Saturday, August 29, 2020

 

ஐய நீக்கம்

(பூ. ஸ்ரீநிவாசன்)

(குறிப்பு: ''ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்'' என்னும் சஞ்சிகை "சந்தேகந் தெளிதல்” என்னும் தலைப்பின் கீழ் நண்பர்கள் கேட்கும் சந்தேகக் கேள்விகளுக்கு விடையிறுத்து வருவதுபோல், "ஆனந்தபோதினி 'யும் செய்து வருவது நலம் என்று சில நண்பர்கள் அடிக்கடி கேட்டு வருகின்றனர். இப்போது எம்மால் தொடர்ச்சியாக எழுதப்பட்டு வரும் “பிரம சூத்திரம்" முடிவு பெறும்வரையில் அவ்வாறு செய்வது முழுதும் சாத்தியமில்லையாயினும், அவகாசம் கிடைத்த போதெல்லாம் இயன்ற வரையில் எழுத நிச்சயித்துள்ளோம். ஆகலின் முதலில், ஓர் கிறிஸ்தவ நண்பரால் விடுக்கப்பட்ட ஐயவினாவிற்கு விடைதர முயல்வாம்.)

“எங்கள் சுவாமி மனித வாழ்க்கையின் ஒழுகலாற்றினைச் செவ்வைப்படச் சொல்லியும் சொல்லியவாறு ஒழுகியும் காட்டியது போல, உங்கள் சுவாமிகளெனச் சொல்லப்படும் இராமனும் கிருஷ்ணனும் ஒழுகிக் காட்டியிருக்கிறார்களென்று சொல்ல முடியாதல்லவா?''                                                       சி. வி.

எங்கள் சுவாமி என நண்பர் ஏசுநாதரையே சுட்டுகின்றாரெனக் கருதுகின்றோம். ''ஏசுவானவர் மலைச் சொற்பொழிவு முதலியவற்றின் வாயிலாகப் பல மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாப் போதனைகளைச் செய்தார். 'ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தைக் காட்டு, மேலாடையைப் பறிப்பவனுக்கு உன் மேலங்கியையும் கொடுத்து விடு' என்பன போன்ற போதனைகளுக்கிணங்கத் தம்மைச் சிலுவையிலறைந்து கொல்ல முயன்ற காலத்தும், அவர்களை எதிர்த்துப் போரிடாமல், தம்மாவியையும் கொடுத்தார். இராமனும் கிருஷ்ணனும் இவ்வாறின்றிப் பலரைக் கொன்றிருக்கின்ஈர்கள், அன்றியும் அவர்கள் மாந்தர்க்கு நற்போதனைகளும் செய்யவில்லை.'' என்பன போன்ற கருத்துக்களை உள்ளத்திற்கொண்டே நண்பர் இவ்வினாவை விடுத்திருக்கிறார் எனக் கருதுகின்றோம்.

கடவுள் எனப்படும் பொருளின் உண்மையில் நம்பிக்கை யுடையோரனைவரும் உலக முதற்பொருளாகிய அப்பரவஸ்து ஒன்றேயென்பதை உடன்படாமல் தீராது. எனவே கடவுள் ஒருவரேயன்றிப் பலரல்லர் என்றே ஒத்துக் கொள்ளுவரென்பதில் சந்தேகமில்லை ஒரு ராஜ்யத்திற்கு ஓரிறைவ னிருத்தலியையுமேயன்றி பலவரசர்களிருத்த லியையாது. அவ்வாறிருப்பினு அவரைப் பல பெயர்களாலும் பல வடிவங்களாலும் நாம் அழைத்து வழிபட்டு வருகின்றோம், எனினும் உலகச் சமயங்கள் வெவ்வேறு பெயர்களால் அழைத்து வருதல்போல், வெவ்வேறு பெயர்சளை யடைய கடவுளர் வெவ் வேறாகப் பலரிலர். ஜலம், நீள்ளு, பானி, வாட்டர் என்னும் எல்லாப் பெயர்களும் தண்ணீராகிய ஒரு வஸ்துவையே குறிப்பது போல, நாராயணன், சிவன், அல்லா, எகோவா என்னும் பெயர்களெல்லாம் ஒரு வஸ்துவையே குறிக்கும் பல பெயர்களாம் என்பதே மூதறிவாளர் துணிபு. அப் பரம்
பொருள் ''அங்கிங்கெனாதபடிஎங்கும் பிரகாசமாய்'' சர்வ வியாபியாய், பேரறிவு பேராற்றல்களுடைய தாய், சாத்தாய், சித்தாய், ஆனந்தமாய், இன்னோரன்ன பிற மனிதர்களால் கணிக்கவியலாத இலக்கணங்களுடையதாய் ஒளிர்வதாமென்பதும் கடவுளாராய்ச்சியாளர் கொள்கை.

அப்பொருள் உருவுடைய தென்றும் அருவான தென்றும் இரண்டு முடையதென்றும் பலரும் பலவிதமாகக் கூறினும் பெரும்பாலோர், அப் பர வஸ்து அவசியம் நேர்ந்தபோது உருத்தாங்கி மாநிலத்துத் தோன்றுவது முண்டென்பதை அங்கீகரிக்கின்றனர். ''தருமம் தாழ்ந்து அதருமம் அதிகரிக்கும் போதெல்லாம் நான் அவதரிக்கிறேன்'' எனக் கண்ணன் கழறிய தாகக் கீதை கூறுகின்றது. இங்கு அவசியமாவ தியாதெனின்: மாந்தர் சென்னெறி யறியாது நன்னெறி விட்டுப் புன்னெறி போகத் தொடங்குங்கால் அவர்களுக் சமத்தாறு காட்டலேயாகும்.

மாந்தர்களின் நடையுடை பாவனைகளனைத்தும் மனோ நிலையும் எக்காலத்தும் எவ்விடத்தும் ஒரே தன்மையா யிருத்தலில்லை. காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்பப் பலவகைப் பட்டிருக்கும். அன்றியும் ஒரே காலத்தில் ஒரே தேசத்திலுங்கூட ஒரேவிதமாக விரா. கொடியோரையும் பகைவரையும் அடக்கியும் அழித்தும் பிரஜைகளைக் காக்கும் கருமத்தை மேற்கொண்ட காவலனுக்குரிய அறமும், நகைமுகமும் நல்லுரையும் உடையவனாய் யாவரையும் தன் வயப்படுத்திச் செல்வஞ் சேர்க்கும் தொழிலை மேற்கொண்ட வாணிபகுரிய தருமமும் ஒன்றாக விருத்தலியலாதன்றே. ஆகவே, அறமானது கால தேச கர்ம வேறுபாடுகளுக் கேற்ப வேறு பாடுடையதாகும். அன்றியும்,

தர்மமானது சாமானிய தருமம் என்றும் விசேஷ தருமம் என்றும் இருவகைப் பட்டிருக்கும். இவை ஒன்றற்கொன்று முரண்பாடுடையனவாக வாராய்ச்சியிற் றோன்றும். உதாரணமாக மூத்த சகோதரனைத் தந்தையாகப் பாவித்து அவன் சொற்படி நடந்து உற்றுழியுதவுதல் தருமம். ஆனால் விபீஷணன் இத்தருமத்திற்கு முரணாக வொழுகினான்.
அவனது செய்கையை யான்றோர் புகழ்ந்தே கூறுகின்றனர். இஃதெப்படிப் பொருந்தும். இவற்றுள் முன்னையது சாமானிய தருமம். தீச்செயலுக்குத் துணை செய்யலாகா தென்றெண்ணிச் செய்த காரியமாகலின் பின்னையது விசேஷதருமம். இவ்வாறே தருமத்தின் (அறத்தின்) துணிவு அதன்வழிச் செல்வோரானும் அறிதற்கரியதாகும். இவ்வாராய்ச்சி நாம் எடுத்துக்கொண்ட விஷயத்திற்குச் சம்பந்த மில்லாத தாகத் தோன்றினும் அறத்தைக் கூற வந்தவிடத்து அதனி யல்பும் கூற நேர்ந்ததெனக் கொள்க. இனி விஷயத்திற்குச் செல்வோம்.

இந்துமதம் புராணேதிகாச மதமன்று. எனவே, புராணங்களையும் இராமாயணம் பாரதம் போன்ற இதிகாசங்களையுமே ஆதாரமாகக் கொண்டுள்ள மதமன்று. மக்களுக் கத்தியாவசியமான சகல விஷயங்களும் இராமனும் கிருஷ்ணனும் தோன்றுதற்கு வெகு காலத்திற்கு முன்னரே கூறப்பட்டுவிட்டன. ஆகவே, புதிதாக யாரும் ஒன்றும் கூற வேண்டிய அவசிய மவ்வளவாக ஏற்பட்டிலது. பழைய போதனைகளைத் தவறாக மாந்தர்
பொருள் கொண் டொழுகுவராயின் திருத்தஞ் செய்யலாம். அத்தகைய திருத்தம் கிருஷ்ணாவதார காலத்திற் சிறிது நேர்ந்தது. ஆகவே, பகவான் கீதையை உபதேசிக்க வேண்டியதாயிற்று. உபநிடதம் பிரம சூத்திரம் என்னு மிவற்றோடு சேர்ந்து பிரஸ்சானத்திரயம் என் றழைக்கத்தக்க சிறப்பினை யுடையது அப்பகவான் உபதேசித்த கீதை. இராமாவதார காலத்தில் அத்தகைய உபதேசத்திற்கு அவசிய மின்மையின் அவர் யாதொன்றும் கூறாதொழிந்தனரென்க. அன்றியும் பாரதநாடு பண்டைக் ககலந்தொட்டு ஒழுக்கத்திற் றலை சிறந்து விளங்கும் நாடு என்பது மறுக்க முடியாத உண்மை. இது பற்றியே இது புண்ணியநாடு எனவும் விதந் தோதப்பட்டு வருகின்றது. சிற்சில காலங்களில் அறத்தைப் புறக்கணிக்கும் புல்லுருவிகன் தோன்றின வாயினும் அவை அப்போதைக் கப்போது களைந் தெறியப்பட்டு அறநெறி செவ்வைப் படுத்தப்பட்டு வந்தன. அப்புல்லுருவிகளைக் கல்லியெறிய வேண்டியதற்காகவே கடவுள் அக்கால் அவதரிக்க வேண்டியவரானார். அவ்வவதார காரணங்கள் பாகவத பாரத ராமாயணங்களில் நன்கு கூறப்பட்டுள்ளன.

இராமன் கிருஷ்ணன் இவர்களின் வாழ்க்கை மக்கள் வாழ்க்கைக்குத் தக்க வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போன்றிருந்ததே யன்றித் தவறான நெறியிற் செலுத்து வதா பிருக்கவில்லை. இராமன் “நியாய மத்தனைக்குமோர் நிலயமா" யிருந்தா னென்ப துண்மையே யாயினும் கிருஷ்ணன் அவ்வா றிருந்திலனே சிலர் ஐயுறவு கொள்ளலாம். ஆயர் வீடுகடோறுஞ் சென்று வெண்ணெய் திருடியது ஆயர்குல மாதர்களுடன் கூடிப் பல லீலைகள் புரிந்தது என்பவையோ அவ்வாறு அவர்கள் எண்ணுதற்குரிய காரணங்களா யிருக்கலாம். விளையாட்டி னியல்புகளை வர்ணிக்கப் புகுந்த புலவர்களின் செயல்களைக் குறித்தும் அவ்வாறு எழுதுமாறு அவர்களைத் தூண்டிய இலக்கண முறையைக் குறித்துமே நாம் குறை கூற வேண்டுமன்றி கிருஷ்ணனது ஒழுக்கத்தைக் குறை கூறுவது முறைமையாகாது. நகை இன்பம் முதலிய சுவைகளையும், உயர்வு நவிற்சி மிகையுயர்வு நவிற்சி முதலிய அணிகளையும் தாம் கூறப்புகும் சரிதையில் நிரப்புவதையே பெரு நோக்கமாகக் கொள்ளவேண்டிய நிலையிலிருக்கும் கவிகள் கிருஷ்ணனது பிள்ளைமையை - பால லீலையை சாமானியமான சிறுவர் எவ்வாறு செய்வார்களோ அந்தவகையில் வருணித்திருப்பது ஆச்சரியமல்ல. குப்பைகளைத் தள்ளி விலையேறப்பெற்ற மணியை யெடுத்தல் போல் கற்பனைக் களஞ்சியங்களாயெ கவிகளின் கற்பனைகளைத் தள்ளி உண்மையை யுணர்தலே உகந்த செயலாம். இதற்கு இரண்டோ ருதாரணங்கள் தருவோம்.

கிருஷ்ணன் சிறுவனாயிருந்த போதுதான் கோபிகைகளுடன் விளையாடினதாகச் சொல்லப்பட்டிருக்கக் காண்கின்றோம். அப் பாலப்பருவம் காம வெழுச்சிக்கும் நுகர்ச்சிக்கும் ஏற்றதா மென்பதைச் சிறிது ஆராய்வது அறிவுடையார் கடமையாம். மற்றொன்று: இராமாயணத்தில் இராமன் மிதிலைக்குப் போகையில் சீதையைக் கண்டு காமுற்றதாகக் கம்ப ராமாயணம் கழறுகின்றது. முதனூலில் இல்லாத இதனைக் கம்பர் காவியச் சிறப்பினிமித்தம் புதுவதாகப் புனைந்துரைத்தார். ஆகலின் இவற்றை - இச்சிறு விஷயங்களை - கவிகளின் கற்பனைகளை - ஆதாரமாகக் கொள்ளலாகது. அன்றியும் நாயக நாயகீ பாவமாகக் கதைகளியற்றுதல் மரபு. அம்முறையில் கண்ணனை நாயகனாகவும் அடியார்களை நாயகியாகவும் உருவகப்படுத்தி உள் பொருளமைத்துப் பாடிச் சென்றனர் பாவலர். இராமாயணம் முதலியவற்றிற்கு இரகசியார்த்தம் வேறிருத்தலும் காண்க. கிருஷ்ணன் பாண்டவர் அசுவமேதஞ் செய்த காலத்தில் ''யான் பிரமசாரி' எனக்கூறி யுறுதிப்படுத்தி காட்டி விகுத்தலும் காண்க. நிற்க,

இயேசுநாதர் ''ஒரு கன்னத்திலடித்தால் மறு கன்னமும் காட்டு'' எனக் கூறியது சந்தர்ப்பம் வேறு. அந்த முறையை யாவரும் கைக்கொள்ளின் உலகில் துஷ்டர்களின் கூட்டம் பெருகிச் சாதுக்கள் வருந்த நேரிடும். இந்த உபதேசம் எல்லாக் காலத்திலும் கைக்கொள்ளத் தகுந்த அனுபவசாத்தியமான ஒழுக்கமுமாகாது. அன்றியும், ஏசு தோன்றிய தேசமாந்தரின் மனோ நிலைக்கு அவ்வுபதேசம் அச்சமயத்திற்கு ஏற்றதா யிருந்திருக்கலாம். இராமன் மனைவியை இராவணன் அபகரித்துச் சென்றான். இப்போது இராமன் கடமை
யென்ன? ஏசுவின் உபதேசம் ஈண்டுப் பயன்படுமாறெங்கன்? மாந்தர் தத்தம் மனோ நிலைமைக்கேற்ப மேற்கொண்டுள்ள கருமங்களைச் செவ்வனே நடத்த அத்தற்குரிய தர்மங்களைக் கைக்கொள்ளுதல் இன்றியமையாச் செயலாகும். க்ஷாத்திர தர்மத்தைப் பெற்றிருக்க வேண்டிய க்ஷத்திரியன் கோழைத் தன்மையை அல்லது சாதுக்களின் தர்மத்தைப் பெற்றிருத்தல் பெருமை தருஞ் செயலாமோ? உலகியல் ஈன்கு நடக்க சகல தருமங்களும் வேண்டும். அவற்றைச் செய்யுங்கால் நான் செய்கிறேன் என்னும் அகம்பாவத்தோடு செய்யாமல் நிஷ்காமியமாகத் தன்னைக் கடவுளின் கருவியாகக் கருதிச் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணன் கீதையின் வாயிலாக உபதேசித்துள்ளார். இது பற்றியே "எனக்கு அரசு வேண்டாம்; கொலைத் தொழிலுக்கிசையேன்" எனக் கூறிய தருமனுக்கும் அருச்சுனனுக்கும் ஷத்திரிய தர்மத்தைக் கூறிப்போர் செய்யுமாறு தூண்டுகிறார். ஆகவே, அவர் குற்றமற்ற வாழ்க்கையை நடத்தியதோடு உலகியலையும் நன்கு நிலை நாட்டினாரென்பது வெள்ளிடை மலையாம்.

மூர்க்கனுக்குச் சாந்தமும் சாதுத்தன்மையெனக் கருதிக் கோழைமையைக் கொண்டோர்க்கு வீரமும் உண்டாக்கி உலகியலைச் சமநிலையிலுய்த்து நடாத்தக் கருதிய கடவுள் ஏசுவாகத் தோன்றி, அத்தேயத்தினர்க் கேற்பவும், கிருஷ்ணனாகத் தோன்றி இத் தேயத்தினர்க் கேற்பவும், உபதேசித்தும் ஒழுகியும் சென்றார் என்று கொள்ளுதலே சாலச் சிறப்புடைத்தாம்.

ஆனந்த போதினி – 1937 ௵ - ஏப்ரல் ௴

 

 

No comments:

Post a Comment