Saturday, August 29, 2020

 கடல் கடைந்த காளையும் மலைசைத்த மன்னனும்

 

இவ்வுலகில் மஞ்சு தோய உயர்ந்த மலையும், ஆழ்ந்து அகன்ற ஆழியும் பெருமை சான்ற பொருள்களென்று புலவர் போற்றுவர். இத்தகைய பெருமை வாய்ந்த மலையைப் பெயர்த்த மன்னனும், ஆழியைக் கடைந்து அமுதெடுத்த அரசனும் ஒரு காலத்தில் இந்நாட்டில் ஒருங்கே வாழ்ந்து வந்த வரலாற்றைச் சிறிது ஆராய்வாம்.

 

வானர நாட்டு அரசனாய், வலிமை சான்ற வாலி விளங்கினான். இலங்கை நாட்டின் வேந்தனாய் இராவண வீரன் இலங்கினான். இவ்விரு பெரு வேந்தரும் வரத்திலும் வலிமையிலும் தலை சிறந்தவராய், சிவ நெறியிற் பற்றுடைய சீலராய், ஒருவருக் கொருவர் உற்ற துணைவராய் அமைந்து வாழ்ந்தார்கள்.

 

இவ்விரு வேந்தரும், திருதெறித் தலைவராய திருஞான சம்பந்தப் பெரியாரால் போற்றிப் புகழப்பட்டவரெனில் அவரது பெருமைக்கு வேறு சான்றும் வேண்டுமோ? வளவன் நாட்டை வளம்படுத்தும் பொன்னியாற்றின் வடகரையில் அமைந்த குரங்காடு துறை யென்னும் திருநகரில் அமர்ந்தருளிய ஈசனை வழிபட்டு வரம் பெற்ற வாலியின் பெருமையை,


 "கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி
 வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்து மாங்கனிகளுந்தி
 ஆலுமா காவிரி வடகரை யடை குரங் காடு துறை
 நீலமா மணிமிடற் றடிகளைகினையவல் வினைகள் வீடே.''


என்று தேவாரத் திருமுறையில் திருஞானக் கவிஞர் போற்றிப் புகழ்ந்தார். பிறப்பால் வானர மாயினும், செம்பொருள் காணும் சிறப்பால் மக்களிலும் மேம்பட்டு விளங்கிய சிவநேயச் செல்வனை 'வாலியார்'' என்று திருமுறைத்தலைவர் புகழ்ந்துரைத்த பான்மை அறிந்து மகிழத்தக்கதாகும். இவ்வாறே இலங்கை வேந்தனாய் இலங்கிய இராவணனும் கலை ஞானக்கன்றாய கவிஞரால் பதிகந்தொறும் பாடும் பெருமை பெற்றவனே யாவன். அருமருந்தாய் அமைந்த திருநீற்றின் பெருமை கூறப்போந்த திருஞான சம்பந்தர் மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, எண்ணத் தகுவது நீறு " என்று தொடங்கிய முறையில் "இராவணன் மேலது நீறு, எண்ணத் தகுவது நீறு என்று போற்றுவராயின் இலங்கை வேந்தனது பெருமை அளவிடற் கெளிதாமோ? சிவனடி மறவாத செம்மை வாய்ந்த இலங்கை வேந்தனது மேனியிற் பொருந்திய வெண்ணீறு என்று திருநீற்றை வியந்து கூறும் கவிஞரது கருத்தை ஆராயும் பொழுது அம்மன்னனது பெருமை மாண்புற இலங்கக் காணலாம்:

 

இத்தகைய சைவ சமய சீலர் இருவரும், இருமையும் தரும் பெருமானாய இறைவனை வணங்கி அருமையான வரங்கள் பெற்று வாழ்ந்தார். பகைவராய் முன்னின் றோரது வலிமையிற் பாதியைத் தன்பால் இழுத்துக் கொள்ளும் தனி வரம் வாலிபால் அமைந்திருந்தது. எக்கோடியராலும் வெல்ல இயலாது முக்கோடி வாழ் நாளும் பெற்று, இராவணன் இறுமாந்திருந்தான். இவ்வாறு வரம் பெற்ற இலங்கை வேந்தன் வாலியின் வலியறியாது, அவ்வீரனை வெல்லக் கருதிய போது, அவன் வாலாற் கட்டுண்டு வருந்துவனாயினான். இருபது தோளமைந்த இராவண வேந்தனை, வாலினாற் பிணித்து வலியழித்த வாலியின் பெருமையை, திருஞான சம்பந்தர் கூறும் திறம் சால அழகியதாகும்.


''நீலமாமணி நிறத்தரக்கனை இருபது கரத்தோடு ஒல்க
 வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்.''


என்று வடகுரங்காடு துரைப்பதிகம் வண்ணமாய் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு வாலியின் வலிமையை அறிந்த இலங்கை வேந்தன், அவ்வீரனது நேசத்தை விரும்பிப் பெற்று விருந்துண்டு மீண்டான். அப்பால் இருவரும் நேசம் என்னும் பாசத்தால் பிணிப்புற்று உயரிய நண்பராய் அமைந்தார்கள்.

 

இவ்வீரர் இருவரும் செயற்கரிய செயல் செய்து இவ்வுலகில் அழியாப் புகழ் பெற்றவராவர். அலை கடலைக் கடைந்து அமுதெடுக்கும் ஆற்றலின்றி, ஆசையால் உழன்ற வானவரும் தானவரும் மகிழுமாறு, தன் திண்ணிய கரங்களால் திரை கடல் கடைந்து தெள்ள முதம் எடுத்து வழங்கிய வலிமையும் வண்மையும் வாலியார்க்கே உரியதாகும். அவ்வாறே கண்ணுதற் பெருமான் வீற்றிருக்கும் கயிலைமாமலை, தன் விமானத்தைத் தடுத்ததென்று வெகுண்டு, அம்மலையைப் பெயர்த்து அசைத்த பெருமை இராவணனார்க்கே உரியதாகும். ஆகவே கடலைக் கடைந்தும், கயிலை மலையைக் கையால் எடுத்தும், வலிமையின் வரம்பென விளங்கிய இருபெரு வேந்தரும் இவ்வுலகில் எஞ்ஞான்றும் பொன்றாது நிற்பர் என்பதில் யாதும் ஐயமில்லை.

 

இல்லறம் என்னும் நல்லறத்தை மேற்கொண்டு வாழ்ந்த இவ்விரு பெருவேந்தர்க்கும், கற்பினுக்கு அணியாய இரு பெண்மணிகள் மனைவியராய் அமைந்தார்கள். அருங்குணம் வாய்ந்த அமுத நங்கையாய தாரை வாலியின் வாழ்க்கைத் துணையாய் விளங்கினாள். மாதர்க்கு அணியாய மண்டோதரி இராவணன் மனைவியாய் அமைந்தாள். இவ்வாறு குலத்திலும் நலத்திலும் மேம்பட்ட மனைவியரைத் துணைக் கொண்டு, மனையறம் புரியும் பெருமை இரு மன்னர்க்கும் வாய்த்தது. தலையாய கற்பமைந்த மண்டோதரியின் மாண்பினை வியந்தெழுதப் போந்த மணிவாசகப் பெருமான்,


“ஏர்தரும் ஏழுலகேத்த எவ்வுருவும் தன்னுருவாய்
ஆர்கலி சூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்கு
 பேரருள் இன்பமளித்த பெருந்துறை மேய பிரானை
 சீரிய வாயாற் குயிலே தென் பாண்டிநாடானைக் கூவாய்.''

 


என்ற மணி மொழிகளாற் கூறினார்.

 

இத்தகைய இணையற்ற மங்கையரை மனைவியராய்ப் பெற்றிருந்தும், முன் வினைப்பயனால் இரு வேந்தரும் பிறன் மனை நயந்து பிழையுற்றனர். வானர நாட்டு வீரனாய வாலி தம்பியின் மனைவியைக் கவர்ந்தான். இலங்கை வீரனாய இராவணன் அயோத்தி மன்னனது மனைவியைக் கவர்ந்தான். இக்குற்றம் ஒன்றே இருவர்க்கும் அற்றம் விளைத்தது. இதனால் அன்றோ,

 

 "பிறன் மனை நயவாத பேராண்மை சான்றோர்க்கு
 அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு.''


என்று பொதுமறை முறையிடுகின்றது!

 

பிறப்பிலும் ஏனைச் சிறப்பிலும் நிகராய வேந்தர் இருவரும் இறப்பிலும் ஒற்றுமை யுடையராய் அமைந்த முறை அறிந்து வியக்கத்தக்கதாகும். அறம் செய்த அறவினையாலும், மரம் செய்த மறவினையாலும், கோசல மன்னனது மைந்தனாய்த் தோன்றிய இராமனது கணையால் இரு வீரரும் இவ்வுலக வாழ்வை நீத்தனர். மும்மை சால் உலகுக்கெல்லாம் மூலப்பொருளாய மூர்த்தியே நேராக நின்று மெய்ப்பதம் வழங்கும் மேன்மை இருவீரர்க்கும் வாய்த்தது. அறத்தாறு அறிந்தும் அயலான் மனைவியைக் காதலித்த அரசர் இருவரையும் இறைவன் மறக் கருணையால் ஆண்டு மாறிலா இன்பத்தில் வாழவைத்தான். புலவர் பாடும் புகழமைந்த வானர வீரனும் இலங்கை வீரனும் இவ்வுலகில் வீரம் உள்ளளவும் சைவம் உள்ளளவும் அழியாது நின்று நிலவுவர் என்பதில் ஐயம் ஒன்று உண்டோ?

 

ஆனந்த போதினி – 1929 ௵ - நவம்பர் ௴

 

 

 

 

 

No comments:

Post a Comment