Thursday, August 27, 2020

 

உள்ளொளி யுடைய ஒள்ளியார்

[ராவ்சாகிப் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை, பி. ஏ., பி. எல்.]

நமது தாய்த் திரு நாட்டுக்கும் தமிழன்னைக்கும் பெருந் தொண்டாற்றி வரும் திரு. வி. கலியாணசுந்தரனாரை அறியாதார் இலர். இவர் மக்களை அவர்கள் கொண்ட குறிக்கோளிலே சென்றெய்துமாறு முன்னின்று நடத்தவல்ல தலைமக்கட்குரிய பண்புகள் பலவும் இயல்பாகவே வாய்க்கப்பெற்றவர்; உள்ளொளி யுடையவர்; பரந்த நோக்கமுடையவர்; அறிவு சான்றவர்; உறுதி படைத்தவர்; ஆற்றல் மிக்கவர்; அன்பு நிறைந்தவர். இவற்றோடு கல்வியிற் சிறந்தவர்; சொல்வன்மை படைத்தவர். இன்னோரன்ன இயல்புகளை யுடையவரன்றோ தாய்த்திரு நாட்டுக்குத் தொண்டு புரியத் தக்கவர்.

தாய்த்திரு நாட்டுத் தொண்டு தமிழ்த் தொண்டினை அடிப்படையாகக் கொண்டதர்கள் வேண்டுமென்பது கலியாணசுந்தரனார் கருத்து. இருவகைத் தொண்டுகளுக்கும் நெருங்கிய பிணைப்பு உண்டு; ஒன்மை ஒன்று. தழுவியது. ஒன்றற்கு மற்றொன்று இன்றியமையாதது. தாய் மொழிப் பற்றின்றித் தாய்நாட்டுப் பற்று இல்லையாம். அங்கனமே தாய் நாட்டுப் பற்றின்றித் தாய் மொழிப் பற்றும் இல்லையாம். இருவகைப் பற்றும் இல்லாதவர் மக்கட் பிறப்பில் வைத்து எண்ணத்தகாதவர். இறைவனுலகில் அவ்வாறமைந்த மக்கள் ஒருவரேனும் உளராயின் அந்நாடு காடன்று; சுடுகாடேயாம். இவ்வுண்மையை இளமையில் தாமே நன்குணர்ந்தவர் கலியாணசுந்தரனார். இவர் தாய்மொழிப் பற்றில் தேசப் பற்றையும் தேசப்பற்றில் தாய்மொழிப் பற்றையும் விதைத்துச் செழிக்கச் செய்து வருபவராவர்.

தாய்மொழி புராண வாயிற்பட்டு மீட்சியில்லாத நெறியை அடைந்திருந்தது. அதனைத் தமது அறிவுரங் கொண்டு வலிதின் வாங்கி அதற்குத் தேசப்பற்று என்னும் உயிராற்றலைக் கலியாண சுந்தரனார் உதவினர். இப்புதிய ஆற்றலால் தமிழ்மொழி புத்துயிர் பெற்று இளமை வேகத்துடன் தமிழ் நாட்டில் பரவத்தொடங்கி விட்டது. உயிருள்ள, வேகமுள்ள, ஆற்றலுள்ள புதிய தமிழ் இவர் எழுதியுள்ள அழகிய நூல்களிலே மிளிர்ந்து பாய்கின்றது. என்றும் அழியாத இளமைத் தெய்வம் திருநடஞ்
செய்கின்ற பூங்கோயிலாக நமது தமிழ்த் திருநாடு விளங்க வேண்டுமென்ற கொள்கை இவரது உள்ளத்திலே குடிபுகுந்தது. "வீரியர் வீரம் விழுங்கி நின்ற " வேலவனாகிய தமிழ்த்தெய்வத்தின் சிறப்பு இவரிடத்தே ஒரு புத்துணர்ச்சியைத் தோற்றுவித்தது. 'முரு
கன் அல்லது அழகு' என்னும் நூல் இப்புத்துணர்ச்சியின் விளைவே யாகும். தமிழ்த் தெய்வத்திற்கேற்ற தமிழ். தமிழ்த் தெய்வம் வேணவாவினால் உண்டு பூரிக்கும் தமிழமிர்து. அத்தெய்வம் விரும்பித் திளைத்தாடும் தமிழ்த் திருநதி. அத்தெய்வம் வெற்றிக் கோலத்துடன் பொலிந்து விளங்கும் தமிழ்ப் போர்க்களன்.

