Thursday, August 27, 2020

 

ஊழும் இலட்சியமும்

வித்வான்-எம். சாம்பசிவம்

 

ஊழ்! ஊழைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் பார்க்கப் போனால், ஊழ் தான்! ஊழ் தானா, மனித இலட்சிய்ம்? பின் அதைப்பற்றி மண்டையை உடைத்துக்கொண்டு ஆராய்ந்து மடிவானேன்?


"ஊழையும் உட்பக்கம் காண்பர், உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.''


நமக்கு இலட்சியம், ஊழல்ல; இடைவிடா முயற்சியே; தன்மதிப்பும் பிறர் நலனுமே! இதற்கு இளங்கோவடிகளும், விலக்கு அல்லர்.

 

ஒரு சமயத்தில் நான், ஒரு சபையில் இலட்சியத்தைப் பற்றிக் குறிப்பிட நேர்ந்தது? அந்த அவைக்கு இலட்சியம், அலட்சியமா யிருந்தது. ' உன் இலட்சியம் என்ன?” என்று கேட்பது போல் அந்த அவை நெளிந்து கொடுத்தது; என் இலட்சியத்தைக் கூறினேன்; ஏமாற்றம் அடைந்தது சபை.

 

இலட்சிய மென்றால், இமயமலையைப் பொன்னாக்கிக் கொண்டு வந்து, அதன் தலைமேல் - இல்லை-அதன் முன் வைப்பது தான் என்று எதிர்பார்த்தது போலும், அந்தச் சபை!

 

உதாரணமாக-பெருஞ் சோலை யொன்றி னிடையே அழகெர்ளிரும் மாளிகை யொன்றைக் கட்டி முடிக்க ஒருவன் க்ருதி முயல்கிறான்; அது முடியுமளவும் அது தான், அவன் இலட்சியம். ஆனால், அடிப் படையைப் பலப்படுத்தி, முழுச் சுவர் எழுந்துவிட்ட பிற்பாடு அச் சோலையிலுள்ள குரங்குகள் அன்றாடம் எழும் சுவரைச் சரித்துத் தள்ளுவதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவன் இலட்சியம் ஏது? மாளிகை கட்டுவதா? சுவரை எழுப்புவதா? மாளிகைக்குச் சுவரானது இன்றியமையாத தாகுவதால், அவன் இலட்சியம், தற்காலிகமாகச் சுவரை எழுப்புவதாகின்றது; அதனால், அவன் இலட்சியம் தவறியது என்பது எப்படி?


"உள்ளுவ தெல்லாம் உயர்வு உள்ளல்; மற்றது
தள்ளினும், தள்ளாமை நீர்த்து.


மாளிகையைக் கட்டி முடிப்பதற்குள் அவன், இறந்து விட்டாலும், அவன் இலட்சியம் பொய்த்த தாகாது.


"கான முயல் எய்த அம்பினில், யானை
பிழைத்த கோல் ஏந்தல் இனிது."

தன்னை ஒரு 'அறிவாளி' என்று ஒருவன் கூறிக் கொள்வதால் அவனுக்கு எவ்வளவு முட்டாள் பட்டம் கிடைக்குமோ, அதை விடப் பன் மடங்கு புத்திசாலிப் பட்டம் கிடைக்கும், அவன், தன்னை ஒரு ' இலட்சியவாதி' என்று கூறிக் கொள்வானானால். அதோடு ஓர் இலட்சியமும் இருப்பது சிறந்தது.

 

சிலப்பதிகாரத்திலே இளங்கேர் வடிகளின் இலட்சியம், இன்னது என்று கூறிக் கொள்வதைக் காட்டிலும், இளங்கோவடிகளின் காலமும், இட்னும், ஏற்ற கருவியும் தெரிந்து' அவரது இலட்சியம் எவ்வளவு தூரம் அப்பொழுதே நிறைவேறி இருக்கிறது! என்று பெருமை அடைவதே நம் கடமை- தமிழர் கடமை.

 

பொற்கொல்லன், பாண்டியன், மாதவி முதலியவர்கட்குத் தனித்தனி ஊழ் கற்பிக்கப்பட்டிருந்தால், சிலப்பதிகாரம் எத்தனையோ நூற்றாண்டுகட்கு முன்னமேயே அடுப் பெரிக்கப் பயன்பட்டுப் போயிருக்கும்; இளங்கோவடிகளையும் 'விளையாட்டுப்பிள்ளை' யென்று உலகம் கூறிவிட்டிருந்திருக்கும். அப்படியொன்றும் நடந்துவிடவில்லை என்பதை அறிந்திருந்தாகிலும் எச்சரிக்கையாகவே, 'அன்பர், தம் மூழை வெளியிடாம லிருந்திருக்கலாம். என் செய்வது? -- - - - (கோடிட்ட இடத்திலே, எல்லாம் ஊழ் தான்!' என்று எழுதப் பொருந்தும். அப்படி எழுதிவிடுவதும் சுலபம்; ஆனால், அப்படி எழுதாமல் விடுவதில் தான் பொருள் இருக்கிறது. இது கருதி தான் அடிகள், 'ஊழ்' என்பதை எங்கும் சேர்க்க மறுத்தனரோ என முடிவு கூற நான், தயாரிலில்லை.)

 

'சிலம்பு+அதிகாரம்' என்பதைப் பொரு ளுணர்ச்சியோடு உச்சரித்துப் பார்த்திருந்தால், இந்த ஐயங்களெல்லாம் நிகழ்க்திருக்கக் காரண மில்லையே! பதினைந்து, இருபது பக்கங்கள் எழுதி மறுக்க வேண்டிய செய்திகளையெல்லாம் இச் சொற் றொட்ரொன்பே
முன்னின்று தகர்த் தெறிகின்றதே! அதனாலேயே விரித்துப் பரப்பாமல், கசக்கி முகராமல் விட நேர்கிறது. அதனால், மீண்டும் கூறுகிறேன். 'உச்சரிக்க! ‘சிலப்பதிகாரம்.' *சிலப்பதிகாரம்.'

 

“நெஞ்சை அள்ளும் (!) சிலப்பதிகாரம் (!!) என்று, ஓர் மணி ஆரம் (!!!) படைத்த தமிழ் நாடு (!!!!)" என்று, பாடியும் தெளிக. நிற்க.

 

சிலப்பதிகாரம், இளங்கோவடிகளின் இலட்சிய் சிருஷ்டி! அதைக் குறுகிய ஒரு வரம்புக்கு உட்படுத்தி, ஒரே கோணத்தில் பார்ப்பது மாபாதகம். ஒரேயடியாகச் சிலப்பதிகாரமே பொய் என்பது, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த குண்டோதரன் கதையாய் முடியும் என்று எச்சரிக்கை செய்ய வேண்டி யிருக்கிறது.

 

சிலப்பதிகாரத்தின் சிறப்பியல்புகளை யான் விவரிக்காததின் காரணம், பிரதிவாதக் கட்டுரையாளர்கள் போதுமான அளவிற்கு விவரித்திருப்பதே யாகும்.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment