Friday, August 28, 2020

 

ஏழ்மையை நீக்குவதெப்படி

 

உலகில் (1) மன்னர் ஆட்சி, (2) மன்னர் - குடியாட்சி, (3) குடியாட்சி, (4) ஏழையாட்சி என நான்கு விதமான ஆட்சிகள் நடைபெறுகின்றன. அவற்றில் கடைசியாட்சி நிகழும் நாட்டில்தான் குடிகள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். மன்னர் ஆட்சி நிகழும் நாடுகளில் சிலவற்றில், தங்களுக்கு அனுகூலங்கள் ஏற்படாமையினால் குடிகள் அதிகம் வருந்துகிறார்கள். அவர்கள், தங்களுக்கு அனுகூலம் செய்யப்படும்படிக்கு வரி செலுத்துகிறார்கள். ஆனால் அத்தகைய சில நாட்டு மன்னர் அவ்வரிப்பணத்தில் பெரும்பகுதியைத் தம் குடும்பத்தினர் செலவுக்கு எடுத்துக் கொண்டு குடிகளுக்குத் தேவையான அனுகூலங்களைச் செய்யாமல் விட்டு விடுகிறார்கள். அவர்களின் நாட்டில் ஜனங்கள் செலுத்தும் வரிப்பணத்தில் எவ்வெவ்வகையில் எவ்வளவெவ்வளவு செலவழிக்கப்படுகிறதென்பதைத் தெரிவிக்கும்படி அம்மன்னரைக் கேட்பதற்கும், அப்பணத்தில் இவ்வளவு இவ்வளவு பணத்தைக் கொண்டு இன்னின்ன அனுகூலங்கள் தங்களுக்குச் செய்யப் படவேண்டுமென்று அம்மன்னரிடம் தெரிவிப்பதற்கும் குடிகளுக்கு அதிகாரமில்லை. இத்தகைய அதிகாரம் மேற்கூறிய மன்னர்களின் குடிகளுக்கு இருக்க வேண்டியது அவசியமாகும். அஃதில்லாதபடியால், ஷ மன்னர் ஆட்சி குடிகளுக்குச் சம்மதமான தாயில்லை.

 

மன்னர் குடியாட்சி என்பது - மன்னர் தேசத் தலைவராயிருக் ககுடிகள் ஆட்சி புரிதலாம். அத்தகைய ஆட்சி புரிபவர் பணக்காரர்களாவர். அவர்கள், தங்களுக்கும், மன்னருக்கும், இதர பணக்காரர்களுக்கும் மேன்மேலும் அனுகூலங்கள் ஏற்படும்படி செய்கிறார்கள்; நாட்டில் ஏழ்மையான நிலைமையிலுள்ள குடிகளுக்குத் தேவையான அனுகூலங்களைச் செய்வதில்லை. அதனால், ஏழைக்குடிகளுக்கு இத்தகைய ஆட்சி ஏற்றதாயில்லை.
 

குடியாட்சி என்பது குடிகள் ஆட்சி புரிதலாகும். இந்த ஆட்சி புரிபவர்களும் பணக்காரர்களாயிருக்கிற படியால் அவர்கள், தங்களுக்கும் மற்ற பணக்காரர்களுக்கும் அனுகூலம் செய்து கொண்டு ஏழைக் குடிகளுக்குத் தக்க அனுகூலங்கள் செய்யாமலிருந்து விடுகிறார்கள். இதுபற்றி இந்த ஆட்சியும் ஏழைக் குடிகளுக்குத் தக்கதாயில்லை.

 

ஏழை ஆட்சி என்பது ஏழ்மையான நிலைமையிலுள்ளவர்கள் மந்திரிகளாக ஏற்பட்டு நாட்டை ஆட்சி புரிதலாம். இத்தகைய ஆட்சி உலகில் ரஷ்யா தேசத்தில் தான் நடைபெறுகிறது. அத்தேசத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் குடியாட்சி நடைபெற்று வந்தது. அத்தகைய ஆட்சியை நடத்திய மன்னனும், பணக்காரர்களும் தங்களுக்கு அனுகூலம் தேடிக் கொண்டு ஏழைகளுக்குத் தக்க அனுகூலங்கள் செய்யாத படியால் ஏழைகள் அதிகமாக வருந்தலாயினர். அதனால் அவர்கள், தங்களில் திறமை வாய்ந்தவர் சிலர் மந்திரிகளாக ஏற்பட்டால் தான் தங்களுக்கு அனுகூலம் கிடைக்குமென்றும், சந்தோஷமான வாழ்க்கை ஏற்படுமென்றும் கருதலாயினர். அதன் மேல் அப்பதவியைப் பெற முயன்றனர். ஏழைகள் சுலபத்தில் மந்திரிகளாக ஏற்பட முடியாது. அவர்கள் மந்திரிகளாக ஏற்படுவதற்குப் பிரயத்தனஞ் செய்கையில் பணக்காரர்கள், அவர்கள் மந்திரிகளாக ஏற்படாதபடி அவர்களுக்குப் பல இடைஞ்சல்களையும், தொல்லைகளையும் விளைவிப்பது சகஜம்; ரஷ்யாவிலுள்ள ஏழைக் குடிகள் இதனை நன்கறிந்திருந்தனர். எனினும் அவர்களில் ஒருவராகிய லெனின் என்பார் தம்முடன் சிலரைச் சேர்த்துக் கொண்டு, தங்களைப் போன்ற ஏழைகள் மந்திரிகளாக ஏற்படுவதற்குத் தக்க ஏற்பாடுகள் செய்ய முற்பட்டார். அந்த ஏழைகளுக்குப் பல அனுகூலங்கள் ஏற்பட்டு அவர்கள் சந்தோஷமாக வாழவேண்டு மென்றும், ஏழைகள் மந்திரிகளாக ஏற்பட வேண்டு மென்றும் எண்ணங் கொண்டிருந்தவர்களையும், வாய்ப் பேச்சளவாகவும் எழுத்தளவாகவும் நின்றுவிடாமல் செய்கையால் ஒரு காரியத்தைச் சாதிக்கக் கூடியவர்களையும் தம்முடன் சேர்த்துக் கொண்டார். இக்கூட்டத்தாருக்கு கம்மியூனிஸ்ட் கட்சியார் என்று பெயர். லெனின், இக்கூட்டத்தாரைச் சேர்த்தபின், தங்கள் நாட்டை ஆட்சி செய்த பணக்காரர்கள் செய்த அநீதங்களையும், தங்கள் நாட்டில் முதலாளிகள் தொழிலாளர்களை வருத்தியதையும், மிராசுதார்கள் பண்ணை யாட்களை இம்சித்ததையும், ஏழைகளுக்கு ஏற்படவேண்டிய அனுகூலங்களையும், ஏழைகள் மந்திரிகளாக வேண்டிய அவசியத்தையும் நாட்டிலுள்ள ஏழைக் குடிகளுக்கு எடுத்துரைத்தனர். இக்குடிகள் உடனே தங்களுக்கிருந்த வறுமையைப் போக்கிக் கொள்வதற்கு மேற்கூறிய கட்சியாருடன் சேர்ந்து உழைத்ததல்லாமல் அவர்களுக்குப் பல வகைகளில் உதவி புரிந்து பக்கப் பலமாகவும் பேராதரவாகவுமிருந்தனர். இக்கட்சியாரில் முதன்மையாயிருந்தவர்கள், சிறந்த அறிவு வாய்ந்தவர்களாகவும், அஞ்சாநெஞ்சம் படைத்தவர்களாகவும், வீரம் பொருந்தியவர்கள்ளாகவுமிருந்தனர். அவர்கள் கூடித் தாங்கள் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி யோசித்தனர்; அங்ஙனம் யோசித்துத் தீவிர முயற்சி செய்து சென்ற 1917 - ம் ஆண்டுக் கடைசியில் பணக்கார மந்திரிகளை அப்புறப்படுத்தி மந்திரி பதவி பெற்றுத் தங்கள் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர். இவ்வாறு, பணக்கார மந்திரிகளை ஒழித்து, ஏழைகள் மந்திரிகளாக ஏற்படும்படி செய்து, நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் சந்தோஷமாக வாழுதற்கு வழி ஏற்படுத்திய லெனின் என்பார் நான்கு வருடங்களுக்கு முன் விண்ணுலக மேகினர். ரஷ்யாவிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் அன்று முதல் இன்று வரையில் அவரைத் தம் குலதெய்வமாகப் போற்றி வருகிறார்கள்.

