Wednesday, August 26, 2020

 இந்திய பசு பரிபாலனம்

 

பசுக்களை 'கோமாதா' வென்று வடநாட்டாரும், 'காமதேனு' வென்று தமிழ் மக்களும் பூசிப்பது வழக்கம். இந்தியாவின் வெகு பழமையான நூல்களனைத்தும் கோபரிபாலனத்தை வலியுறுத்துகின்றன. வடமொழி தென்மொழி நூல்கள் யாவும் ஆநிரை காத்த அரசர் பெருமக்களின் சிறப்பை எடுத்து விரிக்கின்றன. அவற்றுள் பலவும், ஆநிரையின் அளவிற்கேற்ப அரசனது செல்வத்தை மதித்துரைக்கின்றன; அரணை முற்றுகையிட்டுப் பகைவர் மேற் படையெடுக்கும் பார் மன்னர்கள் பசுக்களை முதற்கண் கவர்ந்து அவற்றிற்கு எத்தகைய துன்பமும் நேராவண்ணம் காப்பது கடனென்றுணர்த்துகின்றன. தைமாதப் பிறப்பான மறுநாள் கோக்களைப் பூச்சுப்பூசிப் பொங்கலிட்டு வணங்குவதும் பழம் பழக்கம். பசுக்களைக் காமதேனுவென்றும், அத்தெய்வப்பசுவின் வழி வந்தனவென்றும், அக்காமதேனுவின் வயிற்றில் உலகங்களனைத்தும், அடங்கிக் கிடக்கின்றன வென்றும் புராணங்கள் கூறுவது பொய்யே யல்ல. 'பால்' என்னும் பதத்தை நினைக்குங்கால், ஆண்பெண்னென்னும் இருபாலரும் அதன்பால் கைகூப்பித் தொழ வேண்டியவரன்றோ? பிறந்த சிசுமுதல் வயோதிகர் ஈறாக அனைவரும் பசுவின் பாலின்றி வாழமுடியுமோ? அஃறிணைப் பிராணிக்கு இத்துணை வந்தனை வழிபாடுகளியற்றுவது அறியாமையாலல்ல. பசுவின் பாலால் நாமடையும் பலன்களைச் சற்று அமைதியாக அமர்ந்து ஆலோசிப்போமாயின், மக்களாய்ப் பிறந்தாரனைவரும் அதன் வயிற்றிலடங்கியிருக்கின்றோ மென்பது உண்மை! உண்மை! என்று உரக்கக் கூவுவோமன்றோ? நமக்கு இன்றியமையாத பேருதவியைச் செய்யும் பசுவை, நாம் பிற இல்வாழ் பிராணிகளைத் துன்புறுத்துவது போல அடித்தும் உதைத்தும் ஹிம்சியாதிருக்கும் பழக்கத்தைச் சுபாவத்திலேயே அடைய வேண்டுமென்றுதான், அதனிடம் தெய்வமென்னும் பாவனை நமக்குப் பெரியாரால் ஊட்டப்பட்டது. கண்ணனும் வேய்ங்குழலூதி ஆநிரைகாத்து 'பசு - பதி' சம்பந்தமான பல பேருண்மைகளை வெளியிடா நின்றான். சகல மங்களமும் உண்டாக வேண்டுமென்று ஸ்திரீகள் அனுதினமும் காலையிலும் மாலையிலும் அதனை வலம் வந்து வணங்குகிறார்கள்.

 

பசுக்களே யன்றி அதுபோன்ற மற்றைய இல்வாழ் பிராணிகளும் தற்காலம் நமது இந்தியாவில் எந்நிலையிலுள்ளன? ஏனைய துறைகளைப் பிடித்துள்ள கிரகணம் இவற்றையும் எந்த அளவில் பிடித்துள்ளது? பசுக்களைப் பரிபாலிக்கும் விதங்களைப் பற்றி மிருக பரிபாலன அரசாங்க ஸ்தாபனர் அன்புடன் ஆராய்ந்து வெளியிட்டுள்ள அறிக்கை யாது? பசுக்களுக்கு வரும்பிணி வகைகள் எவை? அவற்றைப் போக்கும் வழி என்ன? என்பவற்றைக் குறித்து இனிக்கீழே இயன்றவரை எழுதுவோம்.

 

இல்வாழ் பிராணிகள் பலவிருப்பினும் முக்கியமாகப் பசு, இடபம், முதலியவற்றின் உபயோகமே பெரும்பாலும் எங்கும் அதிகம். அதற்கு அடுத்தரிஷபம் (விடையேறு) பலதிறப்படும். உயர்ந்து கொழுப்பு நிறைந்த திமிலும், குஞ்சம் போன்று நீண்ட வாலும், பிறை போன்று உயர்ந்து வளைந்த கொம்புகளும் விசாலமான காதுக்களும் உடைய காளைகளே உயர்ந்த வகையைச் சார்ந்தவை. இவையே விவசாயிகளின் பெருஞ் செல்வமாவன. பயிர்த்தொழிலுக்கான முக்காற் பங்கு வேலைகள் இவற்றால் ஆகின்றன. கழனிகளைக் கலப்பை கொண்டு உழுது பண்படுத்தவும் சேகரிக்கப் பெற்ற தானியங்களை வண்டிகளிலேற்றிக் கொண்டு போகவும் பொதுவாக எருதுகளும், சிறு பான்மையான இடங்களில் பசுக்களும் உபயோகப்படுகின்றன. பசுக்கள் இவற்றில் சில வேலைகளைச் செய்வதோடு பால், தயிர், நெய் முதலிய புஷ்டியாம்சமான உணவுகளையு மளிக்கின்றன. இவற்றின் தோலை பதனிட்டு ஏற்றப் பறி, தோல்வார் முதலான உபயோகங்கட்கு ஆக்கலாம்.

 

மேல்நாட்டைப் போன்றே இந்திய இல்வாழ் பிராணிகளுள்ளும் மாகாணந் தோறும் வேறு பாடுண்டு. சீதோஷ்ண நிலைக்கும் பூமியின் தரத்துக்கும் பயிர் வகைக்குத் தக்கவாறு மாடுகளின் கொம்பு வளர்ச்சியிருக்கும். மாடுகளின் உடலமைப்பும் உயரமும் குணங்களும் மேற்கூறிய காரணங்களைப் பொறுத்தே யிருக்கின்றன. சாதாரண கூழ் உணவிலே திருப்தியடைந்துவதியும் விவசாயிகள், மாடுகளுக்கு விசேஷமாகப் புல்வகைகளைப் பயிர் செய்வதிலோ, அல்லது பருத்திக் கொட்டை பிண்ணாக்கு முதலிய மாட்டுணவுகளை நாள்தோறும் கவலையோடு ஊட்டி வளர்ப்பதிலோ அதிகக் கவலை எடுத்துக்கொள்வதில்லை. மாடுகள் தாமாக யதேச்சையாய்க் கழனிப் புறங்களிலுள்ள புல்லை மேய்ந்து வருகின்றன. வந்ததும் அவற்றிற்குக் கழுநீர் காட்டிக் கட்டி விடுகின்றார்கள். எந்தப் பயிரை விவசாயி பாடுபட்டு விளைவித்துப் பயன் கொண்டானோ அதன் வைக்கோலே இம்மாடுகளுக்குப் போதிய உணவாகின்றது. மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகள் நல்ல புல் கிடைக்காமல், சிறிது கழுநீர் அருந்தி பலகீனமாய் நிற்கின்றன.

 

மாடு வகைகள்: -

 

நல்ல முதல் தரமான மாடுகள் கூர்ஜரத் (Gujrat) தின் வடபாகத்தில் 'கட்ச்' பிரதேசம் முதல் வடக்காக ரஜபுதனம் வரையில் காணப்படுகின்றன. மாடுகள் வெகு நேர்த்தியாக வளருவதற்கு இப்பிரதேசத்தின் பூமியினது தரமும், அதனால் வளரும் புல் வகைகளின் செழிப்புமுமே காரணங்காளாகும். பயிரிடுங் காலத்திலும் மற்றைய காலங்களிலும் லட்சக்கணக்கான பசுக்கூட்டங்களுக்கு யதேஷ்டமான பயிர் இப்பிரதேசத்தில் உண்டு. வட இந்தியாவில் ஜனத்தொகையின் அதிகரிப்பால், நகரங்களின் பெருக்கத்தால் மாடுகள் மேய்வதற்கு அனுகூலமான பசும் புற்றரைகள் (வெளிகள்) இரண்டோரிடங்களைத் தவிர வேறில்லை.
 

அமிர்த மஹால் போஷணை: பசுக் கூட்டங்கள் மிக்கக் கருத்துடன் போஷிக்கப்படும் இடங்கள் வெகு சிலவே. மைசூர் சமஸ்தானமே மற்றெல்லா மாகாணங்களைக் காட்டிலும் நல்ல பசுக்கூட்டங்களை யுடைய தென்று கூறலாம். அமிர்த மஹாலில் போஷிக்கப்படும் பசுக்கள் நல்ல உயர்ந்த குதிரைகளைப் போல கம்பீரத் தோற்றமும், உயரமும், கொழுப்பும், பாலும் கொண்டிருக்கின்றன; பாலுட்சுவையும் பொருந்தியிருக்கின்றது. இப்பசுக்கள் நடுத்தரமான உயரமும் பழுப்பு நிறமும் உள்ளவை; அவற்றின் சீற்றமும் பலமும் சுறுசுறுப்பும் உழைப்பும் உயர் திணையின் பாற்பட்ட நம்மைப் பழிப்பது போலத் திகழ்வன. எருதுகளோ இருப்புத்தொடர் செய்யும் வேலையிற் பாதிக்கு மேல் புரிகின்றன; சுமைகளை அலட்சியமாக இழுத்துச் செல்லுகின்றன. நீண்டு அகன்ற காதுகளும், பருத்து உருண்ட தலையும், கூர்ந்து நீண்ட கொம்புகளும், உறுதியான குளம்புகளுமுடைய இத்தகைய மாடுகளைக் காண உற்சாகமாகவே இருக்கின்றது. ஆனால் அமிர்த மஹால் பசுக்கள் தாமதமாகப் பருவமடைகின்றன; அவ்வளவு அதிகம் பாலும் கொடுப்பதில்லை.

