Thursday, August 27, 2020

 

எதை எரிப்பது?

(வீ. செல்லராஜன்)

பழங்காலத் தமிழர்களிடையே வடமொழி விற்பன்னர்களும் இருந்தார்கள். மதவழிபாட்டின் காரணமாக அவர்கள் காசிபோன்ற தூர க்ஷேத்திரங்களுக்கும் சென்றார்கள். ஆகவே, காசியிலும், கங்காநதிப் பிரதேசத்திலும் அவர்கள் திருவாசகம், பெரியபுராணம், ஆழ்வார் பாடல்கள் முதலியவற்றைப் பாடி வடநாட்டினருக் கிடையே பாராயணம் செய்தனர். இத்தமிழ்ப் பாடல்களின் அரிய கருத்துக்களையும் உள்ளத்தின் ஒளி ரூபமான கீதரசத்தையும் வடநாட்டுச் சைதன்யர்கள் அநுபவத்தோடு மட்டுமின்றி, அவற்றைத் தங்கள் பாஷையிலும் தழுவி எழுதிப் பரப்பினர். வடமொழியிலே எழுதப்பட்ட அக் கவிதைகளைப்
படித்து அநுபவித்ததின் காரணமாகவே, கவி. ரவீந்திரநாத தாகூருக்கு, உலகப் பிரசித்தி பெற்ற 'கீதாஞ்சலி" எழுத முடிந்தது. “கீதாஞ்சலி" யின் அடிப்படை நம் தமிழ்
ஆழ்வாராதிகள் நாயன்மார்களின் இதயவொலியே என்றால் அது மிகையாகாது. ‘கீதாஞ்சலி'யின் ஒவ்வொரு பாடலுக்கும் - அதன் நேர்மையான - அல்லது அதனிலும் இனிதான - பாட்டுக்களை திவ்யப்பிரபந்த சாரத்திலிருந்தும் திருவாசகத்திலிருந்தும் எடுத்துக் காண்பிக்கலாம். அவ்வாறு ஆரம்பித்தால் மிகவும் நீண்டுவிடும். ஆனால், எதற்காகச் சொல்ல வந்தே னென்றால் - இவ் விஷயத்தை ஒரு வங்காளியிடம் சொல்லிவிட்டு, என் உயிரை மறுபடியும் தமிழ் நாட்டுக்குக் கொண்டுவர முடியாது. அவ்வளவு ஆவேசம் அவனுக்கு வரும்: தன் தாய்பாஷை மேலும், தன் தாய்பாஷைக் கவிகளின் மேலும் அவனுக்கு அவ்வளவு ஆர்வம்! அதனால் உண்மை மறுக்கிறானே என்று குற்றம் சொல்லுவதற்குமில்லை. தன் பாஷையின் மேல் உள்ள அளவுகடந்த பற்றுதலின் காரணந்தான் அது. தாகூர் தன் ‘கீதாஞ்சலி'யை ஆங்கிலத்தில் மட்டும் எழுதியிருந்தால் அவன் அதைப்பற்றி அக்கரை கொண்டிருக்க முடியாது. அதை முதன் முதலிலே வங்காளியிலேயே எழுதினார். ஆகவே அது ஒவ்வொரு வங்காளியின் இதயத்தோடு சேர்ந்து கலந்து கொண்டது. இனிப் பிரிக்க முடியுமா என்ன?

கடந்த கொஞ்ச காலத்திற்குள் - விழித்திருக்கும்போதே, வங்காளம் இவ்வளவு தூரம் விருத்தியடைந்ததின் காரணம் - பிறநாட்டு இலக்கியங்களை தங்கள் தாய்ப்பாஷையிலே அள்ளிப் பொதித்துக் கொண்டனர். பக்கிம்சந்திர சட்டர்ஜியின் நடைமுழுதும் மேல்நாட்டு நாவலாசிரியர்களின் நடையை ஒத்து விளங்குகின்றது. ஆனால் அவர் எழுதும் நாவல்களிலே மேல் நாட்டின் குறிப்பு ஒரு இம்மியளவும் காணமுடியாது. இறுதியில் அது வங்காளத்தின் பரம்பரைப் பொக்கிஷமாகவே திகழ்கின்றது. இந்த நுட்பத்தை தற்காலத் தமிழர்களாகிய நாம் ஆர்வத்தோடு அனுஷ்டிக்காவிட்டாலும் பழந்தமிழர்கள் சும்மா இருக்கவில்லை.

