Wednesday, August 26, 2020

 

இங்கிதமாலையின் எழில்

(முருகவடிவு)

திருவருட் பிரகாச வள்ளலார் அருளிச் செய்து திருவருட்பா, ஊணுருகி உயிருருகி இன்ப வூற்றெடுக்கும் தெய்வீகத் திருநூலாகத் திகழ்கின்றது. அத்திருவருட்பாவின் கண்ணே இங்கிதமாலை என்னும் எழில் மிகுந்த பகுதி ஒன்றுளது. இவை பெரும்பாலும் அகத்திணைப் பாடல்களை யொத்து மிளிர்கின்றன. அகம் என்பது ஒத்த அன்பினராகிய தலைவன் தலைவி என்ற இவ்விருவர் அகத்தும் நிகழ்வுற்று அவராலே அநுபவிக்கப்படும் இன்பமாம். திணை என்பது ஈண்டு ஒழுக்கம். ஆகவே இன்பமாகிய ஒழுக்கத்தைப் பற்றிய பாடல்கள் அகத்திணைப் பாடல்கள் என்பது போதரும்.

அகத்திணைப் பாடல்கள் கூடுதல் கூடுதல் பிரிதல் முதலியவற்றால்
இன்ப துன்பங்களைக் கூறுதல் போன்றே, இவையும் உள்ளத்திற் பிறக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவனவாய் விளங்குகின்றன. இவ் விங்கிதமாலையில் உள்ள பாடல்களைப் பயில்வார் அடிகளாரது அன்பின் பெருக்கத்தையும், பெருங் கருணைத் திறத்தையும், போற்றலையும் வியவாதிருக்க முடியாது. செவ்விய மதுரஞ் செறிந்த சொற்கள் பல பொருத்தப்பெற்று விழுமிய பொருள்கள் பல தொனிக்கின்றன. மற்றும் உயிருக்கும் இறைவனுக்கும் உள்ள இயைபை இவை காதலி காதலன் என்ற முறையிற் கூறுகின்றன.

அருட்பிரகாச வள்ளலார் தன்னைத் தலைவியாகவும், கடவுளைத் தலைவனாகவும் கொண்டு சிலேடை விளங்க அகப்பொருள் துறையாக இவ்விங்கிதமாலைச் செய்யுட்களைப் பாடியுள்ளார். இம்முறை தூது முதலிய பிரபந்தங்களிலும், நாயன்மார்களது தேவாரத்திலும், நம்மாழ்வாரது திருவாய் மொழியிலும் மற்றைய சமய நூல்களிலும் அமைந்து விளங்குகின்றது.

சுவை என்பதே இன்னதென அறியாதவனுக்கு அமுதத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தல் எவ்விதம் இயலாததோ; அவ்விதமே இன்பம் என்பதே இன்னதென அறியாத ஒருவனுக்கு பேரின்பத்தின் அருமைமையும் பெருமையையும் விளக்கிக் கூறுவதாகும். பேரின்பத்தின் அருமைமயையும், பெருமையையும், செம்மையையும் மக்கள் அறிந்து தெளிந்து, அப்பேரின்ப வாழ்வை யடைய ஆர்வம் கொள்ளுதற் பொருட்டு சிற்றின்பத்துறை மூலமாக அடிகளார் எடுத்துரைத்திருக்கிறார். இவர் எடுத்துரைக்கும் தன்மையினால் பேரின்பத்தில் பதிந்த மனமுடையராய்த் திகழ்ந்தார் என்பது ஒருதலை.

இவ்வுண்மையை உணர்ந்தே இறைவன் பால் ஈடுபட்டு பத்திமையால் பணிந்து பாமாலை பாடி நற்றமிழ் பரப்பிய பெரியார் பலரும்; கடவுளையும் உயிரையும் காதலன் காதலி என்னும் முறையில் அகத்தினை யழகுகள் ஒருங்கே விளங்க எடுத்துரைப்பாராயினர். இத்தன்மை மணிவாசசர் திருவாசகத்திலும் அமைந்து விளங்குகின்றது. ஆசிரியர் திருவள்ளுவ நாயனாரும் தமது தமிழ் மறையில் இன்பப் பாலை (காமத்துப்பானை) அமைத்தருளியது எற்றுக்கோவெனின், இன்ப இயல் இறுதியில் “சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாய" வீடுபேறு பயக்கும் என்பதாலன்றோ!

இனி, இங்கிதமாலை என்பதற்கு அடிகளே அருட்பாவின்கண் பொருள் கூறியுள்ளார்கள். அதாவது,

ஆன்ம சிற்சத்தியாகிய தலைவி கடவுளாய தலைவரோடு சயிக்ஞை புரிந்த ஐக்யானுபவ சையோக விவகாரத்தைப் பராசத்தியராய உயிர்ப்பாங் கியரிடத்து வினவிய தலைவி பாங்கிக்குரைத்தல்" என்பர்.

பொதுவாக இங்கிதம் என்பதற்கு குறிப்பு என்பது பொருளாகும். "உற்ற நோய்நீக்கி யுருஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்" என்னும் திருக்குறளுக்கு உரை உறப்போந்த பரிமேலழகர் “இங்கிதம், குறிப்பால் நிகழும் உறுப்பின்றொழில்” என்றார். இங்சே இங்கித மென்றது; பிறைமுடிப் பெம்மானாகிய இறைவன் பிச்சாடன வேடம் பூண்டு.
தாருகா வனத்திலிருந்த முனிவர் பத்தினிகளின் கர்வத்தை அடக்க வநத காலை; அம்மங்கையர் அனைவரும் மையல் கொண்டு கருத்துத் திரிந்து அப்பிச்சாடனரை நெருங்கி உள்ளுரையோடு கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த விடையாகும்.

இஃது கடவுண் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த துறையின் பாற்படும். இவண் அடிகளார் கூறும் தலைவர் உள்ளங்கவர் கள்வனாய் விளங்கும் ஒற்றியூர் உடைய பிரானாவர். இப்பகுதியிலுள்ள 165. பாடல்களும் கற்றவர் விழுங்கும் கற்பகக் கனிகளாக திகழ்கின்றன. இதன்கணுள்ள ஒரு செய்யுளின் எழிலைப் பாருங்கள்.

"கண்ணின் மணிபோல் இங்கு நிற்கும் கள்வரிவர் ஊர் ஒற்றியதாய்

பண்ணின் மொழியாய் நின்பாலோர் பறவைப்பெயர் வேண்டினோம் படைத்தால்

மண்ணின் மிசையோர் பறவையதாய் வாழ்வாய் என்றார் என்னென்றேன்

எண்ணியறிநீ என்கின்றார் இதுதான் சேடி என்னேடீ,''

 

இச்செய்யுள் தலைவி தோழிக்குக் கூறியதாகும். தலைவி தன் தோழியை அழைத்து, ''ஏ சேடி! கண்ணிற் கருமணிபோல் இங்கே இருக்கு கடவுளாகிய இவர் ஊர் திருவொற்றியூராம். இவர் நம் இல்லிற்கு வந்த வந்தவுடன் என்னை கோக்கி, 'பண்போன்ற மொழியுடையாய்! உன்னிடதில் ஒரு பறவையினுடைய பெயர் (அன்னம் = உணவு) வேண்டி வந்தே. அப்பறவைப் பெயரை எனக்குப் படைத்தாயானால்; நீ இப்பாவை சூழ்ஞாலத்தில் ஒரு பறவையாய் (கிளி = சுகம்) வாழ்வாய்' என்றார். ஒன்றும் விளங்காததால் 'என்ன?' என்று வினவினேன். ‘நீயே யோசித்து உணர்வாய்' என்று கூறுகின்றார். இதன் காரணம் யாதோ அறியேன்" என்றாள் தலைவி என்பது இச்செய்யுளின் பொழிப்பாகும்.

இப்பாட்டிலுள்ள குறிப்பு யாதோ வெனின் பறவை யொன்றை நல்கினாயானால் மற்றொரு பறவையாய் வாழ்வாய் (எனக்கு உணவு படைத்தால் நீ சுகமாக இருப்பாய்) என்று கூறுவார் பறவைப் பெயர் வேண்டினோம் படைத்தால் பறவையாய் வாழ்வாய் என்றார். எனவே, பிச்சை புக்கத் தலைவர் தலைவியின் அன்னமென் னடையையும், ஒளி மொழி போன்ற இனிய உரைகளையுமே தமக்கு உணவாகக் கொண்டார் என்பது போதரும்.

மற்றொரு செய்யுளிலே, ''ஒருபொழுது நான் தலைவரை நோக்கி "தேவரீர்க்கு என்ன விருப்பம்?' என்றேன். அதற்கு அவர் 'உனது பெயரில் இடையில் உள்ள மெய்யெழுத்தை நீக்கிய நின் முகத்தை விழைகின்றேன். மெதைத் தருவாய்' என்றார். என்ன கேட்கிறார் என்று புரியாததால், 'ஐயா! பம்கிறேன். அதை சிறிது வெளிப்படையாய்ச சொல்லுங்கள்' என்றேன். வெளிப்படையாய்ச் சொன்னால் இருவை' என்கிறார். இது என்ன?" என்று சேடியைக் கேட்டாள் தலைவி.

ஆகவே, உனது பெயரிடையோர் மெய் நீக்கிய முகம் என்றது; நங்கை
என்ற பெயரில் ஙகர மெய் நீக்கினால் நகை என்று வரும். உன் நகை முகத்தைத் தருவாய் என்று வெளிப்படையாய்ச் சொன்னால்; நீ (இருவை = இரண்டு ‘வை’!) என்பதாகும். இதனால் அடிகளார் எவ்வளவு நுட்ப மதியுடையவர் என்பது போதரும். இக்கருந்தடங்கிய பாடலைப் பாருங்கள். என்ன எழிலுடன் விளங்குன்றது.

“திருவையளிக்கும் திருவொற்றித் தேவரீர்ச்கென் விழைவென்றேன்,

வெருவல் உனது பெயரிடையோர் மெய்நீக்கிய நின்முகம் என்றார்.

தருவல் அதனை வெளிப்படையாய்ச் சாற்றும் என்றேன் சாற்றுவனேல்

இருவை மடவாய், என்கின்றார் இதுதான் சேடி என்னேடீ."

     
ஆனந்த போதினி – 1942 ௵ - பிப்ரவரி ௴

 

No comments:

Post a Comment