 

நெல்லூர் பசுக்களும், ‘ஆர்வி' பசுக்களும்: 'நெல்லூர் மாடு' என்று யாவராலும் மதிக்கப்படும் பசு எருது முதலியன பெரும்பாலும் சென்னை மாகாணத்தின் சுற்றுப்புறங்களிலுள்ளவைகளே. இவை பருத்த உடலமைப்பும் பொதுவாக வெண்மை நிறமுமுடையன. அவற்றுள், அநேகமாக பம்பாய் மாகாணத்தைச் சார்ந்த கிருஷ்ணா பள்ளத்தாக்கு எருதுகளின் கலப்புப் பிறப்பு ஏற்பட்டவைகளே மிகுதியும் காணப்படுகின்றன. சென்னைக்கு வடக்கேயுள்ள சில பிரதேசங்களில் இவ்வகை எருதுகள் (சிறுபான்மை பசுக்களும்) கழனி வேலை கட்கும் வண்டியிழுக்கவுமே உபயோகப்படுகின்றன. எனவே நிரம்பப்பால் தரும் பசுக்களின் தொகை நெல்லூர் பசுக்களுள் அவ்வளவு அதிகமாயில்லை; காளைகளே அதிகம் என்பதாயிற்று. மத்ய மாகாணத்திலுள்ள மிக்க உயர்ந்த பசு எருது முதலியவற்றிற்கு ஆர்வி என்று பெயர். ஏறக்குறைய இவை செல்லூர் மாடுகளைப் போலவே யிருந்தாலும் விசேஷமாகப் பால் கொடுப்பதில்லை. எருதுகள் மிக்க பலமுள்ளவையானாலும் சுறுசுறுப்புடன் வேலை செய்வதரிது.

 

'மால்வி' (Malvi) பசுக்களும் (Kheri) 'கிரி' பசுக்களும்: மத்திய இந்தியா முழுதும் சாம்பல் வெண்மை முதலிய நிறமுள்ள பசுக்கள் சர்வ சாதாரணமாய் வளர்க்கப்படுகின்றன. இவை கொழுத்துப் பருத்த உடலமைப்புடன், உறுதியான தலையும் கொம்புகளு முடையனவாயுள்ளன; உழவு முதலிய உழைப்பின்றி இயற்கையான புற்றரைகளில் மேய்ந்து வளருகின்றன. பசுக்காப்பாளர்கள் ஆண்டு தோறும் தக்ஷிண தேசத்திற்கு (Deccan) இவற்றை மந்தை மந்தையாக ஓட்டிக் கொண்டு போய்ச் சந்தை கூட்டி விற்பனை செய்கிறார்கள். இப்பசுக்களைப் பொருள் வளமுடைய நிலக் கிழவர்கள் ஆவலோடு நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுகிறார்கள். இவை சுறு சுறுப்பும் உற்சாகமும் பலமும் உடையனவாதலின் உழவுக்கும் வண்டி வேலைக்கும் கிணற்றில் கவலை யேற்று நீரிறைப்பதற்கும் மற்றும் பயிர்த்தொழில் சம்பந்தமான சகல வேலைகளுக்கும் நன்கு பயன்படுகின்றன. மால்வி எருதுகள் நல்ல உடலழகும், அகன்று குறுகித் தாழ்ந்த தேகமும், வட்டமும் உறுதியுமான குளம்புகளும் உடையனவாய் உழைப்புக் கேற்றனவாயிருக்கின்றன. மால்விப் பசுக்கள் அதிக பால் வளமுடையன வல்ல. ஐக்கிய மாகாண 'கிரி' மாடுகள், 'மால்வி' மாடுகளை அநேகமாக ஒத்திருக்கின்றன.

 

கிரி மாடுகள்: கத்தியவாரின் தென்பாலுள்ள காடுகளிலும் 'கிரி' என்னும் பெயர் பெற்ற மலைச்சாரல்களிலும் பாலுக்குப் பெயர் போன ஒருஜாதிப் பசு மந்தைகள் வளர்க்கப்படுகின்றன. தனிக் கிரிமாடுகளுக்கும் பிற இந்திய கோவர்க்கங்களுக்கும் அநேக விதங்களில் விசேஷ வித்தியாசமுண்டு. இரண்டு நிறங்கள் அல்லது இரண்டு நிறங்களின் சாயை, இவ்விரு நிறங்களும் ஒன்றோடொன்று கலந்து ஒருவித அழகைத் தந்து நிற்றல், ஆயே இவற்றையுடையவை அனந்தம். இப்பசுக்களின் முன்னெலும்புகளின் வளர்ச்சி, முகத்திற்கு வட்ட வடிவமான சொரூபத்தைத் தந்து அழகு பெறச் செய்கிறது. காதுகள் குழி முயலின் செவிகளைப் போன்று நீண்டிருக்கின்றன. இவை சரியான வளர்ச்சியும் அதற்குத்தக்க பருமனும் உடையவை. இவற்றைச் சரியானபடி வீடுகளிலோ தொழுவங்களிலோ, கொட்டில்களிலோ, கட்டிப் போட்டு வளர்ப்பதில்லை. ஏனெனில், சுயேச்சையின்மையால் இப்பசுக்கள் மூர்க்கக் குணமேற்பட்டு, சீக்கிரத்தில் பாலின்றி வற்றிப் போகின்றன. காளைகளும், எருதுகளும் பெரும்பாலும் ஒரே விதமான வேலைகளுக்கு உபயோகப்படுகின்றன. இவை எவ்வளவு பளுவான சுமை வண்டிகளையும் இழுக்குமாயினும் வேகமாக ஓடா. கிழத்தன்மையை யடைந்து விட்டாலோ உபகாரச் சம்பளம் கொடுக்க வேண்டியது தான்.

