Thursday, August 27, 2020

 

எது தமிழ்த் தொண்டு?

(S. நாராயணன்.)

ஒரு மொழியைப் பிழையற அழகுபடப் பேசுவதற்கும், எழுதுவதற்கும், இலக்கணம் இன்றியமையாத தொரு கருவியாம். அத்தகைய பெருமை வாய்ந்த இலக்கணத்தை உணர்ந்தாலன்றி அம் மொழியைப் பிழையறப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் எங்ஙனமியலும்? அவ்விதம் ஒருவர் இலக்கணத்தை ஐயர் திரிபறக் கற்றுணர்ந்தா லல்லாமல் எழுதவும் பேசவும் புகின், அஃது,

“பொய்படு மொன்றோ புணை பூணுங் கையறியாப்

பேதை வினை மேற் கொளின்”


என்பது போன்றாகிவிடும். தானே நன்குணராத ஒரு பொருளை ஏனையோருக்கு உணர்த்த முயலுதல் ஆலமரத்தினை அறியாத அறிவிலி ஒருவன் அது புளியமரத்தினைப் போன்று வேலியிற் படர்ந்திருக்கு மென்று, கூறிய கூற்றினைப் போன்று எள்ளி நகையாடற் குரித்தாகும். இவற்றை யெல்லாம் எதற்காகக் கூறப்புகுந்தோ மெனின் சிலர் (கற்றறிந்த பெரியவர்களாயிருந்துங் கூட) நந்தம் அமிழ்தினு மினிய தீந்தமிழை சீர் திருத்தத் தலைப் பட்டிருக்கின்றனர். அன்னவர்கட்குத் தமிழின் வளர்ச்சியைப் பற்றி ஒரு சிறிதுங் கவலை கிடையாது. ஆனால் தமிழுக்கே இல்லாத புது முறைகளைக் கொண்டுவந்து புகுத்துவதில் அவர்கள் பெரிதும் பங்கெடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் சீர்திருத்த மெனும் போர்வையில் மறைந்து கொண்டு தமிழ் மொழியைக் கொலை செய்து வருவது நந்தமிழ் மொழியின் தவக்குறையே யாகும். அத்தகைய மாபெருங் கைங்கரியம் செய்துவரும் பெரியாருள் திரு. டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும் ஒருவர்.

இவர்கள் செய்யுட்களைத் திருத்தி அமைத்து வருவது மிகவும் வருந்தத் தக்கதேயாகும். இலக்கண விதிகட்குப் புறம்பான விதிகளை யெல்லாம் தங்கு தடையின்றிக் கையாண்டு வருவது விந்தையிலும் விந்தையே. அன்னவர் அவ் விதிகளை யெல்லாம் எங்கு எதிரிலிருந்து கற்றனரோ யாம் அறியோம். ஒருகால் கடல் கோளான் மூழ்கிய அகத்தியத்தி லிருந்து கற்றறிந்திருக்கலாம். (யார் கண்டார்கள்?) பேரறிவினராகிய அன்னவர் இத்தகைய குற்றங்கள் இழைப்பது தமிழறிஞர் யாவராலும் மன்னிக்க முடியாததொரு
குற்றமாகும். அம் மாதிரிப் பிழைகள் அநேக இடங்களில் ஏற்பட் டிருக்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டைச் சான்றாக ஈண்டு தருகிறோம்.

“ஜனவரி” மாசம் 1-ந் தேதி வெளிவந்த 'கல்கி'யில் கம்பர் தரும் காட்சியில்,

''நூற்கடல் அன்னவர் ஆசி துவன்றார்

மாற்கடல் அன்ன மனத்தவ ளோடும்

கார்க்கடல் போல்(க்)கருணைக்கடல் பண்டைப்

பாற்கடல் அன்னதொர் பள்ளி அணைர்தாள்"

 

மேல் எடுத்துக் காட்டிய செய்யுளில் போல்+கரு=போற்கரு எனப் புணராமல் போல்க்கரு வென எங்ஙனம் எந்த விதியாற் புணரப்பட்டதோ? இதை விதியாகக் கையாண்ட திரு. முதலியார் அவர்கள் மேலே செய்யுளின் துவக்கத்தில் நூல்+கடல்=நூல்க்கடல் என்று புணர்த்தாது, நூற்கடல் என்று புணர்த்தியது யாது கருதியோ? யாம் அறியோம்.

“வேட்டவர் வேட்டபின் வேந்தனும் மேல்நாள் (க்)

கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்

ஈட்டிய ஒண்பொருள் உள்ளன எல்லாம்

வேட்டனர் வேட்டவை வேண்டள (வு) ஈந்தான்"

 

இச் செய்யுளில் நாள்+கூட்டிய=நாட் கூட்டிய வெனப்புணராமல் நாள்க் கூட்டிய வெனப் புணர்த்திருப்பதும் இலக்கண விரிக்குப் புறம்பானதென்று யாவரும் நன்கு அறியத்தக்கதே! ஒரு சமயம் மெய்யீற்றுப் புணர்ச்சி விதி தெரியாவிடின் போல்+கரு=போல்கரு வென்றும் நாள்+கூட்டிய= நாள் கூட்டிய வென்று பிரித்துப் போட்டிருக்க வேண்டும். அப்படிக் கல்
லாது ஈரொற்றாய் வராத லகார ளகாரம் ஈரொற்றாய் வந்தது எவ்விதியால்? இவ்விதம் பற்பல இடங்களில் இத்தகைய குற்றம் திரும்பத் திரும்ப இழைக்கப்பட்டு வருவதைப் பார்த்தால், நம் தமிழ் மொழிக்கே சிதைவு ஏற்பட்டுவிடும் போற் சோற்றுகின்றது. இத்தகைய பிழைகள் தமிழை உயிருக்குயிராகப் போற்றி வளர்க்கப் பெரிதும் பாடுபடும் திரு. டி. கே. சி, முதலியார் அவர்களாலேயே இழைக்கப்பட்டு வருகின்றன வென்றால் யாரை நொந்து தான் யாது பயன்? அன்னவரை அவரது அபிமானிகள் பலரும் பின் பற்றினால் தமிழ் மொழியின் கதி என்னவாகும் என்று கருதுதற்கே இயலவில்லை. இதுவா தமிழுக்குச் செய்து வரும் தொண்டு?

மேலும் சிறிதளவு படித்தவர்கள் மனத்திலும் இம் மாதிரிப் பிழைகள் பெரும் புயலை உண்டாக்கி விடுகின்றன. கடைசியில் அவர்கள் எது சரியான புணர்ச்சி எனத் தெரியாது திண்டாடித் திகைக்கின்றார்கள். இவ்விதம் லகார ளகாரம் ஈரொற்றாய் வருவதற்கு திரு. முதலியார் அவர்கள் விதி காட்டி விட்டால் யாம் உள்ளளவும் அவர்களுக்கு நன்றி செய்யக் கடமைப் பட்டுள்ளோம். நிற்க, பற்பல இடங்களில் தமிழ் மொழியை வளர்ப்பதற்குப் பல சங்கங்கள் நிறுவி போறிஞர்களைச் சங்கத் தலைவர்களாக நியமித்து தமிழை வளர்த்து வரல் வேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு இடையூராகச் சில விதிகளைக் கையாண்டு வருபவர்களைக் கண்டனம் செய்து வளர்த்து வருவதே தமிழ்த் தொண்டாகும். எனவே, அறிஞர்கள் ஒவ்வொருவரும் தமிழை உயர் நிலை படையும்படி முயற்சி செய்வார்க மென
நினைக்கின்றேன்.

ஆனந்த போதினி – 1942 ௵ - மே ௴

 



 

No comments:

Post a Comment