Friday, August 28, 2020

 

ஏழுமலையின் தத்துவம்.

 (பண்டித. பூ. ஸ்ரீநிவாசன்.)

ழுமலை யென்பது தமிழ்நாட்டிற்கு வடவெல்லையாகவுள்ள திரு வேங்கடமலையாம். இதற்குத் திருமலை, வேங்கடாசலம், வேங் கடாத்திரி, சேஷாசலம், சேஷாத்திரி, வடமலை, திருமலை எனப் பலவேறு பெயர்களுமுண்டு. இது திருவரங்கம், திருமலை, பெருமாள் கோவில் (காஞ்சிபுரம்) என்னும் முக்கிய விஷ்ணுஸ்தலங்கள் மூன்றனு ளொன்றாகும். இதனையறியாதார் இத்தேயத்தின்கண் ஒருவருமிரார் என்னுமாறு இது மிகப் பிரசித்தி பெற்றதாகும். நாடோறும் எண்ணிலா யாத்திரீகர் இங்கு வந்த வண்ணமாகவே இருப்பர். திருப்பதிக்குப் போகிறவர்கள் வந்துவிட்டால் புகைவண்டியில் மற்றவர்கள் பாடு திண்டாட்டமாய் விடும் என்றியம்பலாம்படி பல சமயங்களில் கிராமங்களே திரண்டு வந்துவிடும். திருச்சின்ன முழக்கமும், 'கோவிந்தா! கோவிந்தா !!'வென்னும் கோஷமும் விசும்பளவும் எட்டும். எழுமைல் தூரமுள்ள ஏழுமலையில் எழுந்தருளி யிருக்கும் ஏழுமலையானுக்கு யாத்திரீகர் தாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டதற் கேற்ப முடி கொடுப்பதும்உண்டியில் பணம் போடுவதும் வழக்கம். நாடோறும் இவ்வாறு போடப்படுதல் வாயிலாகச் சேரும் பணமோ அமிதம்.

 

மொட்டையடித்துக் கொள்ளுவதும் உண்டிப்பணம் போடுவதுமே இந்தப் பெருமானுக்குச் செய்து கொள்ளும் முக்கிய பிரார்த்தனைகளாமென்பதுபெரும்பாலோ ரபிப்பிராயமாம். பிரார்த்தனை செய்து கொண்டபின் தமக்கு நேர்ந்த நோய் முதலிய துன்பங்கள் விலகிப்போயின வென்றும் அவர்கள்கூறுகின்றனர். சொன்னபடி பிரார்த்தனை நடத்தத் தவறியவர்களுக்குப்பெருமாள் குற்றத்தினால் பெருந்துன்பங்கள் நேரிடுகின்றன வென்பதும், அதற்கு அபராதம் செலுத்துவதாகவோ – உண்டிப் பணமாயின் வட்டியுடன் செலுத்துவதாகவோ - சொல்லிக் கொண்டால் அவை நிவர்த்தியாகின்றன வென்பதும் சனங்களின் நம்பிக்கை.

 

திருமலைக்குச் செல்வோர் - மலையேறுவோர்- நடந்தே செல்லுதல் வேண்டும். விருத்தர்களாயும் வியாதியாளராயு மிருப்போர் தொட்டில் (டோலி) களில் செல்லுவார்கள். 'கோவிந்தன் பெயரைச் சொல்லிக் கொண்டே போனால் ஒரு சிரமமுமின்றி அவன் என்னை அழைத்துக் கொள்ளுவா'னென்னும் நம்பிக்கையோடு நடந்தே செல்லும் வயோதிகருமுண்டு. இந்த மலைகள் ஏழனுள் முதல் மலையே மிகவும் செங்குத்தாயிருக்கும். அதுதான் ஏறுவோர்க்கு மிக்க சிரமத்தைத் தருவது, அதனுச்சியில் 'காலிகோபுர'மென்றழைக்கப்படும் ஓர் கோபுரமுண்டு. 'காலி கோபுரம் வரையில் தான் கஷ்டம்; அதற்குமேல் சுலபமாகச் சென்றுவிடலா'மென்று சொல்லப்படுவதுண்டு. ஏழாவது மலையின் முடிவே அப்பன் உறையுமிடம். அதற்கு முன்புள்ள மலையை முழங்கால் முறிச்சான்' என்கிறார்கள். அங்குச் செல்கையில் முழங்கால் முறிந்து விடுவது போலிருக்கும் போலும்!

 

முன்னொரு காலத்தில் அந்தணர்குலத்தி வதித்தானொருவன் ஆசார வீனனாய்த் துஷ்டர்களின் கூட்டுறவால் கூடாவொழுக்கங்கொண் டுழன்றான். கொலையாதி பஞ்சமா பாதகங்களுள் எதையும் கூசாமல் செய்தான். புலை மாதைப் புணர்ந்தான். அவளுடன் சேர்ந்து மான் முதலிய மிருகங்களைக் கொன்று அவற்றின் ஊனைப் புசித்தான். கள்ளின்றி ஒரு நாளையும் கழியான். இத்தகைய சண்டாளனாகிய அவன் காட்டில் வேட்டையினிமித்த மலைந்து திரியுமோர் நாள் தற்செயலாக இம்மலையி லேறினான். அவ்வளவில் அவன்பாவங்களனைத்தும் ஆதவனைக் கண்ட பனிபோ லகன்றன. பரிசுத்தனேயாயினான்; சண்டாளத்துவம் நீங்கியது; சிறந்த அந்தண வுருக்கொண்டு அப்பனடிப் பேற்றிற் கருகனாயினான். அது முதல் இம்மலைக்கு 'வேங்கடம்' என்னும் பெயர் உண்டாயிற்று. வேங்கடம் என்பதற்குப் பாவங்களைப் போக்குவது என்பது பொருளாம்.

 

திருமாலுக்குச் சென்றால் குடையும், இருந்தாற் சிங்காசனமும், நின்றால்மரவடியும் அணையுமாகும்'ஆரவாகிய சேஷன் இம்மலை யுருக்கொண்டு பெருமானைத்தாங்கி நிற்றலால் இம்மலைக்கு சேஷாத்திரி, சேஷாசலம், சேஷகிரிஎன்னும் பெயர் வழங்குவதாயிற் றென்பர், இவைபோன்ற வரலாற்று விவாங்கள் பலவும் திருவேங்கடத் தலபுராணம் விரிவாய்க் கூறக் காணலாம்.

 

மேற்கூறியவற்றால் திருமலை யென்னுமோர் மலையுள தென்பதும், ஏழுமலைகள் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டுத் தொடர்ச்சியாய் ஒரே மலையாகத் தோன்றலின் ஏழுமலை யென்றழைக்கப் படுகின்ற தென்பதும், ஏழாவது மலையில் ஸ்ரீநிவாசன் அடியார்க்கருள் செய்யு நிமித்தம் நின்ற திருக்கோலத்துடன் திருக்கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கின்றன ரென்பதும், வருட முழுவதும் தேசத்தின் எல்லாப் பாகங்களினின்றும் எண்ணற்ற யாத்திரீகர்கள் வடமலையப்பனைச் சேவிக்க வருகின்றன ரென்பதும், ஏழுமலையானுக்குப் பிரார்த்தனை செய்து கொள்வதால் சகல துன்பங்களும் தொலையுமென்பதும் மொட்டையிட்டுக் கொள்ளுவதும் உண்டியிற் பெருந்தொகையான போடுவதுமே முக்கியமான பிரார்த்தனை யென்பதும், சனங்களின் நம்பிக்கையென்பதும், மேலும் இம்மலை சகல பாவங்களையும் போக்குதலின் திருவேங்கட மெனவும் ஆதிசேஷனே அப்பனுவப்புடன் எழுந்தருளி யிருத்தற்பொருட்டு இம்மலை யுருக்கொண்டு நிற்றலின் சேஷாசலம் எனவும் அழைக்கப்படுகின்ற தென்பதும் பிறவும் பெற்றாம்.

 

இவற்றுள் சில முக்கியாமிசங்களைத் தனித்தனி யெடுத்து ஆராய்ந்து உண்மை காண்பது அத்தியாவசிய மாகலின், மலையைப்பற்றிய ஆராய்ச்சியைப் பின்னுக்கென வைத்துக்கொண்டு பிறவற்றை முன்னே ஆராய்வாம்.

 

துன்பந் தோன்றுங்கால் அதனை நீக்கித் தம்மைக் காக்குமாறு ஈசனைப் பிரார்த்தித்தல் எம்மதத்தினரிடத்தும் இயல்பாகவே காணப்படும் ஓர் செய் கையாம். ஆலயங்களில் விக்கிபகங்களின்றி வணங்குவோர் அம்முறைக் கேற்ப, 'ஆண்டவரே! என் துன்பங்களைப் போக்கி யருளல் வேண்டும். திருவுளமிரங்கி யருள வேண்டும்' எனப் பிரார்த்திப்பர். விக்கிரகம் வைத்துப் ஆசிப்போர் தூபதீப நைவேத்தியங்களைக் கொண்டு தாம் பூசிக்கும் முறைக் கேற்ப பகவானே! என் கஷ்டத்தை நீக்கினால் உன் சன்னிதிக்குறேன், தேங்காயுடைக்கிறேன், உண்டியிற் கைகொண்ட பணம் போடுகிறேன், மாவிளக் கேற்றுகிறேன், அருச்சனையு மபிஷேகமும் செய்விக்கிறேன், தளிகை விடுகிறேன்' எனப் பிரார்த்தித்துக் கொள்வர். எனவே, கஷ்டம் சேர்ந்த போது அதனைத் தீர்க்கும் பொருட்டுத் தேவனைப் பிரார்த்தித்தல் எல்லா மதத்தினரிடத்தும் வழக்காற்றி லிருந்து வருகிறது என்பது மறுக்க முடியாததோருண்மையாகும்.

 

கஷ்டத்தை நீககுமாறு கடவுளைப் பிரார்த்திப்பது நியாயமான செய்கையே. அவரை நம்பினோர்க்கு அவரை விட வேறு போக்கிடமேது? ஆண்டவன் 'அடியார் படுதுயராயினவெல்லாம் நிலந்தரஞ் செய்யும்' அருளாளனன்றோ! ஆனால் அப்பிரார்த்தனை அன்பை அடிப்படையாகக் கொண்டதாயிருத்தல் வேண்டுமேயன்றி அச்சத்தை அடிப்படையாகக் கொண்டதாயிருத்தல் கூடாது. அன்பு ஒன்றே அவரிடம் சேர்க்க வல்லதாகும். வேறொன்றினாலும் அவரை அடைய முடியாது. ஆகவே கஷ்டம் காணும் போது 'காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி, ''என்னப்பனே! கருணாசாகரா! உன்னையே ஆதாரமென நம்பு மடியேனை அல்லல்களைந்து ஆதரிப்பதுன் கடமையேயன்றோ? ஆபத்பாந்தவா! அநாதரக்ஷகா! என அகங்கரைந்து அவனது திருநாமங்களைச் சொல்லிப் பிரார்த்திக்க வேண்டியது கடமையாம். துன்பம் தொடர்ந்து வரும் போது மாத்திரமல்ல; இன்ப மெய்தும் போதும், ஓர் காரியத்தைத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் காலைப் போதும் மாலைப் போதும் எப்போதுமே பிரார்த்தித்தலே முக்கிய கடமையா மென்றுணர்ந்து அவ்வாறு ஒழுகுதலே உத்தமச் செய்கையாம். இவ்வாறின்றி,

 

அன்பென்பதை அணுவளவு மறியாராய் - பக்தி யென்னும் பதத்தையுமறியாராய் வெறுமனே மொட்டையிட்டுக் கொள்வதும் உண்டியிற் பணம் போடுவதுமாகிய இவை போன்ற பிராத்தனைகளைச் செய்வது அறிவுடையாகா தென்பதே அறிவுடையோர் அபிப்பிராயமாம். அதினும் சுவாமியை வட்டி வாங்குகிறவனென்று வாய்கூசாது பேசுவது பெரு நகைப்புக் கிடமாகவன்றோ முடியும்? வட்டி வாங்குதல் சாஸ்திர விரோதமென்று கொண்டு பல பெரியோர் வாங்கா தொழிதலையும், தீராப் பொறியாகச் சிலர் தருமவட்டி யென்று சொற்ப வட்டி வாங்குவதையும், அதிக வட்டி வாங்குவோரை இழிஞரென றுலக மிகழ்ந்து கூறுவதையும் அறிந்திருக்கின்றோமே! இங்ஙனமாக, பணவாசை பிடித்தவனே னனக் கருதி பணம் போடுகிறே னென்றும் வட்டி போட்டுச் செலுத்துகிறே னென்றும் பிரார்த்தனை செய்து கொள்வதும் அவ்வாறே போடுவதும் எவ்வளவு கிரம மற்ற காரியம்! ஆனால் இவ்வழக்கம் எவ்வாறுண்டாயிற்றோ வெனின்: தேவாலயங்களைத் தங்கள் ஜீவகேனோபாயத் தொழிற்சாலை யென நம்பியிருப்போர் வருவாயினிமித்தம் ஏற்படுத்திய கற்பனையே யென்பதைத் தவிர வேறு காரணம் கூறுதற் கிடமின்றாம்.

