Thursday, August 27, 2020

 

என் பிரார்த்தனை

("வீரசக்தி'')

      தூவிப் பறக்கும் தூற்றல் துளிகளினூடே திரிந்து ஒரு இளந்தென்'றல் காற்று சில்லென என்னைத் தழுவியதுதான் தெரியும் - நான் என்னை மறந்தேன். இல்லை. நான் என்னையே மறந்து விட்டால் என் பக்கலிலே கிடந்த நாற்காலியில் அன்னநடை நடந்து என் உள்ளத்தையே விலைக்கு வாங்க வந்தவள் போல், அவள் அமைதியுடன் வந்து உட்கார்ந்த அதிசயத்தைக் கண்டிருக்க முடியுமா? அல்லது கணீர் என்று மணியடித்தது போல் அளவற்ற அமுத வார்த்தைகளை அவள் பேசியவற்றைத்தான் நான் கேட்டிருக்க முடியுமா? ஆம். நான் என்னையே மறக்காது அவளையே உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.

இதுவெல்லாம் அவ்வளவு ஆச்சரியப்படக்கூடிய விஷயமல்ல. ஆனால் அவள் சொன்ன ரத்தினச் சுருக்கமான பொருள் செறிந்த சொற்களைத் தான் என்னால் அளவிட முடியவில்லை. இயேசுவின் தர்மத்தை மறந்து போரிடும் இவ்வுலகத்தின் மேல் தான் அவளுக்கு எவ்வளவு பரிதாபம் தெரியுமா? உலகின் எதிர்காலப் பாதுகாப்புக்கு எத்தனை வழிகள் கூறுகின்றாள்? அரசியல் நிபுணர்களுக்குங்கூட வழிகாட்டும் வன்மை அவளுக்கு உண்டென்பது தெரிகின்றது. ஆஹா, காவியங்களை அழிக்கப்புகும் நண்பர்களுக்கு அவள் அறிவு புகட்டுகிறாள். தேசியப் பற்றுத்தான் அவளுக்கு இன்ன அளவிற்றான் இருக்கிறது என்பதில்லை. மகாத்மா மாதவ முனிவர் என்று அடிக்கடி கூறுகின்றாள். கல்வி வளர்ச்சியே நலந்தரும் என்று எவ்வளவு உருக்கத்துடன் கூறினாள் தெரியுமா? 'பேரறிஞரைப் போற்றுக' என்று புகட்டினாள்.

நான் பிரக்ஞை கொண்டவன் போல் நிமிர்ந்தபடியே விழித்த கண்ணோடு உட்கார்ந்து கேட்டுக்கொண் டிருந்தேன். அவள் சிறிது என்னை உற்று நோக்கிவிட்டு மறுபடியும் சொன்னாள். பழந்தமி ழிலக்கியத்தின் இனிய கற்பனைக் கவிகள் பலவற்றை எவ்வளவு இன்பமாக எடுத்து வருணித்தாள் தெரியுமா? அப்படியே கற்பனா உலகத்திலே சஞ்சரிப்பது
போலிருந்தது அவள் கூறும் போது. ''கரும்பின் வெற்றி, குற்றாலப்பவனி. தலைவன் படும்பாடு, கார்தங்கி நின்றகொடி', என்று பெயரிட்டுக் கொண்டு தமிழின் சுவையை அப்படியே எடுத்துக் கொடுப்பது போல் பிரசங்கித்தாள். இப்பொழுதே வாசகசாலைக்குச் சென்று தமிழ் இலக்கியங்களையெல்லாம் எடுத்து உடனே படித்துவிட வேண்டும் என்றுகூட எனக்குத் தோன்றி விட்டது.

போகட்டும் தமிழ் இலக்கியத்தில் இவள் கைதேர்ந்தவள் என்று மட்டும் முடிவு கட்டி விடலாம் என்றால் முடிகின்றதா? விவாதம் செய்வதிலே அதிகமாகத் தேர்ந்தவள் என்று அவள் செய்த விவாதத்திலிருந்தே தெரிந்து விட்டது. தோழர் டி. கே. ஸியின் நடையைப் பற்றிக் குணமும் கூறுகிறாள்; குற்றமுங் கூறுகிறாள். எந்த வகையிலும் அவள் பேச முடியும் போலும். "எதை எரிப்பது", என்று கம்ப ராமாயணத்தை எரிக்கக் கூடாது என்று சரியான காரணங்களுடன் விவாதிக்கிறாள். அவள் அறியாதது இனி வேறொன்றும் இல்லை என்றுதான் முடிவு கட்ட வேண்டிய திருக்கிறது.

காதற் கதைகள், காதற் கவிகள், சரித்திரக் கதைகள், புதுமைப் பாடல்கள், கற்பனைச் சித்திரங்கள் எல்லாம் அவளுக்குத் தண்ணீர் பட்ட பாடு தான். அவள் சொல்லும் போதுதான் நான் என்னையே மறந்து விடும்படி வந்து நேர்ந்ததே யொழிய, தென்றல் என்னை ஒன்றும் செய்துவிட வில்லை. இருந்தாலும் இவளுக்கு இவ்வளவு திறமை எங்கிருந்துதான் அகப்பட்டது? தமிழ் நாட்டின் திறமையெல்லாம் ஒருங்கு சேர்ந்து இவனிடம் பிரதிபலிக்கிறது என்றே அலறிவிடலாம் என்றுகூட எனக்குத் தோன்றுகிறது.

விஞ்ஞானம், அரசியல், இலக்கியம், விவாதம் இந்த உலக வியவகாரங்களில் மட்டுமல்ல; ஆத்மார்த்திகமான ஞானமார்க்கத்திலும் இவள் வல்லவள் என்பதற்குச் சந்தேகமே யில்லை. உலகத்தை வெறுத்து உலவும் ஞானமங்கையோ இவள் என்றுதான் சந்தேகப் படலாம். இந்த அழகி ஏன் ஞான முதிர்ச்சி பெற்று மாயையை விட்டு விலக எத்தனிக்கிறாள் என்று பரிதாபங்கூட நமக்கு ஏற்பட்டுவிடும். "இவள் என்றும் என்னிடமே இருக்க வேண்டும். இந்த உலக மாயையிலே சிக்குண்டு என்னுடன் இன்பதுன்பங்களை அனுபவிக்க வேண்டும். இறைவா! இவளுக்கு பாரமார்த்திக ஞான மேற்பட்டு உலகை வெறுத்துவிடக் கூடாது'' என்று என் மனதிற்குள்ளேயே பிரார்த்தித்துக் கொண்டேன். அப்போது அவளின் வதனத்திலே தோன்றிய மோஹனப் புன்னகையைக் கண்டவுடன் தான், "ஆஹா, இவள் நம்மை விடவே மாட்டாள், நான் வெறுத்தாலும், அவள் என்னை வெறுத்துவிட மாட்டாள் போற் தெரிகின்றது" என்று எனக்கு நம்பிக்கை பிறந்தது.

இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கும் போதே வைத்தியம், சோதிடம், ஆசனப் பயிற்சி முதலியவற்றை எடுத்துக்கூற ஆரம்பித்து விட்டாள்? எனக்குச் சந்தேகம் வந்து விட்டது! “இவள் மானிட மங்கையல்ல, தேவ மங்கையோ என்னவோ? அதனால்தான் இவளுக்கு இவ்வளவு தெரிகின்றது'' என்று எண்ணிய என்னைக் கன்னத்தில். அறைவது போல் “ஹஹ்ஹா", என்று சத்தமிட்டுச் சிரித்தாள். "நான் மானிட மங்கைதான்" என்று ஓலமிடுவதுபோ லிருந்தது அவளின் சிரிப்பு. ஆனால் ஏன் பூமாரி பொழிய வேண்டும்? சலசல வென்று மேலிருந்து எங்கள் இருவர் மேலும் உதிர்ந்தது.

அடடா, பூக்களல்ல, மழை பலமாக நான் உட்கார்ந்திருந்த ஜன்னல் வழியாக என் மேல் விழுந்துகொண் டிருந்தது. அப்போதுதான் நான் என்னுடைய அறையின் ஜன்னலின் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு “ஆனந்தபோதினி"யின் 28-வது தொகுதியைப் படித்துக்கொண் டிருக்கும் போதே கற்பனையில் சஞ்சரித்து விட்டேன் என்று தெரிந்தது. ஆனந்த போதினித் தொகுதியின் மேலே கூட மழைத்துளி விழுந்து புளகாங்கிதமடையச் செய்து விட்டது. உடனே உள்ளே சென்று முழங்காலிட்டு, “இறைவா, தமிழ்நாட்டிலே தமிழர்களுக்கென்று நடந்துவரும் ஆனந்தபோதினியை மேன்மேலும் வளரச் செய்வாய்!" என்று பிரார்த்தித்தேன்.

ஆனந்த போதினி – 1943 ௵ - ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment