Thursday, August 27, 2020

 

உன்னை நேசி

 

நற்கதியடைந்து உய்தலையே தன் சீவியத்தின் இலக்காகக் கொண்டு உழைத்து வந்த ஒருவன் ஒரு மகானையடைந்து பிறவிப்பிணி நீங்கி முத்தி யின்பத்தைப் பெறுவதற்கு ஏற்ற ஓர் உபாயம் சொல்லிக் கொடுக்கும்படி வேண்டி நின்றனன். அப்பெரியவர் அவனைப்பார்த்து, "நீ உன்னை நேசி; சுகம் பெறுவாய்'' என்றனர். அவன் அவர் சொல்லிய வாக்கியத்தின் பொருளை உணராமல் மனக்கவலை நிறைந்தவனாய், திரும்பவும் அவரிடத்தில் அநேகமுறை அக்கேள்வியைக் கேட்டான். அவன் திருப்தியடையாததை முற்றாய் அறிந்து கொண்டும் அம்மகாத்மா முன்சொன்ன கருத்தமைய, "நீ உன்னை உண்மையாய் நேசிப்பாயானால் தடையின்றி முத்திப் பெரும் பேற்றைப் பெற்றுய்வாய்" என்று சொல்லி அவனை யனுப்பினார்.

 

ஒருவன் தன்னிலும் பார்க்கப் பிறரையே அதிகமாக நேசித்தல் வேண்டுமென்றும், தன்னயங் கருதலை முற்றாய் ஒழித்தல் வேண்டுமென் றும் சமய சாஸ்திரங்களும் சன்மார்க்க நீதி நூல்களும் கூறும். அப்படி யிருக்கவும் ஒரு மகான் " உன்னை நேசி'' என்று ஆன்ம விசாரம் நிறைந்து ஆறுதலற்றிருக்கும் ஒருவனைப் பார்த்துச் சொல்வது எவ்வாறு பொருந்து மென்று அனேகர் எண்ணுதல் கூடும். அப்படி நினைப்பவர்கள் ''உன்னை நேசி' என்னும் வாக்கியத்தால் உண்மையாய் நிறைந்துள்ள புதை பொருளைச் சற்று ஆராய்ந்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

 

எவனொருவன் தன்னை உண்மையாய் நேசிக்கிறானோ அவன் தன்னுடைய தேகம் மனம் முதலியவைகளுக்கு இடையூறான ஒன்றையும் சிந்திக்கவாவது செய்யவாவது துணியான். ஏனெனில் அவனுடைய ஈடேற்றத்துக்கு இவைகளே இன்றியமையாத கருவிகளாயிருக்கின்றன. தேகசுகத்துக்கு மாறான அனேக காரியங்களை நம்மவரிற் பெரும் பாலார் செய்வதை நாள்தோறும் நாம் காண்கிறோம். அப்படிச் செய்பவர்களுள் சிலர் அறியாமையின் நிமித்தமாகவும், மற்றையோர் மன அடக்க மின்மை காரணமாகவும் தங்கள் தேகசுகத்தைக் கெடுக்கின்றனர். இவர்கள் தங்களுக்குத் தாங்களே சத்துராதிகளா யிருக்கிறார்க ளென்பதைச் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. ஒருபிள்ளையை மிகவும் அன்பால் நேசிக்கும் தாயும் தகப்பனும் அந்தப் பிள்ளையைக் கேட்டை விளைக்கக் கூடிய ஒவ்வொரு தீமையிலுமிருந்து எவ்வளவு சாவதானமாய்க் காத்துக் கொள்ளுகின்றனர். அது போலவே இகத்துக்கும் பரத்துக்கும் நிலையான சந்தோஷத்தைத் தருதற்குச் சாதனமாயுள்ள நமது தேகத்தைச் சுகபலத்தோடு நீடித்திருக்கச் செய்தற்கு ஒவ்வொருவரும் தம்மைத்தாமே உண்மையாய் நேசித்தல் அவசியமல்லவா? இவ்வுலகத்தில் அனேகர் தங்களை நேசியாமல் தங்களுக்குச் சுகம் தருபவைகள் போலத் தோற்றுபவைகளில் நேசம் வைத்துத் துன்புறுவது சாதாரணமாயிருக்கிறது. தேக சுகமில்லாத அனேகரை நாம் பலவிடங்களிலும் காணக்கூடியதாயிருத்தற்கு இதுவே முக்கியகாரணம். மட்டற்ற மதுபானப் பாவிப்பாலும் வேறுபல துர்நடைகளாலும் எத்தனையோ பேர் புத்தியீனமாய் மெத்தக் கேவலமான நிலையையடைகின்றனர். ஒருவன் தன்னை உண்மையாய் நேசியாதிருக்கும் வரையும் இதைத் தடுத்தற்குத் தக்கவழி காண்பது முடியாத காரியம்.

 

தன்னைச் சரியானவகையாய் நேசிப்பவனுடைய மனம் என்ன நிலையி லிருக்குமென்று சற்று ஆராய்வோம். அது தன்னை வாதிக்கும் கோபம், லோபம், பொறாமை, ஆசை முதலியவற்றிற்கு ஈடுபடாமல் எப்பொழுதும் மேலான விஷயங்களிலே நாட்ட முடையதாய்ச் சகல பிராணிகளிடத்தும் அன்பும் அனுதாபமும் நிறைந்ததா யிருக்குமல்லவா? ஒருவனுடைய தேகம் ஆன்மா இரண்டையும் இயக்குவதும் அவைகளை ஏதாவது ஒருவழியில் செலுத்துவது அல்லது நிலைபெறச் செய்வதும் அவனுடைய மனமே யென்பது நாமனைவரும் அறிந்த விஷயம். மனத்தையடக்கி அதற்கு அடிமைப்படாமல் அதை நல்லவழியில் நிறுத்த எத்தனிக்கும் ஒவ்வொருவனும் தன்னை மெய்யாய் நேசிக்க முயற்சிக்கிறானென்று சந்தேகமின்றிச் சொல்லலாம். பஞ்சமகா பாதகங்களையும் அஞ்சாது செய்பவர்கள் தங்களைக் கொஞ்ச மேனும் நேசிக்கிறவர்களல்ல வென்பது நமது பொது அறிவுக்கு ஒத்த ஓர் உண்மை. கொஞ்ச மேனும் மனச்சஞ்சலமின்றி அப்போதைக் கப்போது சுகம் போலத் தோற்றிப் பின்பு பெரும் தீமையை விளைக்கும் எத்தனையோ பெரும்பாவங்களுக்கு மனம் மனுஷனை ஈடுபடுத்துகின்றது.

 

இந்தமனமே அவனை உலகப்பற்றெல்லாவற்றிலு மிருந்து நீக்கி, ஒருபொழுதும் அழியாத நிலையுள்ளதாகிய பரவஸ்துவை உறுதியாய்ப்பற்றி நின்று உய்யும் வழியைக் காட்டவும் கருவியாயிருக்கின்றது. ஆதலால் தன்னை உண்மையாய் நேசிப்பவன் எவனும் மனம் போன போக்கெல்லாம் போகாது அதை அடக்கிச் சரியான பாதையில் விடுவான். தனக்கு என்ன கேடு சம்பவித்தாலும் காரியமில்லை யென்று நினைப்பவனுடைய மனம், நினைக்கத் தகாதவற்றை நினைத்து, செய்யா தொழிக்க வேண்டியவற்றைச் செய்ய அவனை ஏவி, எத்தனையோ சங்கடங்களுக்கு ஆளாக்கி, மீளாக்கவலையை நாள்தோறும் கொடுத்துக் கொண்டிருக்கும். 'சினமடங்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும், மனமடங்கக் கல்லார்க்கு வாயேன் பரா பரமே'' என்று தன்னையுணர்ந்த தாயுமான சுவாமிகள் திருவாய் மலர்ந் தருளியிருக்கிறபடி, மனத்தைக் கருவியாகக் கொண்டு ஏதோ ஒருகாலத்தில் அழிந்துபோகும் உலக விஷயங்களில் மாத்திரம் சித்தி யெய்துவதிலும் பார்க்கக் கொஞ்சம் கொஞ்சமாய் மன அடக்கத்தைப் பெற முயலுதல் மானிடர்க்கு ஏற்ற ஓர் சிறந்தவழியாகும்.

 

"உன்னை நேசி'' என்று ஒருவனைப் பார்த்து நாம் சொல்லும் பொழுது அவனுடைய தேகத்தை அல்லது மனதை அவன் நேசிக்க வேண்டு மென்று கருதுவதில்லை. ஆனால் ஒருவன் இவைகளைப் பாதுகாத்துத் தீயவழியிற் செல்லாது தடுப்பது அவனுடைய ஆன்மா நற்கதியடைதற்கு அவசியம் தேவையாயிருக்கிறது.'' நான்'' என்று சொல்வது ஆன்மாவை யேயாகும். ''உன்னை நேசி'' என்று சொல்லும்பொழுது நித்தியவஸ்து வாய் உன்னிடத்துள்ள ஆன்மாவை நேசி, என்பதே கருத்தாகும். இந்த உலகத்திலேயுள்ளவர்க ளெல்லாரும் தங்களை, அதாவது, தங்களிடத்துள்ள ஆன்மாவை, உண்மையாய் நேசிப்பார்களாயின் இப்பூமி சீவன் முத்தர்கள் நிறைந்த ஓர் பூரணமான இடமாயிருக்கு மென்பதற்குச் சந்தேகமில்லை. இவ்வுலகம் அப்படியில்லாததற்குக் காரணம் என்னவாயிருத்தல் கூடு மென்று உற்றுநோக்குமிடத்து நம்மிற் பெரும்பான்மையோர் தம்மைத் தாமே நேசியாதவர்களாயும் இப்பிறவி எடுத்ததின் நோக்கத்தைத் தேராத வர்களாயு மிருத்தலினாலேதா னென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளிதில் விளங்கக் கிடக்கின்றது.
 

அஞ்ஞான அந்தகாரத்தில் அமிழ்ந்தியிருக்கும் அனேகர் அல்லும் பகலும் தங்கள் நேரத்தைச் செலவழிக்கும் வகையைப் பார்த்தால் எவ்வளவு பரிதாபமாயிருக்கின்றது. தங்களுக்கு ஏதோ பெரிய நன்மை செய்கிறதாக எண்ணி, இவர்கள் பெண்சாதி, பிள்ளை, காணி, பூமி முதலியவற்றில் பற்றுவைத்துப் படும்பாடு கொஞ்சமல்ல. தன்னை உண்மையாய் நேசிக்கு மொருவன் கடவுளிடத்திலன்றி வேறொன்றிலும் பற்று வையான். ஏனெனில் அவன் மற்றவைகளெல்லாவற்றையும் ஏதோ ஒரு காலத்தில் விட்டு நீங்க வேண்டியே வரும். கண்மணி போல அல்லது அதிலுமருமையாக இருவர் ஒருவரையொருவர் நேசித்தாலும் அந்நேசம் நாசமாகுங்காலம் வராமற் போகாது. கடவுளை முற்றாய்ப்பற்றித் தானும் கடவுளும் ஒன்றித்து நிற்கும் நிலையையே அவாவி நிற்குமொருவன் உலகப் பொருட்களில் ஆசை வைத்துக் கேடடையமாட்டான். அவன் தான் உண்மையாய்த் தன்னை நேசிப்பவனென்று சொல்லுதல் ஒருபோதும் தவறாகாது. உற்றார் உறவின் ராதியோரில் முற்றாகப் பற்றுவைத்து அவர்கள் தாம் தங்களுக்குத் துணை யென்று நம்பியிருப்பவர்கள் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். அதாவது தங்களுக்குக் கஷ்டகாலம் வரும்பொழுது அல்லது கொடிய நோயால் பீடிக்கப்பட்டுப் பாயும் படுக்கையுமா யிருக்கும் பொழுது தங்களுடைய சுற் றத்தார் மித்திரர் தங்களுக்கு மனப்பூர்வமாக உதவுகிறார்களா வென்பது தான். ஒருவேளை அவர்கள் உதவ நேர்ந்தாலும் அது அவர்களுடைய சுகம் கெடப்போகிறதென்ற அல்லது பிறருடைய உதவி அவர்களுக்கு எங்கே கிடையாமல் போகிறதோ என்ற எண்ணத்தினால் கவனிப்பார்க ளேயன்றி, நோயுற்றவர்களுடைய நன்மைக்காக மாத்திரம் அவர்கள் உள்ளபடி அனுதாபப்படுகிறதைக் காண்பது மிகவும் அரிதாயிருக்கும். இதைஇதுவரையும் கவனியாதவர்கள் இனிமேலாவது கூர்மையாக அவதானித்தால் தெரியவரும்.

 

நாம் இந்தப் பிறவியை எடுத்தது உலகத்திலுள்ள போக போக்கியங்களை அனுபவித்தற்காகவேயென்று ஒரு சமயமும் போதியாது. பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கே நாம் இரவும் பகலும் உழைத்தல் வேண்டும். அப்படிச் செய்யாதிருக்கும் வரையும் நாம் நமக்கே பகைவர்களாவோம். பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தம் முதலியவைகளை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நம்மைக் குறைவாக நேசிக்கிறவர்களாவோம். இதனால் பெண்சாதி பிள்ளை முதலியவர்கள் மீது அன்புவைக்கப்படாதென்பது கருத்தல்ல. அந்த நேசத்தால் நமக்கும் அவர்களுக்கு மிடையிலுள்ள தொடர்பு புளியம் பழத்துக்கும் ஓட்டுக்குமுள்ள சம்பந்த மளவிலேயே இருத்தல் வேண்டும் என்பதே.

 

தன்னயங்கருதிப் பிறருக்குத் தீமை செய்பவன் தனக்கே கேட்டைத் தேடிக்கொள்ளுகிறானென்பதைப் பெரும்பாலும் மறந்துவிடுகிறான். பிறரை வஞ்சிப்பவன் தன்னையே வஞ்சிக்கிறான். இது நாம் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை. தன்னை ஒருவன் நேசிப்பதென்றால் பிறருக்கு அன்பு அனுதாபம் காட்டி, நடவாமலிருப்பதோடடையாது, அவர்களுக்கு இயன்றவரையில் கஷ்ட நஷ்டத்தையும் வருவித்தல் தடுக்கக்கூடியதல்ல வென்று பலர் நினைக்கிறார்கள். இது மிகவும் பிழையான எண்ணம். உலகத்தில் பல பாகங்களிலும் வெவ்வேறு காலங்களில் தோன்றி மறைந்த பெரும் ஞானிகளனைவரும் தங்களை உண்மையாய் நேசித்து உன்னத பதவி எய்தினார்களன்றி, தாங்கள் ஈடேற்றம் அடைதற்பொருட்டு வேறு யாருக்காவது அவர்கள் ஒரு தீங்கும் விளைத்ததில்லை. அவர்களைப்போலவே நாமும் சீவித்தல் அத்தியாவசியகம்.
 

மேற்கூறிய அபிப்பிராயங்களைச் சுருக்கிக் கூறில், ஒருவன் தன்னை உண்மையாய் நேசித்தால் மட்டுமே ஈடேற்றமடைவானென்பதும், அதன் நிமித்தம் வேறொருவருக்கும் தீமை விளைத்தல் கூடாதென்பதும் உலகத்திலுள்ள ஒரு பொருளிலாவது நிலையான நேசம் வைத்தல் புத்தியல்ல வென்பதும், கடவுளை மாத்திரம் நேசிப்பது தான் தங்களை நேசிப்பதன் கருத்தென்பதும் அமையும். ஆதலால் நாம் பிறவியெடுத்ததின் நோக்கத்தைக் கனவிலும் மறவாது இறைவன் திருவடியை இடைவிடாது தியானித்து ஒவ்வொரு தொழிலைச் செய்யும் போதும் " தன்னை நேசிக்குமொருவன் இத்தொழிலைச் செய்தல் தகுமா?'' என்று நம்மையே நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்து வருந்தோறும் முத்திப் பெரும் பேறு சித்தியடைதற்கு எத்தனிப்பவர்களாவோம்.


 கா. சின்னப்பா, அளவெட்டி, யாழ்ப்பாணம்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - ஜுன் ௴

 



 

No comments:

Post a Comment