Wednesday, August 26, 2020

 

அன்னை வழிபாடு

 

‘சதுமறை யாரியம் வருமுன் சகமுழுது நின தாயின்
முது மொழிநீ யாாதியென் மொழிகுவதும் வியப்பாமே!’


என்ற செங்கருத்தினைச் செவ்விதின் விடுத்தவர் கொடுமலையாளக் குடியிருப்பாளருந் தண்டமிழ்ப் பணியினைத் தலைதாங்கி நின்ற வருமான சுந்தரப்பெரியாரென்பது நம்மனோர் அறிந்துளதே. முதுமொழியே யெனினும், தமிழ்மொழி சில மொழிகளே போன்று உலக வழக்கொழிந்து சிதையாத் திறத்தால் தன்னைச் சார்ந்துள மக்கட்கு, அன்னார் இளையரேனும் முதியரேனும் செல்வரேனும் வறியரேனும், அவரது உடலோம்பல் வினைகட்கும் உயிரோம் பல் வினைகட்கும் உற்ற துணையாய் நிற்றலால், தமிழ் மக்கள் தம்மைப் பத்துத் திங்களாய்ப் பரிவுடன் சுமந்து நலிவுடனீன்ற நற்றாய்பாற் பாராட்டுமன்பு அவரது செவிலித் தாயாகும் தமிழ்ப் பேரணங்கிற்கு முரித்தாவது இயல்பின் வழியதன்றோ? அவ்வன்பினூடு பிறக்கு மன்னை வழிபாடு செவிலித் தாய்க்கு மியையு மன்றோ?

 

கால வரைப்படாத பேராயுள் படைத்த இவ்வன்னையார் பண்டை நாட்களிற் றனிநிலை யோச்சியதும், பிற்காலத்திற் பிறமொழி மாயையிற் சிக்குண்ட தம்மக்கள் தம்மை மெய்யன்புடன் பேணா தொழியவே என் பளவாய் நலிவுற்றதும், சில்லாண்டுகளாய் முறை பிறழ்ந்த வழிபாட்டை முறையினாற்ற முந்துற்றோ ரொருசிலரி னுண்மை யூக்கத்தால் தன்னலிவி லொருசிறிது நீக்கி நலனடைந்து வருவதும் நம் மனத் திருத்தற்குரிய கருத்துக்களாம்.

 

அயர்ந்து வீழ்ந்த அன்னையார் அயர்வு துரந்துள்ள ரென்பதுண்மை. எனினும் அயர்வு துறந்தவர் அடியூன்றி நிற்கவும் தன்னியற்கைப் பொலிவைப் பெற்று பண்டைப் புகழைப் பூணவும் வேண்டாமா? அந்நன்னிலை நண்ணுதல் சிறு தொகுதியினர் முயற்சி யளவி லமைந்து விடுமா? தமிழகத்தின் பகுதிதொறும், பட்டினந்தொறும், ஊர்தொறும், மனைதொறும் வாழும் ஆண்மக்களும் பெண்மக்களும் அன்னையர்க்குச் சிறப்பொடு பூசனை புரிந்தாலன்றி அவ்வுயர் நிலை கிட்டுவது யாங்ஙனம்? இச்சீரிய தொண்டு சிறந்தஞான்றே தமிழகமுந் தமிழ்மக்களுந் தனி நிலை தழுவ வியலும்.


ஓதல்

 

இனி வழிபாட்டின் வகையினை ஒருவாறு ஆயுங்காலை அது பலதிறத்ததாகு மெனினுஞ் சில கூறுகளைக் குறித்து நோக்குவோம். இக்கூறுகளில் தலைநிற்பது ஓதலாகும். நூல் ஓதலில் ஓதுவார் ஆர்வம் ஊன்றப்பெற்ற உள்ளத்தராதல் வேண்டும். ஆர்வமூண்ட வுள்ளமே அறிவுடன் உணர்ச்சியையும் பற்றச் செய்யும், அறிவுணர்ச்சியின் அளவே ஆசில் வாழ்க்கை அமையும். பிறமொழி நூல்களை ஆசையுடனும் ஊக்கத்துடனும் ஆய்ந்து அம்மொழிகளை வழங்கும் பிறநாட்டாரின் அறிவுணர்ச்சியினைச் சீருஞ் சிறப்புமுற அறிதல் எளிதே. ஆயினும் அப்பிறநாட்டு அறிவுணர்ச்சி தனித்து நின்று வாழ்க்கை ஒழுக்க நிலையினை ஓம்பும் உயர்வலி யுடையது என்று உரைக்கலாகுமா? நாட்டறிவுணர்ச்சியினைக் காலவியல்பினுக் கேற்ப, பயனில்லனவாய பழயன பேர்த்து, பயனுடையனவாய புதியன புகுத்தி, அதற்குப் புத்துயிரளிப்பதொன்றே அப்பிற நாட்டறிவுணர்ச்சிக் கியன்ற தொழிலாகும். எனவே, ஒழுக்க நிலைக்கு அடிப்படையாவது நாட்டறிவுணர்ச்சி என்பது வெள்ளிடைமலை யன்றோ? நாட்டுமொழி நூல்களே இவ்வறி வுணர்ச்சியினுக்குக் குன்றாக் களஞ்சியமாகலின், அந்நூல்களை நன்றே ஓதல் நற்றுறையாகும்.

 

ஓதற்றுறை யேற்பார் கற்றற்குரிய காலம், மனநிலை முதலாய துணைவலிகளமையப் பெற்ற இளமையே யாகும். தற்காலக் கல்வி முறையில் இந்நிலையார் பல்வேறு அறிவுப் பகுதிகளைக் கற்றுணரக் கடமைப்பட்டவரே; எனினும், அப்பகுதிகட்கு மூலாதாரமாகுந் தாய்மொழித் தேர்ச்சி தம்பாற் சிறக்கச் செய்தலே சீரிய முறையாகும். தவிரவும் மாணவநிலை முடிவற்ற பிறகும் இத்திறத்தார்க்கு அன்னை பாலன்புதழைத்தற்கு இம்முறை அரிய வித்தாகுமன்றோ?

 

ஓதற்றுறை பின்ளைப் பருவத்தினர்க்கே பெரும்பாலும் பொருத்தமுடைத்தாயினும் "கல்வி கரையில்' தென்னும் மூதுரை மெய்வழிப்பட்டதெனின், கற்றோமென்று கருதுங் காளையரும் பிற்பருவத்தினரும் தொழிலைக் கைநெகிழ விடாது பேணிநிற்றல் பெருமைத்து,


ஓதுவித்தல்.

 

ஓதல் வழிபாட்டை ஓம்பி நிற்போர் - சிறப்பாய்ச் சிறுமக்கள்- தம்மிலக்கினை ஈடேற்றற்கு, அறிவாற்றலில் தம்மினும் மிக்காரது துணையைக் கொண்டுள்ளனர். அத்தகைய துணைக்குரியோர் தாயும், தந்தையும், ஆசானும், ஆக்கியோனும் ஆகிய நால்குரவருமே யாவர். இந்நால்வரில் நாலாங்குரவராகுங் கடவுளர் முத்தொழிற் பெரியாரன்றோ? ஆன துபற்றி அன்னாரது அருட்டுணை யின்றி எக்கருமமும் ஏற்புடைத்தாகா தென்பதை எவரும் உணர்வர். எஞ்சிய மூவரில் ஆசானே மாணவர்க்குத் துணைநிற்கத் தகுந்தவனென்றும், மக்கள் தம்மிலக்கு ஈடேறப் பெறாதொழிவரேல், அன்னாரின் இழிநிலை, ஆசான் அறம் வழுவியதானே விளைந்த தென்றும் மொழிவர். மக்களைப் பெற்றோர் மாணவர்க்கு முழுத் துணையு முதவ கல்வி முறையுங் காலக்குறைவுந் தமது முயற்சிகட்கு முரணாவதை யுன்னாது தந்தலை மேற் பழிசுமத்தல் அடாது என்று அறைவர் ஆசிரியர். இவ்விரு திறத்தார் கடமையினையும் காலநேர்மையையுஞ் சீர் தூக்கி, ஒவ்வொருவர் கூற்றும் ஒரேவழி யுண்மையாயினும், துணை வழங்குதற்கு இருபாலரும் உரித்தானவரே என்று சாற்றுவர் ஒரு சாரார். ஓதுவிக்கும் பணிதாங்குவோர் ஆசிரியரே எனினும், ஓதுவித்தலும் தொண்டு முறைகளில் ஒன்றாம் என்னுங் கருத்தையும், நாட்டறிவாழ்க்கையி லிணைத்து மக்களைப் பயிற்றுவிக்குங் கடன் பெரும்பாலுந் தமதேயாகு மென்னுங் கருத்தையுந் தம்மனத் திருத்தி, மக்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியருடன் ஒத்துழைக்கத் தாய் தந்தையரும் உடன் படக் கடவரென்பது மேற்கூறிய நடுநிலைத் தீர்ப்பாளாது துணிபு போலும். உற்று நோக்கின் இத்துணிபு போற்றற் பாலதே எனப்புலப்படும்,   

 

ஒதுலிக்கும் தொண்டினுக் கிசைந்துள்ள ஆசிரியர் தொண்டின் நீர் மையை நன்றாக ஓர்ந்து ஓதுவார்க்கு ஏனைய அறிவுப் பகுதிகளைப் புகட்ட மேற்கொள்ளும் தேர்ந்த முறைகளானே தமிழன்னை பாலுந் தூய அன்பு தோன்றச் செய்தல் வேண்டும். போதிய அறிவின்மையானோ, வின்மையானோ அல்லது இரண்டு மின்மையானோ இளம் மக்கட்குத் தமிழோ துவிக்குந் தொண்டேற்றோர் தந்தொண்டிலூக்கங் குன்றியவராகக் காண்கின்றனர். குப்பேற்றத்திற் குதவுவதோடு தங்கடமை முற்றுப் பெறுவதாகு மென்ற கருத்தைக் கொண்டோ, 'எவ்வகுப்பினு மெளிய நடையே வேண்டு' மென்றும், செந்தமிழ்நடை மொழிச் சிற்பிகட்கே சிறந்த தாகலின் மாணவப் பொதுமக்கட் குதவுவதன்று' என்றும் பறை சாற்றித் திரியும் 'முறை' படைவீரர் சிலரின் சீற்றத்திற் கடங்கியோ, அன்றி மாணவரின் மனத்திடத்தை யறிய இயலாமையாலோ, இவ்வாசிரியத் தொகுதியினர் தம்மை அண்டிய மாணவர்க்கு அளிக்கும் மொழித் தேர்ச்சி சுவையற்று முறுதியற்று மிருக்கின்றது. சோறுண்ணத் தலைப்பட்ட காலையும் மக்கட்குக் கஞ்சியே வார்த்தல் அன்னார் மெய்வளர்ச்சிக்கும் வலுவிற்கு மேற்ற தாமோ? என்னே அறிவின் புன்மை! உடலாக்கத்திற்கும் மனவாக்கத்திற்கு மதனதன் வளர்ச்சி நிலைக்குரிய உரமூட்ட லன்சே தகைமைத்தாகும். நிற்க, மேற்றா வகுப்புகட் காசிரியராகும் ‘ புலவர் 'விருது பெற்ற பேரறிஞர் சிலரிடத்தும் இக்குறை காணப்படுவதேன்? தம்மறிவு தமக்கே உரித் தென்ற எண்ணத்தானோ? முயற்சி வருவாயளவில் அடங்குவது என்ற சித்தாந்தம் பற்றியோ? எம்முயற்சி யெடுத்தும் இம்மக்கள் பாற்பயனிறுத்தல் கூடா காரியமா' மென்று ஏழை மாணவரை என்னிச் சீறும் சில ஆசிரியரின் இலக்கினுக் கியைந்தோ? இன்றி இளமையினே பயிற்சி அளிக்கப்படாமைக்கு நாமென்ன செய்வோம் என்ற கூற்றைக் கொண்டோ? எதுவாயினும், இவர்களிடத்துப் பயிலுவோர் ஆண்டுச் சோதனை விழாவில் அரங்கேற்றற்குரிய அறிவு பெறுவதுண்மை யாயினும் ஏற்ற இவர்களில் அன்னையார்க்கு மெய்த் தொண்டராவோர் சிலரினுஞ் சிலரே. இங்ஙனம் நிகழ்வதேன்?

 

உணர்ச்சி வழிப்படா அறிவு பயன்படாது. அறிவினை உணர்ச்சியூடிணைக்க வேண்டியதற்கு வேண்டிய வலிவு ஆசிரியரானே ஆக்கப் படல் வேண்டும். அவ்வலிவும் ஆசிரியர் மேற்கொள்ளும் உணர்ச்சியையே தனக்குப் பிறப்பிடமாய்க் கொண்டுளது. ஆகவே ஓதுவித்தல் தொண்டை நல்லாற்றின் ஒழுக்க உறுதி கொள்ளும் ஆசிரியர் மொழியறிவினுக்கு – அதிலும் நாட்டு மொழியறிவினுக்குரிய உணர்ச்சியை தொண்டினுக் கேற்றவாறு அமைத்துக் கொள்ளுதல் அன்னார்க்குத் துணைக்கரமா மன்றோ?


நூலாக்கல்.

 

ஓதலோதுவித்தலாய இருவகை வழிபாட்டிற்குங் கருவியாவது நூல். இயற்றப்படுங் கருமத்தின் பெருமை கருவியின் தன்மையையுந் தழுவி நிற்றலால், நமது கருவி கருமத்திற்கொத்த பண்பு வாய்ந்திருத்தல் வேண்டும் அல்லவா? ஆகவே அத்தகைய பண்பு அமைய கருவியை யாக்கலும் வழிபாட்டின் பிறிதொரு துறையாம் அன்றோ? இத்துறையின் நீர்மை யாது?

 

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பயன் அளிக்க வன்மையுடைய நூலே இலக்கண முறையில் ஆக்கப்பட்ட நூலாகு மெனினும், அம்மெய்ந்நூலை ஓதி உணர்தற்கு உறுதுணையாகுந் தற்காலப் பாட புத்தகங்களையும் 'நூற்றொகுதி' என்ற பேரினத்திற் சேர்த்தல் பிழைபடாது.

 

நூலாக்குவோரும் தமது முயற்சி தொண்டு வயப்பட்ட தென்ற எண்ணத்தைத் தமதுள்ளத் திருத்தல் அன்னார் தலைக்கடன். இக்கடனை யுணர்ந்தோர், வணிக முறை யொன்றனையே பேணி, புற்றீசல் போன்ற நூற்றுக்கணக்கான நூல்களை அச்சூர்திமேலேற்றிவிடார். தமிழகத்திலே தமிழ் தாய் தகப்பன் பாற் பிறந்த தமிழ்ச்சிறுவர் தமிழொலிகளினு மெழுத்துக்களினும் பயிற்சியடையு முன்னரே பிறமொழி ஒலிகளையு மெழுத்துக்களையுங்கற்கலாமென்று துணியார். தமிழிலக்கணத்திற்கு முரண்பட வமைந்த சொற்களைப் புத்தகத்தின் முற்பாடங்களிலேயே சேர்க்க வொருப்படார். பண்டைத் தமிழகப் பெரியார் சரிதைகளைப் புறக்கணியார். தமிழ்மக்களை, அன்னார் எக்காலத்தவராயினும், தாழ்த்திக்கூற மனமொவ்வார். சிறு மக்கட்கு நாட்டறி வுணர்ச்சி யளிக்கு முன் பிறமக்க ளறிவுணர்ச்சியினைப் புகட்ட விசையார். நாட்டறிவுணர்ச்சியினையும் அவர்களது புலன் வழிப்படுத்தி மனத்தின் கட் செறியச் செய்து நாட்டி னியல்பினுக் குற்ற நல் வாழ்வின் மேவ உதவுவர்.

 

நூலாக்குவார் தம்மனத் தாராயக் கூடிய மற்றொரு கருத்தாவது, தமது நூலகத்துப் பிறமொழிகளி லியங்குஞ் சொற்களை யெடுத்தாளலே. தமிழ் ‘பிறிது மொழி விழையாமல் தன்னாற்றலே ஆற்றலாக நடந்தேற வல்ல' தெனறும் பிறமொழிச் சொற்களை ஏற்று வித்தல் தாம் நோற்கும் நோன்பினுக்கு முரண்படுவதாகு மென்றும், எனை வட திசைச் சொற்களை வடிவற வகற்றித் தூய தமிழ் மொழியினே நூலாக்கி விடுத்தல் நூலாசிரியரின் மாணொழுக்கமா மென்றும் உறுதி கூறுவர் அன்னை யடியாரினோ ரினத்தார். இத்துணிபுக்கு மாறாக காலவியற்கைக் கேற்ப தமிழ்மொழி வளர்ச்சியுற வேண்டுமாயின் இம்மொழி தனக்குரிய சொற்களோ டமைந்து விடாது வடதிசை மொழிக ளுடனு முறவு கொண்டு அவைகட்குரிய சொற்களைத் தம்மால் வரைவின்றி விரவப் பெறலே விழுமிய முறையா மென்று மொழிவர் அவ்வடியார் குழாத் தின் வேறினத்தார். 'நீலமும், மரகதமும், பவழமும் முதலியன இடை யிடை விராய முத்து வடமே கண்ணினுக் கின்பம் தருவதல்லது, முற்றும் முத்தானாய மாலை யவ்வின்பந் தருவதில்லையே' என்றும் உண்ணவும் நண்ண வும் உடலை மண்ணவும் உதவாதபடி ஏரி குளங்களிற் கட்டி வைத்திருக்கின்ற நிலை நீர் நாட்குநாள் ஒளிமழுங்கி நன்மை கெடுவது; ஓயாம லோடிக்கொண் டிருக்கும் ஆற்று நீரோ தெளிவும் வடிவும் பெருகி நன்மை தருவதாகு' மென்றும் மேற்குறித்த பின்னினத்தார் போற்று முண்மையினை யுவமானங்களான் விளக்கினார் காலஞ்சென்ற ஏற ஆசிரியர் தி. செல்வகேசவராயனார். மொழி வளமுறற்கு இக்கருத்துச் சாலவுஞ் சிறந்ததென வொருபாற் கொள்ளக் கிடக்கின்ற தெனினும் தற்கால மாங்காக்குந் தலையெடுக்குந் தமிழ் நூலாசிரியர் பலர், காலவழக்குக்கறி, வடதிசைச் சொற்களை வரைவின்றி வழங்குவதுடன், அச்சொற்கள் தம்பிறப்பொலி பொன்றா திருக்கக் கருதி, தமிழிலக்கண நெறிக்கு மாறாகச் சொற்களமைத்து, அவைகளைத் தொடர்களின் நெடுவே நிலையிடல் சிறப்புடைத்தாமா? உதவிக்கென வந்தவனுயிரினுக்கே உலை மூட்ட லெத்தகைய வொழுக்கத்தில் படுவது? இவ்வடியார் அன்னையார்க் காற்றுச் தொண்டு எத்தன்மைத் தென்று கூறுவது? ஆங்கிலமொழி, உலக வழக்கு மொழிகளில் மேம்பட்டிருத்தல், இலத்தீன்'' பிரஞ்சு' முதலாய பிறமொழிச் சொற்களை இனி தேற்றுக் கொண்டதா லன்றோவெனின், ஆங்கிலம் அங்ஙனம் பிற சொற்களைத் தன்னினத் தோடிணைக்கு முன் அவைகட்குத் தன்னினச் சின்னங்களைச் சூட்டி யவைகளின் இயற்கையுருவை மாற்றித் தன்னின வுருவை யேற்றி விடுகின்றது. தமிழைச் சாரும் வடதிசைச் சொற்கள் தமிழினத்திற்குரிய வுடை, அணிகலன் முதலாயசின்னங்களை முறைமையினணியப் பெறுவன வாயின் ஏற்க மறுப்பாரில்லை.


உறையுளாக்கல்.

 

பொதுவாய் நோக்குமிடத்துத் தமிழ் மக்களது மனை ஒவ்வொன்றும் அன்னையார்க் குறையுளாயினும், அவருக்குச் சிறப்பொடு பூசனை புரிதற்குச் சிறப்புறையுட்களும் வேண்டப்படுவன வன்றோ? வழிபாட்டினை முதற் கடனாய்க் கொள்ளுங் கல்லூரிகளே இவ்வுறையுட்களில் தலைத் தரத்தனவாம். நிழ்த்தப்படும் நற்பூசனையிற் பிணியுண்டு மக்கள் அன்னை பினருள் பூணுதற் கெவ்வகையினு மியையும் படி இக்கல்லூரிகள் அமைக்கப்படல் வேண்டும். திருக்கோயில் திருமடம், சோற்று விடுதி முதலியன நிறுவும் பெரும் பொருள்படைத்தோர், தமிழ்க் கல்லூரி யாக்கலும் உயிர்க்குறுதி யளிக்குங் கருமங்களின் ஒன்றாம் என்று கொண்டு நாட்டின் பகுதிகள் பலவற்றினும் இப்பணியைச் செய்ய முந்துறலன்றோ அன்னாருக் கியைந்த வழிபாடாகும்.

 

கல்லூரிகள் அமைக்கப்படுவதுடன் அறிவுச் சேர்க்கைக்கும், ஆராய்ச்சி நடத்தற்கும் உதவக்கூடிய கழகங்களும் வேண்டும். இவை இப்பொழுது ஒரோ விடங்களிற் காணப்படுகின்றன. இவ்வாறின்றி பட்டினங்களிலும் ஊர்ப்புறங்களிலும் எண்ணிறந்த கழகங்கள் ஆக்கப்படல் அவசியமாகும். ஆங்காங்குள்ள கழகங்களில் ஆராய்ச்சி வாயிலாகத் தேர்ந்த கருத்துக்களைப் பிறமக்கட்கு அறிவுறுத்த வாரப் பத்திரிகைகளோ திங்கட் பத்திரிகைகளோ திகழ்தல் வேண்டும்.


பின்னுரை.

 

அன்னையாரின் வழிபாட்டினுக் குற்ற துறைகள் பலதிறத்தன வாயினும் இக்கட்டுரையின் கண்ணே ஒரு சிலவே எடுத்தாளப்பட்டுள்ளன. மனமொழி மெய்களானியன்ற வளவு வழிபடுவமென்று உறுதி கொண்டார்க்குப் புதியதுறைகளும் புலப்படும். மேற்கொள்ளுந் துறை எத்தகைத்தாயினுந் தமதுள்ளத் தோங்கும் அன்பொன்று மாத்திரம் இருக்குமாயின் அதுவே பழிநாட்டிற்கேற்ற துணைவலியாகும். அதனையழிக்க வறுமிடையூறுகளும் தோன்றிய காலையே நாசம் அடையும். ஆகவே தமிழ மக்களாய நாம் நமது தமிழன்னையாரின் தகைமையைத் தக்கவாறுணர்ந்து, அவருக்குரிய தொண்டுத் துறைகளிற் பிணிப்புண்டு நமது வாழ்க்கையை நலன்பட நடாத்தி இன்புறுதற்கு இறைவனது இன்னருளை வேண்டி நிற்போமாக! வாழி! தமிழ் மக்கள் வாழி! வாழி தமிழன்னை.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - ஜனவரி ௴

 

 

 

No comments:

Post a Comment