 

மேற்கூறிய சோவியட் அரசாங்கத்தார் என்று கூறப்படும் கம்மியூனிஸ்ட் கட்சி மந்திரிகள் ஆட்சி புரிந்து வரும் இந்நாளில் ரஷ்யாக் குடிகளுக்கு ஏற்பட்டுள்ள அனுகூலங்கள் பலவாம். அந்நாட்டில் பணக்காரனென்றும் ஏழையென்றும் பேதம் பாராட்டப்படுவதில்லை; இரயிலில் முதல் வகுப்பென்றும், இரண்டாவது வகுப்பென்றும், மூன்றாவது வகுப்பென்றும் வண்டிகள் பிரிக்கப் பட்டில்லை, எல்லா ஜனங்களும் ஒரே விதமான வண்டியில் தான் செல்கின்றனர்; பிரபுக்களின் மாளிகைகள் வைத்தியசாலையாகவும், பொருட்காட்சி சாலையாகவும் விளங்குகின்றன; பணக்காரர்கள் வசித்த மாளிகைகள் ஜனங்களுக்குப் பொதுவான ஸ்தலங்களாயிருக்கின்றன; பத்து வருடங்களுக்கு முன் அங்கே சொற்ப பள்ளிக் கூடங்களே இருந்தன; இப்போது எங்கும் பாடசாலைகள் இருக்கின்றன; ஒருவன் சொத்தாயிருந்த தொழிற்சாலை இப்போது
குடிகளின் சொத்தாகமாறி, அத்தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் அதிகாரத்திற்குட்பட்டிருக்கிறது; ஒரு மிராசுதாருக்குச் சொந்தமாயிருந்த நிலம் இப்போது அவரிடத்திலிருந்த பண்ணையாட்களுக்குச் சொந்தமான நிலமாக மாறிவிட்டது; முந்தித் தொழிற்சாலைகளில் தினம் பத்து மணி நேரம் வேலை செய்தவர்கள் இப்போது ஏழுமணி நேரம் தான் வேலை செய்கிறார்கள்; போதுமான அளவு உணவும் உடையுமின்றித் தவித்த மக்கள் இப்போது சுத்தமான ஆடை அணிந்து புஷ்டியான தேகத்துடன் விளங்குகிறார்கள்; ஆடம்பரமான வாழ்க்கை ஒழிந்து எங்கும் ஒரே தன்மையான வாழ்க்கை நிகழ்கிறது; வீட்டின் சொந்தக்காரர் வீட்டைச் செப்பனிடாவிடில் குடித்தனக்காரர் செப்பனிட்டு, ஏற்பட்ட செலவைக் குடிக்கூலியில் கழித்துக் கொள்ளுகிறார்கள்; ஆதியில் நம்நாட்டில் ஆட்சி புரிந்தவர்கள் செய்தது போல், ரஷ்யா அரசாங்கச் செலவு நிமித்தமாக ஆட்சியாளர், விளைவில் ஒரு சிறிய பகுதியை விவசாயிகளிடமிருந்து நிலவரியாகப் பெறுகிறார்கள்; ஆதிகாலத்தில் நம் நாட்டார் ஒரு பொருளை மற்றவரிடம் கொடுத்து இன்னொரு பொருளைப் பெற்றனர்; இப்போதும் சில குக்கிராமங்களில் இவ்வாறு பண்டமாற்று செய்யப்படுகிறது; ரஷ்யா அரசாங்கத்தார், மானிடர் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் தாங்களாகவே செய்து, சொற்ப அளவு தானியத்திற்கு அப்பொருள்களை விவசாயிகளுக்குக் கொடுக்கிறார்கள்; குடிகளுக்கு இன்னும் அனேக அனுகூலங்கள் ஏற்பட்டு அவர்கள் உயர்வு தாழ்வின்றி எல்லோரும் சமமானவர்களாய்ச் சந்தோஷத்துடன்வசித்து வருகிறார்கள்.

 

ஆதலின் நம் நாட்டிலும் ஏழ்மை நிலைமையிலுள்ளவர்கள் கூடிய சீக்கிரத்தில் ஒரு கட்சியாராக ஏற்பட்டு அடுத்த தேர்தலில் சட்டசபை அங்கத்தினராகவும், மந்திரிகளாகவும் அமர்ந்து ஏழ்மை நிலைமையிலுள்ளவர்களுக்கு அனுகூலம் ஏற்படும்படி சட்டங்கள் ஏற்படுத்த வேண்டும். எல்லோரும் உரிமை பெற்று வாழும் மார்க்கங்களை உண்டாக்கவேண்டும்; சிலர் மாத்திரம் பணக்காரர்களாய் ஏழைகளைக் கவனிக்காமல் தங்கள் ஐசுவரியத்தை மட்டும் பெருக்கிக் கொண்டு போகும் சுயநலக் கொள்கைகளை அடியோடொழிக்க முயலவேண்டும். அப்படிச் செய்தால் மாத்திரம் தான் ஏழைகள் முதல் சகலரும் சௌக்கியமடைதல் கூடும்.


ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - மே ௴

 

 

 

 

No comments:

Post a Comment