 

குஜராத்தி மாடுகள்: இந்தியா முழுவதிலுமே குஜராத்தி மாடுகளைப் போல உழவு முதலான பல தொழில்களுக்கும் மிக்க உபயோகமான மாடுகள் வேறில்லை யென்று சொல்லலாம். அவற்றுள், 'வாடியல்' அல்லது (கன்கிரிஜி) என்றழைக்கப்படும் மாடுகள் மிகவும் உயர்ந்தவை. இவை வெண்மை, ரஜிதம், சாம்பல் முதலிய வண்ணமுடையனவாய்க் கண்ணைக் கவரும் வனப்புள்ளனவாயிருக்கின்றன. இவற்றின் சுருளான கருநிறமுள்ள கொம்புகள் கம்பீரமான தோற்றத்தைத் தருகின்றன. பொதுவாகக் குஜராத்தி மாடுகளே சுறுசுறுப்பும் வலிமையும் உடையன.

 

ஹான்ஸி மாடுகள்: - ஹான்ஸி அல்லது ஹரியானா என்னும் கோவர்க்கம் குஜராத்தி மாடுகளைப் போலல்லாது மேனியழகு மிகுந்தனவாயுள்ளன. இவை கீழ் பஞ்சாபில் கூட்டங்கூட்டமாய்ப் போஷிக்கப்படுகின்றன. முன்போல இம்மாடுகளுக்கு இப்பொழுது பிரபலமான பேரில்லையானாலும் உயர்ந்தவை என்பதில் ஐயமேயில்லை. ஹிசார் (Hessar) என்னுமிடத்தில் துரைத்தனத்தார் மாடுகளை விசேஷ சிரத்தையுடன் போஷித்து உழவர்களுக் குதவு கின்றனர். இவ்வர்க்கப் பசுக்களுக்கு நிகராகப் பால் கொடுப்பவை எங்குமே இல்லை எனலாம். ஆனது பற்றியே இப்பசுக்களின் பிறப்பிடமான பஞ்சாபில் சில பசுக்கள் கூட இல்லாமல் மற்றைய பாகத்தாரால் ஏராளமான விலை கொடுத்து இவை வாங்கப்படுகின்றன.

 

கீழ்ச்சிந்து மாடுகள்: - கீழ்ச்சிந்து பிரதேசத்தில் வளர்க்கப்படும் கோக்கள் பொதுவாக நிரம்பப் பால் தரக்கூடியவை. விவசாயிகளல்லாது, எப்பொழுதும் மாடுகளை மந்தை மந்தையாகக் காடு தோறும் மேய்த்துக் கொண்டே நாடு சுற்றி விற்றுக் கொண்டிருக்கும் ஒரு முஹம்மதியக் கூட்டத்தாரால் இவை பெரும்பாலும் காக்கப்படுகின்றன. இவற்றின் தோற்றமும், நிறமும், சுபாவமும் வெகுவாய்ப் பிற மாடுகளைக் காட்டிலும் வித்தியாசப்படுகின்றன. இப் பசுக்கள் நல்ல சிவப்பு வண்ண முடையனவாயும் இரண்டோரிடங்களில் வெண்ணிறப் புள்ளிகளுடையனவாயு மிருக்கின்றன. நடுத்தரமான உயரமும் பருமனுமுள்ளன; இவையும் நிரம்பப் பால் கொடுக்கக் கூடியவை.

 

வங்கநாட்டு மாடுகள்: - வங்காளத்தின் கடற்கரை யோரமாயுள்ள பிர தேசங்களிலிருக்கும் மாடுகள் மிகவும் தாழ்ந்தவை: பீகார் முதலான இடங்களில் நல்ல பருவ மழையும் அதனால் இளவிளவென்று விசேஷப் பயிர் வளர்ச்சியும் இருந்துங்கூட நல்ல பசுக்கள் கிடையா. வங்காளத்தின் சுற்றுப் புறங்களிற் கூட விசேஷ ஜன நெருக்கடியால் கோரக்ஷணம் விசேஷமாயில்லை. வீடுகளில் ஏகதேசமாகப் போஷிக்கப்படும் பசுக்களும் முறைப்படி காக்கப்படுவதில்லை. பீகாரில் சுவாமிமாடு' என்ற முரட்டுக் காளைகள் யதேச்சையாக வளர்ந்து திரிகின்றன. இவற்றால் எவ்விதப் பிரயோஜனமில்லையானாலும் இவை பயிர் பச்சைகளை மிதித்தும் அழித்தும் செய்யும் துன்பத்திற்களவில்லை.

 

ஐக்கிய மாகாண மாடுகள்: - ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த அயோத்தி, ஆக்ரா முதலான பாகங்களிலுள்ள மாடுகள் ஒரே வகையினவாயினும் வளர்ப்பு சீதோஷ்ண நிலைகளைப் பொறுத்துச் சிற்சில வித்தியாசமுடையனவா யிருக்கின்றன. ஜீபு (Zebu) என்னும் உயர்ந்த தியிலுடைய ஒருவகை மாடுகள் குணத்திலும் சுபாவத்திலும் வடிவிலும் தனிப்பட்டனவா யிருக்கின்றன. வடமேற்கு ஜில்லாக்களில் பஞ்சாப், ஹரியானா வர்க்கத்தைப் போன்ற மாடுகளும், பண்டில் கண்டில் குள்ளமான ஆகிருதியும் கொழுத்துப் பருத்த உடலுமுடைய மாடுகளும் காக்கப்படுகின்றன. அந்தந்த ஜில்லாக்களில் பேர்போன சிற்சில வர்க்கங்களும் ஆங்காங்கே யுண்டு. அவற்றுள், 'கோசி' 'கீரி' வர்க்கங்கள் சிலாக்கியமானவை. ஆனால் பொதுவாகப் பேசு மிடத்து, கலப்பு வகையில்லாத தனி வளர்ப்புள்ள பசுவர்க்கங்கள் சில விருக்கின்றன. பார்த்த மாத்திரத்திலேயே இவை இன்னவர்க்கத்தைச் சேர்ந்தவை யென்பதைக் கண்டு பிடித்து விடலாம்.

