Tuesday, August 25, 2020

 

அறிஞர் திரு.வி.க.

(குரு)

கருமைக்கும் மாநிறத்துக்கும் நடுத்தரமான நிறம்; மெலிந்த உடல்; உறுதியைக்காட்டி விறைப்பாக நிற்கும் உச்சிக் குடுமி; பெண்மை கனிந்து ஒளி வீசும் முகம்; உயர்ந்த மூக்கு; துடிக்கும் புருவம்; விரைவாக மூடி மூடித் திறக்கும் கண்கள்; நெற்றி விளக்கும் சந்தனப் பொட்டு; முறு வலிக்கும் இதழ்கள்; வெள்ளைக் கதர்ச்சட்டை; சட்டையில் நூல் பொத்தான்கள்; அரையில் கதர் வேட்டி--இவர் தாம் திரு. வி. க. ஆளைப் பார்த்தால் பிரமாதமாகத் தெரியவில்லை. 'பெருமை பெருமிதம் இன்மை' என்பது
இவருக்காகத்தான் கூறப்பட்டது போலும்.

திரு. வி. க. இன்று அறுபதாண்டான இளைஞர். படிக்கின்ற காலத்திலே தமிழாசிரியர் கதிரைவேற் பிள்ளையோடு கொண்டிருந்த தொடர்பு நீடித்திருக்க வேண்டு மென்பதற்காக - தமிழோடு தம் உறவு பெருகவேண்டு மென்பதற்காக - ஆங்கிலப் படிப்பை வெறுத்துப் பரிசு பெற்ற ஆங்கிலப் புத்தகங்களைப் பள்ளியின் முன் பலருங் காணக் கொளுத்திப் பள்ளிப் படிப்பை விட்டார். பின்னர் அரவிந்தர் நடத்திய 'வந்தே மாதரம்' என்ற பத்திரிகைமேல் கொண்ட வெறியால் ஸ்பென்ஸர் கம்பெனி வேலையை வேண்டாமென விடுத்தார். அடுத்தாற் போலத் தமிழாசிரியப் பதவியை ஏற்றார். தமிழாசிரியராக ஆறு ஆண்டுகள் கழித்தார். நாடு அவரை விழைந்தது; நாட்டுப்பற்று அவரைப் பொதுநலப் பணிக்கு அழைத்தது. 1917-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழாசிரியர் பதவியை விட்டு விலகினார். 'தேச பக்தன்' ஆசிரியராகப் பணி ஏற்றுத் தூய தெள்ளத் தெளிந்த தமிழால் நாடெங்கும் தேசபக்திக் கனலைப் பரப்பினார். அந்தப் பதவியிலே மூன்று ஆண்டுகள் கழிந்தன. 'நவசக்தி' பிறந்தது; திரு. வி. க. அதன் ஆசிரியர். 'நவசக்தியுடன் தொழிலாளர் இயக்கமும் பிறந்தது. திரு.வி.க. அதன் தலைவர். இந்தியாவில் தோன்றிய முதல் தொழிலாளர் இயக்கம் அது தான்; அதுவே இந்தியாவில் முதல் வேலை நிறுத்தம் நடத்தியது.

தமிழுக்காக ஆங்கிலப் படிப்பையும், உரிமைக்காக ஊதிய வேலையையும், நாட்டுக்காகத் தமிழாசிரியப் பதவியையும் விடுத்த திரு. வி. க. கொள்கைக்காக வாழ்பவர். குறிக்கோள் ஒன்று, செய்வது இன்னொன்று என்பது அவரிடம் இல்லை. காங்கிரசிலிருந்து அவர் விலகியதும் இந்த அடிப்படையான கொள்கை பற்றித்தான் என்பது அவருடன் பழகியவர்களுக்குத் தெரியும். கொள்கைக்காகத் தியாகம் செய்பவர் திரு. வி. க. தம் கொள்கையோடு முரண்பட்டபோது அரசியலை விட்டு விலகினார். தொழிலாளர் இயக்கத்தோடு மட்டும் சிறிது தொடர்பு இன்னும் இருக்கிறது. எனவே அவருடைய வாழ்க்கை இன்று பெரும்பாலும் துறவு வாழ்க்கைதான். தமிழ் அவரை விடாது; அவரும் தமிழை விடமாட்டார். எனவே அவருடைய துறவு அங்கே அணுக முடியாது. - இதுதான் அவர் வரலாறு. நமக்குத் தெரிய வேண்டிய தெல்லாம் அவர் வாழ்வின் சாரம் - எதற்காக
எப்படி வாழ்ந்தார் என்பது.

