Wednesday, August 26, 2020

 

இயற்கையறிவும் பகுத்தறிவும்

 

இவ்வுலகத்தில் நடக்கும் காரியங்கள் எவ்விதமாக மாறினாலும், மனிதர்கள் மற்ற பிராணிகளை விட மேலானவர் என்பது ஒருக்காலும் மாறாது. ஆயினும் சில சமயங்களில் ஜீவராசிகளின் இயற்கை யறிவானது மனிதரது பகுத்தறிவைவிட மேலானதாகத் தோன்றுகிறது.

                              

மனிதர்களுக்கும் மற்றுமுள்ள ஜீவராசிகளுக்கும் உள்ள வித்தியாசமென்ன வென்றால், மனிதருக்குப் பகுத்தறிவும், இயற்கையறிவும், மிருகங்களுக்கு இயற்கையறிவு மாத்திரமும் இருப்பதுந்தான்.

 

ஒரு மனிதன் தானாக ஒன்றும் செய்ய முடியாது. அவனுக்கு ஆயுதங்கள் தேவை. மிருகங்களுக்கோ வெனின், கடவுள் கொடுத்த கை கால்களே போதுமான ஆயுதங்கள். கலப்பையில்லாமல் மனிதன் நிலத்தைச் சீர்திருத்தி, உழுது, பிறகு விதைத்து, கத்தியில்லாமல் பலனை அறுத்து, வேண்டிய காரியங்களைச் செய்து ஜீவனம் செய்ய முடியாது. ஆனால் பறவைகளுக்கும், மற்றவற்றிற்கும் காட்டில் கிடைக்கும் காய்கனிகளாகாரம். மற்றும் மனிதன் தான் செய்யும் காரியங்களில் சில தவறுகள் செய்யக்கூடும். ஆனால், மற்ற மிருகங்கள் அவ்வாறில்லை. நாம் எப்பொழுதாவது ஒரு பக்ஷி கூடுகட்டத் தெரியாமல் ஒரு மரத்தின் மீதுட்கார்ந்து விசனிப்பதைப் பார்த்திருக்கிறோமா? தேனீக்கள் தங்கள் சிறு அறைகளை வெவ்வேறு உருவமுடையனவாய்க் கட்டுகின்றனவா? மிருகங்களுக்கு நோய்வந்தால் மற்ற மிருகங்களுக்குத் தொந்தரை கொடுப்பதில்லை. தாமே ஏதோ புல் பூண்டைத் தேடித் தின்று சௌக்கியமடைகின்றன. மனிதருக்கு நோய் வந்தாலோ, அநேகருக்குத் தொந்தர வுண்டாகிறது. இன்னும் தப்புகள் செய்து தான் கடைசியில் ஒருவிதமான நல்ல ஸ்திதிக்கு அவர்கள் வரக்கூடும். மிருகங்களோ கால வித்தியாசத்தினால் மாறுதல்களடைவதில்லை. ஆனால், மனிதரது புத்தியும், சாதுர்யமும் அவர்களை நிமிஷத்திற்கு நிமிஷம் வேறாக்கி விடுகின்றன. தங்கள் தங்கள் காரியங்களுக்கு மிருகங்கள் இயற்கையறிவையும், மனிதர் செயற்கை யறிவையும் உபயோகப்படுத்த வேண்டியிருக்கிறது. மனிதரது செயல்களோ நிமிஷத்திற்கு நிமிஷம் மாறுகின்றன. ஆனால் ஒரு பக்ஷியின் கூடோ நூறு வருஷத்திற்கு முன் அதன் இனத்துப் பக்ஷிகள் கட்டிய கூட்டைப் போலவேயிருக்கும். இம்மூன்று காரணங்களால் பகுத்தறிவு இருப்பதற்கும் இல்லாததற்கும் வித்தியாசம் சிறிது விளங்கும். மிருகங்களின் பகுத்தறிவில்யாதொரு ஒற்றுமையும், ஆராய்ந்து பார்க்குந் தன்மையும் கிடையாது. ஆனால் அது சில சமயங்களில் வெளித் தோற்றத்திற்காவது பகுத்தறிவாகத் தோன்றும். ஒரு தேனீயானது சில புஷ்பங்களினின்று மாத்திரம் தேனைச் சேகரிக்கின்றது; புதிதாய் வந்த ஆட்டுக்குட்டி கூட இது பால், இது பாலல்ல என்பதைக் கண்டு பிடிக்கும் சக்தியுடையதாய் இருக்கிறது. ஒரு ஆமை கடலினின்று எடுத்துக்கொண்டு போய் வேறு இடத்தில் விடப்பட்டால், அது திரும்பவும் தண்ணீருள்ள இடத்திற்கே செல்லும். இவ்வித குணம் மிருகங்களினிடம் இருக்கும் வரை அது இயற்கையறிவு; மனிதரிடம் இருந்தால் பகுத்தறிவு.

 

இயற்கையறிவு சமயத்துக் கேற்றபடி மாறுவதில்லை என்று தற்காலப் பரீக்ஷைகள் கூட நிரூபிக்க முடியவில்லை. ஆனால் மாறுகிறது என்பதை நாம் கண்கூடாக் காணலாம். நாம் வழக்கமாய்க்கூறும் " பச்சோந்தி " என்ற ஒருவகை ஓணான் மரத்தின்மே லிருக்கும் போது பசுமையாய் இருப்பதையும், நிலத்தில் வந்தால் அந்நிலத்தின் வர்ண முடையதாய் இருப்பதையும் நாம் பார்க்கிறோம். தேனீக்கள் மேசை முதலியவற்றின் மேல் கட்டும் கூடுகளை சாய்வாகக் கட்டுகின்றன வென்று கூறுகின்றனர் பலர். இது இயற்கை யறிவாயினும் செயற்கை யறிவிற்கு ஒப்பிடத்தக்கது. காசி முதலிய இடங்களில் குரங்குகள் வழிப் பிரயாணிகளின் வஸ்துக்களை எடுத்து வைத்துக்கொண்டு, அவர் ஏதாவது தீனி கொடுத்தால் தான் அவற்றைத் திருப்பிக் கொடுக்கின்றனவாம்.

 

எறும்புகள் எவ்வளவு சிறியவையாயினும், மெச்சத்தக்க காரியங்களைச் செய்கின்றன. அவை தங்களுடைய இனத்தாரை அதிசீக்கிரம் கண்டு பிடித்துக் கொள்கின்றன. அவை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருப்பது மல்லாமல் வேலையைச் சுலபவழியில் திருப்பிக் கொள்கின்றன. உதாரணமாக, ஒரு மேலிடத்திலிருந்து கீழிடத்திற்குத் தீனியைக் கொண்டு வர வேண்டுமானால் அவ்வுயர்ந்த இடத்தினின்று கீழே போட்டுவிட்டு, அங்கேயிருக்கும் எறும்புகளை எடுத்துச் செல்லச் செய்கின்றன. வெள்ளம் வந்து தங்கள் புற்றுகளில் தண்ணீர் நிறைந்துவிட்டால், எல்லாம் ஒரு பந்து போலத் திரண்டு வெள்ளத்தில் அடிக்கப்பட்டுக் கொண்டு போய் வேறு இடத்தில் சேர்க்கப்பட்டவுடனே பிரிந்து விடுகின்றன.

 

சிலந்தி தன்னுடைய கூட்டை வலைபோல அமைப்பதற்கும், மற்றப் பூச்சிகள் அதிற்சிக்கித் தத்தளித்து ஓய்ந்து போன பிறகே அவைகளைத் தின்பதற்குச் செல்வதிலும், காரணங்களிருக்கின்றன. தன் கூட்டிற் சிக்கிய பூச்சிகள் 'குளவி" முதலியவற்றைப் போல் கொடியதாயிருப்பின் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கே சிறிது நேரங்கழித்துச் செல்கின்றது.

 

சரியான கண்ணில்லாத சிறு ஊர்வனவற்றிற்குத் தக்க வலிய, விரைவாக ஓடக்கூடிய கால்களையும், நுட்பமான கண்ணுடையவற்றிற்கு பெரிய கால்களையும்; எல்லாப் பிராணிகளுக்கும் நன்மையையேயுண்டாக்கக் கூடிய ஒரு கருத்தோடு ஏற்படுத்தியுள்ள எல்லாம் வல்ல ஜகதீசனது ஞானமே ஞானம்!

 

மனிதருக்கு இவ்வுலகிலுள்ள ஆசைகளுக்குக் கணக்கேயில்லை. ஆனால் மிருகங்களுக்கும் பக்ஷிகளுக்கும் தங்களைப் போஷிப்பதும், தங்களுடைய இனத்தை விருத்தி செய்வதுமாகிய இரண்டே தான் உளது. இதுதான் இவற்றின் இயற்கையறிவின் சிறுமைக்குக் காரணம்.

 

ஒரு காகமானது, கோழியினால் மற்ற காக்கைகளுக்குத் தெரியாமல் வளர்க்கப்பட்ட போதிலும், அதுகட்டும் கூடு மற்ற காகங்கள் கட்டும் கூடுகளைப் போலவேதானிருக்கும்.

 

மற்றும் பக்ஷிகள் வைக்கும் முட்டைகளினின்று குஞ்சுகள் வெளிவரும் காலமும், மரங்கள் துளிர்த்துப் புழுபூச்சிகள் நிறைந்திருக்கும் காலமும் ஏறக்குறைய சரியாயிருக்கும். அவை இவ்வாறு இருக்கும்படி யோசித்துத்தான் அல்லது பார்த்துத்தான் முட்டை யிடுகின்றன. ஒரு பெட்டைக் கோழியானது அடைகாக்கும் பொழுது ஒவ்வொருபுறமும் முட்டை களைத் திருப்பி அவற்றிற்குச் சரியாக உஷ்ணம் படச்செய்து வெகு ஜாக்கிரதையாக இருக்கிறது. அது மழைகாலத்தில் சிறிது நேரமும், வெயிற்காலத்தில் கொஞ்சம் அதிகநேரமும் வெளியே செல்கின்றது. ஏனெனில், மழைக்காலத்தில் சீக்கிரம் முட்டைகள் குளிர்ந்து போகும் உஷ்ணகாலத்தில் அப்படியிராது. ஆனால் முதலிலேயே சொல்லியபடி மந்தபுத்தியையுடையதா யிருப்பதால் ஒரு குறைவிருக்கிறது. இது மனிதருக்கும் வாத்துக்களுக்கும் அனுகூலமா யிருக்கிறது. எவ்வாறெனில், மனிதர்கள் முட்டையை எடுத்துவிட்டு, அவற்றினிடத்தில் வேறே வஸ்துக்களை வைத்துவிட்டபோதிலும் ஏமாந்து போய் அவைகளைத்தான் முட்டைகளென்று நினைத்து அடைகாக்கின்றது. வாத்துக்களின் முட்டைகளைத் தன் முட்டைகளென்று நினைத்து அவற்றிலிருந்துண்டாகும் குஞ்சுகள் தண்ணீரில் இறங்கும் போது தான் அறிந்து கொள்கிறது.

 

நீர்நாய்கள் நீரோட்டத்திற்குத் தக்கபடி ஆறுகளில் வீட்டைக்கட்டி வசிக்கின்ற விதமும், அவைகளைச் சீர்திருத்தும் திறமையும் மெச்சத்தக் கவை. அவை தங்கள் பற்களாலேயே வீட்டைக் கட்டுவதற்கு மரங்களை அறுக்கின்றன.

 

யானைகள் தங்களுக்குச் செய்யப்பட்ட நன்மைக்கு நன்மையும், தீமைக்குத் தீமையும் செய்கின்றன; இது அவற்றின் இயற்கைக்குணம். அவைகளின் தந்திரமும் மனிதருக்காக வேலை செய்வதும், பழக்கப்படக்கூடிய குணமும் இயற்கை குணத்திற்குச் சிறிது மாறுபடுகின்றன.

 

பக்ஷிகள் தங்களுடைய முட்டைகளை அதி ஜாக்கிரதையாய்ப் பாதுகாப்பது போல் சிங்கம், முதலிய காட்டுமிருகங்கள் தங்கள் குட்டிகளை வெகு ஜாக்கிரதையாகவே பார்த்து வருகின்றன. சில ஜந்துக்கள் தங்கள் முட்டைகளையாவது குட்டிகளையாவது கவனிப்பதில்லை. சிங்கமானது எப்பொழுதும் குட்டியை விட்டுப் பிரியாதிருப்பது ஏனெனில், அது ஒரு தடவைக்கு ஒன்றோ அல்லது இரண்டோ குட்டிகள் தான் போடுகின்றது. இவைகள் தான் இனத்தை விருத்தியாக்க வேண்டும். ஆகையால் தான் சிங்கம் அவ்வளவு கவலையெடுத்துக் கொள்கிறது. ஆனால் லக்ஷக்கணக்கான சிறுமுட்டைகளை யிடும் மீனோ அவற்றைக் கவனிப்பதேயில்லை. ஏனெனில், குறைந்த பக்ஷம் அந்த லக்ஷத்தில் பத்து குட்டிகளாவது மீந்திருக்கும். அப்படி யில்லாமல் எல்லாம் குட்டிகளானாலும் மற்றப் பெரிய மீன்கள் அவற்றைத் தின்று விடுகின்றன. மற்றும் பாம்பு, முதலை, தீப் பறவை முட்டைகளை நிலத்திற்குள் மறைத்து வைக்கின்றன அவைகளில் ஒன்று காணாமற் போனாலும் அறிந்து கொண்டு மற்றவற்றை விட்டு விட்டுப் போய் விடுகின்றன

ஒரு மிருகமாவது, பக்ஷியாவது தன் குட்டி அல்லது குஞ்சு தன்னுடைய ஆதீனத்தில் இருக்கும்வரை அதை மிகவும் கடூரமாய்ப் பாதுகாக்கிறது. அதாவது, மற்றவர்களிடத்தில் அச்சமயங்களில் கடூரமாயிருக்கும். ஆனால் இது சின்னாட்கள்வரைதான். நமக்கிருப்பதுபோல் மற்ற ஜந்துக்களுக்கும் பாஷை, ஜாதி, ராஜாங்கம் முதலியவையிருக்கின்றன. இவ்வுபமானங்களினின்று சில விடங்களில் மிருகங்களின் இயற்கையறிவானது மனிதரது பகுத்தறிவை விட மேலானது என்பது "உள்ளங்கை நெல்லிக்கனி'' போல் விளங்கும்.

C. P. சுந்தரராம்,

ஸ்ரீகிருஷ்ணர் வாசகசாலை, கோயமுத்தூர்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - ஜனவரி ௴

 


   
 

 

No comments:

Post a Comment