Tuesday, August 25, 2020

 

அம்மையின் பெருமை

 

1. சிவபெருமானும், அம்மையும் வேறல்ல. சிவபெருமானே அம்மையாயும், அம்மையே சிவபெருமானாயும், உலகத்தைக் காத்து ரட்சிக்கின்றனர். " சக்தியும் சிவமுமாகித் தாணுவாய், செகத்திற்கெல்லாம் முத்தியை யளிக்கும் நாத முதல்வனைப் போற்றி'' என்று பெரியோரு முரைத்துளார். அல்லாமலும், எம்பெருமான் தம் திவ்விய சொரூபத்தை யடி யார்க்குக் காட்டியருளும் பொழுது, எவ்விதத் தோற்றத்துடன் பிரகாசிக் கின்றார்? பாதி யம்மை பாதி சிவம். ஆகையால் அம் முழுமுதற் கடவுளே தாயாகியும் தந்தையாகியும், அன்பன் வேண்டிய தோற்றத்தில் காட்சி கொடுத்து அருள் புரிகின்றார்.

 

2. பெற்றோர்களில், தந்தையைப் பார்க்கிலும் தாயை நேசிப்பதும், அன்புடனாதரிப்பதும், உலகவழக்கம். தாயும், பிதாவைப்பார்க்கிலும் பிள்ளை எவ்விதமான குற்றத்தைச் செய்தபோதிலும், தன்னையே கடிந்த போழ்திலும், மன்னித்து ஏற்றுக்கொள்ளுகிறாள், நேசிக்கிறாள். சில சமயங்களில் மக்களைக் காப்பாற்றுவதற்காக, இவ்வாழ்க்கையை யர்ப்பணஞ் செய்து இறக்கின்றாள். இத்தாயிவ்விதம் நேசித்தால் செகன்மாதாவின் அன்பை யாராலளவிடக் கூடும்? நாம், அவ்வம்மையை அன்னியோன்னிய அன்புடனும், பக்திவிசுவாசத்துடனும், நேசித்து, பூசித்து, அவளின் திருவருளைப் பெற்றால், இப்பிறவிக்கடலைத் தவிர்த்துப் பேரின்பசாகரமாகிய முக்தியடைவது நிச்சயம் இதனாலன்றோ, உலகப் பிரசித்திபெற்ற சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரும், காளிகாதேவியை இஷ்ட தெய்வமாகப் பாவித்து அவ்வம்மையினருளால் பிரம்மானந்த நிஷ்டையை யடைந்தனர். அம்மகாத்மா, தம் செகன்மாதாவின்மே லிருக்கும் அன்பார்ந்த வைராக்கியத்தால், எல்லா மாதர்களிலும் அவ்வம்மையின் சொரூபம் படிந்திருப்பதைக் கண்டு, அவர்களை யுலகமாதாவாகப் பாவித்துக் காம விச்சைகளைத் தவிர்த்தனர்.

 

3. எவ்விதமான ரகசியமாயிருந்தாலும், எவ்விதமான குற்றம் செய்திருந்தாலும், எவ்விதமான தீச்செயல்களில் மூழ்கியிருந்தாலும், மக்கள், தங்களன்னையிடம் சொல்லி, அப்பிழைகளுக்காக, மனஸ்தாபப்பட்டு, மன்னிப்புப் பெறக் கூச்சப்படமாட்டார்கள். ஏன்? தங்கள் தாய்மார், அளவிடப்படாத அன்புடையவர்களென்றும், எப்பாதகத்தைச் செய்திருந்த போதிலும் தங்களறியாத் தன்மைக்காக இரங்கி, அன்புமேலீட்டினால் தயை கூர்ந்து, அறிவூட்டி, மேலும் இப்பேர்ப்பட்ட குற்றங்களைச் செய்யா வண்ணம் பாதுகாத்து வைப்பார்களென்னும் நம்பிக்கையாலன்றோ! நம்மனைவரையும் ஈன்றெடுத்த மாதாவினளவிடப்படாத வன்பை யார் தான் கூறவல்லார்? உலகங்களுக்கெல்லாம் தாயாகிய அம்மையை யார் தான் மறக்கவல்லார்? எங்கும் வியாபித்து, எல்லாம் தானேயாய், உலகத்தைத் தாங்கும், மகத்துவம் தங்கிய தாயை மறந்து முய்ய வழியுண்டோ?

 

4. இவ்வித வன்புள்ள மாதா, எந்நேரமும் நம்மைக் காப்பாற்றும் ஆசையுடன், அணுவுக்குளணுவாய்த் தோன்றிப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், நாம் உலகச் சேஷ்டையினால் ஏவப்பட்டு, உலக வின்பமே நித்தியமானதும், உன்னதமானது மென்ற மமகாரங்கொண்டு அவ்வமமையின் வடிவத்தைக் காண்கின்றோமில்லை. நம்மைச் சூழந்து கொண்டு வேதனைப்படுத்து மிவ்வழுக்கைப் போக்குமளவும், நாம் அவ்வுன்னதக் காட்சியினின்றும் மறைக்கப்பட்டுள்ளோம். ஆனால் தம் மக்களாகிய உயிர்களின் ஈடேற்றத்தை நிறைவேற்றுவதற்காகிய வழிகளிலே கண்ணுங் கருத்துமாயிருக்கின்றாள் நமது மாதாவாகிய பராசக்தி.

 

5. அப்பேர்ப்பட்ட வன்பு பொருந்திய தாயின் பாதங்களை மக்களாகிய நாம் என்றும் பணிந்து, அன்புடன் ஸ்தோத்தரித்து, அவளின் கருணை மேலீட்டினால் அன்னியோன்னிய பக்தி யதிகரித்து அச்சச்சிதானந்தமே மெய்ப்பொருளெனக் கண்டு உய்வோமாக.

 
 வ. முத்துசாமி.

 

ஆனந்த போதினி – 1924 ௵ - ஆகஸ்டு ௴

 

 

 

No comments:

Post a Comment