Wednesday, August 26, 2020

அன்னமும் அன்றிலும் 

 

அனிச்ச மலரும் அன்னப் பறவையும் புலவர் பாடும் புகழமைந்தனவாம். மலர்களில் மிக மென்மை வாய்ந்தது "அனிச்சம்” என்றும் பறவைகளில் மிக மென்மை வாய்ந்தது "அன்னம்" என்றும் கவிகள் கருதுகின்றார்கள். நீர்வளம் நிறைந்த நாட்டில், புதுப்புனல் பெருகும் பொய்கைகளில், அன்னங்கள் அமைந்து வாழும் என்று அறிஞர் கருதுகின்றார்கள். இயற்கையோடிசைந்து வாழும் பறவைகளில் அன்னம் தலைசிறந்ததென்று கூறுதல் மிகையாகாது. தண்மை வாய்ந்த தடங்களிலும், நிழல் அமைந்த பொழில்களிலும் விரும்பி உறையும் அன்னம், கமலப்போதையும் கலப்பற்ற பாலையும் உண்டு வாழும் என்றும், மெல்லிய கமல மலர்களிலேயே உறங்குமென்றும் அப்பறவையின் இயலறிந்தோர் பகர்கின்றார்கள். கண்களைக் கவரும் அழகு வாய்ந்த கமலப் பொய்கையில் மென்மை வாய்ந்த அன்னம் துயிலும் அழகினை,


"தோயும் திரைக ளலைப்பத் தோடார் கமலப் பள்ளி
மேய வகையில் துஞ்சும் வெள்ளை யன்னம் காண்மின்"


என்று சிந்தாமணிக் கவிஞர் செம்மையாய் அருளிப்போந்தார். மெல்லிய இதழ் விரிந்து மணம் கமழும் கமல மலர்களில் மெல்லியல் வாய்ந்த அன்னம் துயிலும் அழகு எஞ்ஞான்றும் இயற்கவிஞாது - கருத்தைக் கவர்வதாகும். இவ்வாறு மெல்லிய உணவருந்தி, மெல்லிய மலர்களில் துயின்று இனிய நிழல் அமைந்த பொழில்களில் பயின்று வாழும் பண்பமைந்த அன்னத்தின் மென்மையை அறிந்த அறிஞர் மெல்லியல் வாய்ந்த மாதரை "அன்னம்' என்று கூறும் அழகு அறிந்து மகிழத்தக்கதாகும். அமுதினால் எய்திய பாவை போல் அமைந்த திருமகளைப் புகழப்போந்த வானர வேந்தனாய வாலி ,


"ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின்வந்த
தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை''


என்று அஞ்சன வண்ணனாய இராமனை நோக்கிக் கூறும் அருமை சான்ற மொழிகள் இங்கு அறியத் தக்கனவாம். செந்தாமரையில் வாழும் திருமகளையும் அழகினால் வென்ற சீதா தேவியை "மிதிலை அன்னம்" என்று வாலி கூறும் மொழிகளில் அம்மங்கையின் மென்மையும் இனிமையும் நன்கு இலங்கக் காணலாம்.

 

இன்னும் அழகிற்சிறந்த அன்னம் தீம்பாலுண்டு திளைக்குமென்றும், பாலை நீரோடு கலந்து வைப்பினும் நீரைப் பிரித்துப் பாலையே உண்ணும் பண்பு வாய்ந்ததென்றும், கவிஞர் அப்பறவையின் பெற்றியைப் பாராட்டுகின்றார்கள். இவ்வாறு புத்தமுதம் பருகும் புனித அன்னம், காதல் நிறைந்த கன்னியர்க்கும் காளையர்க்கும் அளவிறந்த களிப்பருளும் களிப்பாகும். அகத்தில் நிறைந்த அன்பினால் நலிந்து மெலிந்து, இயற்பொருள்களைக் கண்டு இளைப்பாறுமாறு: போதுகள் மலரும் பொய்கையின் அருகே செல்லும் காதலர் அங்கு இன்புற்று வாழும் அன்னங்களைக் கண்டு ஆராத அன்பினால் அவற்றை அருகே அழைத்துத் தம் அன்பர் பால் தூதனுப்பும் முறை கவிநயம் சான்ற காவியங்களில் கனிந்து இலங்குவதாகும். விதர்ப்ப நாட்டு வேந்தனது மகளாய் அமைந்த "தமயந்தி" என்னும் தையலின் மையலிலே தாழ்ந்து அவள் உருவத்தையே தன் உள்ளத்தில் எழுதி மகிழ்ந்த நளன் என்னும் மன்னன் நற்றாம்ரைக் குளத்தில் துயின்ற நல்லன்னத்தைப் பிடித்து அப்பறவையை, தன் கருத்திலமைந்த காதல் மங்கையிடம் தூது போக்கினானென்று அவ்வேந்தனது வரலாறு விளங்கக் கூறுகின்றது. அன்னம் போன்ற மென்ன மை வாய்ந்த மங்கையிடம் அன்னமே தூது செல்லுதற்குரியதென்று தேர்ந்து அப்பறவையைத் தூது போக்கிய அரசன்,


"இவ்வளவிற் செல்லுங்கொல் இவ்வளவிற் காணுங்கொல்
இவ்வளவிற்காதல் இயம்புங்கொல்''


என்று அவ்வன்னத்தின் வரவை ஆர்வத்தோடு எதிர்நோக்கினானென்று புகழேந்திப் புலவர் கூறும் பொன்மொழிகள் அன்பு செறிந்தனவாம். இங்ஙனம் மன்னனது மனவாட்டம் திருத்துமாறு மங்கையிடம் தூது சென்ற அன்னம் கனிமலர்ச் சோலையில் களித்து விளையாடிய கன்னியின் முன்னே போந்து காதலை வளர்த்து,


"செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்
தம்மனத்தை வாங்குந் தடந்தோளான் - மெய்ம்மை
நளன் என்பான் மேனிலத்தும் நானிலத்து மிக்கான்
உளன் என்பான் வேந்தன் உனக்கு''


என்று நளனது பெருமையை நன்மொழிகளால் இசைத்து இருவர் மனத்தையும் அன்பினால் ஒருமைப்படுத்தியதென்று நளவேந்தன் காவியம் நன்கெடுத்துரைக்கின்றது. இவ்வாறு அன்பினால் நலியும் காதலர்க்கு அருந்துணையாய் அமையும் அன்னத்தை அன்பே வடிவாய இறைவனிடம் தூது அனுப்பும் ஆன்றோாது மொழிகள் அறிந்து மகிழத்தக்கனவாம். இறைவன்பால் இடையறாப் பேரன்பு வாய்ந்து அவன் அருளையே வியந்து பாடிய திருஞான சம்பந் விளங்கிய அன்னங்களைக் கூவியழைத்து அப்பறவைகளைத் தலைவனாய ஈசனிடம் தூது அனுப்பும் முறையில் தூய அன்பின் தன்மை இனிது இலங்குகின்றது.



''சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலி கதிர்வீச
வீற்றிருந்த அன்னங்கள் விண்ணோடு மண் மறைகள்
தேற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத
கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே''


என்று திருஞான சம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்த சொற்கள் தேனினுமினியவாய்த் தித்திக்கக் காணலாம். நீர்வளமும் நிலவளமும் நிறைந்த சண்பைமா நகரில் செஞ்சாலிக் கதிர்கள் செழித்து வளர்ந்து அசைந்தாடுகின்றன. வற்றாது நீர் நிறைந்த வயல்களில் கண்ணினைக் கவரும் கமல மலர்கள் களித்து இலங்குகின்றன. இக்கமல மலர்களில் அன்னங்கள் அழகுற அமர்ந்திருக்கின்றன. இவ்வாறு செஞ்சாலிக் கதிர்கள் எம்மருங்கும் கவரி வீச இனிய கமலமலரில் இன்புற்றிருந்த அன்னங்களை இன்னலம் வாய்ந்த ஈசனிடம் தூதுபோக்கும் முறை மிகச் செம்மை வாய்ந்ததாகும். ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த ஈசனது இணையடி சேர்ந்து மாறிலா இன்பத்தில் மகிழும் பேறு பெறக் கருதிய சம்பந்தப் பெருமான் அத் திருவடியின் பெருமையை அன்னத்திற்கு அறிவிக்கும் அழகு சாலவும் இனியதாகும். விதிக்கும் விதியாய், விழுமிய பொருளாய் விளங்கும் விமலனது திருவடிப் பெருமையை வியந்து பாடப்போந்த மற்றொரு பெரியார்,


"அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத
      அவனைக் காப்பது காரணமாக
வந்த காலன் தன் ஆருயிர் அதனை
      வவ்வினாய்க் குன்றன் வண்மை கண்டடியேன்
எந்தை நீ எனை நமன்றமர் நலியின் இவன்
      மற்றென் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன்
      செழும்பொழில் திருப்புன் கூருளானே''


என்று அன்பர்க்கு அருள் செய்யும் இறைவனது பெருங்கருணைத் திறத்தை உருக்க மொழிகளால் எடுத்துரைத்தார். “அடைக்கலம் புகுந்த ஓர் அந்தணனைக் காக்குமாறு காலனைக் காலால் உதைத்த என் கண்மணியே! நினைந்துருகும் அடியாரது நெஞ்சில் ஊற்றெடுத்துப் பெருகும் பெருங்கருணைத் தடங்கடலே! காலனையும் காய்ந்த உன் கருணையை அறிந்து உன் திருவடி அடைர்தேன். என்னை நலியும் இடர்களைந்து இன்பம் அளிப்பாய்'' என்று அன்பர் "கள் ஊன்கரைந்து, உயிர் கரைந்து போற்றும் திருவடியின் பெருமையைத் திருஞான சம்பந்தர் அன்னங்களுக்கு அறிவிக்கின்றார். அத்தகைய அடியின் கீழமைந்து பேரின்பப் பெருநலம் துய்க்கும் பெருமையை வேண்டி அப்பதம்
அருளுமாறு அன்னத்தைத் தூது அனுப்புகின்றார். இவ்வாறு நிரம்பிய காதலால் மென்மை வாய்ந்த அன்னங்களைக் கூவி அழைத்து அவற்றின் வாயிலாகத் தம் அன்பின் பெருக்கை அறிவிக்கும் ஆன்றோரது உள்ளம் அன்புவடிவாய் இலங்கக் காணலாம். இன்னும் மரங்கள் செறிந்து மணங்கமழும் மணிப்பூஞ்சோலைகளில் திண்ணிய அன்பின் திறத்தினை அன்பர்க்கு நினைவூட்டும் பறவை அன்றிலே யாகும். இரை யெடுக்கும் போதன்றி இறைப்பொழுதும் பிரியாத அன்றில் காதலரது கருத்தைக் கவர்ந்து அவர் அகத்தமைந்த அன்பைக் கிளருதல் இயல்பேயன்றோ? இவ்வாறு இடையறாத இன்பம் நுகர்ந்து இனிது வாழும் அன்றிலை நோக்கித் திருநெறித் தலைவராய திருஞான சம்பந்தர் அருளும் மொழிகள் அன்பெனும் கனியில் அமைந்த அருஞ்சுவையாகும்.


"முன்றில் வாழ் மடற் பெண்ணைக் குரம்பை வாழ் முயங்கு சிறை
அன்றில் காள், பிரிவுறு நோய் அறியாதீர் மிகவல்லீர்
தென்றலார் புகுந்துலவு திருத்தோணி புரத்துறையும்
கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலைக் கூறீரே."


என்று பிள்ளைப்பெருமான் கூறும் மொழிகள் கூர்ந்து அறியத் தக்கனவாம். அன்பின் சுவை அறிந்த அன்றில் காள்! தென்றல் புகுந் துலாவும் திருத்தோணிபுரத்தில் என் கருத்துக்கினிய காதலன் உறைகின்றான். அப் பெருமானைக் காணப்பெறாது என் மேனி மெலிந்து எங்கும் பசலை படர்ந்து இடர்ப்படுகின்றேன். இவ்வாறு நான் ஏங்கி நிற்கும் நிலையை என் காதலர்க்கு எடுத்துரைப்பார் எவரையுங் காணேன். ஆதலால் காதல் நயம் அறிந்து களிக்கும் அன்றில்காள்! நீரே என் தலைவனிடம் சென்று என்னிலையை எடுத்துரைக்க வேண்டும்" என்று அன்றிலை நோக்கி ஆளுடைய பிள்ளையார் கூறும் அன்பார்ந்த மொழிகள் அகத்துறை அழகுவாய்ந்து அந்தமிலின்பம் அளிக்கும் இறைவனது போருளின் பெருமையை இனிது விளக்கக் காணலாம்.

 

ஆனந்த போதினி – 1933 ௵ - மார்ச்சு ௴

 


 

 

No comments:

Post a Comment