Saturday, August 29, 2020

ஔவை யுண்ட விருந்து

 

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.''

 

என்பதே தமிழ் கண்ட பொதுமறையாகும். தான் உண்ணுகின்ற உணவு தேவருண்ணும் அமிர்தமாயிருந்தாலும், தன்னைத் தேடிவந்த விருந்தினர் தன் வீட்டின் புறத்திருக்கத் தான் மட்டும் உண்ணுதல் தகாததொரு செயலேயாம். தமிழகத்து மக்கள் தம் வாழ்க்கை விருந்தோடுண்ணும் வாழ்க்கையாகவே அமைந்துள்ளது. தன்னகத்தே வாழும் இல்வாழ்வான்றன் சிறந்த தருமம் விருந்தோம்புதலேயாம். "இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு,'' என்று தமிழ்ப்பெருமகனாம் வள்ளுவர் அருளியிருக்கின்றார். இவ்வுண்மை உணர்ந்த தமிழக மக்களோ தம்மை யண்டிவரும் விருந்தினரையெல்லாம் உபசரித்து, வேண்டும்
உண்டி முதலியன நல்குவதோடமையாது, அதன் பின் எப்போது விருந்தினர் வருவார் வருவார் என்று எதிர்பார்த்து நிற்பர் என்பது யாமறிந்ததாகும். "தம்தமில்லிருந்து விருந்தொடும் தமரினோடும் அமுத உண்டி அருந்தும்" ஓசையே கோசல நாட்டில் எழுந்து நின்றது என்பர் கவியரசர் கம்பர். "விருந்து கண்டன்ன விழாவணி விரும்பும் " மக்களே கம்பர் கண்ட கோசலத்தில் நிறைந்திருந்தனர். தாமரைத் தடாகங்களிலே, அன்றலர்ந்த செந்தாமரையின் அணி கெழு நலன்களை விளக்க விரும்பிய கம்பர் “விருந்து கண்டு உள்ளம் களிக்கும் மங்கையர் முகமெனப் பொலிந்தன கமலம்" என்றே கூறு
வாராயினர். தன்னகத்தே விருந்துண்ண, ஒருவர் வந்துளர் என்பதை அறிந்த மங்கையின் மனத்தெழுந்த உவகையை, அவள் தன் முகம்மலர்ந்து காட்டிற்று என்று கூறும் செவ்விய கவிநலம் நம்மைக் கழிபேருவகைக் கடலுள் அழுத்துவதாகும். ஆனால் இவையெல்லாம் கவிஞர் கண்ட கனவாகும் என்று கருதவும் சிறிது இடமுண்டு.

 

இனி, தமிழகத்தின், செந்தமிழ் மூதாட்டியாம் ஔவையுண்ட விருந்தின் சிறப்புக்கள் சிலவற்றை ஆராய்வோம். ஒளவையாரோ, நரையும் திரையும் பெற்ற ஓர் பழுத்த கிழவி. ஆனால் அவர் அரசர் குழாத்திடையும், புலவர் கூட்டத்திடையும் நெருங்கிப் பழகியவர். எனினும் அவர் நடாத்திய வாழ்க்கை எளிய வாழ்க்கையாகவே அமைந்துள்ளது. அவர் நாட்டின் ஏழைமக்களுடனேயே பெரிதும் பழகி, அவர்களது வாழ்க்கையையே தமது வாழ்க்கையாகக் கொண்டு நடத்திவந்தார் என்பதை அவர்தம் கவியுணர்ந்த பலரும் அறிவர். "உப்புக்கும் பாடி, புளிக்கும் ஒரு, கவிதை ஒப்பிக்கும் " இக்கூனற் கிழவியின் பெருமையாம். இவர் அரசரை அண்டிய பொழுதும், பின்னர் ஏழை மக்களை அண்டிய பொழுதும், இருவகுப்பினரும், இவரையழைத்து உணவருத்திய முறைகளை அவர் தம் செவ்விய செய்யுட்களில் அமைத்துக் கூறும் முறை அழகுடையதாகும்.

தமிழ் வேந்தரில் தலைமகனான பாண்டிய அரசனது அரண்மனையில் மணவினை யொன்று நெருங்கியது. அம்மணவினையைக் காணவும், அங்கு விருந் துண்ணவும் ஔவை அழைக்கப்பட்டிருந்தார். குறிப்பிட்ட காலத்தில், ஒளவை பாண்டியன் அரண்மனையை அணுகினார். அரசவையிலோ பெரியதொரு கூட்டம் கூடியிருந்தது. ஒளவையின் கோலத்தைக் கண்டவர், இவர் அரசனது விருந்தினர் என்று எண்ணவில்லை. இவர் கூட்டத்தைக் கடந்து உள்ளே சென்று பாண்டியனை அடைய விரும்ப, அங்கு நெருக்குண்டார், பிறரால் தள்ளுண்டார், விரும்பி வந்த விருந்துண்ணாத காரணத்தால் பசியினால் சுருக்குண்டார். ஆனால் சோறு மட்டும் உண்டாரல்லர். இதை நகைச் சுவையுடன் ஔவை கூறும் முறை அழகுடையதேயாகும்.

 

"வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்
துண்ட பெருக்க முரைக்கக் கேள்- அண்டி
நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள் பசியினாலே
சுருக்குண்டேன் சோறுண்டிலேன்."


என்பது ஒளவை யருளிய அழகிய பாவாகும். இப்பாவினை உற்று நோக்கும் அன்பர்கள், தற்காலத்து நடக்கும் விருந்தின் முறைகளுக்கு இவ்விருந்தின்முறை எவ்வளவு பொருத்தமாய் அமைந்துள்ளது என்பதை அன்பர்கள் அறிவார்கள். பணம் படைத்த செல்வர்கள் வீட்டில் விருந்தென்றால் ஏழைகட்கு உணவு கிடையாது. பொன்னும் மணியும் புனைந்து, பட்டுந் துகிலும் தரித்துச் செல்லும் செல்வர்கட்கே விருந்து நடக்கும், மேலாடையற்ற ஏழை மக்களின் பசியைத் தணிப்பார் ஒருவருமிலர். நிற்க,

 

தமிழறிந்த தலைமகனான பாண்டியன் வீட்டில் ஔவையுண்ட விருந்தின் பெருமை இது வென்றால் தமிழருமை அறியாத மற்றையோர் வீட்டில் எத்தகைய உபசாரம் ஔவைக்கு நடந்திருக்கும் என்று கூறுவது மிகையேயாகும். இந்த ஔவை இனி யொரு பிரபுவை அணுகுகின்றார் அப்பெரு மகனோ செவ்விய உள்ளத்தன், விருந்தினரை உபசரிக்க வேண்டும் என்றும் அவா மிகவும் உள்ளவன் எனினும் மனைவிக்கு அடங்கிய பேதையாதலின் எண்ணியவாறே யாற்றும் இயல்பில்லாதவன். இவன், கோலூன்றி, நடைதள்ளாடி, நரையுடனும், திரையுடனும் வரும் நம் ஒளவையைக் கண்டு, தன்
னகத்திற்கு அழைத்தேகி அவளைப் புறத் திண்ணையில் இனி தமர்த்தி வீட்டினுட் சென்றான். சென்றவன் தன் மனைவியை அணுகி, விருந்தொன்று வந்துளது, அதனை யுண்பிக்கவேண்டும் என்று சொல்ல அஞ்சியவனாய் அவளுக்கு வேண்டும் நலன்கள் பலவற்றையும் செய்ய முற்பட்டான். தன் மனைவியின் பக்கம் போயிருந்து, அவள் தன் மோவாயைப் பிடித்துக்கொண்டு அவள் தன் தலையிலுள்ள ஈர் பேன் முதலியவைகளைப் பொறுக்கி யெடுத்து, மற்றும் அவள் வேண்டும் பணிவிடைகள் செய்து கடைசியாகக் காதொடுகாதாக விருந்தொன்று வந்துளது என்று மெதுவாகக் கூறினான். இதைக்கேட்ட அத்தாடகாபிராட்டியின் தங்கை, தலைவிரித்தபடி, தன் தலைவனைக் கண்டபடி பேசிய தோடமையாது, வீட்டினுட் கிடந்த பழையதொரு முறத் தால் அவன் வீட்டைவிட்டு ஓடும் வரை சாடினாள். இதை யறிந்த ஒளவையும், தமக்கும் பழமுறப் பூசை கிடைக்கும் என்று கருதி எழுந்து சென்றுவிட்டார். இவ்வரலாற்றை,

 

 

"இருந்து முகந் திருத்தி யீரோடு பேன்வாங்கி,
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்"

என்ற செய்யுளில் ஒளவையார் அமைத்துக் கொடுக்கின்றார்.

 

ஆகவே ஒளவையுண்ட விருந்தெல்லாம் இத்தன்மையனவே என்று அன்பர்கள் கொள்ளுதல் கூடாது என்று கருதி, அவர் உண்ட விருந்துக்கள், இரண்டின் சிறப்பையும் எடுத்துக் கூறுதும். இந்நரை மூதாட்டி, ஓர் ஏழைக்குடியானவனது வீட்டை அணுகினார். அவ்வீட்டில் தலைவனும் தலைவியும் ஒத்த அன்புடையவர்களாய் வாழ்ந்து வந்தரர்கள். ஒளவை வந்ததை அறிந்த அவ்வில்லாள், வந்த விருந்தை அன்புடனழைத்து, உபசரித்து, அன்று தன் வீட்டில் சமைத்திருந்த கீரைக் கறியுடன் கூடிய உணவைப் பரிமாறினாள். பரிமாறும் பொழுதே, "அம்மையே எங்கள் வீட்டில் இவ்வுணவையும் கீரைக் கறியையும் தவிர வேறு உணவில்லையே, என்செய்வோம்" என்று பல சொல்லி, வந்த விருந்தினரைத் தக்கபடி உபசரிக்க முடியாத தனது நிலைமைக்காகப் பெரிதும் வருந்தினாள். ஆனால் ஒளவைக்கோ அக்கீரைக் கறி சூடாயும் நறுமணங்கமழ்ந்ததாயும், வேண்டும் அளவு தின்னத்தக்க ருசியுடையதாயும், நெய் கலந்ததாயும், தக்க பக்குவத்தில் சமைக்கப்பெற்றிருந்ததாயும், இருந்ததால் அது கீரையுணவு என்று கருதவே இடமில்லை. தேவருண்ணும் அமுதமும், இக்கீரைக் கறிக்கு ஒப்பாமோ என்னும் நிலையில் தான் அவ்வுணவு அமைந்திருந்தது.

 

"வெய்தாய், நறுவிதாய், வேண்டளவுந் தின்பதாய்
நெய்தா னளாவி நிறம்பசந்த - பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தையிட்டார்
கடகஞ் செறிந்த கையால்,


என்று ஒளவை கூறும் செய்யுள் அழகுடையதாகும்.

 

இனி, இந்த ஒளவையே வேளூரில் வசித்து வந்த பூதன் என்பவனது இல்லத்தை அடுத்துச்செல்ல, அவன் நம் நன் மூதாட்டியைக் கண்டு வணங்கி, வீட்டினுள் அழைத்துச் சென்று வரகரிசிச் சோறும், கத்தரிக்காய் பொறியலும், முரமுரனெவே புளித்த மோரும் கலந்து, அன்புடன் இட்ட அடிசிலை உண்டு மகிழ்ந்தார். இவ்வாறு வேளூர்ப் பூதனிட்ட சோறு, சாதாரணமாக, வடை பாயசத்துடன் நாம் பெறும் உணவைப்போல் ஆறு அணா விலை பெறத்தக்கதுதானா என்றால், அன்று அவ்வுணவு இம்மூன்று உலகத்தையும் சேர்த்துவிலை பேசினால் என்ன விலை பெறுமோ அந்த விலையும் பெறும் அதற்கு மேலும் பெறும் என்பதில் ஐயமில்லை.


“வரகரிசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் - திரமுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்து பரிந்திட்ட வமுது
எல்லா உலகும் பெறும்"

என்பது ஒளவை செய்யுள். புகழ்ந்து பரிந்து அன்புடன் வேளூர்ப் பூதனிட்ட சோறு இத்தகையதென்று உரைத்த ஒளவையே, மற்றொருவிடத்து, தலைவனது கட்டளைக்காக அடங்கி, தலைவி யொருத்தி அன்பில்லாது இட்டஅமுதை,


"காணக்கண் கூசுதே, கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே- வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரியுதே ஐயையோ
அன்பில்லாள் இட்ட அமுது”


என்று வருந்தியுரைக்கின்றார்.

 

ஆகவே, ஔவையுண்டவிருந்தின் திறம் எத்தன்மையது என்றிதுவரைப் பார்த்தோம். இனி, விருந்தோம்பு தலைப்பற்றி ஔவை கொண்டுள்ள கருத்துத்தான் என்னை என்பதை விளக்க அவள் அருளிய செய்யுள் ஒன்றை மட்டும் கூறி நிறுத்துகிறேன். இவ்வுலக முழுவதும் ஒருவயலாயும், அவ்வயலில், பொன்னும் மணியும், முத்தும் பவளமும் விளைந்து, அவ்விளை பொருள்களையெல்லாம் சேர்த்துவைக்க வானுலகே சேரியாக அமையும்படி அருளி, அவ்வாறமைந்த ஒரு செல்வம், ஒருவனுமை டையதாக அமைந்திருக்க வேண்டும் பாக்கியம் பெற விரும்பினால் அவன் ஒருநாள் - ஒரு பொழுது ஒருவன் உணவு உண்ணாது பட்டினிகிடப்பதைப் பார்க்கத் தயாராயிருக்க வேண்டும் என்பது தியானால், அப்பாக்கியம் பெறவிரும்பாதிருத்தலே போற்றத் தக்கதாகும்என்று பொருள்பட,

 

"வையகம் எல்லாம் வயலாய் வானோர்
தெய்வ மாமுகுடு சேரியாகக்
காணமு முத்தும் மணியும் கலந்தொரு
கோடானு கோடி கொடுப்பினும், ஒருநாள்-
ஒருபொழுது--ஒருவன்-ஊண் ஒழிதல் பார்க்கும்
நேர்நிறை நில்லாதென்னு மென்மனனே
நேர்நிறை நில்லாதென்னு மென்மனனே”

 

என்னும் செய்யுளை அருளினார் ஒவையார். ஆகவே, அளவற்ற செல்வமும், விருந்தோம்பா வாழ்க்கையும் பெறுவதைவிட, குறைந்த செல்வமும், விருந்தோம்பும் வாழ்க்கையும் பெறுவதே சிறந்ததாகும் என்பது வெள்ளிடைமலை.

 

ஔவையுண்ட விருந்தின் நலங்கண்டு மகிழ்ந்த அன்பர்கள் என்றன் குறை கண்டு கவலாதிருப்பாராக -நலம்-

ஆனந்த போதினி – 1932 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment