Thursday, August 27, 2020

 உள்ளத்தினின்றும் கிளர்ந்தெழுந்த வீரம்



பாட்டு! ஆ! அதனை எண்ணும் போதே உள்ளம் துள்ளி எழுகிறது! அதனை ஓதுங்கால் உள்ளத்தில் உரைப்பரும் உவகை பொங்குகிறது! கருத்தில் எழும் கவலைகளனைத்தும் கடிதில் மறைகின்றன! சோர்வுமிகுந்து வாடி வருந்தும் உள்ளத்திலுங்கூட, சீரிய பாட்டு புத்துணர்ச்சியை எழுப்பி விடுகின்றது! இயற்கையின்பமும் இறைவனுண்மையும் நாட்டுப் பற்றும் மிருகசக்திக்கு அஞ்சாமையும் மொழி வளர்ச்சியில் தணியாக் காதலும் அடிமை வாழ்வில் வெறுப்பும் உரிமை வாழ்வில் விருப்பும் ஒருங்கு கலந்து ஒரு கவிஞன் உள்ளத்தில் ஊறவும், எதிர்ப்படும் தடைகள் அனைத்தையும் கடந்து வெளிப்பட்டு ஓடிவரும் இனிய அருவியை ஒத்துப் பெருகி வருவது நாட்டுப்பாட்டு! உரிமையின்பத்தில் ஆவல் மிக்க பாவலன் ஒருவன், தனது அக உணர்ச்சிகளை விளக்கி ஓதுவோர் உள்ளத்தில் நன்கு பதியும் வண்ணம் சிறந்த பொருள்களை 'சொற்சித்திரங்க' ளால் திறம்படச் சித்தரித்துக் காட்டுவது நாட்டுப் பாட்டு! அடிமை வாழ்வில் வெறுப்பூட்டி உரிமையின்பத்தை விளக்கிக் காட்டி அகச்சோர்வை ஓட்டி பணிசெய்து கிடப்பதில் ஆர்வம் ஊட்டுவது நாட்டுப் பாட்டு! மூடப் பழக்க வழக்கங்களையும் சாதிப் பிணக்குகளையும் கட்சிச் சண்டைகளையும் ஒழித்து எங்கணும் சமரசத்தை காட்டுவது நாட்டுப் பாட்டு | பண்ணின்பம் செறிந்தது பாட்டு! ஓசையின்பம் நிறைந்தது பாட்டு! இன்னருள் வடிவினனாகிய இறைவன், கவிஞனை ஒரு கருவியாக மட்டுமே கொண்டு, அவன் வாயிலாக நாட்டினரை உய்விக்கப் பாடுவிப்பனவே நாட்டுப் பாட்டுகள்!!

 

பெயரைக் கூறும்பொழுதே செவிகளில் இன்பத் தேனைப் பாய்விக்கும் நமது செந்தமிழ்த் திருநாடு, பாட்டுகளுக்குப் பெயர்பெற்ற தென்பது பாவின்பம் நுகரும் பலரும் அறிந்ததே. இப்பொழுது நமக்குக் கிடைக்கும் தமிழ் நூல்களுள், தொன்மையில் முதன்மை பெற்ற தொல்காப்பியம் முதல் தேவார - திவ்ய ப்ரபந்தங்கள் வரையில், இந்நாட்டு மக்கள் மக்கள் நலத்தைத் தம் நலமாகக் கருதும் அறம் திறம்பாத அருள் மன்னரின் செங்கோலாட்சியின் கீழ் உரிமையின்பம் நுகர்ந்துகொண்டிருந்த காலத்தில் பாடப்பெற்ற பாக்களாகும். சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக இச் செந்தமிழ்நாட்டு மக்கள்உரிமை வாழ்வை இழந்து அடிமை வாழ்வை அடைந்து வயிற்றை வளர்க்க உழைப்பதிலேயே கவலை மிகுந்து பலவகைத் துன்பங்களுக்கும் ஆளாயினர். அத்தகையோர், பாட்டுகளில் போதிய கவனம் செலுத்தா தொழிந்தது வியப்பன்று. சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்பு இந்நாட்டிலிருந்த வெண்பாப் புலிகளும் சந்தச் சாபங்களும், கேட்பவர்களுக்குப் பொருள் விளங்கா விடினும் எவரும் பிரமிக்குமாறு தமது புலமைத் திறமையை வெளிப்படுத்திவிட வேண்டு மென்னும் ஆர்வம் மிகுந்தவர்களாய் பாடி வைத்துப் போயிருக்கும் 'இயமசம்' 'ஏகபாதம்' 'சதுரங்கம்' 'மாலை மாற்று' முதலிய சித்திரக் கவிகளைச் சிந்திக்கும்போது சிரிப்பே பெருகுகிறது. அக்கவிஞாது உள்ளத்தில் உரிமை வேட்கை எழாதொழிந்தது தமிழர் செய்த தவக்குறையே யாம்.

அதன் பின்னர், தமிழர் செய்த அருந்தவப்பயனாக இந்நாட்டில் தோன்றிய இளங்கதிரே, காலஞ்சென்ற தேசீயக் கவியரசர் திரு - சி - சுப்பிரமணியபாரதியார். அக்கவியரசர், வடநாட்டில் பிரசித்தி பெற்றிலங்கும் இரவீந்திரரை யொத்து, இந்நாட்டில் சிறந்து விளங்கிய தென்னாட்டுக் கவீந்திரராவர். அக்கவியரசரது உணர்ச்சி நிறைந்த உயரிய பாக்கள், தற்காலத் தமிழ் இளைஞர்களின் நாவில் நடமிடுகின்றன. தற்காலத் தமிழ்ப் பண்டிதர்களைப்போல் அவரும் உயிர்க்கு உறுதி பயக்கும் உயரிய நூல்கள் பலவற்றையும் கற்றுணர்ந்தவரே யெனினும், அதன் பயனாக தாம் பெற்ற வித்யா-- ஞானத்தை விளம்பரப் படுத்திக்கொள்ள விரும்பினாரில்லை. அடிமை வாழ்வில் கிடந்து உழலும் தற்காலத் தமிழர்களது நிலையை உன்னி உன்னி, அவரது உள்ளம் பெரிதும் உருகலாயிற்று. அவர், தமிழ்த்தாயின் தற்கால நிலையை எண்ணி எண்ணிக் கண்ணீர் உதிர்த்தார். நவீன நாகரிகத்திலே மையல் மிகுந்தவர்களாய் - தமது தாய்மொழியையும் தாய் நாட்டையும் கவனியாதவர்களாய் – கேவலம் உண்டு உடுத்து உறங்குவதிலேயே பொழுது கழிக்கும் சோம்பேறிகளாய் - சாதிச் சண்டைகளையும் கட்சிப் பிணக்குகளையும் வளர்ப்பவர்களாய்- உரிமை வேட்கையின்றி அடிமைத் தொழிலிலேயே ஆர்வம் மிகுந்து அலையும் அலிகளாய்ப் பொழுது கழித்துவரும் தமது சகோதரர்கள் பக்கலில், பாரதியார் பெரிதும் இரங்கலானார். அன்பு ததும்பும் அகத்தைப் பெற்ற பாரதியார், என் செய்வார்? வீரத் தெய்வமாம் சீரிய பராசக்தியின் திருவடிகளிலே சாணம் புகுந்த அவர், அவ்வன்னையை நோக்கிப் பின்வருமாறு கேட்கலானார்: -


"நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவ சக்தி! — எனைச்

சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!

 

“வல்லமை தாராயோ – இந்த

மா நிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி சிவ சக்தீ! - நிலச்

சுமையென வாழ்ந் திடப் புரிகுவையோ?”


“எண்ணுங் காரியங்கள் எல்லாம் – வெற்றி

ஏறப் புரிந்தருளல் வேண்டும்; - பல

பண்ணில் கோடிவகை இன்பம் – நான்

பாடத் திறனடைதல் வேண்டும்"

 

அன்பு மிகுந்து அகங் கனிந்து வேண்டும் மெய்யன்பர்க்கு, அருள் வடிவினளாகிய அன்னை அருளா தொழிவளோ? தற்காலத் தமிழரைத் தட்டி எழுப்பி - அடிமை வாழ்வில் அன்னார் கொண்ட ஆர்வத்தை அகற்றி – உரிமை வேட்கை உடையவராக்கி-" பச்சை ஊன் இயைந்த வேற் படைகள் வந்த போதினும்- உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதினும் - அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமில்லை இல்லையே!” - என்று பாடிநிற்கச் செய்விக்க்க் கூடியதொரு கவிதா சக்தியை பராசக்தி தேவியார் பாரதியார்க்கு அருள் செய்தார். அதுமுதல்; பாரதியாரது உள்ளத்தினின்றும் என்றும் - எவர்க்கும் - அஞ்சாத பெருவீரம் அடிக்கடி கிளர்ந்தெழுவதாயிற்று. அக் கிளர்ச்சியின் பயனாக அவர் பாடிய அரும்பெறற் பாக்களே, தற்காலத் தமிழ் இளைஞர்கள் பலரை பயன் கருதாப் பணி புரியும் அஹிம்சா வீரர்களாகச் செய்வித் திருக்கின்றன. நல்லது தீயது நாம் அறியோம்; அன்னை – நல்லது நாட்டு; தீமையை ஓட்டுக" - என்பதே பாரதியாரது உள்ளக் கிடக்கை. அனைவரையும் ஆட்டி வைத்தருளும் அன்னை பராசக்தி, தன்னை ஒரு கருவியாக மட்டுமே கொண்டு இன்பம் ததும்பும் பாக்கள் பலவற்றைப் பாடுவிக்கின்றா ளென்பதே பாரதியாரது திருவுள்ளம். இவ்வுண்மை,


"மா காளி பராசக்தி உமையாள் அன்னை

வைரவி கங்காளி மனோன்மணி மா மாயி –

பாகார்ந்த தே மொழியாள் படஞ் செந்தீ

பாய்ந்திடு மோர் விழியுடையாள் பரம சக்தி –

ஆகாரம் அளித்திடுவான் அறிவு தந்தாள்

ஆதி பராசக்தி எனது அமிர்தப் பொய்கை-

சோகாடவிக்குள் எனைப் புக வொட்டாமல்

துய்ய செழுந் தேன் போல் ஓர் கவிதை சொல்வாள்"-


எனும் பாரதியார் மணிவாக்கால் செவ்விதிற் புலனாகும்.

 

பாரதியார் மனம், தற்காலத் தமிழர்கள் பால் சென்றது. தமிழ்மக்கள் மனம், பாட்டில் நாட்டம் கொள்ளாது நவீன நாகரிகத்தில் ஆழ்ந்து கிடப்பதைக் கண்டு, அவரது சிந்தை பெரிதும் நொந்தது. அஞ்சா நெஞ்சமுடைய இளஞ் சிங்கங்கள் எங்கணும் பரவி யிருந்தகாலம் போய், கேவலம் பதவி பட்டங்களில் பெருமையிலும் வகுப்புவாதங்களில் பெரும் பற்றும் ஒருவரை யொருவர் மோசம் செய்து பிழைக்கும் வஞ்சக எண்ணமும் உடைய நரிகள் நிரம்பிய காலமும் தமிழ் நாட்டுக்கு வந்ததேயென்று அவரது உள்ளம் பெரிதும் புண்பட்டது. தமிழர்களது முன்னோர் எத்தகையவர்க ளென்பதை அவர்களுக்கு நினைவூட்டியேனும் அவர்களது உள்ளத்தில் புத்துணர்ச்சியைப் பெருக்க எண்ணினார்.


“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான் புகழ் கொண்ட தமிழ்பாடு - நெஞ்சை

அள்ளு சிலப்பதிகாரம் என்று ஓர் மணி

ஆரம் படைத்த தமிழ்நாடு"

.
“வலிமை வலிமை என்று பாடுவோம்! - என்றும்

வாழும் சுடர்க் குலத்தை நாடுவோம்!

தமிழிற் பழமறையைப் பாடுவோம்! – என்றும்

தலைமை பெருமை புகழ் கூடுவோம்!”

அன்பையே கடவுளாகக் கொண்ட அறிஞர் வழித் தோன்றிய தமிழா! பாரதியாரது இம் மணிமொழிகள், உனது உள்ளத்தில் உனது முன்னோர் எத்தகைய கவிஞர்கள் – எத்தகைய ஞானிகள் - 'எத்தகைய தியாகிக ளென்பதை நினைவூட்ட வில்லையா?

 

“அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர்;  

அன்புடையார், என்பும் உரியர் பிறர்க்கு''-;

 

"நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;

நமனை அஞ்சோம் - நரகத்தில் இடர்ப்படோம்;

நடலை இல்லோம் – ஏமாப்போம் பிணி அறியோம்;

பணிவோம் அல்லோம்;

இன்பமே எந்நாளும் துன்பமில்லை"

 

எனும் மணிமொழிகள் தோன்றிய இச் செந்தமிழ்த் திருநாட்டிலே, நீயும் ஒரு தமிழனாகப் பிறந்திருத்தலின் பயன், அஞ்சாமையும் அன்பும் வாய்ந்த அருந்தொண்டனாக விருந்து நாட்டு முன்னேற்றத்திற்கேற்ற சீரிய நற்பணி செய்வதேயன்றோ! ஒப்பற்ற சிறந்த
வீரர்கள் வழித் தோன்றிய உனக்கு, சாத்திரங்கள் ஒன்றுங் காணார் - பொய்ச் - சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே – கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்து இகழ்வார்”- என்று பாரதியார் பாடுமாறு கட்சிச் சண்டைகளிற் காலம் கழிப்பது வெட்கமாக இல்லையா?

 

தருமத்தைத் தோல்வி யுறுவித்து அதருமம் வெற்றி பெறுவது போல் சிற்சில சமயங்களில் தோன்றுதல் கூடும். அவ்வேளைகளில், உலக இயற்கையின் இரகசியங்களை உணர்ந்த பெரியோர்கள், ஆத்திரம் கொண்டு மூர்க்கசக்தியினால் தீய முறைகளில் பகைமையை வெல்ல மனம் கொள்ள மாட்டார்கள். ஆனால், அச்சீரியோர் உள்ளத்தில் வீரம் கிளர்ந்தெழா தொழியாது. எனினும், அவ்வீரம் மூர்க்க சக்தியைப் பின்பற்றி எழும் வீரமாகவன்றி, ஆத்ம -சக்தியைப் பின்பற்றி எழும் அஹிம்சா வீரமாகச் சிறந்து விளங்கும். எத்தகைய துன்பங்களிலும் மன அமைதி குலையாது - தருமமே இறுதியில் வெல்லும்' எனும் நம்பிக்கையில் தளர்வுறாது பொறுத்திருப்பதே சிறந்த வீரர்களின் இலக்கணமாகும். இவ்வுண்மையை, தனது பெயரிலேயே வெற்றியாளன்' எனும் மாண்பு தொனிக்கும் வண்ணம் 'விஜயன்' எனும் பெயர் கொண்ட அருச்சுனன் கூற்றாக, 'பாஞ்சாலி சபத' காவியத்திலே பாரதியார் தெளிவு பெற விளக்கி யிருத்தலை, இன்றைய தமிழ்மக்கள் ஒவ்
வொருவரும் தத்தம் அகத்தில் நன்கு பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.


