Tuesday, August 25, 2020

 

அமைதியும் - புயலும்

“சாயிதாசன்"

எல்லாரது வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய சம்பவந்தான் என் வாழ்க்கையிலும் நடந்தது. மிகவும் சர்வ சாதாரண மானது தான். புதியதாக ஒன்று நடக்கவில்லை. ஆனால் அதன் பயன்-வேகம்-என் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்று நினைக்கவில்லை. அமைதி குடி கொண்டிருந்த மனதில் புயலைக் கிளப்பி விட்டது. புயல் ஓயவே இல்லை.

 

வாழ்க்கைப் புயலில் அகப்பட்டுத் தத்தளித்து எதிர்த்து அமைதியை உண்டாக்கி யிருக்கிறேன். ஒரு தடவை இரண்டு தடவையல்ல. அனேகம் தடவைகள். ஆனால் என் மனதில் புயலைக் கிளப்பிவிட்ட சம்பவம் ஒரு சிறு தென்றல் தான். அதில் அகப்பட்ட நான் அதை எதிர்க்க முடியளில்லை.

 

என் மனதில் இருந்த சந்தோஷம் அடியோடு போய்விட்டது. ஒருவருடனும் பேச விரும்பவில்லை என் மனம். ஏகாந்தத்தை மனதில் ஏகாந்தம் தான் குடி கொண்டிருந்தது. காரணம்?...... ஒன்றிலுமே செல்லவில்லை மனம்...சுருங்கச் சொன்னால் ஒன்றுமே செய்ய முடியாமல் ஆக்கிவிட்டது என்னை.

 

மேற்படி சம்பவம் நடந்து சரியாக வருஷம் மூன்று கூட பூர்த்தி யாகவில்லை. அதற்குள் என் வாழ்க்கைப்படகு பல பாறைகளில் பலமாக மோதுண்டதுண்டு. ஆனால் என் நல்ல காலம் உடையவில்லை. தத்தளிப்பிலேயே இருந்தது. மிகுந்த அச்சத்தையும் கொடுத்தது. என் மனதில் இருந்த வருத்தம் எனக்கு மிகப் பாரமாகத் தோன்றிற்று. அதை யாரிட்மாவது சொன்னால் கொஞ்சம் பாரம் குறையும் என்று நினைத்தேன். ஆனால் யாரிடம் சொல்லி அழுவது? என் அறையில் உள்ள நான்கு சுவர்களிடம் தான் முறையிட்டேன். புலம்பி, புலம்பி அழுதேன், உயிரற்ற சுவர்கள் என்ன சமாதானத்தைச் சொல்லப்போகின்றன?

 

இடையில் ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. என் வாழ்க்கைப் படகுக்கு நான் ஒருவனே தான் பட கோட்டியாய் இருந்தேன். ஆனால் கழிந்த மூன்று மாத காலமாக, எனக்கு உதவி செய்ய படகு பாறையில் மோதாமல் பார்த்துக்கொள்ள வந்து சேர்ந்தாள், ராமு-மனைவி என்ற பட்டத்தை தாங்கிக்கொண்டு. பாவம்! அவளும் பெண் ஜன்மந்தானே. படகை சரியாக செலுத்திக்கொண்டு ேபாகத் தெரியவில்லை. வேண்டுமானால் அவளையே கேளுங்கள், சொல்லுவாள். நான் கலியாணத்தின்போது ஒரு பொம்மை மாதிரி நடந்து கொண்டேன். சந்தோஷ உணர்ச்சியாவது கலியாணத்தின் போது இருந்ததா என்று ஆனால் அவளுக்கும், நாகப்பூரிலிருக்கும் தனது அக்கா வரவில்லையே கலியாணத்திற்கு என்ற வருத்தத்தில் இருந்தாள். என் மனதில் உள்ள வருத்தத்தின் காரணத்தை அவள் அறிந்தால் ஒரு வேளைக்குக் கலியாணத்திற்கு அவள் இசைந்திருப்பாளா?.........

 

எங்கள் வீட்டில் மொட்டைமாடி ஒன்று உண்டு. தினம் சாயந்திரம் அந்த மொட்டை மாடியில் ஈஸிச்சேரில் சாய்ந்த வண்ணம் இருப்பேன். வெளியில் போகமாட்டேன்.
வழக்கம் போல் ஈஸிச்சேரில் சாய்ந்து கொண்டேன். அன்று சாயந்திரமும் படிப்பதற்
காக் “டிக்கன்ஸ்'' நாவல் ஒன்றும் கொண்டும் போயிருந்தேன். படிக்க ஆரம்பித்தேன். மனம் செல்லவில்லை. நாவலைப் பிரித்த படியே மார்புமேல் சாத்திக் கொண்டேன். எவ்வளவு நாழி அப்படி இருந்தேனோ தெரியாது. ...மனதில் ஏற்பட்ட பாரம் குறைவது போல் தோன்றிற்று, .... “மணி எட்டடிக்க போகிறதே; சாப்பிட வரே
ளா" என்று ராமுவின் குரலைக் கேட்டவுடன், கண் விழித்தேன். கால்கூட அலம்பவில்லை. சாப்பிடப் போனேன். பேருக்கு துளி சாப்பிட்டுவிட்டு எழுந்திருந்து போய்விட்டேன் பழைய்டி மொட்டை மாடிக்கு.

 

சிறிது நேரம்கூட ஆகவில்லை. பக்கத்தில் ராமு வந்து நின்நாள், நான் அவளைக் கவனித்தும் கவனியாததுபோல் இருந்தேன். “நீங்கள் ஏன் இப்படி ஒருமாதிரியாய் இருக்கிறீர்கள்? சதா சர்வதா. கலியாணத்தின் போது கூட சந்தோஷத்தைக் காணோமே? என்னிட்ம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப்போகிறீர்கள்? உங்கள் வருத்தத்தின் காரணத்தை.''


நான் பதிலே பேசவில்லை.

 

"உங்களை நான் ரொம்ப வற்புறுத்தவில்லை. இஷ்டமிருந்தால் சொல்லுங்கள் இல்லாவிடில்.........”

 

"ராமு! ராமு! அவசரப்படாதே! சொல்லி விடுகிறேன். உன்னைத் தவிர யார் அதைச் செவி கொடுத்து கேட்கப் போகிறார்கள்? உன்னிடம் சொன்னால் தான் எனக்கும் மனதில் உள்ள பாரம் குறைந்ததுபோலிருக்கும். சரி! ஆனால் நீ அதைக் கேட்டு வருத்தப்படக்கூடாது. சொல்லுகிறேன் கேள்.

 

''ராபர்ட் கிளப்பில்'' நான் ஒரு மெம்பர். நான் அதில் மெம்பராய் சேர்ந்த காரணம் அதில் உள்ள, பலவகையான வீளையாட்டுகள் தான் காரணம். தினம் விளையாடிவிட்டு மாலை, ஆறுமணிக்கு வீடு திரும்புவேன். என் வீட்டிற்கு வரவேண்டுமானால் மேலத் தருவை கடந்து தான் வரவேண்டும்.

 

உன்னை கலியாணம் பண்ணிக் கொள்வதற்கு முன்பு நான் ஒருத்தியைக் காதலித்தேன். அவள் மேலத் தெருவில் தான் இருந்தாள். மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு. தினம் விளையாடி விட்டு வீடு திரும்பும் போது, அவள் வீட்டிலேயெ அவளை அனேகந் தடவை சந்தித்திருக்கிறேன். அப்பொழு தெல்லாம், அவளைப் பார்த்தாலும் சாதாரணமாகப் போய் விடுவேன்.

 

ஆனால் அன்று ஒரு நாள் அவள் பூ வாங்கிக் கொண்டிருந்தாள் ஒரு கிழவியிடம். அப்பொழுது நான் வீடு திரும்பும் சமயம். ஒரு நாளும் இல்லாதபடி அன்று தனி அழகுடன் விளங்கினாள். நான் அவளைப் பரர்த்துக் கொண் டிருந்தேன். சிறிது நாழி அப்படியே நின்று கொண்டிருந்தேன். அதை அவளும் கவனித்து விட்டாள். அவளும் என்னை உற்றுப் பார்த்தாள். அவள் கண்களில் தான் என்ன கவர்ச்சி........?

 

பின்பு எங்களுக்கு இது வழக்கமாய் விட்டது. நான் விளையாடி விட்டு வீடு வரும்போது அவள் வாசலில் நிற்பதும், நான் வீட்டருகில் சென்றதும் அவள் கண்கள் என்னை வர வேற்பதுமாய் விட்டது. நான் அவளை முழு மனதுடன் காதலிக்கிறேன் நன்றாய் தெரிந்து கொண்டாள். ஆனால் எனக்குத் தான் தெரியவில்லை. அவள் எண்ணத்தைப்பற்றி.

 

அவளிடமே அதைக் கேட்டு விடுவது என்று நினைத்தேன். அதற்கு தைரியம் வரவில்லை. ஆனால் நடுவில் நாங்கள் சந்திப்பது மட்டும் நிற்கவில்லை. “இன்று எப்படியாவது கேட்டுவிடுவது அவளது எண்ணத்தைப்பற்றி” என்று மனதை தைரியப் படுத்திக் கொண்டு வீட்டருகில் சென்றால், தைரியம் எங்கேயோ ஓடி விடுகிறது. இந்த மாதிரி அனேக தடவைகள் முயற்சி செய்தேன். ஆனால் எல்லாம் வீண்.

 

கடைசியில் மனதில் இருந்த ஆத்திரம், எப்படியாவது கேட்டு விடுவது என்ற எண்ணத்துடன் ஒரு நாள் போனேன். வாசலில் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள் அவள். நான் உள்ளே நுழைந்ததும் அவள் கண்கள் என்னை வரவேற்றன. அவைகளின் வசீகரத்தில் மூழ்கிய நான் அவளுடன் பேச ஆரம்பித்தேன் முதலில். அவள் கேட்டுக் கொண்டே வந்தாள்.

 

"நீங்கள் என்னை விரும்பும் போது, நான் உங்கனை ஏமாற்ற விரும்ப வில்லை. நான் உங்களையே மணம் புரிந்து கொள்ளுகிறேன். ஆனால் நீங்கள் இன்னும் என்னைப் பற்றி தெரிந்து கொள்ள வில்லையே,' என்றாள். நான் பேசி முடிந்ததும், நான் பதில் சொல்லு முன் அவளே சொல்ல ஆரமபித்தாள். காலை தான் என் தகப்பனாரும் தாயாரும் ஒரு விசேஷத்தை முன் னிட்டு திண்டுக்கல் போயிருக்கிறார்கள். சாயந்திரம் அவர்கள் வந்து விடுவார்கள்.

 

“குட்டி - குட்டி” என்று உள்ளிருந்து யாரோ கூப்பிடவே, “பாட்டி கூப்பிடுகிறாள்-வருகிறேன். பின்பு பேசிக் கொள்ளுவோம்;” என்று போய் விட்டாள்,

 

படியை விட்டு இறங்கி வரும் போதே, மனதில் ஒரு ஏக்கம், சமாற்றம் குடி கொண்டது.

 

பின்பு இரண்டு நாள் அவள் வீட்டுப் பக்கம் போனேன். அவள் தென்பட வில்லை. அவள் பெயர் கூடத் தெரியாது. ஆனால் 'ஒன்று மட்டும் நிச்சயம். என்னை அவள் வெறுக்கவில்லை – விரும்புகிறாள் - அந்த மட்டிலும் மனதில் சிறு சந்தோஷம் உண்டாயிற்று.

மூன்றாவது நாளும் அவள் வீட்டிற்குப் போனேன். வீடு பூட்டியிருந்தது. பக்கத்தில் விசாரித்ததில் அன்று காலையில் தான் அவர்கள் வேறு ஊருக்கு மாற்றிப் போய் விட்டார்கள். எந்த ஊருக்குப் போனார்கள் என்று தெரியாது என அறிந்தேன்.

 

அவர்கள் போன ஊரை தெரிந்து கொள்ள என்னாலான மட்டும் முயற்சி செய்தேன். வீணாயின. மனதில் அன்று ஏற்பட்ட ஏக்கமும் ஏமாற்றமுந்தான் என் என்னை விட்டு இன்றும் பிரியமாட்டேன் என்கின்றன. இந்த ஜன்மத்தில், நாங்கள் ஒருவரை ஒருவர் காதலித்த காதல் கைகூடாமல் போனாலும் ஒருதரமாவது அவளைப் பார்த்தால் தான் மனம் சாந்தி அடையும் போலிருக்கிறது.

 

ராமு! இதைக் கேட்டு நீ வருத்த மடையாதே. அவள் மேல் வைத்த அன்பு முழுவதும் இப்போது உன் மேல் தான் வைத்திருக்கிறேன்.''

 

நான் இதைச் சொல்லி முடித்ததும் ராமு ஒரு பெரு மூச் செறிந்தாள்.

 

பின்பு, "சரி! நீங்கள் சொன்னதைப் பற்றி எனக்கு துளிகூட வருத்தம் கிடையாது. நான் ஒன்று சொல்ல மறந்து விட்டேன் உங்களிடம். இன்று சாயந்திரம், என் அக்கா வரப்போவதாக ஒரு கார்டு வந்தது. நாளைக் காலை ரயிலில் வரப்போகிறாளாம்.
ஸ்டேஷனுக்கு நம்ம இரண்டு பேரையும் வரச்சொல்லியிருக்கிறாள். நம் கலியாணத்தின் போதே அக்காவுக்கு உடம்பு சரியில்லை. அதனாலே தான் விசேஷத்திற்குக் கூட வரவில்லை. அதனால் இப்போது இங்கே வந்து தங்கிவிட்டு நம்ம இரண்டு பேரையும்
பார்த்துவிட்டுப் போகப் போகிறாளாம். நாளைக்கு முடிந்தால் வாருங்கள் ஸ்டேஷனுக்குப் போவோம்.''

 

மறுநாள் நான் ஸ்டேஷனுக்குப் போகவில்லை. அவள்-ராமு தான் போனாள். நான் வாசலில் ஈஸிச்சேரில் சாய்ந்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் வாசலில், ஒரு வண்டி வந்து நின்றது. ராமு இறங்கினாள் முதலில். "என் அக்காவும், அத்திம்பேரும் வந்து விட்டார்கள்' என்று கூறிக்கொண்டே உள்ளே வந்தாள். வண்டியிலிருந்து ராமுவின் அக்காவும் அவள் கணவரும் இறங்கினார்கள்.

 

அவள்--ராமுவின் அக்காவைப் பார்த்ததும் எனக்கு தலை சுழன்றது. மனதில் இருந்த பாரம் அடியோடு அமுங்கி விட்டது. அவள் வேறு யாரும் இல்லை. - நான் காதலித்த அவள்தான். என் கண்ணிலிருந்து விழுந்த ஒரு சொட்டுக் கண்ணீரின் காரணம் ராமுவுக்குத் தெரியும். அவள் அக்காவுக்குத் தெரியும். - ஆனால் அவள் கணவருக்கு. இனி மேல் என் மனதில் வருத்தம் இருக்கக் காரணமே இல்லை. மன தில் ஏற்பட்ட புயல் தான் ஓய்ந்து விட்டதே!

 

ஆனந்த போதினி – 1943 ௵ - நவம்பர் ௴

 

 

No comments:

Post a Comment