Thursday, August 27, 2020

 

ஊழ் வலிதா முயற்சி வலிதா

 

 ஊழ்: - அதாவது நாம் முற்பிறப்பிற் செய்த நல்வினை, தீவினையாகிய
இருவினைகளின் பலனையுங் குறிக்கும் ஓர் பொதுச்சொல்லாம். இதனைப் பெரும்பான்மையோர் வழக்கில் அதிர்ஷ்டம், அல்லது விதி என்றே வழங்குகின்றனர். ஆதலின் யாமும் இச்சொற்களையே உபயோகித்தல் நலம். அதிர்ஷ்ட மானது, அதாவது ஒருவர் ஒரு பிறப்பின்கண் எந்த நற்செயல் தீச்செயல் புரிகின்றாரோ, அவ்வினைகளின் பலனானது மறுபிறப்பிலும் அவற்றை நிகழ்த்தியோரையே அடையும். அதினாற்றான் ஒருவர்க்கு இந்நில வுலகின்கண் எத்தகைய நல்வினை தீவினைகளின் பயன் நேரினும்
'விதியின் பயன்'' விதியின் பயன்'எனவே பலர் செப்புகின்றனர். இங்ஙனம் எவ்வினை நிகழினும் விதியின் பயன் விதியின் பயன் எனவே உரைக்கின்றனராதலின், வினையின் பயனாய விதியினை வெல்லும் வழி ஏதேனும்உளதா என யோசிப்பாம். அவ்விதியினை வெல்ல முடியுமா? முடியாதா? எனும் எண்ணங்கள் உலகினர் பலரிடத்தும் பற்பலவாறு பதிந்துள்ளன. சிலர் வெல்லமுடியுமென்றும், சிலர் முடியாதென்றும், சிலர் சந்தேகமாகவும் நினைத்துள்ளார்கள். மக்கள் எண்ணங்கள் மாறுபட்டவைகளாயிருக்க, புலவர் எண்ணங்களோ பலவாறா யிருக்கின்றன. ஏறக்குறைய நம்பெரியார் பெரும்பாலரும் சிற்சில விடங்களில் விதி வெலற் கரிதென்றே கூறி யுள்ளார். அவருள்,


 முதிர்தரு தவமுடை முனிவ ராயினும்
 பொதுவரு திருவொடு பொலிவ ராயினும்
 மதியின ராயினும் வலிய ராயினும்
 விதியினை யாவரே வெல்லும் நீர்மையார்.


 என, ஓர் பெரியார் கூறியுள்ளார்.

 

இங்ஙனமே பற்பலவிடத்தும் பற்பலர் பகர்ந்துள்ளார்கள். தெய்வப் புலமைவாய்ந்து, மானிட உடலந் தாங்கி வந்த பொய்யாமொழியாளரும் தமது திருக்குறளில்,


 ''ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
 சூழினும் தான் முந்துறும்''


 என விதியின் பயனையே வற்புறுத்திக் கூறியுள்ளார். நாலடியாரில் வரும்.


 ''பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
 வல்லதாந் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
 பழவினையு மன்ன தகைத்தேதற் செய்த
 கிழவனை நாடிக் கொளற்கு "

என்னும் செய்யுளின் கருத்தும் ஒரு பெரிய பசுக்கூட்டத்தின் நடுவில் ஒரு கன்றை விடுப்பின், எங்ஙனம் அது தன் தாயையே நாடிச் சேர்ந்து பால் பருகுகின்றதோ அங்ஙனமே பல மக்கள் குழுமிய இவ்வுலகின்கண் அவரவர் செய்த வினையானது அவரவரையே நாடி யடைகின்றது என்பதை விளக்குகின்றது. அதனால் அனைவரும் அதிர்ஷ்டத்தின் வலிமையையே வற்புறுத்திக் கூறுகின்றனர். ஆயினும் சிற்சில விடங்களில், விதியின் வலியை நம் முயற்சியின் வலியால் சிறிதளவு வெல்லலாம் என்பதற்கு இடம் தரும்படியும் சிலர் கூறியிருக்கின்றனர்.'மதியால் விதியை வெல்லலாம்'' என்னும் மூதுரை ஒன்றுண்டு. அதற்கு அத்தாக்ஷியாகப் பதிவிரதா சிரோமணியாகிய சாவித்திரியின் சரிதையுண்டு, அவ்வுத்தமி தனது மரித்த மணாளனை மீண்டும் தன்மதியால் விதியை வென்று உயிர்ப்பித்தனள். இதனால் நாமும் முயற்சியின் வலியால் சிறிதளவேனும் விதியை வெல்லலாம் என்பது பெற்றாம்.'முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்னும் மூதுரையும் இதனை வற்புறுத்திக் கூறுகின்றது.


 "முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
 யின்மை புகுத்தி விடும்''


எனத் திருவள்ளுவர் திருவாய்மலர்ந்தருளியதும் நம் விதியின் பயன் எதுவேயாயினும் அதை நாம் நம் முயற்சியின் வலியால் வென்று நலமடையலாம் என்றும், முயற்சி செய்யாவிடின் துன்பமே யடைய நேருமென்றும் தெரிவிக்கின்றது. 'முயற்சி, மெய்வருந்தக் கூலிதரும்'' என்னும் அவர் வாக்கும் முயற்சிக்குத் தக்க பலனைப் பெறுவோம் என்பதை விளக்குகின்றது. ஆதலின், சகோதர சகோதரிகளே! நமக்கு எப்பேர்ப்பட்ட விதிவலி பெரிதெனினும் அஃதைப் பொருட்படுத்தாது'மதிவலிது'என்கிறபடி மதியால் மாற்ற முயலுவோமாக.

 

P S. அரங்கராயகி,

பூளைமேடு.


குறிப்பு:

 

''தட் தெழ் மடந்தை நல்லாய்

தோன்றிய  சீய ரெல்லாம்

இப்புவி யிடத்துச் சால

எண்ணும் ரெண்ணி யாங்கே

எப்படி முற்றும் முற்றா

தெம்பிரான் ஒருற் கன்றி

அப்படி முற்றிற் கீழ்மே

லாம்பகுப் பிரண்டுண் டாமோ?''

 

என்கிறபடி 'விதி அல்லது ஊழ்' என்றொன்றிருத்தலினாற்றான் பிரபஞ்ச சிருஷ்டியும் அதன் ஒழுங்காகிய நடைக்குரிய உயர்வு தாழ்வும் ஏற்படுகின்றன. இன்றேல் உலகம் உயிரற்ற பொருட் காட்சிச் சாலையை ஒத்தே விளங்கும். இந்தவிதி மிக்க அதிசயமானது. இதன் தன்மை எவராலும் அறிதற் கசாத்தியமாம்.

 
 "அதிசயம் ஒருவரால் அறியப் போகுமோ
 துதியறு பிறவியின் இன்ப துன்பந்தான்
 விதிவயம் என்பதை மேற்கொளாவியன்
 மதிவலி யால்விதி வெல்ல வல்லமோ


என்றார் கம்பநாடரும். ஆயினும், நாம் சோம்பலின்றிச் செய்யவேண்டிய முயற்சியைக் கைவிடலாகாது. அம்முயற்சி யதன் அளவிற்குரிய பலளை யளிக்காமற் போகாது.

 

ப - ர்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - மார்ச்சு ௴

 

 

No comments:

Post a Comment