"தருமத்தின் வாழ்வாதனைச் சூது கவ்வும்;

தருமம் மறுபடி வெல்லும்'- எனும் இயற்கை

தருமத்தை நம்மாலே உலகம் கற்கும்

வழி தேடி விதி இந்தச் செய்கை செய்தான்;

கருமத்தை மேன் மேலும் காண்போம்; இன்று

கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்; காலம் மாறும்;

தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்;

தனு உண்டு, 'காண்டீவம்'! அதன் பேர்'' – என்றான்

இந்நாளிலே, அஹிம்சா வீர மூர்த்தியாய் - உலகு முழுதும் பாவிய உயர் புகழாளராய் - பகைவரும் மெச்சும் பண்பினராய் - பாரதநாட்டின்தனிப்பெருந் தலைவராய் விளங்கும் வீரர் யார்?


"விடுதலை பெறுவீர் விரைவா நீர்-

வெற்றி கொள்ளுவீர் என்று உரைத்து எங்கும்

கெடுதலின்றி நந் தாய்த் திருநாட்டின்

கிளர்ச்சி தன்னை வளர்ச்சி செய்கின்றான்;

'சுடுதலும் குளிரும் உயிர்க் (கு) இல்லை;

சோர்வு - வீழ்ச்சிகள் தொண்டருக் (கு) இல்லை;

எடுமினோ அறப் போரினை' என்றான்

எங்கோ மேதகம் ஏந்திய காந்தி.”


என்றும் பாரதியார் மகிழ்ந்து பாடநின்ற மகாத்மா காந்தியடிக ளன்றோ!

 

தமிழா! உனது உள்ளத்தினின்றும் கிளர்ந்தெழும் உயரிய வீரம், கேவலம் புன்மை வாய்ந்த புரட்சி வழியில் உன்னைச் செலுத்தி விடாமல் - எத்தகைய கொடிய சோதனைகளிலும் மன உறுதி குலையாது. - சத்தியாக்கிரகநெறியினின்றும் வழுவாது - நாட்டு நலத்திற்கேற்ற சீரிய தொண்டாற்றுவதில் உன்னைப் பண்படுத்துவதாகுக.


“கத்தி - வில் - வாள் - கதைகள் – எறி

கற்கள் சூலாயுதங்கள்

பித்தர்கள் தங்களுக்கே-வெகு

பெட்புடை ஆயுதங்கள்;

சத்தியம் ஈகை அருள் – பக்தி

சான்ற மனப் பெரியோர்

நித்தியமான உயர்—ஆத்ம

நேர் படையே கொள்ளுவார்” -


எனும் பாரதியாரது மணிமொழிகள், உனது உள்ளத்தினின்றும் கிளர்ந்தெழும் வீரம், தூய அஹிம்சா வீரமாகவே சிறக்குமாறு செய்விப்பனவாக.

 

இந்நாட்டின் பிற்கால வீரர்களாக விளங்குவதற்கு உரிய தற்காலக் குழந்தைகள் வளர்க்கப்பட்டு வரும் முறையைக் கண்டு பாரதியார் பெரிதும் இரங்கி நின்றார். 'ட' கர பகரங்களி லிருந்து எழுத்துகளைக் கற்பிக்கத் தொடங்கும் வினோதமும்; முதல் வகுப்பிலேயே ஆங்கிலமொழிக்கு அடிமைப்படுத்தி, தாய்நாட்டையும் தாய் மொழியையும் பற்றிய எண்ணமே குழந்தைகளின் மனத்தில் தோன்றா தவாறு அவர்களை வளர்த்துவரும் விபரீதமும்; எதற்கெடுத்தாலும் 'பூச்சாண்டி' 'பூச்சாண்டி' என்று பயமுறுத்தி, அவர்களைப் பயங்கொள்ளிகளாக வளர்த்து வரும் இழிவும் பாரதியாரது உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்துவன ஆயின. அதன்பயனாக, ஆடி ஓடி விளையாடி மழலை பொழியும் குழந்தைகளுக்கு, பாரதியார் அறிவுறுத்தும் மணிமொழிகள் மிக மிகச் சிறந்து விளங்குகின்றன: -

“துன்பம் நெருங்கி வந்த போதும் – நாம்

சோர்ந்து விடலாகாது பாப்பா!

அன்பு மிகுந்த தெய்வம் உண்டு – துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!";

 

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதை

தொழுது படித்திடடி பாப்பா!

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் – அதைத்

தினமும் புகழ்த்திடடி பாப்பா!'';

 

"உயிர்களிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்

உண்மை என்று தான் அறிதல் வேணும்;

வயிரமுடைய நெஞ்சு வேணும்; - இது

வாழும் முறைமையடி பாப்பா!''


இம்மட்டோ! அறஞ்செய விரும்பு ' ஆறுவது சினம்' 'இயல்வது கரவேல் - என்பன பழைய ஆத்திச்சூடி வாக்கியங்கள். தேசாபிமானம் ஊறித் ததும்பும் உள்ளமுடைய பாரதியார் கண்ட நவீன ஆத்திச்சூடியிலே, அவற்றிற்குப் பதிலாகக் காட்சி யளிப்பவை 'அச்சம் தவிர் ' ; ஆண்மை மறவேல்'; 'இளைத்தல் இகழ்ச்சி - என்பன போன்ற வீரமொழிகள். குழந்தைப் பருவத்திலேயே நமது சிறுவர் சிறுமியரின் மனத்தில் இத்தகைய வீர மொழிகள் பதிய வைக்கப்படுமாயின், அவர்களது உடலோடு அறிவோடும் தேசாபிமானமும் மும் சேர்ந்து வளர்ந்து வருமன்றோ! தமிழா! உறங்கியது போதும்; விழித்தெழு! உனது குழந்தைகளை பாரதியார் அறிவுறுத்திய இத்தகைய நூதன முறையில் வளர்த்து வர உறுதி செய்துகொள்! இன்றேல், தங்கள் அடிமை முறையில் வளர்த்து வந்தது குறித்து, தற்காலக் குழந்தைகள் பிற்காலத்தில் உன்னைக் கொடுமையாகச் சபிக்கும். அச்சாபத்திற்கு ஆளாகாதே!
உரிமை வாழ்வின்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த இத்தமிழ்நாடு, இன்று அடிமை வாழ்வை அடைந்து வருந்த நேர்ந்ததன் காரணங்களுள் முக்கியமானது, தமிழர் பெண்மக்களை அடிமைகளாகப் பாவித்து நடத்திவந்ததேயாம். அம் மங்கைகள் சொரிந்த கண்ணீரே, உரிமை வாழ்வுக்கு வெந்நீராக இருந்து அதை ஒடுக்கி ஒழித்து விட்டது. ' என்றேனும் ஒரு நாள் தன் கணவன் தன்னை மீட்க வாரா தொழியான் என்னும் உறுதியான நம் பிக்கையினாலே, அசோக வனத்தில் எண்ணிறந்த துன்பங்களையும் சகித்து நின்ற சானகிப் பிராட்டியார், மாருதி வாயிலாக தன் கணவனுக்கு எத்தகைய செய்தியை அனுப்பினன்?


“ஆரம் தாழ் திருமார்பத்(கு) அமைந்த(து) ஓர்

தாரர் தான் அவனேனும், 'தயா' எனும்

ஈரந்தான் அகத்(து) இல்லை என்றாலும், தன்

வீரங் காத்தலை வேண்டு'” என்று வேண்டுவாய்!''