சரித்திர சம்பந்தமான அநேக் படையெடுப்பின் காரணமாகவும், மனிதனின் நாடோடிச் சுபாவத்தாலும் வடநாட்டினரான ஆரியர்களும், தென் நாட்டினரான திராவிடர்களும் ஒன்று கலக்க நேரிட்டது. அவர்கள் ஒன்று கலக்கும்போது, அவரவர்களின்
காவியங்களும் கலக்கத்தான் செய்யும். கலப்பது தான் எல்லோராலும் விரும்பத்தக்கது.
எங்கெங்கு தமிழன் இருக்கின்றானோ அங்கெல்லாம் நம் தமிழ்க் காவியங்களும் ஒலிக்கவேண்டும் என்று விரும்புவது இயற்கை. இவ்வியற்கை எல்லோருக்கும் பொது
வானது. ஷேக்ஸ்பியரைப்பற்றியும் மில்டனைப் பற்றியும் நாம் படிப்பது ஆங்கிலேயரின் அரசாட்சியே என்பது குற்றமன்று. இதே மாதிரிக் கலப்பு முன்னே ஏற்பட்டது. வால்மீகி என்ற ஒரு வடமொழி விற்பன்னன் “இராமாயணம்” என்ற ஒரு இதிகாசத்தையும் வியாசன் மஹா பாரதத்தையும் சிருஷ்டித்தனர். பின் காலத்தில் அக்கதைகள் தென்னாட்டினிடையே பரவலாயிற்று. அப்போது, வடமொழியில் தேர்ச்சிபெற்ற சிற்சிலர், அந்த இதிகாசங்களின் வடமொழிச் சுலோகங்களைப் பாடி, அதன் பாராயணமாக தமிழிலே தமிழர்களுக்கு எடுத்தோதினர். இவ்வித பாராயணம் அதிகரித்து, அதற்குத் தமிழ் நாட்டிலே செல்வாக்குண்டாகிக் கொண்டிருப்பதைக் கம்பன் கண்டான். அதோடு சோழ மன்னனும் இக்குறையை நிவர்த்தித்து, ராமாயணத்தை தமிழிலே எடுத்தெழுத வேண்டும் என்று கம்பனை வேண்டிக் கொண்டான் என்றே சொல்லப்படுகிறது.

கம்பன் “இராமாவதாரம்” அதுவே இப்பொழுது கம்பராமாயணமாகத் திகழுகிறது. கம்பன் சாதாரண "மொழி பெயர்ப்பாளன்” அன்று. கங்கைக் கரையிலே வாழ்ந்து கொண்டிருந்த இராமனையும் சீதை, லக்ஷ்மணன் முதலியவர்களையும், அவன் வால்மீகி இராமாயணத்திலே கண்டான். அவர்களை, அந்தரமாகத் தூக்கிக் காவிரிக் கரைக்கு இட்டு வந்தான். "தமிழர் ஆபரணங்களையும், தமிழர் நடையுடைகளையும் அவர்களுக்குத் தந்தான்’ என்று கூறுவதைக் காட்டிலும், அவர்களைத் தீயிலிட்டுப் பொசுக்கிவிட்டு - சுத்தத் தமிழர்களாகவே - தன் காவியத்தில் சிருஷ்டித்தான். ஏன், கம்பன் தமிழ் வீரர்களையும், தமிழ்க் கற்பரசிகளையும், தமிழ்த் தடியர்களையுந் தானே அவன் காண முடியும்? அயோத்திநாட்டை அவன் வருணித்தான் என்று கூறப்படுகிறது. வருணித்தான் - அயோத்தியென்று பெயர்மட்டும் சூட்டிக்கொண்டு; அவ்வளவும் காவிரி நாட்டையே வருணித்தான். அதைப் பகிரங்கமாகவே ஒரு இடத்தில் “காவிரிநாடன்ன
அயோத்தி'' என்றே கூறிவிடுகின்றான். உபமேயத்தைக் காட்டிலும் உபமானமே எப்போதும் பெரிதாக இருக்க வேண்டியது இயல்பு. "மலைபோன்ற தோள்" என்றால் உண்மையில் தோளைக்காட்டிலும் மலை பெரிதாகவே இருக்கவேண்டும். அதே போல், ‘காவிரி நாடன்ன அயோத்தி' என்றால் அயோத்தியைக் காட்டிலும், காவிரிநாடு உயர்வான தாகவே இருத்தல் வேண்டும். விஷ்ணுவே அயோத்தியில் அவதாரம் செய்திருந்தாலும் கம்பன் தன் தமிழ்நாட்டைக் காட்டிக்கொடுக்க இசையவில்லை. எல்லாம் தமிழ் மயமாகச் செய்தான். அதன் காரணமாக வால்மீகி ராமாயணத்திற்கும் கம்ப ராமாயணத்திற்கும் மிகுந்த வேற்றுமை காணப்படுகிறது. ''கபட சந்யாசியின் உருவத்தில் வந்த இராவணன் சீதையைக் கட்டித் தழுவித் தூக்கிச் சென்றான்” வால்மீகி எழுதினான். இது ஆரிய நாட்டிற்குப் பொருந்தும் என்னலாம். “ஒரு இளம் பெண்ணைத் தெருவிற்போகும் ஒருவன்
கண்டு இச்சித்தான்'' என்றால் அது அப்பெண்ணின் கற்பிற்கே பாதகம் என்று கற்பை அவ்வளவு உயர்வாகக் கருதும் தமிழ் நாட்டிலே பிறந்து வளர்ந்த கம்பன் இம்மாதிரிக் கட்டங்களைக் கண்டு சும்மா விட்டிருக்க முடியாது. அதை அப்படியே மாற்றி விட்டான். பர்ணகராலை யோடு பெயர்த்தெடுத்து விமானத்திலே வைத்து இராவணன் சீதையைக் கொண்டு சென்றான் என்றே மாற்றிவிட்டான். இதுபோல் எத்தனையோ மாறுதல்கள்! இராமன் விஷ்ணுவின் அவதாரமே என்றுமட்டும் கம்பன் அன்பு செலுத்தி யிருக்கமுடியாது. இராமனைச் சுத்தத் தமிழனுக மாற்றி விட்டதிலே கம்பனுக்கு அளவு கடந்த ஆனந்தம். தமிழ் இராமன் என்றபோது அவனைக் கம்பன் நேசிக்காதிருக்கவும் முடியாது.
இவ்வாறு தமிழ் நாட்டின் வருணனைகளும் தமிழர் நாகரிகம் பழக்க வழக்கங்கள் முதலியவற்றை, இனிய, சுத்தத் தமிழிலே- கடைந்தெடுத்த ஒரு தமிழ்க் கவிஞன், -தமிழ்நாட்டிலே – தமிழரசன் அவையிலே - தமிழ்ப் புலவர்கள் பலர்கள் முன்னிலையில் அரங்கேற்றப் பெற்று - தமிழர்கள் எல்லோரும் பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாத்துவரும் "கம்பராமாயணத்தை”, வடமொழிப் பெயர்ச் சொற்களை மட்டும் கையாண்டிருக்கும் ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு ஒரு சிலர் “இதை எரித்துச் சாம்பலாக்க் வேண்டும்'' என்று கிளம்பினால் - இதைக் கண்டு நாம் சிரிப்பதா, அழுவதா என்றே புரியவில்லை.

