Tuesday, August 25, 2020

 

அரசியலும் சமூகவியலும்

 

“தேவலோகத்தில் அடிமையாய் வாழ்வதைவிட நரகலோகத்தில் சுயேச்சையாய் வாழ்வது மேல்'' என்பது அநுபவம் வாய்ந்த ஆன்றோர் கொள்கை. நமது நாடு சுதந்தர இன்பம் அனுபவித்த காலம் ஒன்று உண்டு. ஆனால் அது பழங்கதை ஆகி விட்டது. நம்முடைய பண்டைய நாகரிகம், ஆன்மஞானம், கல்வி, அறிவு, கலைப் பெருக்கம், செல்வப் பெருக்கம் முதலியவற்றின் பெருமைகள் எல்லாம் இப்போது இருந்த விடம் தெரியாமல் மறைந்து விட்டன. ஒரு காலத்தில் உலகத்துக்கே உண்டியும், உடையும், அறிவும் வழங்கி வந்த பெருமையுடையது நமதுநாடு, நீர், நில, மலைவளங்கள் எல்லாம் முன்பு இருந்தவைகளே இப்பொழுதும் இருக்கின்றன. இவை எங்கேனும் அந்நிய நாடுகளில் குடியேறி விடவில்லை. ஆனால் இவைகளில் உண்டாகும் விளைபொருள்கள் மட்டும் கொள்ளை போகின்றன. இதனால் கைத்தொழில்கள் அழிந்தன. வறுமைப் பேய் தலைவிரித்தாடுகின்றது. அறியாமை வீறுகொண்டு தாண்டவஞ் செய்கின்றது. பிணிகள் பிடுங்கித்தின்கின்றன. நாட்டு மக்கள் செய்வதறியாது திகைத்து, வாடி வதங்கி, கப்பல் ஏறி அந்நிய நாடுகளில் அடிமைகளாய் அல்லல் உறுகின்றனர்.

 

விவசாய அபிவிருத்திக்கோ, கைத்தொழில் வளர்ச்சிக்கோ நமது நாட்டில் உள்ள வசதியும் சௌகரியமும் வேறு எந்த நாட்டிலும் காண முடியாது, விசாலமான நிலப் பரப்பையும், முப்பத்து முக்கோடி மக்கட் பெருக்கத்தையும் கொண்டிருப்பது நமது நாடு.
நல்ல நிலைமையில் மாத்திரம் இருந்தால் உலகத்தையே கட்டி ஆளக்கூடிய சக்தி நமது நாட்டுக்கு உண்டு. ஆனால் பன்னூறு ஆண்டுகளாக இந்தியாவின் தலை எழுத்து வேறு விதமாகப் போய்விட்டது. சுமார் ஆயிரம் ஆண்டுகளாக அடிக்கடி அந்நியர் படையெடுப்புக்கு உட்பட்டு வந்தமையால் நமது நாடு கட்டுக் குலைந்து சீரழிந்த நிலைமையிலேயே இருந்து வருகிறது. முப்பத்து முக்கோடி மக்களைத் தாங்கி, விரிந்து பரந்த நிலப்பரப்பைக் கொண்டு விளங்கும் நமது பரத கண்டம், ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளதும், ஐந்து கோடி மக்கள் வசிப்பதும், குளிர் மிகுந்து விளைவற்றுக் கிடப்பதுமாகிய சிறு தீவினரால் அடக்கி ஆளப்படும் மர்மத்தை நேயர்கள் ஊன்றிச் சிந்திக்க வேண்டும். ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றும் போது மக்களுக்குள் ஒற்றுமையின்மையும், பாஸ்பர அவநம்பிக்கையும், கட்டுத் திட்டம் இன்மையும், அறியாமையும் நிரம்பியிருந்த உண்மையை நாம் ஒப்புக் கொண்டு தீரவேண்டும். ஆங்கிலேயருக்கு முன்னரும் இந்தியர் அந்நியர் ஆதிக்கத்திலேயே பலநூற்றாண்டுகள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அக்காலத்தில் பெரும்பாலும் கொள்ளைக்கும் கொடுங்கோன்மைக்குமே உட்பட்டிருந்தனர் என்று கூறவேண்டும். அதோடு சாதி சமயங்களின் பேரால் ஏற்பட்ட பல ஊழல்களும் சேர்ந்து மக்களைப் பாழாக்கி விட்டன.

 

ஆங்கில அரசாங்கம் வந்து இவ்வளவு காலம் ஆகியும் மக்களின் கஷ்டகாலம் நீங்கின பாடில்லை. சில அமிசங்களில் ஏதோ நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன என்று கூறலாம்; ஆனால் பொருளாதார விஷயத்தில் அடியோடு பாழடைந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. " ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி புரிவது தங்கள் சொந்த நலன் கருதியே யொழிய இந்தியரின் நலன் கருதி அல்ல " என்ற விஷயம் முக்காலும் உண்மை. மக்கள் அநுபவிக்கும் வரிப்பளுவின் கொடுமையை விரிக்க வேண்டியது அநாவசியம். அங்ஙனம் இருந்தும் தேசீயக் கடன் ஆண்டு தோறும் பெருகிக் கொண்டே வருகிறது. இப்போது நாம் இதற்காக ஆண்டு ஒன்றுக்கு நூறு கோடி ரூபா செலுத்த வேண்டியவர்களா யிருக்கின்றோம். சர்க்கார் நிர்வாகச் செலவோ ஏராளமாக ஆகிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக ராணுவச் செலவைக் கவனியுங்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முழுவதையும் பாதுகாக்க நமது நாட்டுப் பணம் வருஷந் தோறும் கோடிக்கணக்காகச் செலவாகிறது. தேசியப் பொருளாதார நிலைமையை வளர்ச்சி செய்யப் போதிய பணம் இல்லை என்று மறுக்கப்பட்டு வருகிறது. நமது தேச வியாபாரத் துக்கும், கைத்தொழிலுக்கும், விவசாயத்துக்கும் போதிய ஆதரவு கிடையாது. அந்நிய நாட்டுப் பொருள்களே இங்கு ஏராளமாக இறக்குமதியாகின்றன. இதற்காகவே அந்நியப் பொருள் பகிஷ்காரக் கிளர்ச்சி நாட்டில் ஏற்பட்டது. அது வரவரத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதன் கருத்து நம் நாட்டில் உற்பத்தி செய்யப் படும் பொருள்களுக்குத் தக்க ஆதரவும் பாதுகாப்பும் ஏற்படுத்த வேண்டும் என்பதே. நம்முடைய மக்கள் கையில் தகுந்த பொறுப்பாட்சி இருந்தாலொழிய எந்தத் துறையிலும் அணுவளவும் முன்னேற முடியாது. அரசியல் பொருளாதார வரவு செலவு விவகாரங்கள் எல்லாம் நமதுகையில் இருக்க வேண்டும். பொருள் இல்லாமல் யாராயிருந்தாலும் என்ன செய்ய முடியும்? இதனாலேயே பூரண சுயேச்சையை லட்சியமாக வைத்து காங்கிரஸ் தீவிரமாகப் போராட முற்பட்டிருக்கிறது.

 

அந்நிய ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்பதில் யாருக்கும் அபிப்பிராய பேதம் கிடையாது. ஆனால் அதற்காகச் செய்யப்படும் முயற்சி - வேலைத்திட்ட விஷயமாகத்தான் பல கட்சிகளுக்குள்ளும் தலைவர்களுக்குள்ளும் முரண்பாடு இருந்து வருகிறது.

 

காங்கிரஸ் அகில இந்திய ஸ்தாபனம். அது நாற்பத்து நான்கு ஆண்டுகளாக தேச விடுதலைக்காகப் பாடுபட்டு வருகிறது. மகாத்மாகாந்தியடிகளை காங்கிரஸின் உயிர் என்று கூறலாம். மேனாட்டு ராஜீய தோரணையில் போய்க் கொண்டிருந்த தேசிய காங்கிரஸை நமது நாட்டுக்குரிய தலை சிறந்த தருமமாகிய அஹிம்சாதத்துவத்தை அலம்பிக்கச் செய்த பெருமை காந்தியடிகளுக்கே உரியது. இப்போது காங்கிரஸ் அஹிம்சா தருமமே தனக்குரிய கொள்கையாகக் ரெண்டு விளங்குகிறது. அஹிம்சையைக் கடைப் பிடிப்பதினால் சுய ஜ்யம் எந்தக் காலத்திலும் வரப்போவதில்லை என்று வாதிக்கக் சுடியவர்கள், இளைஞர்களில் மாத்திரம் அல்லாமல் பெரியோர்களில் கூட சிலர் இருக்கின்றனர்.

 

மிதவாதிகளும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வாதிக்கின்ற காட்சிகளும் இன்னும் ஆங்கில சர்க்காரிடம் வைத்துக் கொண்டுள்ள நம்பிக்கைக்குக் குறைவில்லை. முன்பு காங்கிரஸ் தீர்மானித்த ஒத்துழையாமைத் திட்டம் பலிக்காமற் போன காரணத்தால் வாலிபர்களுக்குப் பலாத்காரம் ஒன்றே ருசிகரமான வழியாகத் தெகிறது. இதற்கு மேனாட்டு விடுதலைச் சரித்திரங்கள் அவர்களுக்கு ஆக்கம் அளிக்கின்றன. இந்த நிலைமையில் சட்டமறுப்பு முதலிய காரியங்கள் சாந்தமான முறையில் நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பதை நேயர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

நாடு முழுதும் ஒரு நிலைமையில் இல்லை. ஒரு இடத்தில் இருக்கிற உணர்ச்சியும் அறிவும் இன்னொரு இடத்தில் இல்லை. காங்கிரஸ் கமிட்டிகள் எல்லாம் அந்த அந்த இடத்தில் தகுந்த கட்டுப்பாட்டுடன் இல்லை. தலைவர்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். இவர்களை எல்லாம் ஒரு கட்டுப் பாட்டுக்குள் அடக்குவது என்பதும் சாமானிய காரியம் அல்ல. இதில் இன்னொரு விஷயம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். சட்டமறுப்புச் செய்து தேசிய விடுதலையைச் சாதிக்கும் முறை நூதனமானது. இதுவரை உலகத்தில் எந்தவிடத்திலும் எக்காலத்திலும் இந்த மாதிரி நடந்ததில்லை. பலாத்காரம் - - யுத்தமே உலகை ஆட்சி புரிந்து வருகிறது என்று கூறலாம். ஆனால் சாந்த மூர்த்தி மகாத்மா காந்தியடிகள் இந்நிலையில் சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தக் கங்கணங் கட்டிக்கொண் டிருக்கிறார். அதன் பலாபலனை எதிர்காலத்திலே தான் நிச்சயிக்கக் கூடும்.

 

நமது நாட்டுக்கு அரசியல் விடுதலை எவ்வளவு அவசியமாகவும் அவசரமாகவும் இருக்கிறதோ அது போலவே சமூக விடுதலையும் அவசியமான அவசர விஷயமாகும். அரசியலும் சமூகவியலும் பரஸ்பர சம்பந்தம் உடையவைகளே. சமூக முன்னேற்றம் அரசியல் முன்னேற்றத்துக்கு மிகவும் ஆக்கந்தருவ தாகும். சமூகத்தில் ஊழல்கள் நிறைந்திருப்பின் அவற்றின் பலன் அரசியல் நலத்தையும் கெடுத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆங்கிலேயர் இவ்வளவு தூரம் தலைசிறந்து விளங்குவதற்குரிய காரணம், அவர்கள் சமூகத்துறையில் முன்னேற்றம் அடைந்து கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருதலே யாகும். அவர்களிடம் அறிவு காரணமாகவோ, பொருள் காரணமாகவோ உள்ள ஏற்றத் தாழ்வைத் தவிர வேறு வகையில் எத்தகைய வேற்றுமையையுங் காண முடியாது. ஒரு ஜாதி (Nation) என்ற உணர்ச்சி அவர்களுக்குள் பாராட்டத்தக்க விதமாய் அமைந்து கிடக்கிறது. உள்ளுக்குள் ஏதோ சொற்ப வேற்றுமைகள் இருந்த போதிலும் தேச க்ஷேமத்தில் ஒரு முகமான அபிப்பிராயங் கொண்டு விளங்குகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. இதனாலேயே அவர்கள் உலகத்தில் பெரிய ஏகாதிபத்தியத்தை நிருவகித்து வருகின்றனர்.

 

நமது இந்தியாவை உண்மையில் ஒரு தேசம் என்று கூறுவதற்கில்லை. ஒரு கண்டம் என்றே சொல்ல வேண்டும். இதனைப் பரதகண்டம் என்ற வழக்காறும் நன்கு விளக்கும். சாதி வேற்றுமை, சமய வேற்றுமை, மொழி வேற்றுமை முதலிய இன்னும் எத்தனையோ வேற்றுமைகள் மக்களைப் பிரித்து வைத்திருக்கின்றன. ஒருவருக்கொருவர் சம்பந்தம் கிடையாது. தென்னிந்தியாவிலேயே மலையாளிகளின் போக்கும் நடை யுடை பாவனைகளும் வேறு, ஆந்திரர்களின் போக்கும் நடையுடை பாவனைகளும் வேறு; அதுபோலவே தமிழர்களின் வழக்க வொழுக்கங்களும், கன்னட நாட்டினரின் வழக்க வொழுக்கங்களும் வேறுபட்டிருக்கின்றன. இதே நிலைமைதான் வட இந்தியாவிலும்.' என்னுடைய ஜாதிதான் உயர்ந்தது, என்னுடைய மதந்தான் சிறந்தது' என்ற சண்டைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. " எல்லாச் சாதியும் ஒன்றே, எல்லாச் சமயமும் ஒன்றே " என்று வெறும் வாய் வேதாந்தம் மாத்திரம் பேசுகிறார்களே யொழிய காரியத்தில் அந்த மாதிரி யில்லை. பலவேறு சமயங்களும் அடிப்படையில் ஒன்று என்ற உண்மையை யாம் மறுக்கத் துணியவில்லை. ஆனால் நடை முறையில் அணுவளவாவது அநுசரிக்கப்படுகிறதா என்றே கேட்கின்றோம். சிறந்த சமரச சமய உண்மைகள் நிறைந்து சமரச ஞானிகள் வாழ்ந்திருந்த இந்த நாட்டில் சகோதரத்துவமும் சமத்துவமும் தேய்ந்து போனமை மிகவும் வருந்தத்தக்க தன்றோ?

 

இப்போது நம் மக்களிடையே பொருளற்ற ஒழுக்க வழக்கங்களே பெரிதும் நிறைந்திருக்கின்றன. அவற்றிற்காக அவர்கள் ஏராளமான பொருளையும் வீண் விரயம் செய்து வருகின்றனர். கல்வி சிறந்த நமது நாட்டில் இப்போது கோடிக்கணக்கான மக்கள் எழுத்து வாசனையின்றி மூடப் பூச்சிகளாய் வாழ்ந்து வருகின்றனர். பெண் மக்கள் நிலைமையும், தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமையும் மிகவும் பரிதாபகரமான காட்சிகளாகும். தற்கால உலகியல் நிலைமையும் போக்கும் நம் மக்கட்கு ஒரு சிறிதும் தெரியாது என்றே கூற வேண்டும். ஜன நாயகத்துவம் என்றால் என்ன என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்று நினைக்கிறீர்கள்? இந்த உண்மை தெரிய வேண்டுமானால் ஜில்லா போர்டு, தாலூகா போர்டு, முனிசிபாலிட்டி முதலிய ஸ்தல ஸ்தாபன நிருவாகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஆபாசமான கட்சிப் பிணக்குகளும், பொதுப் பொருள் துர்விநியோகங்களும், வாக்காளர்களுக்குப் பொருள் கொடுத்து ஏமாற்றி வாக்குரிமை பெறுவதும் ஆகிய காரியங்களே நிறைந்து கிடக்கின்றன. யாரேனும் சுயநலமின்றித் தங்கள் கடமைகளைச் சரிவர நிறைவேற்றுகின்றார்கள் என்று கூற முடியுமா? இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன என்பதை யோசித்துப் பாருங்கள். மக்களின் அறியாமையைத் தவிர வேறொன்றுங் கூற முடியாது. அரசியல் தலைவர்கள் என்பவர்களும் சுயநலமும் கௌரவ ஆசையும் கொண்டவர்களாய் மக்கள் நலத்தைப் புறக்கணித்து வருகின்றனர். இவர்களை நேரான வழியில் திருப்பும்படியான அறிவும் ஆற்றலும் பாமாமக்கட்கு இல்லை. தலைவர்கள் என்பவர்கள் சமயத்துக்குத் தகுந்தபடி வேஷம் போட்டு வருவதால் பாமர ஜனங்கள் செய்வதறியாது மயக்கமும் தியக்கமும் கொண்டு விழிக்கின்றனர். இதனால் அரசியல் கிளச்சியில் உணர்ச்சியும் ஊக்கமும் குன்றி மிகுந்த சோர்வு ஏற்பட்டிருக்கிற உண்மையை ஒருவரும் மறுக்க முற்படார் என்று உறுதியாக நம்புகின்றோம்.

 

சமூகத்தில் சமரசமும் சகோதரத்துவமும் நிறைந்து விளங்கின் யாம் மேலே விவரித்த துரதிருஷ்டமான நிலைமை ஒரு நாளும் ஏற்படாது என்பது உறுதி. அந்நிய ஆதிக்கத்தை ஒழிக்க நாம் எவ்வளவு சிரத்தை செலுத்துகின்றோமோ அவ்வளவு சிரத்தை சமூக முன்னேற்ற விஷயத்திலும் செலுத்த வேண்டும். இந்த இரண்டு முயற்சிகளும் ஏககாலத்தில் நடைபெற வேண்டும். அங்ஙனம் இன்றி அரசியல் சுதந்தாம் ஏற்பட்டால் சமூக முன்னேற்றம் தானாக ஏற்பட்டுவிடும் என்று கூறுவதும், சமூக முன்னேற்றம் ஏற்பட்டு விட்டால் அரசியல் சுதந்தரம் எளிதில் கிடைத்து விடும் என்று தருக்கம் பேசுவதும் வீண் வேலையாகும். ஒன்றை அலட்சியம் செய்து விட்டு இன்னொன்று முன்னேற முடியாது. ஆகையால் அரசியல் வாதிகளும் சமூக சீர்திருத்த வாதிகளும் ஒன்று பட்டு ஒழுங்கான வேலைத் திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு சுயநலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். நம்முடைய கோரிக்கைகளைத் திருவருள் முன்னின்று நிறைவேற்றுவதாக.


 ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - மார்ச்சு ௴

 

 

No comments:

Post a Comment