 

ஐக்கிய மாகாண மாடுகளுள் கோளி, கீரி, பர்வான், கென் வாரியா என்றஜாதி மாடுகள் மிகவும் முக்கியமானவை. இவற்றுள் நேர்த்தியான வளர்ப்புள்ள சில தனிச்சாதி மாடுகள் மிகவும் சிலாக்கிய மானவைகளா யிருத்தல் பற்றி அம்மாகாண மட்டுமன்றி வெளி மாகாணங்களிலும் இம்மாடுகளுக்கு நல்ல தேவை யேற்படுகிறது.

 

'பஹரி' என்னும் ஒருஜாதி மாடுகள் இமய மலையின் அடிவாரப் பிரதேசங்களில் யதேச்சையாக மேய்ந்து வளர்கின்றன. இவை பஞ்சாப் வங்காள மாடுகளைப் போன்றிருக்கின்றன. ஆனால் விசேஷமான வளர்ப்பில்லாத இவ்வகை மாடுகளை 'தேசி' அதாவது உள்நாட்டு மாடு என்று கூறுவார்கள்.

 

அமிர்த சரஸ் முற்காலத்தில் ஆநிரை காத்தற்குப் பெயர் போனதாயினும், அங்கு தற்காலம் பசுக்காத்தல் க்ஷணித்துப் போய் விட்டது. ஒருசமயம் லாகூர் ஜில்லாவில் உயர்ந்த ஜாதி மாடுகளுக்கென ஒரு பெரியசந்தை கூட்டப்பட்டது. அது முதல் அப்பிரதேச நிலங்கள் விவசாயத்தில் முன்னேற்றமடைந்து, பாய்ச்ச லாதாரமுள்ள கால்வாய்கள் வெட்டப் பட்டு ஏராளமான சாகுபடி நடந்து வருவதால் மாடுகளின் மேய்ச்சலுக்கு வேண்டிய புற்காடுகளில்லாது போயின. ஆகையால், மாடுகள் முற்றிலும் தொழுவங்களிலேயே வளர்க்கப் படுகின்றன.

 

பர்மா மாடுகள்: - பர்மாவிலுள்ள கோவர்க்கங்கள் மிகவும் பஞ்சத்திலடிபட்டது போன்ற ஏழைச் சுபாவ முன்ளனவா யிருக்கின்றன; பர்மாவுக் கருகாமையிலுள்ள ஷான் ஸ்டேட்ஸ் (Shan States) மாடுகளுங் கூட இப்படியே காணப்படுகின்றன. பர்மா எருதுகள் திமிலுக்குப் பின்னிருந்து அளந்தால் 46 - முதல் 50 - அங்குலம் உயர முள்ளனவா யிருக்கின்றன. இளவெருதுகளின் திமில்கள் நன்றாகக் கொழுத்து உயர்ந்துள்ளன. விதையடிக்கப் பட்ட எருதுகளின் திமிலும் ஏறக்குறைய இப்படியே யிருக்கின்றது. பர்மாபசுவிற்கும் காளைக்கும் விசேஷ வித்யாசமுண்டு. பசுக்கள் வெகு இளமையிலேயே கன்றை ஈன்று அக் கன்றுகளுக்கு வெகு காலம் பால் கொடுத்து அதனால் தேகபலம் குன்ற வளராமல் நலிந்து நிற்கின்றன. பர்மா பசுக்களின் நிறங்களில் தேற்றமான வித்தியாச மேதுமில்லை. பொதுவாக எல்லாம் செந்நிறமுடையன; அதிலிருந்து வைக்கோல் நிறமும், மங்கலானபழுப்பு நிறமுமாகப் பல நிறங்கள் பலவாறாகப் பொருந்தி யிருத்தல் இயல்பு. இரண்டு நிறங்களுள்ள மாடுகள் மட்டும் வெகு அபூர்வமாயிருக்கும். பர்மா எருதுகளின் உடல்கள் சாதாரணக் கொழுப்புள்ளதாயும் சம லக்ஷணத்துடன் நல்ல வலுவுள்ளதாயு மிருக்கின்றன. இவற்றின் தலை மிகவும் சிறியதாயிருக்கின்றது; அதிலும் பசுவின் தலையோ பின்னும் சிறிதாயிருக்கும். கொம்புகள் பொருத்தமில்லாமல் வெகு கூழையாயிருக்கின்றன. கொம்புகள் வளர வளர அவற்றைச் சமமாக அறுத்து விட்டால் மாடுகள் இளமைத் தோற்றத்தைப் பெறுகின்றனவாம். இவ்வாறு செய்வது பர்மியர்களின் வழக்கம். பர்மா எருதுகளுக்குக் கழுத்தில் மிகுந்த பலமுண்டு. ஆனால் விதையடித்த பின் இப்பலம் அநேகமாக குன்றிப் போகின்றது. இம் மாடுகளின் களகம்பளம் (கழுத்தின் கீழ்த்தொங்கும் தோல்) அவ்வளவு பெரியதாயிராது. பர்மியர்கள் மாடுகள் நல்ல பருவத்தை யடைகின்ற வரையில் விதையடிப்பதில்லை. விதையடித்தல் தென்னிந்தியாவில் நடைபெறுவது போன்றே நிகழ்கின்றது.

 

பர்மா பசுக்கள் நிரம்பப் பால் தருவன வல்ல. பர்மா விவசாயிகள் மாடுகளைக் கொண்டு பால் கறக்க வேண்டு மென்ற எண்ணமே கொள்வதில்லை. கன்றுகளே பாலத்தனையும் பருகி விடுகின்றன. ஒரு மாடு ஒருகன்றை யீன்ற திலிருந்து அடுத்த கன்று போடும் வரையில் முதற் கன்று தாய்ப்பசு விடத்திற் பால் குடித்துக் கொண்டே யிருக்கின்றது. பர்மியர்கள் எருதுகளைப் பற்றிய வரையில் நன்றாகப் பாதுகாத்து வருகிறார்கள்; அவற்றை வெயில் நேரத்தில் வேலை செய்விப்பதில்லை; வீட்டை யொட்டியுள்ள மாட்டுக் கொட்டில்களிலோ, பட்டி மந்தைகளிலோ நிழலில் நிறுத்தி வைக்கிறார்கள்; மற்றைப் பொழுதில் மேய விடுகிறார்கள்; கழனிகள் சாகுபடி செய்யப்படுகின்ற காலங்களில், மாடுகளைக் கட்டிப் போட்டு வைப்பார்கள்: இக்காலங்களில் இவற்றிற்குப் புல் வைக்கோல் முதவியன வயற்புறங்களிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. தரிசு அல்லது புறம்போக்கு நிலங்கள் எல்லாக் காலத்திலும் மேய்ச்சலுக்கே பயன்படுகின்றன. பருவ மாறுபாட்டால் புற்றரைகள் வெறுந்தரையாகவும் போகக் கூடுமாதலால், ஆண்டுதோறும் கொஞ்சம் வைக்கோல் போராக வீடுகளின் பக்கலில் சேமித்து வைக்கப்படுகின்றது.

 

 இதுவரை, இந்தியாவின் பற்பல மாகாணங்களிலுமுள்ள கோ, காளை எருதுவர்க்கங்களை முக்கியமாகத் தேர்ந்து அவற்றின் இயற்கையான குணாகுணங்களையும், உடலமைப்பு, மேய்ச்சலாதாரம், வளர்ப்பு, கொம்பு முதலிய உறுப்புக்களின் இலக்கணங்கள் முதலியவற்றையும் சுருக்கிக் கூறினோம். இனி, பசுக்காப்பைப்பற்றி எழுதுவோம்.

 

பசுக்களின் சீரழிவு: இந்தியப் பசு வர்க்கங்கள் விருத்தியடையாமல் நாளுக்கு நாள் சீரழிந்து வருவதைக் கண்டு, அவற்றால் விளையும் பெரும்பயனை உணர்ந்த விவசாய விர்ப்பனர்களும், பசு பரிபாலன சங்கத்தார்களும் கொஞ்ச காலமாக விழிப்படைந்து விட்டார்கள். சாத்யமான வழிகளில் பசுவிருத்தியைச் சீர்திருத்த அவர்கள் ஆலோசனை கூறி வருகிறார்கள். அதனால் நன்மையும் ஏற்பட்டுள்ளது. இவ்விதம் பசுவிருத்தி சீர்கேடடைந்ததற்குக் காரணங்கள் இவை யென்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
அவை, 1. மாடுகளுக்கு ஆகாரம் சரிவரப் போதிய அளவு கொடுக்கப்படாமை 2. நல்ல மேய்ச்சல் நிலங்களின்மை 3. அளவுக்கு மேல் அவர்றை உழைக்கச் செய்தல், வயதடையா முன்னரே ஏரில் பூட்டுதல், பார வண்டிகளை இழுக்கச் செய்து துன்பறுத்தல் 4. இளமையிலேயே கருப்ப முற்றுக் கன்றுபோட வைத்தல் 5. நல்ல எருதுகளின் சம்பந்த மின்மை 6. கன்றுகட்குப் பாலே விடாமல் இரக்கமின்றிக் கறந்து விடுதல் முதலியன. இக்குற்றங்களைப் போக்கும் பொருட்டு இந்தியாவில் அநேக இடங்களில், நன்றாக போஷிக்கப் பெற்ற பசு எருது கன்று முதலியவற்றிற்கு, மிருகக் காட்சிகளில் ஆண்டு தோறும் வெகுமதி கொடுப்பதென்று ஏற்பாடு செய்யப் பெற்று நடந்து வருகிறது. இதனால் பொதுவாகச் சில நன்மைகள் ஏற்பட்டுள்ளன.

 

பசு விருத்தியிலுள்ள சிரமங்கள்: இந்தியாவின் அநேக பாகங்களில் பசு விருத்தியைச் சீர்திருத்துவதற்குப் பலவிதமான அசௌகரியங்கள் இருக்கின்றன. யதேச்சையாக வயிறார மேயப் புற்றரைகளின்றி, தாபாக்கினியாக வெயில் காய்கின்ற கோடை காலங்களில் கன்றுகளும், பசுக்களும் உணவின்றி பரிதபிக்கின்றன. வண்டி யிழுத்தல் முதலான தொழில்களுக்கு இன்றியமையாத எருதுகள் மட்டும் சிறிது கவனமுடன் போஷிக்கப்படுகின்றன. சேருங் காளைகள் சரிவர போஷிக்கப்படாமை மற்றொரு பெருங் குறை. முக்கியமாகச் சில உயர்ந்த கோவர்க்கங்கள் மட்டும் விசேஷ சிரத்தையுடன் வளர்க்கப்படுகின்றன. விவசாய அபிவிருத்திக்கு ஏற்றாற் போல், அப்பசு மந்தைகளும் பெருகி வருகின்றன. விவசாயம் எவ்வளவுக் கெவ்வளவு மேன்மை யடைகிறதோ அதற்கேற்ப பசு, எருது முதலியனவும் யதேச்சையாக இயற்கையான போஷணையால் விருத்தி யடைகின்றன.

 

நோய் வருவதன் காரணம்: ஒரே நிலையான வழக்கமின்றி, நினைத்த பொழுதெல்லாம் முறையின்றி ஒரு வகைக் காளையை மற்றொரு வகைப் பசுவுடன் சேரவிட்டு நல்ல விருத்தியை யுண்டாக்க வெண்ணி, ஜில்லா போர்டு முதலான ஸ்தாபனங்களின் வாயிலாக காளைகளைப் பரிமாறிப் பார்த்ததிலும் எவ்வித பலனும் ஏற்பட்டதாயில்லை. பலனுக்கு மாறாக அவர்கள் செய்த பரீக்ஷையால் பல மாட்டு நோய்கள் உண்டாயின. பசுவிற்குத் தக்ககாளைகள் தேர்ந்தெடுக்கப்படாமையும், பொருந்தா சேர்க்கையும் பசுக்களிடையே பல தீய நோய்களைப் பரவச் செய்கின்றன. சில நல்ல இனத்தைச் சேர்ந்த மாடுகளும் குன்றிக் கெட்டுப்போயின.

 

அரசாங்க விருத்தி சாலைகள்: நல்ல உயர்ந்த வர்க்கத்தைச் சேர்ந்ததும் தக்க போஷணையும் விருத்தியும் அடையாத துமான பசுவர்க்கங்களை அரசாங்க விருத்தி சாலைகளில் வைத்துப் போஷிக்க வேண்டுமென்று முடிவு செய்யப் பெற்றிருக்கிறது. அவை சுருசுருப்பாயும் திடமாயுமிருந்தாலும், தாழ்ந்தவையாயும் கூழையாயுயிருக்கின்றன. ஆதலால் அவற்றை அவ்வர்க்கத்திலுள்ள உயர்ந்த காளைகளைக் கொண்டே விருத்தி செய்ய வேண்டுவது அவசியமாயிருக்கிறது. இக்கருத்தைக் கொண்டு 'காளை வளர்ப்பு ரக்ஷணசாலைகள்' ஸ்தாபிக்கப் பெற்றன. இந்த சாலைகளில் பசுக்களும், காளைகளும் உயர்ந்த சுத்தமான வர்க்கத்திலிருந்து தோப்பெற்று போஷித்து விருத்தியாக்கப்படுகின்றன. இதனால் இச்சாலைகளில் போஷணை யடைந்த காளைகளை வெளியே பல இடங்களிலுமுள்ள இதே வர்க்கப் பசுக்களிடையே சேர்த்து விருத்தியை உண்டு பண்ணுகிறார்கள்.

 

பசு வைத்தியம்: பசு விருத்தி விஷயம் முழுவதும் பசு வைத்திய சாஸ்திர முறைகளை யொட்டிய சேர்க்கையைப் பொருத்திருக்கின்றது. ஏனெனில், பசு மந்தைகளைக் காத்து வளர்ப்பதில், நோய்கள் பரவாமலிருந்தால் மட்டுமே சுத்தமான சேர்க்கையும் தரமான வளர்ப்பு முடையனவா யிருக்கும்.

 

சேர்க்கையில் சில புதிய அனுஷ்டானங்கள்: தற்காலமுள்ள பசுவர்க்கங்களின் அபிவிருத்தி விஷய ஆராய்ச்சி வெகு காலமா யிருந்து வருகிறது. பசு, காளை ஆகிய இவற்றைச் சேர்க்கையின் பொருட்டு வளர்ப்பதற்கும், சேர்க்கைக்காகத் தேர்ந்தெடுப்பதற்கும் பசுக்களை அதிகமாக வளர்க்கும் சில பண்ணைக்காரர்களை முதல் முதலாகப் பழக்கு வித்தல் நன்மையைத் தரும். முதலாகப் பசுக்களைப் பால் வளமுடையதாக்க வேண்டுமென்ற அவாவே இந்தியாவின் பல பசு பரிபாலகர்களிடத்தும் விசேஷமாயில்லை. ஏதோ அவை கொடுத்த வரையில் போதுமென்ற. சிரத்தையின்மையே அதிகமாயிருக்கிறது. பால் கொடுப்பதற்கும் முரட்டு வேலைகளைச் செய்வதற்குமே நமது நாட்டில் பசுக்களும் எருதுகளும் அவசியமாக வேண்டியிருக்கின்றன. மாட்டிறைச்சி அல்லது கோமாம்சத்தை இந்தியர்களில் மிகவும் சொற்பத் தொகையினரே உபயோகப்படுத்துகின்றார்களாதலால், மாம்சத்தின் பொருட்டு மாடுகளை அமெரிக்கா, ஐரோப்பா தேசத்தாரைப் போன்று இந்தியர்கள் கொழுக்க வளர்ப்பதில்லை. எருதுகள் இந்தியாவில் உழவிற்காகவும், விருத்திக்காகவுமே போஷிக்கப்படுகின்றன. பசுக்களை நிரம்பப் பால் கொடுப்பவைகளாக்குவது. எருதுகளை நல்ல காளைகளாக்குவதுமே மாடுகளைப் பெருக்குவதன் முக்கிய நோக்கங்களாயிருத்தல் வேண்டும்.