தன் சொந்தக் கற்பனா சக்தியினாலும் கவிதர சக்தியினாலும் கம்பன் வால்மீகியின் இராமாயணம் போன்ற எத்தனையோ வேறு வேறு கதைகளைத் தமிழ்ப் பெயர்களோடு சிருஷ்டிக்க முடியும். அது அவனுக்கு மிகவும் எளிதான காரியமே! ஆனால் தன் கற்பனைக்கு அடி கோலியாக வால்மீகியின் இராமாயணத்தை ஏன் கையாண்டான்? காரணமில்லாமலில்லை. அவ்வமயம் இராம பக்தியும், வைஷ்ணவர்களின் செல்வாக்கும் அதிகமாகத் தமிழ் நாட்டிலே காணப்பட்டது. 'இராமன்' என்ற பெயரை மட்டும் வைத்துக்கொண்டு கம்பன் தமிழர் நாகரீகத்தைப் பரப்பினான். இது தவிர்த்து
வேறு என்ன செய்ய முடியும்? ஆகவே கம்பனின் கவியமுதைப் பருகுவதற்கே - தமிழரின் புண்ணியமாகவே - அதற்கு அடிகோலியாக வால்மீகி இராமாயணம் செய்தான் என்றே
கூறவேண்டும். கம்பனைத் தூண்டி விட்டது வால்மீகி இராமாயணந்தானே! இதைவிட இன்னும் அழகாக ஒருவர் சொல்லுகிறார். “இராமன் உலகத்திலே அதர்மத்தைக் குலைத்துத் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக அவதாரம் செய்தான் என்பது சுத்தப் பொய். அவதாரம் செய்ததின் பயனாகத் தமிழிலே ஒரு இதிகாசம் ஏற்படட்டும். அதைத் தமிழர்கள் வாசித்து இன்புறட்டும்'' என்பதற்காகத் திருமால் இராமாவதாரம் செய்தான் என்பதும் சரியில்லை. பின் எதற்காக அவதரித்தான்? கம்பனின் கவியமுதத்தை கேட்டுக் களிக்கவேண்டும் என்ற ஆர்வத்தினாலேயே திருமால் அவதரித்தான் என்று தேசிக விநாயகம் பிள்ளை திட்டமாகக் கூறுகிறார்.

"கம்பன் கவியின் களியமுதம் உண்டிடமால்

அம்புவியில் வந்திங் கவதாரம் செய்தான்.''

 

இவ்வித பெருமை வாய்ந்த கம்பராமாயணத்தை எரித்துவிட எண்ணும் ஒரு சில வாதிகளே! ஏன் – எங்கள் உயிரையும் நாகரீகத்தையுமே எரித்து விடுங்களேன்! அட தமிழா!

ஆனந்த போதினி – 1943 ௵ - மார்ச்சு ௴

 



No comments:

Post a Comment