      வீரம் காதலின்றிச் சிறவாது. காதலும் அழகும் கலந்தே தோற்றமளிப்பன. இரண்டற்கும் நிலைக்களனா யுள்ளார் பெண் மணிகளே. தாய் நாட்டின் வாழ்வு அவர்கள் வாழ்வு; தாய் நாட்டின் தாழ்வு அவர்கள் தாழ்வு. மக்கட் பண்பு அவர்களாலே உளதாவது; அவர்களாலே இலதாவது. அவர்கள் கல்வியை நாம் வெகு காலமாகப் புறக்கணித்து விட்டோம். அவர்கள் மேம்பாட்டைக் கனவினும் கருதினோமில்லை. அவர்களை விலங்குகளோ டொப்பக் கருதி வந்தோம். வீரமக்கள் தமிழ் நாட்டில் தோன்றுவதற்கு இடனில்லாது செய்து விட்டோம். இக்குறைபாடு கலியாணசுந்தரனாரது மனத்தை ஈர்ந்து வந்தது. அவரது உயிராற்றலைத் தேய்த்துக் குறைத்து வந்தது. இனிப் பொறுத்தல் அரிதாயிற்று. உள்ளம் உடைந்து உணர்ச்சி பெருக்கெடுத்துத் தமிழுலகிற் பரந்து பாய்ந்தது.
பெண்ணின் பெருமை'யை உணரலாயினோம். இந்நூல் அழகு வாய்ந்தது;
இன்பம் பயப்பது; நீண்ட காலமாய் வருந்திய பிணிக்கு அருமருந்தன்னது.

      இந்நூல்க ளெல்லாம் பரந்த நோக்கத்துடன் இயற்றப்பட்டன; தமிழ்நாடு உய்தி பெறுதற்குரிய உபாயத்தையே தெளிவிப்பன. உலகம் தான் சென்றுகொண்டிருக்கும் பாழ்நெறியினின்று விலக வேண்டும். அழிவையே எண்ணி ஆக்கத்தை மாய்க்கும் பொல்லா நெறியைத் தூர்த்துவிட வேண்டும். உலகம் உய்தி பெற வேண்டும். இன்ப வெள்ளத்தில் திளைக்க வேண்டும். 'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'. என்ற தெய்வப் புலவர் திருநெறியை மக்கள் மேற்கொள்ள வேண்டும். இப்பொது நோக்கங்களே திரு. முதலியாரை ஊக்கி வந்தன. இவை பற்றித் தோன்றிய கருத்துக்கள் 'பொதுமை வேட்டல்' என்ற செய்யுள் நூல் வடிவாக வெளிவந்தன. உலகம் நீதி நெறியிலே நிலைபெற்றிருக்க வேண்டும் என்ற ஆராப்பெருங் காதல்,

பன்மார்க்க அடியாகிப்

பண்புவளர் சன்மார்க்கம்

உன்மார்க்கம் ஒரு மார்க்கம்

உயர்மார்க்கம் வேறில்

தொன்மார்க்கம் என்னுவத்தில்

துலங்க வைத்த மெய்ப்பொருளே!

துன்மார்க்கஞ் சாய இங்குத்

துணை செய்ய அருள்மொழியே.             (பக்.32)

எத்தனை அழகாக, எத்தனை உறுதியாகப் புலப்படுகின்றது.

      பெரு நோக்கங்கள், பக்குவம் எய்திய மனத்தின் கண்ணேயே தோன்றுவன. வெகுகாலமாக, இளமை தொட்டு, திரு. முதலி தமமைப் பக்குவப்படுத்தி வளர்த்திருக்கின் றனர். இறந்தும் இறவாது, முன்னையினும் பன்மடங்கு உயிராற்றலோடு, விரைந்து
தொழி பட்டு வாழும் மனத்தைப் பெறவேண்டும் கல்வியைக் கற்றனர். இக்கல்வி கலாசாலைகளில் போதிக்கப் படுவதன்று; கழகங்களில் விளைவதன்று; இடைவிடாத மனப்பயிற்சியால் விளைந்து செழிப்பதாகும். மிக நீண்ட காலம் இப்பயிற்சியில் நிலை நின்றார்க்குப் பொருள்களின் உண்மைத் தன்மை விளங்குவதாகும். உள்ளொளி தோன்றி அறிவு, சொல், செயல் என்ற மூன்றனையும் விளக்கமுறச் செய்து அமைதியையும் இன்பத்தையும் கொடுக்கும் இவ்வுள்ளொளியே வாழ்க்கை நெறியிற் செலுத்துவதுமாகும்.
இவ்வுள்ளொளியால் தோன்றி வெளிவரும் சொற்கள் உண்மை யுடையனவாய், பயனுடையனவாய், கேட்போர் கற்போர் மனத்தில் ஒளிபிறங்கச் செய்வனவாய் அமையும், இத்தகைய ஒளியோடு வடிய செஞ்சொற் புலவர் திரு. கலியாணசுந்தரனார். இவர் மனத்தினின்னுறுந் தோன்றி வெளியே பரவிச் செல்லும் இவ்வுள்ளொளி அனைவரும் உய்தி பெறுவதற்கு நெறி காட்டுவதாக.

ஆனந்த போதினி – 1943 ௵ - ஆகஸ்டு ௴

No comments:

Post a Comment