Wednesday, August 26, 2020

 

ஓம்

அன்பே மதம்! அன்பே தெய்வம்!

 

நண்பா! உன் ஜன்மம் தெய்வத்தன்மை பொருந்தியது. ஒவ்வொரு நிமிஷமும் புண்ணியத்தையும் அன்பு ததும்பிய செய்கைகளையும் செய்து நீ மேலே ஒருபடி உயர்ந்து சென்று பகவானுடைய பாதார விந்தத்தைப் பற்றிப் பரமபதமடைவதற்காக வென்று மிக அருமையாக எடுத்த ஜன்மமாகும் உன் ஜன்மம். தெய்வ பூஜை என்பதும் தெய்வத்தின் அருளைப் பெறுவதென்பதும் கேவலம் வெளி வேஷத்தாலல்ல. கோயிலுக்குச் செல்வதாலோ பாலபிஷேகத்தாலோ பாடுவதாலோ ஆகிவிடுவதல்ல.

 

இதைக்கேள்! சகோதரா! ஆயிரம் நாள் பொய் சொல்லி வந்த ஒருவன் ஒருநாள் சாத்தியம் சொன்னால் ஊரார் நம்புகிறார்களா? நீ ஆயிரம் நாள் ராட்சஸனைப் போலப் பிசாசைப் போல சாட்சாத் சுப்பிரமணியக் கடவுளுக்கு வாகனமாகவும் கொடியாகவும் இருக்கிற ஆட்டையும் கோழியையும் அடித்துத் தின்று வயிற்றை நிரப்பியும், பொய் பேசி அக்கிரமமும் அநியாயமும் செய்து கொண்டும் வந்து ஒரு நாள் கிருத்திகையன்றோ அமாவாசையன்றோ ஏகாதசியன்றோ சஷ்டியன்றோ பரம யோக்கியன் போல கடவுளிடத்திலே போனால் அக்கடவுளென்ன ஏமாந்து விடுகிறாரோ? "அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்" என்பதை அறி!

 

நண்பா! நீ போகிற பாதை கடைசியில் நரகத்தில் பெருந் துயரத்தில் கடவுள்சாபத்தில் உன்னையும் உன் குடும்பத்தையும் சந்ததிகளையும் கொண்டு தள்ளிவிடும். தூரவிலகு, விலகு! இதோ! அன்பு மயமான ராஜபாட்டை இருக்கிறது.

 

அந்த ராஜபாட்டைக்குள் போவதற்கு எது டிக்கட்டு? இதோ பார்.  

 

1. கடவுள் ஏராளமாய்ச் சிருஷ்டித்திருக்கிற, எதற்கும் ஒருவித தீங்கும் உண்டாகாத மரக்கறிகளையும், கனிகளையும், கிழங்குகளையும், பாலையும், நெய்யையும் நீ உட்கொள்ள வேண்டும்.

 

2. நீ நல்ல விஷயங்களையும், கடவுளுடைய பெருமையையும், புகழையும், பார்த்தும், கேட்டும், சொல்லியும் அனுபவிக்க வேண்டும்.

 

3. சகல ஜீவராசிகளுக்கும் உன்னால் ஒரு வித தீங்கும் நேராமல் அவற்றை காப்பாற்ற வேண்டும்.

 

4. சுத்தசுதேசிய கதர் துணியையும், நீரையும், காற்றையும், வாசனைப் பொருள்களையும், புஷ்பங்களையும் உபயோகித்துவர வேண்டும்.

 

 

 

ஆம், இந்த நான்கையுந்தான் நீ கைப்பற்ற வேண்டும்

பின், நீ எவற்றை ஒழிக்க வேண்டும்?

 

1. ஆடு, கோழி, மீன், போன்றவைகளுடைய சதையையும் ரத்தத்தையும் பிசாசைப் போல் தின்று வயிற்றை வளர்த்தல்.

 

2. கள், கஞ்சா, அபினி போன்றவற்றை உண்டு மதிமயங்கிப் பலங் குன்றி நல்ல நடத்தை தவறிச் சீர் கெடுதல்.

 

3. பீடி சிகரெட் பிடித்துக் கண்ட இடத்தில் எச்சில் உமிழ்ந்து கொண்டு வாயில் துர்நாற்றம் எழும்படிக்கும் உனது சினேகிதர்களுடைய சவாசம் கெடும் படிக்கும் செய்தல்.


உனது மூன்று ஆபரணங்கள்!

 

நண்பா! பகவானிடத்தில் பக்தி, ஜனங்களிடம் அன்பு, ஜந்துக்களிடம் இரக்கம் என்ற இம்மூன்று ஆபரணங்களையும் அணிந்து நீ உலகில் ஒரு தேவனைப் போல வாழ்ந்து, பின்னர் கடவுளுடைய அருளுக்குப் பாத்திரமாகி எடுத்த ஜன்மத்தைச் சாபல்யமாக்கிக் கொள்வாயாக.
 

ஓம், சாந்தி, சாந்தி, சாந்தி!


[இந்தப் பிரசுரம் ஸ்ரீ தென்னிந்தியா ஜீவரட்சா பிரசாரக சபையார் வெளியிட்டதாகும்.]

 

ஆனந்த போதினி – 1927 ௵ - ஏப்ரல் ௴

 

 

No comments:

Post a Comment