திரு. வி. க. தமிழறிஞர்; தமிழன்பர்; தமிழ் பரப்பும் தொண்டர். ஐயரவர்கள் சங்க இலக்கியச் சங்கை வெளிப்படுத்தினார்க ளென்றால் திரு. வி. க. அச்சங்கு கொண்டு நாடெல்லாம் முழக்கித் தமிழைப் பரப்பினார். காதல், வீரம், இயற்கை வழிபாடு, அன்பு, அருள்......என்றின்ன தமிழருடைய கொள்கைகளை யெல்லாம் சங்க இலக்கியங்களின் வாயிலாக அறிந்து தமக்கே உரிய எழுச்சி மிக்க அழகிய தமிழில் எழுதிப் பரப்பினார். அவருடைய தமிழில் எழுச்சியுண்டு; அது தட்டி எழுப்பும். திரு. வி. க. வின் தமிழ் அழகியது; எல்லோரையும் அது தன்பால் ஈர்க்கும். செறிவு மிக்கது அவருடைய எழுத்து; பயில்வோரை ஆழ்ந்து எண்ணச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது அது. அப்பெரியார் எழுதி யிருக்கின்ற நூல்கள் என்றும் நின்று நிலவும் இலக்கியங்கள். 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்', 'முருகன் அல்லது அழகு', 'பெண்ணின் பெருமை', 'உள்ளொளி' முதலியன இங்கே குறிப்பிடத் தக்கன. திருக்குறளின் சில அதிகாரங்களுக்கு எழுதி யிருக்கின்ற விரிவுரை மிகப் பெருமை வாய்ந்தது. அவருடைய நூல்களின் சிறப்பை முழுதும் எழுதி முடித்தல் இங்கு இயலாத ஒன்று. சுருங்கச் சொல்ல வேண்டுமானால் தமிழ்நாடு கண்ட திறமான எழுத்தாளர்கள் மிக மிகச் சிலருள் திரு. வி. க. முதல்வர்; வழிகாட்டி. அவருடைய வாழ்வு தமிழில் தொடங்கியது; இன்றும் தமிழில் தோய்ந்திருக்கிறார் அவர். திரு. வி. க. முதலில் தமிழர், அதனால் தமிழை ஓம்புகிறார்; வழி படுகிறார்.

திரு. வி. க. வும் ஒரு காலத்தில் தமிழ்ப் பண்டிதர் தாம். இன்று நாம் காணும் தமிழ்ப் பண்டிதர்களுள் பெரும்பாலவர்க்கு உலகம் தெரியாது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவரல்லர் திரு. வி. க. வெளி உலகம் அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அரசியலில் அவர் வாழ்வு கலந்தது; தொழிலாளர் இயக்கத்தைக் கண்டது. அரசியலில் தலைவராக விளங்கினார்; தமிழ்நாடு முழுவதிலும் உரிமை உணர்ச்சியையும், காங்கிரசின் பெருமையையும் பரப்பித் தொண்டு புரிந்தார். அவருடைய தியாகப் பண்பும் அறிவின் திறமையும், நாவன்மையும் அரசியலில் அவருக்குத் தலைமை தந்தன. இன்றும் அவருடைய சொல்லுக்கு அரசியல் கூட்டத்தில் சிறந்த செல்வாக்குண்டு. இந்த நெருக்கடியில் அவருடைய தலைமையில் தமிழ்நாடு இல்லாமலிருப்பது வருந்தத் தக்கதுதான். அரசியலில் எவ்வளவு தலைமையும் செல்வாக்கும் உண்டோ அவ்வளவு தலைமையும் செல்வாக்கும் தொழிலாளர் இயக்கத்திலும் அவருக்கு உண்டு. தொழிலாளர் ஒவ்வொருவரும் அவரைத் தெய்வமெனக் கொண்டாடுகின்றனர். தொழிலாளிகட்கு அவர்
‘வழி காட்டும் வான்பொருளாக' இலங்குகிறார்.

சொற்பொழிவுகள் செய்வதிலே சிறந்த ஆற்றல் அவருக்கு உண்டு. கூட்டத்திற்கேற்ற முறையில் பேசி, கூட்டத்தினரின் உணர்ச்சியைத் தம்மோடு ஈர்த்துச் செல்லுவார். உணர்ச்சி ததும்பப் பேசுவதில் சிறந்த நாவலர் திரு. வி. க.

திரு. வி. க. நாவலர் மட்டுமல்லர்; பாவலருங்கூட, அண்மையில் வெளி வந்திருக்கின்ற பொதுமை வேட்டல்' இங்கே குறிப்பிடத் தக்கது. சிறந்த பாடல்கள்; பொதுமை நெறியை விளக்குவன.

திரு. வி. க. பெண்ணுரிமை நாடிப் போரிடும் போர் வீரர்; இளைஞர்க்கு வழி காட்டி. அவ்விரு பாலார்க்கும் ஊக்கம் தருகின்ற ஊற்று. புகழ்ந்து புகழ்ந்து அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து நல்ல வழிகளைக் காட்டுவார். பெண்டிர்க்கும், இளைஞர்க்கும் சிறந்த தலைவர்: தந்தை நிலையினர்.

அறுபதாண்டின் அனுபவத்தின் பின்னர் இன்று திரு. வி. க. சிறந்த கருத்துப் பழமாகக் கனிந்து நிற்கிறார். திரு. வி. க. அறிவு கனிந்து முதிர்ந்த இளங்கனி.' அவர் தம் அநுபவத்தால் கூறுவனவற்றுள் இரண்டு தலைமை யானவை. ஒன்று தமிழர் ஒற்றுமைப்பட வேண்டும். இரண்டு சாதி சமயச் சழக்குகள் ஒழிந்து சமரசம் நிலவவேண்டும். இந்த இரண்டுக்கும் அவர் கூறுகின்ற வழிகளும் உண்டு. தமிழர்கள் தமிழ்மொழியின் வாயிலாக - தமிழ்க்கலையின் வாயிலாக - ஒன்றுபட வேண்டும். சமரச சன்மார்க்க சங்கம் ஒன்று காணவேண்டும் - இவை அவர் கூறுகின்ற வழிகள். இவ்வழிகளில் தமிழ் நாட்டினரை ஆற்றுப்படுத்தித் தமிழ்நாட்டை உயர்த்த அவர் இளைஞர்களையே நம்பி யிருக்கிறார். இளைஞர்களிடம் எப்போதும் - எந்த நேரத்திலும் - கலந்து கொள்வார். ‘இளைய நண்பர்கள் இட்ட கட்டளை' என்று கூறி அவர்கள் சொல்லுகின்றபடி யெல்லாம் நடப்பார். இளைஞர் கூட்டும் கூட்டங்களில் அவர்களைவிட மிகுதியான ஊக்கத்தோடு கலந்து கொள்வார்.

அறுபதாண்டான முதியவரின் அநுபவமும், பதினாறாண்டான இளைஞனின் ஊக்கமும், ஆறு ஆண்டான குழந்தையின் களங்கமற்ற மனமும் படைத்த தலைவர் திரு.வி.க. தமிழ்நாட்டின் தவப்புதல்வர்; தமிழர்களுக்குவழி காட்டும் பெருவிளக்கு. தமிழன்னையின் தொண்டர்; பெண்டிர்க்குத் தந்தை; இளைஞர்க்கு ஊக்க ஊற்று...... இத்தகைய பெருமை உடையவர் திரு.வி.க.

திரு.வி.க. காணும் தமிழ்நாட்டு ஒற்றுமைக்கனவு மெய்யாக வேண்டும்: அதற்கு இளைஞர்கள் முன் வரவேண்டும். அவருடைய மனத்திலே உருக்கொண்டிருக்கும் சமரச சன்மார்க்க சங்கம் வருகின்ற ஆகஸ்டு மாதத்திலாவது புறத்தோற்றம் தரவேண்டும்.
திரு.
வி. கலியாணசுந்தர முதலியார்க்கு வருகின்ற ஆகஸ்டு மாதம் 26-ஆம் தேதியோடு அறுபதாண்டு நிறைவுறுகிறது. தமிழர்கள் அவரைப்போற்றுவார்களாக.

ஆனந்த போதினி – 1943 ௵ - மே ௴

 

No comments:

Post a Comment