Saturday, August 29, 2020

ஓர் அரிய செய்யுளின் பொருள்

 

ஆனந்தபோதினி" மாத சஞ்சிகை தொகுதி 17 பகுதி 6-ல் (1932 January) மாதர் உலகம் என்ற தலைப்பின் கீழ் 'வியாஸ பாரதமும், வில்லி பாரதமும்' என்று குறிப்பிட்டு அதை யாராயப் புகுந்து, ஸ்ரீமதி பண்டிதை அசலாம்பிகை யம்மையார் அவர்கள் வில்லி பாரதம் பழம்பொருந்து சருக்கம் ''ஐம்புலன்களும் போல் .......வசிட்டன் நல்லறமனை
வியே யனையாள்''
என்ற செய்யுளை எடுத்துக் கொண்டு, பெண் தன்மையை உண்மைக்கும், இயற்கைக்கும் மாறாக நடுங்காது கூறப்பட்டிருக்கும் பாக்களில் ஒன்று என்று மிக இலேசாகக் குறிப்பிட்டுள்ளார்கள். நீதிநெறி விளக்கம், காசிகாண்டம் இவற்றைப்பற்றி வரைய முன்வரவில்லை. மேற்கண்ட செய்யுளைப் பற்றித் தாம் 'அநேக பண்டிதர்களைப் பொருள் கேட்டதாகவும், ஆனால் அப்புலவர்கள் அனைவரும் ஷை செய்யுளுக்குப் பொருள் வேறுவிதமாகச் செய்யலாமோ? என அமையாத யுக்திகளெல்லாம் புகுத்திப் பார்க்க முந்தினர்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

ஸ்ரீ அம்மையாரவர்கள் பல புலவர்கள் சொன்ன பொருள்களை குறிப்பிக்கவில்லை. அவரும் தாம் கொண்ட பொருளைத் தமக்கு அப்பொருளில் வெறுப்புள்ளது என்றும், இத்தகைய அடாப் பழியைத் தமிழ்ப் புலவர்கள் கண்டிக்க முன்வராத காரணம் யாதோ என்றும் குறிப்பித்துள்ளார்கள். ஆகலின் இக்கட்டுரை வரையும் முக்கிய நோக்கம் அச் செய்யுளுக்கு வேறு உண்மைப் பொருளுண்டென்பது காட்டுதலேயாம்,

 

''ஐம்புலன் களும் போல் ஐவரும் பதிக ளாகவும் இன்னம்வே றொருவன்
எம்பெருங் கொழுநன் ஆவதற் குருகும் இறைவனே எனது பேரிதயம்
அம்புவி தனிற்பெண் பிறந்தவ ரெவர்க்கும் ஆடவர் இலாமையி னல்லால்
நம்புதற் குளதோ என்றனள் வசிட்டன் நல்லற மனைவியே யனையாள்."


இதுதான் அச்செய்யுள்.


இச் செய்யுள் பயிலும் சந்தர்ப்பமாவது:

 

பாண்டவர்கள் திரௌபதியுடன் காட்டில் வசிக்கின்றார்கள். இனி நடக்கப்போகும் அரிய பெரிய செயல் அக்ஞாதவாசம் ஓராண்டு. இவ்விடயமாக இந்த ஆறு பேருடைய மனதிலும் தொலையாத எண்ணங்கள். எல்லாரையும் விட மிக சிரேஷ்டமாக திரௌபதியின் எண்ணம் பல. என்னெனில் தான் கூந்தலை வாரி முடிய வேண்டும், அதற்குத் தான் சொன்ன சபதம் நிறை வேற வேண்டும் என்பதே. அதிலும் திரௌபதியே பாரத யுத்தத்திற்குக் காரணம் ஆனதாலும், வாரணா ணாவதச் சருக்கத்து,

''மண்மே லொருத்தி யாக்கர்குல மாளப் பிறந்தாண் வாமனுதற்
கண்மே லின்றுமிவள் பிறந்தாள் கழற்காவலர்தங் குலமுடிப்பாள்


என்று கூறியுள்ளார். ஆகலின் திரௌபதியின் எண்ணம் எல்லாம் பின் நடக்கப் போகும், அக்ஞா தவாசம், போர் செய்தல் சபதத்தை நிறைவேற்றி வைத்தல் முதலியவைகளிலேயே என்பது வெள்ளிடைமலை. இக்கிலையில், ஒருகனியின் காரணமாக ஐந்துபேரும், திரௌபதியும் தங்கள் தங்கள் மனக்கருத்தை உள்ளது உள்ளபடி யே தெரிவிக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது. தருமன் முதல் ஐந்து பேரும் தத்தம் மனக்கருக்தை அறிவித்தபின், திரௌபதியும் தன் மனக்கருத்தை அறிவித்ததாக வில்லிபுத்தூராழ்வார் திரௌபதி வாயிலாக இச்செய்யுளை உரைக்கின்றார். இச்செய்யுட்குப் பலர் பலவாறு உரை கூறுவர். அவற்றுள் இவண் இரண்டொன்று குறிக்கின்றேன்.

 

ஒரு சாரார் கூறும் பொருள் வருமாறு:

 

வசிட்டனுடைய நல்லற மனைவி அருந்ததி யனையளாய திரௌபதி இறைவனே எனது பெரிய மனமானது ஐந்து புலன்களைப் போல் ஐந்து பேர்களும் நாயகர்களாகவும் இன்னமும் வேறொரு மனிதன் எமக்குப் பெரிய புருடன் ஆகவேண்டும் என்பதற் குருகும். இங்ஙனமிருக்க அழகிய பூமியினிடத்துப் பெண்ணாகப் பிறந்த எல்லாருக்கும் ஆடவர்கள் உண்மையினால் கற்பின் றிறத்தைப்பற்றி நம்புதற்குளதோ? இல்லை என்றனள். (என்றவாறு)


மற்றொரு சாரார் கூறும் பொருளாவது:

 

வசிட்டனுடைய நல்லற மனைவியாகிய அருந்ததி யனையளாம் துரௌபதி, இறைவனே! எனது பெரிய மனமானது ஐந்து புலன்களைப் போல் ஐந்து பேர்களும் நாயகர்களாகவும் இன்னும் கர்னன் என்பவனும் எமக்குப் பெரிய புருடனாக வேண்டும் என்பதற்குருகும் என்பது. பின்னடி கட்குப்பொருள் மேற்கண்டபடியே.

 

நிற்க, திருவாவடுதுறை யாதீன வித்துவானும் மதுரைத் தமிழ்ச்சங்கச் சைவ நூற் பரிசோதகருமாகிய சேற்றூர் ரா. சுப்பிரமணியக் ரா. சுப்பிரமணியக் கவிராயாவர்கள் பல பிரதி ரூபங்களைக் கொண்டு பரிசோதித்துத் தாம் எழுதிய, மதுரைத் தமிழ்ச்சங்கத்து மகாபாரத அரும்பதவுரையில் “ஆடவரில்லாமையினல்லால்-புருடருண்மையினால், நம்புதற்குளதோ - அப்பெண்களைப் பதிவிரதைகள் என்று நம்புவதற்கில்லை. ஓ - எதிர்மறை. ஆடவருண்மையினாற் கண்டவுடன் பெண்களின் மனம் விரும்பும் என்றபடி. இது வேற்றுப் பொருள்வைப்பணி, நினைத்தாற் றோஷமில்லை யென்பது, துவாபரயுக தருமமாக ஸ்மிருதியிற் கூறப்படலால், வேறொருவன் எம்பெருங் கொழுநனாவகற்குருகும் என்றாள். ஆதலால் வசிட்டனல்லற மனைவியே யனையாள் என்றார்'' என்று காட்டியுள்ளார்.
 

இச்செய்யுளுக்கு மேற்சொன்ன ஒரு சாராரது பொருளைக் கொண்டால் ''ஐம்புலன்களும் போல்.....உருகும்'' என்று சொல்லும் துரௌபதியைக் கற்புடையவள் என்னலாமா? அத்திரௌபதிக்கு உவமையாக வசிட்டன் நல்லற மனைவியைக் கொள்ளலாமா? திரௌபதி தன் எண்ணம் மட்டும் சொல்லுதலோடமையாது உலகத்துப் பெண்களின் தலையில் கை வைப்பானேன்? என்ற வினாக்கள் எழுதலோடு அமையாது பின்னும்,


"என்னைத் தோற்று மனுநெறி கூ ரிசையோன் றன்னைத் தோற்றனவே
தன்னைத் தோற்றுத் தனது மனத் தளர்வால் என்னைத் தோற்றனனோ
முன்னைத் தோற்றுத் தோற்ற பொருண் முற்றுங் கவரு முறையன்றிப்
பின்னைத் தோற்றப்பொருள் கவரப் பெறுமோ''            என்றும்,

 

சபையினிடத்துத் திரௌபதி அவைக்களத்தோரைக் கண்டு கேட்குக்கால் துரியோதனனுக்கு பயந்து திரௌபதிக்காகப் பேசாதும், நீதிதவறும் என்று அஞ்சி துரியோதனனுக்காகப் பேசாதும், அரசர் வாளாவிருந்தனர். அந்நிலையினை.


''பொய்யோ வன்று மெய்யாகப் புனையோ வியம்போ லிருந்தாரை
யையோ அந்தக் கொடுமையையா முரைக்கும் பொழுதைக் கதிபாவம்"
என்றும்,

 

திரௌபதி கேட்ட நீதி நுட்பத்திற்கு விடை பகர முடியாமல் அரசர் கூட்டம் தத்தளிக்க, அப்போது அறிவுடைய விகர்ணன் வாயிலாக,


“தன்னேரில்லா நெறித்தருமன் றனவென்றுரைக்கத் தக்கவெலா
முன்னே தோற்றுத் தங்களையு முறையே தோற்று முடிவுற்றான்
சொன்னே ருரைக்குத் தான் பிறர்க்குத் தொண்டாய்விட்டுச் சுரிகுழலைப்
பின்னே தோற்க வுரிமையினாற் பெறுமோ வென்று பேசிரோ?"   
      என்றும்,

 

நன் முறையில் நீதிகளைக் கூறிய வில்லி புத்தூராழ்வார் பெண் தன் அருவருக்கத்தக்க முறையில் நீதி புகட்டலாமா? நூலாசிரியரும் கடவுள் அருள் வழிப்பட்டவருமாகிய ஆழ்வாரவர்களே பிறழ்ந்தனரே? என்ற வினாக்களுமெழுமாலோ வெனின்? எழும் என்க. திரௌபதி அங்ஙனம் வெறுக்கத்தக்க பொருளை நினைத்தவளுமல்லள், சொன்னவளு மல்லன் என்பதும், ஆழ்வாரவர்கள் வெறுக்கத்தகும் முறையில் நீதியைச் சொன்னவரல்லர் என்பதும் நன்முறையில் ஆங்காங்கு கதைப்பாத்திர வாயிலாக நீதிகளைப் புகட்டினார் என்பதும் எனது துணிபு,

 

மற்றொரு சாரார் கொள்கைப்படி வேறொருவன் என்பதற்கு கர்னன் எனக் கொண்டால், திரௌபதி கன்னனைக் காணுதற்குச் சமயம், சுயம்வர மண்டபம் அன்றி வேறு சந்தர்ப்பமேயில்லை. அச்சுயம்வர மண்டபத்தில், எல்லா வரசர்களும் வின்னாண் ஏற்றும் போது திரௌபதிக்குப் பல எண்ணங்கள் நிகழ்ந்தன என்றும், நினைத்தாள் என்றும், ஆழ்வாரவர்கள் சொன்னாரில்லை. அச்சமயத்து, வேறொருவரை நினைத்திருந்தாள் என்பதற்கும், வேற்றெண்ணம் திரௌபதிக்கு நிலைத்திருந்தது என்பதற்கும் சிறிதேனும் மின்றி


''மங்குலின் மங்குன் மூடி வயங்கொளி மறைந்து தோன்றாச்
செங்கதிர் செல்வன்போலச் சீர்கெழு வடிவமாறி
யங்கவர் இருந்த தன்மை யறிந்ததோ செறிந்த பொய்கைப்
பங்கயம் போன்றதா லப்பரிவுறு பாவை பார்வை"


என ஆழ்வாரவர்கள் தெற்றென விளக்கி யுள்ளார். ஆகலின், வேறொருவன் என்பதற்கு கன்னன் என்று கொள்வதற்கே எட்டுணையும் இடமேயில்லை. கர்னனையே தான் நினைத்து “இன்னும் வேறொருவன் எம்பெருங் கொழுநன் ஆவதற் குருகும் என்றாள் எனில், எம், ஆவதற்கு, என்னும் இவ்விரு சொற்களும் முறையே என், ஆனதற்கு என்றிருத்தல் வேண்டும். அங்ஙனமின்மை பற்றி, அவ்வாறு பொருள் கொள்ளுதல் பொருந்தா தென்பதே யொருதலை.

 

இனி இச் செய்யுளுக்கு உண்மைப்பொருள் யாதென நோக்குவாம். இச்செய்யுள் பயிலும் சந்தர்ப்பத்தில் திரௌபதியின் எண்ணம் இருந்த நிலையை முன்பே விளக்கி யுள்ளோம், ஊன்றிப் பார்ப்பீர்களாக. உண்மைப் பொருள் வருமாறு:

 

(பதவுரை) வசிட்டன் - வசிட்டனுடைய, நல்-நல்ல, அற மனைவி(யே)- அறத்தன்மை பொருந்திய அருந்ததியை, அனையாள் ஒத்த திரௌபதியாவள், இறைவனே-எம்பெருமானே, (கண்ணனே) எனது-என்னுடைய, பேர் இதயம் - மாண்புமிக்க மனதானது, ஐம்புலன்களும் போல் -ஐந்து புலன்களைப்போல், ஐவரும் - (இடைவிடாது நெருங்கி எனக்கு உரியவர்களாக) ஐந்து பேரும், பதிகளாகவும் - நாயகர்களாய் இருக்கவும், இன்னும் - மறுபடியும், ஒருவன் வேறு ஒப்பற்ற முதல்வனாகிய இறைவனொருவனை, எம்-(ஐவரும் அடியேனுமாகிய) எமது (நாங்கள் இப்போது நினைத்துள்ள காரியங்கள் இடையூறு நிகழாமல் நிறைவேற்றி வைக்க), பெருங் கொழுநன் – பெருமை பொருந்திய தலைவன், ஆவதற்கு - (இதற்கு முன் எங்கள் காரியங்கட்கு உதவியது போல்) இனிமேலாகுங்காரியங்கட்கும் உதவி யாகும்படி, உருகும் - நினைந்து உருகும், அம்புவிதனில் – அழகிய பூமியில், பெண் - பெண் ஜென்மமாக, பிறந்தவ ரெவர்க்கும் - பிறந்த எல்லார்க்கும், ஆடவரில்லாமையினல்லால் - புருடர் உண்மையினால் (மட்டும்), நம்புதற்குளதோ - (இறைவன் துணையின்றி) நினைந்திருக்கும் காரியங்கள் நிறைவேறும் என்று நம்புதற்குளதோ, இறைவன் துணையிருப்பின் நிறைவேறும் என்பதற்கு ஐயமில்லை என்றவாறு.

 

(குறிப்பு). ஐம்புலன்களும் போல் ஐவரும் என்றது என்னெனின், திரௌபதி ஐம்புலன்களும் போல் என்றாள். உலகத்து மக்கள் பொறியா எனுபவிக்கப்படும் புலன்கள் ஒன்றை யொன்றே (ஒரு பொறி ஒரு புலனையே) பற்றி நிற்கக் காண்கிறோம். திரௌபதியாகிய பெண்பாலிடத்து ஐம்புலன்களும், ஒருங்கு நிகழுந்தன்மையையே உலமையாக்கி அப் புலன்கள் போல் வேறு எது நினைந்து ஐவர் என்றார் ஆழ்வார். பெண்ணிடத்து ஐம்புலனும் ஒருங்கு நிகழுந் தன்மையுண்டோ வெனின் உண்டு. “கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண்டொடிக் கண்ணேயுள் என்றதே சான்று பகரும். இவ்வுவமை மிக நயமுடைத் தென்பதும், புலனைந்தும் ஒவ்வொன்றன் தொடர்புடைய அங்ஙனமே, இவ்வைந்து பேரும் யாரொருவர் பிரிய நேரினும் மற்றை நால்வரும், உடல் பிரிந்திருக்க உடன்பட்டாலும், மனம் பிரிந்திருக்கமாட்டார் என்பது உண்மை. ஒருவரை யொருவர் மன வொற்றுமையில் எட்டுணையம் பிரிபவர்கள் அல்லர் என்பதும் காட்டுதற்கே என்க. இன்னும் வேறெருவன் அணுவினும் அணுவாய், அண்ட சராசரங்கட்கு அப்பாலாயும் இப்பாலாயும் விளங்கும் ஒப்பற்ற முதல்வன் என்பதற்கேயாகும். எம் என்றது என்னெனின்? துரௌபதி தனக்கு முன்னிலை யிடத்தாராகிய பாண்டவர்களையும் தன்னையும் உளப்படுத்திச் சொன்னா ளென்க.

 

பெருங் கொழுநன் என்றது எற்றாலோ வெனின் காட்டுதும். தலைவன் என்னும் பொருள் படுதற்குக் கொழுநன் என்பது மட்டும் சொல்லினமையுமே பெருங் கொழுநன் எனப் பல்கியதனாற் பெறப்படுவது யாதோவெனின்? தலைவன் இறைவன்) மலையிடிந்து வீழினும், சூரிய சந்திரர் திசைமாறி உதிப்பினும், தாரகைக் கூட்டங்கள் பூமியில் உதிரினும், இறைவன் மட்டும் தன் (தலைமைத் தொழிலின்றும் நீங்காது, ஒழியாதிருப்பன் எனக் காட்டுதற்கென்க.

 

ஆவதற்குருகும் என்றது: மக்களாவார் ஒவ்வொருவரும் இறந்த காலத்தில் எவ்வெவ்வரிய காரியங்கள் நிகழ்ந்திருப்பினும் எதிர்காலத்தில் வரும் காரியங்களையே பெரிதும் மலைபோல நினைத்திருப்பராதலின், திரௌபதியும் தான் நினைத்துள்ள காரியங்கள் முற்றுப்பெறக் கருதிச் சொன்னாளென்க. இறைவனே யென்றது, இறைவனுக்கு வேறொரு தலைமைத் தன்மையின்மை யென்பதும், தனக்குத்தானே தலைமை என்பதும் காட்டுதற்கென்க.

 

பேரிதயம் என்றது என்னை? திரௌபதி இதயம் சிறிய இதயம் அன்று, அற்ப காரியங்களை எண்ணுபவள் அல்லள். உலகிற்குபகாரமாம் காரியங்களையே நினைப்பவள். அக்கற்புடை யாசியும், அதற்கெனவே பிறந்தாள். ஆகலின், உலகோர்க்கும் ஒப்பத் தகுந்தவைகளையே நினைப்பவள் என்று காட்டுதற்கே யென்க.

 

இங்ஙனம் திரௌபதி ''ஐம்புலன்களும் போல் ஐவரும்....... உருகும்'' என்று கூறியவள், அதனோடு விட்டிருக்கலாம், அங்ஙனமின்றி, "அம்புவிதனிற் பெண் ... நம்புதற்குளதோ" என்று சொல்லாவிட்டால் வருமிழுக் கொன்றுமில்லையே யாகலின், இரண்டாம் வாக்கியப் பொருள், முன் வாக்கியப் பொருளை ஐயப்படச் செய்கின்றதுவோ எனின், ஐயப்பாட்டினைத் தருவதன்று. பின் என்னை? உலகத்தில் ஒரு காரியத்தைப்பற்றி யொருவர் தன் எண்ணம் சொல்லப் புகுந்தால் முதலில் எண்ணத்தை உள்ளது உள்ள வாறு சொல்லிவிடுவர், பின் அவ்வெண்ணத்தையே உறுதிப்படுத்த அதையே சொல்லின் கூறியது கூறலாம் என்று நினைத்து வேறு பொருளைச் சொல்லி, அப்பொருளின் நுட்பங்கொண்டு முதலிலுள்ள தன் எண்ணத்தையே நிலைநாட்டுவர் அதைப் போலும் என்க.

 

ஐம்புலன்களும் போல் ...... உருகும் என்பது வரைக்கும், பாண்டவர்கள் ஐவரை, ஐந்து புலன்களாகவும், துரௌபதியை மனதாகவும், இறைவனை அம்மனதை நடாத்தும் அறிவாகவும் பொருத்தச் சொன்னார் வில்லிபுத்தூராழ்வார் என்றலும் ஒன்று.

 

இப்பொருளைக் கொண்டால், ஒரு சாரார் கொள்கைப்படி எழுந்த வினாக்களுக்கும், மற்றொரு சாரார் கொள்கைப்படி எழுந்த வினாக்களுக்கும் இடமில்லாமற் போய்விடும் என்பதில் யாதேனும் ஐயமுண்டோ?

 

இதிலிருந்து திரெளபதியானவள் தன் காரியங்கள் முற்றுப் பெறுதற்கு, ஐந்து நாயகர்களைத் தவிர்த்து தன்னந் தனியனாய் விளங்கு மொப்பற்ற முதல்வனை நாடி நினைந்து நினைந்து இருந்தாள் எனப் பெறப்படுகிறது.


''தெய்வந் தொழா அள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"


என்ற அருமைத் திருவாக்கை நோக்கின், திரௌபதியின் கற்புத் தன்மையே மாறுபடுமன்றோ வெனின் மாறுபடாது. என்னை? “நினைத்தால் தோஷமில்லை யென்பது துவாபர யுக தருமமாக ஸ்மிருதியிற் கூறப்படலால் '' என்று மதுரைத் தமிழ்ச் சங்கத்து பாரத அரும்பதவுரையில் கண்டது. ஆகையால், நாம், “தெய்வந் தொழாஅள் ...மழை'' என்ற குரளின்படியே கற்புடைய பெண்கள், கணவனையே நினைத்தல் முறை, அதனோடு, இறைவனையும் வேண்டல் செய்தல் துவாபர யுக தருமம்' என்று உறுதியாய்ச் சொல்லிவிடலாம்.

ஆனந்த போதினி – 1932 ௵ - பிப்ரவரி ௴

 

 

No comments:

Post a Comment