 

நாமும் நமதுடல் பொருளாவியும் அவருடையனவாகவும், நம் பொருட்டே கிருபாமூர்த்தியாகிய அவர் வானையும் வளியையும் இரு சுடரை யும் ஒளியையும் மற்று மெல்லாவற்றையும் படைத் தருளியதனால் சகலமும் அவருடைமைகளாகவு மிருக்கையில் நாம் அவருக்குத் தருவதாகிய பொருளு மொன்றுண்டோ? அவருடைய அருட்பெருக்கில் ஒரு திவலையைப் பெறும் பொருட்டன்றோ பெரியோர் கோயிலை தின்றும் கானிலுறைந்தும் பூவலம் வந்து' முழல்கின்றனர்.

 

“பொன்னாற் பிரயோசனம் பொன் படைத் தாற்குண்டு

பொன் படைத்தான்

தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டத்

தன்மையைப் போல்

உன்னாற் பிரயோசனம் வேணதெல்லா முண்டு

உன்றனக் கிங்கு

என்னாற் பிரயோசன மேதுண்டு காளத்தி

ஈச்சுரனே!"                                 (பட்டினத்தடிகள்)


என்றபடி, அவருடையருளில் லவலேசத்திற் கெதிர்நோக்கி யேக்கமுற் றிருக்கும் நாம் அவருக்குக் கொடுப்பதென்ன? அவ்வாறொன் றிருக்கின்ற தென்றால் அது அன்பை யன்றி - பக்தியை யன்றி


படமுடியா தினித்துயரம் படமுடியாதரசே!

பட்டதெல்லாம் போதுமினிப் பயந்தீர்த்தென்
உடல் பொருளாதிய வெலாம் நீ யெடுத்து கொண்டுன்

உடல் பொருளாதிய வெலாம் உவந் தெனக்கே யளிப்பாய்


எனத் திருவருட் பிரகாச வள்ளலார் வழுத்தியவண்ணம் - நம துடல் பொருளாவிகளை யவருக்கே யொப்படைத்து விடுவதன்றி வேறொன்றுமில்லை.

 

சுவாமிக்கு முடி கொடுக்கும் வழக்கம் இங்கு மட்டு மன்று; திருத்தணிகை, திருவள்ளூர் முதலிய விடங்களிலும் காணப்படுகின்றது. இது யாரால் எப்பொழுது சிருஷ்டியாயிற் றென்பது விளங்கவில்லை. எதனை இழக்க நேரினும் தலைமயிரை யிழப்பது மாந்தர்க்குப் பெரும் வருத்தந் தருவதாகும். குற்றவாளிகளுக்கு மொட்டை யடித்தலைத் தண்டனையாகக் கொண்டிருந்தனர் முன்னோர். அது அவர்களை அவமானப்படுத்துவதற்குப் போதியதண்டனை யென்பது அவர்க ளபிப்பிராய மாகும். உண்மையே. ஆகவே, அவ்வளவு மேன்மையாகக் கருதப்படும் முடியைக் கொடுப்பது ஒருவன் தான் மேலானதெனக் கருதி யிழத்தற் குடன் படாத வோர் பொருளைச் சுவாமிக்குக் கொடுத்துவிட்டா னெனக் கருதற் கிடமிருக்கின்ற தென்பதைத் தவிர இதற்கு வேறு காரணம் காட்ட வியலாது. இனி,

 

திருவேங்கட மென்னும் பெயரின் காரணத்தை நோக்குவோம். சண்டாள னொருவன் ஈசுவர சிந்தனை சிறிதுமின்றியே மலைமே லேறியவனவில் சகல பாவங்களி னின்றும் நீங்கப் பெற்றானென்பது சுருதி யுக்தி அனுபவங்களுக்கு விருத்தமாம். என்னை! மலைமே லேறின மாத்திரையானே பாவங்கள் பறந்து போமானால் எல்லோரும் சிறிது தூரம் ஏறித் திரும்பி விடலாமே. ஏழுமலைகளேறுவானேன்? அன்றியும் சுவாமி தரிசனஞ் செய்தல் முடி களைதல் முதலியனவும் பயனற்ற செயல்களாயன்றோ முடியும்! மேலும், இதுகாறும் அவ்வாறு பாப விமோசனம் பெற்றுவிட்டதாக அனுபவித்தவர்கள் ஒருவரேனும் கூறக் கேட்டிலமே. சென்று வந்த நாமும் அனுபவித் தறிந்திலமே. மலைக்குப் போய் வந்த பின்னரும் அனேகர் நோய்வாய்ப் பட்டுத் தவித்தலைத் தவிர்ந்தில ரென்பதும் மறுக்க முடியாத வுண்மையாம். ஆகவே, இதுவும் அசம்பாவிதமேயாம்.

 

ஆதிசேஷன் மலையுருக்கொண்டு நிற்றலால் இம் மலைக்குச் சேஷகிரியென்னுமோர் பெயரு முண்டென வுரைத்தா மன்றே. ஆலோசிக்குமிடத்து இதுவும் பொருந்தாக் கூற்றாகும். சேடனே மலை வடிவாயின னென்றால் அந்த மலை இது போது மிருக்கின்றமையின் சேடனும் இன்னும் மலையாகவேயிருக்கின்றா னென்றே கொள்ளல் வேண்டும். இதனால் தன் சுயரூபத்தோடுவேறியாண்டு மிலனென்பது பெறப்படும். எனவே, நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் திருப்பாற் கடலில் அவன் பாயலாக இப்போதில்லை யென்பன போன்ற ஐயங்கள் நிகழும். அன்றியும் அவன் அவனியை ஆயிரம் பணாமுடிகளாற் றாங்கவேண்டிய வேலையும் கெட்டிருக்கும். இதுபோன்ற பலகாரணங்களால் இதுவும் பொருந்துமாற்றோடு (யுக்தியோடு) பொருந்துவதன்றாம்.

 

சிலர் செப்பலாம் 'இது என்ன பெரிய விதண்டா வாதமா யிருக்கின்றதே? இது சரியல்ல; இது முறையல்ல; இது அசம்பவம்; இது தக்க காரணமாகாது; என்றிவ்வாறு ஒவ்வொன்றையும் ஒவ்வொரு குற்றங்காட்டிக் கழித்துக்கொண்டே போனால் முடிவுதானென்ன! இப்படிப்பார்த்தால் எல்லார்தான் குற்றமுடைய தாகும்' என்று. இது விதண்டா வாதமன்று. விதண்டாவாதத்தால் சத்தியப் பொருள்களைக் குற்ற முடையவையா மெனச் சாதித்து விடுவதும் கூடாத காரியமாகும். முன்னைய ஆழ்வா ராசாரியர்களு ளெவரேனும் மொட்டையடித்துக் கொள்வதாக வாவது உண்டியில் பணம் போடுவதாகவாவது பிரார்த்தனை செய்து கொண்டதாகவும் அதன்படி நடத்தியதாகவும் அவர்கள் சரித்திரங்களால் தெரிய வருகின்றதா வெனக் கேட்கின்றோம். இல்லையே. பண்டைக் காலத்து யாண்டும் இவ் வழக்கம் இருந்ததில்லையென்பது திண்ணம். பிற்காலத்தில் - அதாவது அக்காலத்திற்கும் இக்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எவ்வாறோ புகுத்தப்பட்ட செய்கைகளே இவை எனக் கோடலே ஏற்புடைத்தாகும்.

 

ஆயின், இம் மலையின் வரலாற்றுண்மை யாது? ஆழ்வார்கள் முதலியோர் "திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே;" “செடியாய்ப் பிறக்கும் திருவுடையே னாவேனே." "கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே." "கானாறாய்ப் பாயுங் கருத்துடையே னாவேனே'' என்பன போன்ற வாக்கியங்களால் இம் மலையைப் புகழ்ந்து பேசி யிருக்கின்றனரே என்னு மித்தியாதி சங்கைகள் நிகழுமன்றே. இவற்றிற்குச் சமாதானம் யாது? எனின்: அவற்றைப்பற்றிய இரகசியங்களை அடுத்த விதழிற் காட்டுவாம்.

 

கடந்த மாதவிதழில், "ஏழுமலை யென்றொரு மலை யுண்டு. அதற்குத் திருவேங்கடமலை முதலிய வேறு பெயர்களுமுண்டு. எல்லாத் தேசங்களினின்றும் எண்ணிலா யாத்ரீகர் இடைவிடாது வந்த வண்ணமாகவே விருப்பர். அவர்களால் உண்டியில் போடப்படும் பணமோ அளவற்மது. அங்கு முடி கொடுத்தலும் பணம் செலுத்துவதுமே முக்கிய பிரார்த்தனைகளென்றெண்ணி அவ்வாறே செய்வது சனங்களின் வழக்கம். இத்தகைய பிரார்த்தனைகள் ஈசுவரனுக்குகந்த செயல்களாகா வெனினும் இம்முறைகளையே கற்றோரும் மற்றோரும் கைக்கொண்டொழுகுகின்றனர். இவை எப்போது யாரால் வகுக்கப்பட்டன வென்பது அறியக் கூடவில்லை. முற்காலத்து ஆழ்வாராசாரியர்களால் கையாளப்பட்டு வந்ததாகக் கருதச் சிறிது மிடமளிக்காத விச்செயல்கள் பரமபதநாதன் அருள் பெற்ற்கேற்ற செயல்களாகா. பக்தியொன்றே அவனருட் பேற்றிற்குச் சாதனமாயுள்ளது. வழக்காற்றிலுள்ள இம்முறைகள் ஆன்றோரது உண்மைக் கருத்தினை யுள்ளவா றறியாமையால் ஏற்பட்ட தவறான வழக்கங்கள் ளென்று சுருங்கக் கூறினோம். இனிப் பிறவிஷயங்களைப் பற்றியும் சிறிதாராய்வோம்.

 

பொதுவாகத் தீர்த்த யாத்திரைகளையும் க்ஷேத்திர யாத்திரைகளையும் ஏற்படுத்திய ஆன்றோரின் நோக்கம் யாதாமென வாராயுமிடத்து, பல்வே றிடங்களுக்குச் சஞ்சாரஞ் செய்வதால் ஆங்காங்குள்ள அற்புதங்களையும், அவ்வவ்விடங்களிலுள்ள ஜனங்களது நடையுடை பாவனைகளையும், - இயற்கை செயற்கை யமைப்புக்களையும், கைத்தொழில், விவசாயவிருத்தி, வியாபாரமுறைமை முதலிய விஷயங்களையும் அறிந்து, லோகானுபவமும், அறிவுமுதிர்ச்சியும் பெற்று, தேசாபிவிருத்தி, பாஷாபிவிருத்தி, மதாபிவிருத்திகளுக் கேற்ற காரியங்களைக் கடைப்பிடித்தொழுகு மாற்றல் மாந்தர்க்குண்டாகுமென்பதே யாத்திரா முறையை வகுத்த ஆன்றோரின் முக்கிய நோக்கமாதல் வேண்டுமென்பது புலனாகும். வடகோடியின்கணுளதாகிய காசிப்பதியையும், தென்கோடியின்கணுளதாகிய இராமேச்சுவரத்தையும் சிறந்த புண்ணிய க்ஷேத்திரங்களாக வமைத்து, காசிராமேசுவர யாத்திரை' என வழங்கும்படி இந்த இருபெயர்களையு மிணைத்து, 'எல்லா யாத்திரைகளினுஞ் சிறந்தது இந்த யாத்திரையே; இந்த யாத்திரை செய்வோர் சர்வபாவங்களினின்றும் நீங்குவர்' எனப் பயனையும் வகுத்திருப்பதைப் பொறுமையோடு சிந்திப்போர் முடிவுக்கு வராமலிருக்க முடியாதென்பது திண்ணமாம். காசியையும் இராமேசுவரத்தையும் இணைத்து இணைத்து விட்டதனால் இடையிலுள்ள க்ஷேத்திரங்கனைத்தும் உள்ளடங்கி விடுமன்றோ? நிற்க,

 

க்ஷேத்திர வமைப்புக்களும் ஆலயவமைப்புக்களும், அண்ட பிண்ட (அண்டம் = உலகம்; பிண்டம் = சரீரம்) வியல்புகளி னொற்றுமைகளையும், ஆன்மதத்துவத்தையும் கற்பிக்கும் கல்விச்சாலைகளே யென்பது ஆன்றோர் அபிப்பிராயமாம். உதாரணமாக; சரீரத்துள்ளவைகளாகிய மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினை என்னும் ஆறாதாரங்களுக்கியைய, உலகத்திலும் திருவாரூரை மூலாதார க்ஷேத்திரமாகவும், திருவானைக்காவைச் சுவாதிட்டானமாகவும், திருவண்டணாமலையை மணிபூரகமாகவும், சிதம்பரத்தை அநாகதத்தலமென்றும், திருக்காளத்தியை விசுத்தியென்றும், காசியை ஆக்கினை யென்றும் ஆன்றோர் வகுத்திருத்தலை நோக்குவோமாயின், மேற்கூறிய விஷயமே பெரியோர்களபிப்பிராயமாதல் வேண்டுமென்னு மெண்ணம் உறுதிப்படும்.

 

ஆயின், அவர்கள் (பெரியோர்) இவற்றை என் வெளிப்படையாகக் கூறியிருத்தலாகாது? மறைபொருள்களாக வமைப்பின் சாமானியர் அறிந்து கொள்ளல் சாத்தியமாமோ? எனின்: இத்தகைய தத்துவங்கள் சாமானியரால் அறியத்தக்கவையாகா. எவ்வளவு கூறினும் இவற்றை யுணருமாற்றல் அவர்களுக்குண்டாகாது. இது நோக்கியே, மாந்தாது பல திறப்பட்ட பக்குவ நிலைக்கேற்பச் சரியை முதலிய பல நெறிகள் வகுக்கப்பட்டன. அன்றியும் கடவுள் கொள்கையும், பக்தியும் யாவர்க்கும் அடிப்படையாக அமைய வேண்டியவைகளாகும். இவையுண்டான பின்னரே ஏனையவை எளிதினெய்தும். பக்திப்படியிலடியிட்டோர் எவ்வகையாலேனும் இலக்கை யெய்தாதொழியார். ஆகலின் வீடு பேற்றிற்கு இன்றியமையாததாகிய பக்தி நெறியை யாவருள்ளத்தும் நன்கு பதியுமாறு செய்ய வேண்டியது முதற்கடமை யென்னு முண்மையையறிந்தே முன்னோர் அதற்காகப் பலநெறிகளையும் வகுத்துப் போந்தனர். அந்நெறியைப் பின்பற்றி ஈசுவரபக்தியாகிய எழிலார்ந்த மாளிகையிற் பிரவேசிப்போர்க்கு அதற்குள்ளிருக்கும் மற்றைய இரகசியங்களையும் அறிந்து கொள்ளச் சமயம் வாய்க்காமற் போகாது. அம்மாளிகைக் குள்ளிருக்கும் இரகசியக் காட்சிகளைக் காட்ட ஓராள் அங்கு அவசியம் கிடைப்பான். ஆனால் அந்த ஆளை மிக்க அக்கரையோடு தேடல் வேண்டும். அங்கனம் தேடிக்கண்டடைந்து அவனை யடுத்தால், அவன் எல்லாக் காட்சிகளையும் இனி துணர்த்திக் கொண்டே சென்று, முடிவில் முடிவான காட்சியையு மறிவிப்பான். அவனே குரு. இதனையே தாயுமான சுவாமிகளும்


''மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
 வார்த்தை சொல்லச் சற்குருவும் வாய்க்கும்''


என்னும் அமுதமொழிகளால் அருளிப்போந்தார். இத்தகைய பல காரணங்களால் ஆன்றோர் பல நெறிகளை நியமித்தன ரென்றறிந்து அவற்றைக் கடைப்பிடித் தொழுக வேண்டியது நமது கடமை யென்பது அறியக் கிடக்கின்றது. தவிர யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தா விஷயங்களில் சுருதியின் அபிப்பிராயம் அது வெளிப்படையாகக் கூறுவதற்கு வேறாயிருக்க வேண்டுமென்று நுண்ணறிவால் யூகித்துணர்வோமாயின், அங்கும் அவரவர் மனோபாவத்திற்கும் பரிபாகத்திற்கும் கல்வி யறிவிற்கும் ஏற்றவாறு பல இரகசியார்த்தங்களை வேதமாதா வுணர்த்துவாள் என்பதையும் நாம் காணலாம். உதாரணமாக: சாமவேதத்திலுள்ள தத்துவமசி 'மகாவாக்கியத்தை எடுத்துக் கொள்ளுவோம். இவ்வாக்கியமொன்றே துவைதிகளுக்கும், விசிஷ்டாத்துவைதிகளுக்கும், அத்து வதிகளுக்கும் தத்தம் மதாசாரமாகப் பொருள் தந்து நிற்கின்ற தன்றே! எனவே, எத்தனை வழிகளில் பொருள் கொண்டாலும் அத்தனைழிகளுக்கும் அவ்வாக்கிய மிடமளிக்கின்றது. இதனால் எல்லா வழிகளும் கொள்ளத் தக்கவையே யென்பது வேதமாதாவின் கருத்தாமென்று நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இன்றேல், வேதவாக்கியம் குற்றத்தின் பாற்பட்டதாகும். எவ்வாறெனின்: மேற்காட்டிய தத்துவமசி 'மகாவாக்கியம் மயங்க வைத்தல் என்னுங் குற்றமுடைய தாகுமன்றோ? அதாவது தன்பொருளைத் தெளிவாகக் காட்டாமல் இதன் பொருள் இதுவோ? அதுவோ?' வென மயங்கும்படியாகச் செய்யும் குற்றம் இவ்வாக்கியத்தில் காணப்படுகின்ற தன்றோ? இவ்வாறு சந்தேகிக்கக்கூடிய விடந்தான் வேதத்தில் முக்கிய பாகமாகும். ஆகவே, அங்கு நன்கு ஆராய்வோமாயின் அதன் உள்ளக்கிடக்கை தெள்ளிதிற் புலனாகும்.

 

இத்தகைய நெறியில் ஷேத்திரங்கள் ஆலயங்கள் முதலியவற்றின் அமைப்புக்களைக் குறித்தும் ஆராயின் அவற்றினுண்மைப் பயனை அடைபவராவோம். அவ்வாறின்றி மேற்புல் மேய்ச்சலாக நோக்குவோமாயின், அவற்றினுண்மைத் தத்துவம் வெளியாகாது. அது வெளியாகாத போது' ஆலயம்வேண்டாம் க்ஷேத்திரம் வேண்டாம். இது மூடத்தனம் இது மூடக்கொள்கை' என்னு மெண்ணந்தோன்றி நாசவேலையில் நுழைத்து விபரீதத்தை விளைத்து விடும். எனினும், அனுஷ்டிப் போரின் அறியாமை காரணமாக மூடப்பழக்க வழக்கங்கள் பல பல்கிக் கிடக்கின்றன வென்பதும், உண்மை கைவிடப்படவே பயனற்ற காரியங்கள் தலைவிரித்தாடத் தொடங்கி விட்டன வென்பதும் உண்மையேயாயினும், சாரத்தையும் அசாரத்தையும் எடுத்துக் காட்டி, அசாரத்தை விட்டுச் சாரத்தைக் கடைபிடித் தொழுகுமாறுசெ ய்தல் வாயிலாக, இன்றியமையாத இந்நெறிகளைப் பெருங்கருணையோடு வகுத்த முன்னோரின் நன்னோக்கத்தைச் செம்மைப் படுத்துவதும் அறிவுடையோரது பெருங்கடமையாம். நிற்க,

 

இனி, ஏழுமலையின் தத்துவமென்ன? எந்த நோக்கத்தை படிப்படையாகக் கொண்டு ஏழுமலையின் வழிபாடு ஏனைய வழிபாடுகளினுஞ் சிரேஷ்டமாக அமைக்கப்பட்டது? என்னும் விஷயங்களை யாராயுமிடத்துப் பின்வரும் உண்மைகள் அறியப்படும்.

 

கர்மகாண்டி உபாசனாகாண்டி ஞானகாண்டி என ஆஸ்திகர் முப்பகுப் பினராகப் பகுக்கப்பட்டிருக்கின்றனர். கர்மமும் உபாசனையும் ஞானசாதனங்கள். ஞானம் மோக்ஷசாதனம். எனவே, ஞானமே மோக்ஷ சாதனமாயினும் அந்த ஞானவடைவிற்குக் கர்மமும் உபாசனையுமாகிய சாதனங்கள் அத்தியா வசியமாய் வேண்டப்படுவனவாம். ஆகவே, இவற்றுள் ஞானம் மோக்ஷத்திற்கு நேர்சாதனமும் ஏனையவை பரம்பராசாதனங்களுமாம். இவ்விருவகைச் சாதனங்களையும் முக்கியமாகவும் கௌண (அமுக்கிய) மாகவும் ஒருங்கே யுணர்த்துதலே ஏழுமலையினமைப்பின் கருத்தாகும்.

 

முன்னர் மொழிந்தவாறு நமது சரீரத்தில் ஆறு ஆதாரங்களிருக்கின்றன. அவை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி. என்பனவாம். இவற்றுள் மூலாதாரத்திற்குக் குதமும், சுவாதிட்டானத்திற்குக் குய்யமும், மணிபூரகத்திற்கு நாபியும், அனாகதத்திற்கு இதயமும், விசுத்திக்குக் கண்டமும், ஆக்ஞைக்கு லலாடமு (நெற்றியு) க. ஸ்களாம். ஆக்ஞைக்குமேல் ஏழாவது ஸ்தானமாகிய ஸஹஸ்ராரம் என்னும் பிரஹ்மரந்திரம் இருக்கின்றது. இது பிரஹ்மஸ்தான மெனவும் கூறப்படும். யோகிகள் ஆறாதாரங்களின் வழியாக மேலேறிச்சென்று ஸஹஸ்ராரத்தையடைந்து ஆங்குப் பிரஹ்மத்தைத் தரிசித்து அதனுடன் ஐக்கியப்பட்டு நிற்பார்கள். எனவே, யோகிகள் நெற்றியின் மேலுள்ள தாகிய ஏழாமிடமாகிய பிரஹ்ம ஸ்தானத்தில் கூடஸ்த பிரஹ்மத்துடன் ஐக்கியப்பட்டு நிற்கும் நிலை(ஜீவன்) முத்தி நிலையாகும். அப்பியாச முதிர்ச்சியால் இவ்வாறு நிற்கப்பழகுவோர் வீடுபேற்றிற் குரியவராவர். ஏழுமலையில் விளங்கும் பரமாத்மாவை அவ்வேழுமலைகளையுங் கடந்து சென்று காணவேண்டும் எனக் கூறும் யோகியர்நி லையை இவ்வேழுமலை விளக்கிக் காட்டுவதாகும்.


"சீரணி நுதலின்மீது சென்று காண் யோகி போல
 . . . . . . . . .. .

ஏரணி நிலைகளேழ்மேல் நிகழ்வெளித்தவி சமைத்தான் "               எனவும்,

 

"நுதல்மிசை யிலகு நிட்களம்போல நுவன்ற ஏழாநிலையாகு மதன்மிசை.'' எனவும்

பிரபுலிங்க லீலை கூறுகின்றது. திருவேங்கடத்தும் அப்பனுறைவிடம் மலையின் மேலின்றி மலைக் கப்பாலுள்ள வெளியான விடத்திலமைக்திருத்தலும் ஈண்டறியத் தக்கதாம்.

 

மேற்காட்டப்பட்ட தத்துவம் யோகியர்க்கேயன்றி ஏனையோர்க்குப் பயன் தராததாயிருத்தலின், ஏனையோர்க் கெவ்வகையி லுபயோகமாமெனின் கூறுவாம்.

 

ஞானயோகத்தை யனுஷ்டிப்போர்க்கும் ஏழுமலை உண்மை வழி காட்டியாகும். ஞானிகளும் பிரஹ்ம வடிவ ஆன்மாவைத் தரிசிக்க வேண்டுமாயின் ஏழுமலை கடந்தே தரிசிக்க வேண்டும். அவர்கள் கடக்க வேண்டிய ஏழுமலைகள் உடம்பு, பொறி, நாற்கரணம், உயிர் என்பனவாம். இம் மலைகளைக் கடந்து செல்வோரே பரந்தாமனது (பரம் - மேலான, தாமம் - இடம்) பாதாரவிந்தங்களைத் தரிசிக்கும் பேற்றினை யெய்துவர் என ஞான நூல்களின் கருத்தையும் ஏழுமலை எடுத்துக் காட்டுகின்றது.


''காரண வுபாதி யேழ்மேற் கண்டிடு ஞானிபோல.''                எனவும்,


''உடம்பொடு பொறி நாற்கரணமற் றுயிரென்
 றுரைத் திடப் படுமுபாதிகளைக்
 கடந்துள நிலையிற் சோதியா யிலங்கக்
 கண்டிடு துரியன்."                   எனவும்

 

துறைமங்கலம் - சிவப்பிரகாச சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளி யிருப்பதும் இக்கருத்துப்பற்றியேயாம். எனவே, ஞான மார்க்கத்தை மேற்கொண்டொழுகுவோரும் உபாதிகளாகிய மலைகளுக் கப்பாலுள்ள மகாதேவனை வணங்குதல் வேண்டும் என்னும் பொருளையும் ஏழுமலை தனக்குள்ளடக்கிக் காட்டுவதாகும்.

 

அன்றியும், ஞானத்தைப் பெறாத வழி சர்வ துக்க நிவிர்த்தி பரமானந்தப் பிராப்தி வடிவ முத்தியை யடைவது முடியாதென்பது யாவர்க்கும் ஒப்ப முடிந்ததோர் விஷயமாம். அந்த ஞான மார்க்கத்தையே இம்மலை குறிக்கின்றது. ஞான பூமிகளை ஏழென வகுத்து ஞான நூல்கள் நவில்வது ஈண்டாராயத் தக்கதாம்.

 

ஞான பூமிகள் சுபேச்சை, விசாரணை, தனுமானசி, சத்துவாபத்தி, அசம்சாத்தி, பதார்த்தா பாவனை, துரியம் என ஏழாம். இவற்றுள்,

 

(1) உலகப்பற்றி லுழலு மொருவனுக்கு மோக்ஷத்தை யடைதற் கேதுவாய ஞானத்தைப் பெறுதல் வேண்டுமென்னு மெண்ணம் உண்டாவதேசுபேச்சை யெனும் முதற் பூமியாம். இந்தச் சுபேச்சையே முதல் மலையாகும். இதில் ஏறுவது மிகவும் சஷ்டம். யாவரும்'மோக்ஷமடைய முயலவேண்டும்; ஞானம் பெற முயல வேண்டும்'என அடிக்கடி எண்ணலாம். ஆனால் அவ்வெண்ணத்தினிடத்து உறுதியாக நிலைத்து நிற்பது தான் துர்லபமானகாரியம். ஏறவிடாதபடி தடுப்பதற்குப் பல தடைகளுண்டு.'' மெய்ஞ்ஞானமோனத்தில் நிற்கவென்றால் முற்றாது பரிபாக சத்திக ளனேகம்'' என்றார்தாயுமானவரும். அத்தடைக ளனைத்தையும் அழித்துச் செல்லும் தீரனாகவிருந்தாலன்றி அம் மலையிலேறுதல் முடியாது. அதில் ஏறிவிட்டால் மற்றமலைகளைக் கடப்பது சுலபமே. கைவல்லிய நவனீதத்தாரும் " முதர்பூமி கிடைப்பதுவே வருத்தம் மைந்தா!'' என்றார். இதனையே திருவேங்கட மலையிலுள்ள முதல் மலை சூசிப்பிக்கின்றது. பொதுவாகவே ஞான சப்த மலைக ளேறுவது போல வேறு கஷ்ட மொன்றுமில்லை யென்றே சொல்லலாம். பிரஹ்மப் பிரயத்தனம் எனப்படுவது இதுவேயன்றோ!

 

(2) இச்சை யுண்டானபின் அதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்தல்இரண்டாவது மலையாகிய விசாரணையாம்.

 

(3) ஆசாரியனை யடைதல், உபதேசம் பெறுதல், அவ்வுபதேச மொழிகளை விசாரித்தல், உண்மை யறிதல் என்னு மிவ்விரண்டாவது மலையிலிருந்துஉபதேச நெறியில் நிற்றற் பொருட்டு மனத்தை யடக்குதல் மூன்றாவது மலையாகிய தனுமானசியாம்.

 

(4) மனத்தை யடக்கி ஆத்மானுசந்தானம் செய்தல் நான்காவது மலையாகிய சத்துவாபத்தியாம்.

 

(5) ஆத்மானு சந்தானத்தா லுண்டாகும் ஆனந்தத்தில் நிலைத்து நிற்றலே ஐந்தாவதாகிய அசம் சத்தியாம்.

 

(6) காண்பான் காட்சி காட்சிப் பொருள் என்னும் திரிபுடியற்ற நிலையேஆறாவது மலையாகிய பதார்த்தா பாவனை. (பதார்த்தங்களின் தோற்ற மறுதல் பதார்த்தாபாவனை. இதுவே 'முழங்கால் முறிச்சான்' எனப்படுவது. முழங்கால் முறிந்தால் போவதெங்கே? பதார்த்தங்களின் தோற்ற மில்லாவிட்டால் உலக மெங்கே?)

 

(7) சகஜ சமாதி நிலையே துரிய பூமியாம்.

 

என்றிவ்வாறு ஞானசப்த பூமிகளின் நிலை நூல்களில் விரிவாகக் கூறப் பட்டிருக்கின்றன.

