Saturday, August 29, 2020

 

கடலின் செருக்கு

   ரா. பா. மு. கனி

 

மாலையின் மாயா ஜாலங்களில் மயங்கித் தான் போலும், இரு காதலிகளை மகிழ்விக்க முயலும் காதலன் போல் வான வளையத்தை முத்தமிட்டு, கரையை அலைக்கை கொண்டு கட்டி யணைத்து உல்லாசமாக விளையாடுகிறது கட்ல்! துள்ளி வரும் அலைகளிலே மாலை வெயிலின் மங்கிய ஒளி, வர்ண விசித்திரங்களை வாரி வீசச் செய்து, கருதரிய கடலாடைக்கு வண்ணப் 'பார்டர்' வகுத்து நிற்கிறது. 'மோகனமாஞ் சோதி பொருந்தி முறை தவறா, வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடு' கிறதா கடல்? ஆமாம். அதோ 'எற்றி நுரை கக்கி' எழுகின்ற அலை ஒல்லென் றிசைக்கும் பாட்டிலே அம்மையின் ஓம் எனும் பெயர் ஒலிக்கக் கேட்கிறேன்.

 

எல்லை இல்லாத பெருங் கடல் என் முன் எழுந்து எழுந்து அடங்கிக் கொண் டிருந்தது. மனிதனின் இன்ப துன்பங்களைப் போல, அதன் கம்பீரமும் அலைகளும் என் 'உலர்வும் மனச் சிறு புள்ளினை' எண்ண அலைகளால் எழுப்பி ஓட்டின; புதுப் புது உணர்ச்சிகளை, இன்ப ஊற்றுக்களைத் திறந்து கொட்டச் செய்தன.

 

காதல் வெறி கொண்ட காதலன் ஏன் தான் இந்த நெரித்த திரைக் கடலில் தன் இன்பக் காதலியின் இன்முகங் காணமாட்டான்! நீலக் கடல் அலையில் அவள் நீண்ட குழல் காணமாட்டான்! அந்த நீலமேகச் சியாமள மேனியானையும் அல்லவா கடல் நிறக் கடவுள் என்றார்கள்?

 

தூரத்தே கட்டு மரம் ஒன்று கடல் அலைகளின் இடையே, லக்ஷிய மற்றுக் காற்றிலாடும் மொட்டைப் பனையை யொட்டித் தள்ளாடிற்று. வீரத் திரைகொண்டு கடல் விண்ணை இடித்தது. கட்டு மரம் கவிழ்ந்து திரும்பிற்று. அந்த வெல்ல இயலாக் கடலை, அதன் பயங்கரத்தை, அது தன்னகத்தே ஏற்றுக்கொள்ளும் எண்ணற்ற உயிர்ப் பலிகளைக் கண்டு தான் பைரன் என்ற ஆங்கிலக் கவிஞன் அதைத் தன் கவிதை யழகு தோன்றப் புகழ்கிறான் போலும்,

 

பைரன் சொல்கிறான்:

''அலை யெறி!
ஆழ்ந்து இருண்ட நீலக் கடலே, அலை யெறி !
எண்ணற்ற கப்பல்கள் நின்மேல் பயனின்றி உழன்றன.
மண்ணை மானிடன் அழிவிட மாக்குகிறான்,
அவன் பலம் மண்ணோடு சரி;
அலைகளின் மேல் அழிக்குந் தொழிலோ,
முற்றும் நின்னது.
சாவு மணியின்றி, சாமக்கிரியை யின்றி, சவக்குழியின்றி
ஒருக்கண மழைத் துளிபோல்
குமிழிடும் முணக லோடு
நின் ஆழத்துள் ஆழ்கையிலே
அவன் அழித்தநின் நிழல் கூடத் தங்குவதில்லை,
அவன் அழிவைத் தவிர.
எல்லாம் உன்னுடையதே!"


என்ன கோரமான கடல்! எத்தனை யெத்தனையேர் உயிர்களை உட் கொள்கிறது; ஆயினும் எத்தனையேர் உயிர்கட்கு இருப்பிட்மர்க் அமைகிறது. உலகை அழிக்கவுஞ் செய்கிறது, ஆக்கவும் உதவுகிறது. காற்றின் மூலம் உலகிற்கு உயிர் கொடுக்கும் உயிர் அது! அது மாரி தராவிட்டால் வளங் குன்றும்: ஏரின் உழார் உழவர்.

 

குழந்தை யுள்ளம் படைத்த கவிஞன் ஒருவன் இக் கடலைப் பார்த்து எவ்வளவு ஆச்சரியப் படுகிறான்!


எல்லை அறியாப் பெருங் கடலே! நீதான்

இரவும் உறங் காயோ?
அல்லும் பகலும் அலைகடலே! உனக்(கு)
அலுப்பும் இலையோ, கருங் கடலே!


அலுப்பர்வது, கடலுக்கா? இன்றல்ல எத்தனையோ நூற்றாண்டுகளாகக் கடல் இப்படித்தான் கும்மாள மிடுகிறது. இரவென்றும் பகலென்றும் பாராமல். சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் ஒரு புலவர் பார்த்தார். கடல் குதித்தூ கூத்தாடிக் கொண்டிருந்தது, கரகமாடும் குடிகாரப் போல. வாயின் அடங்காச் சத்தம் புலவர் சிந்தையைத் தூடிவிட்டது. அலையை வாரி வாரி எறிந்து, புது வாழ்வு வந்த புதுப்பணக்காரனைப் போல், அது ஏன் விளையாட வேண்டும். இரவில் கூடத் தூங்காமல்?


“கங்குலும் நண்பகலும் துஞ்சா இயல்பிற்றாய்
மங்குல் சூழ் அலைகடல் ஆர்ப்ப தூஉம்-“


ஆமாம் ஆர்க்கிறது, ஏன்? அதற்குக் காரணம் உண்டு' என்கிறார் புலவர். கதையை நினைத்துப் பார்க்கிறார். அந்நாட்டு அரசன் இருக்கிறானே அவன் போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொண்டு செல்லச் செய்பவன். வாரி வழங்கும் வள்ளல். புலவர் போற்றும் பெருந்தகை. புகழ் பரந்த புரவலன். அவனுடைய பிறப்பு விசித்திரமானது. தமிழரசன் ஒருவன் வங்கம் ஏறிக் கடலில் சென்றான் எதிர்ப்பட்ட தீவுகளை வென்றான். அத் தீவகங்
களில் ஒன்றில் இருந்த அழகில் சிறந்த அரச குமாரியின் உள்ளத்தையும் வென்றான். அவள் கணவனாய்ச் சிலகால மிருந்து நாடு திரும்பினான். மாதங்கள் சில உருண்டன. அரச குமாரி அழகிய ஆண் மகவின் தாயானாள். குழந்தை பிறந்தால் தன்னிடம் அனுப்பிவிட வேண்டு மென்பது கணவனின் கட்டளை. ஒரு தோணியில் குழந்தையைக் கிடத்திக் கடலில் விட்டு விட்டாள். கடல் தன் மெல்லிய அலைகளால் அதைத் தள்ளிக்கொண்டு வந்து தமிழகத்தின் கரை சேர்த்தது. குழந்தை அரசன் கைக் யிற்று. அதன் முகத்தி லிருந்த களை அதை அரசன் வீட்டுக் குழந்தை யாக்கிற்று. பின் அதன் திறமை அதை அரசனாகவும் ஆக்கிற்று. அந்த அரசன் தான் இப் புலவர் காலத்திலே புகழ் ஓங்கி நின்றவன். கடல் தந்ததால் இளந் திரையன் எனப் பெயர் பெற்றான். பெருங் காவியங்களுக்குப் பாட்டுடைத் தலைவனக விளங்கினான் அத் தொண்டைமான் இளந்திரையன். மக்களின் உள்ளங் கவர்ந்த மகிபன். அயல் நாட்டு அரசர்களும் அவன் ஆக்கினைக்கு அடி பணிந்தனர். இத்தகைய தோன்றலைத் தந்த பெருமை தனக்குத்தான் என்றல்லவா கடல் இப்படிக் குதிக்கிறது என்று சொல்கிறார் புலவர்.


'- . .  . . . . . . . . வெஞ்சின வேல்
கான் பயந்த கண்ணிக் கடுமான் திரையனை
யான் பயந்தேன் என்னும் செருக்கு."


என்ன செருக்குப் பாருங்கள்! “பெரும் வீரன், பகைவரைப் போரில் நடுங்கச் செய்யும் புலி என்றெல்லாம் திரையனைப் புகழ் கிறீர்களே, அவனைத் தந்தது யார் தெரியுமா?
நான் தான்" என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லித் துள்ளுகிறதாம் கடல்! என்ன அற்புதமான பாடல்! உள்ள உணர்ச்சியோடு எழுகிறது, கடல் அலைகளைப் போல் அலை எறிந்து. இ
தோ முழுப் பாட்டும்:


கங்குலும் நண்பகலும் துஞ்சா இயல்பிற்றாய்
மங்குல்சூழ் அலைகடல் ஆர்ப்பதூஉம்- வெஞ்சினவேல்
கான்பயந்த கண்ணிக் கடுமான் திரையனை
யான்பயந் தேன் என்னுஞ் செருக்கு!


அதோ அலைமோதிச் சிதறும் போதே கடல் பேசுகிறது - இல்லை, பாடுகிறது- 'யான் பயந்தேன்' என்று செருக்கோடு.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - ஆகஸ்ட் ௴

 



No comments:

Post a Comment