Saturday, August 29, 2020

 

ஓர் பெண்மணியின் விண்ணப்பம் 

 

ஓர் பெண்மணியின் விண்ணப்பம்.

 

 ஸ்ரீ விசிட்டாத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்திய இராமா நுஜர், திருக்கோளூரென்னும் திருப்பதியில் எழுந்தருளி யிருந்த போது, அவ்வூரினின்றும் வெளியேற எத்தனித்த ஓர் பெண்மணி, அப் பெரியாரெதிரே வந்து, அவரைப் பணிந்து நின்றாள் இம்மாதரசியோ ஆத்ம ஞானம் கைவரப் பெற்றவள்; பகவானிடத்தும் அவனுடைய அடியார்களிடத்தும் பேரன்பு பூண்டவள். இப்படி ஞான பக்தி வைராக்கியங்களிற் சிறந்த அவ்வுத்தமியை எம்பெருமானார் கடாககித்து, 'பிள்ளாய்! 'நாவகாரியஞ் செய்கிலாதவர், நாடொறும் விருந்தோம்புவார், தேவகாரியஞ் செய்து வேதம் பயின்று வாழ்பவர் பொருந்தப் பெற்ற இத்திருத்தலத்தை விட்டு எங்குப் புறப்பட வுத்தேசிக்கின்றாய். எல்லா வளங்களும் நிறைந்துள்ள இப்பதியில் உனக்கு நேர்ந்த குறை யாது? 'திண்ணமென்னிளமான் புகுமூர் திருக்கோளுரே' என்கிறபடி யாவர்க்கும் புகுமூர், உனக்குப் புறப்படு மூராயிற்றோ? " என்று வினவினர். அதைக்கேட்ட அப் பெண்பிள்ளை, தை கடப்பி நின்று, "சுவாமி! அடியாள் அபலை; சத்கிருக்சியத்திலீடுபடாரவள்'' என்றுரைத்துப் பின்வருமாறு * விண்ணப்பிக்கலானாள்.

 

[* 81 - வாக்கியங்களுள் சிலவே இங்கு உரையப்பட்டன, இடமின்மையின்.]

 

1. அழைத்து வருகிறேனென்றேனோ அக்ரூரரைப் போலே.

2. அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே.

3. தாய்க்கோலஞ் செய்தேனோ அஸூயையைப்போலே.

4. தந்தையெங்கே யென்றேனோ துருவனைப்போலே.

5. மூன்றெழுத் துரைத்தேனோ க்ஷத்ரபர்சாவைப்போலே.

6. முதலடியைப் பெற்றோனோ அகலிகையைப் போலே.

7. அடையாளஞ் சொன்னேனோ கபந்தனைப்போலே

8. அந்தரங்கஞ் சொன்னேனோ திரிசடையைப் போலே.

9. அவன் தெய்வ மென்றேனோ மண்டோதரியைப்டோலே.

10. அகம் வேத்மி யென்றேனோ விசுவாமித்திரரைப் போலே.

[ அகம் வேத்மி = நானறிவேன்.]

11. அநுயாத்ரஞ் செய்தேனோ அணிலங்களைப்போலே.

[ அநுயாத்ரம் = பிரயாணத்திற் கூடப் போதல்.]

12. அவல் பொரியை யீந்தேனோ குசேலரைப்போலே.

13. ஆயுதங்க ளீந்தேனோ அக்கதியரைப்போலே.

14. கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே.

15. அனுப்பிவையு மென்றேனோ வசிட்டரைப்போலே.

16. மண் மலரை யிட்டேனோ குருவநம்பியைப்போலே.

17. மூலமென் றழைத்தேனோ கஜராஜனைப்போலே.

18. வைத்தவிடத் திருந்தேனோ பரதனைப்போலே.

19. வழியடிமை செய்தேனோ இலக்குவனைப்போலே.

20. அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாள் போலே.

21. இக்கரைக்கே சென்றேனோ விபீடணரைப்போலே.

22. இனியதொன்று வைத்தேனோ சபரியைப் போலே.

23. இங்குமுண் டென்றேனோ பிரகலாதனைப்போலே.

24. இங்கில்லை யென்றேனோ ததிபாண்டனைப்போலே.

25. காட்டுக்குப் போனேனோ பெருமாளைப்போலே.

26. கண்டு வந்தே னென்றேனோ திருவடியைப் போலே.

27. இருகையும் விட்டேனோ துரோபதையைப் போலே.

28. அனுகூலஞ் சொன்னேனோ மாலியவானைப்போலே.

29. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே.

30. தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியைப் போலே.

 

இத்யாதியின்படியே மேற் கூறப்பட்டாருள் ஒருவருடைய ஞானமாயினும் அடியேனுக்குண்டாயிருந்தாலன்றோ இத்திருக்கோளூரில் தங்கியிருக்கலாம். அஃதில்லையே. முசல் புழுக்கை வயலிலே கிடந்தென்? வரப்பிலே கிடந்தென்?'' என்றனள்.

 

இராமாநுஜர் இப்புனிதவதியை ஆசீர்வதித்து இவ்விடத்திலேயே இருக்குமாறு ஆக்யாபித்தருளினர்.


ஒரன்பன்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - அக்டோபர் ௴

 

 

 

No comments:

Post a Comment