Saturday, August 29, 2020

 

கங்கையைக் கண்டேன்

ரா. பி. சேதுப் பிள்ளை

 

காசிக்குச் சென்று வந்து திரு. ரா, பி. சேதுப் பிள்ளை செய்த பிரசங்கத்தைக் குறிப்பெடுத்து அன்பர், சி.ர. பழனியாண்டி இங்கே தந்துள்ளார்.

 

கங்கையில் சிலகாலம் வாழ்ந்தமையால் கந்தன் காங்கேயன் என்ற பெயர் பெற்றான். கங்கை காவிரியைப் போன்றது என்கிறார் கம்பர். கம்பரின் தேசாபிமானம் இதனால் விளங்குகிறது. கங்கையும் காவிரியும் ஒன்றே என்பதற்கு இரண்டொரு குறிப்புகள் தருகின்றேன். நிலங்கள் வளம்பெறக் கைவருந்தி, மெய்வருந்தி உழைக்க வேண்டியதில்லை. காவிரி நீரை திருப்பிவிட்டால் போதும். நிலங்கள் வளம்பெற்று விடும். வண்டல்கள் நிரம்பிய கலங்கிய ஆறுதான் பலனுடையது. கங்கையும், யமுனையும் சேரும் இடத்தைப் பார்த்தேன். இதற்குத்தான் திரிவேணி சங்கமம் என்று பெயர். அங்கே - அரனடியார்களின் ஆரவாரம் அதிகம். தெளிந்த நீரையுடைய யமுனையை விடக் கலங்கிய நீரையுடைய கங்கையைப் போற்றுகின்றனர். காவிரி-கங்கை: இவ்விரு நதிகளும் தன்மையில் ஒன்றே. கங்கையில், கண்ட இடங்களில் இறங்கியவரைக் காணல் இயலாது.

 

காசியிலே மயானத்தைத் தெய்வீகம் பொருந்திய' மயான மாகக் கொண்டாடுகிறார்கள். பொன்னேபோல் போற்றுகின்றார்கள். கங்கையாற்றிலே அடுக்கடுக்காகப் பிணங்களை எரிக்கின்றார்கள். எரிகின்றபொழுது இன்னொரு உடல் வருமேயானால் அவ்வுடல் கங்கையாற்றிலே எறியப்படும். “உடலைப் புனிதமாக்கும் சக்தி கங்கைக்கு உண்டு' என மேல் நாட்டு அறிஞர்களே கூறுகிறார்கள். திண்ணமான நம்பிக்கை எவருடைய ஆராய்ச்சியில் உங்களுக் கிருக்கிறதோ அவர்களே அப்படிக் கூறுகின்றார்கள்.

 

கங்கைக்குள்ள சிறப்புகள் காவிரிக்கும் உண்டெனப் பேராசிரியர்கள் சொல்லுகின்றார்கள். வடநாடு உயர்ந்தது என்றால் ஒத்துக்கொள்ள மாட்டேன். விரிவானது, ஜனப் பெருக்கமுடையது என்றால் ஒத்துக்கொள்ளுவேன்.

 

தென்னாட்டிலே சிறியவரும் பெரியவரும் ஆசாரமுடையவர்களாகக் காண்கிறோம். காசி மக்களின் மாசுற்ற உடலையும், உடையையும் கங்கையாறு தான் கழுவ வேண்டும்.

 

நம்மவரில் ஒரு முறை நீராடுவோர், இருமுறை நீராடுவோர், மும்முறையும் நீராடுவோரைக் காணலாம். அங்கே பல நாட்கள் நீராடாத பலர் இருக்கின்றார்கள். அவர்கள் நீராடாமல் இருப்புதற்குக் குளிரை ஒரு காரணமாகக் கூறுகிறார்கள். இராஜபுதனத்தின் வனங்களிலிருந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. ஆக்ரா, காசி, டெல்லி வரை அந்தக் குளிரடிக்கிறது. குளிர் ஒருபுற மிருக்கட்டும். அவர்கள் வெந்நீரிலாவது குளித்தல் கூடாதா? ஆகவே, அவர்கள் கூறும் காரணம் போலிக் காரணமே. கங்கையாற்றிலே இறங்கி விட்டால் குளிர் இல்லை. நாங்கள் நீராடும்பொழுது 8-மணி யிருக்கும். அங்கிருப்போர் கங்கை 10 மணிக்குத்தான் இடங் கொடுக்கும் என்றார்கள். தென்னாட்டிலிருந்து சென்ற எங்களுக்கு இரவும் பகலும் இடையறாது இடங் கொடுக்கிறது.

சைவரும், வைணவரும் சண்டையிட இடமேயில்லை. சைவருக்குக் கோயில் என்றால் சிதம்பரத்தையே குறிக்கும். வைணவருச்குக் கோயில் என்றால் திரு அரங்கத்தையே குறிக்கும்.

 

வடக்கே சைவ, வைணவச் சண்டையில்லை; அதற்குப் பதிலர்க அங்கே இந்து முஸ்லீம் சண்டையைக் கண்டோம். அவர்கள் சண்டையில் ஒருவர் மற்றொருவரை வேர் அறுத்துக் கொள்வார்கள் போலிருக்கிறது. ஆதியில் சிவபெருமானின் சிறந்த காசி விசுவநாதர் ஆலயம் மகம்மதியர்களின் மசூதியாய் விட்டது. காசியிலே நம்முடைய பெருமானாரைப் பெயர்த்தெடுத்து அங்கு ஒரு கிணற்றிலே போட்டிருக்கிறார்கள். அந்தக் கிணற்றிலே தான் நம்மவர்கள் காசுகளை யெல்லாம் இறைக்கின்றார்கள். அக்காசுகளை யெல்லாம் அங்கிருக்கும் பண்டாரங்கள் தான் ஏற்றுக் கொள்ளுகிறார்களோ அல்லது அப் பெருமான் தான் ஏற்றுக் கொள்ளுகிராரோ தெரியவில்லை.

 

அங்கே குருக்கள்மார் மட்டும் தான் இறைவனைத் தீண்ட வேண்டுமென்றில்லை. எல்லோரும் தொழலாம். அவர் அருகே செல்லலாம். இது தான் பண்டைய தமிழர் முறை. வடநாடும் தென்னாடும் ஒரு பண்டமாற்றுச் செய்து கொள்ளவேண்டும். அதாவது வடநாட்டார் தென்னாட்டாரின் ஆசாரத்தைக் கைக்கொள்ள 'வேண்டும். தென்னாட்டார் வட நாட்டார் இறைவனை வணங்கும் முறையைக் கைக் கொள்ள வேண்டும். இறைவன் ஒரு வகுப்பாருக்கே உரிமையுடைவன் அல்ல. வடநாட்டிலுள்ள காசி விசுவநாதரை நாம் கையால் தொடலாம். சிதம்பரத்தில் நடராஜரை நம்மவர் தீண்ட முடியாது. மனத்தூய்மை யுடைய சைவர்கள் இறைவனைத் தீண்டுவதில் குற்றமில்லை. மனத்தூய்மை பெறாதாரெல்லாம் இறைவனைத் தீண்டுகிறார்கள். தமிழ் நாட்டுக்கு ஒரு காலம் வரும். அப்பொழுது தூக்கிய திருவடியைத் தலையால் தாங்கிக் கொள்ளலாம். காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்ல வேண்டுமானால் சிறு சிறு வாயில்கள் வழியாகத்தான் செல்லவேண்டும். ஒரு பெரிய கோபுர வாசல் இல்லை. அந்தக் காலத்தில் மகம்மதியர்கள் மூர்த்திகளையெல்லாம் மசூதியின் படிகளாக உபயோகித்துக் கொண்டார்கள். அந்தக் காலத்தில் நம்மவர்கள் உயிரைக் கொடுத்து மூர்த்தியைப் பாதுகாத்தார்கள். ஒடுக்கமான இடத்திலிருந்து மாற்றானைத் தடுப்பது எளிது என்பதற்காகவே அந்தக் காலத்தில் சிறு வாயில்கள் அமைக்கப் பட்டதாகத் தெரிகிறது. அந்தப் பெருமானாருக்கு எல்லோரும் போய் இடையறாது மாலைகளைப் போடுகின்றார்கள். இறைவனுக்கும் நமக்கு மிடையே தரகன் வேண்டுவதில்லை.

 

அங்கே நிலங்களெல்லாம் வளம் பொருந்திய தாகவே காணப்படுகின்றன. ஆனால், விளைகின்ற பொருளெல்லாம் வெளியே செல்லுகிறதாம்.

 

அங்கே ஆங்கிலம், படித்தவர்களாகிய ஒரு சிலரிடையே தான் பயன் படுகிறது. தெருவிலே மாணவர்களெல்லாம் அவரவர் தாய் மொழியிலேயே பேசிக்கொள்ளுகிறார்கள்.

நம்மவர் சாலையில் செல்லும் பொழுதும் சோறுண்ணும் பொழுதும் ஆங்கிலமே பேசுகின்றார்கள். நமக்குச் சுதந்திரம் எப்படி வரும்? வட நாட்டார் சுதந்திரத்திற்கு அடிப்படையானவர்கள். அவர்கள் பாஷாபிமான முடையவர்கள்.

நாங்கள் சென்ற மா நாட்டிற்கு All India Oriental Conference என்று பெயர். அதற்குப் பஞ்சாபி லிருந்தும், வங்காளத்திலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். அத்தனை பேரும்
ஆங்கிலம் நன்கு கற்றவர்கள். ஆங்கில நாகரிகத்திலே நன்கு தோய்ந்த புலவர் மணிகள். அவாகள் பேசும் பொழுதெல்லாம் அவர்கள் மொழியிலேயே பேசிக் கொள்ளுகிறார்கள்,

 

காசிக்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்காதார் தென்காசிக்குச் செல்லலாம். பராக்கிரம பாண்டியன் காசி செல்ல எண்ணினான். “காடும் மலையும் கடந்து நீ காசி செல்ல வேண்டாம். இங்கேயே காசியைக் காணலா'' மென ஈசனார் கூறினார். தென்காசியில் உள்ள மூர்த்திக்கும் விசுவநாதர் என்றே பெயர்.

 

பிஷப் கால்டுவெல் சொன்னால் நம்புவீர்கள். அவர் 44 ஆண்டுகள் திருநெல்வேலியில் கற்றர் பணி செய்து வந்தார். அவர் 'Comparative Grammar of Dravidian Languages' (திராவிட பாஷைகளின் ஒப்பிலக்கணம்) இயற்றினார். தென்னிந்திய மொழிகளுக்கு அடிகோலிய பெருமை கால்டுவெலுக்கே உரியது. அவர் கூறுகிறார்:

 

* “The waterfalls at Kutralam are the best fresh water falls in the world”. அவர் ஆங்கிலத்திலேயே கூறியதால் நானும் அதை ஆங்கிலத்திலேயே சொல்லுகிறேன்.

* (“உலகத்திலேயே புத்தப் புதுத் தண்ணீர் விழும் நீர் வீழ்ச்சி குற்றால நீர் வீழ்ச்சி தான்.")

 

குற்றாலத்தில் மக்கள் அமைதியாக் நீராடலாம். 'நைகாரா' அருவியிருக்கிறது. அதற்கு 10 மைலுக்கு அருகே சென்றாலும் காது செவிடாய் விடுமாம். அருகே செல்ல முடியாத அருவி என்ன அருவி? அந்த அருவி பயனற்றதே.

 

மர்க்டொனால்டு சவுல்ட்ரி-என்பதை நம்மவர்கள் மகுடம் 'சர்வடி என்று மாற்றி அமைத்து விட்டார்கள். அங்கே மகுடம் தாழ்ந்தது.

 

மூச்சுதான் ஆயுள். மூச்சை வெளியே வாங்கக் கூடிய சொல் தமிழிலே யில்லை. ஹா, ஹா-போன்ற சொற்கள் மூச்சை வாங்கக் கூடியது.

 

ஹல்வா என்பதை அழுத்தி உள்ளே உள்ள உஷ்ணத்தின் காரணமாகச் சொல்லலாம். ஆனால் அல்வா என்று தானே கேட்கிறோம். ஹனுமான் என்றா சொல்லுகிறோம்? அனுமன் என்று தானே சொல்லுகிறோம். ஹாமில்டன் என்பது அம்பட்டன் என்றாக வில்லையா? ஆங்கிலேயர்கள் பூவரசு என்பதைப் போர்ஷியா என்று மாற்றிவிட்டார்கள். அப்படியே மிளகு தண்ணீர் என்பதை ‘மெலக்ட்னி' என்று மாற்றி விட்டார்கள். வட நாட்டார் காலை முதல் மாலை வரை தித்திப்புப் பண்டங்களையே உண்டு வருகிறார்கள். காரம், ரசம் முதலியவைகளை அவர்களிடையே காணமுடியாது. பல நாட்களாக நான் காணாத ரசத்தை ஆந்திர தேசத்தை அடைந்ததும் கண்டேன்.

 

வட நாடு செல்வோர்க்கு யான் கூறிய குறிப்புகள் பயன்படும் எனக் கருதி இவைகளைக் கூறினேன்.

ஆனந்த போதினி – 1944 ௵ - நவம்பர் ௴

No comments:

Post a Comment