Tuesday, August 25, 2020

 

அரசும் அறமும்

(வித்வான்-ச. சேது சுப்பிரமணியன்.)

வாரிதி சூழ்ந்த வளங்கெழு நன்னாட்டைப் போரினில் வென்றும் புகழ்த்தாயமாய் எய்தியும் அரசர் பலர் பாதுகாத்து வந்தனர். அவர்கள் தத்தம் நிலைக்கேற்பத் தங்கள் நாணயம் செய்கை முதலியனவற்றில் மாறுபாடு உடையராயினும், பொதுவாக அறம் என்னும் பெருந் துணையில் அனைவரும் கருத்தொருமித்தே தமது குடிகளைக் காத்து
வந்தனர்.

அவ்வறம் அரசன் கீழ் வாழும் மக்களாயினும் அவனது அதிகாரம் பெற்ற பெரியோர்களாயினும் குற்றம் செய்தால், மந்திரி முதலிய பலரும் கூடியிருந்து யாவரிடத்தும் கண்ணோட்டம் செய்யாது நடுவு நிலைமையைப் பொருந்தி, அவர்கள் செய்த குற்றத்திற்குச் சொல்லப்பட்ட தண்டத்தைச் செய்வதேயாகும். திருவள்ளுவரும் “ஓர்ந்து கண்ணோடா திறைபுரிச் தியார்மாட்டுத் தேர்ந்து செய் வஃதே முறை" என்ற குறளால் இவ்வறத்தை வற்புறுத்திச் செங்கோன்மையினது இலக்கணம் குறிப்பிட்டார்.
குறுங்கோழியூர்கிழார் என்ற புலவர் பெருமான் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறையை நோக்கி வேந்தே! உனது காவலாண்களில் அம்புகள் நின்று விளங்கும் உனது செங்கோலில் அறம் தங்கா நின்றது. ஆதலின் நின் குடைக்கீழ் வாழும் குடிகள் தம் காதலால் நினக்கு ஏதேனும் ஏதம் வருமோ? வரின் என் செய்வோம். என்று அல்லும் பகலும் அகலாது எங்கும் எழிற் சிறப்புடையை' என இசைத்தனர். நடு நிலை
மையாகிய அறத்தின் வழுவாது ஒழுகலே மிகச் செம்மையுற்றதாகலின் அதையே வேந்தர் கொண்டு விளங்குகிறார் என்பதற் கறிகுறியாகத் தம் கையில் ஓர் கோலை யேந்தி அதற்குச் செங்கோலெனப் பெயரிட்டுத் தம் குடிகள் அன்பாய் ஆகரிக்க ஆட்சி செய்துவந்தனர். அரசர்கள் அறியாது அந்நடுவு நிலைமை யாத்திற் சிறிது பிழைப்பின், அவ் அறத் தெய்வமே அவர்களைக் கொல்லும் யமனதம் என்பதை “அரசியல் பிழைத்தோர்க் கறங் கூற்றாவதும்'' என்று இளங்கோவடிகள் விளங்க வகுத்துரைத்தும் அவர்கள் ஏந்திய கோலையும் கொடுங்கோல் எனக் கூறியுள்ளார். முன்னர் வாழ்ந்த பொன்முடிப் புரவலர்கள். தன்னைப் பற்றிய குற்றம் நிகழ்ந்த விடத்தும், அறநெறியை விடாது நின்று விளக்கும் வீரராய் விளங்கினார்கள் என்பதைப் பண்டைப் பனுவல்களைக் கொண்டு ஆராய்வாம்.

காவிரி புரக்கும் நாட்டிற்குத் தலைமையாய்க் கலைமகளும் திருமகளும் கலந்து வாழும் பொலிவுடை டய திருவாரூரை மனு என்னும் மன்னன் அரசு புரிந்தான். அவன் தன் நாட்டில் வாழும் சிற்றுயிர்க்கும் சிறு துன்பம் வராமற் செங்கோல் செலுத்திவந்தான். அவனுக்குக் கிடைத்தற்கரிய ஓர் ஆண் மகன் இருந்தான். ஓர்நாள் அரச குமான் தேரேறி வெளிச் செல்லுகையில், தேர்ச் சக்கரத்தில் ஓர் ஆவி ன் கன்று அகப்பட்டு அக்கன்றின் தாய் வருந்தக் கன்று உயிர் நீத்தது. இந் நிகழ்ச்சி மன்னனுக்குத் தெரிந்தது. அவன் விரைவில் வந்து அக்கெழ்ச்சி யைக் கண்டு மந்திரிகளை நோக்கினான். அவர்கள் பொன்னாற் பசு செய்து அந்தணர்களுக் களித்தால் அப்பாவம் நீங்கும் என்று சொன்னார்கள் மன்னன் மந்திரிகளை நோக்கி அமைச்சே! அக்கன்றின் தாய் மனம் வருந்துவதைப்போல என் மகனைத் தேர்ச்சக்கரத்திட்டு எனது மனம் வருந்தத் தேரைச் செலுத்தலே முரையாகு மென்றும் தன் குலத்துக்கு ஒரு மகனே உள்ளான் என்பதும் உணரானாய் அறத்தின் வழிச் செல்கையே அரசர் கடமை என்றும், யான் தேர் மீதிருக்க நீவிர் என் மகனைச் சக்கரத்திட்டு அவன்மேல் தேரைச் செலுத்தும் என்றும் கூறினான். இதனைச் சேக்கிழார் செங்கன் மனமும் சிவந்து நெக்குருகச் செப்பமாய் அமைத்துள்ளார்.

"ஒருமைந்தன் தன்குலத்துக்கு உள்ளான் என் பதும் உணரான்

தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன்மைந் தன்

மருமம் தன் தேர் ஆழி உறஊர்ந்தான் மனுவேந்தன்

அருமர்த அரசாட்சி அரிதோமற்று எளிதோதான்.”

 

மன்னன் மொழிப்படி மந்திரிகள் செய்ய அறக்கடவுள் எதிர்தோன்றி அரச குமாரனயும், ஆவின் கன்றையும், எழுப்பி அரசனையும் வாழ்த்திச் சென்றது.

செங்குட்டுவன் வேண்மாளுடன் பேரியாற்றடை கரையிலே தங்கியிருந்தபொழுது தன்னாடடைந்த தனிப்பெருந்தேவி, யார்? என மயங்கிய பொழுது அவளது வரலாற்றைச் சாத்தனார், சேரர்பெருமானே? கோவலன் என்ற வணிகன் என் தேவியுடன் மதுரைக்குப் பிழைக்கவந்தான். கையிற் பொருளில்லாமையால் காதலியின் காற்சிலம்பை வாங்கி விற்றுவர பொற்கொல்லரிடம் சென்றான். அக்கொல்லன் முன் அரசியின் சிலம்பு ஒன்றை அறியாது அபகரித்தனன். கோவலன் சிலம்பு கொண்டு போகவும்இவனை அரசனிடம் கொண்டுபோய்ச் சிலம்பெடுத்தவன் இங்குளான் என இயம்பி அரசன் முன் விடுத்தான். அரசன் பொற்கொல்லன் புனைந்துரையை எம்பிச் சிலம்பை வாங்கிக்கொண்டு கொலைபுரிய உத்தரவளித்தான். இந்நிகழ்ச்சியை அறிந்த அவன் மனைவி அரசனிடம் அணுகி என் காற்சிலம்பே அது என்பதை அவன் முன்னர்ச் சிலம்பை உடைத்துப் பாற்
கற்களால் காட்டினாள். அரசன் தன் சிலம்பு அன்று என்று அறிந்து அநீதி புரிந்தோமே என அறிவு மயங்கி வீழ்ந்து உயிர் துறந்தான். அத்தேவி பின் மதுரையை எரித்து பொற்கொல்லரை அழித்து உன்னாடடைந்து தன் கணவனுடன் உயர்பதம் பெற்றாள் என்றார். இதைச் செவியுற்ற வஞ்சிக்கோன் சாத்தனாரை நோக்கி, புலவீரே! பாண்டியன் அறியாது ஊழ்வினை காரணமாகத் தவறு செய்ததால் அவன் அரம் கெட்டதாயினும் அவனது உயிர் உடன் சென்று அவ்வறத்தை நிலைபெறுத்தியது எனத் தம் அழகிய செஞ்சொற்களால்,

“தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட

மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்

எம்மோ ரன்ன வேந்தற் குற்ற

செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்

உயிர்பதிப் பெயர்த்தமை யுறுக வீங்கென

வல்வினை வளைத்த கோலை மன்னவன்

செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது."


என வாயாரப் பாடிப் பாண்டியன் பெருமையைப் பாராட்டியுள்ளான்.

 

வடகாடாகிய பெரு நாட்டின் தலைநகராய்ச் சிறந்த அயோத்தியை அறுபதினாயிரம் ஆண்டுகள் அரசுபுரிந்தும் பத்துத் திக்கிலும் உள்ள பகைவர்களை வென்றும் வாழ்ந்த தசரதச் சக்கரவர்த்தி, தன் மனைவிக்குக் கொடுத்த வரங்களை மறுக்கவும், இல்லையென்று கூறவும் இயலாது, அவள் காலில் விழுந்து அரற்றுவார் என்னில் பண்டைப் பேரரசர்கள் அறத்தைத் தன் உயிரினுஞ் சிறந்ததாக அநுஷ்டித்தனர் என்பதைக் கவிச்சக்கரவர்த்தி
யாகிய கம்பர் கண்டோர் மனமும் கேட்டோர் செஞ்சும் கனிந்து கனிந்து உருக கவியமைத்தனர்.

“வாய்தந் தேன்என் றேன் இனி யானோ அதுமாற்றேன்

நோய்தந் (து) என்னை நோவன செய்து நுவலாதே

தாய்தந்(து+எ) தென்னத் தன்னை யிரந்தால் தழல் வெங்கண்

சேய்தந்(து)ஈயும் நீயிது தந்தால் பிழையாமோ.''

 

அறத்தைக் காக்க அரசர் ஆண்மையும் விட்டுப் பெண்டிரின் காலில் விழுந்து அவரை வேண்டி யிரங்குவாரென்றால் நாம் ஒவ்வொருவரும் இந்நடு நிலைமையாகிய அறத்தைக் கைவிடாது ஒழுகுவோமானால் அறக்கடவுள் நம்மைக் காக்கும் என்பது திண்ணம்.

இதுகாறுங் கூறியவாற்றால் அறநெறி ஒழுகுவதே செங்கோல் என்பதும், அதிற் பிழைப்பின் அதுவே கொடுங்கோலென்பதும், மனு மகன்மீது தேரைச் செலுத்தவும், பாண்டியன் தன் உயிரை நீக்கவும், தசரதன் தன் மனைவி காலில் விழுந்து உரற்றியும், அறத்தைவிடாது காத்தனர் என்பதும் ஒருவாறு தெளியக் கிடக்கிறது.

ஆனந்த போதினி – 1938 ௵ - அக்டோபர் ௴

 

 

 

No comments:

Post a Comment