Wednesday, August 26, 2020

 

அஹிம்சை யாருக்கு வேண்டும்?

(A ராமலிங்கம்.)

அஹிம்ம்சை என்பது ஹிம்சை என்ற வார்த்தைக்கு பேரெதிரான பதம் என சுருங்கக் கூறுதல் இயலும் எனினும் அதன் தனிப் பெரும் அழகு இச்சிறு ''ஹிம்சை" என்னும் வார்த்தைக்கு மறுப்புரையாக கூறுவது மட்டும் போதாது என்பதே நான் கண்ட உண்மை.

பண்டைக் காலந்தொட்டே நமது தேசத்திலே இம்மாதிரியான கொள்கை பல்வேறு பெயரால் பரிணமித்து வந்திருக்கிறதென நம் முன்னோர் இயற்றிப்போந்த
பல நூல்களும் தெள்ளத் தெளிய கூறியிருக்கின்றான். நமது பரத கண்டம் தவிர உலகில் உள்ள மற்றும் ஏனய தேசங்களில் இம்மாதிரியான லக்ஷியம் இருந்ததாக இல்லை. ஆனால் இன்று உலகிலுள்ள மண்ணாசை பிடித்த மகா உக்ரிஷ்டர்களால் சிதைவுற்று அல்லும் பகலும் ஆண்டவனை நோக்கி சுதந்தரம் கோரும் கிரீஸ், சைனா இவ்விரு நாடுகளும் ஆத்மீகத் துறையில் நல்லிடம் பெற்றிருப்பதாக, சரித்திரம் கூறுகிறது. ஆனால் அக்கொள்கைக்கு பூரண ஆதரவு. அந்நாடுகளில் இருந்திருந்தால் இன்றைய நிலைமை ஏற்படுவதற்கு காரணம் இருந்திருக்காது.

அஹிம்சை என்பது அநுஷ்டிக்க விரும்புவோருக்கு ஆரம்பத்தில் வெகு சிரமமே யாகும். அஹிம்சையை நடை முறையில் அமுலுக்கு கொண்டு வர வேண்டுமானால், மனிதனுக்கு வெகு கட்டுப்பாடு வேண்டும். தன் மனம்போன போக்கில் நடந்து கொள்ளும் இயல்பினருக்கும், எண்ணரிய நூல் பல கற்றும் இக்கொள்கை பிடிக்காது என்பது வாஸ்தவமே. எண்ணரிய நூல்கள் கற்று விட்டதனால் மட்டும் அறிவு வளர்ச்சியுற்று விட்டதெனக் கூறுவது சிலாக்கியமென சொல்ல முடியாது. நூல்கள் கற்றாலும் தமிழ் பெரும்தகையார் வள்ளுவர் கூறியபடி,

"கற்க கசடற கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக"

என்ற உபதேசத்தை மறந்து, தன் குற்றம் உணராத தான்றோன்றி வீரனாய், பிறர்க்குரைக்கும் பேதையாய் இவ்வுலகில் வாழ்வது பூமிக்கு வீண் பாரமே யன்றோ! தன் குற்றங்களை ஆய்ந்து கொள்ளும் தன்மையும் அதற்காக உணரும் இயல்பும் எப்பொழுது வருகிறதோ அன்று தான் அவன் மானிட அறிவு பெற்றவனாகிறான். தன் குற்றம் அறியாத மனிதன் உருவத்தில் மனிதனாக இருந்தாலும் குணத்தில் விலங்குக்கும் இவனுக்கும் வித்தியாசம் என்னே! தனது குற்றத்திற்காகத் தன்னைத் தண்டித்துக்கொண்டு அவ்வாறு
இனி நடந்து கொள்ளாமல் இருப்பதற்கு முயற்சிப்பவன் எவனோ அவனே அஹிம்சை எனும் ஆயுதத்தை எடுக்கும் திறமையுள்ளவன்.

      பல்லாயிர வருடங்களுக்கு முன்னரே மகான் புத்தர் நமது பாத கண்டத்தில் அவதரித்தார். அவரது லக்ஷியமென்ன! அவர் உறிய போதனை யென்ன! எவ்வுயிர்க்கும் அன்பாயிரு, அன்பே கடவுள், அதுவே நித்யானந்தம்: ஜீவாத்மா தனிப்பட்டதல்ல. பரமாத்மாவின் பொறியே ஆகும். இறுதில் எல்லாம் ஒன்றே. ஜீவாத்மா பிரகாசிப்பதற்கு அறிவு என்னும் தூண்டுகோல் இருக்கிறது. அதை இறைவன் நமக்கு அன்புடன் அளித்தும் அதன் உபயோகம் முழுதும் உணர்ந்துகொள்ளாதிருக்கிறீர்களே என எண்ணரிய பிரசங்கம் புரிந்திருக்கிறார். இதுமட்டுமா! கிரீஸ் தேச தத்துவஞானி “சாக்ரடீஸ்" வாழ்க்கையைத் சற்று கூர்ந்து நோக்குங்காள் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் சொல்லத்தகுமன்று முடிவில் கஷ்டமே அநுபவித்தார். ஆனால், அவர் கடமையில் சிறுதும் தவறவில்லை. ஆண்டவன் இட்ட கட்டளையை மேற்கொண்டு ஆத்மார்த்தீகத் துறையில் எவ்வளவு தொண்டு செய்ய முடியுமோ அத்தனையும் மக்களுக்கு செய்தார். தமக்கு தீங்கு செய்தவர்க்கும் நன்மையே செய்தார். வாழ்க்கை அநுபவத்தில் நடத்திக் காட்டிய பெரியாரில் இவரும் ஒருவர்.

நிற்க, இன்று உலக நாகரீகத்தில் முன்னேறிய தேசங்கள் எனக் கூறப்படும் ஐரோப்பா, அமெரிக்கா ஏன் மற்ற தேசங்களின் சில பாகத்திலும் பரவப்பட்டிருக்கும் கிறிஸ்து மதத்தைப் பாருங்கள். தேவ குமரனாய், பரிசுத்த ஆவியால் இவ்வுலகிற்கு வழிகாட்ட வந்த உத்தமர். இயேசு பெருமானது வாழ்க்கையையும் அவரது உபதேசங்களையும் கேளுங்கள். “ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு," "உன்னை ஒருவன் பலவந்தமாக ஒரு மைல் உப்பிட்டால் 2 மைல் போய்விட்டு வா", "செளக்கியமாக வாழ விரும்புகிறாயா! ஆனால் பிறருக்குத் தீங்கு நினையாதே" இன்னும் இது போல் எவ்வளவோ போதனைகளை மனித வர்க்கம் பலனை வாழ்வதற்குரியதும் ஆத்மீகத் துறையிலும் திருவாய மலர்ந் தருளி யிருக்கிறார்.

அஃதே போல், இவ்விருபதாம் நூற்றாண்டிலும் அஹிம்சை என்னும் அரும் பெரும் கொள்கையை யாவரும் அநுஷ்டிக்குமாறு நம் மாபெரும் தலைவர் மகாத்மா காந்தி சதா உபதேசிக்கிறார். அவரது ஜீவியத்தில் நடத்தும் சம்பாஷணைகளில் அஹிம்சை யெனும் வார்த்தை கலப்பில்லாமல் பேச அவருக்கு மனமில்லை. ஏன்! அன்னாருக்கு அஹிம்சையில் உள்ள நம்பிக்கைதான் காரணம்.

அரசியல் உலகில் பலர் பலவிதமாக வியாக்கியானம் செய்தபோதிலும், அவர்கள் கல்விக்குத் தகுந்தவாறு அழகுபட குறை கூறலாமே யல்லாது, இயற்கையில் எத்துணை மாண்புடைத்தாயது என்பது அவர்களுக்கே தெரியும். அகில உலக அரசியல் தீர்க்க தரிசனம் படைத்த பெரியார்கள் சிலர் இன்று காந்திஜியைச குறை கூறினாலும், அஹிம்சைக்காக அல்ல, அரசியல் பிரச்சினைகளுக்காகவே என்பதே எனது அபிப்ராயம்.

யார் எவ்வாறு கூறினும் அஹிம்சை என்பது மனித ஜீவியத்திற்கு மகாத்மா தந்த ஓர் அரிய பொக்கிஷயமேயாகும்.

வாழ்க்கை முறையில் மனிதனை உயர்வடையச் செய்வது அஹிம்சை தான். அஹிம்சை, ஆத்மாவிற்கு சாந்தியைக் கொடுக்கிறது; அஹிம்சை ஆரோக்கியத்தை உண்டாக்குகிறது; அஹிம்சை நீண்ட ஆயுளைத் தருகிறது; அஹிம்சை வாழ்க்கையில் வெற்றியைத் தருகிறது; அஹிம்சை உலகிலுள்ள எல்லா ஜீவன்களிலும் அன்பு பூணச் செய்கிறது. என் அஹிம்சையால் ஆகாத காரியம் ஒன்றும் உலகில் இல்லை என்றே கூறுதல் பொருந்தும். மகாத்மாவின் சாதாரண நடை முறைப் பேச்சு என அஹிம்சையை நினைக்காமல், அவரது கருத்துக்களை, உண்மையை, செயலை, காண்பவர்க்கு அதன் உண்மை விளங்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. ஆகவே அறிவும் ஆற்றலும் நிறைந்த மனித சமூகத்திற்கு “அஹிம்சை" ஓர் அரிய பெரிய பொக்கிஷமே.

ஆனந்த போதினி – 1942 ௵ - பிப்ரவரி ௴

No comments:

Post a Comment