 

எனவே, இந்த ஞானசப்த பூமிகளிலேறிச் செல்வோரே ஸ்ரீநிவாசனையடைந்து இன்புற்று வாழும் நிலையை யெய்துவர் என்பதைக் காட்டுவதேஏழுமலையின் தத்துவமாம். ஏறுதலின் அருமையை விளக்கவே மலை யமைக்கப்பட் டிருக்கின்ற தெனவறிதல் வேண்டும்.

 

இதுகாறும் ஏழுமலைக ளெவை யென்பதைக் குறித்துச் சிறிது விளக்கினோம். இனி, சேஷன் மலையுருவா யிருக்கின்றா னென்பதைப்பற்றிச் சிறிது விளக்குவோம்.

 

சேஷம் என்பதற்கு மிகுதி என்பது பொருளாம். அது இங்கு அறியத் தக்கவைகளெல்லாமழிந்த பிறகு அழியாமல் மிகுந்திருப்ப தெதுவோ அதனைக் குறிக்கும். அவ்வாறிருப்பது தான் மாயை. சேஷன் என்னும் பெயர் மாயையைக் குறிப்பதாகும். அது உலக காரணமாயிருத்தலின் ஆதிசேஷனாம். அந்த மாயையினிடத்தேதான் பெருமானெழுந்தருளி யிருக்கின்றான். பெருமானைக் காண விரும்புவோர் அந்த மாயையைக் கடந்து சென்றால் தான் சேவிக்க முடியும். 'மாயை யெனும் திரை நீக்கி நின்னை யாரறிய வல்லார்' என்றார் பெரியாரும். அன்றியும் ஞான பூமிக ளேழனுள் திரிபுடித் தோற்றமுள்ளவரை மாயைத் தோற்றம் நீங்காது; அதன்பிறகே மாயை நீங்கும்; ஆத்ம சாக்ஷாத்கார முண்டாம். சேஷகிரி யென்றழைக்கப்படுதற் கிதுவே காரணமாம்.

 

'அற்றது பற்றெனில் உற்றது வீடு'எனப் பெரியா ரருளியவாறு சகல பற்றுக்களையு மொழித்தலே சர்வேசுவானை யடையு முபாயமா மென்னும் பொருளையே மொட்டை யடித்தல் காட்டுவதாகும்.

 

ஆகவே, தூலத்தைக் காட்டுதல் வாயிலாகச் சூக்குமத்தை யுணர்த்த வந்த முன்னோர் முடிவான நிலையாகிய ஆன்ம சாக்ஷாத்காரத்தை யடையும் நெறிகளையும், அவ் வெல்லாவற்றிற்கும் அடிப்படையாகவுள்ள பக்தியையும், பக்தியோகம் ஞானம் என்னும் மூன்று வகைப்பட்ட மார்க்கங்களைத் தனித்தனி கைக் கொள்ளும் முத்திறத்தினரும் தத்தம் பக்குவ நிலைக்கேற்பக் கைக்கொண்டுய்ய வேண்டுமென்னும் நோக்கத்தைக் கொண்டே இவ்வாறு ஏழுமலையாக வமைத்திருக்கின்றன ரென வறிந்து அந் நெறியைப் பின்பற்றிச் செல்லுதலே அறிவுடையோர்க்குக் கடனாம்.


"பஞ்சினை பூழித்தீப்போல் பல சன்ம விவித வித்தாம்

சஞ்சித மெல்லாம் ஞானத்தழல் சுட்டு வெண்ணீறாக்கும்

கிஞ்சி தாகாமியந்தான் கிட்டாமல் விட்டுப்போகும்.''

 

என்று கைவல்லிய நவநீதம் கூறுவது போல, ஞானத்தை யடைந்தவர்க ளுடைய சஞ்சித கன்மங்களை அந்த ஞானாக்கினி யெரித்துவிடும். ஆகாமிய கர்மமும் நெருங்காது. ஆகவே, ஞான மெய்தினோர் சகல பாவங்களினின்று நீங்கிப் பரிசுத்த ராவர் ஞான நூல்கள் நுவல்வதை யனுசரித்துஞானமாகிய ஏழுமலைக்கு வேங்கடம் (சகல பாவங்களையும் பரிகரிப்பது) என்றுபெயரிட்டது மிக்க பொருத்தமுடையதாதல் காண்க. இதனையே தல புராணம் வேடன் கதையால் விளக்குகின்றது. துர்க்குணக் காட்டில் அலைந்து நீசத் தன்மை யடைந்த சீவனே வேடன். ஆனால் அவன் உண்மையில் நீசனல்லன், உயர்குலத் துதித்தவனே. துஷ்டச் சேர்க்கையால் கெட்டான். ஞானத்தால் பரிசுத்தனானான். சீவன் தான் பிரஹ்ம சொரூபனாகிய உயர்குலத்தவனே யென்பதை யுணராமல் கெட்டான். தன்னை யறிதலாகியஞானத்தை யடைந்தபின் நீசத்தன்மையாகிய சீவத்தன்மையை விட்டுப்பண்டேபோல் சிவத்தன்மையை யடைந்தான் என்பதே இக் கதையி னுட்பொருளாம். புராணம் இப்படித்தான் சொல்லும். அவ்வளவுதான் அதற்கதிகாரம். அவற்றினுண்மையைக் காணவேண்டு மென்னும் கருத்தோடு பார்ப்போமாயின் அது உண்மைப் பொருள்களை யுருட்டித் திரட்டித் தரச் சர்வசித்தமாய்க் காத்துக் கொண்டிருக்கும். அவ்வாறின்றி யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தா வண்ணம் புராணம் கூறுவதையெல்லாம் அப்படியே யெடுத்துக் கொள்வதனால் ஒரு பயனுமுண்டாகாது. ஆகவே, இதுகாறுங் கூறிய உண்மைகளையும் பிறவற்றையும் அனுபவ ஞானிகளை யடுத்துத் தெரிந்துகொண்டு அவ்வா றொழுகு மாற்றலை யளித்துக் காத்தருளுமாறு ஏழுமலையிலுள்ள எல்லாம் வல்ல பெருமானை இரவும் பகலும் இறைஞ்சி நிற்போமாக.  

ஆனந்த போதினி – 1931 ௵ -

ஆகஸ்ட், செப்டம்பர் ௴

No comments:

Post a Comment