களின் தோற்றத்திற்கும் மூலகாரணமாய் விளங்கும் ஆடம்பரச் செயற்கை உணவுகளைக் கைவிட்டு, சுவையும் நலமும்கலந்த இயற்சையுணவாகிய பழமுதலியவைகளையே மேற்கொண்டு, காற்றுக்கும், வெளிச்சத்திற்கும் தாராளமாக இடந்தந்து, மக்கள் இயற்கை நெறியில் ஈடுபட்டால் உலகவாழ்வில் இன்பமும் ஆரோக்கியமும் குதிகொணடாடும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. செயற்கையுணவும் வாழ்வுமே மக்களை மருத்துவர் இல்லங்களை நாடச்செய்கின்றன. மருந்துகளாலும், சத்திர சிகிச்சைகளாலும் மக்கள் சுகவாழ்வடைதல் அரிது என்னும் உண்மை நாளுக்குநாள் தெளிவாகி வருகிறது. நமது நாட்டுமக்கள் பணடைக் காலத்தில் இயற்கையோடியைந்த பாழ்வை மேற்கொண்டிருந்தமையால் நூறாண்டளவும் சுகமாக வாழ்ந்திருந்தனர். அத்தகைய பெருமை வாய்ந்திருந்த கமது நாட்டில்தற்கால சராசரி மாணவிகிதமும், ஆயுளளவு விகிதமும் மிகவும் அஞ்சத்தக்க முறையில் இழிவடைந்து நிற்கின்றன. இதற்கென்ன காரணம்? மேனாட்டு ஆடம்பர நாகரிகமோகம் என்பதில் எள்ளளவேனும் ஐயம் உண்டோ.

 

மக்களின் உடலை அரிக்கும் பிணிக் கூட்டத்திற்கும், துன்பப் பெருக்கத்திற்கும், உலக வாழ்வின் அமைதியைக் கெடுக்கும் பேராசை பொறாமை முதலிய தீக்குணங்கட்கும் அடிப்படையாய்- முதற்காரணமாய் விளங்கும். ஆடம்பர நாகரிகமோகத்தை மக்கள் அறவே வெறுத்து நீத்தல் வேண்டும். மனிதனுக்கு மனிதன், சமூகத்திற்குச் சமூசம், நாட்டுக்குநாடு பகைமை பாராட்டச் சுயநலப்போர்தாடுக்கத் தூண்டும் பேய் இவ்வாடம்பா நாகரிகம் என்னும் உண்மையை ஒவ்வொருவரும சிந்தித்து உணர்தல் வேண்டும். ஆடம்பர நாகரிகம் பிறர் நலம் பேண விடுவதில்லை. நாட்டுச் சமய சாஸ்திரங்களெல்லாம் அவாவறுத்தலை-
புலனடடக்கத்தைப் பெரிதும் வற்புறுத்தி நிற்கின்றன. பற்றறுத்தலே வீடுபேறு என்று பாரித்து விளம்புகின்றன. துறவு நிலையைத் தூய அறமாகத் துதிக்கின்றன. இவ்வாறு கூறும் சாஸ்திரங்களின் உண்மைக்கருத்து என்னை? மக்கள் சுயநலத்தில், ஆடம்பரத்தில், பேராசையில், பொறாமையில், போராட்டத்தில் இறங்கி வாழ்க்கையைத துன்ப மயமாகச் செய்து கொள்ளக்கூடாது என்பதேயன்றோ? மக்களை விலங்குத்தன்மையினின்றும் நீக்கித் தெய்வத்தன்மையை - துன்பமற்ற இன்பவாழ்க்கையை மேற்கொள்ளுமாறு செய்யவே நம் நாட்டுச் சான்றோர் அவாவறுத்தலை துறவறத்தை அளவு கடந்து வற்புறுத்திப் போற்றி விதித்தனர். இவ்வுண்மை உணராமல் "நமது சமய சாஸ்திரங்கள் எல்லா மக்களும் சந்நியாசிகளாகுமாறு உபதேசிக்கின்றன, மண் பெண், பொன்களை வேண்டாம் என்கின்றன- ஆதலால் உலகத்தில் மக்கள் வாழ்க்கைக்கு அவை பயன்படா" என்று சாஸ்திரங்களைப் புறக்கணிப்போர் அறியாதவரே என்பது எமது துணிவு. சமய சாஸ்திரங்கள் ஆடம்பா அநாகரிக - அநியாயங்களை அழிக்க எழுந்த அற்புத வாளாயுதங்கள்
என்றே நாம் போற்றுகின்றோம்.

 

தற்கால மக்கள் வாழ்க்கையில் தேவையல்லாத தேவைகள் மலிந்து பெருகிவிட்டன. இத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் செய்யும் முயற்சிகளிலேயே எல்லாச் சங்கடங்களும் தலையெடுக்கின்றன. இக்காலத்தில் மனிதன் தன் வாழ்வுக்காக ஆகாயத்தில் பறக்க வேண்டியிருக்கிறது. கடலைக் கடக்க வேண்டியிருக்கிறது. நாட்கணக்காக, வாரக்கணக்காக, மாதக்கணக்காக, ஆண்டுக்கணக்காக மனைவி, மக்கள், வீடு, வாசல்களைத் துறந்து வருந்த வேண்டியிருக்கிறது. சுருங்கக்கூறின் மனிதன் ஒருசாண் வயிறு வளர்க்க-மானங்காக்க உலகத்திலுள்ள பலவேறு நாடுகளையும் எதிர் நோக்கி ஏங்க வேண்டியவனாகிவிட்டான். பண்டைக் காலத்தைப் போல தன்னூரை-தன்னாட்டை மட்டும் நம்பி ஒருவன் இக்காலத்தில் தனது வாழ்க்கையைப் பூர்த்தி செய்து கொள்ளும் நிலையில் இல்லை. இவ்வளவுக்கும் மனிதன் தற்கால விஞ்ஞானசாஸ்திர உதவியை எதிர்பார்த்து தன்துன்பப் பெருக்கையெல்லாம் பொறுத்துக்கொண்டு வாழ்கின்றான். இதன் முடிவு என்னாம் என்பதை ஆண்டவனே அறிவான்.

 

உலகம் எல்லாவளங்களும் நிறைந்தது. தன்னிடம் தோன்றும் உயிர்களை உலகம் தாங்கத் தயாராயிருக்கிறது. தன்னால் தாங்கமுடியாத உயிர்களை அது உற்பத்தி செய்வதில்லை. மனிதனது கண்ணுக்கே உலகம் துன்பமயமாகத் தோன்றுகிறது. ''நான் ஏன் பிறந்தேன்?'' என் மனி தன் ஏங்கித் தவிக்கின்றான். மற்ற உயிர்கட்கு உலகம் துன்பமயமாகத் தோன்றுவதில்லை என்று எளிதில் ஊகிக்கப் பலகாரணங்கள் உண்டு. விலங்கு பறவை முதலிய உயிர்களெல்லாம் மனிதனை விட உற்சாகமாய் உண்டு களித்து இன்பவாழ்வு நடத்துகின்றன என்று தெரிகிறது. இன்றைக்கு வேண்டும் நாளைக்கு வேண்டும் என்ற பேராசைக் கவலை அவைகட்கில்லை. ஆனால் இவ்வுயிர்களின் வாழ் மனிதன் மதிப்பதில்லை. தன் வாழ்வே பெரிதென்று மனிதன் இறுமாந்து பெருமை பேசுகின்றான். ''விலங்கு வாழ்க்கை'' என்று அவைகளின் செயல்களை இழித்துரைக்கின்றான். அவைகட்குப் பகுத்தறிவு   இல்லை என்று ஏளனம் செய்கின்றான். உண்மையில் இக்காலத்தில் விலங்கினவாழ்வு சிறந்ததா மனிதவாழ்வு சிறந்ததா என்று சற்றே சிந்தித்துப் பார்க்குமாறு சேயர்களை வேண்டுகின்றோம். பகுத்தறிவுள்ள மனிதவாழ்க்கை பகுத்தறிவற்ற விலங்கின வாழ்வினும் பன்மடங்கு துன்பம் நிறைந்தது என்னும் உண்மை சிறிது சிந்திப்பார்க்கும் நன்கு விளங்கும்.

 

ஆடம்பரத்தைக் கண்டிக்கும் முகத்தான் மேனாடுகளில் தோன்றிக் கொண்டிருக்கும் நிருவாணவாழ்வை நமது நாட்டுமக்கள் மேற்கொள்ள வேண்டுமென்றோ, பகுத்தறிவற்ற விலங்கு வாழ்வில் ஈடுபடவேண்டும் என்றோ நாம் கூறுவதாக நேயர்கள் பொருள் கொள்ளக்கூடாது. ஆடம்பரத்தின் அநாகரிகத்தை விளக்கவே அவைகளை உதாரணமாக எடுத்துக்காட்டினோம். பகுத்தறிவு படைத்த மக்களிடையே இன்பவாழ்வு மறைந்து விட்டது என்று ஏங்கியே அவைகளைக் குறிப்பிட்டோம். உலகில் எங்கு நோக்கினும் வேலையில்லாத் திண்டாட்டங்கள் - கிளர்ச்சிகள் - போர்கள் செறிந்து கிடக்கின்றன. ஒரு சிலர் இந்திரபோகம் நுகரப் பெரும்பான்மையோர் உண்டிக்கும் உடைக்கும் ஏங்கித்திரியும் நிலைமை நீடித்திருக்கும் வரை உலகில் அமைதி நிலவல் அரிதினும் அரிதாகும். பொருள் படைத்தவர்கள் எல்லோரும் பொதுநலத்தைப் பேணல் வேண்டும். அவர்கள் ஆடம்பரமற்ற எளிய வாழ்வை மேற் கொள்ள வேண்டும். ஆடம்பரம் நீங்கினால் உலக வறுமையும் – இது காரணமாகத் தோன்றும் தொல்லைகளும் நீங்கும். பாரதத்தாயின் உத்தம புதல்வராகிய மகாத்மா காந்தியடிகள் அரைத்துணியுடன் வாழும் உண்மையை ஒவ்வொருவரும் கூர்ந்து சிந்திக்கவேண்டும். காந்தியடிகள் ஆடம்பரத்தை அறவே வெறுக்கின்றார். எளிய வாழ்வே இனியவாழ்வு என்று மனமொழி மெய்களால் உலகமக்கட்கு உபதேசித்து வருகிறார். ''நாகரிக'' நாடுகளெல்லாம் காந்தியடிகளின் பொன்மொழிகளை எதிர்நோக்கி நிற்கின்றன. நம் நாட்டுச் சமய அறிஞர் எல்லாரும் மக்கள் வாழ்க்கையைப் பண்படுத்த முற்படவேண்டும். மடாதிபதிகள் இத்துறையில் தொண்டாற்றினால் பெரும் பயன் விளையும். ஆண்டவன் அருள்புரிவானாக. தெய்வத்தன்மையுள்ள எளிய இனிய வாழ்வு ஓங்குக.

 

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - பிப்ரவரி ௴

 

 

   

 

No comments:

Post a Comment