Wednesday, August 26, 2020

 

இயற்கை பெருமையும் செயற்கைப் பெருமையும்

 

உலகின்கண் பெருமையடைய விரும்புவோர் பலரிருக்கின்றனர். அதுபற்றி நாம் சந்தோஷிக்கிறோம். அரிதாகிய மனிதவகுப்பிற் பிறந்தவரனைவருமே பெருமையோடிருக்க விரும்பாராயின் அவரெடுத்த அவ்வருமைப் பிறவி வீண் பிறவியேயாம். ஆனால் பெருமையாவதியாது? அதை நாம் முன்னரறிந்து கொள்ளவேண்டும்.

 

பெருமையாவது, செய்தற்கருமையானவற்றைச் செய்தல், அகங்கார மில்லாதிருத்தல், பிறர் குற்றங் கூறாதிருத்தல் முதலிய நல்ல குணங்களால் பெரியாராய் விளங்குவோருடைய தன்மையாம் என்று பொதுமறை கூறுகின்றது. இதன்படி, இக்குணங்களை யுடையாரது மகிமையே பெருமையாம்; இஃதியற்கையில் அமைந் தது. இவ்வியற்கைப் பெருமையுடையாரே எல்லோரையும், எல் லாவற்றையும் அடக்கியாளுந் திறம் பெற்றவராவர். இந்த இயற்கைப் பெருமையில்லாதவர் ஒரு சிறு பிராணியிடத்திலுங் கூடத் தம் திறத் தைக்காட்டிப் பெருமை யடைதல் முடியாது. இத்தகையினர் தம்மைப் பிறர் பெருமைப்படுத்த விரும்புவது வெறுந் தற்புகழ்ச்சி யாய் முடியும். இன்னவர், ஈ, எறும்பு, வண்டு முதலிய பூச்சிகளிடத் தும் இச்சென்னையம் பதியில் இப்போது அளவு கடந்து பெருகிப் பரவியுள்ள அற்பப் பிராணியான கொசுகைப் போன்ற அற்பப் பிராணிகளிடத்திலுங்கூட - தங்கள் வன்மையைக் காட்டமுடியாமல் அவமான மடைவர். அவர்களின் கதி, ஒரு பெருத்த சிங்கம் சிறிய கொசுகு ஒன்றின் வசப்பட்டுத் திக்கு முக்கலாடிய கதியாம்.


அந்தக் கதையாவது: -

 

ஒரு காட்டில் மிருகேந்திர னொன்றிருந்தது. அதற்கு அங்குள்ள எல்லா மிருகங்களும் மிகவும் பயந்து வாழ்ந்து வந்தன. ஒருநாள் அந்தச் சிங்கம் கம்பீரமான பார்வையுடன் நமக்கு மிஞ்சின பிராணியொன்றுமில்லை யென்றகங்கரித்து அக்காட்டில் ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தது. அப்போது ஒரு கொசுகு கொய் என்ற சப்தத்துடன் சிங்கத்தினிடம் வந்து அதன் முகத்தைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தது. அதை யச்சிங்கம் கோபப் பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தது. சிங்கம் பராமுகமாயிருக்குஞ் சமயம் பார்த்துக் கொசுகானது, அதன் மூக்குத் துவாரம் ஒன்றனுள் நுழைந்து, ஓரிடுக்கிலமர்ந்து, ஊசி போன்ற தனது மூக்கினால் இரத்தம் பெருகச் சிங்கத்தின் மூக்கைக் குடைந்து கொண்டிருந்தது. சிங்கத் கத்திற்கு வேதனை அதிகமாயிற்று.

 

பாதை பொறுக்க முடியாத சிங்கம் "அடா! இந்த அற்பக் கொசுகு நமது கௌரவத்தையும் கம்பீரத்தோற்றத்தையும் கவனியாமல் எவ்வாறோ நம்முடைய நாசித்துவாரத்தில் புகுந்து நம்மைத் தொந்தரை செய்கின்றதே. இதை வெளியேற்ற நம்மாலாகவில்லையே. இவ்வளவு தானா நமது பராக்கிரமம். நாம் எல்லா மிருகங்களுக்கும் மேற்பட்டிருக்கின்றோமென்று நினைத்தது வீண் பெருமையாயிற்றே; இனி நாம் வீண் பெருமைக் காசைப்படுதலை விட்டு விடவேண்டும்" என்று தனக்குள் சொல்லித் துக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

 

கடைசியில் கொசுகானது சிங்கத்தின் மூக்கினின்றும் வெளிப்பட்டு அதைச் சுற்றிச்சுற்றி ரீங்காரம் செய்துகொண்டு திரிந்தது. இது சிங்கத்திற்குப் பெருத்த அவமானமாயிருந்தது. அதனால் அக்கொசுகை யொன்றும் செய்ய முடியவில்லை. பிறகு கொசுகு பறந்து போயிற்று. இங்ஙனம் இயற்கைப் பெருமையில்லாத சாதாரண மனிதர் கேவலம் கொசுகுக்கும் அடங்கி நடக்கக் கூடியவராவரென்பதை இப்போது சென்னையில் உண்டாகியிருக்கும் கொசுகின் தொந்தரவு நன்கு விளக்கும்.

 

கொசுகுகள் மிஞ்சிக் கொஞ்சமும் பயமின்றி வீடுகளின் அறைகளுக்குட் புகுந்து ஆங்காங்கு நித்திரை செய்பவரைக் கடித்துப் பொழுது விடியுமட்டும் தூங்க விடாமல் உபத்திரவப்படுத்துகின்றன. படுத்துக் கொண்டிருப்பவர் இவற்றை அகற்ற வியலாமல் துன்புறுகின்றனர். வெகுநேரம் வரை விசிறியால் விசிறிக் கை நோகிறதே என்று கையைக் கீழே வைத்தால் கொசுகுகள் உடனே அவர்களைத் தொந்தரை செய்யத் தொடங்கி விடுகின்றன. எவ்வளவு நோந்தான் விசிறிக் கொண்டிருக்க முடியும்? இந்த உபத்திரவத்தை நீக்கிக் கொள்ள வழி தெரியாமல் ஜனங்கள் விழிக்கின்றனர். இந்த அற்ப பிராணியாகிய கொசுகினிடத்தில் மனிதர் வல்லமை செல்லவில்லை.

 

அதனிடத்தில் தற்பெருமை காட்டிக்கொள்ள முடியவில்லை. இந்தக் கொசுக்கடியால் தூக்கங் கெட்டுத் துன்ப முண்டாவதோடு மலேரியா காய்ச்சல், ஈரல் வீக்கம் முதலிய பலவியாதிகளுமுண்டாய் மனிதர்க்குக் கொடுந்தீமைகளை விளைவிக்கின்றன. இத்தகைய சங்கடங்களால் சிலர், " சாக்கடைகளைப் பூமிக்குள் புக விட்டதனாலேயே கொசுகுகள் தங்க இடமின்றி எங்களிடங்களிற் புகுந்து எம்மை வருத்துகின்றன; இதனை நகர சங்கத்தார் கவனித்து ஒரு நல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் " என்று கதறுகின்றனர். பல பத்திரிகைகளும் இதைப்பற்றி முறையிடுகின்றன. என்ன முறையிட்டும், குறை கூறியும் கொசுகின் உபத்திரவம் நீங்கின பாடில்லை.

 

அதனை அடித்துத் துரத்தவும் மனிதர்க்கு வன்மையில்லை. இதைப் பற்றி ஜனங்கள் கடவுளிடம் முறையிட வேண்டியவர்களாகவே யிருக்கிறார்கள். இத்தகைய துன்பங்களை நீக்கக் கடவுளுக்கே சக்தி யுண்டு; சாதாரண மனிதர்க்கு அவ்வன்மையில்லை. ஆனால் இயற்கை மகிமையும் பெருமையுமுடைா தெய்வத்தன்மையுள்ள பெரியோர்க்கு உலக துன்பங்களை நீக்கும் சக்தியுண்டு.

 

ஆதலால், உலகச் சுழற்சியில் சிக்கிய மானிடர்களாகிய நாம் எவ்வகையிலும் தற்பெருமை கொள்ளலாகாது; ''கடவுளே! எமக் கோராற்றலுமில்லை; சிறு கொசு கிடத்திலும் எங்கள் வன்மை செல்லாது; எல்லாவன்மையும் உனக்குண்டு, உன்னடியாராகிய இயற்கைப் பெருமையுள்ள பெரியார்க்குண்டு. எம்மை நீயே உலக துன்பங்களினின்றும் நீக்கிப் பாதுகாத்தருள வேண்டும் " என்று பணிவு கூறி, கடவுளைப் பணிந்து அடங்கின முறையில் ஒழுக வேண்டும். நாம் இவ்வகைப் பணிவைக்கொண்டால் மட்டுமே நமக்கு இயற்கைப் பெருமையும் மகிமையுமுண்டாகும்; உலக துன்பம் நீங்கி இன்பமுண்டாகும்; இயற்கைப் பெருமைக்குரிய காரியங்களைச் செய்யாமல், வீண் பெருமையாகிய செயற்கைப் பெருமை - போலிப் பெருமை தேட நினைப்பதால் புகழில்லை. எல்லோரும் நல்லொழுக் கங்களைக் கடைப்பிடித்து இயற்கைப் பெருமையடைய இறைவன் திருவருள் புரிவானாக.


 ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஜுன் ௴

 

No comments:

Post a Comment