 

சேர்க்கைக்குரிய காளைகளை மட்டும், கவனத்துடன் நல்ல வர்க்கத்திலிருந்தும், நிரம்பப் பால் கொடுக்கக்கூடிய வகையிலிருந்தும் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்தக் காளையின் தாய்ப் பசுவும், உடன்பிறந்த பசுங்கன்றுகளும் யதேஷ்டமாகப் பால் கொடுக்குந் தன்மை யுடையனவா யிருக்கின்றனவோ அவற்றைக் கவனித்தே பொருக்க வேண்டும். இதற்காக அயல் நாடுகளிலிருந்து கலப்பு வர்க்கக் காளைகளை வரவழைக்க வேண்டிய அவசியமே இல்லை. அரைகுறையாக இப்படியும் அப்படியும் விருத்திக்கு விடுவதால் அவை வியாதிகளுக்கு எளிதில் ஆளாவதோடு பலஹீன மாயுமிருக்கின்றன. இக்கலப்பு விருத்தியால் பசுக்கள் பால் அதிகமாகக் கொடுத்தாலும், இந்திய சுத்த சேர்க்கையால் விருத்தியான பசுக்கள் கொடுக்கும் பாலைப் போல புஷ்டியுள்ளதாயில்லை.

 

பால், தயிர், நெய் முதலிய பசுவின் சத்பதார்த்தங்களை விருத்தி செய்வதற்குக் கன்றுகள் இன்றியமையாதவை. சிறுகச் சிழக, சேர்க்கையாலும், போஷணையாலும், கன்றுகளே ஆயர்களின் செல்வமாகின்றன. நல்ல போஷணையால் கன்றுகள் தேகாரோக்கியமும் உழைப்புக் கேற்ற திடசரீரமு முடையவை யாகின்றன. இப்படி நாளாவட்டத்தில் அந்த வர்க்கம் மேலானதாகி விடுகின்றது. பலவலையில் குடியானவர்களுக்கு அவை இன்றியமையா உதவிகளைச் செய்கின்றன.

 

அரசாங்கத்தின் உதவிபெற்ற கால்நடைப் பாதுகாப்பு மந்தைகள் சரியான வேலை திட்டத்துடன் சரியான போஷணை அடையும் வரையில் காக்கப்பட்டு வந்து இந்தியாவின் பாற்சாலை (ததிதாமம்) த் தொழிலை மிகவும் வெற்றியடையச் செய்துள்ளன. இந்நாளில் நூற்றுக்கு ஐந்து பசுக்கள் கூடச் சரியான பலனை அளிக்கக்கூடிய நிலையிலில்லை. பிரோஜ்பூரிலுள்ள கவர்ண்மென்ட் மிலிட்டரி பாரம் (Government Military Farm) என்னும் கால் நடை மந்தையின் வாயிலாக, நிரம்பப்பால் தரக்கூடிய கோவர்க்கத்திலிருந்து தேர்ந்து கொள்ளட் பெற்ற சில கோவர்க்கங்களைக் கொண்டு பாற்சாலைகளை எப்படி விருத்தி செய்யலாம் என்னும் விஷயத்தை நன்கு அறியலாம். இதே போல இந்தியாவிலுள்ள சகல விதமான ஜாதிமாடுகளையும் ஏற்றவாறு விருத்தி செய்ய வேண்டும்.

 

இதோடு ஐரோப்பாவிலுள்ள எல்லா ஜாதி காளைகளைக் கொண்டும், இந்திய கோவர்க்கங்களை' விருத்தி செய்து பார்க்கலாம். ஹிசார், கோலிமன்ட்கோமரி, சைவாள், சிந்து, முதலிய இந்திய கோவர்க்கங்களை பிரிசியன் (Friesian) மில்கிங் ஷார்ட் ஹார்ன்ஸ் (Milking Short – horns) பிரவுன் ஸ்விஸ் (Brown Swiss) அயர்ஷையர் (Ayrshire) குரன்ஸி (Guarense) முதலிய மேல் நாட்டு எருதுகளுடன் கலக்கச் செய்து எத்தகைய பலன் ஏற்படுகிறதென்று பார்த்து அதன் முடிவை ஆராய்ந்து, அதனால் விசேஷ பலன் ஏற்படுகிறதா என்று கவனிக்கவேண்டும். பால்சுரப்பிற்கும் நிலவளனுக்குமுள்ள சம்பந்தா சம்பந்தத்தை அறிந்த இந்தியர்களே கால்நடைகளைப் பற்றிய முடிவான அபிப்பிராயங் கொடுக்கத் தகுந்தவர்களாவர். தற்காலம் அரசாங்கத்தின் ஆதரவிலுள்ள கோவர்க்கங்களே மிகவும் உயர்ந்தவைகளாயிருக்கின்றன.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - மார்ச்சு, மே, ஜுன், ௴

 

 

No comments:

Post a Comment