‘தனது நாயகனது வீரத்தன்மைக்கு இழுக்கு நேரப் பார்த்திருத்தல் கூடாது’ என்னும் எண்ணத்துடனேயே யன்றோ, அன்னை சானகி அத்தகைய செய்தியை அனுப்பலாயினள்! பிற்காலத் தமிழ் மாதர்களின் வீரத்தை என்னென்று வர்ணிப்பது? தோல் வற்றிய கிழவி ஒருத்தி, தன் மகன் பேர் முனையில் புறமுதுகிட்டு உயிருக்கு அஞ்சி ஓடி வந்தானென்று சிலர் கூறக்கேட்டு, அங்ஙனமாயின், அக்கோழைக்குப் பாலூட்டிய என் கொங்கைகளை அறுத்தெறிவேன்'- என்று வஞ்சினங் கூறி, போர்க்களம் போந்து தன் மகன் வீரமரணம் அடைந்ததறிந்து அவனைப் பெற்றெடுத்த காலத்தினும் பெருமகிழ்ச்சி பெற்றாளாம்! தன் கணவனைச் செருமுனையில் பறி கொடுத்த மங்கை ஒருத்தி, மறுநாளே போர்ப்பறைகேட்டு வீர உணர்ச்சி மிகுந்து, தனது ஒரே செல்வப் புதல்வனைச் சிங்காரித்து செருக்களத்திற்கு அனுப்பி வைத்தாளாம்! இத்தகைய பெண் தெய்வங்களின் வீரச் செயல்களை, சங்க நூல்களில் பரக்கக் காணலாம்.

 

‘பெண்மை’ என்னும் சொல்லுக்கு, ' கட்புல னாயதோர் அமைதித்தன்மை '- என்று பொருள் கண்டார் நச்சினார்க்கினியர். அமைதியின் -பொறுமையின் - வடிவான பெண் தெய்வங்களை, 'மாயை' என்றும் பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசம்' என்றும் பழிப்பதும், 'பெண்கள் கல்வியறிவைப் பெறுவராயின், அவர்கள் பல வழிகளிலும் விபரீத வினைகளில் தலைப்படுவர்' - என்று பேசித் திரிவதும் எவ்வளவு அறியாமை! காக்கும் காப்பு எவன் செய்யும்? - மகளிர் - நிறை காக்கும் காப்பே தலைஎன்பது நாயனார் பொன் மொழி. இக் கருத்தே,


“குலத்து மாதர்க்குக் கற்பு இயல்பாகுமாம்;

கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அந்

நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்:

நங்கை கூறும் வியப்புகள் கேட்டிரோ?''

 

''நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்,

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்".            - என்ற


மணிமொழிகளின் வாயிலாக, பெண்கல்விக்குத் தடை செய்வோர் எழுப்பும் ஐயங்கள் யாவும் அகன்றொழியுமாறு பாரதியாரால் செவ்விதில் விளக்கப்பட்டு இக்கருத்துக்கள் நவீன நாகரிகத்தின் பயனாக ஏற்பட்டவை யென்றும், இவை நமது முன்னோரின் கருத்துகளோடு, முரண்படுபவை யென்றும் பிதற்றித் தெரியும் வைதிக-சிரோமணிகள் பலர் உளர். அத்தகைய பித்தர்களுக்குத் தக்க வாயாப்பாக, நமது பாரதியார் அளித்துள்ள விடை இது: -


“புதுமைப் பெண் இவள் சொற்களும் செய்கையும்

பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றி,

சதுமறைப்படி மாந்தர் இருந்த நாள்

தன்னிலே பொதுவான வழக்கமாம்;

மதுரந் தே மொழி மங்கையர், உண்மை தேர்

மாதவப் பெரியோருடன் ஒப்புற்றே

முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய

முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்.”

ஆதலால், தமிழா! நீ மேற் கொள்வதற்கு உரிய அஹிம்சா வீரம் செழித்தோங்க வேண்டுமாயின், பெண் தெய்வங்களின் உதவியும் ஆசியும் உனக்கு வேண்டுவது அத்தியாவசியம். ' மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்து' வது உனது முதற் பெருங் கடமையா இருக்கட்டும். மூடக்கட்டுகள் யாவும் தகர்த்து, மானிடர் செய்கை அனைத்தையும் கடவுளுக்கு இனியனவாக இயற்றுவதிலே, பெண் தெய்வங்களின் துணை இன்றேல் வெற்றி பெற்றிட முடியாது என்பதை மறர்து விடாதே! ஆதலின், தமிழா! 'அன்பு வாழ்க' என்று அமைதியில் ஆடு; ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்து! நீ வெற்றி பெறுவது நிச்சயம்.

 

தமிழா! அன்பு நெறியில் விளையும் இன்பமே இன்பம்; உள்ளத்தினின்றும் கிளர்ந்தெழும் உனது வீரம், உனக்கு நேரும் துன்பங்களைக் கண்டு அவமதித்துச் சிரிக்கும் வீரச் சிரிப்பை விளைவிப்பதாக இருக்கட்டும். உனது உடலை மற்றவர் சிறைப்படுத்தினாலும். உனது ஆன்மாவைச் சிறைப்படுத்த எவராலும் முடியாது. உன்னைப் பயன் கருதாப் பணிக்குப் பண் படுத்தும் வண்ணம் இறைவன் விளைவிக்கும் சோதனைகளே துன்பங்கள் என்பதை உணர்ந்து, அவற்றை மகிழ்ச்சி யோடு வரவேற்று நிமிர்ந்து நில்! மூர்கக சக்தியைக்கண்டு மன உறுதி குலையாதே! இடையைச் சுற்றி கந்தலை அணிந்துள்ள நீயும், உனது உச்சக் குரலில் "தமிழன் எனது சகோதரன்! தமிழனே எனது நண்பன்! பாரத தேவியே எனது அன்னை! தமிழகமே எனது குழந்தைப் பருவத்துத் தொட்டில்; எனது காளைப் பருவத்துப் பூஞ்சோலை; நூய ஆசிரமம்; எனது முதுமைப் பருவத்துக் காசி"- என்று கர்வத்துடன் பறையறை. இதோ, இப்பாரதியாரது வீரமொழிகளை உள்ளத்தில் ஊறித்ததும்பும் தேசாபிமான உணர்ச்சியுடன் உச்சக்குரலில் பாடு: -


"தேவர்கள் வாழ்விடம்- திறல் உயர் முனிவர்

ஆவலோடு அடையும் அரும் புகழ் நாடு!

ஊன மொன்றறியா ஞான மெய்ப் பூமி!

வானவர் விழையும் மாட்சியார் தேசம்!

புன் புலால் யாக்கையைப் போற்றியே நம் நாட்(டு)

அன்பிலா திருப்போன் ஆரியன் அல்லன்!”

 

“எழை யென்றும் அடிமை யென்றும் எவனுமில்லை ஜாதியில்;

இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே!

பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை!

பறவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை!

 

''கிலி பிடித்த நெஞ்சினாய்! போ! போ! போ!

உறுதி கொண்ட நெஞ்சினாய்! வா! வா! வா!

நன்று கூறில் அஞ்சுவாய்! போ! போ! போ!

தெளிவு பெற்ற மதியினாய்! வா! வா! வா!

ஜாதி நூறு சொல்லுவாய்! போ! போ! போ!

எளிமை கண்டு இரங்குவாய்! வா! வா! வா!

ஒலி இழந்த குரலினாய்! போ! போ! போ!

களி படைத்த மொழியினாய்! வா! வா! வா!''

“ஜயமுண்டு பயமில்லை மனமே! — இந்த

ஜன்மத்திலே விடுதலை உண்டு; நிலை உண்டு:

ஜயமுண்டு பயமில்லை மனமே!''

 

தமிழா! உனது உள்ளத்திலே வீர உணர்ச்சியைப் பெருக்கும் இவ் வீரமொழிகளை, உனது உச்சக் குரலில் உற்சாகத்துடன் பாடு. இம் மணிமொழிகளின் பொருட் சுவையை நன்குணர்ந்து - இவற்றில் உள்ளம் கலந்து --உயிர் கலந்து - உணர்ச்சி கலந்து உச்சக்குரலில் பாடு. ' பாடிய வாய் தேன் ஊறும் பாரதியார் பாடல்களை, உள்ளத்தினின்றும் கிளர்ந்தெழும் உயரியர உணர்ச்சியுடன் பாடுவதே பேரின்பம்! வாழ்க பாரதீயம்!

 

ஆனந்த போதினி – 1936 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment