Thursday, August 27, 2020

 ஊர்ப்பெயர்களின் உருத்திரிதல்

ஊர்ப்பெயர்களின் உருத்திரிதல்

(ரா. பி. சேதுப் பிள்ளை, பி. ஏ. பி. எல்.)

 

இவ்வுலகில் விளங்கும் தொன்னாடுகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற இந்திய நாட்டின் தென்பால் அமைந்த தமிழ் நாட்டில் தொன்று தொட்டுப் பைந்தமிழ் மொழியே பரவியிருந்த தென்பது யாவரும் அறிந்த உண்மையாகும். இந்நாட்டைத் தமிழகம் என்று முற்காலத்து மக்கள் போற்றிப் புகழ்ந்தார்கள். இத்தமிழகத்தில் அடுக்கடுக்காக ஓங்கி உயர்ந்த அழகிய மலைகளும், ஐந்திணை நெறி அளாவிச் செல்லும் ஆறுகளும், நீர்வளம் மிகுந்த ஊர்களும் நலமுறத் திகழ்கின்றன. இத்தகைய மலைகளையும் ஆறுகளையும், தமிழ்ப் பேர்களாலேயே நம் முன்னோர் வழங்கினர் என்பது சொல்லாமையே அமையும். அருந்தமிழ்ப் பெயர் பெற்ற ஆறும் ஊரும் பிற்காலத்தில் பெயர் மாறி நிற்கும் நிலையினை ஆராய்ந்தறிதல் சரித்திர அறிஞர்க்கு ஆராவின்பம் அளிப்பதாகும். சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் இருப்புப் பாதையில் அமைந்த சில வாகளின் பெயரை இக்கட்டுரையில் ஆராய்வோம். எழும்பூர் நிலயத்தினின்றும் கிளம்பி, சிதம்பரம் வருமளவும் இருப்புப் பாதையிலமைந்த சிற்றூர்களும் பேரூர்களும் பெரும்பாலும் தமிழ்ப்பேருடையனவாகவே தோன்றுகின்றன. சிற்றம்பலம் என்று தமிழ் மொழியிலும், சிதம்பரம் என்று வட மொழியிலும் வழங்கப் பெறுகின்ற தில்லைமூதூர், தென்னாட்டுத் திருப்பதிகளுள் சிறந்த தொன்றாக அன்று தொட்டு இன்று காறும் விளங்குகின்றது. இவ்வூரைக் கடந்து செல்லும் பொழுது, நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தரைத் தோற்றுவித்த சீகாழி தோன்றுவதாகும். பன்னிரு பெயர்கள் பண்பாயமைந்து, பாடல் பெற்ற பழம்பதிகளுள் ஒன்றாகப் பாராட்டப்படும் இவ்வூரின் பெயர் “சிய்யாழி' என்று ரயில் வண்டி நிலயத்திற் பொறிக்கப்பட்டிருத்தல் தமிழ் மொழியிற் பற்றுடைய மாந்தர்க்கு மிக்க வெறுப்பைத் தருவதாகும். நற்றமிழ் வல்ல ஞானக்கதிரோனைப் பெற்றெடுக்கும் பெருமை சான்ற தலத்தின் பெயரைத் திருத்தமாக வரையாது, சிதைத்து வழங்கும் சிறுமையைக் கண்டு அறிவுடையோர் சிந்தை தளர்வர்.

 

இனி இவ்வூரைக் கடந்து சென்றால் மாயவரம் என்னும் மணி நகர் தோன்றும். அப் பெயரினை நோக்கும் பொழுது மாய, வரம் பெற்ற காரணத்தால் மாயவரம் என்று இவ்வூர் வழங்கலாயிற்றோ வென்று மதிநலமில்லா மாந்தர் மயங்குவார்கள். மயிலாடு துறை என்னும் அழகிய பழந்தமிழ்ப் பெயர்வாய்ந்த இவ்வூர், மாயவரம் என்று மாறிய வரலாறு அறிந்து மகிழத்தக்கதாகும். “பூவார் சோலை மயிலாடப் புரிந்து குயில்களிசைபாட காமர் மாலை அருகசையநடந்தாய் வாழிகாவேரி " என்று இளங்கோ வடிகளாற் புகழப்பெற்ற பொன்னியாற்றங் கரையில், ஓகை மயில்கள் தோகை விரித்தாடும் செழுஞ் சோலைகள் சூழ்ந்திருந்த சிற்றூரை, மயிலாடுதுறை யென்று பழந் தமிழ்மக்கள் வழங்கிய முறை சாலப் பொருத்தமுடையதாகும். மயில் என்னும் தென்சொல்லுக்கு நேரான வடசொல், மயூர மாதலால் மயிலாடு துறை, மயூரம் என்று மாறிப் பின்னர் மாயூரமாயிற்று. மயூரமென்னுஞ் சொல்லின் சுவையறியும் மதுகையற்ற ரயிலோர் அதனை மாயவரமாக மாற்றினார்கள். இனி இவ்வூரையுங் கடந்து சென்றால், கும்பகோணம் என்னும் ஊர் குறுக்கிடுவதாகும். இவ்வூர் பழந்தமிழ்ச் சாசனங்களிலும், பழம் பனுவல்களிலும், குடமூக்கு என்று வழங்கப்படுதலை அறிவுடையோர் அறிகுவர். பழந் தமிழ்ப் போர்க்களங்களுள் ஒன்றாகவும் இவ்வூர் விளங்குகின்றது. குடமூக் கென்னுந் தமிழ்ப் பெயர் கும்பகோணம் என்று எக்காலத்தில் மாற்றமடைந்ததோ அறியோம். கும்பகோணம் என்பது குடமூக்கின் நேர் மொழி பெயர்ப்பாகவே தோன்றுகின்றது. வடமொழிக் கும்பமும் தமிழ்க் குடமும் ஒன்றேயென்பதும் வடமொழிக் கோணமும் தமிழ் மூக்கும் ஒன்றே யென்பதும், இரு மொழியும் உணர்ந்த அறிஞர்க்கு இனிது விளங்கும். இத்தகைய மாற்றம் இன்னும் பல ஊர்ப் பெயர்களில் இனிது விளங்கக் காணலாம். பொன்னி நாடென்று பழந்தமிழ் மக்களால் புகழப்பெற்ற திருநாட்டில் அமைந்த திருமறைக்காடு வேதாரணியமாய் விளங்குகின்றது. திருவிடைமருதூர் மத்தியார்ச்சுனமாய் மிளிர்கின்றது. திருவெண்காடு, சுவேதாரணியமாய் ஒளிர்கின்றது. திருவையாறு பஞ்சநதமாய்த் திகழ்கின்றது. இன்னும் நடுகாட்டிலமைந்த திருமுதுகுன்றம் விருத்தாசலமாய் விளங்குகின்றது அண்ணாமலை அருணாசலமாய் அமர்ந்திருக்கின்றது. இவ்வாறுபழம் பதிகள் பெயர் மாறி வழங்கும் பான்மையை ஆராய்ந்தறிதல் மொழிநூல் வல்லார்க்கு முற்றிய இன்பம் அளிப்பதாகும். இந்நாட்டில் தலப் புராணம் எழுதப் போந்த புலவர்கள், பலவூர்களின் பெயரை வடமொழியாக்கி வழங்கத் தலைப்பட்டார்களென்று கருதுதல் தவறாகாது. இப்பொழுதும் சில ஊர்ப் பெயர்கள் இவ்வாறு மாறிக்கொண்டிருத்தலை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். தில்லையம்பதியின் எல்லையில் அமைந்த ஆடூர் என்னும் சிற்றூர், புராணம் இயற்றும் புலவர் வசப்பட்டு, நிர்த்தனபுரியாக நிமிரப்பார்க்கின்றது. ஆடுகள் மலிந்திருந்த காரணத்தால் இவ்வூர் ஆடூர் என்று ஆதியிற் பெயர் பெற்றிருத்தல் கூடும். "இடையன் பால் சொரி'' யென்று இதன் அண்மையிலுள்ள மற்றோர் ஊரை நோக்கும் பொழுது இக்கருத்துன்னும் வலியுறுவதாகும்.

 

இனி, இவ்வாராய்ச்சியை விடுத்து, கும்பகோணத்திற்கப்பாற் செல்வோம். சோழ மன்னர் ஆட்சியில் சில காலம் தலைநகராக அமைந்திருந்த தஞ்சையையும் திரிச்சியையும் கடந்து சென்றால் கொடைக்கானல் ரோடென்னும் பெயரமைந்த நிலையம் புலப்படும். கொடைக்கானல் என்னுந் தமிழ்ச்சொல்லோடு " ரோடு " என்னும் ஆங்கிலப் பதத்தை இணைத்து அந்நிலயத்திற்கு பெயரமைத்த முறை வியப்பைத் தருவதாகும். கொடைக்கானற்சாலை யென்று கூறின் அச்சொற்றொடர் செந்தமிழ்ச் சுவை யறியுஞ் செவிகளில் செவ்விய இன்பம் பயக்குமன்றோ? இச்சாலையைக் கடந்து சென்றால் அதிராச் சிறப்பின் மதுரை மூதூர் தோன்றுவதாகும். புலவர் பாடும் புகழமைந்த மதுரைமா நகரம் அன்று தொட்டு இன்று காறும் பெயர் மாறாது பிறங்கும் பெற்றியை நினையும் பொழுது தமிழ் மக்கள் நெஞ்சம் நிமிர்வதாகும். புலவர் நாவிற் பொருந்திய இப்பழம் பதியைக் கடந்து சென்றால் அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்றென்று செஞ்சொற் கவிஞராய நக்கீரராற் சிறப்பிக்கப் பெற்ற திருப்பரங்குன்றம் தலை தூக்கித் தோன்றும் கொஞ்சித் தமிழ் பகர்ந்த குமரன் உறையும் குன்றினைக் கடந்து சென்றால், பல பட்டிகள் அடுக்கடுக்காயமைர் திருக்கக் காணலாம். சில ஆண்டுகட்கு முன்னர் விருதுப்பட்டியாய் விளங்கிய சிற்றூர் செல்வச் செழுமையாலும் வாணிகப் பெருக்காலும் வளர்ந்தோங்கி, விருதுநகர் என்னும் பேர்பெற்று விளங்குகின்றது. நலம் பெற்ற சிற்றூர்கள் நகரங்களாகுமென்னும் உண்மைக்கு இவ்வூரே சிறந்த சான்றாகும்.

 

 

ஆனந்த போதினி – 1931 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment