Wednesday, August 26, 2020

 

அன்னதானம்

 

நாம் முதல் முதலாகக் கற்கும் நீதி வாக்கியம் 'அறஞ்செய விரும்பு'' என்பது. இந்நீதியின் கருத்து நம்மனத்தின் கண் நன்கு பதியும் பொருட்டு இதே கருத்துள்ள ''ஐயமிட்டுண்' ', '' தானமது விரும்பு'' என்னும் வாக்கியங்களையும் புகட்டியுள்ளாள் ஒளவை. வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள், இதிஹாலங்கள் இவைகளின் தத்துவத்தை, ஒளவையின் இரத்தினச் சுருக்கத்தின் வியாக்கியானமாகக் கொள்ளலாம். இளமை, செல்வம், அழகு, சாமர்த்தியம் இவைகள் அழியக்கூடியவையென்றும், ஒருவன் செய்யும் தருமமோ அவனுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இன்பமளித்தலால், அதனை மறத்தலினும் கேடுவேறொன்றில்லை யென்றும், சகல நூல்களும், சுருக்கமாகவும், விளக்கமாகவும் தெரிவிக்கின்றன.

 

தருமம் முப்பத்திரண்டு பிரிவுகளுடையது. அவற்றில் அன்னதானம், அதாவது பசித்தோர்க்கன்னமளித்து, அவர் பசியைப் போக்குதல் ஒரு முக்கிய தருமம். 'இவ்வளவேனு மிட்டுண்மின்'' என்ற ஒளவையின் அமுத மொழியும், அன்னதானம் "சமம் நாஸ்தி'' என்ற வடமொழியும் இதன் சிறப்பைத் தெரிவிக்கின்றன. சூதசங்கிதையிலும் அன்னம் ஜலம் இவைகளுக்குச் சமமான தானம் கிடையாதென்று சொல்லப்பட்டிருக்கிறது. முன் காலத்தில் முற்றத்துறந்த முனிவர்களும், "சிவனே தெய்வம்; சிவ பக்தியே தருமுக்தி; சிவபக்தரை உபசரித்தலே நோன்பு, விரதம் முதலிய அனுஷ்டானம்; சிவப்பிரசாதமாகிய விபூதியே விலையுயர்ந்த பூஷணம்; சைவமதமே எவர்க்கும் சம்மதம், சம்மதமுமாகிய நன்மதம்'' எனக் கொண்டு ஒழுகின அறுபத்திநான்கு நாயன்மார்களும் பசித்தோர் முகம் பார்த்து, அன்னங்கொடுத்தாதரித்தனர். தன்னுயிர் போல் மன்னுயிரைக் காத்து வந்த முற்காலத்து மன்னர்கள் ஏழைகள் அன்புக்குப் பாத்திரமானது, அவர்கள் செய்து வந்த அன்னதானத்தினாலேயே. இந்த நீதி மன்னர் அநேக சாத்திரங்கள் கட்டுவித்து அன்னதானம் செவ்விதின் நடை பெறுதற்குரிய ஏற்பாடுகள் செய்து வந்தனர். ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன், கிறிஸ்தவப்பாதிரிமார் ஆதீனத்தில் நடைபெற்ற மடங்கள் எல்லாம் ஏழைகளுக்கு அன்னசாலைகளாகவும், கல்விச்சாலைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் இருந்து, பசிப்பிணிக்கு ஸஞ்சீவியாகவும், அஞ்ஞான இருளை யகற்றும் விளக்காகவும், வாழ்வைப் பிரதிபிம்பிக்கும் கண்ணாடியாகவும் இருந்து வந்தனவென்ற விஷயம் நாம் அறியாததன்று.

 

ஏழைகளுக்கு அன்னமிடுவதால் நம் பொருள் செலவழிந்து நாம் வருந்த நேருமென்று எண்ணுவது சுத்தப்பிசகு. பிச்சையிட்டுக் கெட்டவன் இல்லை. பொருளையுடையவன் அதைப் பத்திரமாய் வைக்குமிடம் ஏழைகள் பசியைப் போக்குவதே. இதைத்தான் குறளாசிரியர்,


 "அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
 பெற்றான் பொருள் வைப்புழி''

 

என்றார். அவ்விதமில்லாமல் ஏழைகள் பசியோடு துடிப்பதைக்கண்டு சிறிது மிரங்காது தான் மாத்திரம் உண்பது யாசிப்பதிலும் கேவலம்.

 

பசியினால் ஏற்படும் கொடுமை சகித்தற்கரிது. பசியினால் பலக்குறைவு, தேக அசதி, தலைச்சுற்று, மனச்சோர்வு, ஞாபக்குறைவு, தன் நினைவு மறதி முதலியவை ஏற்படுகின்றன. அப்போது எதுவாயினும் பட்சிக்கும்படி நேரிடுகிறது. நெப்போலியன் மாஸ்கோ தேசத்து யுத்தத்துக்குச் சென்று திரும்பிவரும் போது, உணவின்றிக் கஷ்டப்பட்ட சமயத்து, அவனும், அவனைச் சேர்ந்த சேனைகளும், வழியில் செத்து விழுந்த குதிரைகளையும், மனிதர்களையும் பட்சித்தார்களாம். பசியின் கொடுமையினால் பெற்றோர்கள் தமது சிசுக்களையும், புருஷர் ஸ்தீரிகளையும் கொன்று தின்றதாக நாம் கேட்டிருக்கிறோம். அதுபற்றியே ஒளவை ஒருவனுக்குப் பசி ஏற்பட்டு விட்டால்,

 

மானங் குலங்கலவி வண்மை யறிவுடைமை

தானந் தவமுயர்ச்சி தாளாண்மை - தேனின்
      கசிவந்த சொல்வியர்மேற் காமுறுதல் பத்தும்
      பசிவந்தி டப்பறந்து போம் "


என்றாள். பட்டினத்தாரும் மனிதன் ஆடியோடித் திரிவதும், நெற்றிவேர்வை நிலத்தினில் வீழ உழைப்பதும் ஒருசாண் வயிற்றை வளர்ப்பதற்கே என்றார்.

 

பசித்திருப்போரைக் கண்ட மாத்திரத்தில் மனம் உருகப்பெறாதார் மக்களுட்பதரே யாவர். இந்த ஜன்மாவில் உண்ண உணவும், உடுக்க உடையும், படுக்க இடமும், மனச்சமாதானமுமின்றி, தெருத்தெருவாய் "அம்மா பிச்சை, அய்யா பிச்சை " என்று கதறுவோர்கள் யாரென்றால், முன் ஜன்மாவில் மகத்தான ஐசுவரியத்துக்கு அதிபராயிருந்து, ஒருவர்க்கும் ஈயாமல் தாம் மாத்திரம், சந்திரவதனமும், இனிய குரலும், அன்னநடையும், விலையுயர்ந்த உடையும், மின்னல் சடையும் வாய்ந்த யௌவனமாதர், வளையல்களணியப் பெற்ற தமது மிருதுவான கரத்தேந்திய பொற்கிண்ணத்தில் பாலோடுகலந்த அன்னத்தைஊட்ட, பக்கத்திலுள்ளவர்களைக் கவனியாது அதை உண்ட உலுத்தர்களே. நாம் பிறர்க்குக் கொடாமல் நமது காரியத்தை மாத்திரம் பார்த்துக்கொண்டால், அடுத்த ஜன்மாவில் நமக்கு வறுமைச் சீட்டே யளிக்கப்படும். கர்ணன் தனது அந்தியகாலத்தில் தான் அடைந்த புண்ணியத்தையும் ஈந்தனன். அந்தணனுருக் கொண்டுவந்து யாசித்த கண்ணபிரான், இவன் செய்கையைக் கண்டதிசயிக்க நேர்ந்தது. அதனாலப் பெருமான் கர்ணனை நோக்கி, 'உனக்கு யா துவரம் வேண்டு'மென வினவ, கர்ணன், " கிருஷ்ணா, நான் எவ்வளவு ஜன்மங்களெடுத்த போதிலும், என்னை யடுத்து இல்லை யென்றுரைப்போர்க்கு, இல்லையென்றுரையாத தரும சிந்தனையை நீ கொடுத்தருள்'' என விடை பகர்ந்தனன்; என்னே கர்ணனது தரும சிந்தை.

 

ஏழைகளுக்கு அன்னம் அளித்தல் முழுமனத்துடனிருக்க வேண்டும். பிறர் புகழ்தற்பொருட்டுச் செய்யும் தருமமும், வயிற்றெரிச்சலுடன் கொடுப்பதும் மனிதத்தன்மையன்று. கொடுப்பது உபசாரத்துடனும், சந்தோஷத்துடனு மிருக்க வேண்டும்.

 

''உண்ணீ ருண் ணீரென் றுபசரியார் தம்மனையி
      லுண்ணாமை கோடி பெறும் "  
                                    (ஔவை)


      'இருக்கு மிடந்தேடி என் பசிக்கே அன்னம்

உருக்கமுடன் கொண்டு வந்தா லுண்பேன்''                     (பட்டினத்தார்)

 

''ஒப்புடன் முகம லர்ந்தே புபசரித் துண்மை பேசி
உப்பில்லாக் கூழிட் டாலு முண்பதே யமுத மாகும்
முப்பழ மொபொ லன்னம் முகங்கடுத் திடுவா ராகிற்
கப்பிய பசியும் போக்கிக் கடும்பசி யாதல் நன்றே.
            (விவேகசிந்தாமணி)

 

என்னும் நீதிகளை மறக்கக்கூடாது.

 

இனிமேலாவது நாம் நம்நாட்டில் பசித்தோர்க்கு அன்னங் கொடுத்து வரும் முன்னைய வழக்கத்தை மறவாமல் கைப்பற்றிவர முயல்வோமாக.

 

கொடுப்பாரைத் தடுப்பார் தொகையும் குறைதல் வேண்டும். யாசிப்பவர்களின் பூர்வகதையை விசாரித்துப்பின் 'இரத்தலின் இன்னாத தொன் றில்லை' என்னும் விஷயத்தைப்பற்றிப் பிரசங்கித்தல் அதிகப்பிரசங்கித் தனமும், அசட்டுத்தனமுமேயாகும். பிச்சைக்காரர்களை வேலையாளை விட்டாவது, நாய்களை விட்டாவது துரத்துதல் ஓர் பெரிய பாதகச்செயலே யாகும். ஆகையால் ஒவ்வொருவரும் அன்னதான மகிமையை யறிந்து பசித்தோர் முகம் பார்க்கவேண்டும். அதுவே சகோதரபாவ வழிகாட்டி என்பதை யறியவேண்டும்.

 

ஏழைகளுக்குத் துன்பம் உண்டாக்காமல், அவர்கள் மாட்டு அன்புடனும் ஆதரவுடனும் ஒழுகல் வேண்டும். எளியவர்க் கன்பரான கடவுளுக்கு, ஏழைகளிடத்தில் நாம் அன்பாயிருத்தலே பிரீதி என்பதை நன்குணர வேண்டும். இந்நீதிகளையறிந்து எழைகளின் அன்புக்குப் பாத்திரராகி வாழ்தலே சிலாக்கியம். அதுவே பெறுதற் கரியதோர் பாக்கியம். இந்நீதிகளையே போதிக்கின்றது "ஆனந்தபோதினி' போன்ற பத்திரிகைகள். இவைகளை அறியாமல் வாழ்தல் யோக்கியம் ஆகாது.


 என். சுப்பிரமணிய அய்யர்
B. A.

 கிழக்குரதவீதி, நாகர்கோவில்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஜுன் ௴

 

 

 

No comments:

Post a Comment