Wednesday, August 26, 2020

 

இச்சந்நியாசிகளினால் யாது பயன்

 

சகோதர சகோதரிகளே!

 

நெடிய கடல் சூழ்ந்த இவ்விந்திய நாட்டின் கண்ணுள்ள முப்பத்து மூன்று கோடி ஜனங்களில் எழுபது லக்ஷம் ஜனங்கள் பண்டாரம், கோடங்கி, சந்நியாஸி என்று மார்க்க வேஷம் பூண்டும், நாற்பத்திரண்டு லக்ஷத்து இருபத்தீராயிரம் ஜனங்கள் யாசகமே தொழிலாகவைத்தும் ஜீவனம் தள்ளுகிறதைக் கவனிக்குங்கால் எந்த இந்தியன் மனம் தான் புண்ணுறாது? அந்தோ! பரிதாபம்; பெற்றோர்க்கடங்காச் சிறுவனும், சம்சாரமென்னும் கப்பலை நடத்தத் தெரியாத மாலுமியும், கடைக்குப்போய் அரையணா கொடுத்துக் காவி வாங்கி வஸ்திரத்தைக் காவியாகச் செய்தும் திருநீற்றை உடலெல்லாம் பூசியும் கையில் ஒடேந்தி சம்போ. சங்கரா, சுப்பிரமணியம், வேலாயுதா, ராமா என்ற பகவன் நாமங்களை வெளிப்பார்வைக்குச் சொல்லிக்கொண்டும், பிச்சை எடுக்கப் புறப்பட்டு விடுகிறார்கள். பிச்சை எடுத்தாலும் ஜாதி வரம்பு பாராமல் இருக்கிறது மில்லை. அரிசி, பணம் தான் முக்கியமாக வாங்குகிறார்கள். உடனே கஞ்சா, அபின், கோலி, கள்ளுக்கடைக்குப்போய்க் காணிக்கை செலுத்திவிட்டு நிர்த்தனம் செய்யவும், வேதாந்தம் பேசவும் செய்கிறார்கள். பரம்பரையாகவே நாங்கள் பிச்சை எடுத்து வருகிறோமென்றும் டம்பம் பேசுகிறார்கள்.

 

இரவெலாங் காமக்கணிகையர் முயக்கி லின்பமுற்று பகலெல்லாங் குரவராயணி வெண்ணீற்று ருத்திராக்கக் கோல மார்ச்சாலமாங் குழைவும், பரவுபாவனையுந் தேவதார்ச்சனை தாம்பண்ணல் போலுருப் பலப்பரப்பி, விரவுமாமணி தொட்டாட்டலும் பார்க்கின் மிகக் கொடிதிவர் வஞ்சவேடம் என்றபடி, இவ்வஞ்சசந்நியாவிகளினால் நம் நாட்டுக்கும் க்ஷேமமில்லை; அவர்களுக்கும் மோக்ஷமில்லை. இப்படி கோடிக்கணக்காக இருக்கிற இச் சந்நியாஸிகள், கோடங்கிகள், பண்டாரங்கள் கிருஷிகத் தொழிலைக் கைக்கொண்டால் நம் நாட்டில் வறுமை தீர்ந்தே போகும். பொதுவாக நம்மிந்தியாவில் செவிட்டூமையர் லக்ஷத்து ஐம்பத்தையாயிரம் பேரும், கபோதிகள் மூன்று லக்ஷத்து அறுபதாயிரம் பேரும், குஷ்டரோகிகள் லக்ஷம் பேரும், புத்திபேத முள்ளவர்கள் ஆறாயிரமும் இருக்கிறார்கள். இந்த ஆறு லக்ஷம் பேருக்கும் உதவி புரிய வேண்டியது நம்மவர் கடமைகளின் முக்கியம். இவர்கள் நீங்கலாக ஏனையோர்களுக்குத் தர்மம் செய்வதில் பெரும் பாபமே நம்மைச் சாரும் என்பது எனது கொள்கை. ஆனாலும் உண்மைச் சன்னியாஸிகள் இல்லாமல் போகவில்லை. ஆகையால், சகோதர சகோதரிகளே! போலிச் சந்நியாஸிகளான திட சரீரமுள்ளவர்களை ஆதரிக்காதேயுங்கள், அவர்கள் ஒரு வேலையும் செய்யாமல் சோம்பல் மேலிட்டு பிச்சை எடுத்து உண்கிறதும் உறங்குகிறதுமாகக் காலங் கழிக்கிறார்கள். உற்சவ காலங்களில் இவர்களுடைய தொந்தரவு அதிகமாக இருக்கிறது. இப்போலிச் சந்நியாஸிகளை எல்லாம் திறட்டிகைத் தொழில்களிலும் விவசாயத்திலும் பழக்கி வைத்தால், நம் நாடு இந்த தரித்திரதசை அடையாது என்பது திண்ணம். தேசாபிமானிகளே கவனியுங்கள்! உங்களுக்கும் இவர்களால் நன்மையுண்டு. அது போலவே அவர்களுக்கும்.

G. S. A. வெங்கிடராம் நாயுடு,

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் சபை, ஆத்தூர்.

குறிப்பு: - இக்காலத்தில் உலக போகங்களைக் கொஞ்சகால மனுப் வித்தவனுக்கே அவற்றில் விரக்திவருவது கடினமாக விருக்கிறது.

 

இக்காலத்தில் தக்க ஆசான் ஒருவன் பக்குவமறிந்து ஒருவனுக்குக் காஷாயமளிக்கும் வழக்கமில்லை. சிறுவர்களும் பிரியப்பட்டால் காஷாயம் தரித்துக்கொள்கிறார்கள் - பாலியம் அல்லது யௌவன வயதில் உலகில் அநித்திய புத்தியும் - மோட்சவிருப்பமும் தோன்றி சந்நியாசியாவோர் மிக்க அரிது. அப்படியாவோரைப் பற்றி இங்கு கூறப்படவில்லை. ஞானத்தையடைய விரும்புவோன் முன்னே காஷாயந் தரித்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமேயில்லை. ஆனால் 'நான் ஒருதொழிலும் செய்யாமல் யாராவது எனக்கு ஆகாரம் அளிக்கவேண்டும்'' என்று தெரிவிப்பதற்கே காஷாயம் இத்தகையோர்க்கு உதவியாக விருக்கிறது.

 

உண்மையான விரக்தி ஜனித்து ஞானாப்பியாசம் செய்துகொண்டு பசிப்பிணியை யொழிப்பதற்கே, அது வந்துற்ற போது எதிர்ப்பட்டவிடத்தில் கையேந்தி கிடைத்ததை யுண்டு உலகைக் கானல் நீரெனக் கருதி நடக்கும் ஒருவனுக்கும் இவர்களுக்கும் நேர்மாறான பேதமிருக்கிறது.

 

தேகத்தில் இச்சையும் அபிமானமுமுடைய ஒருவன், வெண்பட்டிற்குக் காஷாயம் ஏற்றிக் கீழேயுடுத்திக்கொண்டு, சுமார் 15, 20 ரூபாமதிப்ள்ள நேர்த்தியான புல்லம்பேட்டை அங்கவஸ்திரத்திற்குக் காஷாய மேற்றி மேலே யணிந்து கொண்டு, காஷாய நிறமான சீனாபட்டில் அங்கிதைத்து அணிந்துகொண்டு, மாலை 4 மணிவெயில் கூட தன் அருமையான தேகத்தில் படாதபடி காஷாய நிறமுடைய பட்டுக்குடை பிடித்துக்கொண்டு, கால் மண்ணில் படாதபடி சித்திரவேலை செய்த வெள்ளிக்குமிழ் வைத்த உயர்ந்த பலாமரப் பாதக்குரடணிந்து கையில் தங்கப் பூண்கட்டிய கோல் பிடித்துச் செல்லும், ஒரு சந்நியாசி எந்த நோக்கங்கொண்டு அக்கோலமணிந்தா ரென்பதை இதை வாசிப்போரே யூகித்துணரலாகும். அந்தோ இத்தகைய சோம்பேறிகளால் உண்மையாய் முமூக்ஷத்வம் பொருந்தி சாதுசங்கம், சாத்திர ஆராய்ச்சி, சிரவண மாதிகளிலேயே காலங்கழிக்கும் சந்நியாசிக ளிடத்திலும் உலகோர்க்கு ஐயம் ஜனித்து அவர்களுக்கு உதவி கிடைக்காமற் போகிறது.

 

இவ்வாறு வேறு காரணமின்றி, உண்மை விரக்தியின்றி யாசகம் செய்து ஜீவிக்க வென்றே வெளிகிளம்பும் வேட சந்நியாசிகளுக்கு உதவி செய்வது நம் தாய்நாட்டிற்குத் தீங்கிழைப்பதேயாகும். அவர்களுக்குச் செய்யும் தர்மம் அபாத்திரத்திற்குச் செய்ததேயாகும். ஆனால் இவர்களின் உண்மையைக் கண்டறியாது எல்லா சந்நியாசிகளையும் அவ்வாறே கருதி அவமதித்துவிடலாகாது.

 

சந்நியாசிகளில் மட்டுமல்ல இவ்வாறு ஆசாமிகளிருப்பது. நமது நாட்டில் துறவிகள் என்று வெளிவருவோரிலும் சிலர் நாமரூப நாட்டம் விடாமலும், மனச் சலனத்தை யொழிக்காமலும், முக்கால உணர்ச்சியோடும், காலதேச வர்த்தமானங்களில் பூரணமாகப்பதிந்த மனதோடும், உலகோரிலும் ஏழை, செல்வவந்தன், நண்பன், அன்னியன் முதலிய எல்லாபேத உணர்ச்சியோடும், விருப்பு வெறுப்பு, இன்று, நாளை, நன்னாள் தீயநாள், உயர்வு, தாழ்வு முதலிய சகலபேத உணர்வோடும் உலகோரோடு விவகரித்துக் கொண்டே, தங்களைத் துறவிகளென்று உலகம் மதிக்கவேண்டுமென விரும்புகின்றனர். உலகோர்க்கு ஞானமார்க்கத்தைப் போதிப்பதாகிய ஒரு விஷயந்தவிர மற்ற எந்தவிஷயத்திலும் தறவியாகிய ஞானி உலகோரோடு சம்பந்தம் வைத்துக்கொள்ள விரும்பானென்றே ஆன்றோர் அருளியிருக்கின்றனர்.

 

சிலர் மகான்களுக்குரிய திருநாமங்களை வைத்துக்கொண்டு அந்த ஆசிரமவிதியை மதியாமல், உலகோர்போல் தந்திரமான வழிகளில் பொருள் சம்பாதிக்கவும் முயல்கிறார்கள். அவர்களது நாமம் வேடம் யாவும் அம்முயற்சியால் பணம் சம்பாதிக்கவே உதவியாகின்றன.

 

உண்மையாகவே நித்தியா நித்திய விவேகம் ஜனித்து ஞான, அப்பியாசம் செய்பவன் தன்னை யறிந்து பிரம்மவரன் பதவியையடைந்தாலும். வருணாசிரம தருமப்படி நடந்துகொண்டிருப்பான். இல்லறத்தை நீத்து சந்நி யாசியாக வெளி கிளம்பின், மறுபடி இலௌகீக விவகாரங்களில் பிரவேசியான் அதற்குமேல் சமாதி நிலை பொருந்தி துறவியாயினோ தனக்காக வாயினும் சரி, உலகோர்க்காக வாயினும் சரி, இலௌகீக விவகாரங்களில் மனதைச் செல்லவிடான். நாமரூப நாட்டம் வைப்பின், வெளிக்கு அவனுடைய நிகழ்கால அற்ப விவகாரங்கள் மட்டும் கனவுபோல் நடக்கினும் அவனுடைய உள் திருஷ்டியில் அகண்டாகார அநுபவமாகிய தன்னையன்றி வேறெவ்விதத் தோற்றவு மிராது என்று ஆன்றோர் அருளியுளர்.

 
   ஆகையால் இத்தகையோர் விஷயத்தில் மிக்க எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டுவது அவசியமேயாகும்.

 

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - பிப்ரவரி ௴

 

 

   

 

No comments:

Post a Comment