Thursday, August 27, 2020

எனது தொண்டு 

நான் வெகு நாளாக நமது பாரத அன்னையின் அன்பிற்குரிய ஓர் புத்திரி ஆகவேண்டு மென்னும் விருப்பமுள்ளவளாகவேயிருந்து வந்தும், அதற்கு இதுவரையிலும் இடந்தராது தடுத்து வந்தது. இப்பொழுது அன்னையின் கிருபையால் எனது கோழைத்தனத்தையும் அநாவசியமான வெட்கத்தையும் சிறிது அகற்றி, அவளுடைய தொண்டியற்றத் துணிந்து விட்டேன். என்னை இவ்வளவு நாட்களாக அன்னையின் தொண்டு செய்ய இடந்தராது அமுக்கி வந்து கொண்டிருந்த எனது மடமையையும் வீண் அபிமானம் அல்லது ஆடம்பரப் பித்தத்தையும் இப்பொழுது முற்றிலும் வெருட்டி விட்டேன். ஆனால் நான் என்னமோ பெரிய ஆச்சரியப்படத்தக்கதான தொண்டு செய்து கொண்டிருக்கிறேன் என்று எனது பிரிய சகோதரிகள் நினைக்க வேண்டியதில்லை. அதுவோ வெகு சிறிது, லேசானது, எல்லோரும் சாதாரணமாகச் செய்யக்கூடியது - செய்து கொண்டு வருவதும் தான். அதுவே எனக்கு இவ்வளவு நாள் வரை சாத்தியமாகாது இருந்து வந்தது. காரணம் வேறு ஒன்றும் கிடையாது- அதைச் சொல்வதென்றால் எனக்கே வெட்கமாக இருக்கிறது. அன்னையின் அன்பிற்குரிய புத்திரிகள் என் காரணத்தைக் கேட்டால் என்னை எள்ளி நகையாடுவார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். அவர்கள் மதியூசி அவர்களை தியாகிகள் என்றும் சொல்லலாமன்றோ? ஆகையால் அவர்கள் என் விஷத்தியல் இரக்கமும் பிரியமுமே கொள்வார்கள். இவ்வளவிற்கும் எனது தொண்டு வெகு சிறிதே. இச் சிறிய தொண்டியற்றவும் எனக்கு இதுநாள் வரையிலும் மனதிற்கு திடம் வரவில்லை. அதற்கும் எனது கல்வியறிவின் காரணமென்று முக்காலும் எண்ணுகிறேன். கல்வியறிவுடைய சகோதரிகள் என்போன்ற அநாவசியமான வெட்கமும் பயமும் கொள்ளார்களென்று நம்புகிறேன். நான் நினைப்பது சரியானதோ தப்பானதோ?

 

இனி நான் அன்னைக்கியற்றும் தொண்டு இன்னதென்று சொல்லுகிறேன். கதர் கட்டத் தொடங்கி விட்டேன். ராட்டினமும் தினம் நாள் தவறாது சுற்றி வருகிறேன். எனது தொண்டு இதுவே யாகும். பகட்டுப் புடவை - பட்டுப் புடவை இவைகளை நிராகரித்து விட்டேன். கதரையே பிரியமான ஆடையாகக் கட்ட ஆரம்பித்து விட்டேன். பகட்டுத் துணிகளின் மிரட்டல் இனிமேல் என்னிடம் சாயாது. வெகுநாளாக என்னிடம் குடி கொண்டிருந்த வீணான ஆடம்பர அபிமானத்திற்கு இனிமேல் கடுகளகாவது என்மனதில் இடம் கிடையாது. அது வேறு இடங்களைத் தேடி அலையட்டும். பிரிய சகோதரிகள் யாருமே அந்தப் பிசாசிற்கு மனதில் இடம் கொடாதீர்கள். அது வெகு சாமர்த்தியமாக நம்மிடம் குடிகொள்ள இடம் தேடிவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் அதற்கு எப்படியோ நம்முடைய மனதில் குடிகொள்ள இடம் கொடுத்து விடுகிறோம். ஆனால் பிறகு அதைப் போகச் செய்யும் பாடு கொஞ்ச நஞ்சமன்று. பிரியமாகக் கதரைரித்து உடுத்துவோம். கதர் பகட்டுத் தனமுள்ள வேசி அன்று. அது குலஸ்திரீ போன்றது. அதை நாம் ஆதரியாம லிருந்தால் அது நம்மைத் தேடிவராது. உத்தமமான ஓர் குடும்ப ஸ்திரி போன்றது. கௌரவிக்கத் தகுந்தது. அநேக காரியங்களை அநாயாஸமாகச் செய்து முடிக்கும் வல்லமையுடையது. சாந்தத்தைக் கொடுக்கும் ஸ்வபாவம் உடையது. சத்திய நெறியில் மக்களை வைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது.

 

ஆனால் கிராமங்களிலுள்ள என்போன்ற சகோதரிகளுக்கு இந்த விஷயத்தில், அதாவது, கதர் உடுத்து ராட்டினம் சுற்றும் விஷயத்தில் அநேக தடங்கல்கள் இருக்கின்றன. ஏன் எனிலோ, நம் விஷயத்தில் கல்வி யறிவு அவ்வளவுதான். நாம் பத்திரிகைகளைக் கையாலும் தொடுவதில்லை - -- கண்ணாலும் பார்ப்பதில்லை. உலக விஷயங்கள் யாராவது சொல்லக் கேட்டால் உண்டு -அவ்வளவுதான். போதாக் குறைக்கு கண்ணைக் கவரும் பகட்டுத் துணிகள் சொற்ப விலைக்கு மூட்டை மூட்டையாக மூலை முடுக்குகளிலும் வந்து அலைகின்றன. அதைப் பார்த்தால் கதர் கண்ணுக்குப் பிடிப்பதில்லை என்று மட்டுமன்று, விலை அதைவிட கதருக்கு இரண்டு மடங்கு அதிகமாகவும் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஏழைச் சகோதரிகள் - பட்டிக்காட்டுச் சகோதரிகள் கிராமாந்திரச் சகோதரிகள் - வேலை ஓய்வில்லாச் சகோதரிகள் – படிப்பில்லா என் போன்ற வருந்தத்தக்க சகோதரிகள் டாம்பீகக் காற்றும் ஆடம்பரத்தீயும் மும்முரமாகப் பற்றி எரியும் இந்த நாட்களில் அதில் அகப்படாது தப்புவதும் அசாத்தியமே. நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமன்று. ஆனால் எல்லாம் நம்முடைய மனதைப் பொறுத்ததுதான் என்ற விஷயம் எனக்கு இப்பொழுதே தெரிய வந்தது. இருந்தாலும் நம்முடைய சொந்த மனம் போல் நடப்பதற்கும் எவ்வளவோ இடைஞ்சல்கள் உண்டு. கொஞ்சம் தைரியத்தை மட்டும் விடாமலிருந்தோமானால் எல்லாம் விரைவில் கைகூடு மென்பதில் சந்தேகமில்லை. வீணாக நம்மைப் பரிகாசம் செய்கிறவர்களையும் - நாம் இது விஷயமாகச் செலவிடும் சமயம் வீண் என்று நம்மைக் கோபிப்பவர்களையும் முதலில் சமாதானம் செய்ய வேண்டும். நம்முடைய சொந்த வேலைகளை நாம் எவ்வளவு முக்கியமாகவும் கவலையுடனும் செய்து வருகிறோமோ அது போலவே ராட்டினம் சுற்றுவதும் ஒன்று என்பதையும் நினைத்து அதற்கும் சிறிது சமயத்தை மீத்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஒரு மணி சாவகாசமாவது ராட்டினம் சுற்ற வேண்டும். அதை நாம் முக்கியமான கௌரவமான ஓர் வேலையாகக் கருத வேண்டும். தினம் ஒருமணி நேரம் ராட்டினம் சுற்றுவது என்று நான் முடிவு செய்துவிட்டேன். அதற்குச் சில நாட்களில் பகலில் சமயம் கிடைப்பதில்லை யாகையால் இரவு படுக்கப் போகுமுன் விளக்கை வைத்துக் கொண்டு ஒருமணி சாவகாசம் நூல் நூற்று விட்டே படுப்பேன். என் விஷயத்தில் இதில் இவ்வளவு சிரமம் இருப்பதால்தான் இச் சிறு விஷயத்தையும் எனது தொண்டு என்று பெருமையாக நான் சொல்ல வந்தது. இது விஷயத்தில் என்போன்ற மற்ற சகோதரிகளும் ஊக்கம் கொள்ள வேண்டுமென்றே இதை ஆனந்தனில் எழுதவும் துணிந்தேன். சகோதரிகள் எல்லோரும் சிறிது கவலை எடுத்துக் கொண்டு விட்டால் நம் நாட்டில் பஞ்சம் பறக்கும்! நெஞ்சம் களிக்கும்! பாரத அன்னை அருள்புரிவாளாக.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - அக்டோபர் ௴

 

 

 

No comments:

Post a Comment