Thursday, August 27, 2020

 

எது தாய்மொழி?

(வித்துவான் - எம். சாம்பசிவம்.)

மொழிப்போரும், மொழியில் - இசைப்போரும், மொழியைப் பேசுவதிலும் - எழுதுவதிலும் உள்ள முறைப்போரும் மலிந்துபோன இந்தக் காலத்திலே, முதலில், 'எது, தாய்மொழி?' என்று, அலசிப்பார்த்து விடுவதும் அவசியமல்லவா? ஆனால், இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன?' என்பதுபோல், 'தாய்மொழி செழித்தாலென்ன? அன்னிய மொழிக்கேதான் நாம் ஆக்கங் கொடுத்தாலென்ன? இரண்டும் ஒன்றுதான்.' என்ற வெட்கங் கெட்ட கொள்கை யுடையார்க்கு இந்த ஆராய்ச்சி அவசியமில்லை.

தாய் - யார்? பெற்றவளா? வளர்த்தவளா? பெற்றவளுந் தாய்தான்; வளர்த்தவளுந் தாய் தான்! அடைமொழி யில்லாமல், 'தாய்' என்று நாம் கூறும்போது அச் சொல், இரு தாய்மார்களையுந் தடையில்லாமல் குறிக்கின்றது. இன்ன தாய் என்று நாம் பிரித்துக்கூற விரும்பும்போது 'நற்றாய்' அல்லது 'பெற்ற தாய்' என்றும், 'செவிலித்தாய்' அல்லது வளர்ப்புத் தாய்' என்றும் கூறுகிறோம்.

இது, 'நாட்டு வழக்கம்' என்று தள்ளி விடுவதற்கில்லை; தாழ்ந்த மக்கள் முதற்கொண்டு, உயர்ந்த மக்கள் வரை – இந்த உலகின் எம் மூலையிலும், எம்மொழியிலும் - இன்னுங் கேட்டால் - மிருகங்களுக் குள்ளும் உள்ள ஓர் பொதுநிலை, இது. ஆகவே, இந்த வகையில் ‘சொந்தத் தாய்', ‘மாற்றாந் தாய்’ மார்களும் தாய்ப்பகு யினரே யாகிறார்கள்.

மற்றொரு முக்கிய விஷயம். நாலாவது யுகமாகிய இந்தக் கலியுகத்திலே, 'தாய்' சம்பந்தமாக விஷயந் தெரிந்தவர்கள் எழுத ஆரம்பிப்பார்களே யானால், எத்தனைப் பிரிவாகப் பிரித்து எப்படி எப்படி எழுதுவார்களோ? அதை வரையறுத்துக் கூற முடியாது.
ஏனெனில், 'தாய்' என்று உரிமை கொள்ள அத்தனைச் சுலப வழிகள், இருக்கின்றன - இருந்து கையாளப்பட்டு வருகின்றன இக்கலியுகத்திலே!

அதில் ஒன்று கூற விரும்புகிறேன். தற்போது இம் முழு உலகத் துள்ளும் எது -  இல்லை – எது – இல்லை - எவை நாகரிகத்தில் சிறந்தனவாகக் கருதப்படுகின்றனவோ, அந்த நாகரிக நாடுகள் - தேசங்கள் சிலவற்றுள்ளும், பெற்ற நற்றாய்களுக்குக் குழந்தைகளிடத்தில் அதிக அன்பு இருக்கின்ற காரணத்தினாலோ, வேறு எந்த உயர்ந்த நோக்கங்களினாலோ குழந்தை பிறந்த மறு நிமிஷத்திலேயே அக் குழந்தையை வேறு ஒருத்தியிடம் கொடுத்டுஹ் வளர்க்கச் செய்கிறார்கள். பாவம்! அக் குழந்தைகளும் செவிலித் தாயையே, 'நற்றாய்' எனக் கருதிக் கபடம் நீங்கி, உயிர் வாழ்கின்றன. அந்த வகையில் நோக்கின் உண்மையாகப் பெற்ற தாயினும், வளர்ப்புத்தாயே சிறந்தவள் ஆகின்றாள். நற்றாய், அக் குழந்தைகளை அவ்வளவு முக்கியமாகக் கருதாததால் அவள், செவிலித் தாயினும் தாழ்ந்தவள் ஆகின்றாள்.

இதனால், குழந்தை வளம் பெறவும், உயிர் வாழவும் எவளொ
பாருத்தி செவிலியா யமைந்து, ஆவன புரிகிறாளோ, அவளே, அக் குழந்தைக்குப் ‘பிரதான தாய்' எனின், அது மிகையாமோ? அதனால், அக் குழந்தை வளர்ந்து. வாழ்க்கையைத் தொடங்கும்போது அது, தன் நற்றாயினும் தன் வாழ்நாளில் பிரதானமாயிருந்த வளர்ப்புத்தாயிடம் அதிகம் அன்பையும், கடமையையையும் செலுத்துதல் எங்ஙனம் தவறாகும்?

அதேபோல், ஒரு தமிழனுக்குத் தாய்மொழி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, வங்காளம் முதலிய எல்லாமு மாகலாம்; ஆனால், தமிழைப்போல ஒரு தமிழனுக்கு மற்ற மொழிகள், அம்மொழி வழங்கும் நாடாகிய பெண்கள், வளர்ப்புத்தாயாய்
அமைந்து, அவர்களால் கொஞ்சிக் குலாவப்பட்டிருக்க வேண்டும்! இல்லையேல், தமிழனுக்குத் தாய்மொழி, தமிழ் ஒன்றேதான்.

அதே போல், ஓர் தெலுங்கனுக்குத் தெலுங்கு, தாய்மொழி. அந்தத் தெலுங்கன், தன் தாயாகிய ஆந்திரத்தை விட்டு, தமிழ் நாட்டில் வந்து, தமிழ்நாட்டைச் செவிலித்தாய் போல் கொண்டு, தன் செவிலித் தாயால் இளமையிலிருந்தே கொஞ்சிக் குலாவிச் சீராட்டிப் பாலூட்டப் பெற்று, அவள் மொழியையும் மழலைச் சொற்களால் பேசிக் கற்று வளர்ந்தவனாயின், அவன் தாய் மொழி, தமிழும் ஆம்!

ஆகவே, ஒருவன் தன் தாய் நாட்டை விட்டு, அன்னிய நாடொன்றிற்
நிலைத்து, குழந்தை குட்டிகளோடு வேரூன்றி விடுவானே யானால், அவனுக் கில்லாவிட்டாலும், அவன் வழித்தோன்றல்களுக்குக் கட்டாயம் அந்நாட்டு மொழி வளர்ப்புத் தாய் மொழியாகி விடுகிறது. ஆனால், வளர்ப்புத்தாய் மொழியை வெறுப்பவர்களும் உண்டு; அந்த நன்றி கொன்ற நாய்கள் - இல்லை; தவறிவந்து விட்டது; அதற்காக வருந்துகிறேன் - அவர்கள், நாடோடி (நாடு + ஓடி) கள்; நாம் ஒன்றுஞ் செய்வதற்கில்லை. எனினும், வளர்க்குந் தாய் மொழியை உயர் வாகக் கருதுபவர்களும் இருக்கிறார்க ளல்லவா?

எனவே, இந்த முறையில் இன்று தமிழ் நாட்டின் பேரெல்லைக் குட்பட்ட யாவருக்கும் தாய்மொழி தமிழ் ஒன்றே என்பதில் ஐயமில்லை.
ஏனெனில், இவர்கள் யாவரும் இன்று தமிழ்த் தாயின் அமிழ்தூட்டும் கரங்களிலே கிடந்து
கொஞ்சிக் குலாவி மகிழுகிறார்கள். இவர்களின் பேச்சு, தமிழ்த்தாய் கற்றுக் கொடுத்தது! இவர்களின் வளப்பம், தமிழ்த்தாயின் கைத்திறம்! இவர்கள், வைது கொள்வதுகூட தமிழிலே தான்!

அதானால், எந்தத் தாய் நம்மைப் பெற்றாளோ, அந்தத் தாய் பேசும் மொழி, 'தாய் மொழி' என்பது தவறு! எந்தத் தாய், நம்மைப் பெற்றது முதற்கொண்டு நம்மிடம் நெருங்கவில்லையோ - பேச வில்லையோ - பேசிக் கற்றுக் கொடுக்க வில்லையோ, கொஞ்சிக் குலாவி, விளையாட வில்லையோ அந்தத் தாய் மொழியைத் தாய்மொழி என்பதினும், நாம் உதித்தது முதல், நம்மை இரு கரங்களாலும் ஏந்தி வளர்த்துக் கொஞ்சிக் குலாவிய தாயின் மொழியே "தாய் மொழி'' என்பது பொருளுடைய தாகும் என்பது என் கருத்து.

அதனால், தமிழ் நாட்டிலுள்ள மற்ற நாட்டினர்கள் (இன்று
இருந்து நாளை மறுதினம் ஓடி விடுபவர்களைத் தவிர - அதாவது, இங்கு வந்து பரம்பரையாக நிலைத்து விட்டவர்கள்) எல்லோரும், தமிழைத் தாய் மொழியாக ஓம்புவதில் பெருமை இருக்கிறது.

தமிழ் நாட்டிலிருந்து கொண்டே, தமிழ் மொழிக்கும், தமிழிசைக்கும், தமிழ் வளர்ச்சிக்கும்'' முட்டுக்கட்டை யான; செயல் புரியும் கன்னெஞ்சர்கள், தன் தாயையும், தாயின் சீர்த்தியையும், தாயின் நலனையும் அழிக்கும் மாபாதகர்களாகின்றார்கள் என்பது
ஒரு தலை.

தாயை மகன் வெட்டிச் சாய்ப்பது போல், தமிழருள்ளேயே ஒரு சிலர், தமிழை வெறுத்துப் புறங்கூறி, அழிவு செய்கிறார்களே என்றால், அதற்குக் காரணம்; சுத்தத் தமிழ் இரத்தம் இல்லாமையும், போதிய ஆராய்ச்சி இல்லாமையும், அன்னிய மொழியில் கொண்ட போலி மோகமுந் தாமென்று நான் கூறுவேன். ஆதலின், உணர்ச்சி உள்ளவர்களுக்கே உரியது, இத் தாய் மொழிப் பற்று! நிற்க.

முடிவாக: ஒவ்வொரு மனிதனும், தாய் மொழி இன்னதென்று தனித்திருந்து ஆராய்ந்து கொள்வானானால், அவன், எண்ணுவதும் உண்மையாகத் தாய் மொழியிலேயே எண்ணுவான் – எழுதுவான் – பேசுவான் - பாடுவான்! இல்லையேல், குறுகிய மனப்பான்மையோடு தப்பான கொள்கைகளுக்கும், முரண்பாடுகளுக்கும் இருப்பிடமாவான். அதனால் அவன், பெரும்பாலாரால் புறக்கணிக்கப் படுவதோடு, உள்ள அறிவையும் இழந்தவனாகின்றான். அதிகம் ஏன் இவற்றை நிரூபிக்கும் எதிர் காலமும், நெருங்கி விட்டதென்றே சொல்ல வேண்டும். அப்போது எல்லோரும் உணர்ந்து கொள்வது கடினம் இல்லை யல்லவா?

ஆனந்த போதினி – 1943 ௵ - மார்ச்சு ௴

 



 

No comments:

Post a Comment