Saturday, August 29, 2020

 

கடவுளை எப்போது எங்கே காணலாம்?

 

ஒருவன் நெடுங்காலம் பல நூல்களைக் கற்றும் கடவுளையறியும் மார்க்கம் இன்னதென் றுணராதவனாகி சே! இனி நாமே சிந்தி த்துக்கொண் டிருப்பதில் பயனின்று. உலகைத் துறந்த யாரேனு மோர் மகானிடம் இவ் விஷயத்தைக் கேட்டறிய வேண்டும் " என்று தீர்மானித்துக் கொண்டு அடவியில் நுழைந்து எந்த மகானாவது அகப்படுவாரா என்று தேடத்தொடங்கினான்.

 

ஒருநாள், நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த புஷ்பச்செடிகளும், இனியகனிதரும் உயர்ந்த விருட்சங்களும் அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த ஒருவனத்தில் பிரம்மாண்டமான ஒரு நதிதீரத்தில் ஓர் மகான் அமர்ந்திருந்தார். கடவுளைக் காணவிரும்பிய அம்மனிதன் அவரைக் கண்டதும் கடவுளையே கண்டவன் போல் மிக்க சந்தோஷமடைந்து, அவர் பாதங்களில் சாஷ்டாங்கமாகச் சேவித்து, ''பரம்பொருளே மானிடச் சட்டை சாத்தி வந்தது போன்ற ஞானசொரூபியே! அடியேனது அஞ்ஞானத்தை யொழித்து மெய்ஞ்ஞான நிலையை எனக்குப் போதித்து அருள் புரிய வேண்டும். கடவுளை எப்போது எங்கே காணலாம்? இதை மட்டும் ஏழையேற்கு உண்மைப்படி கூறவேண்டும்" என்று அவர் முன் நின்று அஞ்சலியஸ்தனாகப் பிரார்த்தித்தான்.

 

அம்மகான் அவனை யுற்று நோக்கி அவன் மனோநிலையையும் அறிவின் தரத்தையும் உணர்ந்து,

 

'மகனே! ஆற்றின் கீழ்ப்பக்கம் சுமார் அரை மைல் தூரத்தில் ஓர் பிரம்மாண்டமான ஆலமர முளது. அந்த விடத்தில் ஆறு தெற்கு நோக்கித் திரும்புகிறது. நாளைக் காலை ஏழு மணிக்கு நீ அங்குச் சென்று ஆற்று நீரை நோக்கிக்கொண் டிருந்தால் அங்கொரு பிரம்மாண்டமான மச்சம் வரும். இப்போது நீ என்னைக் கேட்ட கேள்வியையதனிடம் கூறினால் அது விடையளிக்கும்'' என்றருளினார். குருவை யடுத்த சீடன் அவர் கட்டளையைச் சிரமேலேற்று அவருக்கு மறுபடி நமஸ்காரம் செய்து விட்டுச் சென்றான்.

 

அஷ்டமா சித்தியில் வல்லுநராகிய அம்மகான் சீடனுக்குக் கூறியபடி மறுநாள் காலை ஏழு மணிக்கு மச்ச உருக்கொண்டு குறித்த விடத்தில் அவனுக்குத் தரிசன மளித்தார். அம்மச்சத்தின் பருத்து நீண்ட உருவத்தைக் கண்ட சீடன், நமது குரு கூறியது. இம் மீனாகத்தானிருக்குமென யூகித்துக்கொண்டு, "ஓ மச்சமே! தயவு செய்து சற்று நின்று நான் கேட்கும் ஒரு கேள்விக்கு விடையளித்துச் செல்ல வேண்டுகிறேன். என் குருவாகிய மகான் உன்னிடம் அதைக் கேட்கும்படி கட்டளை யிட்டார்' என்றான்.

 

மச்சம் 'அதென்ன கேள்வி கூறு?' என்றதே, அவன் "கடவுளை எப்போது எங்கே காணலாம்?" என்று வினவினான். அதற்கு அம்மச்சம் ''அப்பா! நீ கேட்பது கடவுளைப் பற்றிய பரிசுத்த விஷயம். நான் இப்போது அசுத்தமாக விருக்கிறேன். நாளை காலை ஏழு மணிக்கு வருவாயாயின் நான் ஸ்நானம் செய்து சுத்தமாக விருப்பேன். அப்போது நீ கேட்ட கேள்விக்கு விடை யளிப்பேன்' என்று கூறியது.

 

இதைக்கேட்ட சீடன் மிக்க வியப்படைந்து 'அட்டா இதற்கென்ன பைத்தியமோ! எந்நேரமும் ஜலத்திலேயே யிருக்கிற இதற்குத் தீட்டு, அசுத்தம் எங்கிருந்து வந்தது? இது வேறெங்கும் போய் ஸ்நானம் செய்வது? என்று சிந்தித்தான். சிந்திக்கச்சிந்திக்க அவன் மனதிற் கலவரமே அதிகமாகிய தன்றி ஒன்றும் விளங்க வில்லை. பின்னர் அவன் அத்தகைய மகான் நம்மை வியர்த்தமாக இதனிடம் அனுப்பியிரார் என்று கருதி அம்மச்சத்தை நோக்கி,

 

"ஓமச்சமே! நீ கூறுவது மிக்க வியப்பாக விருக்கிறது. ஜலத்திலேயே பிறந்து ஜலத்திலேயே வசித்துக்கொண்டிருக்கும் உனக்குத் தீட்டும் அசுத்தமும் எப்படி யுண்டாயின? நீ யின்னும் வேறெங்குச் சென்று ஸ்நானம் செய்து சுத்தியடைவாய்? இவைகள் எனக்குச் சற்றும் புலப்படவில்லையே' என்றான்.

 

மச்சம்: - ''ஆ உனக்கு அப்படியா புலப்படுகிறது. நான் கூறுவது இன்னும் மூடத்தன மாகவும் பைத்தியக்காரன் பேச்சு போலும் புலப்படுகிற தல்லவா? உண்மையாகக் கூறு?'' என்றது.

 

சீடன் - ''ஆம். உண்மையே. உனக்கு மனவருத்த முண்டாகுமென் நான் அப்படிக் கூறவில்லை'' என்றான்.

 

மச்ச உருவாகவுள்ள அம்மகான்: ''நீ கூறுவது நியாயமே. நீ என்னைக் கேட்கும் கேள்வியும் அத்தகைமைத்தேயாகும். முதலாவது, கடவுளை எப்போது காணலாம் என்கிறாய். கடவுளோ முன் எப்போதும் இருந்தவர், இப்போதும் இருக்கிறவர், இனி எப்போதும் இருக்கப் போகிறவர். அதாவது முக்காலத்தும் அழியாதிருப்பவர். அவர் நிலைமையில் அப்போது இப்போது, காலை மாலை என்ற காலவரையறை யொன்றுமில்லை. அது இராப்பகலற்ற நிலை. ஆகையால் அவரை எந்த வேளையிலுங் காணலாம்.

 

இனி எங்கே காணலாம் என்றனையன்றோ! அவர் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரசாசமாய், ஏகமாய், நீக்கமற மயிர் முனைக்கு மிடமற மன்றிலெங்கும் நிறைந்து நிற்கும் பெருவெளியாயிருப்பவர். அவரே யாவற்றிற்கும் தாயகமாயிருப்பவர். நான் எப்படி ஜலத்திலேயே பிறந்து ஜலத்திலேயே வசித்துக்கொண்டிருக்கிறேனென்று நீ கூறினையோ, அவ்வாறே இந்த அண்டரண்ட சராசரங்களனைத்தும், (கடலிலேயே அலை திவலை நுரையாதிகள் உதித்துக்கடலிலேயே இலயமாவது போல்) அவரிலேயேயுதித்து, அவரிலேயே யிருந்து, அவரிலேயே இலயமாகின்றன. அவரே சர்வத்திற்கும் ஆதாரமாக விருப்பவர். அவரையன்றி ஒரு அணுவிற்கு இருக்க வேறு இருப்பிடமில்லை. நான் ஜலத்திலேயே யிருந்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டு மென்று கூறியதைப் பைத்தியக்கார யோசனை யென்று நீ எப்படிக் கருதினையோ, அவ்வாறே நீ கடவுளை எங்குக்காணலாம் என்று கேட்கும் கேள்வியும் இருக்கிறது. நீ கேட்பது ஒருவன், "எனக்கு நா வுண்டோ இல்லையோ?" என்று கேட்பது போலிருக்கிறது.'' அக்கேள்வியைக் கேட்பதே நா " வென்று அறியாமல் மயங்கியே அவன் அவ்வாறு கேட்கிறான். கடவுள் உனக்குள்ளாகவே இருக்கிறார். நீ கடவுளுக்குள்ளாகவே யிருக்கிறாய். அவரைவிட்டு நீ ஒருவினாடியும் பிரிந்திருப்பதேயில்லை. அஞ்ஞான நிலையில் அவர் உனக்குள் மறைந்திருக்கிறார். அப்போது நீ 'நான்" "நான்" என்று அகங்கரித்து அலைகிறாய். ஞான நிலையில் நீ அவரில் மறைந்து கலந்துவிட அவர் உன்னைத் தனக்குள் அயிக்கியப்படுத்திக் கொண்டு தானாகவே பிரகாசிக்கிறார்.'' என்று கூறினார்.

 

சீடன்: - "ஓ மச்சமே! நீ கூறியது உண்மையாகவேயிருக்குமென்று எனக்குப் புலப்படுகிறது. ஆனால் அது எனக்கு அனுபவமாக விளங்க வில்லையே" என்றான்.

 

மச்சம்: - ''நான் கூறுவதைக் கவனமாகக் கேள். சூரியன் எங்கும் பிரகாசித்துக் கொண்டேயிருந்தாலும் குருடன் அதைக் காண்பதில்லை. அதுபோல் அஞ்ஞானம் என்பது உன் அறிவாகிய கண்ணின்முன் ஒரு திரைவிடப்பட்டது போல் மறைத்துக் கொண்டேயிருக்கிறது. சூரிய கிரணங்கள் வெண்மை நிறம் பொருந்தினவையாயினும், காமாலை என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவனது பார்வைக்கு மஞ்சள் நிறமாகத் தோன்றுகிறது. அதுபோல் மனமாகிய மாயையால் எங்கும் நிறைந்திருக்கும் சச்சிதானந்த சொரூபமே உனக்கு இந் நானா பேதங்களையுடைய நாம் ரூபப் பிரபஞ்சமாகத் தோன்றுகிறது. மாயை யொழிந்தால் சச்சிதானந்த சொரூபமாகிய பரம் பொருளை நீதரிசிப்பாய்'' என்றது.

 

சீடன்: - "ஆ! மச்சமே! நீ இப்போது இவ்வுருவமாக விருந்தாலும் நீயே எனக்குக் குரு. இனி மாயையை யொழிக்கும் உபாயமும் அறிவிக்க நான் கோருகிறேன்'' என்றான்.

 

உடனே மச்சரூபமாக விருந்த அம்மகான் அந்தரூபத்தை விட்டுச் சுயரூபத்தோடு சீடன் முன் நின்று "குழந்தாய்! உனக்குத் தக்க பக்குவம் வருவதற்காக நாம் இவ்வாறு செய்தோம். இப்போது மாயையை யொழிக்கும் வழியைக் கூறுகிறோம், மனதையலையவிடாது கேட்பாய்.'மனமாயையன்றி மற்றொன்றுமில்லை'என்றபடி மனமே மாயை, நீ அறிவை யூன்றிப் பார்ப்பாயாயின் இப்பிரபஞ்சம் மனதினின்றே யுதிக்கக் காண்பாய். மனமொடுங்கின் பிரபஞ்ச வாசனையுமொழியும். மனதிற்கு இச்சையே சொரூபம், நினைப்பே மூலம்; இச்சை யொழிந்தால் பிரபஞ்சத் தோற்ற மொழியும்; மனதின் இரஜோ தமோ குணங்கள் ஒழிந்தால் சத்துவமாகிய உள்ளம் களங்கமற்ற விடியற் காலையாகாயம் போல் பிரகாசிக்கும்; அதைக் கொண்டு உன் சுயசொரூபத்தை நீயறிவாயாகில், நீ யப்பரம் பொருளை விட்டன்னியமாயில்லை யென்பதையும், கடலிலுள்ள ஒரு துளி நீர் போல் அந்த அகண்ட பரிபூரண சொரூபத்தில் நீ யொரு அற்ப அம்சமாக இருக்கிறாயென்பதையும் அனுபவமாக அறிவாய். அந்த நிலையில் 'நான்' என்கிற கிஞ்சித் இருப்பையும் விட்டு விடுவாயாகில், தன்மை முன்னிலையென்ற பேதமொழிந்து, நினைப்பு மறப்பற்று நீயதுவாகி என்று மழியாத பிறப்பிறப்பற்ற பிரம்மானந்த நிலையை யடைவாய். இதுவே முடிவான முத்திப்பேறாகும்." என்றருளினார்.

 

ஓம்தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1920 ௵ - ஆகஸ்ட் ௴

No comments:

Post a Comment